Showing posts with label ஈழ அகதிகள். Show all posts
Showing posts with label ஈழ அகதிகள். Show all posts

Sunday, June 11, 2023

ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!

 

அதிசயம் ஆனால் உண்மை! ENDLF ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!! 

ENDLF என்ற இயக்கம் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப் பட்டது. அதில் இணைக்கப் பட்ட இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தவர்கள். 

1986 ஆம் ஆண்டு ஈழத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்ட TELO, PLOTE, EPRLF ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்; இந்தியாவில் இருந்தவர்களும், இலங்கையில் இருந்து சென்றவர்களும் மண்டபம் முகாமில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு அகதி முகாம்களில் இருந்த இளைஞர்களை அணி திரட்டி இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் அல்ல. இதற்கு முன்னர் எந்த இயக்கத்திலும் இருந்திராத அகதி இளைஞர்களும் சேர்க்கப் பட்டனர். அவ்வாறு உருவானது தான் ENDLF. 

இந்திய இராணுவம் இலங்கை செல்லும் நேரம் இவர்கள் துணைப் படையாக இயங்க வேண்டும். நிலைமை சீரானவுடன் ஈழப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் கையளிக்கப் படும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்த அகதிகள் அத்தனை பேரும் மீள்குடியேற்றம் செய்யப் படுவார்கள். அன்று இது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 

ஆனால் வரலாறு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. போரின் முடிவில் இந்திய இராணுவத்துடன் ENDLF உம் வெளியேறியது. ஆயுதபாணிகள் மீண்டும் அகதிகள் ஆனார்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் முறிந்த படியால் ஒட்டுமொத்த அகதிகளும் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

Sunday, March 06, 2011

சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 4)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகளிலும் "ஏழை அகதிகள், பணக்கார அகதிகள்" என்று இரண்டு வகை உண்டு. ஒருவர் ஈழத்தில் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது, இந்திய அகதி வாழ்க்கையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஈழத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு மாறாக, மத்திய தர வர்க்க அகதிகள், கூடிய சீக்கிரத்தில் அகதி முகாமை விட்டு வெளியேறவே விரும்புவார்கள். அவர்கள் தங்களை இந்தியாவில் அகதியாக பதிந்து கொள்வார்கள், ஆனால் முகாமில் வாழ மாட்டார்கள். சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று வாடகை வீடு எடுத்து வாழ்வார்கள். பராமரிக்க வேண்டிய அகதிகளின் தொகை குறைகின்றது, என்ற சந்தோஷத்தில் மாநில அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதற்கு மாதாந்த வருமானம் வேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் அந்த செலவை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த மேட்டுக்குடி மக்கள் மட்டும் அகதியாக பதியாமல், நேரடியாக இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கனவே அவர்களது செலவை ஈடுகட்டும் பணத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். ஈழப்போர் காலகட்டத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் வாழும் மேட்டுக்குடி தமிழர் குறித்து இங்கே பேசத் தேவையில்லை. வெளிநாட்டுச் செலவில் வாழ்பவர்கள் எல்லோரும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழை விவசாயிக்கும் நிலம் சொந்தமாக இருக்கும். செறிவான மக்கட்தொகை கொண்ட யாழ்ப்பணத்தில் ஒரு பரப்பு காணியின் விலை பிற மாகாணங்களை விட அதிகம். இதனால் காணி விற்று அனுப்பிய பிள்ளை, வெளிநாடு சென்று உழைத்து அனுப்பினால், அந்தக் குடும்பம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டது. சில வருடங்களில், புதுப் பணக்கார மிடுக்கு அவர்களிடம் மத்தியதர வர்க்க மனோபாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சென்னை மாநகரின் பகுதியான அண்ணா நகர், அப்போது தான் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தமிழரின் "குடியேற்றம்" இடம்பெற்ற அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுப்பது கடினமாகவிருந்தது. வீட்டு வாடகை உயர்ந்து கொண்டே சென்றமை, இலங்கை- இந்தியத் தமிழ் முரண்பாட்டை விதைத்தது. பேராசை கொண்ட வீட்டு உரிமையாளரும், வெளிநாட்டுப் பணத்தை தண்ணீராக செலவழித்த ஈழத் தமிழரும் சமூக முரண்பாடுகளை கணக்கில் எடுக்கவில்லை. இதே போன்ற நிலைமை இதே காலகட்டத்தில் கொழும்பில் தோன்றியது. வட மாகாணத் தமிழர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்புவதற்காக, போர் நடக்காத கொழும்பில் சென்று பாதுகாப்பாக வாழ விரும்பினார்கள். இந்தியாவில் இருந்து போவதை விட, கொழும்பில் இருந்து வெளிநாடு செல்வது இலகுவாக இருந்தது. வெளிநாடு போகா விட்டாலும், வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பும் பணத்தில் கொழும்பில் வசதியாக வாழ விரும்பினார்கள்.

தமிழர்கள் கொட்டும் வெளிநாட்டுப் பணத்துக்கு பேராசை கொண்ட சிங்கள வீட்டு உரிமையாளர்களும், வீட்டு வாடகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இதனால் கொழும்பு வாழ் சிங்கள, தமிழ் மக்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொழும்பு நகரில் யாழ்ப்பாணத் தமிழரின் தொகை பெருகிக் கொண்டிருந்தது. கொழும்பில் வாழ்வதற்கும், சென்னையில் வாழ்வதற்கும் இடையில் வேறுபாடு இருந்தது. யுத்தம் கொழும்பை நோக்கி புலம்பெயர்ந்தது. குண்டுவெடிப்புகள், அதையொட்டிய கைதுகள், நெருக்கடிகள் போன்றன அங்கேயும் பாதுகாப்பற்ற சூழலை தோற்றுவித்தது. சென்னையிலோ, திருச்சியிலோ அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை மட்டும் அவர்களின் சீரான வாழ்க்கையில் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

சென்னையில் சில நண்பர்கள் வசித்ததால், அவர்களின் தொடர்பு கிடைத்து நானும் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். அப்போதெல்லாம் தனியார் நடத்தும் விரைவு பேரூந்து சேவைகள் கிடையாது. போக்குவரத்து சபை முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நகரங்களுக்கு இடையில் "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்" சேவையில் ஈடுபட்டிருந்தது. நானும், அகதி முகாமில் சந்தித்த நண்பருமாக சென்னை நோக்கி பஸ் பயணம் மேற்கொண்டோம். சென்னை நகரின் பிரமாண்டம் வியக்க வைத்தது. அதே நேரம், இந்தளவு நெருக்கமான குடிசனப் பரம்பலை இலங்கையில் எங்கேயும் காணவில்லை.

ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. கூரைக்கு பதிலாக மொட்டை மாடி வைத்துக் கட்டியிருந்தார்கள். பிறகொரு தருணத்தில், அப்படியான வீடுகளை வெப்ப வலைய நாடுகளில் எல்லாம் காண முடிந்தது. நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில், கோடை காலமென்பதால் எல்லோரும் மொட்டை மாடியில் தான் படுப்போம். அந்தக் காலத்தில் காற்றாடி பாவிப்பது ஆடம்பரமானது. இலங்கையில் சில வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் மின்சாரக் காற்றாடி பாவிக்கவில்லை. (என்பதுகளுக்கு பிறகு தான் எமது ஊருக்கு மின்சாரம் வந்தது.) ஆனாலும், கோடை காலத்து வெம்மையை தாங்கிக் கொள்ள முடிந்தது. சென்னையில் கோடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கொள்வது சித்திரவதை அனுபவிப்பதற்கு சமமானது. ஆகவே மொட்டை மாடியின் மகிமையை, சென்னை சென்று ஒரு சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

நான் தங்கியிருந்த வீட்டில் வசித்த எல்லோரும் 25 வயதுக்கு மேற்படாத வாலிபர்கள். அனைவரது நோக்கமும் வெளிநாடு போவதாகவே இருந்தது. தாங்கள் எத்தனை மாதங்களாக காத்திருக்கிறோம், என்பதை ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்தும் போதே கூறிக் கொண்டனர். புதிதாக சென்ற என்னை, "தங்களோடு சேர்ந்து வருந்த வந்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்," போல சேர்த்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள். சிலர் பணம் போதாமையால் இன்னும் விமான நிலையத்தை தரிசிக்காதவர்கள். இந்திய கடவுச்சீட்டில் படம் மாற்றி, டெல்லி விமான நிலையம் சென்று பிடிபட்டு திரும்பி வந்தவர்கள். நடுங்கும் இமாலயக் குளிரில் நேபாளம் வரை சென்று திரும்பியர்கள். இவ்வாறு பல சோகக் ககதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடு அனுப்பி வைக்கும் முகவர் ஒருவர் மட்டும், இருந்திட்டு எப்போதாவது வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வார். தனது "வாடிக்கையாளர்களுக்கு" செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்வார். வீட்டு உரிமையாளரின் குடும்பம் கீழ் வீட்டில் வசித்து வந்தது. இவர்களைத் தவிர வேறு வெளியுலகத் தொடர்புகள் இல்லை. கொஞ்சம் பணம் இருந்தால், சினிமா பார்த்து விட்டு வருவதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இருக்கவில்லை. ஒரு புதுப்படம், தமிழகத்தில் ரிலீசாகி மாதக் கணக்கான பின்னர் தான் யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதனால் சென்னையில் புதுப்படத்தை உடனுக்குடன் பார்க்கும் வசதி, ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு வகையில் நாம் தங்கியிருந்த வீடு இன்னொரு வகை "அகதி முகாம்." இது போன்ற பல உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் சென்னை நகர வீடுகள் பலவற்றில் இருந்தன. பொதுவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களால் குறைந்த விலைக்கு வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த வீடுகளில் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் வசித்தனர். எல்லோருடைய நோக்கமும் மேற்கு ஐரோப்பா, அல்லது கனடா போவதாக இருந்தது. நான் சந்தித்த சில இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் செயற்பட்டு, பின்னர் விட்டு விட்டு வந்திருந்தார்கள். ஈழத்திலும், தமிழகத்திலும் அந்த இயக்கங்கள் ஒன்றையொன்று பகைவர்களாக கருதிக் கொண்டிருந்த நேரம். ஆனால் இந்த முன்னாள் போராளிகள் மட்டும் நட்புடன் பழகினார்கள்.

ஒரு சில நேரம், அரசியல் பேச்சுகள் தர்க்கத்தில் முடிந்தாலும், அவர்களது நட்பு முறியவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. இனிமேல் வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்தக் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். முன்னர் இயக்க உறுப்பினர்களாக பொது வாழ்வில் இருந்த காலங்களில் குடும்ப உறவை துண்டித்திருந்தார்கள். தற்போது மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். பெற்றோரும் "காணாமல் போன ஆட்டுக்குட்டி திரும்பி வந்த குதூகலத்தில்" திளைத்தார்கள். "ஈழத்திற்காக வேறு யாராவது போராடட்டும். தனது பிள்ளை வெளிநாடு சென்று நலவாழ்வு வாழ வேண்டும்," என்று நினைத்தார்கள். அதனால் எத்தனை லட்சம் கொடுத்தேனும் வெளிநாடு அனுப்பி விடத் துடித்தார்கள்.

முன்னாள் இயக்க உறுப்பினர்களின் மூலம், தமிழகத்தில் ஈழ அரசியல் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமான ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில், சென்னையில் தலைமை அலுவலகங்களை வைத்திருந்தன. ஈழத்தில் இயக்க நடவடிக்கைகள் யாவும் அங்கிருந்த படி நெறிப்படுத்தப் பட்டன. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கியதாக நம்பினார்கள். "இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழீழம் எடுத்து தங்கள் கையில் தந்து விட்டுப் போகும்," என்று விடுதலை இயக்கப் போராளிகள் கூட அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிக் கொண்டிருந்தது.

அன்று முதலமைச்சராக இருந்த MGR உம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும், யார் அதிகம் ஆதரவளிப்பது என்பதில் போட்டி நிலவியது. MGR புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவராக இருந்தார். வேண்டிய நேரமெல்லாம் பணமும், அரச உதவிகளையும் வழங்கி வந்தார். கருணாநிதி பிற கட்சிகளை சேர்த்துக் கொண்டு TESO (தமிழீழ பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் நிதி வழங்கினார். அன்று புலிகள் மட்டும் அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு முன்னர் இந்திய மத்திய அரசின் நேரடித் தொடர்பில் இருந்த டெலோ இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவளித்து வந்தார். MGR ஆயினும், கருணாநிதி ஆயினும், இந்திய மத்திய அரசின் அனுமதி இன்றி அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது, என்று முன்னாள் போராளிகள் தெரிவித்தனர். இந்தியா வேண்டிய நேரத்தில் தலையிட்டு, யார் எஜமான் என்பதை நிரூபிக்கும், என்றும் கூறினார்கள். அதனை மெய்ப்பிப்பது போல சில சம்பவங்கள் நடந்தன.

இந்தியாவின் அனுசரணையின் பேரில், பூட்டானில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சேர்த்து, ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் கூட்டாக தமது தீர்வுகளை முன்வைத்திருந்தன. அதற்குப் பின்னர், புலிகள், டெலோ, ஈபிஆர்எல்ப், ஈரோஸ் போன்ற நான்கு இயக்கங்கள் தமக்குள்ள ஐக்கியம் கண்டன. "ஈழ தேசிய விடுதலை முன்னணி" என்ற பெயரின் கீழ் கூட்டாக அறிக்கை விட்டன. இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களிடையே அத்தகைய ஐக்கியத்தை எதிர்பார்க்கவில்லை. திடீர் நடவடிக்கையாக டெலோ அமைப்பின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகியோரை நாடு கடத்தியது.

