இலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் இரண்டறக் கலந்துள்ளனர். ஒருபுறம் சிங்கள இனவாதமும், மறுபுறம் தமிழ் இனவாதமும் உச்சத்தை அடைந்துள்ள இன்றைய காலத்தில், இந்தத் தகவல்கள் பலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதனை உறுதிப் படுத்தும் ஏராளமான சரித்திர, அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்துள்ளன.
புத்தளம், சிலாபம் பகுதியில் இன்றைக்கும் தமது ஆப்பிரிக்க வேர்களை இழக்காத சமூகம் ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களது உருவத் தோற்றம் மட்டுமல்ல, கலாச்சாரம், இசை கூட தனித்துவமானது. இது பற்றி, சில வருடங்களுக்கு முன்னர், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும், பிபிசி தமிழோசையும் ஆவணப் படங்களை தயாரித்திருந்தன. இவர்கள் இலங்கையை போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட மொசாம்பிக் நாட்டவரின் வம்சாவளியினராக இருக்கலாம்.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், வேறிடத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களில் ஒரு சிறிய பிரிவினர் தான், தமது கலாச்சார வேர்களை இழப்பதில்லை. மிகுதிப்பேர் அந்த நாடுகளில் இருக்கும் பெரும்பான்மை சமூகங்களுடன் கலந்து விடுவார்கள். அது இயற்கை. ஆகவே, இந்த மொசாம்பிக் ஆப்பிரிக்க வம்சாவளியினரின் சகோதரர்களும், திருமண உறவு காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிங்களத்தை, அல்லது தமிழை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவர்களை நாங்கள் சிங்களவர் என்றோ, அல்லது தமிழர் என்றோ, பேசும் மொழியை வைத்து வகைப் படுத்துகின்றோம்.
500 வருடங்களுக்கு முன்னர், போர்த்துகேய காலனிய ஆட்சிக் காலத்தில் மட்டுமே ஆப்பிரிக்கர்கள் இலங்கையில் குடியேறி இருக்கிறார்கள் என்று கூற முடியாது. அதற்கு முன்னரே, சுமார் 2000 வருடங்களுக்கு முன்னரே வட இலங்கையில் ஆப்பிரிக்கர்கள் குடியேறி உள்ளனர். அதற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. யாழ் நகருக்கு அருகில் உள்ள வேலணை தீவில், அல்லைப்பிட்டி என்னும் ஊரில் கிணறு தோண்டும் நேரம், சில ஆப்பிரிக்க சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டன. சந்தேகத்திற்கிடமின்றி, அந்த சிற்பங்கள் ஆப்பிரிக்க கறுப்பினத்தவரின் முகத்தை ஒத்துள்ளன. இந்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், 2000 வருட கால பழமையானவை. இதன் மூலம், ஆப்பிரிக்கர்கள் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளமை உறுதியாகின்றது.
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள், ஆப்பிரிக்கர்களை கூலிப் படையாக வைத்திருந்துள்ளனர். அந்தக் காலங்களில் தேசிய இராணுவம் கிடையாது. மன்னர்கள் பல்லின வீரர்களை கொண்ட கூலிப் படைகளை வைத்திருப்பது சர்வசாதாரணம். "யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் தமிழர்களாக இருந்தால், அவர்களின் கீழ் சேவை செய்த படையிலும், தமிழர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்" என்று நினைப்பது அறியாமை. எல்லாளனின் படையில் சிங்கள வீரர்களும், துட்ட கைமுனுவின் படையில் தமிழ் வீரர்களும் இருந்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் தேசியவாத, இனவாத எண்ணம் துளியும் இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட அரசியல் கோட்பாடுகள் ஆகும்.
10 ம் அல்லது 14 ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட வையாபாடல் என்ற நூலில், ஆப்பிரிக்க கூலிப் படையினர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வையாபாடல் ஆப்பிரிக்கர்களை "பப்பராவர்" என்ற பெயரில் அழைக்கின்றது. ஆப்பிரிக்க கறுப்பர்களைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல்லான "பப்பராவர்" இருக்கும் பொழுது, நாங்கள் இன்றைக்கும் ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய "நீக்ரோக்கள், காப்பிலிகள், ஆப்பிரிக்கர்கள்" போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இது எமது ஐரோப்பிய மையவாத சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது. தீவிர தமிழ்தேசியவாதிகள் பலர் கூட, நடைமுறையில் ஐரோப்பிய மையவாதிகளாக உள்ளனர்.
வட இலங்கையில் சில ஊர்களுக்கு "பப்பரப் பிட்டி" என்ற பெயர் உள்ளது. அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்ட வேலணைத் தீவில் மட்டுமல்லாது, ஆணையிறவுக்கு அருகில், சுண்டிக்குளம் பகுதியில் ஒரு ஊருக்கு பப்பரப் பிட்டி என்ற பெயர் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளது. இதிலிருந்து, ஆப்பிரிக்கர்கள், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் குடியேறி இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு காலத்தில், நயினா தீவுக்கு "பப்பரத் தீவு" என்ற பெயர் இருந்தது. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு மேற்கே உள்ள, ஊர்காவற்துறை துறைமுகம் ஊடாகவே ஆப்பிரிக்க குடியேற்றம் நடந்திருக்க வேண்டும். துறைமுகத்தை குறிக்கும் பழைய தமிழ்ச் சொல்லான "ஊருத்துறை" மருவி, ஊர்காவற்துறை ஆகியிருக்கிறது. போர்த்துக்கேயர்கள் துறைமுகத்தை தமது மொழியில் "Cais" என்று அழைத்தனர். டச்சுக்காரர்கள் அதனை Kayts என்று உச்சரித்தார்கள். அந்தப் பெயரே ஆங்கில மொழியிலும் நிலைத்து விட்டது.
பாக்கு நீரிணைக்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை, பண்டைய காலத்தில் மிகவும் சுறுசுறுப்பான சர்வதேச துறைமுகமாக திகழ்ந்தது. அங்கே ஆப்பிரிக்காவில் இருந்தும் வணிகக் கப்பல்கள் வந்து சென்றுள்ளன. 14 ம் நூற்றாண்டு வரையிலும் கூட, யாழ்ப்பாணத்திற்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. மொரோக்கோ நாட்டை சேர்ந்த பிரபல யாத்திரீகரான இபுன் பதூதா, இலங்கை வந்து யாழ்ப்பாண மன்னனின் விருந்தினராக தங்கி இருந்திருக்கிறார். அன்று இபுன் பதூதா எழுதிய பயணக் குறிப்புகளை இன்றைக்கும் வாசிக்கலாம்.
இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்களும், பண்டைய கால சர்வதேச வர்த்தகம் காரணமாக வந்திருக்கலாம். 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் காலனிப் படுத்தும் வரையில், "ஆப்பிரிக்கர்கள் நாகரீகமடையவில்லை" என்ற தவறான கருத்தை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் பரப்பி வந்தனர். இந்த ஐரோப்பிய மையவாத சிந்தனையை, யாழ்ப்பாணத்தில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் தகர்த்துள்ளனர். இன்றைக்குள்ள ஈழத் தமிழர்கள், ஆப்பிரிக்காவுடனான தமது பண்டைய தொடர்புகளை முற்றாக மறந்து விட்டார்கள். அவர்கள் ஆங்கிலேயர்கள் பரப்பிய கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பது மிகப் பெரிய வரலாற்று சோகம்.
ஆப்பிரிக்க வணிகக் கப்பல்கள், எத்தியோப்பியா போன்ற கிழக்காபிரிக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம். அதேநேரம், மொரோக்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்தும் வணிகக் கப்பல்கள் வந்துள்ளன. மொரோக்கர்களை, போர்த்துக்கேயர்கள் "மூர்கள்" என்று அழைத்தனர். இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு மூர்கள் என்ற பெயருமுண்டு. 2000 வருடங்களுக்கு முன்னரே, அதாவது இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, மொரோக்கோ நாட்டு கடலோடிகள் மாலை தீவுகள், கேரளா, இலங்கை ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். மறைந்த ஞானிகளின் சமாதிகளை தர்க்கா என்ற புனித ஸ்தலமாக வழிபடும் முறை மொரோக்கோவில் தோன்றியது. இன்றைக்கும் அந்த நாட்டில், பாரம்பரிய இஸ்லாமிய மத வழிபாடாக கருதப் படுகின்றது. இன்றைக்கும் இலங்கை, மாலை தீவுகள், தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் தர்கா வழிபாடு பிரசித்தமானது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களை தனியான தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழ் தேசியவாதிகள், அவர்களை "இஸ்லாமியத் தமிழர்" என்று கூறி வருகின்றனர். இது பெரும்பாலும் அறியாமை காரணமாக ஏற்படும் தவறான புரிதல். இலங்கை முஸ்லிம்களை குறிக்கும் "மூர்கள்" என்ற சொல் போர்த்துகேய காலனிய காலத்திலும், "சோனகர்கள்" என்ற சொல் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இன்று இவ்விரண்டு சொற்களும் முஸ்லிம்களை குறிக்கும் என்றாலும், எல்லா மூர்களும், எல்லா சோனகர்களும் முஸ்லிம்கள் என்று கருதுவது தவறாகும். எவ்வாறு தமிழர் என்பது ஒரு மொழியை பேசும் மக்களைக் குறிக்கின்றதோ, அதே மாதிரி முஸ்லிம்கள் என்பது இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுவோரைக் குறிக்கும்.
"சோனகர்கள்" என்பது, அரேபியரைக் குறிக்கும் பண்டைய தமிழ்ச் சொல் ஆகும். ஆனால், சோனகர்கள் எல்லோரும் அரேபியர்கள் அல்ல. அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, அரபு வணிகர்கள் வட இலங்கையில் குடியேறி உள்ளனர். அன்று அவர்கள் அரேபியர்களாக அறியப் படவில்லை. கிரேக்கர்களும் வணிகத் தொடர்பு காரணமாக இலங்கையில் குடியேறி உள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய தீபகற்பம் முழுவதும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரோமர்கள் என்ற பெயரில் கிரேக்கர்களே அரேபியாவை ஆண்டனர். தமிழர்கள் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இன்றைய கிரீஸ் நாட்டில் உள்ள இயோனியா மாநிலத்தில் இருந்து யவனர் என்ற பெயர் வந்திருக்கலாம். இலங்கையில் யவனர் என்ற சொல் மருவி சோனகர் ஆகியிருக்கின்றது. ஆகவே, சோனகர் என்ற சொல் இலங்கையில் குடியேறிய அரேபியர்களை மட்டுமல்லாது, கிரேக்கர்களையும் குறிக்கும்.
வட இலங்கையில் (அரபு-கிரேக்க) சோனகர்களும், (ஆப்பிரிக்க) பப்பராவர்களும், இரண்டு வேறுபட்ட சமூகங்களாக வாழ்ந்திருக்க வேண்டும். (வையாபாடலிலும் அவ்வாறு தான் குறிப்பிடப் பட்டுள்ளது.) சமஸ்கிருத மொழியில் ஆப்பிரிக்கர்களை குறிக்க பப்ரு (Babhroo) என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. பப்ரு என்பது சுருள் முடி கொண்டவர்கள் என்று அர்த்தம் ஆகும். சிங்கள மொழியில் அந்தச் சொல் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. பப்ரு என்ற சொல், கிரேக்க மொழியில் "Barbar" என்றும், அரபு மொழியில் "Berber" என்றும் பாவிக்கப் பட்டது. பண்டைய காலங்களில் தமிழ், சமஸ்கிருதம், அரபி, கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான கலாச்சார தொடர்பு இத்தால் துலக்கமாகின்றது.
இந்தக் கட்டுரை கூறும் தகவல்கள் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். குறிப்பாக, "தமிழினம், ஆயிரமாயிரம் வருடங்களாக வேற்று இனங்களுடன் கலக்காமல் இனத் தூய்மை பேணி வருகின்றது." என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் இனவாதிகள், இதனை "அர்த்தமற்ற உளறல்கள்" என்று புறக்கணிக்கலாம். இங்கே எழுதி உள்ளவை பொய்யானவை என்றால், ஒரு காலத்தில் புலிகளின் ஆங்கில ஊடகமாக கருதப்பட்ட தமிழ்நெட் இணையத்தளமும் பொய் சொல்லுமா? குறிப்பாக, பப்பராவர் பற்றிய தகவல்கள் யாவும் Tamilnet ல் இருந்து எடுத்தவை தான். Tamilnet இணையத் தளத்திற்கு எனது நன்றிகள்.
மேலதிக தகவல்களுக்கு:
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34949
http://www.tamilnet.com/art.html?catid=98&artid=24730
No comments:
Post a Comment