Showing posts with label சிறுவர் துஷ்பிரயோகம். Show all posts
Showing posts with label சிறுவர் துஷ்பிரயோகம். Show all posts

Tuesday, July 20, 2021

ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்

 


இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரது உடலில் தீக்காயங்களும், வல்லுறவு செய்ததற்கான தடயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியான நாளில் இருந்து, ஹிஷாலினுக்கு நீதி கோரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

வறுமை காரணமாக பணக்காரர்களின் வீடுகளில் பணிப்பெண் வேலைக்கு சேரும் மலையகத் தமிழ்ச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சிலநேரம் அது கொலையில் முடிவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்தில் ஓர் அமைச்சர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. குற்றவாளிகளின் பண பலம், அதிகார பலம் காரணமாக நீதியான விசாரணை நடப்பதற்கு தடைகள் போடப்படுகின்றன. இலங்கையில் இருப்பது வர்க்க நீதி. அது எப்போதும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயற்படும்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாத சக்திகள் கொல்லப்பட்ட சிறுமிக்காக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மீண்டும் தமது இனவாத நிகழ்ச்சிநிரலை கொண்டுவரப் பார்க்கின்றன. பலியானவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழினவாதிகளும் இதைத் தமது அரசியல் இலாபம் கருதி பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை.

பல நூறாண்டுகளாக சமூகத்தில் மாறாமல் இருந்து வரும், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு பற்றி இனவாதிகள் பேச மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு தெரிவதெல்லாம் இனம், இனம், இனம் மட்டுமே. இதற்கு முன்பு இலங்கையில் நடந்த வர்க்கப் பிரச்சனைகளை எல்லாம் இனவாதப் பிரச்சினைகளாக மடைமாற்றி ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். வெறும் வாய் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா?

மலையக நகரங்களில் நடந்த, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டங்களில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: 
  • "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்." 
  • "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்." 
இந்தப் பிரச்சினை இதற்கு முன்பும் இலங்கையில் இருந்தது. இனிமேலும் இருக்கப் போகிறது. ஆகவே பதினாறு வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடுக்கப் பட வேண்டும். சட்டத்தை மீறி சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இலவசக் கல்வி கொண்டு வந்ததன் நோக்கமே வறுமையில் வாழும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது தான். கல்வி இலவசமாகக் கிடைத்தாலும், புத்தகங்கள் வாங்குவது சுமையாக இருக்கிறது என்பதற்காக, பிற்காலத்தில் இலவசப் பாட நூல்கள் வழங்கப் பட்டன. அப்படி இருந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அப்படியானால் இந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறிருக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதியே, அதாவது ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருகிறார். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுமி, ஒரு அமைச்சரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அங்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, உடலும் பாலியல்ரீதியாக சுரண்டப் பட்டிருக்கிறது. இதைத்தவிர உடலை சிதைக்கும் சித்திரவதைகள் கூட நடந்துள்ளன.

இலங்கையில் ஓர் ஏழைக்கு அமைச்சர் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கை அரசு இயந்திரம் எந்தளவு தூரம் ஊழல்மயமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது எப்போதும் பணக்காரர்களின் பக்கம் நின்று ஏழைகளை ஒடுக்கி வந்துள்ளது. ஒரு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும்.

Wednesday, May 06, 2015

யாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி 


யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்தப் படத்தை "இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். அதற்கு ஒரு "அறிவு(?)ஜீவி" பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார்:

//இளம் கம்யூனிஸ்ட்டுகள்! ஹ... ஹா... நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு கம்யூனிசம் விளங்கி அதில பற்று வந்து வீதியில் இறங்கிவிட்டார்கள்! வாவ்// 

அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஐயம் இட்டு உண், மண் பறித்து உண்ணேல், கொள்ளை விரும்பேல், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதெல்லாம் நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு, பாடசாலைகளில் படிப்பிக்கிற கம்யூனிச தத்துவங்கள் என்பது, அந்த "அறிவு(?)ஜீவிக்கு" புரியாமல் போனது ஏனோ?


"யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில் இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பிலான இந்தப் படத்தை பார்த்து விட்டு "சிறுவர் துஷ்பிரயோகம்" என்று அலறித் துடிக்கும் போலி மனிதாபிமானவாதிகளுக்கு:

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இலவசமாக வகுப்பெடுக்கும் ஆசிரியப் பெருந்தகைகள், அதனை முதலில் கோயில்கள், தேவாலயங்களில் இருந்து தொடங்குவது நல்லது. குறைந்த பட்சம் தங்களது குடும்பத்தையாவது சீர்திருத்திக் காட்ட வேண்டும்.

இதிலே எத்தனை சிறுவர்கள், தேநீர்க்கடைகள், உணவகங்களில் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பார்கள்? நெல் வயல்களில், தோட்டங்களில், பண்ணைகளில், நிலவுடமையாளர்களினால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருப்பார்கள்? அப்போதெல்லாம் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள், அந்தசிறுவர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டும் பொங்கி எழுந்து எதிர்ப்பது ஏனோ? சிறுவர்களின் ஜனநாயக உரிமைகளை, அவர்களது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது, சர்வாதிகாரம் என்பது அவர்களுக்கு தெரியாதோ?

முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் நாய்கள், குரைப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது.

******

ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரை பயமுறுத்தும் கம்யூனிச ஆவி!

ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பலரை, அண்மைக் காலமாக ஓர் ஆவி மிரட்டி வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. "கம்யூனிச ஆவி" என்று அழைக்கப்படும் ஓர் அமானுஷ்ய சக்தி, குறிப்பாக படித்த, வசதியான மேட்டுக்குடி வர்க்கத்தினரை மட்டுமே குறி வைத்து தாக்கி வருகின்றதாம். 

கம்யூனிச ஆவியால் பாதிக்கப் பட்டவர்கள், சிவப்பு நிறத்தை எங்கே கண்டாலும் அலறுகின்றனராம். அதனால், அவர்கள் சிவப்பு வர்ண ஆடைகள், சிவப்பு நிறப் உணவுப் பதார்த்தங்கள், ஆகியனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சிவப்பு விழுந்ததும், அலறியடித்துக் கொண்டு வண்டி ஓட்டி விபத்துக்குள்ளான நபர்கள் பலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதற்கென அமெரிக்காவில் இருந்து விசேடமாக அழைத்து வரப் பட்ட, உலகிலேயே அதிக பீஸ் வாங்கும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை பார்வையிட்டுள்ளார். 25 வருடங்களுக்கு முன்னர், இதே கம்யூனிச ஆவி ஐரோப்பிய மக்களை பிடித்தாட்டியதாகவும், அதனை நேட்டோ படையினர் பிடித்து சீசாவில் அடைத்து, அட்லாண்டிக் சமுத்திரத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். 

25 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ள கம்யூனிச ஆவி, முன்தோன்றிய மூத்தகுடி தமிழினத்திற்குள் புகுந்தது எப்படி என்பதை பலரும் ஆராய்ந்து வருகின்றனர். பல அரசியல் கருத்து முரண்பாடு கொண்டவர்களும், கம்யூனிச ஆவியை விரட்டுவதற்காக வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளனர். நேற்று வரையிலும், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, தீவிர புலி ஆதரவாளர்களும், தீவிர ராஜபக்சே ஆதரவாளர்களும், தமது தசாப்த கால பகைமையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

கம்யூனிச ஒழிப்புப் போரில், சிறிலங்கா பேரினவாத அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக, வலதுசாரி- தமிழ் தேசியவாதிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க தலைமைப் பூசாரி ஜோன் கேரியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள், தாம் இந்த விடயத்தில் இணக்க அரசியல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சிங்களவன், தமிழன் என்று இனப் பகை கொண்டு போரிட்டாலும், மேட்டுக்குடி வர்க்கம் என்ற அடிப்படையில் தாம் ஒரே இனம் என்று, சிங்கள- தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் கூறினார்கள்.

******

டைனோசர் பார்த்த குருடர்கள் 

மெத்தப் படித்த நண்பர் ஒருவர், "கம்யூனிசம் ஒரு டைனோசர் காலத்து சமாச்சாரம்" என்ற பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார். அவருக்கு நான் "யானை பார்த்த குருடர்கள்" கதை சொல்லி விட்டு, ஒருவேளை அவர் பார்த்த கம்யூனிச யானை டைனோசராக தெரிந்திருக்கும் என்று பதில் கூறினேன்.

அவரது கேள்விகள் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் கூறி விட்டு, இப்போது நான், நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் முதலாளித்துவம் பற்றிய சில கேள்விகளை, உங்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு இன்னமும் ஆளைக் காணோம். 

 ஒரு வேளை, ஜூராசிக் பார்க்கில் டைனோசர் சம்பந்தமான ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் போலும்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

Sunday, April 19, 2015

கம்யூனிச விரோதிகளுக்கு பிடிக்காத சோஷலிச நாட்டுக் குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் !


Pat a Mat (இரண்டு அயலவர்கள்): சோஷலிச செக்கோஸ்லாவிக்கியாவில் தயாரிக்கப் பட்ட, சிறுவர்களுக்கான "கம்யூனிச பிரச்சார கார்ட்டூன் படம்"!

(எச்சரிக்கை: வலதுசாரி "அறிவு"ஜீவிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் இந்த குழந்தைகளுக்கான கார்ட்டூன் படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது!)

முன்னாள் சோஷலிச நாடுகளில், கம்யூனிச சித்தாந்தத்தால் சிறுவர்களை மூளைச்சலவை செய்து வந்தனர் என்ற பொய்யை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு "Pat a Mat" என்ற சிறுவர் கார்ட்டூன் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். 1976 ம் ஆண்டு, செக்கோஸ்லாவிக்கியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் தயாரிக்கப் பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆரம்பத்தில் செக்கோஸ்லாவிக்கியா குழந்தைகள், சிறுவர்கள் பார்த்து இரசித்த கார்ட்டூன் படங்கள், இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளன. நெதர்லாந்தில் Buurman Buurman (அயலவனும் அயலவனும்) என்ற பெயரில் பிரபலமானது. இன்றைக்கும் அதிகமாக விற்பனையாகும், பார்த்து இரசிக்கப் படும் கார்ட்டூன் படங்களில் அதுவும் ஒன்று.

இந்தக் கார்ட்டூன் படத்தில் உரையாடல் எதுவுமில்லை. Pat, Mat ஆகிய இரண்டு பொம்மை மனிதர்கள் அயலவர்கள். சாமானிய மனிதர்களின் பிரதிநிதிகள். குறைந்த வசதிகளை கொண்ட வீட்டில் வசிக்கும் அவர்கள், பல விசித்திரமான ஐடியாக்களை யோசித்து, பல அரிய கண்டுபிடிப்புகளை செய்கின்றனர். அதன் மூலம், தமது வாழ்க்கையில்  வசதிகளை  பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆனால், நடைமுறைச் சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் நகைச்சுவையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தவறாகிப் போகும் பொழுது, அதை வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். "கண்டுபிடிப்புகள்" திருப்திகரமான விளைவைத் தந்த பின்னர் ஒருவருக்கொருவர் A je to! என்று சொல்லிக் கொள்வார்கள் (செக் மொழியில்: அது அப்படித்தான்).

இரண்டு அயலவர்களின் குறும்புத்தனங்கள் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து இரசிக்கும் வகையில் உள்ளன. அவற்றைப் பெரியோரும் பார்த்து மகிழலாம் என்பது ஒரு சிறப்பம்சம். செக்கோஸ்லாவிக்கியாவின் "கம்யூனிச பிரச்சார வீடியோ(?)" பார்ப்பவர்கள், அதை நிச்சயம் தமது குழந்தைகளுக்கும் பரிந்துரைப்பார்கள் என்பது நிச்சயம்.

இவை எனது ஐந்து வயது மகன் அகரன் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் படங்கள். அவ்வாறு தான், எனக்கும் அவைஅறிமுகமாகின. நம்பமுடியாத ரோபோத்தனமான சாகசங்களைக் காட்டும், அமெரிக்க கார்ட்டூன் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாகத் தெரிந்தது. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

1976 தொடக்கம் 2011 வரை, இதுவரையில் 86 வெளியீடுகள் வந்துள்ளன.

Pat a Mat தயாரிப்பாளர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளம்: Pat a Mat





Saturday, September 06, 2014

அமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்!


அமெரிக்காவில் 6 அல்லது 7 வயது குழந்தைகள் மத்தியில் கூட, துப்பாக்கி வைத்திருக்கும் கலாச்சாரம் பரவி வருகின்றது. உலகிலேயே அதிகளவு தனிநபர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். கோடிக் கணக்கான ஆயுதங்கள், தனிநபர்களின் பாவனையில் உள்ளன. அந்த நாட்டில் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சட்டமும் இடம் கொடுக்கிறது.  

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு மில்லியன் குழந்தைகள், தோட்டாக்கள் நிரப்பப் பட்ட துப்பாக்கிகள் உள்ள வீடுகளில் வளர்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர். "ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்கர்களின் பிறப்புரிமை" என்று வாதாடும் NRA எனும் அரசு சாரா நிறுவனம், தற்போது குழந்தைகளை குறிவைத்துள்ளது.  பாடசாலைகளுக்கு செல்லும் NRA, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

அமெரிக்க குழந்தைகள் தமக்கென தனியான துப்பாக்கி வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். "இது எனது முதல் துப்பாக்கி!" என்று சொல்லிக் கொள்வது, சிறுவர்கள் மத்தியில் ஒரு கலாச்சாரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயுத நிறுவனங்களும், சிறுவர்களைக் குறி வைத்து விளம்பரம் செய்கின்றன. குழந்தைகள் விரும்பும் வகையில், பல வர்ணங்களில் துப்பாக்கிகளை வடிவமைக்கின்றன. அந்தக் "குழந்தைத் துப்பாக்கி" ஒன்றை, நூறு டாலருக்கு வாங்க முடியும். "எனது முதல் துப்பாக்கி" கலாச்சாரம் பரவத் தொடங்கிய 1996 ஆம் ஆண்டு முதல், 60000 "குழந்தைத் துப்பாக்கிகள்" விற்கப் பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கான அமெரிக்கக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பல இடங்களில் சிறுவர்களுக்கென  விசேடமாக பயிற்சி அளிக்கும் நிலையங்கள் உள்ளன. அது குறித்து பகிரங்கமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரிசோனாவில் ஒரு ஒன்பது வயது சிறுமி Uzi துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம், தவறுதலாக பக்கத்தில் நின்ற பயிற்சியாளரை சுட்டுக் கொன்று விட்டாள். ஆயினும் என்ன? பெற்றோரைக் கேட்டால், அது பயிற்சியாளரின் தவறு என்று காரணம் சொல்வார்கள். 

அமெரிக்காவில் பல இடங்களிலும், சிறுவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக, அயலில் இருந்த சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அப்படியான துயரச் சம்பவங்கள், யாருடைய மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று அப்படி நடக்கலாம் என்று சமாளிப்பார்கள். "துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் இறக்கும் குழந்தைகளை விட, நீச்சல்குளங்களில் அதிகளவு குழந்தைகள் பலியாகின்றன" என்று குதர்க்கமாக வாதம் செய்வார்கள்.

சிறுவர்கள் ஆயுதங்களை கையாளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் எதுவும் அமெரிக்காவில் கிடையாது. ஆயுதப் பாவனை குறித்த சட்டம் இயற்றும் விடயத்தில், மத்திய அரசு மாநில அரசுக்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது. முப்பது மாநிலங்களில் சிறுவர்கள் சட்டப்படி ஆயுதம் வைத்திருக்கலாம்! அதற்கு வயதெல்லை கிடையாது!! 

மிச்சிக்கன் மாநிலத்தில் 18 வயதிற்குப் பிறகு தான் ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், அங்கே கூட வயதுவந்தோரின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பழக முடியும். "ஆயுத உரிமைகள் நிறுவனம்" NRA, குழந்தைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவில் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், பிள்ளைகளுக்கு ஆயுதக் கலாச்சாரத்தை திணிப்பவர்களும், பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அதனால் தான் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கிறது. இதே அமெரிக்க அரசாங்கம், பாலஸ்தீனத்தில், ஈழத்தில், அல்லது ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில் சிறுவர்கள் ஆயுதமேந்தி இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. குழந்தைகள் கொடி பிடித்தாலே சிறுவர் துஸ்பிரயோகம் என்று அலறித் துடிக்கும் அமெரிக்க அடிவருடிகள், ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்க குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரிக்க விசுவாசிகள் கூட இரட்டை வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள் தான். 

(தகவல்களுக்கு நன்றி: NRC Handelsblad, 6 september 2014)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"
2.அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

Wednesday, November 20, 2013

சிறிலங்காவில் பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

இலங்கையில், 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிந்த அடுத்த வருடம், அரசு ஒரு முக்கியமான சட்டத்தை பிறப்பித்திருந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், சுமார் 2600 இளம் பிக்குகளை சேர்ப்பதற்கான தீர்மானம் அது. அந்த ஆட்சேர்ப்பு பல இடங்களில் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. புலிகள் சிறுவர்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்து, மூளைச் சலவை செய்வதாக குற்றஞ் சாட்டி வந்த ஸ்ரீலங்கா அரசு, ஏறக்குறைய அதே மாதிரியான நடவடிக்கை ஒன்றை எடுத்திருந்தது. இலங்கையில் பௌத்த மடாலயங்களில் சிறுவர்களை சேர்க்கும் வழக்கம், பண்டைய காலம் தொட்டு நிலவி வருகின்றது. ஆனால், இன்றைய இலங்கையில் அது சமூகப் பிரச்சினைகளின் வடிகாலாக பயன்படுத்தப் படுகின்றது என்பதே வித்தியாசம்.

"சிங்கள-பௌத்த இனவாதம்" பற்றி, நிறையத் தமிழர்கள் நாட் கணக்காக பேசத் தெரிந்திருக்கிறார்கள். ஆனால், அதன் உட் பரிமாணங்களை, சமூகப் பின்புலங்களை அலசுவோர் மிகக் குறைவு. தமிழ் எழுத்தாளர்களும், ஊடகங்களும், அது குறித்து ஆழமாக ஆராய வேண்டுமென்று அக்கறை காட்டுவதில்லை. "எல்லா சிங்களவர்களும் இனவாதிகள் தான்" என்று மேலெழுந்தவாரியாக கூறி விட்டுச் செல்வார்கள். "சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற அரசியல் கொள்கை," அரசினாலும், சில பௌத்த சங்கங்களினாலும் திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. அது சரி. ஆனால், என்ன நோக்கத்திற்காக? 

"எங்கள் ஊரில் தறுதலையாக திரியும் பையன்களை திருத்த முடியாத பெற்றோர், புத்த மடாலயம் ஒன்றில் பிக்குவாக சேர்த்து விடுவார்கள்." என்று பல சிங்கள நண்பர்கள் கூறியிருப்பார்கள். தறுதலையாக ஊர் சுற்றும் பிள்ளைகள் மட்டும், எதிர்காலத்தில் புத்த பிக்குகளாக வருவதில்லை. வறுமையில் வாடும் குடும்பங்களும், பிள்ளைகளை வளர்க்க முடியாமல் புத்த கோயில்களில் சேர்த்து விடுவது வழக்கம். இந்த தடவையும், 2600 புதிய இளம் துறவிகளை சேர்க்கும் அரசின் திட்டம், ஏழைகளை மட்டுமே குறி வைக்கின்றது. இது வரை காலத்தில், எந்தவொரு பணக்கார குடும்பமும் தனது பிள்ளைகளை புத்த பிக்குவாக சேர்த்து விட்டதாக தகவல் இல்லை. (எங்காவது விதிவிலக்காக நடந்திருக்கலாம்.) சுருக்கமாக, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளே, அதிகளவில் புத்த பிக்குகள் ஆகிறார்கள். 

இலங்கை ஒரு "பௌத்த - சிங்கள தேசம்" என்று அரசு அடிக்கடி கூறிக் கொள்கின்றது. பௌத்த மதம் அரச மதமாக உள்ளது. பௌத்த மடாலயங்கள் அரசின் உதவியை தாராளமாக பெற்று வருகின்றன. பௌத்த மத மேம்பாட்டுக்காக அரசு பெருமளவு நிதியை ஒதுக்கி வருகின்றது. எதற்காக? "மதம் மக்களின் அபின்", என்றார் கார்ல் மார்க்ஸ். பௌத்த மத நிறுவனங்களை பலப் படுத்துவதன் மூலம், அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துகின்றது.

இலங்கையில் பௌத்த மத நிறுவனங்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியை பரப்பி வருவது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், சிங்களப் பாட்டாளிகளின் வர்க்க உணர்வுகளை மழுங்கடித்து, அவர்கள் மனதில் மதவாத, இனவாத சிந்தனைகளை திணிப்பதும், அவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தக் கூற்று தவறென்றால், எதற்காக ஏழைச் சிங்கள சிறார்கள் மட்டுமே பிக்குகள் ஆகிறார்கள்? எதற்காக, சிங்கள மேட்டுக் குடியினர், தங்களது பிள்ளைகளை புத்த பிக்குகளாக்க விரும்புவதில்லை? 

பத்து வயதிலேயே, சிங்கள ஏழைச் சிறுவர்கள், புத்த துறவிகளாக சேர்த்து விடப் படுகின்றனர். ஆனால், அதெல்லாம் பெற்றோரின் ஒப்புதலின் பெயரில் தான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. சிறுவர்களை துறவிகளாக சேர்ப்பதற்கு எதிராக, சிங்களப் பிரதேசங்களில் பலர் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர். சில தன்னார்வ தொண்டர்கள்,  தம்மாலான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சிங்களப் பொது மக்கள் மத்தியில் இந்தளவு எதிர்ப்புணர்வு நிலவுவதற்கு காரணம், பௌத்த மடாலயங்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள். 

புத்த கோயில்களில், தலைமைப் பிக்குகளுக்கு பணிவிடை செய்வதற்காக, இளம் கிராமப்புற சிறுவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பிக்குகள், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். பௌத்த பிக்குகள் இல்லற வாழ்வை துறந்தவர்களாக வாழ வேண்டியவர்கள். ஆனால், பல இடங்களில் பருவ வயது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த அப்பாவி சிறுவர்கள், சிறுமிகள், துஷ்பிரயோகம் செய்யப் படுவதற்கு எதிராக, அவர்களது பெற்றோரே குரல் கொடுக்க முடியாதுள்ளது. அதற்குக் காரணம் தலைமைப் பிக்குகளின் அரசியல் செல்வாக்கு மட்டுமல்ல. இலங்கையில் எந்தவொரு ஊடகமும், அந்தக் குற்றச் சாட்டுகளை கண்டு கொள்வதில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது ஒரு பழமொழி. 

இலங்கை அரசின், குழந்தைகள் நலன் பேணும் அரசு நிறுவனமான, National Child Protection Authority (NCPA)  பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் பல பிக்குகளை கைது செய்தது. ஆனால், இன்று வரையில் மூன்று பேருக்கு எதிராக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிக்கு ஒருவர், வழக்கை எதிர்கொள்ளப் பயந்து நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர், "குற்றம் நிரூபிக்கப் படாமல்" விடுதலை செய்யப் பட்டார். இலங்கை அரசின் நீதி வழங்கும் நடைமுறை அந்தளவு மோசமாக உள்ளது. ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை மட்டும் பாரபட்சமாக நடத்தவில்லை. ஏழைச் சிங்களவர்களும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. 

***************
மேலதிக விபரங்களுக்கு:

1.Sri Lanka's hidden scourge of religious child abuse
2.Sri Lankan activists oppose plan to train boys as monks
3.Child-abuser monk commits suicide

இலங்கையில் புத்த கோயில் ஒன்றில் நடந்த சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய வீடியோ:

Sunday, April 25, 2010

கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்

தற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்கும் போது கண் கலங்குகிறார். ஐம்பதுகளின் பிற்பகுதி, நெதர்லாந்தில் Eindhoven என்னுமிடத்தில் அமைத்துள்ளது "எமதருமை மாதா" மருத்துவமனை. அங்கு தாதி பயிற்சிக்காக தங்கியிருந்த பெட்ராவுக்கு அந்த இடம் நரகமாகப் பட்டது.

பருவ வயது சிறுமியாக இருந்த காலங்களில், சகோதரி யோஹனேட்டி என்ற தலைமைக் கன்னியாஸ்திரியை பார்த்து அதிகம் அஞ்சி நடுங்கினார். "நடுச் சாமம், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து, அந்த கன்னியாஸ்திரி எமது படுக்கையறைக்குள் நுழைவார். ஆண்களின் பூட்ஸ் போன்ற பாதணியின் சத்தத்தில் இருந்தே அவர் வருவதை அறிந்து கொள்வோம். கையில் வைத்திருக்கும் டார்ச் லைட் வெளிச்சத்தில் எனது படுக்கையை கண்டுபிடித்த பின்னர், திரைச் சீலைகளை இழுத்து விடுவார். அதன் பிறகு எனது அந்தரங்க உறுப்புகளை காம இச்சையுடன் தடவிக் கொடுத்து விட்டு செல்வார்."

தற்போது ஒரு பத்திரிகையாளராக பணிபுரியும் பெட்ரா, அந்தக் கன்னியாஸ்திரியின் அத்துமீறல்களுக்காக நஷ்டஈடு கோரவில்லை. குறைந்த பட்சம் தனது வாழ்க்கையை பாழ்படுத்தவில்லை என்பதில் திருப்தி கொள்கிறார். ஐம்பதுகளில் பெட்ரா தங்கியிருந்த மருத்துவமனை, "கருணைச் சகோதரிகள்" என்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குழுவினால் நிர்வகிக்கப்பட்டது. இந்த அமைப்பு நெதர்லாந்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ஒரு டசினுக்கும் அதிகமான மருத்துவமனைகளையும், அநாதை மடங்களையும் நடத்தி வந்தது.

பெட்ராவின் கதைக்கு மாறாக, (பெயர் குறிப்பிடாத) இன்னொரு யுவதிக்கு நேர்ந்த கொடுமை, அவரது எதிர்கால வாழ்வையே பாதித்தது. Heerlen என்னுமிடத்தில் உள்ள தாதியர் பாடசாலையில் கல்வி கற்ற 16 வயது நங்கை ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இது. ஆசியையான கன்னியாஸ்திரி ஒருவர், அந்த அழகான யுவதியை தன்னுடன் ஓரினச் சேர்க்கை பாலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். எட்டு மாதங்களாக தொடர்ந்த ரகசிய பாலுறவு விவகாரம் இறுதியில் அனைவருக்கும் தெரிய வந்தது. பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுமியை உடனடியாக வெளியேற்றியது. "நன்னடத்தை" காரணமாக பாதியில் கல்வியை இழந்த சிறுமியின், எதிர்காலமே அதனால் பாதிக்கப்பட்டது. அதே நேரம் அவரை துஷ்பிரயோகம் செய்த காமவெறி கொண்ட கன்னியாஸ்திரி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.

கத்தோலிக்க மடங்களில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, இதுவரையும் ஆண் பாதிரியார்களே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தனர். நெதர்லாந்தின் முன்னணி பத்திரிகையான "NRC Handelsblad " செய்த ஆய்வின் பிரகாரம், கன்னியாஸ்திரிகளும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உண்மைகள் வெளிவந்துள்ளன. 29 பெண்களின் வாக்குமூலங்களை அந்த நாளேடு பதிவு செய்து வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் 19 பேர் கன்னியாஸ்திரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். கன்னியர் மடங்களால் நிர்வகிக்கப்பட்ட பெரும்பாலான சிறுவர் இல்லங்களில், கிறிஸ்தவ மதம் போதிக்கும் கருணையும், அன்பும் காணாமல் போயிருந்தன. கொடுமையான அடக்குமுறைகளும், இரக்கமற்ற தண்டனைகளும் சிறுவர்களை பயந்து ஒடுங்கி வாழ வைத்தன. சிறுவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்வுறும் கன்னியாஸ்திரிகளுக்கும் குறைவில்லை.

1940 லிருந்து 1945 வரை, நெதர்லாந்து நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. Sittard எனுமிடத்தில் இருந்த "Kollenberg அனாதைகள் மடம்" நாசிச ஆதரவு கன்னியாஸ்திரிகளால் நிர்வகிக்கப்பட்டது. மடத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் நாசிச கொள்கையை பிரதிபலித்தன. குறிப்பாக படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அன்று பாதிக்கப்பட்ட பென் யாஸ்பரின் வாக்குமூலத்தில் இருந்து சில வரிகள். "நித்திரையில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவர்களின் காதுகளை பலமாக முறுக்குவார்கள். சதையை பிய்ப்பது போல கிள்ளுவார்கள். மைதானத்தில் நிர்வாணமாக நிறுத்தி வைத்து, ஈரமான உள்ளங்கியை தலையில் போட்டு விடுவார்கள். அங்கே நாம் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறுநீர் கழித்து விடுவேனோ என்ற அச்சத்தில் நான் சில நாட்கள் உறங்கவேயில்லை."

பென் யாஸ்பர், அநாதை மடத்தில் தன்னோடு தங்கியிருந்த ஐந்து வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகளையும் விவரித்தார். மதிய உணவுக்கு கொடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு களியை உண்ணாமல் அந்த சிறுவன் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு கன்னியாஸ்திரி அந்த சிறுவனின் தலையை அமுக்கிப் பிடித்திருந்தார். இன்னொரு கன்னியாஸ்திரி பலவந்தமாக உணவை வாய்க்குள் திணித்தார். விழுங்க முடியாத சிறுவன் வாந்தியெடுத்தான். அப்படியிருந்தும் வெளியே வந்த வாந்தியையும் எடுத்து சாப்பிட வைத்தார்கள். அந்த சம்பவத்தை நினைத்து பல நாட்கள் அழுதிருப்பதாகவும், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகள், ஐம்பது நாட்களுக்கு முன்பு கண்டது போல நினைவில் இருப்பதாகவும், பென் யாஸ்பர் தெரிவித்தார்.

(நன்றி: NRC Handelsblad , 23 April 2010)

மேலதிக தகவல்களுக்கு இதையும் வாசிக்கவும்: Nuns abused hundreds of children
**************************
இது தொடர்பான முன்னைய பதிவு:
கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!