Showing posts with label சி.ஐ.ஏ.. Show all posts
Showing posts with label சி.ஐ.ஏ.. Show all posts

Friday, March 16, 2018

நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்"

சோவியத் யூனியனுக்குள் நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்".

ஒரு நோர்வே நாட்டு உளவாளியின் வாக்குமூலம்.

பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள் உளவு பார்ப்பதற்கும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், நேட்டோ நாடுகளை சேர்ந்த உளவாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். 

ஊடுருவல் குறித்து, பல தடவைகள் சோவியத் ஒன்றியம் முறையிட்டு வந்த போதிலும், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும், அந்தக் குற்றச்சாட்டுகளை "கம்யூனிச பிரச்சாரம்" என்று நிராகரித்து வந்தன. தற்போது, நோர்வே நாட்டு சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர், மரணப் படுக்கையில் இருக்கையில் அந்த இரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

வடக்கு நோர்வேயில் வாழ்ந்த, ஒரு சாதாரண பாடசாலை ஆசிரியரான Arne Lund, தான் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற தகவலை, தனது ஆறு மகள் மாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இறுதியாக, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்கு அந்த இரகசியத்தை தெரிவித்தார். இவரைப் போன்ற நேட்டோ உளவாளிகள் பலர் இருந்த போதிலும், முன்னாள் உளவாளி ஒருவர் தனது செயல்கள் பற்றிய வாக்குமூலம் கொடுத்துள்ளமை, இதுவே முதல் தடவை.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த Arne Lund, தனது நடவடிக்கைகள் பற்றி, மனைவியிடம் கூட கூறாமல் மறைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருப்பதைக் கண்ட மனைவி, விஷயம் தெரியாமல், அவர் மேல் சந்தேகப் பட்டிருக்கிறார். 

சி.ஐ.ஏ. இவரை ஊடுருவல் பணியில் ஈடுபடுத்திய காலத்தில் எல்லாம், வேறு இடத்திற்கு படிக்கச் செல்வதாக கூறியுள்ளார். Arne Lund, வட நோர்வேயில் உள்ள Hammerfest எனுமிடத்திற்கு கப்பலில் சென்று, சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்திப்பார்.

அவர்கள் பின்லாந்து எல்லையோரம் உள்ள, Karasjok எனும் நகரத்திற்கு செல்வார்கள். அங்கிருந்து சாதாரண பேரூந்து வண்டியில் ஏறி, பின்லாந்தில் உள்ள Ivalo என்ற இடத்தை சென்றடைவார்கள். 

இவாலோ நகரில் இருந்து தான், சோவியத் யூனியனுக்குள் ஊடுருவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். சோவியத் நாட்டு எல்லையோரம் உள்ள Virtaniemi, மற்றும் Raja-Jooseppi ஆகிய பின்னிஷ் நகரங்கள், நேட்டோவின் ஊடுருவல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப் பட்டு வந்தன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லை கடந்து செல்வதற்கு, பின்லாந்து நாட்டு உளவாளி ஒருவர் உதவுவார். தான் சி.ஐ.ஏ. இடம் இருந்து எவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லாத ஆர்னே லுண்ட், பின்னிஷ் உளவாளிக்கு ஒரு வருட, அல்லது இரு வருட சம்பளப் பணம் கொடுக்கப் பட்டதாக தெரிவித்தார். ஆயுதங்களுடனும், தொலைத்தொடர்புக் கருவிகளுடனும், சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் ஊடுருவும் நேட்டோ அணியினர், உளவறிந்த பின்னர் திரும்பி வருவது வழக்கம்.

குறைந்தது ஏழு தடவைகள், அவ்வாறு சோவியத் நாட்டுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாக, ஆர்னே லுண்ட் தெரிவித்தார். ஆனால், கடைசித் தடவையாக நடந்த ஊடுருவலில் தவறு நேர்ந்து விட்டது. தற்செயலாக சோவியத் பாதுகாப்புப் படையினரின் கண்களில் சிக்கியுள்ளனர். 

அதனால், நேட்டோ ஊடுருவல் அணியினர், எதிரில் வந்த மூன்று சோவியத் படையினரை சுட்டுக் கொன்று விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். ஆர்னே லுண்ட், தன்னிடம் இருந்த சைலன்சர் பூட்டிய துப்பாக்கியால், அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆர்னே லுண்ட் விவரித்த இரகசிய ஊடுருவல்கள் யாவும், ஐம்பதுக்களில், அறுபதுகளில் இடம்பெற்றவை. எண்பதுகளில் ஒரு தடவை, நேட்டோ ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்ததாக சோவியத் அரசு அறிவித்திருந்தது. அப்போது அதனை யாரும் பொருட் படுத்தவில்லை. அமெரிக்க ஆதரவாளர்கள், அந்த செய்தியை "வழமையான சோவியத் பிரச்சாரம்" என்று புறக்கணித்து வந்தனர்.

பனிப்போர் காலத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, ஆர்னே லுண்ட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், "Agentens skriftemål" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வீஜிய NRK1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆவணப் படத்திற்கான இணைப்பு:
Brennpunkt , Agentens skriftemål
https://tv.nrk.no/serie/brennpunkt/mdup11001913/29-10-2013

Wednesday, June 28, 2017

கம்யூனிசத்தை கருவறுக்க சி.ஐ.ஏ. உருவாக்கிய "எல்லை கடந்த பயங்கரவாதம்"!


சி.ஐ.ஏ. வரலாறு, "ஓர் அழிவின் சுவடு". Tim Weiner எழுதிய "Legacy of Ashes" ஆங்கில நூலின் டச்சு மொழிபெயர்ப்பு. இப்போது தான் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். இன்னும் நூறு பக்கங்கள் தாண்டவில்லை. அதற்குள் கண்ணைக் கட்டுதே!

பனிப்போர் தொடங்கிய காலத்தில், ஐரோப்பாவில் கம்யூனிசத்தை கருவறுக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டது தான் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம்.

இரண்டாம் உலகப்போர் முடிவில், கிரேக்க நாடு சோவியத் முகாமுக்குள் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஏதென்ஸ் நகரில் தரையிறங்கிய பிரிட்டிஷ் கடற்படையினர் ஊடாக, கிரேக்க மன்னருக்கு விசுவாசமான படைகளுக்கு உதவி செய்யப் பட்டது. அப்போது கிரேக்கத்தில் செல்வாக்குடன் இருந்த கம்யூனிச கிளர்ச்சிப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவி செய்யப் பட்டது.

கிரீஸ் ஒரு சோஷலிச நாடாகி, அங்கு சோவியத் இராணுவம் தளம் அமைத்தால், எண்ணை வள மத்திய கிழக்கு நாடுகளையும் கைப்பற்றி விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அதனால், சோவியத் இராணுவம் முன்னேறினால், எண்ணைக் கிணறுகளை குண்டு வைத்து தகர்ப்பதற்கு தயாராக இருந்துள்ளனர்.

இஸ்லாமியருக்கு மெக்கா மாதிரி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கான் என்று சொல்லலாம். வத்திக்கான் இருக்கும் இத்தாலி கூட கம்யூனிச நாடாகும் அபாயம் இருந்தது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இத்தாலியில் சி.ஐ.ஏ. நிதியில் உருவாக்கப் பட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் (NGO) பெயரில், தீவிரமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டது. அதற்கு அமெரிக்கர்கள் நிதி வழங்க ஊக்குவிக்கப் பட்டனர். கம்யூனிச எதிர்ப்பு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கியவர்கள் அமெரிக்க அரசிடம் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள முடிந்தது.

சோவியத் யூனியன், மற்றும் கிழக்கைரோப்பிய சோஷலிச நாடுகளுக்குள் ஊடுருவுவது சி.ஐ.ஏ. இன் நோக்கமாக இருந்தது. அதற்காக, அந்த நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த சமூகங்களில் ஆட்களை சேர்த்தார்கள். அப்போதே மேற்கு ஐரோப்பாவில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்களை அணிதிரட்டுவது பெரிய விடயம் அல்ல.

முன்னாள் நாஸிகள், பாசிஸ்டுகள் எல்லாம் சி.ஐ.ஏ. கைக்கூலிகளாக மாறினார்கள். யூத இனப்படுகொலை நடத்திய உக்ரைனிய பாசிஸ்டுகள், சி.ஐ.ஏ. இனால் பயிற்றுவிக்க பட்டு உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். அதே மாதிரி, இத்தாலி, கிரீசில் வாழ்ந்த மனராட்சி ஆதரவு அல்பேனியர்களுக்கு பயிற்சி கொடுத்து அல்பேனியாவுக்குள் அனுப்பினார்கள்.

இதற்கிடையே ஒரு குறிப்பிடத் தக்க சம்பவம் நடந்தது. ஹங்கேரியில் சிலர் ஒரு விமானத்தைக் கடத்தி மேற்கு ஜெர்மனிக்கு கொண்டு சென்றனர். மேற்கு ஜெர்மனி அரசு, அவர்களை "விமானம் கடத்திய பயங்கரவாதிகளாக" கருதி சிறையில் அடைக்கவில்லை. மாறாக, சி.ஐ.ஏ. அவர்களில் சிலருக்கு இராணுவப் பயிற்சி கொடுத்து, பயங்கரவாதிகளாக மாற்றி மீண்டும் ஹங்கேரிக்கு திருப்பி அனுப்பியது.

சோஷலிச நாடுகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்டவர்கள், அடையாளமில்லா விமானங்களில் கொண்டு செல்லப் பட்டு பாரசூட்டுகளில் இறக்கி விட்டனர். அவ்வாறு பல நூற்றுக் கணக்கான "எல்லை கடந்த பயங்கரவாதிகளை" அனுப்பியும், அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பதற்கு சில வருட காலம் எடுத்தது.

பாரசூட்டில் இறக்கி விடப் பட்டவர்கள் அனைவரும் கம்யூனிச இரகசியப் பொலிசாரால் கண்டுபிடிக்கப் பட்டு விட்டனர். முதலில் அவர்களை பிடித்து வைத்திருந்து தகவல் அனுப்ப சொன்னார்கள். அதன்படி, "குறிப்பிட்ட இடத்திற்கு மேலதிக வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்புமாறு" சி.ஐ.ஏ. க்கு தகவல் கொடுத்தனர். இதை உண்மை என்று நம்பிய சி.ஐ.ஏ. இன்னும் பலரை பாரசூட்டில் இறக்கி விட்டது. அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப் பட்டு விட்டனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் துன்பப் படுகிறார்கள்" என்று புனையப்பட்ட பொய்ப் பரப்புரைகளை சி.ஐ.ஏ. உண்மை என்று நம்பி விட்டது போலும். தாங்கள் "விடுதலை வீரர்களை" அனுப்பினால், அங்கு "மக்கள் எழுச்சி" ஏற்படும், கம்யூனிச அரசுகள் கவிழ்ந்து விடும் என்று நினைத்திருக்கிறார்கள்.

Wednesday, July 22, 2015

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சி.ஐ.ஏ. ஊடுருவியது எப்படி?


உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. இலங்கையிலும், கடந்த பல தசாப்த காலமாக சி.ஐ.ஏ. ஊடுருவி செயற்பட்டு வந்துள்ளது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலையிலும் அது சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப் பட்டது.

அண்மைக் காலமாக, சி.ஐ.ஏ. நேரடியாக தலையிடுவதை குறைத்துக் கொண்டு, பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. USAID எனும் தொண்டு நிறுவனம், சி.ஐ.ஏ. தன்னை உருமறைப்பு செய்து கொள்வதற்கு பயன்படுகின்றது. அண்மைக் காலத்தில், USAID ஊழியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில், கியூபா, பொலீவியா, எக்குவடோர் ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

இறுதிப்போருக்கு முன்னரும், பின்னரும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில், USAID பலவிதமான திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. "தமிழர்களுக்கு ஜனநாயகம் போதிப்பது" என்ற பெயரின் கீழ், ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு, அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புகள் நடந்துள்ளன. சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட "ஊடகவியலாளர்கள்" யாரென்பதை இனங்காண்பது மிகவும் எளிது. 

சி.ஐ.ஏ. இடம் பயிற்சி பெற்ற தமிழ் பேசும் "ஊடகவியலாளர்கள்", வெளியில் "தமிழ் தேசியம்" பேசினாலும், உள்ளுக்கு அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். வலதுசாரி சிந்தனையுடன் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்கள். கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, வட கொரியா போன்ற நாடுகளைப் பற்றி, எதிர்மறையான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். 

சுருக்கமாக: சி.ஐ.ஏ. கற்பித்த பாடங்களை, தமது சொந்தக் கருத்துக்கள் மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள். தமிழ் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் எங்கும், சி.ஐ.ஏ. ஆசிரியர்களிடம்  அரசியல் பயின்ற மாணவர்களை காணலாம்.

முன்பு பனிப்போர் நிலவிய காலத்தில், சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. யாழ்ப்பாணத்தில், அலன் தம்பதிகள் என்ற இரண்டு அமெரிக்கப் பிரஜைகள், ஈ.பி.ஆர்.எல்ப். இனால் கடத்திச் சென்று பயணம் வைக்கப் பட்டனர். அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என்று குற்றஞ் சாட்டப் பட்டது. இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூப்பிக்க முடியாமல் போனது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், Tamil Refugee’s Rehabilitation Organisation (TRRO) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கந்தையா கந்தசாமி, ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார். அவரைக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டதால், உடலைத் தூக்கி கழிவுத் தொட்டிக்குள் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

TRRO தலைவர் கந்தசாமி "கொலை", அன்று பல வதந்திகளுக்கு காரணமாகி இருந்தது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இயங்கிய TRRO அமைப்புகளை புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அண்மைக் காலம் வரையில், வெளிநாடுகளில் பெரும்பாலான புலிகளின் செயற்பாடுகள் யாவும், TRRO என்ற பெயரின் கீழ் தான் நடந்து வந்தன. ஆகையினால், கந்தசாமி கொலையில் புலிகள் சம்பந்தப் பட்டிருந்ததாக கருதப் பட்டது. ஆனால், அது உண்மையல்ல.

