Showing posts with label தேசிய சுயநிர்ணய உரிமை. Show all posts
Showing posts with label தேசிய சுயநிர்ணய உரிமை. Show all posts

Tuesday, May 09, 2017

சுயநிர்ணயம் என்பதன் அர்த்தம் அமெரிக்காவின் அடிமை நாடாவதல்ல!


சுய‌நிர்ண‌ய‌ம் என்ப‌து பிரிந்து த‌னி நாடாகி, பின்ன‌ர் அமெரிக்காவுக்கு அடிமை சாச‌ன‌ம் எழுதிக் கொடுப்ப‌த‌ல்ல‌. லெனின் கூறிய‌ பிரிந்து செல்வ‌த‌ற்கான‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை என்ப‌தன் அர்த்த‌ம், புதிய‌ முத‌லாளித்துவ‌ குடிய‌ர‌சுக‌ளை உருவாக்குவ‌த‌ல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில் ப‌ல‌ர், தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்லாது, சில தமிழ் இடதுசாரிகளும் த‌வ‌றாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

சார் மன்னன் காலத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டது. ஆரம்பத்தில் தலைநகரும் அதை அண்டிய பகுதிகளும் தான் போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள் ரஷ்யாவின் பிறபகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.

அந்த நிலையில், முதலாம் உலகப்போரை முடித்து வைக்கும் வகையில், 1918 ம் ஆண்டு, ஜெர்மனியுடன் Brest - Litovsk எனும் இடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப் படி, ரஷ்யாவின் மேற்கே இருந்த நாடுகள் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் விடப் பட்டன. எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜெர்மனியுடன் பொருளாதாரத் தொடர்புகளை கொண்டிருந்தன. அதனால், ஜெர்மனி அவற்றை தனது செல்வாக்கு மண்டலமாக கருதியது.

1919 ம் ஆண்டு, ஜெர்மனி முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்னரும், அவை தனி நாடுகளாக தொடர்ந்திருந்தன. இரண்டாம் உலகப்போரில் தான், அந்த நாடுகள் மீண்டும் சோவியத் யூனியனின் பகுதிகளாக ஒன்று சேர்க்கப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் தனி நாடுகளான பின்லாந்து, போலந்து ஆகிய இரண்டும் தொடர்ந்து சுதந்திரத்தை பேணுவதற்கு அனுமதிக்கப் பட்டன.

அதே நேரம், ஆர்மேனியா, ஜோர்ஜியா, அஸ‌ர்பைஜான் ஆகிய‌ நாடுக‌ள் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்துட‌ன் உட‌ன்ப‌டிக்கை செய்து கொண்டு த‌னி நாடுக‌ளாக‌ மாறின. அந்த‌க் கால‌த்திலும் "ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம்" என்ப‌த‌ன் அர்த்த‌ம் முத‌லாளித்துவ‌- ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ள் தான்.

ஜோர்ஜியாவில், தேசியவாதிகள் தலைமையில் ஒரு   மேற்கத்திய பாணி பாராளுமன்றம் உருவானது. அந்த அரசில் ஜோர்ஜிய சமூக ஜனநாயகக் கட்சி பங்குபற்றியது. அதே நேரம், ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷெவிக் புரட்சியாளர்களை ஆதரித்தது.

மேற்படி தனி நாடுகள், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக இருந்துள்ளன.  மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகள், அவற்றின் சுதந்திரத்தை பாதுகாத்தன. ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் உருவான கம்யூனிஸ்ட் அரசை ஒடுக்குவதற்கு, அந்த நாடுகளின் பூகோள அமைவிடம் பெரிதும் உதவியது.

அதாவது, அன்று ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரில், கம்யூனிசப் புரட்சிகர அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள், சார் மன்னனுக்கு விசுவாசமான படையினர் மட்டுமல்ல. பிரித்தானியா, பிரான்ஸ், செக்கோஸ்லோவாக்கியா என்று பன்னாட்டுப் படைகள் களமிறங்கி இருந்தன. ஒவ்வொருவரும் தமக்கென சில பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். அத்தகைய குழப்பமான நிலையில் தான், மேற்படி நாடுகள் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அது மட்டுமல்ல, செச்னியா போன்ற ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் தனிநாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தன.

