Showing posts with label அகதி முகாம். Show all posts
Showing posts with label அகதி முகாம். Show all posts

Wednesday, August 17, 2016

அவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக்கும் வன்கொடுமைகள்


அகதிகள் தமது தாயகத்தில்  நடக்கும் வன்கொடுமைகளுக்கு அஞ்சி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆனால், புகலிடம் கொடுக்கும் நாடுகளே வன்கொடுமையில் ஈடுபட்டால் அகதிகள் யாரிடம் முறையிட முடியும்? 

கடந்த பத்தாண்டு காலத்திற்குள், ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் சென்றுள்ளனர். தமிழர்கள் மட்டுமல்லாது, ஈரானியர், ஈராக்கியர், ஆப்கானியர், ஆப்பிரிக்கர் என்று பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் அவுஸ்திரேலிய அரசு நாட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக அகதிகளை தொலைதூர தீவுகளில் உள்ள தடுப்புமுகாம்களில் தங்க வைக்கின்றது.

நவுரு, மானுஸ் ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் உள்ளன. நவுரு தீவு ஒரு தனியான தேசம். மானுஸ் தீவு பாப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமானது. சில தினங்களுக்கு முன்னர், மானுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை பறிக்கின்றது என்று, பாப்புவா நியூகினியாவில் வழக்குப் போடப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்மையில் அது மனித உரிமை மீறல் தான் என்பதை ஏற்றுக் கொண்டு தடுப்பு முகாமை மூடி விட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

பாபுவா நியூகினியா அரசும், அவுஸ்திரேலிய அரசும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தன. ஆனால், அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும், அவர்கள் பாபுவா நியூகினியாவில் தொடர்ந்தும் தங்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அகதிகளை பராமரிக்கும் செலவுகளை பொறுப்பேற்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.

ஆனால், நவுரு தீவில் நிலைமை பல மடங்கு மோசமானது. அவுஸ்திரேலிய நிதியுதவியில் பெரிதும் தங்கியிருக்கும் நவுரு அரசு, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதில்லை. வெளியாரை அனுமதிக்காத படியால், முகாம்களுக்குள் என்ன நடக்கின்றது என்ற தகவல் வெளியுலகை அடைவதில்லை. அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஒருவர், இரகசியமாக சென்று முகாமில் வாழும் அகதிகளை சந்தித்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் உலகை உலுக்கின.

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழும் அகதிகள், ஒரு போர் நடக்கும் நாட்டிற்குள் சிக்கிக் கொண்ட மக்களைப் போன்று, கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே சிலர் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அல்லது அது குறித்து யோசித்துள்ளனர். தான் சந்தித்த ஒன்பது வயது சிறுவன் கூட தற்கொலை செய்ய எண்ணியதாக, சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்வலர் தெரிவித்தார். அந்தளவுக்கு, அனேகமாக எல்லா அகதிகளும், ஆண், பெண், சிறுவர் வேறுபாடின்றி மன உளைச்சலால் வருந்துகின்றனர். 

நவுரு தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு. அதனால் நோய் வாய்ப்பட்டவர்கள் கடுமையாக சுகவீனமடைவது மாத்திரமல்ல, யாராலும் பராமரிக்கப் படாமல் கைவிடப் படுகின்றனர். கழிவறைகள் குறைவாகவும், நிலங்கள் அசுத்தமாகவும் காணப்படுகின்றன. சவர்க்காரம் கிடைப்பதில்லை. 

மேலும் பாலியல் அத்துமீறல்களும் தாராளமாக நடக்கின்றன.  குறிப்பாக பெண்கள் முகாமுக்கு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். நவுரு ஆண்களினால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அகதிகள் வேட்டையாடப் படும் மிருகங்கள் போன்று மனிதாபிமற்ற முறையில் நடத்தப் படுகின்றனர்.

உண்மையில், முகாம்களில் நடக்கும் கொடுமைகள் யாவும், அவுஸ்திரேலிய, நவுரு அரசுக்களின் மறைமுக அங்கீகாரத்துடன் நடக்கின்றன. அதனால் யாரிடமும் முறையிட முடியாத நிலையில், அகதிகள் பலர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதனால் தமக்குத் தாமே கத்தியால் கீறி காயமேற்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் வாயை கம்பியால் தைத்துக் கொள்கிறார்கள்.

நவுரு தீவில் உள்ள தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. முகாம் கட்டப்பட்டதில் இருந்து, பராமரிப்பது வரையில் அவுஸ்திரேலிய நிதியில் தான் எல்லாம் நடக்கிறது. 

