ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பண்டார வன்னியனுக்கு உரிமை கோருவதற்கு தமிழ் குறுந் தேசியவாதிகளுக்கு எந்தத் தகுதியும் கிடையாது!
வரலாற்று நாயகர்களுக்கு தேசியாதிகள் உரிமை கோருவது உலக வழமை. ஆனால், அன்றைய வரலாற்று நாயகர்களுக்கும் இன்றைய தேசியவாதிகளுக்கும் இடையில் பெருமளவு கொள்கை வேறுபாடு இருக்கும். அதை யாரும் கண்டுகொள்வதில்லை.
அதே மாதிரி, அன்றைய பண்டார வன்னியனுக்கும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளுக்கும் கடுகளவு ஒற்றுமை கூடக் கிடையாது. பண்டார வன்னியனின் அரசியல் சித்தாந்தம் முற்றிலும் மாறுபட்டது. இன வேற்றுமை பாராட்டாமல், சிங்களவருடன் கூட்டுச் சேர்ந்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடினான்.
அன்றைய காலத்தில் பண்டார வன்னியன் முன்னெடுத்த அரசியலுக்கும், இன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பண்டார வன்னியன் இன்றிருந்தால், "சிங்களவருடன் நல்லிணக்கம் பேசிய ஒத்தோடி" என்று, நமது தமிழ்த் தேசியவாதிகள் திட்டித் தீர்த்திருப்பார்கள்.
சிங்கள - தமிழ் இன முரண்பாடு ஒரு இருபதாம் நூற்றாண்டின் தோற்றப்பாடு. இன்று பலர் கற்பனை செய்வது போல, சிங்களவரும், தமிழரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பகைவர்களாக வாழவில்லை. அதற்கு பண்டார வன்னியன் வரலாறு சிறந்த உதாரணம்.
தமிழ் நாட்டில் இருந்து வந்து குடியேறிய வன்னியர்களால், அந்தப் பிரதேசத்திற்கு வன்னி என்று பெயர் வந்ததாக நம்பப் படுகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும், தமிழக வன்னியர்கள் சிங்கள அரச வம்சத்துடன் இனக் கலப்பு செய்திருந்த வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் இலங்கையில் கால் பதித்த நேரம், கண்டி ராஜ்ஜியம் சுதந்திரமாக இருந்தது. வன்னிப் பிரதேசத்தை ஆண்ட குறுநில மன்னனான பண்டார வன்னியன், கண்டி ராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தி வந்தான்.
யாழ் குடா நாடு ஐரோப்பிய காலனிய ஆட்சியின் கீழ் இருந்தது. வன்னிப் பிராந்தியம், கண்டிய ராஜ்ஜியத்தின் வடக்குப் புற பாதுகாப்பு அரணாக இருந்தது. அதனால் தான், காலனிய படைகள் முதலில் இடையில் இருந்த தடையான பண்டார வன்னியனை அகற்றும் போரை நடத்தி இருந்தனர்.
அன்று நடந்த போர்களில், டச்சுக் காலனியப் படைகள் பல தடவை தோல்வியை சந்தித்தன. கண்டி ராஜ்ஜியத்திடம் இருந்து கிடைத்த பீரங்கி போன்ற "நவீன ஆயுதங்கள்" வன்னிப் படைகளுக்கு உதவின. மேலும் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லாப் போரிலும் ஈடுபட்டிருந்தனர்.
வன்னி குறுநில மன்னனான பண்டார வன்னியன், டச்சு, ஆங்கிலேய காலனிய ஆக்கிரமிப்பாளரருக்கு எதிராக போரிட்டு மடிந்தான். 31 அக்டோபர் 1803 அன்று, ஒட்டிசுட்டானில் நடந்த போரில், டச்சு படைத் தளபதி ஃபொன் டிரிபேர்க்கினால் (Von Drieberg) தோற்கடிக்கப் பட்டான்.
அப்போது இலங்கையில் ஆங்கிலேய காலனிய ஆட்சி ஆரம்பமாகி விட்டிருந்தது. டச்சு காலனியவாதிகளுடனான போரில், இலங்கையை ஆங்கிலேயர் கைப்பற்றி விட்டிருந்தனர். இருப்பினும், பண்டாரவன்னியனுக்கு எதிரான படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த லெப்டினன்ட் ஃபொன் டிரிபேர்க், ஆங்கிலேயருடன் ஒத்துழைத்திருந்தான்.