லெனின் த‌லைமையிலான‌ போல்ஷேவிக்- கம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர், அந்த‌ நாடுக‌ளில் ஏற்க‌ன‌வே இருந்த உள்நாட்டு க‌ம்யூனிஸ்டுக‌ளுட‌ன் தொட‌ர்புக‌ளை எற்ப‌டுத்திக் கொண்ட‌ன‌ர். துருக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய மத்திய ஆசிய பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் யாரும் இருக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் பழமைவாத மதவாதிகளுக்கு எதிரான, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இனங்கண்டு ஊக்குவிக்கப் பட்டன. தமக்கு ஆதரவளித்தால், அவர்களை பதவியில் அமர்த்துவதாக கம்யூனிஸ்ட் செம்படை உறுதியளித்தது.

ரஷ்யாவில் நூற்றுக் கணக்கான வேறுபட்ட தேசிய இனங்கள் இருந்தன. மன்னராட்சிக் காலத்தில் அவை யாவும் ரஷ்யக் காலனிய நாடுகளாக இருந்தன. ஆர்மேனியா, ஜோர்ஜியா போன்ற வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களை கொண்ட நாடுகள் தாமாகவே தேசிய அரசுக்களை அறிவித்துக் கொண்டன. அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், சுல்த்தான் அரசாட்சியை கொண்டு வர முயன்றனர்.

அந்த நாடுகளில் எல்லாம், போல்ஷெவிக் கட்சிக்கு ஆதரவான அரசியல் சக்திகள் ஊக்குவிக்கப் பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற தேசியவாதிகள், மற்றும் மதவாதிகளுக்கு எதிராக அவர்களை கிள‌ர்ச்சி செய்ய‌ ஊக்குவித்தனர். ச‌ரியான த‌ருண‌த்தில் செம்படையை அனுப்பி ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள். பின்ன‌ர் அவை ஒவ்வொன்றாக இணைக்க‌ப் ப‌ட்டு, 1922 ம் ஆண்டு, தனித்தனி சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

செம்படையின் இராணுவ வெற்றி மட்டும் அதற்குக் காரணம் அல்ல. போரில் வென்ற பின்னர், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப் படும் என்று லெனின் வாக்குறுதி அளித்தமையும் ஒரு முக்கிய காரணம். சுயநிர்ணய உரிமை தொடர்பாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவவில்லை. அது அளவு கடந்தால் மார்க்சிய சர்வதேசியத்தை பாதிக்கும் என்று பலர் வாதாடினார்கள். 

சுயநிர்ணய உரிமையானது பல்லின மக்களுக்கானது மட்டுமே. அதன் அர்த்தம், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட தேசியவாத இயக்கங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என்பதல்ல. மக்கள் விரோதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டவர்களில் பல்வேறுபட்ட  தேசியவாதிகளும் அடங்கி இருந்தனர். ரஷ்ய பேரினவாதியாக இருந்தாலும், ஏதாவதொரு சிறுபான்மையினத்தை சேர்ந்த குறுந் தேசியவாதியாக இருந்தாலும் தண்டனை ஒன்று தான்.

சோவியத் யூனியனை கட்டியெழுப்பும் பணியில், Narkomnats என்ற சுருக்கப் பெயரிலான தேசிய விவகாரங்களுக்கான மக்கள் அதிகார சபை குறிப்பிடத் தக்க பங்காற்றியது. முன்பு சார் மன்னனின் கீழ் பணியாற்றிய மானிடவியல் அறிஞர்கள், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை ஏற்று வேலை செய்தனர். ரஷ்யாவில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு அவர்களது உதவி தேவைப் பட்டது.

துறை சார்ந்த அறிஞர்கள், சோவியத் யூனியன் முழுவதும் பயணம் செய்து, பல்லின மக்களிடம் கேள்விக் கொத்துக்களை கொடுத்து நிரப்பிக் கொண்டனர். இனத்தின் பெயர், மொழியின் பெயர், நிரந்தரமான வாழிடம், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் எல்லைகள் பிரிக்கப் பட்டன.

தேசிய‌ங்க‌ளை பிரித்து, தேசிய‌ எல்லைக‌ளை தீர்மானித்து, சுய‌நிர்ண‌ய‌மும் வ‌ழ‌ங்கி விட்டால், அத‌ற்குப் பிற‌கு அந்த‌ நாடுக‌ள் என்ன‌ வேண்டுமானாலும் செய்து கொள்ள‌லாம் என்று அர்த்த‌ம் அல்ல‌. Gosplan என்ற‌ அர‌ச‌ திட்டமிடல் அதிகார சபை, சோவியத் நாடு முழுவதற்குமான பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை வ‌குத்த‌து. அது சந்தேகத்திற்கிடமின்றி சோஷ‌லிச பொருள் உற்ப‌த்தி முறையை கொண்டிருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ங்க‌ளின் தாயகங்களில் இருந்த சிறு கிராம‌ங்க‌ள் கூட‌, பொதுவுடைமைக் கூட்டுற‌வுப் ப‌ண்ணைத் திட்ட‌த்திற்கு த‌ப்ப‌வில்லை. ஏனெனில், சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்திற்குள், இன்னொரு சிறுபான்மை தேசிய இன‌ம் இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட‌க் கூடாது. எந்த‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்தாலும், ச‌ம‌ உரிமை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

குறிப்பிட்ட‌ ஒரு தேச‌ம் விரும்பிய‌வாறு பொருளாதார‌ முடிவெடுக்க‌ விட்டிருந்தால், அது முத‌லாளித்துவ‌த்தை நாடிச் சென்றிருக்கும். அத‌ற்குப் பின்ன‌ர் அந்த‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்தில், இன்னொரு இன‌ம் ஒடுக்க‌ப் ப‌டும். இப்ப‌டியான‌ விரும்ப‌த் த‌காத‌ விளைவுக‌ள் த‌டுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பாட்டாளிவ‌ர்க்க‌ ச‌ர்வ‌தேசிய‌மே அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு த‌ரும்.

//அக்டோப‌ர் புர‌ட்சியான‌து முத‌லாளிகளையும், நில‌வுட‌மையாள‌ர்க‌ளையும் வீழ்த்திய‌தால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ ம‌க்க‌ளின் தேசிய‌, கால‌னிய‌ அடிமைச் ச‌ங்கிலி உடைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னால், அனைத்து ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் ஒருவ‌ர் த‌வ‌றாது விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை விடுத‌லை செய்யாம‌ல் பாட்டாளிவ‌ர்க்க‌ம் த‌னது விடுத‌லையை பெற்றுக் கொள்ள‌ முடியாது. அக்டோப‌ர் புர‌ட்சியின் குண‌விய‌ல்பு பின்வ‌ருமாறு அமைந்திருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லையான‌து, தேசிய‌ங்க‌ளுக்கு இடையிலான‌ வெறுப்புண‌ர்வு, இன‌ மோத‌ல்க‌ளை கொண்டிருக்க‌வில்லை. அத‌ற்கு மாறாக, ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌ தொழிலாள‌ர்க‌ள், விவ‌சாயிக‌ளின்‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை, ப‌ர‌ஸ்ப‌ர‌ ச‌கோத‌ர‌த்துவ‌ம் மூல‌ம் விடுத‌லை பெற்றுக்கொள்ள‌ப் ப‌ட்ட‌து.

தேசிய‌வாத‌த்தின் பெய‌ரால் அல்ல‌, ச‌ர்வ‌தேசிய‌த்தின் பெய‌ரால் தான் ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லை சாத்தியமாகிய‌து.//

- ஸ்டாலின் (அக்டோப‌ர் புர‌ட்சி நூலில் இருந்து.)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, December 09, 2009

நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்

வருகிற டிசம்பர் 11 ம் திகதி, "நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசு" பிரகடனம் செய்யவிருப்பதாக மாவோயிஸ்ட்கள் அறிவித்துள்ளனர். புதிய குடியரசு 13 சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சிப் பிரதேசங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் 11 தேசிய இனங்களின் பெயர்களைக் கொண்ட "நாடு"களாக இருக்கும். தற்போதுள்ள அரசு நிர்வாகத்திற்கு சமாந்தரமாக, போட்டி அரசு ஒன்று ஸ்தாபிக்கும் எண்ணம் தமக்கில்லை என்று, மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாவோயிஸ்ட்களின் குடியரசு பிரகடனம், மீண்டும் ஒரு போரின் அறிவிப்பாக கருதப்படும் என அரசு சார்பான அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே நவம்பரில் சில நாட்கள் அரசுக்கு சவாலாக விளங்கிய மக்கள் எழுச்சியை, மீண்டும் கொண்டு வருவதற்காக மாவோயிச ஆதரவாளர்கள் திரட்டப்படுகின்றனர். டிசம்பர் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவோயிஸ்ட்களை ஓரங்கட்டிய நேபாள அரசு புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி வருகின்றது. அதன்படி 22 மே 2010 ல் நேபாளம் புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் ஆளப்படும். இந்த புதிய யாப்பின் பிரகாரமும் நேபாளம் சமஷ்டிக் குடியரசாவது நிச்சயம். அரசாங்கத்திற்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் கொள்கை வேறுபாட்டில் இருந்து எழுந்துள்ளது. அரசாங்கம் முன்மொழியும் சமஷ்டி அலகுகளுக்கான அதிகாரப் பரவலாக்கல், வெறும் நிர்வாகப் பிரிவுகள் தாம். அமெரிக்காவும், இந்தியாவும், தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக மேற்குறிப்பிட்ட சட்டவாக்கத்திற்கு உதவி புரிந்துள்ளன. ஆனால் மாவோயிஸ்ட்கள் முன்மொழியும் சமஷ்டி குடியரசு, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

மாவோயிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள், தமது "நேபாள சோஷலிச குடியரசு" எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே எழுதி வைத்துள்ளனர். மாவோயிஸ்ட் போராட்டத்திற்கு முந்திய நேபாளம் "உலகின் ஒரேயொரு இந்து நாடாக" இருந்தது. அங்கே பல்வேறு மொழிகள் பேசும் இனங்களின் தனித்துவம் மறுக்கப்பட்டு, நேபாள மொழியின் மேலாதிக்கம் நிலவியது. ஆட்சி மொழியான நேபாள மொழியை பேசுவோர் 50 வீதமானோர் மட்டுமே.(The World Factbook - Nepal) நெவர், மகர், தரு, மைதலி, தமாங் போன்ற மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய நேபாள மொழி பேசும் பிராமணர்களும், சத்திரியர்களும் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். சீனர்களைப் போல தோற்றமளிக்கும், பல்வேறு இனங்களை சேர்ந்த பூர்வீக குடிகளின் பிரதேசங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளன. எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் இன்றி புறக்கணிக்கப்பட்ட பிரதேச மக்கள் நிரந்தர வறுமைக்குள் வாழ்கின்றனர்.

மாவோயிஸ்ட் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை. உலகின் மிகவும் வறுமையான நாடு, சாதி அடிமைத்தளைகளில் இருந்து விடுதலை பெற விரும்பிய மக்கள், மாவோயிஸ்ட்களின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர். தாழ்த்தப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட இனங்கள், மாவோயிஸ்ட் போராளிகளாக அணிதிரண்டனர். புதிய சமதர்ம நேபாளம், ஒவ்வொரு மொழி பேசும் இனமும் தன்னைதானே ஆளும் அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும், என்று கட்சி பிரச்சாரம் செய்தது. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் காலத்தில், போராளிகள் தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தலைமைப் பீடத்தை நெருக்குகின்றனர். பதவி சுகம் கண்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் கொள்கைகளை மறந்து விடாமல் இருப்பதற்காக, கீழ்மட்ட உறுப்பினர்கள் புரட்சியை வலியுறுத்தி வருகின்றனர். தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்காக மாவோயிஸ்ட்கள் "நேபாள சமஷ்டிக் குடியரசு" பிரகடனத்தை கையில் எடுத்துள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் மக்கள் புரட்சியை துரிதப்படுத்தும் திட்டத்திற்கு வேறொரு காரணமும் உண்டு. "சிறி லங்கா நிலைமை" நேபாளத்திலும் தோன்றலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இந்தியாவின் பக்க பலத்துடன், இலங்கை அரச படைகள், "புலி அழிப்பு யுத்தத்தை" நடத்தி முடித்த பின்னர் உருவான அதிர்வலைகள் நேபாளத்தை எட்டியுள்ளது. இந்திய அரசு அறிவித்துள்ள, தனது நாட்டு மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போரானது, நேபாளத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது. இந்திய மாவோயிஸ்ட்களுக்கும், நேபாள மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் நேபாள இராணுவமும் "மாவோயிஸ்ட் அழிப்பு போரை" தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது கிடைத்து வரும் இது போன்ற தகவல்கள் யாவும், நேபாளத்தில் மீண்டும் ஒரு போர் தோன்றும் வாய்ப்பு இருப்பதைக் காட்டுகின்றன. மாவோயிஸ்ட்களின் மக்கள் புரட்சிக்கான அறைகூவலும், சமதர்ம சமஷ்டிக் குடியரசு பிரகடனமும், அவர்களும் போருக்கு தயாராகி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு:
Maoists to go on warpath again
-----------------------------------------------------------------------------------------------