அதை விட, இன்னொரு சம்பவம் ஈழ விடுதலை அமைப்புகளின் சுதந்திரம் எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டது என்பதை நிரூபித்தது. ஒரு நாள் சொல்லி வைத்தாற் போல, அனைத்து இயக்கங்களினதும் தலைமை அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. திடீரென புகுந்த போலிசும், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அங்கிருந்த ஆயுதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றனர். போலீசார் எவ்வாறு மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடினார்கள், என்று இயக்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய ஒரு நண்பர் தெரிவித்தார். சிறிலங்கா போலிஸ் மட்டுமே அத்தகைய அடக்குமுறையில் ஈடுபடும் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பருக்கு, அந்தச் சம்பவம் மீள முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. திடீர் சோதனை நடவடிக்கைக்கு, இந்திய அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்ததாக நினைவில்லை.

சிறிது காலம் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. வடமராட்சியை கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், படை நகர்வில் தேக்க நிலை காணப்பட்டது. புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்று, அவர்களது பலத்தில் நம்பிக்கை கொண்ட அகதிகள் பலர் ஊர் திரும்பினார்கள். மீண்டும் ஒரு தடவை நண்பர்களுடன் இராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது, சில படகுகள் புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், இலவசமாக ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள்.

சென்னையில் வசித்த நண்பர்களைப் போல, வெளிநாடு செல்லும் நோக்கம் எதுவும் எனக்கு அப்போது இருக்கவில்லை. இந்திய மண்ணில் அகதியானது போல, எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக அலைய மனம் ஒப்பவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வதை விட, சொந்த மண்ணில் வாழ்வதே சுதந்திரம் என்று கருதுபவர்கள். அதனால் இலங்கை செல்லும் படகில் கால் வைத்த பொழுது, ஒரு தவறைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை. அன்று என்னைப் போல பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்ததது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு சில மாதங்களின் பின்னர், என்னோடு அகதி முகாமில் வசித்த ஈழ அகதிகள் அனைவரும் கப்பலில் வந்திறங்குவார்கள், என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற எம்மை, இந்தியாவின் நிழல் தொடரப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)
தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
3.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Thursday, March 03, 2011

தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 3)
-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகள் பலரிடமும் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற ஏக்கம் குடிகொண்டிருந்த போதிலும், இந்திய அனுபவங்களையும் தம்மோடு சுமந்து செல்ல எண்ணினார்கள். அரசு கொடுக்கும் ஒரு பிடி அரிசியில், காய்கறி சேர்த்து சமைத்து உண்ணும் அகதி வாழ்வில் உல்லாசப் பயணத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தியா வந்தால், கோயில் பார்க்காமல் திரும்பக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இந்துக்களைப் பொறுத்த வரையில், இந்தியாவை தமது தாயகமாக கருதும் போக்கு தொன்று தொட்டு நிலவியது. இப்போதும் இலங்கை திரும்பிய முன்னாள் அகதிகள், தாம் இந்தியாவில் எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தோம், என்று கூறி அயலவரின் பொறாமையைக் கிளப்புவார்கள். எமது முகாமில் இருந்தும் இளைஞர்களின் குழு ஒன்று கோயில் பார்க்க கிளம்பியது. எனக்கு அப்போதும் சாமி, கோயில்களில் நம்பிக்கை இல்லாத போதிலும், ஊர் சுற்றக் கிளம்பினேன்.

பஸ் பயணத்திற்கு மட்டும் கையில் காசு வைத்திருக்க வேண்டும். ரயிலில் இலவசப் பிரயாணம் செய்யலாம் என்று கூறினார்கள். அது ஈழ அகதிகளுக்காக MGR வழங்கிய சலுகை என்றார்கள். (MGR அப்போதும் தமிழக முதலமைச்சராக இருந்தார்.) ரயிலில் டிக்கட் பரிசோதகர் வரும் போதெல்லாம், அகதி அட்டையைக் காட்டினால் போதும். தமிழ்நாடு மாநிலத்திற்குள், எந்த ரயிலிலும் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் ஏறி திருச்சி சென்றோம். அங்கிருந்த கோயில்கள் எல்லாம் பார்த்து விட்டு, அன்றிரவு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கினோம். மீண்டும் ரயில் ஏறி, நாம் வந்திறங்கிய இராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பி வந்தோம். வரும் வழியில் மறக்காமல் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தரிசித்தோம். நாம் சந்தித்த இந்திய தமிழர்கள், எங்களை "சிலோன் காரர்கள்" என்று அழைத்து உரையாடினார்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் சிலோன்காரர்கள் என்று தான் அழைத்து வந்தனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் மலையகத் தமிழரை "இந்தியத் தமிழர்கள்" என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர்களது பெயரும் சிலோன்காரர்கள் தான்.

எமது தமிழக சுற்றுப் பயணத்தின் பின்னர், இந்திய-இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 90 % சதவீதமான இலங்கை அகதிகள், அதற்கு முன்னர் இந்தியாவை பார்த்திராதவர்கள். இந்தியத் தமிழருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. இந்தியாவுடனான அவர்களது தொடர்பு முழுவதும், சினிமா, சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகவே பரிமாறப்பட்டன. பெரும்பாலும் பாமர மக்கள், தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போலத்தான் இந்தியா இருப்பதாக நம்பினார்கள். இந்தியா வந்த பின்னர், அவர்களது மாயைகள் யாவும் அகன்றன. பிரமாண்டமான கோயில்களைத் தவிர, இந்தியாவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறவாரம்பித்தனர்.

பொதுவாக இரண்டு சமூகங்களும், ஒன்றை மற்றொன்று தாழ்வாகக் கருதுவதை உணரக் கூடியதாகவிருந்தது. சில அகதி முகாம்களில், அதிகாரிகளின் திமிரான பேச்சு எரிச்சலூட்டியது. வசதிக் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதெல்லாம், ஒன்றில் புறக்கணித்தார்கள், அன்றில் வாயை மூடிக் கொள்ள சொன்னார்கள். "சிங்களவர்களால் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்த அரிய உயிரினத்தை வைத்துப் பராமரிப்பது," போலப் பேசினார்கள். இதனால் வெறுத்துப் போன அகதிகள், "யுத்தம் மட்டும் இல்லையென்றால், எமது ஊரில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்," என்று பேசவாரம்பித்தனர்.

மிகப்பெரிய இந்திய-இலங்கை முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுந்தது. அகதி முகாமில் கிடைக்கும் சொற்பத் தொகை வாழ்வதற்கு போதாது என்பதால், கூலி வேலை தேடவாரம்பித்தனர். இலங்கையில் இலவசக்கல்வி வாய்ப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் வரை படித்த ஏழை மாணவர்கள் கூட, கூலி வேலைக்கு சென்று வந்தனர். பட்டதாரிகள் கூட, இந்தியாவில் தமது பட்டங்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டனர். ஒரு ஈழ அகதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், எந்தவொரு நிறுவனமும் அவர்களுக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. மாநில, மத்திய அரசுகள் சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்தன. அகதிகள் கூலி வேலைக்கு செல்வதை மட்டும் தடை செய்யவில்லை. இதனால் உள்ளூர் முதலாளிகளும், ஒப்பந்தக்காரர்களும் வீதிகளை செப்பனிடும் வேலை, மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அகதிகளின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு இந்திய தொழிலாளிக்கு கொடுக்கும் சராசரி கூலியை விட குறைந்த அளவு ஊதியமாக வழங்கப்பட்டது.

ஈழ அகதிகள் என்றால் கடுமையாக வேலை வாங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. சில முதலாளிகள், அவர்களின் கையறுநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். மாதக் கணக்காக வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம், இந்தியத் தமிழ் முதலாளிகள் ஈழ அகதிகளின் உழைப்பை சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தனர். மறு பக்கம், தொழில் வாய்ப்பை இழந்த இந்தியத் தமிழ் தொழிலாளிகள் அதிருப்தி கொண்டனர். இந்தியாவில் கூலி வேலையாட்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை தலித் மக்கள். இவர்களது குடியிருப்புகளும் அகதி முகாம்களை அண்டியே காணப்பட்டன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முறுகல் நிலை, "இந்தியத் தமிழ்- இலங்கைத் தமிழ் முரண்பாடு" வளரக் காரணமாயிற்று. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஈழ அகதிகளை தம்மை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். சமூகங்களுக்கு இடையிலான சிறு சிறு சச்சரவுகளின் பொழுது, இது போன்ற உணர்வுகள் மேலெழுந்து வெளிப்படையாக பேசினார்கள். இதற்கிடையே வசதி படைத்த அல்லது மேல்நிலை சாதி இந்தியத் தமிழர்கள், அத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவுமற்று வாழ்ந்தனர்.

ஈழத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த அகதிகள் முகாமில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்திய வழக்கப்படி, ஈழ அகதிகளும் சாதி வாரியாக வகைப் படுத்தப் பட்டு பதியப்பட்டனர். அது ஒன்றும் கட்டாயமல்ல, எனக்குத் தெரிந்த பலர் படிவத்தில் சாதிப் பெயரை குறிப்பிடாமல் வெறுமையாக விட்டனர். சாதிப் பெயரை பதியும் நடைமுறை, இலங்கையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப் பட்டு விட்டது. (இன்று சிலர் இதைக் காட்டி ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.) ஆனால், கிராமங்கள் சாதி வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த சமூக அமைப்பைக் கொண்டிருந்தன. ஆகவே இந்தியா வந்த பின்னும் சாதிப் பெயரை பதிந்து கொள்வதில் பலருக்கு பிரச்சினை இருக்கவில்லை. மாறாக, இந்த சந்தர்ப்பத்தில் தமது சாதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை கண்டு கொண்டார்கள். தங்களை "வெள்ளாளர்களாக" பதிந்து கொண்டார்கள். இதனால் சாதிய படிநிலையில் உயர்ந்து விட்டதாக மனதளவில் திருப்தி கொண்டனர். யார் கண்டது? சில வருடங்களில் ஈழத்து சாதியமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படலாம்.

(தொடரும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Wednesday, March 02, 2011

ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 2)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-


இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட புகையிரத வண்டி பாம்பன் பாலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நிலக்கரியில் ஓடும் புகையிரத வண்டியை எனது வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் பார்க்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இலங்கையில் நீராவி எஞ்சின் பயன்படுத்தி வந்தனர். புகையிரதவண்டியின் படத்தை புத்தகத்தில் மட்டுமே பார்த்திருந்தேன். இப்போது அதிலே பயணம் செய்வதும் ஒரு சுகானுபவம். ரயிலின் வேகம் அதிகம் இல்லை என்பதால், கதவடியில் நின்றவாறே இயற்கையை இரசித்துக் கொண்டு வர முடிந்தது. ரயில் திரும்பும் போதெல்லாம், என்ஜினில் இருந்து கிளம்பும் புகை முகத்தில் வந்து அடித்தது. எனது அகதி நண்பர்கள் இருந்த பெட்டிக்குள் திரும்பி வந்து உட்கார்ந்தேன்.

அடுத்த பெட்டியில் இருந்து வந்து அரசியல் கதை பேசிச் சென்ற புதியவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். "மந்திரியாரே, மாதம் மும்மாரி பொழிகின்றதா?" என்று நாடக அரசர்கள் விசாரிப்பதைப் போல, "தமிழீழத்தின் இன்றைய நிலை என்ன?" என்று விசாரித்திருக்கிறார்கள். "இயக்கப் பெடியள் போல இருக்கு" பக்கத்தில் இருந்த நபர் காதுக்குள் கூறினார். 1986 ம் ஆண்டில் யாழ் குடாநாட்டில், புலிகள் அமைப்பினர் பிற விடுதலை இயக்கங்களை தடை செய்திருந்தனர். முதலாவதாக டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் ஒரு குட்டி யுத்தம் நடைபெற்றது. அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற இயக்கங்கள் சகோதர சண்டையை தவிர்த்துக் கொண்டனர். கீழ்மட்ட போராளிகளைத் தவிர முக்கிய பிரமுகர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டனர். இந்திய அரசு, பிற்காலத்தில் இவர்களை தனது நலன்களை நிலைநாட்ட பயன்படுத்திக் கொண்டது.

அன்றைய தமிழ் மக்கள் புலிகளையோ, பிற இயக்கங்களையோ வேறு வேறாகப் பார்க்கவில்லை. ஏனென்றால், ஈழத்தில் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். அதனால் அவர்கள் பார்வையில் அனைத்தும் விடுதலை இயக்கங்கள் தான். இராமேஸ்வரம் ரயிலில் நடந்த உரையாடலையும் அந்தப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். அகதிகள் யாரும் அவர்களை சந்தேகத்திற்குரிய நபர்களாக கருதவில்லை. ஈழப்போராட்டம் நடக்கப் போகும் காலம் முழுவதும், தமிழ் சகோதர யுத்தமும் தொடரும் என்பதை மண்டபம் முகாம் வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டோம். இந்திய நடுவண் அரசும், அதனை எண்ணையூற்றி வளர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தது.

இராமேஸ்வரம் தீவை இந்திய உப- கண்டத்துடன் இணைக்கும் பாம்பன் பாலத்தை ரயில் கடந்து வந்தது. மனிதன் கட்டிய உலக அதிசயமான பாம்பன் பாலத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கும் பொழுதே, மண்டபம் ரயில் நிலையம் வந்து சேர்ந்து விட்டோம். ரயிலை விட்டு இறங்கியவுடனேயே ஒரு மிகப்பெரிய முகாம் கண்ணுக்கு முன்னால் விரிந்தது. அந்தச் சுற்றாடலில் இந்தியக் குடியிருப்புகள் இருக்குமா என்று சந்தேகப்படும் வண்ணம், காணுமிடமெல்லாம் ஈழ அகதிகள் காணப்பட்டனர். முகாம் வாயிலில் ஒரு சில பெட்டிக் கடைகள் காணப்பட்டன. அவற்றின் வாடிக்கையாளர்களும் அகதிகள் தான். வழக்கம் போல, இங்கேயும் பதிவு செய்யும் நடைமுறை. அடுத்த நாள் தான் அதிகாரி வருவாராம். அதனால், அன்றிரவு மண்டபம் முகாமிலேயே தங்கச் சொன்னார்கள்.

புயலடித்த கடல் பயணத்தினால், எமது உடமைகள் சேதமடைந்திருந்தன. எனது முக்கிய ஆவணங்கள், மாற்றிக் கட்ட சில உடைகள், இவற்றையெல்லாம் தோளில் மாட்டும் துணிப்பைக்குள் அடைந்திருந்தேன். இராமேஸ்வரத்தில் வாங்கிய அந்த "சாமியார் பை", இன்னும் சில நாட்களுக்கு என்னை இணை பிரியாமல் தொடரவிருந்தது. மண்டபம் முகாமில் "நிரந்தரமாக வசிக்கும்" அகதிகளின் பழக்கம் கிடைத்தது பெரிய ஆறுதல். எல்லோரும் மிக அன்பாக நடந்து கொண்டார்கள். தங்கள் குறை, நிறைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். முன்னர் ஒரு காலத்தில், புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புகலிடமாக இருந்த மண்டபம் முகாம், தற்போது நிரந்தரமாக ஈழ அகதிகளை வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் எளிமையாக கட்டப்பட்ட காங்க்ரீட் கட்டிடங்கள். சுமார் பத்தடி சதுர அறைக்குள் ஒரு அகதிக் குடும்பம் வாழ்ந்தது. தனி நபர்கள் என்றால், நான்கைந்து பேரைப் போட்டிருந்தார்கள். அங்கேயே சமைத்து உண்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

மண்டபம் முகாமில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். இராமேஸ்வரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் உள்ள மன்னாரை சேர்ந்தவர்கள் தான், முதன்முதலாக படகேறி இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள். நாம் சென்ற பொழுது, அங்கேயே ஐந்து வருடங்களாக வாழும் அகதிகளையும் சந்தித்தோம். பலர் இடையிடையே இலங்கை சென்று வந்தவர்களாக இருந்தனர். அவர்களின் சொந்த வள்ளங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். ஒரே இரவில் இந்தியா சென்று சினிமா பார்த்து விட்டு வரும் கதையை, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் கேள்விப்பட்டிருந்தேன். அது எந்தளவு சாத்தியம் என்பது இப்போது புரிந்தது. முகாமில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகதிகளும் இருந்தனர். அகதிகளுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் சில தகராறுகள் ஏற்பட்டால், அதற்கு மன்னாரை சேர்ந்தவர்களை குற்றம் சுமத்தினார்கள். பிரதேச வேறுபாடு பார்க்கும் யாழ்ப்பாண மரபு, இந்தியாவிலும் தொடர்ந்ததை காணக் கூடியதாக இருந்தது.

புதிய அகதிகளான எமக்கு, இந்தியக் கலாச்சாரத்தை அறிமுகம் செய்து வைக்கும் பேச்சுகள் கலகலப்பூட்டின. ஈழத்தமிழர்கள் "சாரம்" என்று சொல்வதை, கடையில் "லுங்கி" என்று கேட்டு வாங்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். பெண்கள் அணியும் சட்டையை, "ஜாக்கட்" என்று உச்சரிக்க தடுமாறிய கதைகளை நகைச்சுவையாக கூறினார்கள். இந்தியத் தமிழில் பல ஆங்கிலச் சொற்கள் கலந்திருப்பதை குறித்து உரையாடல் திரும்பியது. ஒரு தடவை, இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் கடையில் சென்று அரிசி இருக்கிறதா, என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று கடைக்காரருக்கு புரியவில்லை. புரிய வைப்பதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், சாக்குப் பையில் இருந்த அரிசியை எடுத்துக் காட்டினார்கள். "ஓ... அதுவா, சுத்தமான தமிழில் ரைஸ் என்று சொல்லுங்க தம்பி!" என்று கடைக்காரர் கூறியதைக் கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்து விட்டனர். இந்த "ரைஸ் கதை" பின்னர் ஈழத்தமிழர் மத்தியில் பரவலாக பேசப்படும் நகைச்சுவை விருந்தாகி விட்டது.

மண்டபம் முகாம் அகதிகள் பகிர்ந்து கொண்ட வேறு சில தகவல்கள் சிந்திக்க வைத்தன. தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஈழ அகதிகளின் முகாமான மண்டபம், இந்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்புக்குள் இருப்பது இரகசியமல்ல. அங்கு வசிக்கும் அகதிகளே சுட்டிக் காட்டிப் பேசுமளவிற்கு, இந்த அதிகாரிகளின் பிரசன்னம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இருப்பினும், 18 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் விடயம் மட்டும் புதிதாக இருந்தது. இராணுவப் பயிற்சி மட்டுமல்ல, சம்பளமும் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி, பல இளைஞர்களை கூட்டிச் சென்றார்கள். அப்பாவி ஏழை இளைஞர்களும் அகதி முகாமில் கிடந்தது கஷ்டப்படுவதை விட, அது சிறந்தது என்று நினைத்து சென்றார்கள். எங்கே கூட்டிச் செல்கிறார்கள்? அவர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? ஈழப்போராட்டம் ஒரு திருப்புமுனைக்கு வந்துள்ள காலகட்டத்தில், ஒரு புதிய ஆயுதபாணி இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கை அரசின் மோசமான ஒடுக்குமுறையை சந்தித்திருந்த அகதிகள், இந்திய அரசின் மேல் கண்மூடித் தனமான விசுவாசம் வைத்திருந்தனர். அதனால் இந்தியா எது செய்தாலும், அது நன்மைக்கே என்று நம்பினார்கள்.

முகாமில் இருந்தவர்களின் சமூக- அரசியல் பின்னணியும் கூர்ந்து நோக்கத் தக்கது. பெரும்பாலான மக்கள் எந்த வித அரசியல் பிரக்ஞையும் அற்ற உதிரிப் பாட்டாளிவர்க்கத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடு செல்ல வசதியற்ற ஏழைகள். ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடைவதற்கு முன்னமே, இந்தியா வந்து விட்டனர். அவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவு. ஏனெனில் அன்றைய ஈழத்தில், மற்றைய இயக்கங்கள் தடை செய்யபட்டு புலிகள் மட்டுமே செயற்பட்டு வந்தனர். (ஈரோஸ் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்தது இருந்தது. அது குறித்து பின்னர் விரிவாக.) இதனால் தமது ஆட்சி நடப்பதாக கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் யாரும் இந்தியா செல்ல நினைக்கவில்லை. ஈழத்தில் புலிகளால் தடை செய்யப்பட்ட டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற இயக்கங்கள், இந்தியாவில் எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருந்தன. அந்த அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஈழத்தில் இருந்து அகதியாக வர வேண்டிய தேவை இருக்கவில்லை. அப்படியே வந்தாலும், அரசியலை விட்டொதுங்கி சாதாரண வாழ்க்கை வாழத் தான் விரும்பினார்கள். ஆகவே, மண்டபம் முகாமில் இருந்து இராணுவப் பயிற்சிக்காக சென்றவர்கள், அனேகமாக முன்னர் எந்த விடுதலை அமைப்பிலும் இருந்திராதவர்கள். முகாம் அகதிகளும் அதனை உறுதி செய்தனர்.

மண்டபம் அகதிகள் வழங்கிய தகவல்களை தொகுத்துப் பார்த்த பொழுது, ஒரு உண்மை புலனானது. இந்திய அனுசரணையில் ஒரு புதிய இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய மண்ணில் தோன்றும் புதிய ஈழ விடுதலை இயக்கத்தின் குறிக்கோள் என்ன? அதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை? அவர்கள் ஈழம் சென்று சிறிலங்கா படைகளை எதிர்த்து போராடுவார்களா? தமக்கு போட்டியாக ஒரு இயக்கம் வருவதை புலிகள் அனுமதிப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, நாம் இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்களுக்கு அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லை. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லலாமா? வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தில் இந்தியாவிலேயே தங்கி விடலாமா? ஆதரிக்க ஆளில்லா விட்டால், முகாம் அருகில் கூலி வேலை செய்து பிழைக்கலாமா? இது போன்ற "பாமரத்தனமான" கேள்விகளே அவர்கள் மனதை குடைந்து கொண்டிருந்தன.

அடுத்த நாள் அதிகாரிகள் வந்தார்கள். அகதிகளை பிரித்து தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் பேரூந்து வண்டியில் எம்மை ஏற்றினார்கள். நாம் ஒரே ஊர்க்காரர்கள் சிலர் ஒன்றாக பதிந்து கொண்டதால், ஒரே இடத்திற்கு அனுப்பினார்கள். வண்டியில் புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். இனிமேல் அவர்களுடன் ஒரே முகாமில் தங்க வேண்டும். அதனால் பயணத்தின் போதே எமது நட்பை பலப்படுத்திக் கொண்டோம். வண்டியில் ஒரு போலீஸ்காரர் எமது பாதுகாப்புக்காக கூடவே வந்தார். எமது வண்டி, அகலமான நெடுஞ்சாலையில் இரவைப் போர்த்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒரு நெடும்பயணம். பயணக் களைப்பை போக்க சிலர் சினிமாப் பாடல்களை சத்தம் போட்டு பாடிக் கொண்டுவந்தனர்.

எமது பேரூந்து வண்டி வேதாரண்யம் எனும் இடத்தை வந்தடைந்தது. வேதாரண்யம் நகரமும், அதிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கோடிக்கரை எனும் முனையும், ஈழப்போராட்டத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை. இராமேஸ்வரம் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு அதிகம் என்பதால், அங்கே வரும் படகுகள் எல்லாம் அகதிகளுடையவை. போராளிகளின் படகுகள் இராமேஸ்வரத்தை தவிர்த்து வந்தனர். அதற்குப் பதிலாக கோடிக்கரையில் வந்திறங்குவார்கள். இராமேஸ்வரத்திற்கு அடுத்ததாக மிகவும் கிட்டிய பயணப் பாதையும் அது தான். மேலும் யாழ் குடாநாட்டில் இருந்து கிளம்பும் படகுகள் மிகவும் இலகுவாக வந்தடையலாம். ஈழத்திற்கு செல்லும் ஆயுதங்களும், பெட்ரோல் போன்ற பொருட்களும் கோடிக்கரை வழியாகவே கடத்தப் பட்டு வந்தன. நாங்கள் போன காலத்தில், போராளிகளின் நடவடிக்கைகள் பெருமளவு குறைந்து விட்டன. இரகசிய போலிஸ் நடமாட்டம் அதிகமாகவிருந்தது. உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட அசௌகரியங்களும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி இருந்தன.

எமது பேரூந்து வண்டி வேதாரணியத்தில் இருந்து நாகபட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பிராதான பாதையில் இருந்து சவுக்குத் தோப்புக்களை கடந்து காடு போன்ற இடத்திற்குள் நுழைந்தது. முதல் நாள் மாலை மண்டபம் முகாமில் இருந்து கிளம்பி, அடுத்த நாள் காலை எமக்கென ஒதுக்கப்பட்ட முகாமை வந்தடைந்தோம். அப்போது தான் கட்டி முடிக்கப்பட்ட ஓலைக்குடிசைகளை கொண்ட முகாம், எமக்காக காத்திருந்தது. ஒவ்வொரு அகதிக்கும், சமைத்து சாப்பிட பாத்திரங்கள், அரிசி போன்றன வழங்கப்பட்டன. கோடை கால வெம்மையை உட்புக விடாத, ஓலைக்குடிசைக்குள் பாய் விரித்துப் படுத்தால் உலகமே மறந்து போனது. ஷெல் விழுந்து வெடிக்கும் காதை செவிடாக்கும் சத்தம் எதுவுமின்றி நிம்மதியான உறக்கம். ஆனால் இந்த அகதிவாழ்க்கை எத்தனை நாட்களுக்கு? சில நாட்களிலேயே இந்தியா வெறுத்துப் போனது.

போருக்குள் வாழ்வது சிரமமாக இருந்தாலும், எமது மண்ணில் வாழ்கிறோம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், அந்நிய தேசத்தில் வாழும் ஒவ்வொரு கணமும் சங்கடத்தில் நெளிய வைத்தது. இப்படியே சில வாரங்கள் ஓடியிருக்கும். அகதி முகாமில் இருந்த பலர் மீண்டும் இலங்கை திரும்பிச் செல்ல நினைத்தார்கள். ஆனால் எப்படிச் செல்வது? கையில் இருந்த பணத்தை எல்லாம் கொட்டி இந்தியா வந்து விட்டோம். மீண்டும் ஊர் திரும்ப பணம் வேண்டுமே? இலங்கை செல்லும் படகுகள் கிடைக்குமா என்று விசாரிக்கத் தொடங்கினோம். குறைந்தது 400 ரூபாய் எண்ணி வைக்காமல் கூட்டிச் செல்ல மறுத்தார்கள். தினசரி கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வரும் விடுதலைப் புலிகளின் படகுகள் மட்டும் இலவசமாக ஏற்றிச் செல்ல முன் வந்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. யாழ்ப்பாணம் சென்றவுடன் அவர்கள் இயக்கத்தில் சேர வேண்டும்.

(தொடரும்)
தொடரின் முன்னைய பகுதிகள்:
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Tuesday, March 01, 2011

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]
யாழ்நகரில் இருந்து சில மைல் தூர தொலைவில் உள்ள ஒரு மீனவர் கிராமம். நடுநிசியைக் கிழித்துக் கொண்டு கரையை விட்டு அகல்கின்றது ஒரு மீன்பிடிப் படகு. படகோட்டிகள் மட்டுமே வழக்கமாக கடற்தொழில் ஈடுபடுபடுவர்கள். சுமார் இருபது பேரளவில் இருந்த பிற பயணிகள் அனைவரும், இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் அகதிகள்.

1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு சில மாதங்கள் முந்திய காலகட்டம். பருத்தித்துறை முகாமில் இருந்து புறபட்ட இலங்கை இராணுவம் வடமராட்சிப் பிரதேசத்தை முற்றாக கைப்பற்றி இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏனைய யாழ் குடாநாட்டின் பகுதிகளும் இராணுவம் வசம் வந்து விடும் என்ற அச்சம் நிலவியது. வடமராட்சியை தாண்டி இராணுவம் வராது என்று சிலர் அடித்துக் கூறினார்கள். இருப்பினும் போர் தீவிரமடைவதற்கு முன்னம், இந்தியா சென்று விடத் துடித்தார்கள் படகில் இருந்த அகதிகள்.

இதற்கு முன்னம் கிளம்பிய அகதிகளின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் சுட்டதாகவும், அகப்பட்ட அகதிகளை வெட்டியதாகவும் வதந்திகள் உலாவின. இருப்பினும் உயிரைக் கையில் பிடித்த படி, அபாயகரமான கடற்பயணத்திற்கு தயாரானவர்கள். அகதிகளாக வெளியேறத் துடித்தவர்கள் பெரும்பாலும், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை சேர்ந்தவர்கள். மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல், மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வரை பல தரப்பட்டவர்கள். வசதி குறைந்தவர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்பி இந்திய அகதி முகாமில் பாதுகாப்பாக வாழலாம் என நம்பினார்கள். வசதி படைத்தவர்கள், இந்தியாவில் இருந்து இலகுவாக வெளிநாட்டுக்குப் போகலாம், அல்லது படிப்பைத் தொடரலாம் என நம்பியவர்கள்.

அகதியாக சென்றாலும், சில காலம் சமாளிப்பதற்கு பணம் வைத்திருக்க வேண்டிய தேவையை எல்லோரும் உணர்ந்திருந்தனர். புகலிடம் கோருவது இந்தியாவில் அல்லவா? அதனால் வசதிக் குறைபாடுகளையும் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தனர். இந்தியாவில் அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். தாராளப் பொருளாதாரக் கொள்கை எட்டிப் பார்க்காத காலம் அது. இந்தியர்கள் உள் நாட்டு உற்பத்திகளையே பயன்படுத்த வேண்டிய நிலை. அதற்கு மாறாக, இலங்கையில் ஏற்கனவே சந்தை திறந்து விடப்பட்டிருந்தது. ஜப்பானியப் பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இலங்கையில் சாதாரணமாகக் கிடைக்கும் ஜப்பானிய வீடியோ பிளேயர் சாதனத்தை இந்தியா கொண்டு சென்று இரு மடங்கு இலாபத்திற்கு விற்க முடிந்தது. இதனால் சில வசதியான அகதிகள், தம்முடன் ஜே.வி.சி. வீடியோ பிளேயர் எடுத்துச் சென்றனர். வசதியற்றவர்கள் ஆயத்த ஆடை உற்பத்திக்கு அவசியமான, YKK ஜிப் வாங்கிச் சென்றனர். இறுக்கமான இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக, மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்தியாவில் அதிக கிராக்கி இருந்தது. இவற்றை விட இலங்கை ரூபாய் தாள்களை மட்டும் எடுத்துச் சென்றவர்கள், அவற்றை மாற்றுவதற்கு சிரமப் பட்டனர். மாற்றினாலும், நாணயமாற்று விகிதம் நியாயமானதாக இருக்கவில்லை.

அகதிகளை ஏற்றிச் சென்ற படகோட்டிகளும், கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டதை அவர்களது கதைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. படகில் இருந்த பெரிய பொதிகள் அவர்களுடையதாகவே இருந்தன. அகதிகளை ஏற்றிச் செல்வதும் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாக இருந்தது. ஒரு அகதி, 600 - 1000 இலங்கை ரூபாய்கள் கொடுக்கத் தயாராக இருந்தால் மட்டுமே, அக்கரைக்கு ஏற்றிச் சென்றனர். அதே நேரம், சில அகதிகள் இந்தியாவில் இருந்து திரும்பி வந்து கொண்டுமிருந்தனர். திரும்பி வருவதற்கு 300 -400 ரூபாய்கள் மட்டுமே. திரும்பி வருவதற்கு பணம் இல்லா விட்டால், கடன் சொல்லலாம். ஆனால் இந்தியா போவதற்கு மட்டும், பணமில்லாத யாரையும் ஏற்றிச் சென்றதாக நான் அறியவில்லை.

நிலா வெளிச்சம் கூட இல்லாத கும்மிருட்டு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. கடலும் எப்போதும் அமைதியாக இருப்பதில்லை. கடல் கொந்தளிப்பும், ஆளுயர எழும் அலைகளும் சிறிய படகை கவித்து விடும். நாங்கள் சென்ற படகு ஆழ்கடலில் பயணம் செய்வதற்கு உகந்ததா, அன்றில் திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்ததா தெரியவில்லை. திடீரென படகுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. படகில் எங்கோ ஓட்டை, அல்லது வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். எம்மைச் சுற்றி கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல ஊறிக் கொண்டிருந்த கடல் நீர், முழங்காலளவு மட்டத்திற்கு வந்து விட்டது. படகில் இருந்த இளம் வயது ஆண்கள் வாளிகளால் தண்ணீரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தனர். எவ்வளவு தண்ணீரை வாரி இறைத்தாலும், நீர் மட்டம் குறைவதாகத் தெரியவில்லை.

சுமார் மூன்று, நான்கு மணி நேரமாக கடலோடு போராடிக் கொண்டிருந்தோம். இது போன்ற அனுபவங்களைப் பெற்ற படகோட்டிகளும் அன்று நம்பிக்கை இழந்து விட்டார்கள். உதவிக்கு யாரும் வராவிட்டால், படகு மூழ்கிடும் அபாயம் காணப்பட்டது. பயணிகள் எல்லோரும் இஷ்ட தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். நாங்கள் இன்னும் இலங்கை கடல் எல்லைக்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதால் மேலதிக கிலி பிடித்தாட்டியது. ஒரு வேளை இலங்கை கடற்படை எம்மை கண்டு விட்டால், முதலில் சுட்டு விட்டுத் தான் விசாரிப்பார்கள். வெகு தூரத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்களின் வெளிச்சம் தெரிந்தது. இருப்பினும், தூரத்தில் இருட்டில் தத்தளிக்கும் சிறிய படகை அவர்களால் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது, என்று படகோட்டிகள் ஆறுதல் சொன்னார்கள்.

படகோட்டிகளும், பயணிகளும் நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். அன்று கடலில் ஜலசமாதியாகி விடுவோம் என்றே பலரும் நினைத்தார்கள். தண்ணீரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் மட்டும் விடா முயற்சியுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே பொழுது விடிந்து விட்டது. ஒருவாறு இந்திய கடல் எல்லையை அண்மித்து விட்டோம். தூரத்தில் இந்திய மீனவர்களின் மிகப்பெரிய ட்ரோலர் படகுகள் தென்பட்டன. தூரத்தில் எமது சைகையை கண்ணுற்று ஒரு இந்தியப் படகு எம்மருகே வந்தது. இந்திய மீனவர்கள் எம்மை தமது படகில் ஏற்றிக் கொண்டனர். நாம் வந்த படகை ஒட்டி வந்த படகோட்டிகள், அதனை நடுக்கடலில் கைவிட வேண்டியேற்பட்டது. படகில் இருந்த தமிழக மீனவர்கள், தாம் பிடித்து வைத்திருந்த இறால்களை புகை போக்கியில் சுட்டு உண்ணத் தந்தார்கள். சில மணி நேரத்தில் இராமேஸ்வரம் கரையில் கொண்டு சென்று இறக்கி விட்டார்கள்.

இராமேஸ்வரம் கடற்கரையில் இறக்கியவுடன், அகதிகளை பதியும் காரியாலயம் உள்ள திசையைக் காட்டி நடக்கச் சொன்னார்கள். இலங்கையில் இருந்து எடுத்து வந்த உடமையை கையில் பிடித்துக் கொண்டு, வெறுங்காலுடன் கடற்கரை மணலில் ஓட்டமும், நடையுமாக சென்றோம். சில நிமிடங்களில், சேற்று மணலில் காலைப் புதைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கீழே குனிந்து பார்த்தால், பாதங்களில் மனித மலம் அப்பிக் கொண்டிருந்தது. அந்தக் கடற்கரையில் எந்தப் பக்கம் கால் வைத்தாலும், மலத்தில் மிதிக்காமல் போக முடியவில்லை. சுமார் இரண்டு கி.மி. தூரமாவது நடந்து சென்று, அகதிகளைப் பதியும் அலுவலகத்தினுள் நுழைந்த பின்னர் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அங்கிருந்த அதிகாரிகள் முதலில் எமது பெயர், விபரங்களை பதியும் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தனர். இலங்கைக் கடற்கரையில் இருந்து கிளம்பிய நேரம் முதல் எதுவும் சாப்பிடவில்லை. கடலில் போராடிக் கொண்டிருந்த நேரம் மறந்திருந்த பசி இப்போது வயிற்றைக் கிள்ளியது.

இராமேஸ்வரத்தில் யாத்திரீகர் மடம் ஒன்றில் தங்க வைத்தார்கள். அங்கேயே குளிக்கும் வசதியும், உணவும் கிடைத்தது. முதல் முழுவதும் கண் விழித்து பாக்கு நீரிணையை கடந்த களைப்பு, அன்றிரவு நிம்மதியாக உறங்க முடிந்தது. இருப்பினும் ஊரை விட்டு, உறவுகளை விட்டு வெகு தூரம் வந்து விட்ட உணர்வு, நெஞ்சை வருடியது. எல்லோர் மனதிலும் இனம் புரியாத சோகம் கவிந்து கொண்டிருந்தது. மறு பக்கம், இனி வரும் நாட்களை உயிரச்சம் இன்றி நிம்மதியாக கழிக்கலாம் என்றும் ஆறுதல் கூறிக் கொண்டனர். நாம் தங்கியிருந்த மடத்தில், வேறு படகுகளில் வந்த அகதிகளும் தங்கியிருந்தனர். எல்லோரையும் நாளை ரயிலில் ஏற்றி மண்டபம் முகாமுக்கு அனுப்புவார்கள் என்று பேசிக் கொண்டனர். மண்டபம் முகாமில் வைத்து தான், தமிழ் நாட்டில் எந்த மூலையில் குடியிருத்துவது என்று தீர்மானிக்கப்படும். ஒரே குடும்பமாக பதிந்து கொண்டவர்களை தவிர, பிறரை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ராமேஸ்வரம் ரயில் நிலையம். மண்டபம் செல்லவிருக்கும் அகதிகள் அனைவரையும் ரயிலில் ஏற்றினார்கள். குறைந்தது ஒரு பெட்டியிலாவது இராமேஸ்வரத்தில் என்னோடு ஒன்றாக தங்கியிருந்த அகதிகள் ஏறிக்கொண்டனர். ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மற்ற பெட்டிகளிலும் ஈழத்து அகதிகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். இராமேஸ்வரம் தீவு பெரியது என்பதால், ஒரு முனையில் இருந்து மறு முனை செல்வதற்குள் பல தரிப்பிடங்களில் ரயில் நின்றது. தங்கச்சி மடம் என்ற ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் குறைந்தது ஒரு மணி நேரமாவது தாமதித்து. சில பயணிகள் வெளியே இறங்கி தண்டவாளத்திற்கு அருகில் ஓய்வெடுத்தார்கள். திடீரென சில இளைஞர்கள் இன்னொரு பெட்டியில் இருந்து எமது பெட்டிக்கு வந்து, எம்மோடு பேச்சுக் கொடுத்தார்கள். அவர்களைப் பார்த்தால், நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் ஈழத்து இளைஞர்கள் போலத் தோன்றியது. "நீங்கள் புதிதாக வந்த அகதிகளா? உங்கள் ஊரில் இப்போது என்ன நடக்கிறது?" சாதாரண சுகம் விசாரிப்புகளை தாண்டி, அரசியல் கேள்விகள் எழுந்தவுடன் எமது மனதுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. யார் இவர்கள்? இவர்களுக்கு என்ன வேண்டும்?

(தொடரும்)