ஈழப்போர் நடந்த காலம், யாழ்ப்பாணத் தமிழ் முதலாளிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேரழிவுகளுக்கு மத்தியிலும் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார்கள். ஒரு பக்கம் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கையில், மறுபக்கம் முதலாளிகளின் கஜானாவில் பணம் குவிந்து கொண்டிருந்தது. அதற்காக அவர்கள் ஒரு நிமிடம் கூட வருத்தப் படவில்லை.
பெரும்பாலானோருக்கு நன்கு தெரிந்த வர்த்தகப் பிரபலம், காலஞ்சென்ற மகேஸ்வரனை உதாரணமாக எடுக்கலாம். இவர் ஒன்றுமில்லாத ஓட்டாண்டியாக தனது வர்த்தக வாழ்வை ஆரம்பித்தவர். போர்க் காலத்தில் மண்ணெண்ணை (கெரசின் ஆயில்) கடத்தல் மூலம் கோடீஸ்வரனாக மாறினார். சட்டவிரோதமான கடத்தல் வேலை செய்து முதலாளி ஆகலாம் என்று நிரூபித்தார்.
அந்தக் காலத்தில் பொருளாதாரத் தடை இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று, அரசு பல பொருட்களை தடை செய்திருந்தது. அதனால், மண்ணெண்ணை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வீடுகளில் சமைப்பதற்கும், வெளிச்சத்திற்கும் மண்ணெண்ணெய் தேவைப் பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக ஓடாமல் நின்ற வாகனங்களையும் மண்ணெண்ணெய்யில் ஓட வைத்தார்கள்.
கடத்தல் பேர்வழி மகேஸ்வரன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மண்ணெண்ணை வாங்கி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கடத்திச் சென்றார். அதற்காக காவலரணில் இருந்த இராணுவத்தினருக்கும் இலஞ்சம் கொடுக்கப் பட்டது.
அன்று ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலை 13 ரூபாய்கள் மட்டுமே. ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 300 ரூபாய்க்கு விற்கப் பட்டது! அதாவது முப்பது மடங்கு இலாபம் வைத்து விற்றார். இந்தப் பகல் கொள்ளை காரணமாக, அவர் தமிழ் மக்களால் "மண்ணெண்ணை மகேஸ்வரன்" என்ற பட்டப் பெயரால் அழைக்கப் பட்டார். மகேஸ்வரனின் பணம் பாதாளம் மட்டும் பாய்ந்தது.
யாழ் குடாநாட்டு பத்திரிகையான உதயன், "மண்ணெண்ணெய் விலை குறைத்த வள்ளல்" என்று அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. அதாவது, சிறு வியாபாரிகள் மண்ணெண்ணெய்யை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில், மகேஸ்வரன் ஒரு மொத்த வியாபாரியாக கப்பல் மூலம் "இறக்குமதி" செய்தாராம். அதனால் மண்ணெண்ணெய் விலை குறைந்ததாம். கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.
மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரனும் மண்ணெண்ணை கடத்தி விற்று கோடீஸ்வரன் ஆனவர் தான். இன்று யாழ் நகரில் ஒரு பெரிய நட்சத்திர தங்குவிடுதிக்கு சொந்தக்காரன்.
புலிகளின் காலத்தில் உதயன் பத்திரிகை யாழ் குடாநாட்டில் ஏக போக உரிமை கொண்டிருந்தது. இன்றைக்கும் அது தான் அதிகளவில் விற்பனையாகின்றது. உதயன் நிறுவன முதலாளி சரவணபவனும், யாழ் நகரில் ஒரு நட்சத்திர தங்குவிடுதி வைத்திருக்கிறார்.
அரசியலில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவம் கோரிய மாதிரித் தான், தமிழ் முதலாளிகளும் நடந்து கொண்டார்கள். போர் நடந்த காலம் முழுவதும், அவர்கள் சொன்ன விலைக்கு மக்கள் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
"ஐயோ பாவம், நமது சொந்த இன மக்கள் தானே," என்று ஒரு முதலாளி கூட பரிதாபப் படவில்லை. உடமைகளை இழந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த மக்களிடம் இரக்கமின்றி சுரண்டிக் கொழுத்தனர். மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் அட்டைக்கும், இந்தத் "தமிழ்"(?) முதலாளிகளுக்கும் என்ன வித்தியாசம்?
முதலாளித்துவத்தில் போட்டி இருக்க வேண்டும் என்று பொருளியல் அறிஞர்கள் சொல்வார்கள். யாழ்ப்பாண தமிழ் வணிகர்கள், எந்தப் போட்டியாளரும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக வர்த்தகம் செய்தனர்.
1983 ம் ஆண்டு போர் தொடங்கிய காலத்தில் இருந்து சிங்கள வணிகர்கள் வட மாகாணப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. 1991 ம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டனர். யாழ் குடாநாட்டு வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. அந்தத் தடை அகற்றப் பட்டதும் தமிழ் வர்த்தகர்கள் காட்டில் ஒரே மழை தான்.
அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்த உண்மையெல்லாம் எப்படித் தெரியும்? "சிங்களவர்கள் எங்களை அழிக்கத் துடிக்கும் எதிரிகள்." "முஸ்லிம்கள் எங்களை காட்டிக் கொடுக்கும் துரோகிகள்." இப்படி சொல்லிக் கொடுத்தால் போதும். உடனே நம்பி விடுவார்கள். அதற்குப் பிறகு தமிழர்களை வேண்டிய மட்டும் சுரண்டி, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம். எதிர்த்துப் பேசினால் அவனுக்கும் துரோகிப் பட்டம் சூட்டி விடலாம்.
ஈழப் போர் நடந்த காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் பேசப் படும் தீவிர தமிழ்த்தேசியம் அல்லது தமிழ் இனவாதத்தின் பின்னணியில் தமிழ் முதலாளிகளின் நலன்களும் அடங்கியுள்ளன. தமிழ்த்தேசிய அரசியலும் முதலாளித்துவமும் ஒன்றில் இருந்து மற்றது பிரிக்க முடியாமல் உள்ளன.
ஈழப் போர் நடந்த பொற்காலத்தில் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருந்த தமிழ் முதலாளிகள், சிலநேரம் புலிகளையும் திட்டித் தீர்த்தனர். அதற்குக் காரணம் புலிகள் 5% வரி அறவிட்டது தான்.
உண்மையில் 5% வரி, முதலாளிகளின் கோடிக் கணக்கான நிகர இலாபத்துடன் ஒப்பிட்டால், இந்தத் தொகை மிக மிகக் குறைவு. மேற்கு ஐரோப்பாவில் 20% அல்லது 30% வரியாக கட்ட வேண்டும்.
போர் முடிந்த பின்னர் முதலாளித்துவ ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளால் எழுப்பப் பட்ட கோஷங்களுக்கான விளக்கம்:
- "எங்களுக்கு தமிழீழம் வேண்டும்!"
(விளக்கம்: தமிழ் மக்களை சுரண்டுவதற்கு தமிழ் முதலாளிகளுக்கே ஏகபோக உரிமை வேண்டும்.)
- "இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்போது இப்படி நடந்திருக்குமா?"
(விளக்கம்: சிங்கள, முஸ்லிம் முதலாளிகள், தமிழ் முதலாளிகளுடன் போட்டிக்கு வந்திருப்பார்களா?)
தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது வியப்புக்குரியதல்ல. பலர் பரம்பரை பரம்பரையாக நிலவுடைமையாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அந்த சொத்துக்களை இன்றளவும் ஆண்டு அனுபவிப்பவர்கள்.
இன்று தீவிர புலி ஆதரவு, தீவிர தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ஒரு பெருந்தோட்ட முதலாளி தான். அவரது பெயரில் மலையகத் தேயிலைத் தோட்டம் மட்டுமல்லாது, மலேசியாவிலும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.
1947 இல், அன்றைய இலங்கை பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான குழுவினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையை பறித்தனர்.
பெருந்தோட்டத் தமிழர்கள் பெரும் அரசியல் சக்தியாகி, கண்டிச் சிங்களவரின் பிரதிநிதித்துவத்தில் பிரச்சினை கொடுப்பார்கள் என்பது ஒரு காரணம். அதேவேளை, சோஷலிச சித்தாந்தங்கள், மலையக மக்கள் மத்தியில் ஆழமாக நிலைகொண்டு விடும் எனப் பயந்தமை இன்னொரு காரணம்.
மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கும் சட்டத்திற்கு யாழ்ப்பாணத் தமிழரான ஜி.ஜி.பொன்னம்பலம் (கஜேந்திரகுமாரின் தாத்தா) ஆதரவாக இருந்தார். அதற்குக் காரணம் அவரும் ஒரு பெருந்தோட்ட முதலாளியாக இருந்தார்.
அண்மையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ஆதரித்து, யாழ் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திரகுமாரும் பங்குபற்றி இருந்தார்.
பெருந்தோட்ட உரிமையாளர் பொன்னம்பலத்தின் வாரிசான கஜேந்திரகுமார், தனக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட்டிக் கொடுத்து முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கலாம்.
இப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்யும் தமிழ் ஊடகங்கள், முதலாளி கஜேந்திரகுமாரை தொழிலாளரின் நண்பனாக காட்டும் பித்தலாட்டமும் நடக்கிறது.
கஜேந்திரகுமாருக்கு (யாழ் குடாநாட்டில்) பளைப் பிரதேசத்திலும் பல ஏக்கர் காணி சொந்தமாக இருக்கிறதாம். ஒரு தடவை வைத்தியசாலை விஸ்தரிப்புக்காக இரண்டு பரப்பு காணி கேட்ட நேரம் கொடுக்க மறுத்து விட்டாராம். இவர்கள் தான் தமிழர்களின் தேசியத் தலைவர்கள்.
வாழ்க தமிழ்த் தேசியம்!
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
No comments:
Post a Comment