உண்மையில், கந்தசாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகத்தின் பெயரில் தான் கடத்தப் பட்டார். ஈரோஸ் இயக்கத்திற்கு, RAW அது குறித்த தகவல்களை வழங்கியது. அன்றைய பனிப்போர் காலத்தில், இந்தியா சோவியத் முகாமுக்குள் இருந்தது என்பதையும், அதனால் சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. (பார்க்க:The truth behind TRRO Kandiah Kandasamy's death; http://www.srilankaguardian.org/2012/03/truth-behind-trro-kandiah-kandasamys.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+srilankaguardian%2FIGKI+%28Sri+Lanka+Guardian%29)

எண்பதுகளில், ஈரோஸ் இயக்கத்தினர், சர்வோதயா இயக்கத்தின் யாழ் மாவட்டத் தலைவர் கதிரமலையை கடத்தி கொலை செய்திருந்தனர். சர்வோதயா அமைப்பு காந்திய வழியில் அமைக்கப் பட்ட தொண்டு நிறுவனமாகும். இலங்கையின் முதலாவதும், பெரியதுமான சர்வோதயா அமைப்பு, பௌத்த - மேட்டுக்குடியினரின் உள்நாட்டு தொண்டு நிறுவனம் (NGO) ஆகும். அதற்குள் நீண்ட காலமாகவே சி.ஐ.ஏ. ஊடுருவல் இருந்து வந்துள்ளது. அன்று கதிரமலையை ஈரோஸ் இயக்கத்தினர் கொலை செய்வதற்கும், அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகம் காரணமாக இருந்தது.

அன்று ஈரோஸ் கதிரமலையை கொன்றதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். "காந்திய பாணி தொண்டு நிறுவனம்" என்ற போர்வை அதன் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கு பெரிதும் உதவியது. தனிநபர் வாதம், நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாலும், சர்வோதயா அடிப்படையில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் ஆகும். ஈழப்போருக்கும், சர்வோதயா அமைப்பிற்கும்,சி.ஐ.ஏ.க்கும் இடையிலான தொடர்பு இன்னும் அறுந்து விடவில்லை.

2009, இறுதிப்போரின் பின்னர், சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த புலிப் போராளிகள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப் பட்டமை அனைவரும் அறிந்ததே. அங்கு முன்னாள் போராளிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியும், மொபைல் தொலைபேசிகளை திருத்துவது போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப் பட்டன. அதன் மூலம், முன்னாள் போராளிகள், உலகமயமாக்கப் பட்ட முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் தொழிலாளர்களாக மாற்றப் பட்டனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் பற்றி, பலருக்குத் தெரியாத உண்மை ஒன்றுள்ளது. அந்த முகாம்களை யார் நடத்தினார்கள்? யார் நிதி வழங்கினார்கள்? பெரும்பாலான முகாம்கள், சர்வோதயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் நடந்தன. அவர்களுக்கு தேவையான நிதியை USAID வழங்கிக் கொண்டிருந்தது. 

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வுக்கு, சி.ஐ.ஏ. மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தது. (பார்க்க: USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA; http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html) இந்த உண்மை தெரியாத சில தமிழ் இன உணர்வாளர்கள், சிறிலங்கா படைகள் முன்னாள் புலிப் போராளிகளை இன்னும் விடுவிக்கவில்லை என்று, அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்து கொண்டிருந்தார்கள்!

சிலநேரம், "சி.ஐ.ஏ. யார்? அது ஈழத்தில் என்ன செய்கின்றது?" என்பன போன்ற விபரங்கள், அன்று புலிகளின் தலைவர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். வலதுசாரி - "தமிழ் தேசிய" அறிவுஜீவிகளின் அறிவுரைகளை நம்பி, அமெரிக்கர்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் உளவு பார்ப்பதற்கு, தாமே அனுமதித்து இருக்கலாம். பிரபா-ரணில் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னரே, வடக்கு, கிழக்கில் சி.ஐ.ஏ. ஊடுருவல்கள் அதிகரித்தன. அதற்கு அவர்கள் ஒரு அபிவிருத்தித் திட்டம் ஒன்றை உருவாக்கி, புலிகளின் நன்மதிப்பை சம்பாதித்து இருந்தனர்.

Office of Transition Initiatives (OTI) என்ற பெயரில், USAID, மற்றும் அமெரிக்க தூதுவராலயத்தினால், திருகோணமலையில் ஒரு அபிவிருத்தித் திட்டம் தொடங்கப் பட்டது.இது ஏற்கனவே பல உலக நாடுகளில் இயங்கி வருகின்றது. அது நிகரகுவாவில் இருந்த சான்டிஸ்டா கம்யூனிசப் புரட்சியாளர்களின் அரசைக் கவிழ்க்கும் நோக்கில், கொன்றாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளது. 

வெனிசுவேலாவில் சாவேஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக நடந்த சதிப்புரட்சியிலும் OTI சம்பந்தப் பட்டிருந்தது. அண்மையில், கியூபாவில் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியமைத்துக் கொடுக்கும் டிவிட்டர் வலைத்தளத்தை உருவாக்கி அம்பலப் பட்டது. (பார்க்க: US secretly created 'Cuban Twitter' to stir unrest; http://bigstory.ap.org/article/us-secretly-created-cuban-twitter-stir-unrest)

2003 ம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் அக்கரைப்பற்று அலுவலகத்தில், USAID பிரதிநிதிகள், அன்றைய பொறுப்பாளர் கௌசல்யனை சந்தித்துப் பேசி உள்ளனர். அதைத் தவிர, கிளிநொச்சி, திருகோணமலையிலும், USAID, புலிகள் சந்திப்பு நடந்துள்ளது. (பார்க்க: USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARA; https://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html) 

USAID நிறுவனமானது, தனது Office of Transition Initiatives திட்டத்திற்கு புலிகளின் ஒப்புதல் வாங்கிக் கொள்வதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், தமக்கு சார்பான NGO நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதியுதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். அதை அவர்கள் USAID இடம் நேரடியாகவே கேட்டுமுள்ளனர்.