முன்னைய பதிவு:
நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!

Thursday, April 23, 2009

அநாதை தேசங்கள்

தமிழீழம் சாத்தியமா? ஓர் ஆய்வு [பகுதி-2]
ஐரோப்பிய கண்டத்தைத் தலைகீழாக மாற்றிய லிபரல் புரட்சி தேசியவாத அரசியலின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தபோது அது முதலாளித்துவப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டது இயல்பானதே. ஒரு நாட்டில் மன்னன் இட்டதே சட்டம் என்ற நிலை மாறி அரசு என்ற நிலையான ஸ்தாபனத்தை உருவாக்குவதே பூர்ஷுவாக்களின் (மத்தியதர
வர்க்கத்தின்) நோக்கமாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவான சட்டம், அரசமைப்பதற்கான யாப்பு போன்றவற்றின் அவசியம் அப்போது உணரப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நெப்போலியன் சட்டம் (Code Napolean)பிற்காலத்தில் பரந்த அரசியலமைப்புச் சட்டமாகியது. (இதைத்தான் ஒல்லாந்தர் இலங்கையில் அறிமுகப்படுத்த அது அங்கே டச்சுசு; சட்டம் என்றழைக்கப்படுகின்றது) இங்கிலாந்தில் உரிமைகள் சாசனம் (Bill of Rights) மத்தியதர வர்க்கத்தால் பொதுச்சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொழிற்சாலைகள் விநியோகத்திற்காக ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நிலையான நுகர்வோர் வட்டம் போன்றவற்றை வேண்டி நின்றன. ஒரு தேசிய அரசு
மட்டுமே இத்தேவைகளைச் சாத்தியமாக்க முடியும்.

தேசியவாதம் குறித்த பிரச்சினை மார்க்சியவாதிகளையும் விட்டுவைக்கவில்லை. “பாட்டாளி
களுக்குத் தேசம் கிடையாது” என்று கூறிய கார்ல் மார்க்ஸ் கூட இங்கிலாந்தின் முதலாவது காலனியான அயர்லாந்து பிரிந்ததை வரவேற்றார். “ஒடுக்கப்படும் தேசமொன்றின் பிரிந்து போகும் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்குகின்ற தேசத்தைச் சேர்ந்த சோஷலிஸ்ட் புறக்கணித்தால் அவன் சோஷலிஸ்ட் அல்ல” என்றார் லெனின். 1917இல் போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றதும் பின்லாந்துக்கு ரஷ்யாவிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இருப்பினும் கத்தோலிக்க தேசியவாத போலந்தை விட்டுவிடும்படி ஸ்டாலின் கூறியதை லெனின் ஏற்கவில்லை. போலந்து மக்களின் ஆதரவு கிடைக்காத செம்படை அவமானத்துடன்
திரும்பியது. பால்டிக் கடலோரக் குடியரசுகள் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. இந்தப் பாரம்பரியம் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் சோவியத் யூனியனின் உடைவிற்குக் காரணமாக இருந்தது.

ஜார் காலத்து ரஷ்யாவில் துருக்கி இனமக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மதத் தலைவர்களின் பிடியில் இருந்ததால் அங்கே தேசியவாதக் கருத்துகள் எட்டியும் பார்க்கவில்லை. அஸர்பைஜானில் போல்ஷ்விக்குகள் வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த போது அதனை அம்மக்கள் ‘ஜிகாத்’ என்று புரிந்து கொண்டார்கள். இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் நிலையில் அன்றிருந்த மத்திய ஆசியா, மதவாதிகளை ‘கொள்ளைக்காரர்கள்’ எனப் பட்டம் சூட்டி விரட்டியடித்த பின்புதான் அபிவிருத்தியடைந்தது. சோவியத் யூனியனில் பல்வேறு தேசிய அரசுகளாகப் பிரிக்கும் கடமையை ஏற்றிருந்த ஸ்டாலின் வரைந்த எல்லைகளின்படிதான் ‘ஸ்தான்’ என்று முடியும் மத்திய ஆசியக் குடியரசுகள் உருவாகின. அந்தப் புதிய தேசங்கள் அங்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் பெயரில் உருவான போதும், குறிப்பிட்ட நாட்டினுள் பிறமொழி பேசும் அயலவரும் அடங்கினர். இது வேண்டுமென்றே முன்யோசனையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு குறிப்பிட்ட இனம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட திட்டம், இன்றைய இனப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவுள்ளது. இருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ பிற இனங்களுடன் நட்புறவை பேணும் நிர்ப்பந்தம் அங்கே காணப்படுகின்றது.

சோவியத் யூனியனின் 15 குடியரசுகளும் வரலாற்று தொடர்ச்சியாகவோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையாக உள்ள இனத்தின் பெயரிலோ அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குடியரசுக்குள்ளேயே பல சிறுபான்மை இனங்கள் வாழ்ந்து வந்தனர். ரஷ்ய சோசலிசக் குடியரசில் மட்டும் நூற்றுக்குக் குறையாத மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். கணிசமானளவு தொகையுள்ள வளர்ச்சியடைந்த மொழிச் சிறுபான்மையினருக்கென தன்
னாட்சிப் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. சோவியத் அரசமைப்புச் சட்டத்தின்படி 15 குடியரசுகளுக்கும் பிரிந்து போகும் உரிமை இருந்ததைப் பயன்படுத்தி, 1991இல் சோவியத் யூனியன் 15 துண்டுகளாக உடைந்தது. ஆனால் தன்னாட்சிப் பிரதேசங்களால்
அவ்வாறு செய்ய முடியவில்லை. விளைவு பேரழிவைத் தந்த முடிவுறாத யுத்தங்கள். இவற்றில் குறிப்பிடத் தக்கது, ரஷ்யாவிலிருந்து பிரிய விரும்பிய செச்னியாவின் யுத்தம். இரண்டு செச்னிய போர்களுக்குப் பின், சில முன்னாள் கிளர்ச்சித் தலைவர்கள், ரஷ்ய
அரசுடன் சமரசம் செய்துகொண்டு சில கூடுதல் சலுகைகளுடன் மாநில ஆட்சியைப் பொறுப்பேற்றனர். மொஸ்கோவிற்கு அடிபணிய மறுத்த ஆயுதபாணிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டனர்.

புதிதாகச் சுதந்திரம்பெற்ற முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியாவிலும் மோல்டோ
வியாவிலும் கதை வேறுவிதமாக இருந்தது. ஜோர்ஜியாவின் ரஷ்ய எல்லைப்புறமாக அப்காஸியர், ஒசாத்தியர் என்ற இரு வேற்று மொழி பேசும் இன மக்கள் வாழ்கின்றனர். சோவியத் காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேச அலகு புதிய ஜோர்ஜிய அரசாங்கத்தால் ரத்துச் செய்யப்பட்டது. மேலும் ஆட்சியில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதிகள் தமது குடியரசில் இருக்கும் மொழிச் சிறுபான்மையினர் ஜோர்ஜிய மொழியை உத்தியோகபூர்வமான மொழியாக ஏற்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினர். இதன் எதிரொலியாக அப்காஸியர், ஒசேத்தியர் மத்தியிலும் தேசியவாத அமைப்புகள் தோன்றின. 1992இல் இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாகியது. கடுந்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத ஜோர்ஜியப் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓட, அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய இரு சுதந்திர தேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த ஜோர்ஜிய இன மக்கள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா நாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தை இதுவரை யாரும் அங்கீகரிக்கவில்லை. பின்புலத்தில் இருந்து கொண்டு இவைகளை ஆதரிக்கும் ரஷ்யா மட்டுமே அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்கிடமில்லாமல் இவ்விரு குட்டிநாடுகளும் தமது பாதுகாப்புக்கும், பொருளாதாரரீதியாக ரஷ்யாவில் தங்கியுள்ளன.