காவலாளிகள் போன்றவர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அவுஸ்திரேலிய அரசின் நிதியில் தான் இயங்குகின்றன. இதை விட, அவுஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்கின்றனர். நவுரு அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து இயங்குகின்றனர். ஆகவே, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


மேலதிக தகவல்களுக்கு:
Life in Nauru detention: a dark, wretched Truman Show without the cameras
'This is critical': 103 Nauru and Manus staff speak out – their letter in full
Documenten gelekt over misstanden Australisch opvangcentrum

Friday, April 08, 2016

கிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கிடைத்திருக்கும்!

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் அகதி முகாமுக்குள் தஞ்சம் அடைந்த புதிதில், அடிக்கடி அல்லேலூயா சபைக் காரர்கள் வந்து போவார்கள். நாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தங்கள் பிரசங்கத்தை கேட்குமாறு சொல்வார்கள். பைபிளை உயர்த்திக் காட்டி ஜெபித்து விட்டு, பிரசங்கமும் செய்து விட்டுப் போவார்கள். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே, எப்படியோ சில ஜீவன்களை மதம் மாற்றி விட்டார்கள்.

 புதிய கிறிஸ்தவர்கள் பைபிளும் கையுமாக வந்து எமக்கு புத்தி சொல்வார்கள்: "இது கிறிஸ்தவர்களின் நாடு... இங்கே கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தான் முறையாகும்..."  தாங்கள் இப்போது கிறிஸ்தவராக மதம் மாறி விட்டதால், இலகுவாக வதிவிட அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பினார்கள்.

இன்னொரு முகாமில் எனக்கேற்பட்ட அனுபவம் இது. அகதிகள் விடயத்தில் அலசி ஆராயும் கிரிமினல் மூளை கொண்ட நண்பன் ஒருவன் இருந்தான். இந்துவாகப் பிறந்து விட்டதால் தனது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு  வந்து விட்டது. "ச்சே... இந்த வீணாப் போன புலிகள் கிறிஸ்தவ ஈழம் கேட்டிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டான்.

திடீரென ஒரு யோசனை சொன்னான். "வடக்கு கிழக்கில் கிறிஸ்தவ தமிழர்களுக்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் இருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுவோம். அதற்காக துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து வைத்திருப்போம். அவற்றை ஆதாரமாகக் காட்டுவோம்."

நல்ல வேளை, அந்த நண்பனின் திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. அப்படியே எடுத்துக் காட்டி இருந்தாலும் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஈழத்தில் உண்மையிலேயே கிறிஸ்தவ ஆயுதக் குழு இருந்திருந்தால், அரசும், புலிகளும் சேர்ந்தே அதை அழித்திருப்பார்கள். 

இதை நான் இங்கே நினைவுகூரக் காரணம், இப்போதும் ஐரோப்பா கிறிஸ்தவ அகதிகளை மட்டுமே வரவேற்கும் என்று நம்பும் அப்பாவிகள் இருக்கிறார்கள். "இது நம்ம நாடு!" என்று சட்டைக் காலரை உயர்த்தி பெருமைப்படும் தமிழ் கிறிஸ்தவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஐரோப்பாவில் இருந்து கொண்டு சோஷலிசம் பேசினால், "ஏன் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரவில்லை?" என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களது புத்திசாலித்தனத்தை அவர்களே மெச்சிக் கொள்ளட்டும்.

அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், "இந்துக்கள் இந்தியாவிலோ, நேபாளத்திலோ தான் அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்? தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக ஐரோப்பிய மொழிகளை பேசும் வேற்றினத்தவரின் நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்?"

"வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன், சோஷலிசத்திற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை" என்று இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் ஏராளம். அமெரிக்க தொழிலாளர்கள் தான், எட்டு மணி நேர வேலைக்காக இரத்தம் சிந்திப் போராடி, மேதினத்தை உலகிற்கு கொடுத்தார்கள். 

அமெரிக்க சோஷலிச பெண் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் பலன் தான் மார்ச் 8 ல் வரும் மகளிர் தினம்.  பிரிட்டனில் கம்யூனிசப் பெண்கள் அமைப்பு நடத்திய ஆயுதப் போராட்டத்தினால் கிடைத்த பலன் தான் பெண்களுக்கான வாக்குரிமை. 

உலக வரலாற்றில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் வெடித்தது. முதன் முதலாக பிரிட்டனில் தான் சோஷலிசத்திற்கான அரசியல் அமைப்பு உதயமானது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

பிரச்சினை என்னவென்றால், இந்த உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நூறு தடவைகள் இடித்துரைத்தாலும் துளி கூட  மண்டையில் ஏறாது. எத்தனை தடவை புரிய வைத்தாலும் புரியாத மாதிரி நடித்துக் கொண்டிருப்பார்கள்.  நாய் வாலை நிமிர்த்த முடியாது. மேட்டுக்குடியை திருத்த முடியாது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகள், எமது நாடுகளை காலனிய அடிமைகளாக வைத்திருந்தன. தற்போதும் நவ காலனிய சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றன. அது தான் அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான அடிப்படைக் காரணம். யுத்தம், மனித உரிமை மீறல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், அது கடந்த கால பிணைப்பை நினைவு படுத்துகின்றது. சோஷலிசம் பேசினால் சோஷலிச நாடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறும் புத்திசாலிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா?

எதனால் நாங்கள் இப்போதும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கிறோம், பேசுகின்றோம்? எதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் தமிழர்கள் பெரும்பான்மையாக குடியேறினார்கள்? பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசும் அல்ஜீரியர்களும், மொரோக்கர்களும் எதற்காக பிரான்சுக்கு சென்றார்கள்? ஸ்பானிஷ் பேசும் லத்தின் அமெரிக்க அகதிகள் எதற்காக ஸ்பெயின் சென்றார்கள்?

அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு காலனிய கால பிணைப்பு முக்கியமானது. அது மட்டும் ஒரேயொரு காரணம் அல்ல. மேற்கத்திய நாடுகள் தாராள வாத கொள்கையை பின்பற்றும் ஜனநாயக நாடுகளாக காட்டிக் கொள்ள விரும்புகின்றன.

அதன் அர்த்தம், ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கொள்கையை பின்பற்றினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை காரணமாக காட்டி நிராகரித்தால், அது பாரபட்சமான கொள்கையாக கருதப்படும். அதற்குப் பிறகு உலகத்திற்கு மனித உரிமைகள் பற்றி வகுப்பெடுக்க முடியாது. 

அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் போலந்து, ஸ்லாவாக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகள், முஸ்லிம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தன. அந்த நாடுகள் இந்த நிராகரிப்புக்கு பதிலாக ஆணித்தரமான காரணம் ஒன்றை தெரிவித்திருந்தன: "கிழக்கு ஐரோப்பிய நாடுகள், எந்தக் காலத்திலும் ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ காலனிகளை வைத்திருக்கவில்லை."

ஆகவே, இது காலனித்துவ கடந்த காலம் தொடர்பான பிரச்சினை. மேற்கத்திய நாடுகளுக்கும், முன்னாள் காலனிய நாடுகளுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் அவற்றின் தலையீடு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 

முதலில் நீங்கள் காலனிய கடந்த காலம் காரணமாக இன்னமும் தொடரும் இனப் பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டு வாருங்கள். அதற்குப் பிறகு சோஷலிசம் பேசலாமா, சோஷலிச நாடுகளுக்கு போகலாமா என்று கேள்வி கேட்கலாம். 

சோஷலிசம் பேசினால், நீங்கள் எந்தெந்த சோஷலிச நாடுகளுக்கு போகச் சொல்லி சொல்கிறீர்களோ, அவை பெரும்பாலும் காலனிய அடிமை நாடுகளாக இருந்துள்ளன. அவை மேற்கத்திய காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள். 

ஆதாரம் வேண்டுமா?
சீனா: பிரிட்டிஷ் காலனி.
வியட்நாம்: பிரெஞ்சுக் காலனி.
கியூபா: ஸ்பானிஷ் காலனி.
வட கொரியா : ஜப்பானிய காலனி.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்....

இப்போது சொல்லுங்கள். உங்களது பிரச்சினை என்ன? நீங்கள் அடிமைகளா அல்லது சுதந்திரமான மனிதர்களா? நவ காலனிய ஆதிக்கத்தின் கீழ், மேற்கத்திய காலனிய எஜமானின் காலை நக்கிப் பிழைக்கும் அடிமை வாழ்வு சிறந்ததா? அல்லது சுதந்திரமாக எதிர்த்து நிற்கும் சோஷலிச மக்கள் குடியரசு சிறந்ததா? 

Saturday, October 17, 2015

அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன?


தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.

ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.

மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.

"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.
(பார்க்க:

பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள். 

பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.

பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.

பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.

முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)

அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.

இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.

சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.


மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.

அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.

Monday, September 07, 2015

முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான வலதுசாரி முட்டாள்களின் பிரச்சாரங்கள்


சிரிய அகதிகளை பொறுப்பேற்கும் நாடுகள் தொடர்பாக, வலதுசாரிகள் ஒரு முக்கியமான நாட்டை மறைப்பதைக் கவனித்தீர்களா? எதற்காக "முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை?" என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை! அதிசயம்! அதிசயம்!! அதிசயம்!!! வலதுசாரிகளின் (போலி) "மனிதாபிமான உணர்ச்சி" மெய்சிலிர்க்க வைக்கிறது.

இத்தனைக்கும் இஸ்ரேல் சிரியாவின் எல்லையில் உள்ள அயல் நாடு. "மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு" என்று, அடிக்கடி தற்பெருமை அடிக்கும் நாடு. முன்பொருதடவை, போரில் காயமடைந்த, இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த நாடு. அது மட்டுமல்ல, ஏற்கனவே ஆயிரக் கணக்கான சிரிய பிரஜைகள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.

இத்தனை "பெருமைகளுக்குரிய" இஸ்ரேல், எதற்காக ஒரு சிரிய அகதியை கூட ஏற்றுக் கொள்ளவில்லை? "ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்" என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே? அது எப்படி?

"இலங்கையில் இருந்து ஐரோப்பா செல்லும் அகதிகள் எல்லோரும் சிங்களவர்கள்...!" என்று நினைத்துக் கொள்வது எத்தனை அபத்தமானது? அது போன்றது தான், "சிரிய அகதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்" என்ற கதையாடல்களும். அரசியல் விமர்சனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, வலதுசாரிகள் தமது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய அபத்தக் கதையாடல்களுக்குப் பின்னால், ஐரோப்பிய அரசுகள் சாதுரியமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியும். அகதிகள் பிரச்சினை இன்றைக்கோ, நாளைக்கோ முடியப் போவதில்லை. உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கும் வரையில், அகதிகளும் ஐரோப்பாவுக்கு வந்து கொண்டிருப்பார்கள்.

ஆகையினால், போர் நடக்கும் "பிராந்தியத்தில்" அகதிகளை ஏற்றுக் கொள்ளும் திட்டம் ஒன்றை கொண்டு வர விரும்புகிறார்கள். "சிரிய அகதிகளை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற விமர்சனங்களும் அதையொட்டியே பரப்பப் படுகின்றன. அதன் அர்த்தம், உதாரணத்திற்கு, ஈழப்போர் காரணமாக தமிழ் அகதிகள் வெளியேறினால், அயலில் உள்ள "இந்து நாடான" இந்தியா தான் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் "பிராந்தியத்தில்" அகதிகளைப் பொறுப்பேற்கும் திட்டம்.

எதிர்காலத்தில் அகதிகளை ஐரோப்பாவுக்கு வர விடாமல் தடுப்பதற்காக பல திட்டங்கள் தீட்டப் பட்டு வருகின்றன. உள்நாட்டுப் போர்களை தூண்டி விட்டு, ஆயுத விற்பனை மூலம் இலாபம் சம்பாதிக்கும் மேற்கு ஐரோப்பா, அதன் விளைவாக உருவாகும் அகதிகளை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஈழம் முதல் சிரியா வரையில், அது தான் உலக யதார்த்தம். அப்பாவிப் பொது மக்கள், வலதுசாரிகளின் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்களுக்கு பலியாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கடந்த இருபது வருடங்களாக ஐரோப்பாவில் வாழ்கிறேன். இங்கே ஷரியா சட்டம் வேண்டுமென்று கோரும் முஸ்லிம் அகதி யாரையும் நான் காணவில்லை! வலதுசாரி முட்டாள்களின், இனவெறியை தூண்டும் வதந்திகளை நம்பாதீர்கள்.

சிரிய அகதிகளின் வருகைக்கு எதிராக, வலதுசாரிகள் செய்யும் இனவெறிப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: "முஸ்லிம் அகதிகளை ஐரோப்பாவுக்குள் விட்டால், அவர்கள் அங்கேயும் ஷரியா சட்டம் கொண்டு வரச் சொல்லிக் கேட்பார்கள்...!" என்பது வலதுசாரிகளின் பொய்ப் பரப்புரைகளில் ஒன்று.

"தமிழ் அகதிகளை ஐரோப்பாவுக்குள் விட்டல், அவர்கள் அங்கேயும் ஈழம் கேட்பார்கள்...!" என்று சொல்வதைப் போன்ற அபத்தம் இது. (உண்மையிலேயே ஐரோப்பிய வலதுசாரிகள் அப்படியும் கதைக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு தெரியாது.)

நான் குறைந்தது ஐந்து வருடங்களாவது, பல்வேறு ஊர்களில் இருந்த அகதி முகாம்களில் வசித்திருக்கிறேன். பெரும்பான்மையான அகதிகள், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, சூடான், போன்ற "முஸ்லிம்" நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அகதிகள் தான்.

அந்த முஸ்லிம் அகதிகள் எல்லோருடைய நோக்கமும், தனிப்பட்ட வாழ்க்கை வசதிகள் பற்றியதாகவே இருக்கின்றன. - எப்போது எங்களுக்கு வதிவிட அனுமதி கிடைக்கும்? - எங்கே வேலை செய்யலாம்? - என்ன வேலை செய்யலாம்? - எவ்வளவு சம்பாதிக்கலாம்? - இந்த நாட்டு மொழியை எப்படி கற்றுக் கொள்ளலாம்? - பிள்ளைகளை எங்கே படிக்க வைக்கலாம்? - பிள்ளைகளின் எதிர்காலம் நல்ல படியாக அமையுமா? இவை மட்டும் தான் அவர்களது கவலைகள்.

பெரும்பாலான "முஸ்லிம் அகதிகளுக்கு" தங்களது நாட்டில் என்ன பிரச்சினை நடக்கிறது என்று கூட சொல்லத் தெரியாது. அரசியல் புரியாது. அரசியலில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை. இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன ஒன்று தான். தங்களதும், ஊரில் உள்ள உறவினர்களினதும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்த ஒரேயொரு "அரசியல்".

ஐரோப்பாவுக்கு வந்து அடைக்கலம் கோரிய முஸ்லிம் அகதிகளிடம் சென்று "ஷரியா சட்டம் வேண்டுமா?" என்று கேட்டால், செருப்பைக் கழற்றி அடிப்பார்கள். மனிதன் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப் படும் நேரத்தில்... "சரியா, பிழையா?" என்று கேட்டால் யாருக்குத் தான் எரிச்சல் வராது?

போங்கடா... நீங்களும் உங்கட ஷரியாவும்...!

Monday, September 29, 2014

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள்


ஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர். கெல்ன் (Köln, ஆங்கிலத்தில்: Cologne) நகருக்கு அருகில் உள்ள, பூர்பாஹ் (Burbach) எனும் கிராமத்தில் உள்ள அகதி முகாமில் நடந்த சித்திரவதைகள் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன. 

ஓர் அல்ஜீரிய அகதியின் தலையை, இரண்டு பாதுகாவலர்கள் காலில் போட்டு மிதிக்கும் காட்சிகள், ஊடகங்களில் காட்டப் பட்டன. அதன் பின்னர், ஜெர்மன் அகதி முகாம்களில் வாழும் அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது பற்றிய தகவல்கள், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் பட்டு வருகின்றன. இது வரையில், கைத்தொலைபேசியால் எடுத்த வீடியோவும், நிழற்படமும் வெளியாகி உள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதாக கூறிய பொலிஸ் தரப்பு பேச்சாளர், "ஜெர்மனியின் குவாந்தனமோ பே" என்று வர்ணித்தார். 

கெல்ன் நகரம் அமைந்துள்ள, நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், உள்ளூர் தொலைக்காட்சி சேவையான WDR, இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அகதிகள் துன்புறுத்தப் படுவதாக படுவதாக, வேறு இடங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்ததாக அறிவித்துள்ளது. எஸ்சென்  (Essen) நகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் அகதிகள், வன்முறைக்கு உள்ளான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

ஜெர்மனியில், அகதிகளாக வருவோர், முகாம்களில் தங்க வைக்கப் படுகின்றனர். குறைந்தது ஒரு வருடத்திற்கு, அகதிகள் வேலை செய்ய அனுமதி கிடையாது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பிரயாணம் செய்ய முடியாது. 

முந்திய காலங்களில், அகதிகளின் பராமரிப்பை அரசு பொறுப்பேற்று நடத்தி வந்தது. தற்போது, அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். முழுப் பொருளாதாரமும் தனியார்மயத்தை நோக்கி நகரும் பொழுது, அகதிகளை மட்டும் விட்டு வைப்பார்களா?

நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், "European Homecare" எனும் தனியார் நிறுவனம் பல அகதி முகாம்களை நிர்வகித்து வருகின்றது. அந்த நிறுவனம், முகாம் தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு, பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. 

முகாமில் பணி புரியும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், SKI எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் இரண்டு பாதுகாவலர்கள் தான், சித்திரவதை குற்றச்சாட்டில் சம்பந்தப் பட்டிருந்தனர். அவர்கள் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளனர். 

பூர்பார்க் முகாமில் சுமார் 700 அகதிகள் வசிக்கின்றனர். சித்திரவதை குற்றச்சாட்டு சம்பந்தமாக அவர்களில் பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருந்தாலும், சம்பந்தப் பட்ட பாதுகாவலர்கள் இனவெறியர்கள் என்பதை அரசாங்கம் மறுத்து வருகின்றது. 

சித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், "கடந்த காலங்களில் போதைவஸ்து பாவனை, வன்முறையில் ஈடுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக," பொலிஸ் தெரிவிக்கின்றது. "கிரிமினல்களை கடமையில் ஈடுபடுத்தும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்" என்று மாநில அரசின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 

சாதாரணமாக, ஒருவர் விமான நிலையத்தில் கழுவித் துடைக்கும் வேலை செய்வதற்கு விண்ணப்பித்தாலே, பொலிஸ் சான்றிதழ் இல்லாமல் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பாதுகாப்பு நிறுவனங்களில், ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றி, பொலிஸ் பதிவுகளில் ஆராயாமல் சேர்த்துக் கொள்வார்களா? 

அகதி முகாம்களில் நடக்கும் சித்திரவதை தொடர்பாக, ஜெர்மன் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளான die Linke மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க கொள்கைகளை விமர்சித்துப் பேசினார்கள். 

"அகதிகளை முகாம்களில் தங்க வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதாபிமானமற்றது. அதிகார துஸ்பிரயோகத்தை உருவாக்குகின்றது. முகாம்களுக்குப் பதிலாக, அகதிகள் தாம் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமையை வழங்க வேண்டும்." என்று die Linke பாராளுமன்ற உறுப்பினர் Bernd Riexinger தனது கருத்தைத் தெரிவித்தார்.


மேலதிக தகவல்களுக்கு:
Bezirksregierung kündigt Sicherheitsdienst
NRW-Innenminister fordert nach Gewaltvorfall in Asylbewerberheim Härte
Misshandlungen in Burbach: Die Fakten über Sicherheitsdienste in Flüchtlingsheimen

அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது தொடர்பான தொலைக்காட்சி செய்தி அறிக்கை (ஜெர்மன் மொழியில்):
  

Friday, May 16, 2014

தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை, அகதிக்கு மெய்யுரைக்க யாருமில்லை

அகதி முகாம் ஒன்றினுள், பல்லின அகதிகள் 
"சோஷலிச நாடுகளில், மக்களின் வாழ்க்கைத்தரம் நன்றாக இருந்தது என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். நீங்கள் எதற்காக சீனா, கியூபா மாதிரி கம்யூனிச நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழாமல், முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றீர்கள்?" என்று பல அறிவுஜீவிகள், என்னைப் பார்த்து கேட்கின்றனர். அப்படிக் கேள்வி கேட்டு விட்டு, தங்களது புத்திசாலித்தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

வாஸ்தவம் தான். நானும் அவர்கள் அளவிற்கு மெத்தப் படித்திருந்தால், "உலகில் முதலாளித்துவ நாடுகள், கம்யூனிச நாடுகள் என்றெல்லாம் இருக்கின்றன" என்று தெரிந்து வைத்திருப்பேன். அவர்கள் படித்த பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு நானும் சென்றிருந்தால், முதலாளித்துவ, சோஷலிச நாடுகளில் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்பதை அறிந்து வைத்திருந்திருப்பேன். என்ன செய்வது? நான் உலகப் பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன். அதனால் தான், அனுபவத்தின் மூலம், இந்த உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு சிறிது காலம் எடுத்தது.

என்னிடம் கேள்வி கேட்ட அறிவுஜீவிகள் பிறந்த நாட்டில் தான் நானும் பிறந்தேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் "தமிழனுக்கு தாய்நாடு இல்லை" என்பது மட்டும் தான். "உலகில் உள்ள எல்லா இனங்களுக்கும் ஒரு தாய்நாடு இருக்கிறது. ஆனால், தமிழனுக்கு மட்டும் இல்லை." என்று தான், நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். தமிழ் தேசியவாத அரசியல் ஆதிக்கம் செலுத்திய ஊரில் பிறந்து வளர்ந்த என்னிடம், வேறெந்த அரசியல் கொள்கையை எதிர்பார்க்கின்றீர்கள்?

ஒரு மேற்கத்திய நாட்டுக்கு அகதியாக சென்று புகலிடம் கோரும் வரையில், "உலகில் தமிழனுக்கு மட்டுமே பிரச்சினை இருக்கிறது." என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன். அகதி முகாம்களில் தமிழர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் நினைத்தேன். ஆனால், "தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் பல இனங்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது," என்பது, நான் புலம்பெயர்ந்த பின்னர் தான் தெரிந்தது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில், தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், முஸ்லிம்களும் இருந்தார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், ஈரான், துருக்கி, சூடான், சோமாலியா, எத்தியோப்பியா, சியாரா லியோன், ஆர்மீனியா, ரஷ்யா, யூகோஸ்லேவியா, பொஸ்னியா... இப்படி உலகின் பல பாகங்களில் இருந்தும் அகதிகள் வந்திருந்தார்கள். "அடடே... இவர்கள் எல்லோருக்கும் ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறதா?"

அப்போது தான், உலகில் தமிழனுக்கு மட்டுமல்ல, இன்னும் பல இனங்களுக்கும் இதே பிரச்சினை இருக்கின்றது என்பது, இந்த மர மண்டையில் உறைத்தது. ஊரில் வாழ்ந்த காலத்தில், இந்த உண்மை தெரியாமல் இருந்து விட்டேனே, என்று என் அறியாமையை சபித்துக் கொள்ள நேரிட்டது.

முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை, அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகள் தான் எனக்குச் சொன்னார்கள். அதற்குப் பிறகு தான், சோஷலிசம், கம்யூனிசம் என்பதற்கு அர்த்தம் என்னவென்று புரிந்தது.

உலகில் இப்படி எல்லாம் இருக்கிறது என்பதை, உங்களை மாதிரி பல்கலைக்கழக பட்டம் வாங்கிய அறிவுஜீவிகள் சொல்லிக் கொடுத்திருந்தால் தெரிந்திருக்கும். எங்களைப் போன்ற பாமர மக்கள், உலகம் முழுவதும் அகதியாக சென்று தான், இதை எல்லாம் அறிய வேண்டி இருக்கிறது.

தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை, 
அகதிக்கு மெய்யுரைக்க யாருமில்லை

Thursday, March 03, 2011

தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 3)
-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகள் பலரிடமும் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற ஏக்கம் குடிகொண்டிருந்த போதிலும், இந்திய அனுபவங்களையும் தம்மோடு சுமந்து செல்ல எண்ணினார்கள். அரசு கொடுக்கும் ஒரு பிடி அரிசியில், காய்கறி சேர்த்து சமைத்து உண்ணும் அகதி வாழ்வில் உல்லாசப் பயணத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தியா வந்தால், கோயில் பார்க்காமல் திரும்பக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இந்துக்களைப் பொறுத்த வரையில், இந்தியாவை தமது தாயகமாக கருதும் போக்கு தொன்று தொட்டு நிலவியது. இப்போதும் இலங்கை திரும்பிய முன்னாள் அகதிகள், தாம் இந்தியாவில் எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தோம், என்று கூறி அயலவரின் பொறாமையைக் கிளப்புவார்கள். எமது முகாமில் இருந்தும் இளைஞர்களின் குழு ஒன்று கோயில் பார்க்க கிளம்பியது. எனக்கு அப்போதும் சாமி, கோயில்களில் நம்பிக்கை இல்லாத போதிலும், ஊர் சுற்றக் கிளம்பினேன்.

பஸ் பயணத்திற்கு மட்டும் கையில் காசு வைத்திருக்க வேண்டும். ரயிலில் இலவசப் பிரயாணம் செய்யலாம் என்று கூறினார்கள். அது ஈழ அகதிகளுக்காக MGR வழங்கிய சலுகை என்றார்கள். (MGR அப்போதும் தமிழக முதலமைச்சராக இருந்தார்.) ரயிலில் டிக்கட் பரிசோதகர் வரும் போதெல்லாம், அகதி அட்டையைக் காட்டினால் போதும். தமிழ்நாடு மாநிலத்திற்குள், எந்த ரயிலிலும் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் ஏறி திருச்சி சென்றோம். அங்கிருந்த கோயில்கள் எல்லாம் பார்த்து விட்டு, அன்றிரவு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கினோம். மீண்டும் ரயில் ஏறி, நாம் வந்திறங்கிய இராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பி வந்தோம். வரும் வழியில் மறக்காமல் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தரிசித்தோம். நாம் சந்தித்த இந்திய தமிழர்கள், எங்களை "சிலோன் காரர்கள்" என்று அழைத்து உரையாடினார்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் சிலோன்காரர்கள் என்று தான் அழைத்து வந்தனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் மலையகத் தமிழரை "இந்தியத் தமிழர்கள்" என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர்களது பெயரும் சிலோன்காரர்கள் தான்.

எமது தமிழக சுற்றுப் பயணத்தின் பின்னர், இந்திய-இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 90 % சதவீதமான இலங்கை அகதிகள், அதற்கு முன்னர் இந்தியாவை பார்த்திராதவர்கள். இந்தியத் தமிழருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. இந்தியாவுடனான அவர்களது தொடர்பு முழுவதும், சினிமா, சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகவே பரிமாறப்பட்டன. பெரும்பாலும் பாமர மக்கள், தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போலத்தான் இந்தியா இருப்பதாக நம்பினார்கள். இந்தியா வந்த பின்னர், அவர்களது மாயைகள் யாவும் அகன்றன. பிரமாண்டமான கோயில்களைத் தவிர, இந்தியாவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறவாரம்பித்தனர்.

பொதுவாக இரண்டு சமூகங்களும், ஒன்றை மற்றொன்று தாழ்வாகக் கருதுவதை உணரக் கூடியதாகவிருந்தது. சில அகதி முகாம்களில், அதிகாரிகளின் திமிரான பேச்சு எரிச்சலூட்டியது. வசதிக் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதெல்லாம், ஒன்றில் புறக்கணித்தார்கள், அன்றில் வாயை மூடிக் கொள்ள சொன்னார்கள். "சிங்களவர்களால் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்த அரிய உயிரினத்தை வைத்துப் பராமரிப்பது," போலப் பேசினார்கள். இதனால் வெறுத்துப் போன அகதிகள், "யுத்தம் மட்டும் இல்லையென்றால், எமது ஊரில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்," என்று பேசவாரம்பித்தனர்.

மிகப்பெரிய இந்திய-இலங்கை முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுந்தது. அகதி முகாமில் கிடைக்கும் சொற்பத் தொகை வாழ்வதற்கு போதாது என்பதால், கூலி வேலை தேடவாரம்பித்தனர். இலங்கையில் இலவசக்கல்வி வாய்ப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் வரை படித்த ஏழை மாணவர்கள் கூட, கூலி வேலைக்கு சென்று வந்தனர். பட்டதாரிகள் கூட, இந்தியாவில் தமது பட்டங்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டனர். ஒரு ஈழ அகதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், எந்தவொரு நிறுவனமும் அவர்களுக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. மாநில, மத்திய அரசுகள் சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்தன. அகதிகள் கூலி வேலைக்கு செல்வதை மட்டும் தடை செய்யவில்லை. இதனால் உள்ளூர் முதலாளிகளும், ஒப்பந்தக்காரர்களும் வீதிகளை செப்பனிடும் வேலை, மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அகதிகளின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு இந்திய தொழிலாளிக்கு கொடுக்கும் சராசரி கூலியை விட குறைந்த அளவு ஊதியமாக வழங்கப்பட்டது.

ஈழ அகதிகள் என்றால் கடுமையாக வேலை வாங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. சில முதலாளிகள், அவர்களின் கையறுநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். மாதக் கணக்காக வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம், இந்தியத் தமிழ் முதலாளிகள் ஈழ அகதிகளின் உழைப்பை சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தனர். மறு பக்கம், தொழில் வாய்ப்பை இழந்த இந்தியத் தமிழ் தொழிலாளிகள் அதிருப்தி கொண்டனர். இந்தியாவில் கூலி வேலையாட்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை தலித் மக்கள். இவர்களது குடியிருப்புகளும் அகதி முகாம்களை அண்டியே காணப்பட்டன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முறுகல் நிலை, "இந்தியத் தமிழ்- இலங்கைத் தமிழ் முரண்பாடு" வளரக் காரணமாயிற்று. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஈழ அகதிகளை தம்மை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். சமூகங்களுக்கு இடையிலான சிறு சிறு சச்சரவுகளின் பொழுது, இது போன்ற உணர்வுகள் மேலெழுந்து வெளிப்படையாக பேசினார்கள். இதற்கிடையே வசதி படைத்த அல்லது மேல்நிலை சாதி இந்தியத் தமிழர்கள், அத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவுமற்று வாழ்ந்தனர்.

ஈழத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த அகதிகள் முகாமில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்திய வழக்கப்படி, ஈழ அகதிகளும் சாதி வாரியாக வகைப் படுத்தப் பட்டு பதியப்பட்டனர். அது ஒன்றும் கட்டாயமல்ல, எனக்குத் தெரிந்த பலர் படிவத்தில் சாதிப் பெயரை குறிப்பிடாமல் வெறுமையாக விட்டனர். சாதிப் பெயரை பதியும் நடைமுறை, இலங்கையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப் பட்டு விட்டது. (இன்று சிலர் இதைக் காட்டி ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.) ஆனால், கிராமங்கள் சாதி வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த சமூக அமைப்பைக் கொண்டிருந்தன. ஆகவே இந்தியா வந்த பின்னும் சாதிப் பெயரை பதிந்து கொள்வதில் பலருக்கு பிரச்சினை இருக்கவில்லை. மாறாக, இந்த சந்தர்ப்பத்தில் தமது சாதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை கண்டு கொண்டார்கள். தங்களை "வெள்ளாளர்களாக" பதிந்து கொண்டார்கள். இதனால் சாதிய படிநிலையில் உயர்ந்து விட்டதாக மனதளவில் திருப்தி கொண்டனர். யார் கண்டது? சில வருடங்களில் ஈழத்து சாதியமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படலாம்.

(தொடரும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்