USAID, யாழ்ப்பாணத்தில் இருந்த தனது அலுவலகத்திற்கு, வன்னி ஊடாக நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு புலிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தது. (அன்றைய நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை தவிர்க்க வேண்டுமானால், விமானம் மூலம் போக்குவரத்து செய்வது செலவு பிடிக்கும் விடயமாக இருந்தது.) USAID, ஒரு சி.ஐ.ஏ. நிறுவனம் என்ற உண்மையை அறிந்திராத புலிகளும் அதற்கு அனுமதி கொடுக்க சம்மதித்தனர்.

அது மட்டுமல்ல, புலிகள் அமெரிக்க நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் சம்மதித்திருந்தனர். இது அன்று பல தொண்டு நிறுவனங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், அன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக சென்ற அனைத்து வாகனங்களும் மறிக்கப் பட்டு, தனி நபர்களுக்கும், பொருட்களுக்கும், அளவுக்கு அதிகமான வரி அறவிடப் பட்டு வந்தது. USAID புலிகளுடனான ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் எந்தத் தடையும் இன்றி இயங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும், அமெரிக்க அரசு புலிகளை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை.

மேலதிக விபரங்களுக்கு: 
USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARA; https://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html
USAID opens new office in Trincomalee;
 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10724
USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA;
 http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!
யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!
கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!
யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்

Wednesday, June 17, 2015

கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!


"தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில், மோசஸ் நாகமுத்து என்ற ஒரு தமிழர் பிரதமராக வந்துள்ளதாகவும், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்" என்று ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். கயானா நாட்டின் அரசியல் நிலவரம், அல்லது  "தமிழ்ப்" பிரதமரின் அரசியல் வரலாறு பற்றி எதுவும் அறியாமல் பரப்பப்படும் தகவல் ஆபத்தானது. அது இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கே உதவப் போகின்றது.

தமிழர்களே ஏமாறாதீர்கள்! மோசஸ் நாகமுத்து ஒரு சி.ஐ.ஏ. உளவாளி! கயானாவில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள எண்ணை வளத்தை அபகரிக்கும் நோக்குடன், CIA செய்யும் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று.

மோசஸ் வீராசாமி நாகமுத்து: யார் இவர்? 
நாகமுத்து என்பது குடும்பப் பெயர். அனேகமாக, கயானாவில் காலடி எடுத்து வைத்த முப்பாட்டனின் பெயர். ஆங்கிலேயர் வாயில் நுழையாத படியால் நகமூட்டூ (Nagamootoo) என்று மாற்றி விட்டார்கள்.

மோசஸ் நாகமுத்து, கயானாவில் விம் கிராமத்தில் பிறந்தவர். அங்கு வாழும் மக்கள் சென்னையில் இருந்து வந்து குடியேறியவர்கள். இருநூறு வருடங்களுக்கு முன்னர், இவரது மூதாதையர் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றனர். இன்று அங்கே வாழும் "தமிழர்கள்" யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது. அவர்கள் ஒன்றில் ஆங்கிலம் அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள்.

உலகில் நீண்ட கால இனப்பகை முரண்பாடுகளை கொண்ட நாடுகளில் கயானாவும் ஒன்று. தென் அமெரிக்காவில், வெனிசுவேலாவுக்கு அருகில் உள்ள முன்னாள் பிரிட்டிஷ் காலனியில், ஆப்பிரிக்க அடிமைகளும், இந்திய கூலிகளும் பெருமளவில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்களின் வம்சாவளியினர் இரண்டு பெரும்பான்மை சமூகங்களாக வாழ்கின்றனர்.

கயானாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னரே, பிரிட்டிஷார் அந்த நாட்டில் சுதந்திரமான பொதுத் தேர்தல்களை நடத்தினார்கள். அப்போது முற்போக்கு மக்கள் கட்சி (The Progressive People's Party) (PPP) பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. உண்மையில் PPP, ஆப்பிரிக்க, இந்திய உழைக்கும் வர்க்க மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய மார்க்சியக் கட்சியாக இருந்தது.

PPP தலைவர் டாக்டர் செட்டி ஜெகன் ஓர் இந்தியர் (இவரது முன்னோர் கூட தமிழராக இருக்கலாம்.) செட்டி ஜெகன் தன்னை ஒரு மார்க்சிய - லெனினிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர். கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். சேகுவேராவை கூட நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அன்றிருந்த நிலைமையில், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கினால், அது அடுத்த நாளே ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று பிரிட்டன் அஞ்சியது. செட்டி ஜெகன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது உறுதியானதும், காலனிய எஜமானான பிரிட்டன் படைகளை அனுப்பி மிரட்டியது.

அப்படி இருந்தும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் PPP தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்த படியால், பிரிட்டன் அமெரிக்காவின் உதவியை நாடியது. CIA, MI5 இரண்டும் கூட்டுச் சேர்ந்து, செட்டி ஜெகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டின.

ஓர் ஏழை நாடான கயானாவில், PPP தனது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர் மத்தியில் பேராதரவு பெற்றிருந்தது. அதனால் CIA, தனது அமெரிக்க தொழிற்சங்க கைக்கூலிகளான AFL-CIO மூலம் இரகசியமாக நிதி அனுப்பி, இனக் கலவரங்களை தூண்டி விட்டது.

1964 ம் ஆண்டு, கயானாவில் இந்தியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் இனக்கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, PPP இல் இருந்த ஆப்பிரிக்க இனத் தலைவர் போர்ப்ஸ் பெர்ன்ஹம் (Forbes Burnham) கட்சியை விட்டு விலகினார். அவருடன் ஆப்பிரிக்க உறுப்பினர்களும் வெளியேறினார்கள். அதனால், PPP இந்தியர்களின் கட்சியாகியது.

போர்ப்ஸ் பெர்ன்ஹம் தலைமையில், ஆப்பிரிக்க இனத்தவரை பிரதிநிதித்துவப் படுத்தும் People's National Congress (PNC) என்ற புதிய கட்சி உருவானது. இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரிட்டன், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கியது. 1966 ம் ஆண்டு கயானா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, போர்ப்ஸ் பெர்ன்ஹம் ஒரு சர்வாதிகாரியாக அரசாண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப் பட்டனர்.

நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் சி.ஐ.ஏ. மேலதிகாரி  Bryan Hunt (Charge´ d´ affaires) ஐ சந்தித்து பேசினார்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தான், PPP கட்சி சார்பில் மந்திரிப் பதவி வகித்த மோசஸ் நாகமுத்துவுக்கும் சி.ஐ.ஏ. க்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற காரணத்தினால், செட்டி ஜெகனால் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தார். அந்தத் தகவலை, அன்றைய அமெரிக்க இராஜதந்திரி Wayne, மற்றும் சில கயானா ஊடகவியலாளர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். மேலும், நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் முதல் வேலையாக தனது சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்தித்துள்ளார். (PM Nagamootoo meets with US Chargé d’ Affaires; http://www.kaieteurnewsonline.com/2015/05/28/pm-nagamootoo-meets-with-us-charge-d-affaires/)

தொண்ணூறுகளுக்கு பின்னர், PPP மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. கடந்தாண்டு தேர்தல் வரையில், குறைந்தது ஒரு தசாப்த காலமாக PPP ஆட்சி செய்தது. அதன் ஆட்சிக் காலத்தில், கயானாவில் எண்ணை கண்டுபிடிக்கப் பட்டதாக Exxon Mobil அறிவித்தது.



