Showing posts with label சர்வதேச அரசியல். Show all posts
Showing posts with label சர்வதேச அரசியல். Show all posts

Wednesday, June 11, 2014

உக்ரைனில் நடப்பது என்ன?


(உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, ஒரு அரசியல் கலந்துரையாடல். தோழர் சிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்.   "மாற்று" இணையத் தளத்தில் வெளியானது. http://maattru.com/ukrain-situation-kalaiyaran-sanswers/) 

“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “கலையக“த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவர். சர்வதேச ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் திணிக்கப்பட்ட பார்வையின் முகத்திரையினை கிழித்துக்காட்டி, அதன் மறைக்கப்பட்ட உண்மைகளை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பன்மொழிப்புலமையும் கொண்டவராகையால், அந்தந்த பிரதேச நிலவரங்களை அவர்களின் மொழிகளினூடாகவே அறிந்துகொண்டு தமிழில் எழுதிவருகிறார்.
“ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா“, “அகதி வாழ்க்கை“, “ஈராக்: வரலாறும் அரசியலும்“, “ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா?“, “காசு ஒரு பிசாசு” ஆகிய அவரது நூல்கள் உலக அரசியல் குறித்த ஆர்வமுடையோர் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியவை. உக்ரைனில் கலகம் உருவாகத் துவங்கியதிலிருந்தே, தொடர்ந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை தமிழில் கட்டுரைகளாக நமக்குத் தந்துகொண்டிருக்கிறார். உக்ரைன் குறித்து நமக்குப் பொதுவாக எழும் கேள்விகளைத் தொகுத்து, அதற்கான அவரது பதில்களை “மாற்று” வாசகர்களுக்காகத் தருகிறோம்.

  • ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர வேண்டும் என்பதாக துவக்கத்தில் வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்ட இப் பிரச்சனை, அதன்பின்னர் பல கோணங்களில் செல்லத் துவங்கிவிட்டதே. உண்மையிலேயே அதுமட்டும் தான் காரணமா? அல்லது வேறு சில வரலாற்றுக் காரணங்களும் உண்டா? விரிவாகச் சொல்லமுடியுமா?


உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு முன்னர், சில வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி, ரஷ்யா ஆதரவு யனுகோவிச் கையெழுத்திட மறுத்து விட்ட பிறகே, நெருக்கடி ஆரம்பமாகியது. உக்ரைனில் மேற்குலக ஆதரவு “புரட்சி” நடப்பது இதுவே முதல் தடவை அல்ல. 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க கோடீஸ்வரர் சோரோஸ் நிதியுதவியுடன் “ஒரேஞ்ச் புரட்சி” நடந்தது. அப்போதும், மேற்குலக நாடுகள் ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியானார். அப்போதெல்லாம், ரஷ்யா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மேற்குலக ஆதரவு அரசியல்வாதிகளின் ஊழல், ஒற்றுமையின்மை காரணமாக, பெரும்பான்மையான உக்ரைனிய வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலில் ரஷ்ய ஆதரவு யனுகோவிச்சிற்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தனர்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட அரசியல் வரலாற்றை வைத்து ஆராய்ந்தால், இன்றைய உக்ரைனிய நெருக்கடிக்கு, அரசியல் அதிகாரத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வேண்டும். “சர்வதேச சமூகத்தின்” எதிர்ப்பை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சம்பாதிக்கும் அளவிற்கு, ரஷ்யா விட்டுக் கொடாத நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன? சில நேரம், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாவது கூட ரஷ்யாவுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வது அச்சத்தை உண்டாக்கி இருக்கலாம்.

கிழக்கு ஐரோப்பாவில், சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், “கம்யூனிச அபாயத்தை” காரணமாகக் காட்டி, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இன்று, உலகில் எங்கேயும் “கம்யூனிச அபாயம்” இல்லை. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள், முதலாளித்துவ நாடாகி விட்டன. ஆனாலும், நேட்டோ கலைக்கப்படவில்லை. மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றது. முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த பால்டிக் கடலோர நாடுகள், ஜோர்ஜியா போன்ற நாடுகள் கூட நேட்டோவில் சேர்ந்து விட்டன. அப்படியானால், ரஷ்யா எதற்காக இப்போது மட்டும், நேட்டோ விஸ்தரிப்பை கண்டு அஞ்ச வேண்டும்?

பத்து வருடங்களுக்கு முன்னர், தலைநகர் கீவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பணம் கொடுப்பவர் பக்கம் சாயும் கொள்கையற்ற கும்பலாக இருந்தது. ஆனால், இந்த தடவை நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாசிஸ சக்திகள் ஆதிக்கம் செலுத்தின. அதில் ஒரு கட்சியின் தலைவர், பல வருடங்களாக ஜெர்மனியில் வாழ்ந்தவர். உக்ரைனிய பாசிஸ்டுகள், ஐரோப்பிய ஒன்றியம் (ஜெர்மனி), அமெரிக்கா ஆகிய சக்திகள் ஒன்று சேர்வது, வரப்போகும் ஆபத்தின் அறிகுறியாக தென்பட்டது. ஏதாவதொரு இரகசியத் திட்டம் இருக்கலாம்.

இந்த தடவை, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சதிப்புரட்சி நடத்தி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள், கிரீமியாவை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க இருந்தனர். கிரீமியா தொடர்பாக, இதற்கு முத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு, அங்கிருக்கும் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமென கோர இருந்தனர். ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னர், அங்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கி தளம் அமைத்திருக்கும். இந்த இரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்தறிந்த ரஷ்யா, கிரீமியாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

கிரீமியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. அங்கிருந்து இலகுவாக கருங்கடலை கண்காணிக்க முடியும். கருங்கடலை சுற்றி, உக்ரைன், ரஷ்யா தவிர, ரோமானியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா போன்ற பல நாடுகள் உள்ளன. மேலும், மத்தியதரைக் கடல் நாடுகளுடன் தொடர்புபடுத்தும் பொஸ்போருஸ் (துருக்கி) நீரிணை ஊடாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் கிரீமியா முக்கியமானது.

19 ம் நூற்றாண்டில், கிரீமியாவை கைப்பற்றுவதற்காக, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவுடன் போரிட்டன. கிரீமியா போரில் பல இலட்சம் பேர் மடிந்தனர். ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே, அந்தப் போர் நடந்தது. கிரீமிய யுத்தம் தான், உலக வரலாற்றில் நடந்த முதலாவது நவீன காலப் போர் ஆகும்.

உக்ரைன் நெருக்கடிக்கு, கிரீமியா தவிர, வேறு காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவில் இருந்து, ஐரோப்பியக் கண்டத்திற்கு செல்லும் பெட்ரோலிய, எரிவாயுக் குழாய்கள் உக்ரைன் ஊடாகச் செல்கின்றன. அவற்றை மேற்குலகின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒரு நோக்கமாக இருந்தது. உண்மையில், ஆப்கான் போரும் இது போன்ற காரணத்திற்காகவே நடந்தது. துருக்மேனிஸ்தானில் இருந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் அமைப்பதற்காக, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மேல் படையெடுத்து இருந்தன.

உக்ரைனின் கிழக்கு மாநிலமான டானியேட்ஸ்க் பகுதியில், இன்னமும் நிலத்துக்கு கீழே தோண்டப்படாத எரிவாயுப் படிமங்கள் இருக்கலாம் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அவற்றை ரஷ்யா எடுப்பதற்கு முன்னர், மேற்குலக நாடுகள் முந்தி விட நினைத்தன. இறுதியில், நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்த உக்ரைன் அரசைக் கவிழ்த்த சதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது?


கீவ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கோஷம் எழுப்பியதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட, “உக்ரைனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்” என்று தான் கூறி வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் என்றால், நாங்கள் ஜெர்மனியை புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்திய ஜெர்மனி, இன்று தனக்கு வேண்டியதை, இலகுவாக பணம் கொடுத்து சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்கா கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. இராணுவத் தலையீடு நடத்தப் பட வேண்டுமானால், அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினையில், ஜெர்மனி, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு பலப்பரீட்சை நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ பலம் பெறுவதை தடுப்பதும், அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.

ஆகவே, முன்பு யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்ததைப் போல, உக்ரைன் விடயத்திலும், சில சில முரண்பாடுகள் இருந்த போதிலும், ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கிரிமியா, டொனியேட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நடத்தப்பட்ட தேர்தல்களில், தனியாகப் பிரிந்துசெல்லும் முடிவெடுக்கப்பட்டன. இத்தேர்தல்களை யார் முன்னின்று நடத்தினார்கள்? சாதாரண மக்களின் பங்களிப்பு என்ன?

கிரீமியாவில், கணிசமான அளவு ரஷ்ய அழுத்தம் இருந்தது உண்மை. டொனியேட்ஸ்க்கில் நிலைமை வேறாக இருந்தது. அங்கு பல அரசியல் சக்திகள் ஒன்று சேர்ந்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்திருந்தன. ரஷ்யாவுடன் சேர விரும்பும் ரஷ்ய தேசியவாதிகள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் போரிட்டு திரும்பிய முன்னாள் சோவியத் படையினர், மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென விரும்புவோர், உக்ரைனிய கம்யூனிஸ்டுகள் என்று பல வேறுபட்ட அரசியல் சக்திகள், கிளர்ச்சியில் பங்குபற்றின.

ரஷ்யாவில் இருந்து ஊடுருவியவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், பெரும்பாலான மக்கள், ரஷ்யாவுடன் சேருவதை விரும்பவில்லை. அவர்களும் ஒரு காலத்தில் உக்ரைனிய தேசியவாதிகளாக இருந்தவர்கள். சோவியத் யூனியனில் இருந்து சுதந்திர நாடான காலத்தில், டொனியேட்ஸ்க் பகுதி மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்திருந்தனர்.

ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில், ஆரம்பத்தில் இருந்தே பெரும்பான்மையான மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க காரணம் இருந்தது. தீவிர உக்ரைனிய தேசியவாதிகளின் அரசு, ரஷ்ய மொழி உட்பட சிறுபான்மை மொழிகள் அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றியது. (ரஷ்யர்கள் தவிர, ஹங்கேரி, ரோமானியா, போலிஷ், இட்டிஷ், கிரேக்க மொழிகளை பேசும் மக்களும் உக்ரைனில் சிறுபான்மையினராக உள்ளனர்.) எல்லா நாடுகளிலும், மொழிப் பிரச்சினை, மக்களை கிளர்ந்தெழ வைக்கக் கூடியது.

  • சுதந்திர கிரிமியா என்பது வரலாற்று ரீதியான கோரிக்கையா? கிரிமியாவின் தற்போதைய நிலையென்ன?


கிரீமியாவில் வாழும் பெரும்பான்மையான ரஷ்யர்கள், நீண்ட காலமாகவே உக்ரைனின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பி இருக்கவில்லை. முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்திலும் அப்படித்தான். ஆனால், சோவியத் யூனியன் ஒரே நாடாக, எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்த படியால், அன்று யாரும் அந்த உணர்வை பெரிதாக மதிக்கவில்லை. உக்ரைன் தனியான சுதந்திர நாடான பின்னர், ரஷ்யா தங்களை சேர்த்துக் கொள்ள மாட்டாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, தற்போதைய நெருக்கடி ஒரு வரப்பிரசாதம் ஆகும். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தற்போது, கிரீமியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் சிறிய நிலப்பகுதி, நிலக் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது. உக்ரைனில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து, உக்ரைன் மற்றும் ரஷிய இடதுசாரி/முற்போக்கு இயக்கங்களின் நிலைப்பாடும்/பங்களிப்பும் என்னவாக இருக்கிறது?

உக்ரைன், ரஷ்ய முற்போக்கு/இடதுசாரி இயக்கங்கள், கிரீமியா பிரிவினையையும், டொனியேட்ஸ்க் கிளர்ச்சியையும் ஆதரித்தார்கள். அவர்கள் யாரும், புட்டினை அல்லது ரஷ்ய பெருந் தேசியவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும், முன்னரைப் போல சோவியத் யூனியன் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்கள். (இன்று சோவியத் யூனியனை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பது ஒரு பலமான வல்லரசு. இன்றுள்ள சீனா போன்றது.)

புட்டின் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, அவரும் ஒரு முதலாளித்துவவாதி தான். ஆயினும், முதலாளிய வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போட்டி, இறுதியில் போருக்கு இட்டுச் செல்லும். முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்த ஐரோப்பா போன்று தான், இன்றுள்ள நிலைமை உள்ளது. அதனால், இடதுசாரிகள்/முற்போக்காளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், வரலாற்றுப் போக்கை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொள்கின்றனர். தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பகுதிகள் தனிநாடாக மாற விரும்புவதை, தனிநாடு கோரும் இன்னபிற சர்வதேச இயக்கங்கள் எப்படிப் பார்க்கின்றன?

அந்த இயக்கங்கள் எல்லாம் அடிப்படையில் தேசியவாதம் பேசினாலும், அவை ஒன்றில் அமெரிக்காவை ஆதரித்து, அல்லது எதிர்த்துக் கொண்டு தமது தனி நாட்டுக்காக போராடுகின்றன. பொதுவாக, பிற நாட்டு விவகாரங்களை அலட்சியப் படுத்துவதற்கு, தேசியவாதிகளுக்கே உரிய குறுகிய மனப்பான்மையும் ஒரு காரணம். ஆகவே, அந்த இயக்கங்களின் நிலைப்பாடு, பெருமளவு மாறுவதற்கு இடமில்லை.


  • உக்ரைன் குறித்துப் பேசாத தமிழ் தேசியவாதிகளின் மவுனத்திற்கு காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்? 


மேற்குறிப்பிட்ட விளக்கம் அவர்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாத இயக்கத்தினை வழிநடத்துவோர், மேற்குலகை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அல்லது அந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆவர். அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்து, அமெரிக்கா சொல்வதை எல்லாம் சரியென்று நம்புவார்கள். உலகில் பல விடயங்களுக்கு பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. பொதுவான தேசியவாதம் எதுவும் உலகில் இல்லை.

  • மூன்றாம் உலகப்போர்? மீண்டும் ஒரு சோவியத் யூனியன்?


இரண்டுமே இப்போதைக்கு சாத்தியமில்லை. பனிப்போர் காலத்தில் இருந்த நிலைமைக்கு உலகம் திரும்பிச் செல்லும். ஆனால், இந்தப் பனிப்போர் சித்தாந்த முரண்பாடு காரணமாக நடக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், கிரீமியா போருக்கு முன்பிருந்த நிலைமையும் இப்படித் தான் இருந்தது. அன்று, ஒரு பக்கத்தில், ரஷ்யா தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மறு பக்கத்தில், பிரிட்டன் தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. இரண்டுமே நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. ஆனால், பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டன. பனிப்போர் என்றால், அதன் அர்த்தம், வல்லரசுகள் நேரடியாக மோதிக் கொள்ள மாட்டா. அவற்றின் பாதுகாப்பில் தங்கி இருக்கும், வேறு ஒரு சிறிய நாட்டில், பதிலிப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும். அது தான் தற்போது உக்ரைனில் நடக்கிறது.

ஒரு பக்கம் உக்ரைனிய மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள். மறு பக்கம், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா பொருளாதாரப் போரை நடத்திக் கொண்டிருக்கும். முந்திய யூகோஸ்லேவிய போர்கள் மாதிரி, உக்ரைன் போர் நீண்ட காலம் இழுக்குமானால், அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் பொருளாதார நலன்கள் கிடைக்கும். முன்பு போல ஆயுத உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். எண்ணை, எரிவாயுவின் விலை அதிகரிக்கும். ரஷ்யாவுக்கு வரும், அந்நிய செலாவணியில் அரைவாசிப் பகுதி எரிபொருள் விற்பனையால் கிடைக்கிறது. சர்வதேச சந்தையை கட்டுப்படுத்தும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்புகின்றன. அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • உக்ரைனிலிருந்து நம்முடைய தமிழ் மக்களும் இயக்கங்களும் என்ன பாடம் கற்றுக்கொள்ளமுடியும்?


இந்தியாவிலும், இலங்கையிலும் மேற்கத்திய நாடுகளின் தலையீடு இருக்கவே செய்யும். அவர்கள் ஒரு பக்கம் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள், மறு பக்கம் தமிழ் இயக்கங்களையும் ஆதரிப்பது போல நடிப்பார்கள். அவ்வாறு, இரண்டு தரப்பினரின் விசுவாசத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதனை உணர்ந்து கொள்ளாமல், மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால், எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆகவே, தமிழ் இயக்கங்கள் ஒரு தலைகீழான கொள்கை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொண்டால், அது தேசிய விடுதலைக்கான கதவுகளை திறந்து விடும். அதனால் தான், 2 ம் உலகப் போருக்கு பிந்திய உலகில், காலனியாதிக்கதில் இருந்து விடுதலையடைய போராடிய இயக்கங்களை, அன்றிருந்த சோவியத் யூனியன் நிபந்தனை இன்றி ஆதரித்தது.




உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, May 05, 2010

காலனிய காலத்தில் வாழும் தமிழ் அகதிகள்


(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - இறுதிப் பகுதி)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கோ, அல்லது மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கோ, மேற்குறிப்பிட்ட அகதி அரசியல் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் யாவும் பணக்கார நாடுகள் என அறிந்திருந்தனர். அங்கே மக்கள் அனைத்து வசதிகளுடனும் வாழ்வதாக அறிந்திருந்தனர். சுருக்கமாக சொன்னால், "தேனும் பாலும் ஆறாக ஓடும் நாடுகளைப்" பற்றி கேள்விப்பட்டிருந்தனர். நான் ஒரு முறை இந்தியா சென்றிருந்த போது, நெதர்லாந்தில் உறவினர்களைக் கொண்ட ஒருவர் கேட்டார்: "அந்த நாட்டில் மாடுகள் போவதற்கு என்று தனியாக பாதை போட்டிருக்கிறார்கலாமே?" வெளிநாடுகளில் வாழும் பலர் தமது தாயக உறவுகளுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர். இங்கிலாந்தில் சாதாரண துப்பரவுப் பணியாளர் கூட கோட்,சூட் அணிந்து செல்வார் என்பது போல கற்பனை செய்துகொள்வார்கள். இந்த புனைகதைகள் பின்னர் பிற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைக் குறித்தும் பரவியது.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் அனைவருமே சொந்தமாக வீடு, கார் வைத்திருப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் சந்தித்த குடும்பத் தலைவி ஒருவர் சொன்னார்: "நானும் நெதர்லாந்தில் வசித்தால் மாதம் ஒரு தங்க நகை வாங்குவேன்." பலருக்கு இந்த ஆடம்பரங்களுக்கு அப்பால் வேறெதுவும் தெரியாது. அவர்களது மட்டுப்படுத்தப்பட்ட அறிவை, அன்றைய சோஷலிச நாடுகளில் இருந்து சென்ற அகதிகளின் அறிவுடன் ஒப்பிடலாம். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி பெரும் பணச் செலவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் அப்படி எந்தப் பிரச்சாரமும் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. அனேகமாக அனைத்து நாடுகளும் எதோ ஒரு ஐரோப்பிய வல்லரசின் காலனியாக இருந்தவை தாம். ஐரோப்பிய எஜமானர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறை அந்தப் பணியை ஏற்கனவே செவ்வனே செய்திருந்தது.

ஒரு காலத்தில் இலங்கையில் வெளிநாடு போவதென்றால் இங்கிலாந்து பலரின் நினைவுக்கு வரும். லண்டனில் படித்தவர்கள், அல்லது ஆங்கிலம் பேசுபவர்கள என்றால் மதிப்பு உயரும். இதனால் வெளிநாடுகளில் எல்லாம் ஆங்கில மொழியே பேசப்படுவதாக பலர் அப்பாவித்தனமாக நம்பினார்கள். பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் கூட அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இலங்கையில் செயலாளராக பணியாற்றும் பெண்ணொருவருக்கு, (நெதர்லாந்தில்) எமது நிறுவனத்தின் வருடாந்த கூட்டம் டச்சு மொழியில் நடைபெற்றது என்ற செய்தியை நம்பமுடியவில்லை. "ரஷ்யா சென்றிருந்த போது ஆங்கிலத்தில் தானே பேசியிருப்பேன்." என்று ஒரு கேள்வியைப் போட்டார். "ரஷ்யர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அங்கே ரஷ்ய மொழி தெரியாவிட்டால், சைகை காட்டித்தான் புரிய வைக்க வேண்டும்" என்ற உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

காலனிய வரலாற்றுத் தொடர்பு காரணமாக, பிரிட்டிஷ் அரசு தனது சொந்த மக்களுக்கு அடுத்ததாக தம் மீது நன்மதிப்பு வைத்திருப்பதாக, பல தமிழர்கள் நம்பினார்கள். இங்கிலாந்து சென்றால், சொந்தப் பிள்ளை போல உபசரிப்பார்கள், என்று நினைத்துக் கொண்டனர். உலகில் தாங்கள் மட்டுமே இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் தமக்கு விசேஷ கவனிப்பு இருக்கும் என்ற நினைப்பில் விமானமேறியவர்கள் பலர். நான் பின்னர் பிற நாட்டினருடன் உரையாடிய போது, அவர்களுக்கும் அதே சிந்தனை இருந்ததை அவதானித்தேன்.

ஈராக்கை சேர்ந்த அகதி ஒருவர், தான் எந்தவொரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றாலும், அங்கே ஈராக்கியர்கள் மட்டுமே அகதிகளாக தஞ்சம் கோரி இருப்பார்கள் என்று நினைத்ததாக தெரிவித்தார். தனது தோல் நிறம் வெள்ளையாக இருப்பதால், ஐரோப்பியர்கள் சகோதர பாசத்துடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து சென்றால், தம்மை சொந்தப் பிள்ளை போல வரவேற்பார்கள் என்று நம்பியதாக சொன்னார். ஆனால் இங்கு வந்து சேர்ந்த பின்னர் தான், உலகின் பல பாகங்களில் இருந்தும் அகதிகள் வந்து சேருவதை புரிந்து கொண்டதாக கூறினார். அதே நேரம் தனது கறுப்புத் தலைமுடி காரணமாக பாகுபாடு காட்டும் யதார்த்தை ஐரோப்பாவில் தரிசிக்க நேர்ந்த அவலத்தையும் சொன்னார்.

அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களில் பலர், தாமே உண்மையான அகதிகள் என்றும், மற்றவர்கள் அனைவரும் வேறு காரணங்களுக்காக வருவதாகவும் கருதிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் வெள்ளைக்காரனுக்கு சூது,வாதற்ற வெள்ளை மனசு என்று கருதி வந்தார்கள். இது போன்ற மனப்பான்மைக்கு, ஆங்கிலேய காலனிய ஆட்சி ஒரு காரணம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. உள்ளூர் சமூகத்தில் இருந்து ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி, அதைக் கொண்டு முழு இலங்கையையும் நிர்வகித்து வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இதற்கென யாழ்ப்பாணத் தமிழர்களை (அதிலும் உயர்சாதி வெள்ளாளர்கள்) விசேஷமாக தெரிவு செய்தார்கள். சிறுபான்மை மொழி பேசும், நிலவுடமைச் சமுதாயம் ஆங்கிலேயரின் கடைக்கண் பார்வைக்கு உட்பட்டத்தில் வியப்பில்லை. பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இலங்கையர்கள் பலியானார்கள். காலனிய ஆட்சிக்கு சேவை செய்வதன் பரிகாரமாக, சைவ வெள்ளாளர்கள் தமது பிரதேசத்தில் மத அனுஷ்டானங்களையும், சாதிய பாகுபாட்டையும், நிலப்பிரபுவத்தையும் ஆங்கிலேயர்கள் தடுக்கவில்லை. இதனால் காலனிய அடக்குமுறையை கண்டு, கேட்டிராத சமூகம் ஒன்று அன்று ஆங்கிலேய பிரபுக்கள் மீதும், இன்று மேற்குலக கனவான்கள் மீதும் பெரு மதிப்பு வைத்திருப்பது வியப்புக்குரியதல்ல. இந்த அளவு கடந்த மதிப்பானது, வெள்ளையினத்தவரின் கபடத்தனத்தை இனங்காணத் தவறிவிட்டது. ஐரோப்பியர் பற்றிய தப்பெண்ணம் இறுதியில் ஈழத்தமிழரின் தேசிய அரசியல் தோல்விகளுக்கும் காரணமாக அமைந்தது.

(முற்றும்)

Tuesday, May 04, 2010

இன அடிப்படையில் அடைக்கலம்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் ஐந்தாம் பகுதி)

நவீன அரசியல் தஞ்சம் கோரும் கொள்கையை நிறுவனமயப்படுத்தியது மேற்கு ஜெர்மனி(ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு) தான். தஞ்சம் கோருபவரின் விண்ணப்பத்தை பரிசீலித்தல், அவர்களுக்கு வசிப்பதற்கு வீடுகளை பார்த்துக் கொடுத்தல், வேலை தேடிக் கொடுத்தல் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படி செய்ய ஆரம்பித்தது. அதற்கு பிரதான காரணம், மேற்கு ஜெர்மனி எல்லையில் பல சோஷலிச நாடுகள் இருந்தன. கிழக்கே இருந்து தரைமார்க்கமாக தப்பி வரும் அகதிகள் முதலில் ஜெர்மனி வர வேண்டும். மேலும் ஜெர்மன் மொழி பேசும் மக்கள், ருமேனியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். என்றோ ஒரு நாளைக்கு அவர்கள் "தாயகம்" திரும்புவார்கள் என்ற நம்பிக்கை.

ஜெர்மன் அகதி அரசியல் ஹிட்லர் கால கொள்கையின் நீட்சியாகவும் அமைந்திருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மட்டுமே இனரீதியாக அகதிகளை ஏற்றுக்கொள்ள விரும்பியது. அந்த நிலைப்பாடு இன்று வரை தொடர்கிறது. 1991 ம் ஆண்டிற்குப் பின்னர், கம்யூனிசம் மறைந்த பிறகு ரஷ்யா உட்பட அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து பெருமளவு ஜெர்மன் இன அகதிகள், ஒன்றிணைந்த ஜெர்மனியில் வந்து தஞ்சம் கோரினார்கள். பெரும்பாலானோர் பொருளாதாரப் பிரச்சினைகளால் இடம்பெயர்ந்தவர்கள்.

பலருக்கு ஜெர்மன் மொழியில் ஒரு வார்த்தை கூட தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த "ஜெர்மன் இனத்தவர்கள்" யாவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். 1991 ம் ஆண்டு வரை ஜெர்மனி உட்பட, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம், சோஷலிச நாடுகளில் இருந்து வரும் அனைத்து அகதிகளையும் ஏற்றுக் கொண்டு வந்தன. அதுவரை எந்தவொரு அகதியும் திருப்பி அனுப்பப் படவில்லை. ஆனால் 1991 ம் ஆண்டிற்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது ஜனநாயகமயமாகியுள்ள கிழக்கு ஐரோப்பிய மக்கள் பொருளாதாரக் காரணங்களால் வருவதாகக் கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பணக்கார ஐரோப்பிய நாடுகள் நிறைய பொருள் வளங்களைக் கொண்டிருந்த போதிலும், மிகக் குறைந்த அளவு அகதிகளையே பெற்று வருகின்றன. விசா, மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள், பெருந்தொகைப் பணத்தை பயணச் செலவிற்காக செலவிட வேண்டிய நிலை, இது போன்ற காரணங்களால் மிகச் சிறிய அளவு அகதிகள் மட்டுமே மேற்கத்திய நாடுகளை வந்தடைகின்றனர். அதே நேரம் மூன்றாம் உலகைச் சேர்ந்த வறிய நாடுகள் பெருமளவு அகதிகளை மனிதாபிமான காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஈரான்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான ஆப்கான் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். பாலஸ்தீன அகதிகளின் ஐம்பது வருடங்களாக லெபனானில் முகாம்களில் வசித்து வருகின்றனர். கென்யா லட்சக்கணக்கான சோமாலிய அகதிகளை பராமரித்து வருகின்றது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

தனது நாட்டு மக்களையே கவனிக்க முடியாத வறிய நாடுகளுக்கு, அயல் நாட்டு அகதிகளின் வருகை பெருஞ்சுமையை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஐ.நா.சபையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த அகதிகளை பராமரிக்க உதவி செய்கின்றன. ஆனால் அந்த உதவி கூட, பணக்கார நாடுகளின் சுயநல நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றது. அகதிகளை பராமரிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான நிதி வழங்குவது பணக்கார நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் அப்படி நிதி உதவி செய்யாவிட்டால், அந்த அகதிகள் எல்லாம் தமது நாடுகளுக்குள் வந்து விடுவார்களோ என்று அவை அஞ்சுகின்றன.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலய (UNHCR) தலைவராக பணியாற்றிய லுபர்ஸ் என்பரின் அரசியல் பின்னணி குறித்து சில தகவல்களைத் தருகிறேன். இது எப்படிப்பட்டவர்கள் சர்வதேச அகதி அரசியலை தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு. 1984 ம் ஆண்டு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு பெருமளவு ஈழத்தமிழ் அகதிகள் நெதர்லாந்து நாட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் நெதர்லாந்தில் அகதி முகாம்கள் இருக்கவில்லை. அதே நேரம் அரசு தமிழர்களை அகதிகளாக கருதவில்லை. இதனால் அவர்களை திருப்பி அனுப்பும் நோக்கோடு, தற்காலிகமாக தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது நெதர்லாந்து பிரதமராக பதவி வகித்த லுபெர்ஸ், ஈழத் தமிழ் அகதிகளை எப்படியும் திருப்பி அனுப்பியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு நின்றார். அவரது கொள்கை இனப்பாகுபாடு கொண்டதாக சில தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அதற்குக் காரணம், அப்போதும் உலகம் முழுக்க இருந்தும் அகதிகள் வந்திருந்தாலும், லுபெர்ஸ் அரசு ஈழத் தமிழர்களை மட்டுமே திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியது. அன்று தனது நாட்டினுள் அகதிகள் வருவதை தடுத்த அதே லுபர்சுக்கு, பிற்காலத்தில் UNHCR தலைவர் பதவி வழங்கி "கௌரவிக்கப்பட்டது." ஆழ்ந்து கவனித்தால், இதில் எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியாது. மேற்குலக நாடுகளுக்கு மூன்றாமுலக அகதிகள் செல்வதைத் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு அந்தந்த நாடுகளிலோ, அல்லது அயல்நாடுகளிலோ தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆகவே "வருமுன் காக்கும்" பணியை UNHCR செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.

(தொடரும்)

4.சர்வதேச கம்யூனிச அகதிகள்
3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

Monday, May 03, 2010

சர்வதேச கம்யூனிச அகதிகள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் நான்காம் பகுதி)

மேற்குலகில் வாழும் அல்லது மேற்குலக சிந்தனை கொண்டவர்களுக்கு, முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்ட விஷயம் தெரியாது. அவை பெரும்பாலும் கம்யூனிச அரசியல் சார்ந்த அகதிகளையே ஏற்றுக்கொண்டு வந்தன. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட உஸ்பெக்கிய, தஜிக்கிய அகதிகள் அனைவருக்கும் தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், சோவியத் யூனியனில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு தாராளமாக கிடைத்தது. மாணவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். இதனால் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் பலர், சோவியத் யூனியனுக்கு கல்வி கற்க சென்று, பின்னர் உள்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து அங்கேயே தங்கி விட்டிருந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, இவர்களில் பலர் நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.

சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் அகதிகளை அங்கீகரிக்கும் ஐ.நா. ஆணையில் கைச்சாத்திட்டிருந்தன. இருப்பினும் கிரீஸ், சிலி போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கே தஞ்சம் வழங்கப்பட்டன. கிரீஸ் அகதிகளின் வருகையுடன் கம்யூனிச நாடுகளின் அகதி அரசியல் ஆரம்பமாகியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரம், கிரீசின் பெரும்பாலான பகுதிகளை கம்யூனிச போராளிகள் விடுவித்திருந்தனர். அப்போது பிரிட்டனும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்ததால். கிரீசை விடுவிக்க பிரிட்டிஷ் படைகள் சென்றன. இருப்பினும் சில வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க கம்யூனிஸ்ட்களுக்கும், பிரிட்டிஷாருக்குமிடையில் போர் மூண்டது. பிரிட்டனை பகைத்துக் கொள்ள விரும்பாமல், ஸ்டாலின் கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு உதவி வழங்க மறுத்து விட்டார்.

கம்யூனிஸ்ட்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போராட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் தேசியவாதிகளின் படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை. கம்யூனிஸ்ட் தலைவர்கள், போராளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் சுற்றி இருந்த சோஷலிச நாடுகளில் அடைக்கலம் கோரினர். கிரேக்க அகதிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு, அரசே முன்னின்று வீடுகளையும் வழங்கியது. செக்கொஸ்லோவாகியா போன்ற நாடுகளில் இப்போதும் கணிசமான அளவு முன்னாள் கிரேக்க அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடுகளின் சொந்த மக்களை விட, அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் இன்றும் சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதைக் காணலாம். மேற்குலகிலும் இதே போன்ற நிலைமை உள்ளது. அகதிகளாக குடியேறியவர்கள் மேற்கத்திய நாகரீகத்தை அளவுக்கதிகமாகவே பின்பற்றுவதைக் காணலாம்.

ஒரு மூன்றாமுலக வறிய நாடான கியூபா கூட பன்னாட்டு அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. சிலி போன்ற தென் அமெரிக்கர்களுக்கும், அல்ஜீரியா, அங்கோலா, நமீபியா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியது. ஒரு முறை கியூபா கப்பல்கள், அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்ட அனாதைப் பிள்ளைகளை ஏற்றிவந்தன. ஒரு காலத்தில் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின மாவோயிச இயக்கமான Black Panthers உறுப்பினர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் வீடு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி, முழுமையான கியூப பிரசைகளாக உள்வாங்கப்பட்டு விட்டனர். அகதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், சில நேரம் கியூப மக்களையும் பொறாமை கொள்ள வைத்தன.

(தொடரும்)

3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

Sunday, May 02, 2010

அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் மூன்றாம் பகுதி)

பனிப்போரானது, மேற்கே முதலாளித்துவ முகாம், கிழக்கே சோஷலிச முகாம் என்று ஐரோப்பாவை இரண்டாகப் பிரித்து விட்டிருந்தது. இரண்டுக்கும் நடுவே இரும்புத்திரை இருப்பதாக சொல்லப்பட்டது. மேற்கு ஐரோப்பா தன்னை "சுதந்திர ஜனநாயக நாடுகள்" என்று அழைத்துக் கொண்டது. அதற்கு மாறாக கிழக்கு ஐரோப்பாவில், அதாவது இரும்புத்திரைக்கு அப்பால், கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் மக்கள் அடிமைகளாக வாழ்வதாக பிரச்சாரம் செய்தது. அதை அப்படியே தானும் நம்பியது. நீண்ட காலமாக ஒன்றோடொன்று வர்த்தக, கலாச்சார தொடர்பு வைத்திருந்த ஐரோப்பிய நாடுகள், சிந்தாந்த ரீதியாக இரண்டாக பிரிந்தன. காலப்போக்கில் எதிரெதிரான கோட்பாடுகளை கொண்ட நாடுகள், தமது அரசியலோடு ஒத்துப் போனவர்களுடன் மட்டுமே நட்பாக இருக்க விரும்பினர். ஐரோப்பிய மக்களை அரசியல் இரண்டாகப் பிரித்தது.

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் தொண்ணூறு வீதமான மேற்கு ஐரோப்பிய மக்களை நம்ப வைப்பதில் வெற்றி கண்டுள்ளது. அதற்கு காரணம்: அனைத்து தொழில்களுக்கும் அதிக சம்பளம், வேலையற்றவர்களுக்கு உபகாரச் சம்பளம், உயர்தர வாழ்க்கை வசதி, வருடத்தில் ஒரு மாதம் விடுமுறையில் வெளிநாடுகளிலும் உல்லாசமாகப் பொழுது போக்க வசதி.... இன்னபிறவற்றை தாராளமாக வழங்கியது. இந்த வசதிகள் யாவும் மேற்குலக மக்களை அரசின் பின்னால் அணி திரள வைத்தது. மறுபக்கத்தில் இந்த வசதிகள் ஓரளவிற்கேனும் சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கும் கிடைத்து வந்தன. ஆனால் அது பற்றி மேற்குலக மக்களுக்கு எதுவுமே தெரியாது. தமது அரசுகள் சோஷலிசத்தை "நலன்புரி அரசு" என்ற மாற்றுப் பெயருடன் நடைமுறைப் படுத்துவதைக் கூட அவர்கள் அறியவில்லை.

அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை வசதி என்னும் போது, அதற்கென செலவும் இருக்குமல்லவா? அந்த செலவை எப்படி ஈடுகட்டினார்கள்? உதாரணத்திற்கு தொழிலாளியின் சம்பளம் அதிகரித்தால், உற்பத்திப் பொருளின் விளையும் அதிகரிக்குமல்லவா? அதனை யார் வாங்குவார்கள்? ஆமாம், வசதியான வாழ்க்கை சாதாரண தொழிலாளிக்கும் கிடைக்கச் செய்ய வேண்டி இருந்தது. ஆலைத் தொழிலாளியின் சம்பளம் பல மடங்கு அதிகரித்தது. இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பொருளின் விலையும் ஏறியது. இவையனைத்தும் அரசு வழங்கிய மானியத்தால் சாத்தியமானது. அரசுக்கு அமெரிக்கா கடன் கொடுத்தது. அமெரிக்கா கடனை நீண்ட கால தவணையில் திருப்பி செலுத்தலாம், என சலுகை செய்தது. மேலும் அதிக விலையுள்ள ஐரோப்பிய உற்பத்திப் பொருட்களை அமெரிக்காவே வாங்கியது. இதைவிட முன்னாள் காலனிய நாடுகளைச் சுரண்டி, தனது மக்களுக்கு கொடுத்த கதையை விரிவாக பிறிதொரு தருணத்தில் பார்ப்போம். ஏனெனில் அது மூன்றாம் உலக அகதிகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயம்.

சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு, மேற்குறிப்பிட்ட விஷயம் எதுவும் தெரியாது. தினசரி மேற்கில் இருந்து ஒலிபரப்படும் "சுதந்திர ஐரோப்பா வானொலி" மேற்குலகைப் பற்றிய வசீகரமான கதைகளை சொல்லிக் கொண்டிருந்தன. போலிஷ், செக், ஹங்கேரியன், ரஷ்யன் என்று அனைத்து கிழக்கு ஐரோப்பிய மொழிகளுக்கும் தனித்தனி சேவைகளை அந்த பிரச்சார வானொலி நடத்திக் கொண்டிருந்தது. இதைவிட "வாய்ஸ் ஒப் அமெரிக்கா" , பி.பி.சி. போன்ற "பொறுப்புள்ள" வானொலிகளும் கிழக்கு ஐரோப்பிய நேயர்களை குறிவைத்து ஒலிபரப்பிக் கொண்டிருந்தன.

"கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உணவுத்தட்டுப்பாடு, மேற்கு ஐரோப்பாவில் அளவுக்கு மிஞ்சிய உணவு கிடைக்கிறது." "கிழக்கில் வாய் திறந்து பேச முடியாதளவு அடக்குமுறை, மேற்கில் ஜனாதிபதியையே போக்கிரி என்று சொல்லுமளவிற்கு சுதந்திரம்." "கிழக்கில் வண்டி வாங்குவதென்றால் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும், மேற்கில் வருடத்திற்கு ஒரு வண்டி மாற்றுகிறார்கள்." "கிழக்கில் பணம் சேர்த்து வைத்திருக்க முடியாது, மேற்கில் வியாபாரம் செய்து ஒரு சில மாதங்களிலேயே லட்சாதிபதியாகிறார்கள்.".... இவையெல்லாம் வானொலிகளில் செய்யப்பட்ட பிரச்சாரங்களில் சில.

சோஷலிச நாடுகளில் அரசின் தடையையும் மீறி மக்கள் இந்த பிரச்சார வனொலிகளை செவிமடுத்தார்கள். அவற்றைக் கேட்டு விட்டு மேற்குலக சொர்க்கம் பற்றிய கனவுகளில் மூழ்கியிருந்தார்கள். 1956 ம் ஆண்டு ஹங்கேரியில் சோஷலிச அரசுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது. சோவியத் படைகளால் ஹங்கேரிய கிளர்ச்சி நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கில் ஹங்கேரியர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். கிளர்ச்சியில் பங்குபற்றியவர்கள், அவர்களது குடும்பங்கள் தவிர, பொருளாதாரக் காரணங்களுக்காக புலம்பெயர்ந்த எல்லோரையும் கம்யூனிச எதிர்ப்பு போராளிகளாக மேற்கு வரவேற்றது. முதலில் எல்லையில் இருக்கும் அயல்நாடான ஆஸ்திரியாவிற்கு தான் ஹங்கேரிய அகதிகள் சென்றார்கள். அங்கிருந்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் தம் பங்கிற்கு பெருமளவு அகதிகளை பெற்றுக் கொண்டனர்.

நெதர்லாந்து தன்னை மிகத்தீவிரமான கம்யூனிச எதிர்ப்பு நாடாக காட்டிக் கொண்டது. ஹங்கேரிய கிளர்ச்சி அடக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டவுடன், ஒழுங்குபடுத்தப்பட்ட நெதர்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உள்நாட்டு கம்யூனிஸ்டுகள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் அலுவலகங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. "உண்மை" என்ற கட்சிப்பத்திரிகை தீக்கிரையானது. ஹங்கேரிய அகதிகளை ஏற்றிவந்த ரயில்களை, அனுதாபம் கொண்ட மக்கள் திரள் குழுமி நின்று வரவேற்றனர். நெதர்லாந்து இராணி கூட தனது மாளிகையின் ஒரு பகுதியில், அகதிகளை தற்காலிகமாக தங்கவைத்தார். ஹங்கேரிய அகதிகள் எல்லோருக்கும் விரைவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. பல இளைஞர்கள் நெதர்லாந்து பெண்களை மணந்து கொண்டு உள்ளூர்வாசிகளாகி விட்டனர். இன்று ஹங்கேரிய சமூகம் உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. பிரான்ஸின் இன்றைய ஜனாதிபதி சார்கோசி ஒரு முன்னாள் ஹங்கேரிய அகதி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த முன்னாள் அகதி இந்நாள் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருவது ஒரு வரலாற்றின் முரண்நகை.

1968 ம் ஆண்டு, செக்கொஸ்லோவாக்கியாவில் கம்யூனிச எதிர்ப்பு கிளர்ச்சி வெடித்தது. அந்த வருடமும் மிகப்பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மேற்கு ஐரோப்பாவை நோக்கி படையெடுத்தனர். அவர்களையும் விசேஷமாக கவனித்து, காலப்போக்கில் தமது பிரசைகளாக்கி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 1961 ம் ஆண்டு பெர்லின் மதில் கட்டப்பட்ட போதும், அகதிகள் வரத்தொடங்கினார்கள். இது பற்றி விரிவாக பார்க்கப்பட வேண்டும். மேற்குலக சரித்திர ஆசிரியர்கள் இன்றும் பெரிதாக மதிக்கும் அகதிகள் இவர்கள். இரண்டாம் உலகப்போர் முடிந்து பத்து வருடங்களாகியும் பெர்லின் மாநகரத்தினுள்ளே சுதந்திரமான போக்குவரத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் சாதாரண மக்கள் மத்தியில் சோஷலிசம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? என்று பெரிதாக அக்கறை இருக்கவில்லை. யுத்தம் முடிந்தது. நாம் நிம்மதியாக வாழ்கிறோம் என்று மட்டுமே கருதினார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு பெர்லின் பகுதியை தன்னிடம் ஒப்படைக்கும் படி சோஷலிச கிழக்கு ஜெர்மனி கோரி வந்தது. அமெரிக்காவோ, பிரிட்டனோ கோரிக்கையை அலட்சியமாக புறக்கணித்ததுடன் மட்டும் நில்லாது, உளவாளிகளை கிழக்கு பெர்லினுள் அனுப்பி சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இதனால் கிழக்கு ஜெர்மனி, மேற்கு பெர்லினை சுற்றி மதில் கட்ட ஆரம்பித்தது. மேற்கு பெர்லின் மீது அழுத்தம் கொடுப்பதே அதன் காரணம். மதில் கட்ட தொடங்கிய உடனேயே மேற்கின் பிரச்சார இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்தது. மதிலுக்கு அப்பால் இருந்த மக்கள் வெளியேறும் படி தூண்டப்பட்டனர். அதனை படம்பிடித்து உலகத்திற்கு காட்டினர். மேற்கு ஜெர்மனியால் தூண்டுவிக்கப்பட்ட மக்கள் பலர், மேற்கை தரிசிக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வெளியேறினர். மதில் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே பலர் வெளியேறிக் கொண்டிருந்தனர். மதிலில் எல்லைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சிலரை சுட்டுக் கொன்றால், அதுவும் மேற்குலக நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகியது.

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் இரண்டாம் பகுதி)

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜார் மன்னனின் ரஷ்யாவில் யூதர்களுக்கெதிரான இனக்கலவரம் நடந்தது. லட்சக்கணக்கானோர் யூதர்களாக பிறந்த ஒரே குற்றத்திற்காக கொல்லப்பட்டனர். இதனால் பெருமளவு யூத அகதிகள் மேற்கு ஐரோப்பாவை நோக்கி ஓடினார்கள். மேற்கில் அவர்களுக்கு புகலிடம் மறுக்கப்பட்டது. அன்றைய ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிரான இன/மத வெறுப்புணர்வுகள் மேலோங்கி இருந்த காலம் அது. பல சிரமங்களுக்கு மத்தியில் யூதர்கள் மேற்கில் தங்க முடிந்தாலும், புகலிடத்தில் அவர்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக நடத்தப் பட்டனர். இதனால் ஹிட்லரின் ஜெர்மனி யூத இனப்படுகொலையை நடத்தியமை, அன்றைய காலத்தில் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்காது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, எவ்வாறு பெரும்பான்மை சிங்களவர்கள் மௌனமாக இருந்தார்களோ; இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, எவ்வாறு பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாக இருந்தார்களோ; அதே போலத்தான், அன்றைய ஜெர்மன் மக்கள் யூத இனப்படுகொலையை கண்டும் காணாதது போல இருந்து விட்டனர்.

ஆயிரக்கணக்கான யூத அகதிகள் சுவிட்சர்லாந்து போன்ற நடுநிலை நாடுகளுக்கூடாக அகதிகளாக வெளியேறி புகலிடம் தேடினார்கள். ஆனால் "நடுநிலை" சுவிட்சர்லாந்து, ஆதரவற்ற அகதிகளை பிடித்து ஹிட்லரின் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள். ஆரம்பத்தில் ஹிட்லர் மட்டுமே இனவெறி அரசியலை நடத்தியவன். அந் நேரம் ஜெர்மனியை சுற்றி இருந்த பிற ஐரோப்பிய அரசுகள் பகிரங்கமாக யூத இன விரோதத்தை காட்டவில்லை. இருப்பினும் தமது நாடுகளில் தஞ்சம் கோரிய யூத அகதிகளை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பவும் தயங்கவில்லை. அமெரிக்க யூதர்கள் சிலரின் முயற்சியால், ஒரு தொகை ஐரோப்பிய யூதர்கள் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் அமெரிக்காவிற்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்ட யூத அகதிகளை, அமெரிக்க அரசு தற்காலிகமாகவே ஏற்றுக்கொண்டது. குறிப்பிட்ட காலம் யூத அகதிகளை தடுப்பு முகாமிற்குள் அடைத்து வைத்தது. ஐரோப்பாவில் போர் முடிந்த பின்னர் திருப்பி அனுப்பப் போவதாக பயமுறுத்தியது.

நமது காலத்து மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளை விட மோசமாக நடந்து கொண்டன மேற்கு ஐரோப்பிய நாடுகள். இன, மத, அரசியல் சகிப்புத் தன்மை எதுவும் அவர்களிடம் அன்று இருக்கவில்லை. கத்தோலிக்க நாட்டில் புரட்டஸ்தாந்து மதப்பிரிவினர் வேட்டையாடப்பட்டனர். புரட்டஸ்தாந்து நாட்டில் கத்தோலிக்கர்கள் அடக்கப்பட்டனர். எல்லா நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். இரண்டாம் உலகபோர் வரையில் ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி ஆட்சியாளர் அக்கறைப்படவில்லை. அப்படியானவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற அடுத்த நாளே புனிதர்களாக மாறிவிட்டார்களாம். நடத்தையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? நாஸிஸத்தில் இருந்து மேற்கு ஐரோப்பாவை விடுதலை செய்த "அமெரிக்க ஆண்டவரின் ஆசீர்வாதம்" என்று சொல்கின்றனர் சிலர். அது சரியா?

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர், ஐரோப்பியர்கள் அனைத்தையும் இழந்து பரம ஏழைகள் ஆனார்கள். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில், இதே போன்ற சூழ்நிலையில் புரட்சி வெடித்து கம்யூனிச சோவியத் உருவானதை ஆட்சியாளர்கள் ஒரு கணம் நினைவு படுத்திக் கொண்டனர். அதே நேரம் அவர்களுக்கு இன்னொரு அச்சமும் தொற்றிக் கொண்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தன. அங்கே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் சோஷலிச பொருளாதாரத்தை முன்னெடுத்தனர். போரில் தானும் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தாலும், சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி செய்தது. ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்கள் போடப்பட்டு பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சி அடைந்தது. யூகோஸ்லேவியா மட்டுமே அமெரிக்க கடனுதவியை பெற விரும்பியது.

ஒரு காலத்தில் வல்லரசுகளாக இருந்த பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் போரில் அனைத்தையும் இழந்து நின்றன. ஜெர்மனி பூரண அளிவுக்குல்லாகி இருந்தது. இந்த அழிவில் இருந்து முதலாளித்துவ மேற்கு ஐரோப்பா, சோஷலிச நாடுகளை விட அதிக வேகத்தில் வளர வேண்டும் என்ற போட்டி ஏற்பட்டது. "மார்ஷல் திட்டம்" என்ற பெயரில், அமெரிக்கா பில்லியன் ஐரோப்பாவை மீளக்கட்டி எழுப்ப டாலர்களைக் கொட்டியது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா சிறிதளவே பாதிக்கப்பட்டது. போரில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்றதன் மூலம் அளவுகடந்த லாபத்தை சம்பாதித்தது. ஆகவே பிற நாடுகளுக்கு கடன் வழங்குமளவிற்கு அமெரிக்காவிடம் தாராளமாகவே பணம் இருந்தது. எப்பாடு பட்டேனும் மேற்கு ஐரோப்பிய மக்களை சோஷலிசத்தை நாட விடாமல் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, வேண்டிய அளவு பணம் பாய்ந்தது. இந்த அரசியல் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், 1990 க்குப் பிறகு சோஷலிசத்தை துறந்த கிழக்கைரோப்பிய நாடுகள், தமக்கும் அமெரிக்கா மார்ஷல் திட்டம் போல பணத்தை கொட்டும், என்று எதிர்பார்த்து ஏமாந்து போனது வேறு கதை.

(தொடரும்)

Saturday, May 01, 2010

சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

பகுதி 1. அரசியல் சகோதரத்துவம்

முதலில் மேற்குலக நாடுகள் அகதி தஞ்சம் கோருவோருக்கு புகலிடம் வழங்கும் அரசியலைப் பார்ப்போம். அந்த அடிப்படை அறிவு இருந்தால் தான், நாம் மேற்கில் தமிழ் அகதிகள் பிரச்சினைகளை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளலாம். "புகலிடம் வழங்கும் அரசியல்" என்று குறிப்பிட்டேன். ஆமாம், இது ஒரு அரசியல் கொள்கை தான். மேற்குலக நாடுகளில் எதற்கெடுத்தாலும், ஒரு கொள்கை வகுத்து விடுவார்கள். அதனை அடுத்து வரும் அரசாங்கங்களும் கச்சிதமாக பின்பற்றும். ஒரு கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவது பாராளுமன்ற பெரும்பான்மை, அமைச்சு அதிகாரிகள் ஆகியோரில் தங்கி உள்ளது. மேற்குலக நாடுகளில் ஆளும் கட்சிகள் ஒன்றில் முதலாளித்துவத்தை தீவிரமாக ஆதரிக்கும் கட்சிகளாக இருக்கும், அல்லது முதலாளித்துவ அமைப்பில் தமது சொந்த நாட்டு மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்று பார்க்கும் கட்சியாக இருக்கும். ஆகவே கொள்கை ரீதியாக பெருமளவு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் கட்சிகள் எதுவும், அகதிகளை தமது வாக்கு வங்கியாக கருதுவதில்லை.

மக்களால் தெரிவு செய்யப்படாத அமைச்சு அதிகாரிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இந்த அதிகாரிகள் பெருமளவு நேரம் புள்ளி விபரங்களையும், அறிக்கைகளையும் படிப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். இவர்களுக்கு அகதிகளின் மனவுணர்வை புரிந்து கொள்ளும் தன்மை கிடையாது. சுருக்கமாக சொன்னால், இந்த அதிகாரிகளின் கண்களுக்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும், மனிதர்கள் அல்ல. அகதிகளை விசாரணை செய்யும் அதிகாரி ஒருவராகவும், விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுப்பது வேறு ஒருவராகவும் இருப்பர்.

நான் நீண்ட காலம் மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதால், பெருமளவு ஐரோப்பிய தகவல்களை விரிவாக என்னால் வழங்க முடியும். இருப்பினும் அவ்வப்போது பிற கண்டங்களைப் பற்றிய குறிப்புகளும் வரும். "ஐரோப்பா ஒரு குடியேற்ற நாடல்ல." என்று இன்றைய அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். அது உண்மையா? நாம் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவை காலத்திற்குக் காலம் வந்து சேர்ந்த குடிவரவாளர்களாலேயே வளம் பெற்றுள்ளன, என்பது தெரிய வரும். ரோமர்கள் காலத்தில், ஜெர்மனியில் இருந்து சென்று குடியேறிய ஆங்கிலோ-சாக்சன் இனங்களை சேர்ந்தவர்களே இன்றைய இங்கிலாந்தின் குடிமக்கள். அவர்களுடன் பிற்காலத்தில் வந்த நோர்வீஜியர்களும் கலந்தனர்.

நாம் தமிழில் பயன்படுத்தும் "ஆங்கிலேயர்" என்ற வார்த்தை போர்த்துகீசிய மூலத்தை கொண்டது. ரோமன் குடும்பத்தை சேர்ந்த மொழிகள் அந்தப் பதத்தை தற்போதும் பாவிக்கின்றன. பண்டைய ஐரோப்பா கண்டத்தில் அவர்கள் ஆங்கில இனம் என்றே அறியப்பட்டனர். அதே போல பிரான்ஸில் பிரிட்டன் என்ற மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானிய மொழி (ஆங்கிலம் அல்ல) பேசுகின்றனர். பிரிட்டன் என்ற சொல் அங்கிருந்து தான் வந்தது. அவர்களின் மூதாதையர் பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு குடிபெயர்ந்த கெல்ட்டிக் இன மக்கள். பிரான்ஸ் என்ற பெயர் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறிய பிராங்கன் என்ற இனத்தில் இருந்து வந்தது. இவ்வாறு இன்றைய ஐரோப்பிய தேசங்களின் பெயர்களே, நாடுகளுக்கிடையிலான குடியேறிகளின் பெயராக உள்ளன.

சரி, பண்டைய சரித்திரம் மட்டும் தான் அப்படியா? ஒரு நூற்றாண்டுக்கு முந்திய நவீன வரலாறு என்ன சொல்கிறது? அகதிகள் என்ற நவீன கால தோற்றப்பாடு, மதங்களின் போருக்குப் பின்னர் தான் ஆரம்பமாகியது. ஒரு காலத்தில் கத்தோலிக்க மதம் மட்டுமே சர்வாதிகாரமாக ஐரோப்பா முழுவதும் ஆண்டு வந்தது. அதற்கு சவாலாக வரும் எந்த சக்தியும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் லுதேர்ன், பிரான்ஸில் கல்வின் ஆகிய மதகுருக்கள் புரட்டஸ்தாந்து பிரிவை வெற்றிகரமாக ஸ்தாபித்தனர். ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் அரசர்கள் லுதேர்னின் கொள்கைகளை அரசமதமாக அங்கீகரித்தனர். ஆனால் பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் கல்வினை பின்பற்றியவர்கள் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர். அதனால் அவரை பின்பற்றிய பலர் (புரட்டஸ்தாந்து) நெதர்லாந்திற்கு தப்பி ஓடி தஞ்சம் புகுந்தனர்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திலும் அதே மாதிரி நிகழ்ந்தது. அப்போது புரட்சி நடந்த பிரான்சை தவிர பிற நாடுகளில் மன்னராட்சி நிலவியது. மன்னரை எதிர்க்கும் குடியரசுவாதிகள் பலர் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரினர். புதிய பிரெஞ்சுக் குடியரசில் ஆங்கிலேய, ஜேர்மனிய அரசியல் அகதிகள் தங்கி இருந்தனர். அங்கிருந்த படியே தமது நாட்டு குடியரசு இயக்கத்தை வழிநடத்தினர். மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் இருந்து ஒரு உண்மை புலனாகும். எப்போதும் தம்மைப் போல ஒரே அரசியல் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கே எந்த நாடும் அரசியல் தஞ்சம் வழங்க விரும்புகின்றது. இந்த "அரசியல் சகோதரத்துவம்" இன்று வரை ஐரோப்பிய நாடுகளின் எழுதப்படாத சட்டமாக உள்ளது.

(தொடரும்)