Sunday, April 19, 2015

கம்யூனிச விரோதிகளுக்கு பிடிக்காத சோஷலிச நாட்டுக் குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் !


Pat a Mat (இரண்டு அயலவர்கள்): சோஷலிச செக்கோஸ்லாவிக்கியாவில் தயாரிக்கப் பட்ட, சிறுவர்களுக்கான "கம்யூனிச பிரச்சார கார்ட்டூன் படம்"!

(எச்சரிக்கை: வலதுசாரி "அறிவு"ஜீவிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் இந்த குழந்தைகளுக்கான கார்ட்டூன் படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது!)

முன்னாள் சோஷலிச நாடுகளில், கம்யூனிச சித்தாந்தத்தால் சிறுவர்களை மூளைச்சலவை செய்து வந்தனர் என்ற பொய்யை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு "Pat a Mat" என்ற சிறுவர் கார்ட்டூன் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். 1976 ம் ஆண்டு, செக்கோஸ்லாவிக்கியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் தயாரிக்கப் பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆரம்பத்தில் செக்கோஸ்லாவிக்கியா குழந்தைகள், சிறுவர்கள் பார்த்து இரசித்த கார்ட்டூன் படங்கள், இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளன. நெதர்லாந்தில் Buurman Buurman (அயலவனும் அயலவனும்) என்ற பெயரில் பிரபலமானது. இன்றைக்கும் அதிகமாக விற்பனையாகும், பார்த்து இரசிக்கப் படும் கார்ட்டூன் படங்களில் அதுவும் ஒன்று.

இந்தக் கார்ட்டூன் படத்தில் உரையாடல் எதுவுமில்லை. Pat, Mat ஆகிய இரண்டு பொம்மை மனிதர்கள் அயலவர்கள். சாமானிய மனிதர்களின் பிரதிநிதிகள். குறைந்த வசதிகளை கொண்ட வீட்டில் வசிக்கும் அவர்கள், பல விசித்திரமான ஐடியாக்களை யோசித்து, பல அரிய கண்டுபிடிப்புகளை செய்கின்றனர். அதன் மூலம், தமது வாழ்க்கையில்  வசதிகளை  பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆனால், நடைமுறைச் சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் நகைச்சுவையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தவறாகிப் போகும் பொழுது, அதை வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். "கண்டுபிடிப்புகள்" திருப்திகரமான விளைவைத் தந்த பின்னர் ஒருவருக்கொருவர் A je to! என்று சொல்லிக் கொள்வார்கள் (செக் மொழியில்: அது அப்படித்தான்).

இரண்டு அயலவர்களின் குறும்புத்தனங்கள் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து இரசிக்கும் வகையில் உள்ளன. அவற்றைப் பெரியோரும் பார்த்து மகிழலாம் என்பது ஒரு சிறப்பம்சம். செக்கோஸ்லாவிக்கியாவின் "கம்யூனிச பிரச்சார வீடியோ(?)" பார்ப்பவர்கள், அதை நிச்சயம் தமது குழந்தைகளுக்கும் பரிந்துரைப்பார்கள் என்பது நிச்சயம்.

இவை எனது ஐந்து வயது மகன் அகரன் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் படங்கள். அவ்வாறு தான், எனக்கும் அவைஅறிமுகமாகின. நம்பமுடியாத ரோபோத்தனமான சாகசங்களைக் காட்டும், அமெரிக்க கார்ட்டூன் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாகத் தெரிந்தது. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

1976 தொடக்கம் 2011 வரை, இதுவரையில் 86 வெளியீடுகள் வந்துள்ளன.

Pat a Mat தயாரிப்பாளர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளம்: Pat a Mat





No comments: