Showing posts with label இலங்கை வரலாறு. Show all posts
Showing posts with label இலங்கை வரலாறு. Show all posts

Thursday, August 07, 2014

தமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு

யாழ்ப்பாணத்தில் டச்சு காலனிய படையினர் வந்திறங்கிய காட்சி 

ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. 

இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  

தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை.

ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.

தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும். 

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று.

பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர்.

ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.

ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள்.

காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.

இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை. 

யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை.

இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது.

இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது. 

யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன. 

தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது.

இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.

சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர்.

இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர்.

புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும்.

புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர்.

இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.

அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.

உசாத்துணை: 
1.Het VOC-bedrijf op Ceylon, Albert van den Belt
2.Zwartboek van Nederland overzee, Ewald van Vugt


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்
2.யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு
3.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்

Saturday, June 07, 2014

ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந்ததா?


இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், "வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்," என்று சிறிலங்கா அரசு கூறி வருகின்றது. 12 ஏப்ரல் 1971 அன்று, கொழும்பு நகரில் இருந்த வட கொரிய தூதரகம் இழுத்து மூடப் பட்டது. வட கொரிய தூதுவர் Hwang Yung Wu, மற்றும் 17 பணியாட்களும் உடனடியாக நாடுகடத்தப் பட்டனர். தூதரகத்தில் வேலை செய்த இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப் பட்டு, சில நாட்கள் தடுத்து வைக்கப் பட்டனர். 1970 ம் ஆண்டு தான், அன்று சிறிமாவோ ஆட்சியின் கீழிருந்த இலங்கை அரசு, வட கொரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குள் அந்த உறவை முறிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யை உருவாக்கிய ரோகன விஜேவீரவின் கொள்கை, பெருமளவு (சிங்கள) தேசியவாதக் கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது. வட கொரியாவின் அன்றைய ஆட்சியாளர் கிம் இல் சுங் கூட, ஒரு மிகத் தீவிரமான (கொரிய) தேசியவாதி. அந்த வகையில், வட கொரிய அரசுக்கும், ஜேவிபி க்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்தன. கிளர்ச்சியின் முடிவில், அரச படைகளினால் கைப்பற்றப் பட்ட ஜேவிபி முகாம்களில், வட கொரிய கொள்கைப் பரப்பு நூல்கள் கண்டெடுக்கப் பட்டதாக, இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அந்தக் காலத்தில், ஒரு கிளர்ச்சியை அடக்கும் அளவிற்கு, இலங்கை அரசிடம் ஆட்பலம், ஆயுத பலம் கிடையாது. இலங்கையில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி நடக்கிறது என்று கேள்விப் பட்டதும், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள், இலங்கைக்கு உதவுவதற்காக ஓடோடி வந்தன. எதிரெதிர் அணியில் இருந்த, அன்று பங்களாதேஷ் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து கொண்டு இலங்கைக்கு உதவின. மீண்டும் ஒரு தடவை, 2009 ம் ஆண்டு, புலிகள் அழிக்கப் பட்ட ஈழப்போரின் இறுதி யுத்தத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து, இலங்கை அரசுக்கு உதவின. யாருமே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை என்பது, இதிலிருந்து தெரிய வருகின்றது.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி இருந்தது. இலங்கையை சுற்றிய கடற் பகுதியில், இந்திய கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றின. அப்போது, ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த வட கொரிய ட்ரோலர் படகுகள், இந்திய கடற்படையினரிடம் அகப்பட்டன. இதனால், ஜேவிபிக்கு வட கொரியா அனுப்பிய  ஆயுத விநியோகம் வந்து சேரவில்லை. பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றிய, ஆயுதங்களை வைத்துக் கொண்டு மட்டுமே, ஜேவிபி அரச படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது.

ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழிப்பதற்கு, இந்தியப் படைகளும் களத்தில் நின்று உதவி செய்தன. அந்த அழித்தொழிப்பில், குறைந்தது பத்தாயிரம் இளைஞர்கள் கொல்லப் பட்டனர். (25000 என்று ஜேவிபி கூறுகின்றது.) சுமார் இருபதாயிரம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். உண்மையில், அன்றிருந்த ஆயுதமேந்திய ஜேவிபி உறுப்பினர்கள், மொத்தம் இரண்டாயிரம் தான் இருக்கும்.

71 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கு, போதியளவு மக்கள் ஆதரவு இல்லாதிருந்தமை காரணம் என்று நம்பப் படுகின்றது. இலங்கையின் இரண்டு பெரிய ஆளும் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தமக்குத் தெரிந்த ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை காட்டிக் கொடுத்தனர். தேர்தல் காலத்தில், இந்த இரண்டு கட்சிகளும் மிகத் தீவிரமாக ஒன்றையொன்று எதிர்த்து தாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இலங்கையில் ஒரு இடதுசாரி கிளர்ச்சி நடக்கிறது என்றதும், இரண்டு எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், அந்தக் கட்சிகளின் வர்க்க அபிமானம்.

அன்று, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய, தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரித்தன. "அன்றைய சிறிமாவோ அரசில் அமைச்சராக இருந்த கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற இடதுசாரி அமைச்சர்கள் தமிழர்களின் முதுகில் குத்தியதாக" இன்றைக்கும் பல தமிழ்த் தேசியவாதிகள் சொல்லிக் கொண்டு திரிகின்றனர். ஆனால், 71 ம் ஆண்டு, ஒரு டிராஸ்கிஸ்ட் கட்சி உறுப்பினரான, இதே கொல்வின் ஆர்.டி. சில்வா, அரச படைகள் ஜேவிபி கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்கியதை ஆதரித்து பேசினார். 

அப்போது, தமிழ் தேசியவாதிகள், இடதுசாரிகளுடன் கூட்டிச் சேர்ந்து கொண்டு, அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த சிங்கள மக்களின் முதுகில் குத்தினார்கள். இலங்கை வரலாறு முழுவதும், இப்படித் தான், எல்லா அரசியல் சக்திகளும், ஒருவர் முதுகில் மற்றவர், மாறி மாறி குத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், முதலாளிய வர்க்க நலன்களை பேணும் சிறிலங்கா அரசு இயந்திரம், தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. 

இலங்கையில் ஒரு சோஷலிசத்திற்கான வர்க்கப் புரட்சி நடக்குமானால், இன்று எதிரிகளாக காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். பொதுவான வர்க்க குணாம்சம், அவர்களை ஓரணியில் சேர்த்து விடும். முதலில் இரண்டு சிங்கள பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்தை ஆதரிக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து இராணுவ உதவி வழங்கும். இது கற்பனை அல்ல. ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட வரலாறு.

மேலதிக தகவல்களுக்கு: 

Tuesday, August 20, 2013

இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு



இலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் இரண்டறக் கலந்துள்ளனர். ஒருபுறம் சிங்கள இனவாதமும், மறுபுறம் தமிழ் இனவாதமும் உச்சத்தை அடைந்துள்ள இன்றைய காலத்தில், இந்தத் தகவல்கள் பலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதனை உறுதிப் படுத்தும் ஏராளமான சரித்திர, அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்துள்ளன.

புத்தளம், சிலாபம் பகுதியில் இன்றைக்கும் தமது ஆப்பிரிக்க வேர்களை இழக்காத சமூகம் ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களது உருவத் தோற்றம் மட்டுமல்ல, கலாச்சாரம், இசை கூட தனித்துவமானது. இது பற்றி, சில வருடங்களுக்கு முன்னர், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும், பிபிசி தமிழோசையும் ஆவணப் படங்களை தயாரித்திருந்தன. இவர்கள் இலங்கையை போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட மொசாம்பிக் நாட்டவரின் வம்சாவளியினராக இருக்கலாம். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், வேறிடத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களில் ஒரு சிறிய பிரிவினர் தான், தமது கலாச்சார வேர்களை இழப்பதில்லை. மிகுதிப்பேர் அந்த நாடுகளில் இருக்கும் பெரும்பான்மை சமூகங்களுடன் கலந்து விடுவார்கள். அது இயற்கை. ஆகவே, இந்த மொசாம்பிக் ஆப்பிரிக்க வம்சாவளியினரின் சகோதரர்களும், திருமண உறவு காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிங்களத்தை, அல்லது தமிழை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவர்களை நாங்கள் சிங்களவர் என்றோ, அல்லது தமிழர் என்றோ, பேசும் மொழியை வைத்து வகைப் படுத்துகின்றோம். 

500 வருடங்களுக்கு முன்னர், போர்த்துகேய காலனிய ஆட்சிக் காலத்தில் மட்டுமே ஆப்பிரிக்கர்கள் இலங்கையில் குடியேறி இருக்கிறார்கள் என்று கூற முடியாது. அதற்கு முன்னரே, சுமார் 2000 வருடங்களுக்கு முன்னரே வட இலங்கையில் ஆப்பிரிக்கர்கள் குடியேறி உள்ளனர். அதற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. யாழ் நகருக்கு அருகில் உள்ள வேலணை தீவில், அல்லைப்பிட்டி என்னும் ஊரில் கிணறு தோண்டும் நேரம், சில ஆப்பிரிக்க சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டன. சந்தேகத்திற்கிடமின்றி, அந்த சிற்பங்கள் ஆப்பிரிக்க கறுப்பினத்தவரின் முகத்தை ஒத்துள்ளன. இந்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், 2000 வருட கால பழமையானவை. இதன் மூலம், ஆப்பிரிக்கர்கள் அந்தப்  பிரதேசத்தில் வாழ்ந்துள்ளமை உறுதியாகின்றது. 

யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள், ஆப்பிரிக்கர்களை கூலிப் படையாக வைத்திருந்துள்ளனர். அந்தக் காலங்களில் தேசிய இராணுவம் கிடையாது. மன்னர்கள் பல்லின வீரர்களை கொண்ட கூலிப் படைகளை வைத்திருப்பது சர்வசாதாரணம். "யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் தமிழர்களாக இருந்தால், அவர்களின் கீழ் சேவை செய்த படையிலும், தமிழர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்" என்று நினைப்பது அறியாமை. எல்லாளனின் படையில் சிங்கள வீரர்களும், துட்ட கைமுனுவின் படையில் தமிழ் வீரர்களும் இருந்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் தேசியவாத, இனவாத எண்ணம் துளியும் இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்  படுத்தப் பட்ட அரசியல் கோட்பாடுகள் ஆகும்.

10 ம் அல்லது 14 ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட வையாபாடல் என்ற நூலில், ஆப்பிரிக்க கூலிப் படையினர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வையாபாடல் ஆப்பிரிக்கர்களை "பப்பராவர்" என்ற பெயரில் அழைக்கின்றது. ஆப்பிரிக்க கறுப்பர்களைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல்லான "பப்பராவர்" இருக்கும் பொழுது, நாங்கள் இன்றைக்கும் ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய "நீக்ரோக்கள், காப்பிலிகள், ஆப்பிரிக்கர்கள்" போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இது எமது ஐரோப்பிய மையவாத சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது. தீவிர தமிழ்தேசியவாதிகள் பலர் கூட, நடைமுறையில் ஐரோப்பிய மையவாதிகளாக உள்ளனர். 

வட இலங்கையில் சில ஊர்களுக்கு "பப்பரப் பிட்டி" என்ற பெயர் உள்ளது. அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்ட வேலணைத் தீவில் மட்டுமல்லாது, ஆணையிறவுக்கு அருகில், சுண்டிக்குளம் பகுதியில் ஒரு ஊருக்கு பப்பரப் பிட்டி என்ற பெயர் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளது. இதிலிருந்து, ஆப்பிரிக்கர்கள், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது,  முல்லைத்தீவு மாவட்டத்திலும் குடியேறி இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு காலத்தில், நயினா தீவுக்கு "பப்பரத் தீவு" என்ற பெயர் இருந்தது. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு மேற்கே உள்ள, ஊர்காவற்துறை துறைமுகம் ஊடாகவே ஆப்பிரிக்க குடியேற்றம் நடந்திருக்க வேண்டும். துறைமுகத்தை குறிக்கும் பழைய தமிழ்ச் சொல்லான "ஊருத்துறை" மருவி, ஊர்காவற்துறை ஆகியிருக்கிறது. போர்த்துக்கேயர்கள் துறைமுகத்தை தமது மொழியில் "Cais" என்று அழைத்தனர். டச்சுக்காரர்கள் அதனை Kayts என்று உச்சரித்தார்கள். அந்தப் பெயரே ஆங்கில மொழியிலும் நிலைத்து விட்டது. 

பாக்கு நீரிணைக்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை, பண்டைய காலத்தில் மிகவும் சுறுசுறுப்பான சர்வதேச துறைமுகமாக திகழ்ந்தது. அங்கே ஆப்பிரிக்காவில் இருந்தும் வணிகக் கப்பல்கள் வந்து சென்றுள்ளன. 14 ம்  நூற்றாண்டு வரையிலும் கூட, யாழ்ப்பாணத்திற்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. மொரோக்கோ நாட்டை சேர்ந்த பிரபல யாத்திரீகரான இபுன் பதூதா, இலங்கை வந்து யாழ்ப்பாண மன்னனின் விருந்தினராக தங்கி இருந்திருக்கிறார். அன்று இபுன் பதூதா எழுதிய பயணக் குறிப்புகளை இன்றைக்கும் வாசிக்கலாம். 

இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்களும், பண்டைய கால சர்வதேச வர்த்தகம் காரணமாக வந்திருக்கலாம். 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் காலனிப் படுத்தும் வரையில், "ஆப்பிரிக்கர்கள் நாகரீகமடையவில்லை" என்ற தவறான கருத்தை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் பரப்பி வந்தனர். இந்த ஐரோப்பிய மையவாத சிந்தனையை, யாழ்ப்பாணத்தில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் தகர்த்துள்ளனர். இன்றைக்குள்ள ஈழத் தமிழர்கள், ஆப்பிரிக்காவுடனான தமது பண்டைய தொடர்புகளை முற்றாக மறந்து விட்டார்கள். அவர்கள் ஆங்கிலேயர்கள் பரப்பிய கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பது மிகப் பெரிய வரலாற்று சோகம். 

ஆப்பிரிக்க வணிகக் கப்பல்கள், எத்தியோப்பியா போன்ற கிழக்காபிரிக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம். அதேநேரம், மொரோக்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்தும் வணிகக் கப்பல்கள் வந்துள்ளன. மொரோக்கர்களை, போர்த்துக்கேயர்கள் "மூர்கள்" என்று அழைத்தனர். இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு மூர்கள் என்ற பெயருமுண்டு. 2000 வருடங்களுக்கு முன்னரே, அதாவது இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, மொரோக்கோ நாட்டு கடலோடிகள் மாலை தீவுகள், கேரளா, இலங்கை ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். மறைந்த ஞானிகளின் சமாதிகளை தர்க்கா என்ற புனித ஸ்தலமாக வழிபடும் முறை மொரோக்கோவில் தோன்றியது. இன்றைக்கும் அந்த நாட்டில், பாரம்பரிய இஸ்லாமிய மத வழிபாடாக கருதப் படுகின்றது. இன்றைக்கும் இலங்கை, மாலை தீவுகள், தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் தர்கா வழிபாடு பிரசித்தமானது. 

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை தனியான தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழ் தேசியவாதிகள், அவர்களை "இஸ்லாமியத் தமிழர்" என்று கூறி வருகின்றனர். இது பெரும்பாலும் அறியாமை காரணமாக ஏற்படும் தவறான புரிதல். இலங்கை முஸ்லிம்களை குறிக்கும் "மூர்கள்" என்ற சொல் போர்த்துகேய காலனிய காலத்திலும், "சோனகர்கள்" என்ற சொல் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இன்று இவ்விரண்டு சொற்களும் முஸ்லிம்களை குறிக்கும் என்றாலும், எல்லா மூர்களும், எல்லா சோனகர்களும் முஸ்லிம்கள் என்று கருதுவது தவறாகும். எவ்வாறு தமிழர் என்பது ஒரு மொழியை பேசும் மக்களைக் குறிக்கின்றதோ, அதே மாதிரி முஸ்லிம்கள் என்பது இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுவோரைக் குறிக்கும். 

"சோனகர்கள்" என்பது, அரேபியரைக் குறிக்கும் பண்டைய தமிழ்ச் சொல் ஆகும். ஆனால், சோனகர்கள் எல்லோரும் அரேபியர்கள் அல்ல. அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, அரபு வணிகர்கள் வட இலங்கையில் குடியேறி உள்ளனர். அன்று அவர்கள் அரேபியர்களாக அறியப் படவில்லை. கிரேக்கர்களும் வணிகத் தொடர்பு காரணமாக இலங்கையில் குடியேறி உள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய தீபகற்பம் முழுவதும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரோமர்கள் என்ற பெயரில் கிரேக்கர்களே அரேபியாவை ஆண்டனர். தமிழர்கள் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இன்றைய கிரீஸ் நாட்டில் உள்ள இயோனியா மாநிலத்தில் இருந்து யவனர் என்ற பெயர் வந்திருக்கலாம். இலங்கையில் யவனர் என்ற சொல் மருவி சோனகர் ஆகியிருக்கின்றது. ஆகவே, சோனகர் என்ற சொல் இலங்கையில் குடியேறிய அரேபியர்களை மட்டுமல்லாது, கிரேக்கர்களையும் குறிக்கும். 

வட இலங்கையில் (அரபு-கிரேக்க) சோனகர்களும், (ஆப்பிரிக்க) பப்பராவர்களும், இரண்டு வேறுபட்ட சமூகங்களாக வாழ்ந்திருக்க வேண்டும். (வையாபாடலிலும் அவ்வாறு தான் குறிப்பிடப் பட்டுள்ளது.) சமஸ்கிருத மொழியில் ஆப்பிரிக்கர்களை குறிக்க பப்ரு (Babhroo) என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. பப்ரு என்பது சுருள் முடி கொண்டவர்கள் என்று அர்த்தம் ஆகும். சிங்கள மொழியில் அந்தச் சொல் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. பப்ரு என்ற சொல், கிரேக்க மொழியில் "Barbar" என்றும், அரபு மொழியில் "Berber" என்றும் பாவிக்கப் பட்டது. பண்டைய காலங்களில் தமிழ், சமஸ்கிருதம், அரபி, கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான கலாச்சார தொடர்பு இத்தால் துலக்கமாகின்றது. 

இந்தக் கட்டுரை கூறும் தகவல்கள் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். குறிப்பாக, "தமிழினம், ஆயிரமாயிரம் வருடங்களாக வேற்று இனங்களுடன் கலக்காமல் இனத் தூய்மை பேணி வருகின்றது." என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் இனவாதிகள், இதனை "அர்த்தமற்ற உளறல்கள்" என்று புறக்கணிக்கலாம். இங்கே எழுதி உள்ளவை பொய்யானவை என்றால், ஒரு காலத்தில் புலிகளின் ஆங்கில ஊடகமாக கருதப்பட்ட தமிழ்நெட் இணையத்தளமும் பொய் சொல்லுமா?  குறிப்பாக, பப்பராவர் பற்றிய தகவல்கள் யாவும் Tamilnet ல் இருந்து எடுத்தவை தான். Tamilnet இணையத் தளத்திற்கு எனது நன்றிகள். 

மேலதிக தகவல்களுக்கு:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34949

http://www.tamilnet.com/art.html?catid=98&artid=24730

Friday, February 08, 2013

காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்

போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், இலங்கைத் தீவின் மீதான காலனிய மேலாதிக்கத்திற்காக, யுத்தம் செய்த காலத்தில் எழுதப்பட்ட நூல் ஒன்று, தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது.  "De opkomst van het Nederlandsch gezag over Ceylon" (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலானது, சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட பழைய டச்சு மொழியில் எழுதி இருப்பதால், வாசிப்பதற்கு சற்று கடினமாக உள்ளது.  காலனிய எஜமானர்கள் தமது நாட்டை பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று அறிவதற்கு, இலங்கை மக்களுக்கு ஆர்வம் இருக்கலாம். நான் சிரமப் பட்டு வாசித்த நூலில் இருந்து சில குறிப்புகளை இங்கே பதிவு செய்துள்ளேன். அந்த நூல் தற்பொழுது, எங்கேயும் விற்பனைக்கு கிடைக்காது. ஸ்கேன் செய்யப்பட்ட நூல், இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது. 

அன்று இலங்கைத் தீவானது, தெற்காசியாவில் போர்த்துக்கேயரின் பணக்கார காலனியாக இருந்துள்ளது. இரத்தினக் கற்கள், முத்துக்கள், கறுவாப் பட்டைகள் போன்றன, அன்றைய சர்வதேச சந்தையில் பெருமளவு வருவாயை ஈட்டிக் கொடுத்த பண்டங்கள் ஆகும். அதனால், போர்த்துக்கேயரும் இலங்கை இலகுவாக இழக்க விரும்பாமல், டச்சுக் காரரை எதிர்த்து கடுமையாக போரிட்டு இருக்கிறார்கள். "செய்லோன் (இலங்கை) தீவின் இழப்பானது, மிகுந்த மன வலியை தருவதும், போர்த்துக்கல் தேசத்தின் மிகப் பெரிய இழப்பாகவும் கருதப் பட வேண்டுமென...." போர்த்துகேய கால இலங்கையின் சரித்திரத்தை எழுதிய  frei Fernão de Queiroz குறிப்பிட்டுள்ளார். 

De opkomst van het Nederlandsch gezag over Ceylon (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலில், நான் வாசித்த சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இயற்கையான துறைமுகங்கள், கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக, இலங்கைத் தீவு காலனிய எஜமானர்களின் பிரியத்திற்குரிய காலனியாக இருந்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த "கிழக்கிந்திய கம்பனி" என்ற வர்த்தக ஸ்தாபனம், இலங்கையை தளமாக வைத்துக் கொண்டு, இந்தியாவில் தமிழக கரையோரப் பகுதிகளை பிடித்து ஆள்வதற்கு திட்டமிட்டிருந்தது. இலங்கை மட்டுமல்லாது, நாகபட்டினம், தூத்துக்குடி போன்ற தமிழக பகுதிகளின் பொருளாதார முக்கியத்துவமும் இந்த நூலில் விபரிக்கப் பட்டுள்ளது.

இந்த நூலில், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் நடந்த யுத்தம் பற்றி விபரமாக எழுதப் பட்டுள்ளது. போரில் கொல்லப்பட்ட போர்த்துக்கேயர்கள், மலபாரிகள் (தமிழர்கள்), இவர்களுடன் கறுப்பின அடிமைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகின்றது.  போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில், ஆயிரக் கணக்கான கறுப்பின அடிமைகளையும் இறக்குமதி செய்திருக்கின்றனர். ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகளின் வம்சாவளியினர் பின்னர் தமிழைப் பேசி தமிழர்களாக மாறி உள்ளனர். (அதே போன்று சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகள் சிங்களவராக மாறி விட்டார்கள்.)

யாழ்ப்பாணத்தை "Jaffena patnam" என்றும், அங்கு வாழ்ந்த மக்களை "மலபாரி" மொழி பேசுவோர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. (போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் தமிழர்களை மலபாரிகள் என்று தான் அழைத்து வந்தனர். அனேகமாக, ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் தான் தமிழர் என்ற பெயர் பாவனைக்கு வந்திருக்க வேண்டும்.) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போர்த்துக்கேயரை தவிர,  உள்நாட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சிறிதும் பெரிதுமான தீவுகளில் 20000 பேர். மன்னாரில் 7000 பேர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில், 90% மான தமிழர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்துள்ளனர். 

அந்தக் காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய அனைவரும் பிராமணர்களாக, அல்லது எழுதப், படிக்கத் தெரிந்த உயர் சாதியினராக இருந்துள்ளனர். அதனால் இந்துக்களை பிராமணர் என்றே நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். "Schriftgeleerde of Pandiet" (படித்தவர்கள் அல்லது பண்டிதர்கள்) என்று, பிராமணர் என்ற சொல்லுக்கு அந்த நூலில்  விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், "இந்து" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கவில்லை என்பதையும், பிராமணர்களை தவிர பிற சாதியினர் இந்துக்களாக இருக்கவில்லை என்பதையும், இந்த சரித்திர ஆவணம் நிரூபிக்கின்றது. 

"30 மைல்  சுற்று வட்டாரத்தை கொண்ட யாழ்ப்பாணம், மலைகளற்ற, சமவெளியான பிரதேசம். நம்ப முடியாத அளவுக்கு வளம் கொழிக்கும் பூமி. நெல்லும், பருத்தியும், பிற தானியங்களும் பயிரிடப் பட்டன. காடுகளுக்குள்  யானைகளும், மான்களும், பிற காட்டு விலங்குகளும் காணப்பட்டன." இவ்வாறு அந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேயர் காலம் வரையில் கூட, யாழ்ப்பாணத்தில் இருந்து யானைகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அதனால் தான், ஒரு இடத்திற்கு "யானை இறவு" என்ற பெயர்   ஏற்பட்டது. இதனை வாசிக்கும் போது, எமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஏனெனில், இன்றைய யாழ் குடாநாடு இலங்கையில் மிகவும் வரட்சியான பிரதேசங்களில் ஒன்று. அங்கே தற்போது காடுகளும் இல்லை, யானைகளும் இல்லை. நெல் உற்பத்தி, யாழ்ப்பாண மக்களின் நுகர்வுக்கே போதாது. 

அப்படியானால், 300 வருட கால காலனிய ஆட்சிக் காலத்தில், சூழலியலை மதிக்காத நிர்வாக சீர்கேடுகளால்,  யாழ்ப்பாண மண் வறண்டு போயிருக்கின்றது. ஆங்கிலேயர் வெளியேறி முப்பது வருடங்களுக்குப் பின்னர், விவசாயப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வளமற்ற, வறண்ட   யாழ்ப்பாண மண்ணில் இருந்து, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோன்றியது.  "காலனிய சுரண்டல் - பொருளாதார பிரச்சினைகள் - ஈழப் போர்"   இவற்றிற்கு இடையிலான தொடர்புகளை,  இன்றைக்கு பல படித்தவர்களும் புரிந்து கொள்வதில்லை. 


இங்கேயுள்ள இணைப்பில் நூலை வாசிக்கலாம்: Full text of "De opkomst van het Nederlandsch gezag over Ceilon. Eerste gedeelte"

Sunday, October 23, 2011

1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பன்னிரண்டு )


இலங்கையின் முதலாவது இனக்கலவரம் குறித்து நாம் அறிந்து கொண்டது என்ன?
1958 ம் ஆண்டு, தமிழரசுக் கட்சியினர் அஹிம்சா வழியில் சிறி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்வினையாக சிங்கள காடையரினால் தமிழர்கள் தாக்கப் பட்டனர்.

இதனை தமிழர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டத்தைக் குழப்பிய சிங்கள இனவெறியர்கள், தமிழர்களை படுகொலை செய்தனர்." இதனை சிங்களவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "சிங்கள எழுத்துகளை தார் பூசி அழித்த செயலானது, சிங்கள மொழியையும், சிங்கள இனத்தையும் பூண்டோடு அழிப்பதற்கான தமிழரின் சதி." அன்று நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், இனவாத சாயம் பூசப்பட்ட வாதங்களுக்குப் பின்னால், வேறொரு உண்மை மறைந்திருப்பது புலனாகும். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், நாம் அந்த உண்மையை அறிந்து கொள்வதை விரும்புவதில்லை.

அந்தக் காலகட்டத்தில் சிறி எதிர்ப்பு போராட்டம் இரண்டு தடவைகள் இடம்பெற்றன. இரண்டுக்கும் இடையில் குறைந்தது ஆறு மாத கால இடைவெளி இருந்தது. இரண்டாவது சிறி எதிர்ப்பு போராட்டம் தான், தமிழர் விரோத இனக்கலவரத்தில் போய் முடிந்தது. இனக்கலவரமானது, வெறுமனே "தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான இனவெறி சிங்களவர்களின் தன்னியல்பான நடவடிக்கை அல்ல." யாராலோ நன்கு திட்டமிடப் பட்டிருந்தது. அந்த தீய சக்திகள் எவை? கலவரத்திற்கு முன்னர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேட்டுக்குடி அரசியல் தலைவர்கள், இவர்கள் அனைவரதும் பொருளாதார நலன்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த "பாதிக்கப்பட்ட வர்க்கம்" சிங்களவர், தமிழர் ஆகிய இரண்டு இனங்களிலும் இருந்துள்ளன. நில உச்சவரம்புச் சட்டம், தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கல், போன்ற அரச கொள்கைகளால் அதிருப்தியுற்ற பூர்ஷுவா வர்க்கத்தினர், வன்மத்துடன் காத்திருந்தனர். அவர்களது கோபத்தை மேலும் கிளறுவதாக, 1958 மே மாதம் இடம்பெற்ற சம்பவங்கள் அமைந்து விட்டன. இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டமே, இனக்கலவரத்தை தூண்டி விட ஏதுவாக அமைந்தது.

போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தலைமை தவறி விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சிங்கள தொழிலாளர்களுக்கு வடிகால் தேடிக் கொடுப்பதற்காக, சிங்கள இனவாதிகள் தமிழர்களை தாக்குவதற்கு ஏவி விட்டனர். அன்றைய காலங்களில், சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப் பட்டிருந்தன. அவை, ஐரோப்பாவில் நிலவிய யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளுடன் ஒப்பிடத் தக்கன. அதாவது, "தமிழர்கள் எல்லோரும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர். நிறுவனங்களை நடத்துவதிலும், அரச பதவிகளிலும் அவர்களது ஆதிக்கம் தான் நிலவுகின்றது. சிங்களவர்களை சுரண்டிப் பிழைக்கும் தமிழர்கள் மிகவும் தந்திரசாலிகள்." இதிலே வேடிக்கை என்னவென்றால், இது போன்ற கருத்துகளை, சிங்கள இனவாதிகள், சிங்கள மக்கள் மனதில் இனவெறியை தூண்டுவதற்காக வேண்டுமென்றே பரப்பி வந்தனர். மறுபக்கத்தில், தமிழினவாதிகள், இதே கருத்துகளை தமக்கு சாதகமானதாக பார்த்தார்கள். தம்மை யூதர்களுடன் ஒப்பிட்டு சிந்திக்கப் பழகினார்கள்.

கொழும்பு நகரில், இனக்கலவரத்தின் போது, பெரும்பாலும் வசதி படைத்த தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. கொழும்பு நகரில் தமிழர்கள் கொலை செய்யப் படுமளவிற்கு, கலவரம் தீவிரமடைந்ததற்கு சில வதந்திகள், அல்லது தவறான தகவல்கள் காரணமாக அமைந்தன. அதற்கு முன்னால் கலவரம் எவ்வாறு ஆரம்பமாகியது என்று பார்ப்போம். சிங்கள முதலாளிகள், மே மாதம் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, எப்பாடு பட்டாவது குழப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றனர். அமைச்சர்களான விமலா விஜெவர்த்தனவும், தஹாநாயக்கவும், "வேலைநிறுத்தப் போராட்டம், தமிழரின் சதி" என அறிவித்தனர். மே 22 தொடக்கம் 25 வரையிலான நாட்களில், சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமான, அனுராதபுரம், பொலநறுவையில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப் பட்டனர். இன்று அங்கே ஒரு தமிழர் கூட வாழ முடியாதவாறு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். மே 26 தொடக்கம் ஜூன் 3 வரையில், தமிழ்ப் பெரும்பான்மை பிரதேசமான வடக்கு, கிழக்கிற்கு கலவரம் பரவியது. அரச அலுவலகங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. குறிப்பாக வடக்கில், சிங்களவர்கள் அடித்து விரட்டப் பட்டனர். இதுவும், ஏறாவூரில் நடந்த பெருந்தோட்ட முதலாளியின் கொலையும், கொழும்பில் கலவரம் பரவ காரணமாக அமைந்தன.

கிழக்கு மாகாணத்தில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்க்குணாம்சம் கொண்டவர்கள். ஏறாவூர் பகுதியில் மட்டுமே குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. தண்டவாளம் கழற்றப் பட்டதால், பொலநறுவையில் இருந்து கிழக்கு நோக்கி வந்த ரயில் வண்டி தடம் புரண்டது. வாகனமொன்று டைனமைட் குண்டு வெடிப்புக்கு இலக்கானதால், ஒரு போலீஸ்காரர் மரணமடைந்தார். அதை விட, சிங்கள பெருந்தோட்ட முதலாளி செனவிரத்ன ஏறாவூரில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி, நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. முதலாளியின் தனிப்பட்ட விரோதிகளே அவரை சுட்டுக் கொன்றிருந்த போதிலும், அன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், தமிழர்களின் செயலாக கருதப் பட்டது. அடுத்த நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் பண்டாரநாயக்க, "செனவிரத்ன கொலையை தமிழர்களே செய்ததாக" பழி சுமத்தினார். பிரதமரின் தொலைநோக்கற்ற உரையானது, "தமிழர்களே முதலில் சிங்களவர்களை தாக்கினார்கள்." என்ற தவறான நிலைப்பாட்டை உருவாக்க வழிவகுத்து விட்டது.

கொழும்பு நகரில் தமிழர்களின் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. கண்ணில் பட்ட தமிழர்கள் கொலை செய்யப் பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். பல இடங்களில், "இது செனவிரத்ன கொலைக்கு பழிவாங்கல்" என்று நியாயம் கற்பிக்கப் பட்டது. தமிழர் மீதான தாக்குதல்கள் கொழும்பில் இருந்து ஆரம்பித்து, கரையோரமாக காலி வரை பரவியது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களின் வருகை, கொழும்பு நகர கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணமாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள், தமிழர்களால் தாக்கப்பட்டதால், அல்லது தாக்குதல் அச்சம் காரணமாக தெற்கிற்கு இடம்பெயர்ந்தனர். விமானம் மூலமாக இரத்மலானை விமான நிலையத்திலும், ரயில் மூலம் கோட்டை புகையிரத நிலையத்திலும் வந்திறங்கிய அகதிகள், தமக்கு நேர்ந்த அவலத்தை சற்று மிகைப் படுத்தியே கூறியிருந்தனர். இருப்பினும், தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு, "வடக்கில் இருந்து வெளியேறிய சிங்கள அகதிகளையும்" காரணமாக காட்டி நியாயம் தேடிக் கொண்டனர். ("கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவன் வாழமுடியாது." என்ற விடயம் இன்றும் கூட, சாதாரண சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட பயன்படுத்தப் படுகின்றது.)

இதே நேரம் பொலநறுவை மாவட்டத்தில், திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேறின. தமிழ்த் தொழிலாளர்களின் குடியிருப்பினுள் புகுந்த சிங்களக் காடையர்கள், எழுபது தமிழர்களை வாள்களால் வெட்டிக் கொன்றனர். விவசாய அலுவலர்களாக கடமையாற்றிய அதிகாரிகளின் பங்களாக்களும் எரிக்கப் பட்டன. அன்று பல சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தனர்! ஆரம்பத்தில் அவை யாவும் அரசினால் முன்னெடுக்கப் பட்ட, விவசாய அபிவிருத்திக் கிராமங்களாக இருந்தன. பின்னர் தான், சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றும் அரசின் திட்டம் தெரிய வந்தது. அன்றிருந்த சூழலில், சிங்கள பேரினவாதக் கருத்துக்கள் பரவிய காலத்தில், ஒரு தமிழ் அதிகாரி குடியேற்றக் கிராமங்களுக்கு பொறுப்பாக இருப்பதை சிங்களவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடியேற்றங்களில் ஆரம்பித்த வன்முறை, முழுக்க முழுக்க இனவெறியைக் கொண்டிருந்தது. இருப்பினும், அயலில் இருந்த தமிழ்க் கிராமங்கள் மீதான வன்செயல்கள் யாவும், நில ஆக்கிரமிப்பு நோக்கத்தைக் கொண்டிருந்தன. அதாவது, சிங்களப் பகுதிகளில் நிலமற்ற விவசாயிகள், தமிழ்ப் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு, அரசே உறுதுணையாக இருந்தது. இலங்கையில் பொருளாதார வளங்கள் மீதான மனித சமூகத்தின் போட்டியானது, இனத்துவ முறையில் தீர்க்கப் பட்டது. தாம் பெரும்பான்மை சமூகமாக இருப்பதால், இலங்கையில் பொருளாதார வளங்கள் யாவும் தமக்கு உரிமையாக வேண்டும் என்று சிங்களவர்கள் கருதிக் கொண்டனர்.

கொழும்புக்கு அருகில் உள்ள இந்துக் கோயில் ஒன்றினுள் வைத்து, இரண்டு பூசாரிகள் கொலை செய்யப் பட்ட செய்தியானது, தமிழ்ப் பகுதிகளில் காட்டுத்தீயாக பரவியது. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், செய்தியைக் கேள்விப்பட்ட தமிழர்கள் சிங்கள விரோத வன்முறையில் இறங்கினார்கள். கிழக்கு மாகாணத்தில், பருவ காலத்திற்கு வந்து மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்கள் தாக்கப் பட்டனர். யாழ் நகரில் இருந்த பௌத்த விகாரை, நூற்றுக் கணக்கான இளைஞர்களால் தாக்கப் பட்டது. அங்கிருந்த பிக்கு ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் நிலையங்கள் காலி செய்யப் பட்டு, போலீசார் பெரிய முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். வல்வெட்டித்துறையிலும், காரைநகரிலும் சுங்க வரித் திணைக்களங்கள் தாக்கப் பட்டன. அங்கிருந்த ஆவணங்கள் யாவும் எரிக்கப் பட்டன. அன்று, இந்தியாவுடனான வர்த்தக படகுச் சேவை, காரைநகர் ஊடாக நடந்து கொண்டிருந்தது. அதனால், வடக்கில் பிரதானமான சுங்கவரி அலுவலகம் காரைநகரில் அமைந்திருந்தது. இந்த சம்பவத்தை மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அரச எதிர்ப்பு நடவடிக்கையாக தோன்றும். ஆனால், இந்தியாவில் இருந்து, சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திக் கொண்டிருந்த கடத்தல்காரர்களின் செயல் என்று பின்னர் தெரிய வந்தது. சுங்க வரி அலுவலக ஆவணங்களை எரிப்பதால், கடத்தல்காரருக்கே நன்மையாக அமையும்.

மே மாதம், 30 ம் திகதி, நயினாதீவில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பௌத்த விகாரை, டைனமைட் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. யாழ் குடாநாட்டில் இருந்து படகுகளில் வந்த குழுவினராலேயே விகாரை தாக்கப் பட்டது. அநேகமாக, கடத்தல்காரர்களே இந்த செயலுக்கு காரணம் என சந்தேகிக்கப் பட்டது. நயினாதீவு விகாரை தகர்ப்பினால், தெற்கில் தமிழர்கள் மீதான படுகொலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அரசும், ஊடகங்களும் செய்தியை வெளியிடாமல் மூடி மறைத்து விட்டன. இருப்பினும் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள், இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. யாழ் நகரில், தமிழரசுக் கட்சியின் அரசியலால் கவரப்பட்ட தமிழ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயினும், பொலிஸ் நிலையங்களை, சுங்க வரி அலுவலகங்களை தாக்கியதன் மூலம், எதிர்கால ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது. எழுபதுகளில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, "தமிழீழ விடுதலை இயக்கம்", "தமிழீழ விடுதலைப் புலிகள்" போன்ற இயக்கங்களின் ஸ்தாபகர்கள் பெரும்பாலும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள். "இந்தியாவுடனான சட்டவிரோத படகுப் போக்குவரத்து, தமிழக அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு", என்பன ஈழப் போராட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன.

(தொடரும்)


(1958 இனக்கலவரத்தில் நடந்த சம்பவங்கள் யாவும் "Emergency '58" நூலில் விவரமாக தொகுக்கப் பட்டுள்ளன.)
1.Emergency '58 – The Story of the Ceylon Race Riots
2.Tarzie Vittachi’s “Emergency ’58” Re-Visited

****************************
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
11. "ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Saturday, October 15, 2011

"ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பதினொன்று )


1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".

Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.

1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.

"சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.

மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.

பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.

"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

அநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கிடைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.

தனியார் பஸ் வண்டிகள் யாவும், "இலங்கை போக்குவரத்து சபை" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.

தேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மமாகவே நீடிக்கின்றது.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Sunday, October 09, 2011

இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பத்து)


பண்டாரநாயக்காவின் தேர்தல் கால வாக்குறுதியான, "24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டம்," அமுல்படுத்துவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 24 மணிநேரமும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த இலங்கை வானொலியில் சிங்களத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப் பட்டது. ஆனால், தமிழ் புறக்கணிக்கப் பட்டது. இவை போன்ற செயல்கள், தமிழர் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தின. இருப்பினும், நிர்வாகச் சிக்கல் காரணமாக, சிங்களத்துடன், தமிழும், ஆங்கிலமும் பாவனையில் இருக்கும் என்று சட்டம் இயற்ற வேண்டியிருந்தது. இது கட்சிக்குள்ளேயிருந்த மொழித் தீவிரவாதிகளை உசுப்பி விட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தில், தமிழுக்கும் உரிமை வழங்கும் பகுதியை நீக்க வேண்டுமென கோரினார்கள். இறுதியில் கடும்போக்காளர்களுக்கு விட்டுக் கொடுத்து, 5 ஜூன் 1956 ல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

மறுபக்கத்தில், தமிழ் சமஷ்டிக் கட்சியினர், சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளன்று, தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலம் முழுவதும், சமநிலை பேணுவது இயலாத காரியமாக இருந்தது. ஒரு பக்கம் சிங்கள மொழித் தீவிரவாதிகளை திருப்திப் படுத்தினால், மறுபக்கம் தமிழ் மொழித் தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்தார்கள். அவர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால், சிங்கள பேரினவாதிகள் கடுமையான எதிர்ப்புக் காட்டினார்கள். பண்டாரநாயக்கவை பொறுத்த வரையில், பிரதமருக்கான முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கத் தயங்கினார். பதவிக் காலம் முழுவதும், கடும்போக்காளர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து போனார். அந்தக் கோரிக்கைகள், சில சமயம் பிரதமரையும், அவரது கட்சியையும் அவமதிப்பதாக அமைந்திருந்ததன.

தமிழ் மக்களின் தலைவர்கள், சாத்வீக வழியில் போராடிய போதிலும், சிங்கள பேரினவாதிகள் அதைக் கூட பூதாகரமான விடயமாக்கினார்கள். தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவற்றையும், "சிங்களவர்களை இனவழிப்பு செய்ய தமிழர் தயாராகி வருவதாக" பயமுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள். சிங்களம் மட்டும் சட்ட மசோதாவை எதிர்த்து, காலிமுகத் திடலில் தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது. அதற்கு எதிர்வினையாக, கொழும்பில் இருந்த தமிழரின் கடைகள் கல் வீசித் தாக்கப் பட்டன. ஒரு சில நாட்களில், கலவரம் கிழக்கு மாகாணத்திற்கு பரவியது. சமஷ்டிக் கட்சியினர் ஒழுங்கு படுத்திய ஊர்வலத்தில் போலீசார் சுட்டதில், இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர். சுதந்திர இலங்கையில், முதன் முறையாக பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதமும் அப்போது தான் நிகழ்ந்தது.

கிழக்கு மாகாணத்தில், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திற்கு நடுவில் "கல் ஓயா குடியேற்றக் கிராமம்" அமைந்திருந்தது. டி.எஸ்.சேனநாயக்க காலத்தில், மின்னேரியா அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற முதலாவது சிங்களக் குடியேற்றம் அதுவாகும். அந்தக் காலத்தில், நிலமற்ற சிங்கள விவசாயிகளுக்கு தமிழர்களின் நிலங்களை பறித்தெடுத்துக் கொடுத்தார்கள். இதன் மூலம், சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களை எதிரெதிரே நிறுத்தி விடுவதும் அரசின் நோக்கமாக இருந்தது. உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அடிதடியில் இறங்கி விடும் உதிரிப் பாட்டாளி வர்க்க சிங்களவர்களையே குடியேற்றக் கிராமங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

"சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் நோக்கோடு தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்..." என்பன போன்ற வதந்திகளை கேள்விப்பட்ட கல்லோயா குடியேற்றவாசிகள், அயல் கிராமங்களில் இருந்த தமிழர்களை தாக்கினார்கள். குறைந்தது நூறு தமிழர்களாவது, இனவெறித் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கல்லோயா கிராமத்தின் அமைவிடம் காரணமாக, செய்தியின் வீரியம் பிற பகுதிகளில் அறியப் படவில்லை. கொழும்பு ஊடகங்களும், அரசும், அதனை தற்செயலாக நடந்த அசம்பாவிதமாக பார்த்தன. அந்த எண்ணம் எவ்வளவு தூரம் தவறானது என்பதை, அடுத்து வரும் ஆண்டுகள் நிரூபித்தன.

சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையில், முதலாவது தமிழினப் படுகொலைகள், கிழக்கு மாகாணத்தில் தான் அடுத்தடுத்து இடம்பெற்று வந்தன. அவை பெரும்பான்மை தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பதால், தமிழர்களின் பதில் வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஏற்படுத்தப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள், அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. தரகு முதலாளித்துவ சார்புக் கட்சியான, முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசு, கம்யூனிச அபாயத்தை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அது. தேசிய வளங்களை அபிவிருத்தி செய்வது பெயரில், தரிசான பூமியில் விவசாயக் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் இனத்தின் பெயரில் அறிமுகப் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை திசைதிருப்பல், மின்னேரியா குளம் புனரமைப்பு போன்ற பெயரில் நடந்த குடியேற்றங்களுக்கு தமிழர்கள் யாரும் செல்லவில்லை. அரசும் அதனை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது.

இதே நேரம், வட மாகாணத்தில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. வவுனியாவுக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான வன்னிப் பகுதி பெருமளவு காடுகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று குடியேறிய விவசாயக் குடும்பங்கள், காட்டை அழித்து பயிர் செய்யவாரம்பித்தன. வன்னிக் குடியேற்றங்களும், அரசினால் ஊக்குவிக்கப் பட்ட திட்டங்கள் தான். (தமிழ்க் காங்கிரசின் தலையீடு காரணமாக ஆதிக்க சாதி வேளாளர் தான் பெருமளவில் குடியேறி இருந்தனர்.)

வன்னி தமிழ்க் குடியேற்றங்களுக்கும், கிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருந்தது. வன்னியில் காடுகளே அதிகமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே குடியிருந்தவர்களும் தமிழர்கள் தான். ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறு. தமிழர்கள் நெருக்கமாக வாழ்ந்த பிரதேசத்தின் நடுவில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் அமைக்கப் பட்டன. தமிழரின் நிலங்களும் ஆடாவடித்தனமாக பறிக்கப் பட்டன. பாலஸ்தீனப் பிரதேசத்தில் நடந்த யூதக் குடியேற்றங்களின் பாணியில், இலங்கையில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டனர். உண்மையில், ஐரோப்பிய காலனியக் கொள்கையின் பிராந்திய வெளிப்பாடு அது. பலவீனமான மக்களின் நிலங்களை பறித்தெடுத்து, தன்னின மக்களை வாழ வைக்கும் "இனவாத-பொருளாதாரக் கொள்கை" தான் அமெரிக்காவையும் உருவாக்கியது.

பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்து நிறுத்தப் பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த குடியேற்றங்களை அகற்றாமல் விட்டது பாரிய தவறு என்பதை அப்போது உணரவில்லை. உண்மையில் பண்டாரநாயக்க, தனது கட்சிக்கு ஆதரவளித்த பிக்குகளின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முன்வரவில்லை. "மேலைத்தேய சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிரான, சிங்களக் கலாச்சாரக் காவலர்களாக" காட்டிக் கொள்வதே பிக்குகளின் முதன்மையான அரசியல் செயற்பாடாகவிருந்தது. (தமிழ் கலாச்சாரக் காவலர்களான, தமிழ் உணர்வாளர்களின் அரசியலும் ஒன்று தான்.)

பௌத்த பிக்குகள் முன்மொழிந்த, கலாச்சார விழுமியங்கள் எதையும் பண்டாரநாயக்க அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பிக்குகள் கோரிய மதுபான தடைச் சட்டம் பற்றி பாராளுமன்றம் விவாதிக்கவே இல்லை. அதே போன்று, பௌத்த மத உயர்கல்வி நிறுவனமான பிரிவேனாக்களை, பல்கலைக்கழகத்திற்கு நிகராக தரமுயற்றும் கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. பிக்குகளின் அபிலாஷைகளுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட நில உச்சரவம்புச் சட்டம், பௌத்த மடாலயங்களின் பொருளாதாரத்தை பாதித்தது. இதை விட, வேறு சில முற்போக்கான மாற்றங்களும் பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டன. 1957 ல் நிறைவேற்றப் பட்ட, "சமூகக் குறைபாடுகள் ஒழிப்பு சட்டம்", முதன் முதலாக சாதிய தீண்டாமையை சட்டவிரோதமாக்கியது. இவற்றை விட, அரசின் வெளிவிவகாரக் கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சோஷலிச நாடுகளுடன் உறவு ஏற்படுத்தப் பட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படை முகாம்கள் மூடப் பட்டன. பொருளாதார ரீதியாக, தேசியமயமாக்கல் கொள்கைக்கு உள்நாட்டில் ஆதரவு பெருகியது.

பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில், பிலிப் குணவர்த்தன என்றொரு மார்க்சிய அறிவுஜீவி இருந்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கொவிகம சாதியில் பிறந்தவர் என்ற போதிலும் வர்க்க சிந்தனை கொண்டவராக இருந்தார். 1935 ல், இங்கிலாந்து கல்லூரிகளில் பயிலும் காலத்தில் மார்க்ஸியம் குறித்து அறிந்து கொண்டு நாடு திரும்பிய இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். இருப்பினும் பிற்காலத்தில் இடதுசாரித் தேசியவாதியாக மாறி விட்டார். அவரது தந்தையும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசியவாத எழுச்சியில் பங்குபற்றியமைக்காக சிறை சென்றவர். அந்தக் காலத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மார்க்சியர்கள் மத்தியில், பிலிப் குணவர்த்தன வித்தியாசமானவராக திகழ்ந்தார்.

1956 ல் கூட, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சிங்களம் படிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதே நேரத்தில், பிலிப் குணவர்த்தனவின் வீட்டில் சிங்களம் பேசப்பட்டது குறிப்பிடத் தக்கது. இன்று "தமிழ் தேசியத்துடன் ஒத்துழைப்பது, தமிழ் இடதுசாரிகளின் தார்மீகக் கடமை" என்று நம்பப் படுவது போன்று, அன்று சில சிங்கள இடதுசாரிகள் நம்பினார்கள். உண்மையில், பண்டாரநாயக்க போன்ற தூய சிங்கள தேசியவாதிக்களுக்கும், குணவர்த்தன போன்ற மார்க்சிய மேதைகளின் ஆலோசனைகள் தேவைப்பட்டன. சிங்கள மக்களை, வர்க்க ரீதியாக பிளவு படுத்துவது குணவர்த்தன கொண்டுவந்த பொருளாதார திட்டங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், பண்டாரநாயக்க அந்த நோக்கம் நிறைவேற அனுமதிக்காதது மட்டுமல்ல, இறுதியில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். இவையெல்லாம் பண்டாரநாயக்கவின் கொள்கை மாற்றத்தில் ஏற்பட்ட பாரிய தவறு மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளின் தவறும் இதில் அடங்கியுள்ளது. அதற்கு காரணம், தமிழ் தேசியவாத தலைவர்கள் முதலில் பூர்ஷுவா வர்க்கத்தினர், அதற்குப் பிறகு தான் அவர்கள் தமிழர்கள்.

நில உச்சவரம்புச் சட்டம், நெல் பயிரப்படும் வயல் நிலங்களை மட்டுமே இலக்கு வைத்தது. அதனால், தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட முதலாளிகளை பாதிக்கவில்லை. புதிய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் வயல் நிலங்களை அரசு பறித்தெடுத்து, உழுபவருக்கு சொந்தமாக்க விரும்பியது. இலங்கை காலனிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், நிலப்பிரபுத்துவ சமுதாய முறை தொடர்ந்தது. நாட்டின் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரரான நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டிருந்தனர். பயிரப்படும் நெல்லில் பெரும்பகுதி நிலப்பிரபுக்கு சொந்தமாகையால், குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலின் பலன்கள் கிடைப்பதில்லை.

நிலப்பிரபுக்கள் எப்போதும் உயர்சாதியினராக இருந்தனர். குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் பிற்படுத்தப் பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விவசாயம் செய்யும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது. அரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்டமும், அதன் விளைவுகளும், சாதிய சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெருமளவு தாழ்த்தப் பட்ட சாதியினர் விவசாயக் கூலிகளானது மட்டுமல்ல, சிறிதளவு நிலங்களையும் பெற்றுக் கொண்டனர். உண்மையில், அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க நினைத்த, நிலப்பிரபுக்களின் செயல்பாடுகள் தோற்றுவித்த எதிர்பாராத சமுதாய மாற்றம் அது.

உண்மையில் குணவர்த்தன இயற்றிய நில உச்சவரம்புச் சட்டம், உள்ள படியே நடைமுறைக்கு வந்திருந்தால், அது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். நிலவுடமையாளர்களின் நிலங்களும், அறுவடையில் பெரும் பகுதியும், அவற்றை பயிர் செய்த குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாகி இருக்கும். நிலப்பிரபுக்களுக்கு சிறிதளவு தொகையை நஷ்டஈடாக அரசு வழங்கும். உழவர்களின் கமிட்டிகள் உருவாக்கப் பட்டு, விவசாயக் கூலிகளின் ஊதியமும் அதிகரிக்கப் பட்டிருக்கும். முன்னாள் குத்தகை விவசாயிகளைக் கொண்ட உழவர் குழுக்கள், நிலமற்ற விவசாயக் கூலிகளையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் இதனால் இலாபமிருந்தது. முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்த விவசாய உற்பத்தி அரசமயமாகும். இருப்பினும், அரசாங்கத்திற்குள்ளேயே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிராளிகள் இருந்ததால், சட்டத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே அமுல்படுத்த முனைந்தார்கள். அதற்குக் காரணம், பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர், நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் ஏராளமான நிலங்களை, சிங்களப் பகுதிகளிலும் சொந்தமாக வைத்திருந்தனர். பண்டாரநாயக்கவின் குடும்பத்தின் உள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது வேடிக்கையானது. அவரது துணைவியார் சிறிமாவோவின் குடும்பத்தினர், கண்டி மாகாணத்தின் பெரிய நிலவுடமையாளர்கள். நில உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய்யுமாறு, சிறிமா ஊடாக பண்டாரநாயக்கவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதியாக சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அது நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அசைக்கவில்லை. ஆயினும், சட்டம் அமுலாக முன்னரே, குத்தகை விவசாயிகளுக்கு பதிலாக, பெருமளவு விவசாயக் கூலிகள் வயல்களில் வேலை செய்ய வைக்கப் பட்டனர். குத்தகை விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்தை சொந்தமாக்குவதாக சட்டம் கூறியதால், விவசாயக்கூலிகளை பணிக்கு அமர்த்தியதன் மூலம், மறைமுகமாக நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.

நிச்சயமாக, நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கண்டியில் நடந்த எதிர்ப்பியக்கத்திற்கு, சிறிமாவின் சகோதரர் பார்னஸ் ரத்வத்த தலைமை தாங்கினார். என்ன பாடுபட்டாவது சட்டத்தை நடைமுறைக்கு வர விடாமல் தடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டனர். புத்த பிக்குகளும் நிலவுடமையாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர். நிலப்பிரபுத்துவத்திற்கும், மதத்திற்கும் இடையிலான பொருளாதார உறவு உலகம் முழுவதும் உள்ளது தான். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பௌத்த மடாலயங்களுக்கு சொந்தமாகவும் பல ஏக்கர் நெல் வயல்கள் இருந்தன. மடாலயங்களில் வசித்த பிக்குகளின் முக்கிய வருமானமும் அது தான். நிலவுச்சவரம்பு சட்டம் தமது அடிமடியிலேயே கை வைப்பதை உணர்ந்த புத்த பிக்குகள், பண்டாரநாயக்க அரசுக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால், இந்த விடயத்தில் அரசை விமர்சித்தால், சிங்கள உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பொருளாதாரப் பிரச்சினையை, இனப்பிரச்சினையாக திசை திருப்பி விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இது போன்ற அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட விரும்பாத எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இனவாத அரசியலுக்குள் நுழைந்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்கள், 1957, 1958 ஆகிய வருடங்களில் இடம்பெற்றன. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. இயல்பாகவே வர்க்க சிந்தனை கொண்ட உழைக்கும் மக்களின் மனதில் இனவாதக் கருத்துகளை பரப்ப வேண்டும். அதுவே மேட்டுக்குடி வர்க்க நலன்களை காப்பாற்ற உதவும். சிங்கள பேரினவாதிகள், இனவாத பௌத்த பிக்குகள், தமிழ் குறுந் தேசியவாதிகள், இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளியும் அது தான். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தினரின் நலன்களுக்காக, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களை நீண்டதொரு இனக்குரோத போருக்குள் தள்ளி விட்டனர்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Wednesday, October 05, 2011

"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஒன்பது)


இலங்கையின் வரலாற்றில் 1956 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால், இன்று விஸ்வரூபமாக விரிந்து இலட்சக்கணக்கான மக்களின் சாவுக்கும் காரணமான இனப்பிரச்சினையின் தோற்றுவாயும் அது தான். 1956 வரையில், சாதி, வர்க்க பிரிவினையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. 1956 க்குப் பின்னர், தேசியவாதம் என்ற கருத்தியல் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தேசியவாதிகள் கற்பித்த இனம் என்ற அடிப்படையில் இருந்தே சமூக நோக்கு விரிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், ஆகிய இரண்டு மொழி பேசும் சமூகங்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன.

சிங்களவர்கள் மத்தியில் அந்த சாதனையை நிகழ்த்தியவர், பண்டாரநாயக்க. அதே போன்று, தமிழர்களையும் தேசியவாதிகளாக மாற்றிய பெருமை செல்வநாயகத்தை சாரும். இரண்டு தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளும் இருந்தன. இருவரும் சமுதாயத்தில் உயர்சாதியாக கருதப்படும், "கொவிகம-வெள்ளாள" சாதியில் பிறந்தவர்கள். அதிலும், பிரித்தானியா சென்று கல்வி கற்கும் அளவு வசதி படைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள். (கொழும்பு மேட்டுக்குடி பிள்ளைகள் மட்டுமே படிக்கும், சென் தோமஸ் கல்லூரியில் ஒரே காலத்தில் கல்வி கற்றுள்ளனர்.) சிறுபான்மை கிறிஸ்தவமதத்தில் பிறந்த போதிலும், பெரும்பான்மை மதத்தவரின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு அரசியல் நடத்தியவர்கள். அனைத்து சாதிகளையும் தேசியம் என்ற குடையின் கீழ் ஒன்று படுத்தியமை, இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது.

1948 ம் ஆண்டில் இருந்து நிகரற்ற ஆளும் கட்சியாக இருந்த, ஐக்கிய தேசியக் கட்சி 1956 தேர்தலில் தோல்வியுற்றது. சிங்களப் பகுதிகளில் பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்னர் தான், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைத்திருந்தார். தமிழ் பிரதேசமான, வட-கிழக்கு மாகாணங்களில் செல்வநாயகத்தின் கட்சி பல இடங்களைக் கைப்பற்றியது. செல்வநாயகமும், சில வருடங்களுக்கு முன்னர் தான், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஸ்தாபித்தார். சுதந்திரக் கட்சி, இலங்கையை பௌத்த-சிங்களவர்களுக்கான தாயகமாக்க வேண்டுமென்ற கொள்கையை பரப்புரை செய்தது. தமிழரசுக் கட்சி, இந்து-கிறிஸ்தவ தமிழருக்கான தாயகக் கோட்பாட்டை பரப்பியது. இதற்காக மட்டும் தான் மக்கள் இவ்விரு கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்றே புரிந்து கொள்ளப் படுகின்றது. சிங்கள தேசியவாதம், தமிழ் தேசியவாதம் இரண்டுமே, நாங்கள் அவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இது சமூக-பொருளாதார பின்னணியை ஆராயாத, வெறும் அரசியல் சார்ந்த விளக்கம் மட்டுமே.

1956 க்கு முன்னர், இலங்கையில் சாதி அரசியல் கோலோச்சியது. தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் பகிரங்கமாக சாதி அபிமானம் காட்டினார்கள். "ஆதிக்க சாதி மக்களுக்காக, ஆதிக்க சாதி வேட்பாளர்களால் நடத்தப் படுவதே", இலங்கை அரசியலாக இருந்தது. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் "கொவிகம", தமிழருக்கு "வெள்ளாளர்கள்". பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினர் எப்போதும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளனர். தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், கொவிகம-வெள்ளாள சாதியினர் என்பது எழுதப்படாத விதியாகவிருந்தது. தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், உள்ளூர் நிலவுடைமையாளர் வீட்டில் தான் தங்குவார். அதே சாதியை சேர்ந்த நிலப்பிரபுவும், தன்னிடம் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டுமென உத்தரவிடுவார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இரண்டையும் சேர்ந்த வேட்பாளர்கள் இவ்வாறு தான் தேர்தலில் நின்று ஜெயித்தார்கள். காலப்போக்கில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு காரணமாக, நிலவுடமையாளர்களின் பிடி தளர்ந்தது. அதற்கு முக்கிய காரணம், கம்யூனிசத்தை வளர விடாமல் தடுப்பதற்காக, இலங்கை அரசு நடைமுறைப் படுத்திய சமூக நல திட்டங்கள். முரண்நகையாக, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த திட்டங்கள், அந்தக் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது.

ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியில், ஐரோப்பியரும், படித்த மேட்டுக்குடியினரும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர், அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை வழங்கப் பட்டது. அரச பாடசாலைகளில் இலவசக்கல்வி, அரச மருத்துவமனைகளில் இலவச மருத்துவம், என்பன சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்தன. உண்மையில், மார்க்சியக் கட்சிகளின் நீண்ட காலக் கோரிக்கைகள் இவை. சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்க மக்களிடம், இந்தக் கோரிக்கைகள் இலகுவில் எடுபடும். கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, அரசே முன் நின்று அந்த திட்டங்களை நிறைவேற்றியது. நிச்சயமாக, மக்கள் அதற்குப் பிறகு கம்யூனிசத்தை மறந்து விட்டார்கள். ஆனால், சமூக நலத் திட்டங்களின் விளைவாக அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி இலவசமாயினும்,ஆங்கில வழிக் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவிருந்தது. எழுதப், படிக்கத் தெரிந்த ஒடுக்கப் பட்ட சாதியினர், அரசியல் முடிவுகளில் தமது பங்களிப்பு எதுவுமில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

அரசின் பாரபட்சமான கல்விக் கொள்கையால், ஆசிரியர்களும் பெருமளவு பாதிக்கப் பட்டனர். ஆங்கிலத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப் பட்டது. அதே நேரத்தில், சிங்களம் அல்லது தமிழில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைத்தது. மருத்துவத் துறையிலும், ஆங்கிலேயர் அறிமுகப் படுத்திய கல்வி கற்ற வைத்தியர்களுக்கே மதிப்பு அதிகம். அவர்களின் சான்றிதல்களை மட்டுமே அரசு அங்கீகரித்தது. உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேலையின்றி தவித்தார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும், ஆங்கிலம் தெரிந்த வைத்தியரை விட குறைவாகவே சம்பாதிக்க முடியும். சுருக்கமாக, ஆங்கில மருத்துவம் பயின்றவர்கள், சமூகத்தில் மேன் நிலையில் இருந்தனர். தாய்மொழியில் சுதேசி மருத்துவம் பயின்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாகவிருந்தது. வட மாகாணத்திற்கான ஆயுர்வேதக் கல்லூரி, கைதடி என்ற ஊரில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற விடயம், இன்றைக்கும் பல தமிழருக்கு தெரியாது. அந்தளவுக்கு, சுதேசி மருத்துவர்கள், அரசினால் மட்டுமல்ல, சமூகத்தினாலும் புறக்கணிக்கப் படுகின்றனர். மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் எல்லாம், சிங்களவர், தமிழர், இரண்டு சமூகங்களுக்கும் பொதுவானவை தான்.

சமூக விஞ்ஞானத்தில் குட்டி-பூர்ஷுவா என்று அழைக்கப்படும் கீழ் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி, 1956 தேர்தல் முடிவை தீர்மானித்தது. பூர்ஷுவா அல்லது மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு கிடைத்து வந்த, வசதி வாய்ப்புகள் கைவரப் பெறாதவர்கள். ஆங்கில அறிவு குறைவாக இருந்த படியால், பதவிகளை கை நழுவ விட்டவர்கள். அவர்களிடம் இருந்த ஒரேயொரு துருப்புச் சீட்டு, அரசியல் அதிகாரம். தமக்கு பரிச்சயமான சிங்களம், அல்லது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்த கட்சிகளின் பின்னால் அணி திரண்டார்கள். பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சிக்கு, (தேர்தல் காலத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டது) ஓட்டுப் போட்டு வெல்ல வைத்த சிங்கள நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது ஒரு வர்க்கப் பிரச்சினை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆங்கில மொழி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், சிங்களவர், தமிழர் இருவருக்கும் பொதுவானது. இந்த புரிந்துணர்வு பல சிங்களவர்களிடம் இருந்துள்ளது. ஆயினும், அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத இனவாதத்தை அற்ப விஷயமாக கருதி புறக்கணித்தார்கள். இது சிங்களவர்களுக்கு மட்டும் பொதுவான குறைபாடு அல்ல. தமிழர்களும் நீதியான கோரிக்கைகளுக்கு பின்னாலான, தலைமைகளின் இனவாதக் கருத்துகளை பெரிது படுத்துவதில்லை.

சுதந்திரம் கிடைத்து ஐந்து ஆண்டுகளாகியும், வங்கிகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்களில் எல்லாம் அனைத்துப் பதிவுகளும் ஆங்கில மொழியில் இடம்பெற்றன. அரச அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், அதிகாரிகளுடன் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைமை நீடித்தது, காலனிய மொழிக்கு பதிலாக, சிங்களத்தையும், தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் திட்டம் ஏற்கனவே அரசிடம் இருந்துள்ளது. அதற்கென ஒரு ஆணைக்குழு, 1952 தொடக்கம் இயங்கி வந்தது. ஆனால், அரசினால் மிகக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்ட ஆணைக்குழு, சில மொழிபெயர்ப்பு வேலைகளைத் தவிர, உருப்படியாக எதையும் செய்யவில்லை. சிங்கள மக்கள் மத்தியில், மொழி உரிமைக்காக போராடியவர்கள் இரண்டு வகைப் பட்டவர்கள். ஒரு பிரிவினர், சிங்களத்தோடு தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்க விரும்பினார்கள். இன்னொரு பிரிவினர் மிகவும் தீவிரமாக செயற்பட்டனர். அவர்கள், சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டுமென விரும்பியதுடன், தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு நோக்கினார்கள். இரண்டாவது பிரிவினரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு மொழிகளினதும் உரிமைகளுக்காக பேசிய சிங்களவர்களும், வாய்மூடி மௌனிகளானார்கள்.

பெரும்பாலும், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சமூகப்பிரிவுகள் யாவும், ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. எந்த வகையிலும், தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத ஒரு சமூகப் பிரிவினர், பௌத்த மத பிக்குகள் மட்டுமே! மதவெறி கண்ணை மறைத்தது!! பௌத்த மதம் சங்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த சங்கங்கள், வெறுமனே மதத்தை மட்டும் போதிக்காமல், அரசியல் அபிலாஷைகளுடனும் இயங்கிக் கொண்டிருந்தன. இன்றைக்கும், குறிப்பிட்ட சில பௌத்த சங்கங்கள் இனவாதம் பேசும் அதே தருணத்தில், வேறு சில இன நல்லுறவை விரும்புகின்றன. ஆரம்பத்தில், சிங்களத்துடன், தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து கொடுக்க விரும்பிய பண்டாரநாயக்க, புத்த பிக்குகளின் வற்புறுத்தலால் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கினார். இதற்கு எதிர்வினையாக செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, "பண்டா-செல்வா ஒப்பந்தம்" ஏற்பட்டு, தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆயினும், புத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியதால், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. வெறுத்துப் போன செல்வநாயகம்,"சிங்களவர்கள் எதுவும் தர மாட்டார்கள்." என்ற விரக்தியில், "தனித் தமிழீழம்" என்ற புதிய பாதையை தேர்ந்தெடுத்தார்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Sunday, October 02, 2011

கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : எட்டு)


கொழும்பு நகரிற்கு மிக அருகாமையில், இரத்மலானையில் "கொத்தலாவல இராணுவப் பயிற்சிக் கல்லூரி" அமைந்துள்ளது. ஈழப் போர்க்களத்தில் கடமையாற்றிய பல இராணுவ அதிகாரிகளை அங்கே தான் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தற்போது தெற்காசிய நாடுகளில் இருந்தும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். பனாமா நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த, லத்தீன் அமெரிக்காவுக்கான இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு நிகராக பேசப்பட்டாலும், அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கல்லூரிக்கு தனது பெயரை வழங்கிய, ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக 1953 முதல் 1956 வரை பதவி வகித்தவர். இலங்கையின் மேட்டுக்குடியில் பிறந்து, பிரிட்டிஷ் காலனிய காவல்துறையில் பணியாற்றியவர். யார் இந்த கொத்தலாவல? லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளைப் போன்ற குணாம்சம் பொருந்திய ஒருவர். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர்.

கொத்தலாவல ஆட்சிக் காலத்தில் தான் பனிப்போர் தீவிரமடைந்தது. அதே காலகட்டத்தில் தான், இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்திருந்தது. அன்று சோஷலிச நாடுகளைப் பொறுத்த வரையில், இலங்கை ஒரு மேற்குலகிற்கு விசுவாசமான நாடு. ஏறக்குறைய, இஸ்ரேலுக்கும் மேற்குலகிற்கும் இடையிலான உறவைப் போன்று கணித்து வைத்திருந்தார்கள். அதனால், ஐ.நா.வுக்கான இலங்கையின் உறுப்புரிமைக்கும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பிறிதொரு தருணத்தில், சோவியத் யூனியனும், அமெரிக்காவும் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்த பின்னர் தான், இலங்கையை ஐ.நா.சபையில் அனுமதித்தார்கள். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பிரிட்டன் இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையில் தொடர்ந்தும் பிரிட்டிஷ் இராணுவ தளங்கள் இருப்பதற்கு அனுமதிக்கப் பட்டது. 1972 ம் ஆண்டு, திருகோணமலையில் இருந்த கடைசி கடற்படைத் தளம் அகற்றப்படும் வரையில், பிரிட்டிஷ் இராணுவ பிரசன்னம் இலங்கையில் நீடித்திருந்தது.

ஜோன் கொத்தலாவலையின் கம்யூனிச எதிர்ப்புவாதம், இந்தோனேசியாவில் பாண்டுங் மகாநாட்டிற்குப் பின்னர் உலகம் முழுவதும் அறியப் பட்டது. அமெரிக்காவுடனோ, அல்லது சோவியத்துடனோ சேராத, மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பான, "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு பாண்டுங் நகரில் நடைபெற்றது. நேரு, சூ என் லாய் போன்ற பிரபல உலகத் தலைவர்கள் சமூகமளித்திருந்தனர். ஐரோப்பிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த நாடுகளின் மகாநாடு என்பதால், இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இலங்கை சார்பில் கலந்து கொண்ட ஜோன் கொத்தலாவல, சீனா வெளிவிவகார அமைச்சர் சூ என் லாய் யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேரு இடையில் புகுந்து, அவர்களுக்கு இடையில் சமாதானம் செய்து வைக்க வேண்டியதாயிற்று. மகாநாட்டில், ஜோன் கொத்தலாவல தெரிவித்த கருத்துக்கள், மேற்கத்திய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றன. "காலனியாதிக்க நாடுகள் புரிந்த படுகொலைகளை கண்டிப்பவர்கள், கம்யூனிச நாடுகளில் நடந்த படுகொலைகளை கண்டிப்பதில்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்ப்பவர்கள், சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருப்பதை எதிர்ப்பதில்லை...."

அமெரிக்காவில், மக்கார்த்தியிசம் இடதுசாரிகளை வேட்டையாடி ஒடுக்கியது. அப்போது பல கம்யூனிச இலக்கியங்கள் தடை செய்யப்பட்டன. ஒரு காலத்தில், இலங்கைக்குள் மார்க்சிய கொள்கைகளை தாங்கிய நூல்கள், சஞ்சிகைகள் கொண்டு வருவதை தடை செய்திருந்தார்கள். குறிப்பாக, சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நூல்கள் யாவும், சுங்கப் பரிசோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. சில வேளை, அவை அங்கேயே எரிக்கப்பட்டன. 1955 ல் மீண்டும் ஒரு ஹர்த்தால் மிரட்டியதால், கொத்தலாவல வரிந்து கட்டிக் கொண்டு கம்யூனிஸ்டுகளுடன் மோதலுக்கு தயாரானார். இலங்கை வரலாற்றில் முதன் முதலாக, பாராளுமன்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சிறப்பு பொலிஸ் படையணி ஒன்று அமைக்கப் பட்டது. பொலிஸ் மா அதிபருக்கு கட்டுப்படாத, கொத்தலாவலைக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்ட அந்தப் பிரிவினர், அரச எதிரிகளை கண்காணிக்கத் தொடங்கினர். மார்க்சியர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் குறித்தும் தகவல்கள் திரட்டப் பட்டன. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன. தபால்கள் உடைத்து வாசிக்கப் பட்டன. இதைவிட, பச்சை வர்ண சீருடை அணிந்த துணை இராணுவக் குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது. பச்சை ஐக்கிய தேசியக் கட்சியின் வர்ணம் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களால் "சேர்" (Sir) பட்டம் வழங்கப்பட்ட, ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கம்யூனிசத்தோடு மல்லுக் கட்ட ஆரம்பித்து விட்டார். "கம்யூனிசத்தை இலங்கையில் இருந்து துடைத்தெறிவதே எனது முதலாவது கடமையாகும்..." என்று இலங்கை வானொலியில் முழங்கினார். வாய்ச்சொல்லுடன் நின்று விடாது செயலில் இறங்கினார். இலங்கை தோழர்களின் அழைப்பை ஏற்று வரவிருந்த, கயானா நாட்டு பொதுவுடமைவாதி செட்டி ஜெகனை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர், பறங்கியர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது இனவாத சேற்றை அள்ளி வீசினார். இலங்கையில் பொதுவுடைமை இயக்கத்தை சிதைக்க வேண்டுமானால், இனவாத நஞ்சை ஊட்ட வேண்டும் என்று கொத்தலாவல கண்டுகொண்டார். ஒருவகையில் பறங்கிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையின் ஆரம்பமாகவே, அந்த நிகழ்வைக் கருத வேண்டியுள்ளது. ஏனெனில், 1961 ல், "இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக" குற்றம் சாட்டி, பறங்கி இன அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர், பெருமளவு பறங்கியர்கள் பும்பெயர்ந்து விட்டனர். சிங்கள பேரினவாதமானது, பறங்கி சிறுபான்மையினத்தை எவ்வாறு ஒடுக்கியது, என்பதில் இருந்து தமிழ் தேசியம் பாடம் கற்றுக் கொள்ளத் தவறி விட்டது.

உண்மையில், சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான பாய்ச்சல், ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்களை மட்டுமே குறி வைத்தது. அதற்குக் காரணம், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் ஏற்பட்ட சமூக-பொருளாதார மாற்றம். ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் இருந்து, இந்தியத் தமிழர்கள் தொழில் தேடி வருவது வழமையானது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கூடவே பொருளாதார நெருக்கடியும் வந்து விட்டதால், இந்திய குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐம்பதுகளிலும், கொழும்பு சென்றால் தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணி, பெருந்தொகை இந்தியர்கள் வந்து கொண்டிருந்தனர். இவர்களில் பலர், ராமேஸ்வரம்-மன்னார் வழியாக படகுகளில் வந்திறங்கியதால், "கள்ளத் தோணிகள்" என்று அழைக்கப் பட்டனர். அரசைப் பொறுத்த வரையில், இவர்கள் எல்லோரும் "சட்டவிரோத குடியேறிகள்". அதனால், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தடுத்து வைத்து நாடு கடத்தினார்கள். கொத்தலாவலையின் இந்திய எதிர்ப்புணர்வும், இனவாதக் கருத்தியலும் சேர்ந்து கொண்டமையால்; பெரும்பாலும் இந்தியத் தமிழர்கள் பொலிஸ் நெருக்குவாரங்களுக்கு ஆளானார்கள். நாட்டினுள் சட்டப்படி தங்கியிருந்த இந்தியத் தமிழர்களும் கைது செய்யப் பட்டனர். இன்றைய காலத்தில், உதாரணத்திற்கு மலேசியாவில், வெளிநாட்டு தொழிலாளர் துன்புறுத்தப்படுவது போன்ற நிலைமைக்கு ஒப்பானது, அன்று நடந்த சம்பவங்கள்.

ஒரு பக்கம், இந்தியத் தமிழர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த கொத்தலாவல அரசு, மறுபக்கத்தில், இலங்கைத் தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்டது. செப்டம்பர் 1954 ல், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கொத்தலாவல, "சிங்களத்தோடு, தமிழையும் அரச கரும மொழிகளாக்குவதாக" வாக்குறுதி அளித்தார். உண்மையில், மேலைத்தேய கலாச்சாரத்தில் ஊறிய கொத்தலாவல, தமிழை மட்டுமல்ல, சிங்களத்தை கூட அரச கரும மொழியாக்குவதை விரும்பவில்லை. ஒரு தடவை புத்த பிக்குகளுடனான விவாதத்தில் பின்வருமாறு கூறினார். "ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு மாறுவது படிப்படியாக நடைபெற வேண்டும். தாய்லாந்தில் நடந்த தவறுகளை நாம் திருப்பிச் செய்யக் கூடாது. ஆங்கிலத்தில் கருமமாற்றக் கூடிய படித்தவர்களை வெளியேற்றி விட்டு, அந்த இடத்தில் தகுதியற்ற நபர்களை போட்டுள்ளனர். தாய்லாந்து மொழியில் மட்டுமே கல்வி கற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாது தடுமாறுகின்றனர்."

கொத்தலாவலையின் ஆங்கில மொழி மீதான பற்று மட்டுமல்ல, தமிழுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியும், சிங்கள பேரினவாதிகளை, குறிப்பாக இனவாத பிக்குகளை ஆத்திரமூட்டியது. இன்று தமிழ் குறுந் தேசியவாதிகள், "நாம் மட்டுமே உரிமைக்காக போராடினோம்... சும்மா இருந்த முஸ்லிம்கள் இடையிலே புகுந்து தமக்கும் பங்கு கேட்கிறார்கள்...." என்று வியாக்கியானம் செய்கின்றனர். அன்று சிங்கள பேரினவாதிகள், அதே வாதத்தை முன் வைத்து தான், தமிழுக்கு சம அந்தஸ்து வழங்க மறுத்தார்கள். ஆரம்பத்தில் பண்டாரநாயக்கவும், அவரது சுதந்திரக் கட்சியும், "சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும், தமிழை பிராந்திய ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கும்" கொள்கையை கொண்டிருந்தார்கள். பின்னர், "சிங்களம் மட்டும்" கோரிக்கை தீவிரமடைவதைக் கண்டு பின்வாங்கினார்கள். 1956 ம் ஆண்டு தேர்தலில், சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்துவதாக வாக்களித்த பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. அதே ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்களம் மட்டும் கொள்கையை பின்பற்றுவதாக அறிவித்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல், இரு மொழிக் கொள்கையை பின்பற்றிய இடதுசாரிகளும், தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களம் மட்டும்" கொள்கையை ஆதரிக்காதவர்கள் அனைவரும் இனத் துரோகிகள் என்ற அறிவிப்பு, இடதுசாரிகளை கலக்கமடைய வைத்தது. அவர்களது கலக்கத்தை மெய்ப்பிப்பது போல ஒரு சம்பவம் நடந்தது.

11 -10 -1955 அன்று, கொழும்பு நகரசபை மண்டபத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, "சிங்களத்தையும், தமிழையும் ஆட்சி மொழிகளாக்க கோரும்" வெகுஜன இயக்கத்தின் கூட்டம் அது. இன, மத வேறுபாடுகளை மறந்து,ஒன்று திரண்டிருந்த மக்கள் மீது, சிங்களப் பேரினவாதிகள் தாக்குதல் நடாத்தினார்கள். கூட்டத்தில் ரகளை பண்ணியவர்களில் புத்த பிக்குகளும் அடங்குவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் திருப்பித் தாக்கினார்கள். புத்த பிக்குகளை தாக்கிய செயல், பழமைவாத சமூகத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. சிங்கள பேரினவாதிகள், மக்களின் அனுதாபத்தை தமக்கு சாதகமாக வென்றெடுத்தார்கள். நகரத் தெருக்களில் குழுமிய புத்த பிக்குகள், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கல் வீசினார்கள். அருகில் இருந்த தமிழர், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினார்கள். "தமிழர், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள இடதுசாரிகளும் எமக்கு எதிரிகள்." என்று சிங்கள பேரினவாதம் அறிவித்தது. முஸ்லிம்களையும், இடதுசாரிகளையும் இணைத்து, சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்திருக்க வேண்டிய தமிழ் தேசியவாதிகள், அந்த வாய்ப்பையும் தவற விட்டார்கள்.

சிங்கள தேசியவாதமும், தமிழ் தேசியவாதமும் ஒன்றோடொன்று தொடர்பற்று தனித்தனியாக வளர்ந்தது போலத் தோன்றலாம். இரண்டு பக்க கொள்கை வகுப்பாளர்களும் அவ்வாறான பரப்புரைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். சிங்கள தேசியவாதிகள் "சிங்கள இனத்தை அழிக்கத் துடிக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்கும் இனப் பாதுகாப்பு போராட்டம்," நடத்துகின்றனர்! தமிழ் தேசியவாதிகள்,"தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் சிங்கள மேலாதிக்கத்தை எதிர்க்கும் இன விடுதலைப் போராட்டம்,"நடத்துகின்றனர். இரண்டு தேசியங்களினதும் தோற்றத்திற்கு வழி சமைத்த சமூக-பொருளாதாரக் காரணிகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பிரிட்டிஷ் காலனிய மேலாதிக்கம், இவ்விரண்டு தேசியங்களையும் அடக்கி ஆண்டது. அவற்றின் மொழி, மத, கலாச்சார அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை. காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், ஆங்கிலேய விசுவாசிகளான மேட்டுக்குடி ஆட்சி செய்தது. இந்த வர்க்கத்தினர், ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, கொவிகம-வெள்ளாள உயர்சாதியை சேர்ந்தவர்களாகவும் தம்மை அடையாளப் படுத்தி வந்தனர். தேசத்தில் சிங்கள-தமிழ் மொழி பேசும் பெரும்பான்மை மக்களின் நலன்களை பிரதிபலிக்காத, சிறுபான்மையினரின் ஆட்சியாகவே அதனைக் கருத வேண்டும்.

கம்யூனிச விரோத பிரதமரான கொத்தலாவல காலத்தில், சிறுபான்மை வர்க்க ஆட்சியின் உச்சகட்ட ஊதாரித்தனத்தை நேரடியாக காண முடிந்தது. கொத்தலாவலையின் பெருங்குடியும், பெண் பித்தும் ஊரறிந்த விடயங்கள். பிரதமரின் அலுவலகத்தை அலங்கரிக்கும் ரோஸ் நிற புடவை அணிந்த சிட்டுக்கள், அறுபது அழகிய கன்னியர்கள் இழுத்துச் சென்ற பிரதமரின் அலங்கார ஊர்தி, இது போன்ற சூடான கிசுகிசு செய்திகள் நாளேடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகின. போதாக்குறைக்கு, பசுக்கன்று இறைச்சியை தணலில் வாட்டி உண்ட, ஐரோப்பிய பாணி "பார்பகியூ விருந்து" மத நம்பிக்கையாளர்களின் மனதை புண்படுத்தியது. பௌத்த பிக்குகளும், பழமைவாத சிங்களவர்களும், இவற்றை எல்லாம் "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரமாகவே" பார்த்தார்கள்.

உயர்சாதி கொவிகமவினர் மட்டுமே அரசியல் ஆதிக்கம் செலுத்திய தேசத்தில், பிற சாதியினருக்கு உரிமைகள் மறுக்கப் பட்டிருந்தன. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசியவாதம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. இன தேசியவாத உணர்வூட்டுவதன் மூலம், சிங்கள தேசியவாதம் அனைத்து சாதிகளையும் உள்வாங்கிக் கொண்டது. வட மாகாணத்தில் இதே வேலையே தமிழரசுக் கட்சியினர் செய்து கொண்டிருந்தனர். சாதிவாரியாக பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்க்கும் தமிழ் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள். சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் வருகைக்கு முன்னர், இடதுசாரிகள் மட்டுமே அனைத்து சாதிகளையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்திருந்தனர். ஆனால், அவர்கள் தான் "முதலாளிகளுக்கு விரோதமான கடவுள் மறுப்பாளர்கள்" ஆயிற்றே! அப்படியான சக்தி இலங்கையில் பலம் பெறுவதை, மதகுருக்களும், உள்நாட்டு முதலாளிகளும் விரும்புவார்களா? பௌத்த-இந்து மதவாதிகள், சிங்கள-தமிழ் முதலாளிகள், இவர்களின் நலன்களை ஒரு தேசியவாத அரசு மட்டுமே நிச்சயப் படுத்தும்.

(தொடரும்)

....................................................................
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்