பண்டாரவன்னியனை தோற்கடித்த தளபதியின் பெயரில் ஒரு (கிறிஸ்தவ) தனியார் பாடசாலையும் உருவானது. டிறிபேர்க் கல்லூரி என்ற அந்தப் பாடசாலை இன்றைக்கும் சாவகச்சேரியில் உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக இயங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்திலும் அதன் பெயர் மாற்றப் படவில்லை. இன்றைக்கும் டிறிபேர்க் கல்லூரி என்ற பெயரில் தான் இயங்குகின்றது.
பண்டார வன்னியனும், அவனது படையில் இருந்த பெரும்பாலான வீரர்களும் தமிழர்கள் தான். ஆனால், சிங்கள வீரர்களும் இருந்தனர். அதில் எந்த அதிசயமும் இல்லை. வன்னி குறுநில மன்னர்கள், கண்டி ராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தி ஆண்டு வந்தனர். அத்துடன் அந்தக் காலத்தில் தேசிய இராணுவ அமைப்பு இருக்கவில்லை. மன்னர்களிடம் இருந்ததெல்லாம் கூலிப்படைகள் தான். அந்தக் கூலிப் படையில் பல வேறுபட்ட இனம், மதம், மொழிப் பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் இருந்தனர்.
பண்டாரவன்னியன் "தூய தமிழன்" என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. தனிப்பட்ட முறையில், பண்டார வன்னியனின் குடும்பம் சிங்களவருடன் திருமண உறவுகளைப் பேணி வந்தது. பண்டைய அனுராதபுர நகரத்தில் பண்டாரவன்னியனின் சிங்கள உறவினர்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்தில் இந்திய வர்ணாச்சிரம விதிகள் இலங்கையிலும் பின்பற்றப் பட்டு வந்தன. அரச வம்சத்தினர் எப்போதும் சத்திரியர்களாக இருக்க வேண்டுமென்ற விதி இருந்தது. பேசும் மொழியை விட, பிறப்பால் வந்த சாதி முக்கியமாகக் கருதப் பட்ட காலம் அது.
19ம் நூற்றாண்டு வரையிலுமான இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இன வேற்றுமை உணர்வு யாரிடமும் இருக்கவில்லை. அது பிற்காலத்தில் ஆங்கிலேயரால் திணிக்கப் பட்டது. கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்றும் நோக்கில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப்பாகுபாடு தூண்டி விடப் பட்டது. கண்டி ராஜ்ஜியம் வீழ்ந்தமைக்கு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒரு காரணம்.
பண்டார வன்னியன் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்றே வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது. அவன் எந்தக் காலத்திலும் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கவில்லை. தேசியவாதம் என்ற கருத்தியல் அன்று யாருடைய மனதிலும் இருக்கவில்லை. பண்டார வன்னியன், இலங்கையை ஆக்கிரமிக்கத் துடித்த ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக சிங்கள மக்களின் ஆதரவுடன் போரிட்டான்.
இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் சிங்கள மக்களையும் எதிரிகளாகக் கருதுகின்றனர். அத்துடன் அவர்கள் தீவிரமான ஏகாதிபத்திய விசுவாசிகள். இந்தக் காலத்தில், சிலநேரம் இடதுசாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றிப் பேசினாலும், நமது தமிழ்த் தேசியவாதிகள் காதைப் பொத்திக் கொண்டு ஓடுவார்கள்.
அதாவது, பண்டார வன்னியனின் யாரை எதிரிகளாகக் கருதி போரிட்டானோ, அவர்களது நண்பர்கள் நண்பர்கள் தான் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள்!பண்டார வன்னியன் இன்றிருந்தால், "ஒத்தோடிகளான" தமிழ்த் தேசியர்களை துரோகிகள் என்று தூற்றி இருப்பான்.
பண்டார வன்னியன், தமிழ்த் தேசியவாதிகள், ஆகிய இரண்டு தரப்பினரதும் அரசியல் கொள்கைகள் முற்றிலும் வேறுபட்டவை. பகை முரண்பாடு கொண்டவை. எந்தக் காலத்திலும் ஒன்று சேர முடியாதவை.
அப்படி இருக்கையில் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் பண்டார வன்னியனுக்கு உரிமை கோருவது ஒரு முரண்நகை. தேசியவாதிகள் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத சரித்திர நாயகர்களுக்கு சொந்தம் கொண்டாடும் கேலிக்கூத்தை, இது போன்ற பல இடங்களில் அவதானிக்கலாம்.
No comments:
Post a Comment