ரொமானியாவிற்கும் உக்ரேனுக்கும் நடுவில் அமைந்துள்ளது, முன்னாள் குடியரசுகளில் ஒன்றான மோல்டோவியா. 1991இல் சோவியத் உடைவின் பின் சுதந்திரம் பெற்ற மோல்டோவியாவில் பெரும்பான்மையினமாக ரொமேனிய மொழி பேசுவோரும், உக்ரெயின்
எல்லையோரம் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றனர். ரஷ்ய மொழிச் சிறுபான்மையினர் வாழும் பகுதியை டினியேஸ்டர் நதி நெடுக்கு வெட்டுமுகமாக பிரிப்பதால், அந்தப் பிரதேசம் திரான்ஸ் டினியேஸ்டர் அல்லது திரான்ஸ்திஸ்திரியா என
அழைக்கப்படுகின்றது. சோவியத் காலத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் அந்தப் பிரதேசத்தில்தான் அமைக்கப்பட்டன. மோல்டோவியாவின் சுதந்திரப்பிரகடனத்திற்குப் பிறகு ரொமேனிய பெரும்பான்மை அரசுக்கெதிராக ரஷ்ய சிறுபான்மை ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அவர்களுக்கு ரஷ்ய ராணுவத்தின் உதவி கிடைத்தது. மிக விரைவிலேயே மோல்டோவியப் படைகளை தோற்கடித்து, ரஷ்ய ஆயுதக் குழுக்கள் திரான்ஸ்திரியா பகுதி முழுவதையும் விடுவித்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தற்போது தமக்கெனப் பாராளுமன்றம், பொலிஸ், இராணுவம், வங்கி, நாணயம் என்று ஒரு தேசத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களுடன் கடந்த 15 வருடங்க ளாக சுதந்திர நாடாக இருக்கும் திரான்ஸ்திரியாவை இது வரை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. முன்னாள் சோவியத் சின்னங்கள், கொடிகள் மற்றும் லெனின் சிலைகள் என்பனவற்றை இப்போதும் அங்கே பார்க்கலாம். இருப்பினும் அந்த நாட்டை ஆள்வது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. தேசிய முதலாளித்துவ பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு கட்சி (அல்லது தனிநபர்)
சர்வாதிகாரமே அங்கே நிலவுகிறது.

சர்வதேச நாடுகளோ அல்லது நிறுவனங்களோ இத்தகைய புதிய சுதந்திர தேசங்களை அங்கீகரிக்கமறந்து அநாதைகளாக விட்டுவிடும் வேளையில், மறு பக்கத் தில் வேறு சில தேசங்களை அங்கீகரிப்பதில் பின் நிற்கவில்லை. பல தடவைகளில் இந்த இரட்டை வேடம் அம்பலப்படும்போது எழும் சர்ச்சைகளால் இவர்களது நம்பகத்தன்மை, நேர்மை, நன்னடத்தை என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக சுதந்திரம் கோரிப் போராடும் பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்) மக்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் எடுக்காத ஐரோப்பிய ஒன்றியம் யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்த நாடுகளை ஒவ்வொன்றாக அங்கீகரித்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூகோஸ்லேவியா என்ற நாட்டை உருவாக்கிய மேற்கைரோப்பிய நாடுகள், பின்னர் அதைத் துண்டு துண்டாக உடைத்ததற்கு அவர்களது தன்னலம் மட்டுமே காரணம். கம்யூனிச அரசாங்கங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கிழக்கைரோப்பிய நாடுகள் துரித வேகத்தில் மேற்கைரோப்பாவினால் காலனித்துவப்படுத்தப்பட்டது. பெரிய வர்த்தகக் கழகங்கள் புதிய சந்தைகளையும் செலவு குறைந்த மனித வளத்தையும் கண்டுபிடித்தன. முன்பு ஹிட்லர் ஆயுதபலம் கொண்டு அடைய விரும்பியதைத் தற்போது ஐரோப்பிய யூனியன் சமாதான வழியிலேயே பெற்றுக் கொண்டது.