கடந்த பொதுத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிந்தாலும், ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான அமெரிக்க கண்காணிப்பாளர்கள் "தேர்தல் நல்ல முறையில் நடந்துள்ளதாக" கூறியுள்ளனர். PPP க்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் தான் "தமிழரான" மோசஸ் நாகமுத்து கூட்டுச் சேர்ந்துள்ளார்.

உண்மையில், எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான APNU+AFC இனை, ஆப்பிரிக்க, ஐரோப்பிய வம்சாவளியினரே பெரும்பான்மையாக ஆதரிக்கின்றனர்.  PPP இப்போதும் இந்தியர்களின் கட்சியாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

இலங்கையில், மோசஸ் நாகமுத்து போன்ற ஒரு அரசியல்வாதி, சிங்கள அரசில் அங்கம் வகித்தால், அவருக்கு என்ன பட்டம் கொடுத்திருப்பார்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. கயானாவிலும் அது தான் நிலைமை.


இது குறித்து மேலும் அறிய விரும்புவோருக்காக. 
கயானாவில் CIA செய்த சதி நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விபரங்கள் இந்த நூலில் எழுதப் பட்டுள்ளன:
U.S. Intervention in British Guiana: A Cold War Story 
http://www.amazon.com/U-S-Intervention-British-Guiana-History/dp/0807856398

Monday, October 27, 2014

யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!


தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்காக, தம்மை ஆண்டவர் தேர்ந்தெடுத்தார் என்று நினைத்துக் கொள்ளும், போலித் தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள், தங்களை மட்டுமே புனிதர்களாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கோடிக் கணக்கான பணம் கைமாறும். அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. 

போலித் தமிழ் தேசியவாதிகள், தங்களை ராஜபக்ச கும்பலுக்கு சமமான வர்த்தகக் கூட்டாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணம் தவறானதும் அல்ல. கொழும்பு பங்குச் சந்தையில், கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக முதலிட்டு வருபவர்கள் தான், இந்த புலம்பெயர்ந்த தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள். மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. 

இந்தியாவில் அரசியல் தரகு வேலை பார்க்கும், CIA உளவாளி சுப்பிரமணியசாமியுடன், Tom & Jerry மாதிரி ஒளித்துப் பிடித்து விளையாடுவார்கள். சகோதரர்களுக்கு இடையில் சண்டை வரும். ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், பாஜக தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்திருப்பார்கள். அதனால் தான், கடந்த பொதுத் தேர்தலில், "நரேந்திர மோடி - சுப்பிரமணிய சாமி கோஷ்டியை" ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். 

அந்த அரசியல் அலங்கோலங்களை, தமிழ் மக்கள் மறந்து விட வேண்டுமாம். போலித் தமிழ் தேசியத்தின் சித்தாந்தம் இந்துத்துவா மதவாதம் என்பது இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் என்தால் தான், சிஐஏ எஜன்ட் சுப்பிரமணியசாமிக்கும், போலித் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையில் ஓர் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலவுகின்றது.

யார் இந்த சுப்பிரமணிய சாமி?
தமிழ் (தேசிய) ஊடகங்கள், அவரை மக்கள் ஆதரவற்ற தனி நபர் போன்றும், அரசியல் கோமாளி போன்றும் சித்தரித்து வருகின்றன. அவர்களில் பலருக்கு சு.சாமி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது மட்டுமே பிடிக்கவில்லை. ஆனால், அதே சு.சாமி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் நேரத்தில் யாரும் கண்டிப்பதில்லை. 

சு. சாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விடயம் தான். ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் அது விபரமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சுப்பிரமணிய சாமி மட்டுமல்லாது, புலிகள், சி.ஐ.ஏ., மொசாட் ஆகிய அந்நிய சக்திகளும், ராஜீவ் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளதாக, ஜெயின் கமிஷன் எழுதி இருந்தது. ஆனால், தமிழினவாதக் குழுக்களும், தமிழ் ஊடகங்களும், சுப்பிரமணிய சாமி மட்டுமே ராஜீவ் காந்தியை கொலைக்கு காரணம் என்பது போல, கால்வாசி உண்மையை சொல்லிக் கொண்டிருந்தன.

சு.சாமிக்கும், சி.ஐ.ஏ.க்கும் இடையிலான உறவு, இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. எழுபதுகளில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, காங்கிரஸ் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அது பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் கருதி, சோவியத் யூனியன் அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அளவு கடந்த சோவியத் இராணுவ, நிதியுதவி பெற்று வந்த, சோஷலிச முகாமை சேராத நாடு இந்தியா ஆகும். 

இந்தியாவில் இந்திரா காந்தி நடைமுறைப் படுத்திய அவசர கால சட்ட ஆட்சியின் விளைவாக பாதிக்கப் பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்தன.  1977 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நேரம், எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதாக் கட்சி உருவானது. சுப்பிரமணிய சாமி அதன் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இந்திரா காந்தியின் அவசரகால ஆட்சி, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி இருந்ததால், தேர்தலில் ஜனதாக் கட்சியை வெல்ல வைத்தனர். மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆனார். 

அமெரிக்காவில் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் Seymore Hersh, எழுதிய  The Price of Power எனும் நூலில், மொரார்ஜி தேசாய் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. மொரார்ஜி தேசாய் அந்த எழுத்தாளருக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆரம்பத்தில் அதனை அலட்சியப் படுத்தியதாக காட்டிக் கொண்ட சி.ஐ.ஏ., ஜனதாக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த சு.சாமிக்கு ஒரு டெலேக்ஸ் அனுப்பியது. சி.ஐ.ஏ. யின் மும்பைக் கிளை அலுவலகத்தில் இருந்து, மொரார்ஜி தேசாயின் கட்சியை தொடர்பு கொண்ட விபரம் கூட சு.சாமி மூலம் தான் வெளியானது. (ஆதாரம் : CIA: Club der Mörder, Kunhanandan nair, Michael Opperskalski)

எழுபதுகளில் ஜனதாக் கட்சியை ஆதரித்து வந்த சி.ஐ.ஏ., பின்னர் அதன் தேவை முடிந்ததும் கை விட்டு விட்டது. தொண்ணூறுகளின் பின்னர், பாஜக என்ற குதிரையின் மேல் பந்தயம் கட்டி வந்தது. அதனால், சி.ஐ.ஏ.யின் நம்பிக்கைக்குரிய முகவர் சுப்பிரமணிய சாமி, 2013 ஆம் ஆண்டு, ஜனதாக் கட்சியை கலைத்து விட்டு, பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து விட்டார். 

2009 ஆம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் திடீரென முளைத்த "நாம் தமிழர்", "மே 17" போன்ற தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், "தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது தான் தமது இலட்சியம்" என்று பகிரங்கமாகவே சொல்லி வந்தன. அதற்காக, வெளிப்படையாகவே நரேந்திர மோடியையும், பாஜக வையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தன. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் இயங்கும் தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், தம்மை "புலி ஆதரவாளர்கள்" போன்று காட்டிக் கொண்டன. சுப்பிரமணிய சாமி தன்னை ஒரு "புலி எதிர்ப்பாளர்" போன்று காட்டிக் கொண்டார். ஆனால், இரண்டு தரப்பினரும், பாஜக வின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டார்கள். இன்று, "புலி ஆதரவாளர்களின்" தயவில், ஒரு "புலி எதிர்ப்பாளர்" மோடியின் அரசாங்கத்தில் வீற்றிருக்கிறார்! உலகில் வேறெந்த நாட்டிலும், இப்படி ஒரு வினோதமான கூட்டணியை காண முடியாது.

இதிலே முரண்நகை எதுவும் கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கின் விடை சரியாகத் தான் வருகின்றது. பல உலக நாடுகளிலும் உள்ள, குறுந் தேசியவாத, மதவாத அரசியல் சக்திகள், சும்மா பாசாங்குக்குக் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசுவதில்லை. இந்தியாவில் இன்னும் எத்தனை பேர் சி.ஐ.ஏ. சம்பளப் பட்டியலில் இருக்கிறார்கள் என்ற விபரம், விக்கிலீக்ஸ் மாதிரி, யாராவது அமெரிக்க தூதரக கேபிள்களை வெளியிட்டால் தான் தெரிய வரும். 

Sunday, June 15, 2014

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்


சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட சிஐஏ உருவாக்கிய இயக்கம் தான் என்பதும், ஒசாமா பின்லேடன் ஒரு சிஐஏ உளவாளி என்பதும், ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மைகள். அமெரிக்கர்கள், ஆரம்ப காலங்களில் ISIS இயக்கத்தினை AQI (ஈராக்கிய அல்கைதா) என்று குறிப்பிட்டு வந்தனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு நடந்த சில மாதங்களின் பின்னர், பதவியிறக்கப் பட்ட சதாம் விசுவாசிகளும், பாத் தேசியவாதிகளும் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அந்தப் போராட்டத்தை முறியடிப்பதற்காக, AQI களத்தில் இறக்கி விடப் பட்டது. 

கடும்போக்கு சுன்னி இஸ்லாமிய மதவாதிகளாக காட்டிக் கொண்ட ISIS, ஷியா இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை கொன்று குவித்தது. சமாரா நகரில் ஷியா நம்பிக்கையாளர்களின் புனிதஸ்தலமான தங்க மசூதியை குண்டு வைத்து தகர்த்தது. இதன் மூலம், ஈராக்கில் சுன்னி- ஷியா மதக் கலவரங்களை தூண்டி விட்டது. இவை எல்லாம் சிஐஏ யின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஒத்துப் போகின்றது.

ஈராக்கிய அல்கைதாவில் இருந்து பிரிந்ததாக கூறிக் கொள்ளும் ISIS, சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததும், சிரியாவுக்கு நகர்ந்து சென்றது. ஈராக் எல்லையோரம் இருக்கும், எண்ணைக் வளம் உள்ள ஒரேயொரு சிரியப் பகுதியை கைப்பற்றிக் கொண்டது. "ISIS அங்கிருந்து கிடைக்கும் எண்ணையை கடத்திச் சென்று விற்று இயக்கத்திற்கு நிதி சேகரித்ததாக," சிஐஏ அறிக்கை கூறுகின்றது.

உண்மையில், சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன், பணத்தை தாராளமாக வாரியிறைத்த சவூதி அரேபியா, கட்டார் மற்றும் மேற்குலக நாடுகளின் நிதியில் பெருமளவு பங்கு, ISIS வசம் சென்றுள்ளது. அவர்கள் அந்தப் பணத்தை மிகத் திறமையாக ஊடக பிரச்சாரங்களில் செலவிட்டு, உலகம் முழுவதும் இருந்து இளம் ஜிகாதியர்களை கவர்ந்திழுத்தனர்.

இன்று, ISIS அமைப்பின் முக்கால்வாசி உறுப்பினர்கள் வெளிநாட்டு தொண்டர்கள் என்றால் அது மிகையாகாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த அதே வரலாறு, இன்று மீண்டும் சிரியா/ஈராக்கில் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, மேற்கத்திய ஊடகங்கள் செய்யும் பரப்புரைகளை நம்பும் மக்கள் இருக்கும் வரையில், ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கொண்டே இருக்கும்.

தற்போது விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் ISIS படையினர், பாக்தாத் நகரை அண்மித்து விட்டார்கள். ஈராக்கின் மொத்த சனத்தொகையில் பாதியைக் கொண்டிருக்கும் பாக்தாத் நகரம் வீழ்ச்சி அடைந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால், ஈராக் அரசு அமெரிக்க இராணுவ உதவி கேட்டிருந்தும், ஒபாமா நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த மௌனம் ஒரு தந்திரோபாயாமாக இருக்கலாம். ஏனெனில் அமெரிக்க இராணுவ உதவியின்றி, மாலிக்கின் ஈராக் அரசு நின்று பிடிக்க முடியாது. அந்த தருணத்தில், ஈரான் இராணுவ உதவி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இன்றைய ஈராக்கிய பிரச்சினை, மீண்டும் சுன்னி - ஷியா பிரச்சினையாக மாறி விட்டது. ISIL இயக்கம் முழுக்க முழுக்க சுன்னி முஸ்லிம்களை மட்டும் கொண்ட மதவாத இயக்கம். அது வெளிப்படையாகவே ஷியாக்களுக்கு எதிரான துவேஷத்தை காட்டி வருகின்றது. 

இன்று வரையில் ISIL கைப்பற்றிய ஈராக்கிய பிரதேசங்களில் சுன்னி முஸ்லிம் பிரிவினர் மட்டுமே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அந்த மக்கள், ISIS இயக்கத்தினரை, விடுதலை வீரர்களாக வரவேற்றுள்ளனர். உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, ISIS அந்தளவு விரைவாக முன்னேறி இருக்க முடியாது. ISIS கைப்பற்றியுள்ள பகுதிகளில், தாலிபான் பாணி ஆட்சி நடப்பது வேறு விடயம்.

ISIS கைப்பற்றிய மொசுல் போன்ற நகரங்களில் இருந்த ஈராக்கிய படையினர், பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அதனால், ஏற்கனவே ஈராக்கிய படையினர், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டிருந்தனர். ISIS முன்னேறிக் கொண்டிருந்த நேரம், ஈராக்கிய அரச படையினர் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தனர். பொது மக்களின் இலக்குகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், பெரும்பான்மையான பொது மக்கள் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.

அண்மைக் காலத்தில் விரைவாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் கள நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் ஈராக் மூன்று துண்டுகளாக பிரிக்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத் தலைமை மட்டத்தில் அத்தகைய திட்டம் ஒன்று ஆராயப் பட்டது. வடக்கு ஈராக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் தனி நாடாகி விடும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்றைய குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் நகரத்தை, குர்து பிராந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள ஈராக்கின் மாலிக் அரசுக்கு, ஈரானிய இராணுவ உதவி கிடைக்குமாக இருந்தால், ஷியா அரேபியர் வாழும் தெற்குப் பகுதி தனியாக பிரிந்து விடும். ஆகவே, ISIS கட்டுப்பாட்டில் உள்ள சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஈராக், சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடாக மாறி விடும். தற்போதைய நிலைமையும், ஏறக்குறைய அப்படித் தான் உள்ளது. இன்னும் யாரும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை தனி நாடாக பிரகடனப் படுத்தவில்லை என்பது மட்டும் தான் வித்தியாசம்.

தற்போது ஈராக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இதனால்,அமெரிக்கா, சவூதி அரேபியா, கட்டார் ஆகிய வளைகுடா நாடுகளின் காட்டில் நல்ல மழை பெய்கிறது. பெற்றோலின் விலை அதிகரிப்பினால் கிடைக்கும் இலாபம், அவர்களது கஜானாவை நிரப்பும் என்பதால், அந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 

ஈராக்கில் ISIS இயக்கத்தின் முன்னேற்றம், எதிர்பாராத விதமாக திடீரென நடந்தது போன்று, அமெரிக்கா பாசாங்கு செய்கின்றது. சிரியாவில் போரிட்டுக் கொண்டிருந்த பெரும்பாலான ISIS போராளிகள், ஈராக் எல்லையோரம் நகர்த்தப் பட்டு வருவதாக, லெபனான் பத்திரிகைகளில் தகவல் வந்திருந்தது. ஒரு ஊடகத்தில் வெளிப்படையாக வந்த தகவலை, சிஐஏ கவனிக்காமல் விட்டது என்று சொல்ல முடியாது. அமெரிக்கர்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்தாலும் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள்.

அது சரி, யார் அந்த அல்கைதா? சிரியா, ஈராக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னேறி, உலகில் யாராலும் வெல்ல முடியாத இயக்கம் என்று மார் தட்டிக் கொள்கிறது. மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடிய பின்னர், உலகிலேயே பணக்கார இயக்கமாகி உள்ளது. அங்கிருந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களை அபகரித்த பின்னர், உலகிலேயே மிகவும் பலமான இராணுவக் கட்டமைப்பு கொண்ட இயக்கம். இன்றைய உலகில் மிகவும் பலமான இயக்கமான அல்கைதா, இன்று வரையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாத காரணம் என்ன? யாருக்காவது விடை தெரியுமா?


Sunday, August 30, 2009

ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து நீண்ட காலமாகி விட்டது. மேலெழுந்தவாரியாக பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதைப் போலதோன்றினாலும், மறைமுகமாக தனது கூலிப்படைகளினூடாக இரத்தம் சிந்தும்ஆயுதப்போராட்டத்தையும் நடத்தி வருகின்றது. ஈராக்கில் தளமமைத்துள்ளமுஜாகிதீன் கல்க் என்ற ஈரானிய எதிர்ப்பியக்கம் வெளிப்படையாகவேஅமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றது. இதே நேரம் பாகிஸ்தானைதளமாக கொண்டு இயங்கி வரும் "ஜன்டுல்லா" என்ற தீவிரவாதக் குழுவிற்குஅமெரிக்கா இரகசியமாக உதவி வருவதை ABC தொலைக்காட்சிஅம்பலப்படுத்தியுள்ளது. 2005 ம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க அமைச்சர் டிக்சென்னிக்கும், அப்போது பாகிஸ்தானில் பதவியில் இருந்த முஷாரப்பிற்கும்இடையில் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கையின் பின்னர் இந்த பதிலிப்போர்ஆரம்பமாகியுள்ளது.

பலுச்சி மொழி பேசும் மக்கள் ஈரானிற்குள்ளும் வாழ்கின்றனர். பாகிஸ்தானின்பலுச்சிஸ்தான் மாகாணம் ஈரான் எல்லையில் அமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தின்பிரிவினைக்காக சில ஆயுதமேந்திய இயக்கங்கள் போராடி வந்தன. அவை யாவும்பாகிஸ்தானிய இராணுவத்தால் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன. எஞ்சியஆயுதபாணிகளை "ஜன்டுல்லா" என்ற பெயரில் ஒன்று திரட்டி, ஈரானுக்குள்சென்று போரிட அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்கா நேரடியாக உதவிசெய்யா விட்டாலும், ஈரானிய புலம்பெயர் அமைப்புகள் மூலம் பணப் பரிமாற்றம்செய்கின்றது. ஜன்டுல்லா தலைவர் அப்த் எல் மாலிக் ரெகி ஒரு மாஜிதாலிபானும், போதைவஸ்து கடத்தல்காரனுவார்.

ரெகி தலைமையிலான சில நூறு போராளிகள் எல்லை கடந்து ஈரானுக்குள்நுழைந்து, ஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களை கடத்தி கொலைசெய்து வருகின்றனர். இதுவரை ஒரு டசினுக்கும் அதிகமான சிப்பாய்களைகடத்தி கொலைசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதை நிரூபிக்கும் வீடியோப்பிரதிகளை அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்தது. இதே நேரம்ஈரானில் ஸஹடன் நகரத்தில் பெப்ரவரி இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், வண்டியில் சென்ற பதினோரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் என்று இரண்டு ஜன்டுல்லாதீவிரவாதிகளை ஈரானிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவர்கள் தாம்பாகிஸ்தான் பலுச்சிஸ்தான் பகுதி முகாமில் பயிற்சி பெற்றதைஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி அறிவித்தது. சி.ஐ.ஏ. தீவிரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள போதிலும், சி.ஐ.ஏ. இதனை மறுத்துள்ளது.


Monday, September 08, 2008

பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு


சி.ஐ.ஏ. யின் முன்னாள் போதைவஸ்து கடத்தல் கூட்டாளியும், பின்னாள் வில்லனுமான, பனாமா சர்வாதிகாரி நொரியேகாவை கைது செய்ய, 1989 கிறிஸ்துமஸ் தினத்தன்று சின்னஞ்சிறிய நாடான பனாமா மீது படையெடுத்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை, எதிர்கால போர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. படையெடுப்பின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும், உண்மையான காரணங்கள் பற்றியும்; அமெரிக்கா அன்று உலகமக்களுக்கு பொய்களை விற்பது இலகுவாக இருந்தாலும்; அமெரிக்க படையெடுப்பின் உண்மையான காரணங்களை, நேரில் சென்று பார்த்த சில சுதந்திர ஊடகவியலாளரின் தளராத முயற்சியினால் "The Panama Deception" வீடியோ மூலம் உண்மைகளை உலகம் அறியக்கூடியதாக உள்ளது.


பனாமா எங்கே இருக்கின்றது? வட-தென் அமெரிக்க கண்டங்களை இணைக்கும் சிறிய நிலப்பரப்பு, ஒரு காலத்தில் கொலம்பியாவிற்கு சொந்தமாக இருந்து, பின்னர் கேந்திர முக்கியத்துவம் கருதி தனிநாடாக பிரிக்கப்பட்டது. அங்கே செயற்கையாக ஒரு கால்வாய் வெட்டுவதன் மூலம், பசுபிக் சமுத்திரத்தை அட்லாண்டிக் சமுத்திரத்துடன் இணைக்கும் குறுகிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைக்கும் நிர்மாணப்பணியை அமெரிக்க கம்பெனிகள் தொடங்கியதில் இருந்து, பனாமா மீதான அமெரிக்க ஆதிக்கம் ஆரம்பமாகியது.

அதிக வருவாய் தரும் பனாமா கால்வாய், பனாமா தேசத்தவருக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. அது அமெரிக்க இராணுவ மேலாண்மையின் கீழ் இருந்தது. ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தொரியோஸ் வந்த பின்னர் தான், கால்வாயை 2000 ம் ஆண்டு பனாமாவுக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. நிலச்சீர்திருத்தம், கறுப்பினத்தவர் முன்னேற்றம் போன்ற புரட்சிகர கொள்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தொரியோஸ் சந்தேகத்திற்கிடமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் தான், சி.ஐ.ஏ. உளவாளி ஜெனரல் நோரியேகா பதவிக்கு வந்தான்.

நீண்ட காலமாக நொரியேகாவுக்கும், சி.ஐ.ஏ. க்கும் இடையில் போதைவஸ்து கடத்தல் விடயத்தில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தபோதும், பின்னர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வியாபார பிணக்குகளாலோ, அல்லது அதுவரை "ஆமாம் சாமி" யாக இருந்த நொரியேகா தன்னிச்சையாக நடக்க வெளிக்கிட்டதாலோ, உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா பகிரங்கமாக நொரியேகா மீது போதை வஸ்து கடத்தல் குற்றத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.

1989 ம் ஆண்டு, பனாமா போலிஸ் சுட்டதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் இறந்த சம்பவத்தை சாட்டாக வைத்து, அன்று ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ்(இன்றைய புஷ்ஷின் தந்தை), டிசம்பர் 20 பனாமா மீது படையெடுக்க உததரவிட்டார். மகன் புஷ் 16 அடி பாய்ந்தால், அப்பா புஷ் 8 அடி பாய்ந்திருக்க மாட்டாரா? சன நெரிசலான நகரப்பகுதிகளில் அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாக சுட்டனர். வீதிகளில் தாங்கிகள் எதிரே வந்த பொதுமக்களின் கார்களையும் ஏறி மிதித்து, நொறுக்கிய படி முன்னேறின. தரைப்படைகளின் வெறியாட்டம் போதாதென்று, விமானங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அப்போது கூட விமானங்கள் எதற்காக ஏழைகளின் சேரிகளை மட்டும் குறிபார்த்து குண்டு வீசின என்பது புஷ்ஷிற்கே வெளிச்சம்.

பனாமா படையெடுப்பின் போது முன்னர் ஒருபோதும் கண்டிராத புதிய வகை ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன. லேசர் குண்டுகள், அப்பாச்சி ஹெலிகப்டர்கள், ஸ்டெல்த் விமானங்கள், என்று அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த புதிய தலைமுறை ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் இடமாக பனாமா இருந்தது. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று கூட அறிந்திருக்காத அப்பாவி பனாமியர்கள் பரிசோதனைச்சாலை எலிகளாக மடிந்தனர். ஆயிரத்துக்கு மேலான பொது மக்கள், அமெரிக்காவின் மூன்று நாள் இராணுவ சாகசத்திற்கு பலியானார்கள். ஆள்பலத்தில் மிகச்சிறிய பனாமிய இராணுவம் முடிந்த அளவு அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டாலும், ஓரிரு நாட்களிலேயே சரணடைந்தது.

எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, ஆயிரம் பேரை கொன்று, நொரியேகா என்ற தனிமனிதனை கைது செய்து, அமெரிக்க சிறையில் அடைத்த பின்னரும், பனாமா வழமைக்கு திரும்பவில்லை. அமெரிக்க படைகள் நாடு முழுவதும் வேட்டையாடி, இடதுசாரி அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற சந்தேகநபர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தடுத்து வைத்தன. அவ்வாறு சென்றவர்கள் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டனர்.

பனாமா முழுவதையும் தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் எந்த ஒரு ஊடகவியலாளரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க அரசாங்கம் விற்ற பொய்களை மட்டுமே வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தன. எத்தனை பனாமிய மக்கள் இறந்தனர் என்பது இதுவரை யாருக்குமே தெரியாமல் இருக்கையில், படையெடுப்பின் போது இறந்த இருபது அமெரிக்க வீரர்களுக்காக மட்டும் கவலைப்பட்டு வருத்தம் தெரிவித்தார்கள். கடுமையான தணிக்கையை அமுல்படுத்திய அமெரிக்க அரசாங்கம், தனது படைகள் பொதுமக்களை கொல்லவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தது.

பனாமா படையெடுப்பின் உண்மையான காரணம் என்ன? இதற்கான விடை அமெரிக்க அரச ஆவணங்களில் உறங்கிக் கிடக்கலாம். ஆயினும்
பனாமா கால்வாய் தற்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதும், அப்போது பரிசோதிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்கள், சில வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களையும் கொல்வதற்கு "வெற்றிகரமாக" பயன்படுத்தப்பட்டன என்பது மட்டும் உண்மை.

Friday, August 22, 2008

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.

இது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.
வியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள "லாவோ புரட்சிகர மக்கள் கட்சி"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, "ஹ்மொங்" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான "Air America" வை பயன்படுத்தியது. "லொங் சென்" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.

லொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக! சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.

லாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் "கொம்யூனிச அபாயம்" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு? என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
லாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு "தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த "இரகசிய யுத்தம்" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.

லாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் "யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.

THE MOST SECRET PLACE ON EARTH - CIA'S COVERT WAR IN LAOS


Tell a Friend
________________________________________________