இதன் பின்னணியிலேயே கொசோவாவின் சுதந்திரத்தையும் நோக்க வேண்டும். 17.02.2008 அன்று கொசோவா சுதந்திரமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தை செர்பியா, ரஷ்யா, கிரீஸ், ஸ்பெயின் உட்பட பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. விமானக் குண்டு வீச்சுகளின் உதவியுடன் சேர்பியாவின் கொசொவோ மாகாணத்தைக் கைப்பற்றிய நேட்டோ படையணிகள் அதனைப் பூரண ஐரோப்பிய காலனியாக மாற்றிக் காட்டின. அதேநேரம் அல்பேனிய தேசியவாதிகள் பிற இனங்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்ததை கண்டும் காணாததுபோல் இருந்தன. இதனால் சுதந்திர கொசோவோ, எல்லாவற்றிற்கும் மேற்கைரோப்பிய காலனியவாதிகளில் தங்கியிருக்க வேண்டும்.இது எதிர்காலத்தில் இஸ்ரேல் போன்று ஒரு பிராந்திய ரவுடியை உருவாக்க வழி சமைக்கலாம். இது ஒரு புறமிருக்க கொசோவோ விற்குச் சுதந்திரம் வழங்கியதால் அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா போன்றவற்றின் சுதந்திரத்தைத் தான் அங்கீகரிக்க வேண்டி இருந்தது, என்று ரஷ்யா நியாயம் சொல்லி வந்தது. இது பேரரசுகளின் பூகோள அரசியல் சதுரங்கம்.

வரலாறு நெடுகிலும் தம்மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லரசு பலவீனப்படும் வேளையிலேயே குட்டித் தேசங்கள் விடுதலையடைந்து வந்தன அல்லது இன்னொரு வல்லரசின் பக்கபலத்துடன் தமது சுதந்திரத்தை காப்பாற்றி வந்துள்ளன. இருப்பினும் 20ம் நூற்றாண்டு பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியைக் கண்டது. இதற்குக் காரணம் உலகெங்கும் பரவிய சித்தாந்தப் புரட்சி. ஐரோப்பாவில் தோன்றிய புரட்சித் தீ கண்டங்கள் கடந்து பரவியது. முரண்நகையாக ஐரோப்பியக் காலனியவாதிகளும் அதற்கு உதவியுள்ளனர். அவர்கள்
காலனித்துவப்படுத்திய நாடுகளில் ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அவர்களுக்கு ஐரோப்பியக் கல்வியைப் புகட்டப்போக, அந்தக் கல்வியினூடாக தேசியவாதத்தை அறிந்துகொண்ட உள்ளூர் தலைவர்கள் அதைக் கொண்டே காலனியவாதிகளை விரட்டியடித்தமை வரலாறு. தற்போது அப்படி விடுதலையடைந்த தேசங்களில் வாழும் பிற சிறுபான்மையினங்கள் அதே தேசியவாத சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்துத் தமது உரிமைகளைக் கோருகின்றனர். சக மனிதர்கள் சம உரிமை கோருவது போல இனங்களும் சம அந்தஸ்து கோருவது வியப்பில்லை. அதே நேரம் “ஒன்றுபட்டால் நன்மை எமக்கு; பிரிந்தால் இலாபம் எதிரிக்கு.” என்ற பொன்மொழியை மறுப்பதற்கில்லை. இதயசுத்தியுடன் தேசிய இனப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் அப்பிரச்சினை எழுவதைத் தடுக்கும் ஒரே வழி. சமாதானத்தை பிறருக்கும் வழங்குவதன்மூலம் தான் தானும் சமாதானமாக வாழ முடியும்.

(முற்றும்)

முதலாவது பகுதியை வாசிக்க:தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு