Thursday, April 03, 2014

ஈழ இனப்படுகொலைக்காக கம்யூனிசத்தை கழுவேற்றும் நாஸி வாரிசுகள்












ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக, "கம்யூனிச கோட்பாட்டை, மார்க்சியத்தை கழுவில் ஏற்ற துடிக்கும்" அன்பர்கள், ஹிட்லர் எழுதிய மைன் கம்ப் (Mein Kampf) நூலை வாசிக்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன். முதலாம் உலகப்போரில், ஜெர்மனியில் நடந்த இனப்படுகொலைக்காக, "யூதர்களையும், கம்யூனிச கோட்பாட்டையும், மார்க்சியத்தையும் கழுவில் ஏற்ற வேண்டும்" என்று ஹிட்லர் பிரச்சாரம் செய்து வந்தான். அதனை "Mein Kampf" நூலிலும் எழுதி இருக்கிறான்.

"ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை, உலக நாட்டு மக்கள் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டும்" என்று எதிர்பார்க்கும் தமிழ் இன உணர்வாளர்கள், அதனை மேற்கத்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. அவர்கள் முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
மேற்கத்திய முதலாளித்துவ நலன் சார்ந்த சட்டம் எதுவும், இனப்படுகொலைகளை தடுப்பதற்காக எழுதப் பட்டதல்ல. 

யூத இனப்படுகொலையை விசாரித்து தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட  நியூரன்பேர்க் நீதிமன்றம் கூட, மிகவும் குறைந்தளவு நாஸி குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கியது. யூத இனப்படுகொலையில் ஈடுபட்ட பெரும்பான்மையான நாஸிகள், அமெரிக்காவிலும், பிற மேலைத்தேய நாடுகளிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பினார்கள் என்று சாமானியர்களின் மொழியில் கூறலாம்.

உண்மையில், மேற்கத்திய சட்டம் எப்போதும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் தண்டனை வழங்கும். ஆதாரம், சாட்சிகள் இல்லாவிட்டால், எந்தக் குற்றவாளியும் தப்பி விடலாம். இதனால், சோஷலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியில் ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். ஒருவர் தனது "மனச் சாட்சிக்கு விரோதமாக நடந்தாலும் குற்றம் தான்" என்ற சட்டம், விசேடமாக நாஸிஸ ஒழிப்பிற்காக இயற்றப் பட்டது. 

அதாவது "சுடச் சொல்லி உத்தரவு வந்ததால் சுட்டேன்... என்னிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கவில்லை... எனது கடமையை மட்டும் செய்தேன்..." யாரும் இவ்வாறு சாட்டுச் சொல்லித் தப்ப முடியாது. அதாவது, "மனச் சாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்வதும் குற்றமாகும்." என்று சோஷலிச சட்டத்திருத்தம் கூறுகின்றது.

மேற்கு ஜெர்மனியை விட, கிழக்கு ஜெர்மனியில் தான் இனப்படுகொலை குற்றச்சாட்டில் பெருமளவு நாஸிகள் தண்டிக்கப் பட்டனர். நாசிசம் முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. ஆனால், மேற்கு ஜெர்மனியில்? முன்னாள் நாஸிகள் பலர் சுதந்திரமாகத் திரிந்தனர். அரசாங்கத்தில் மட்டுமல்லாது, வணிக நிறுவனங்கள், கல்விச்சாலைகள் எல்லா இடங்களிலும் இனப்படுகொலை குற்றவாளிகளான முன்னாள் நாஸிகள் தொடர்ந்தும் பதவிகளில் அமர்ந்திருந்தார்கள். கிழக்கு ஜெர்மனியில் நாஸிகளுடன் தொடர்புடைய கொள்கைகள் அனைத்தும், சட்டம் போட்டு தடை செய்யப் பட்ட பின்னர் தான் மேற்கு ஜெர்மனியும் தன் பங்கிற்கு சில மாற்றங்களை கொண்டு வந்தது.

மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் இரண்டிலும், "யூத இனப்படுகொலை நடக்கவில்லை என்று மறுப்பது" ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இன்றைக்கும் ஒன்றிணைந்த ஜெர்மனியில் அந்த சட்டம் அமுலில் உள்ளது. அதனால் தான் அங்கே ஜெர்மன் தேசியவாத சக்திகள், அரசியலில் மிகவும் பலவீனமாக உள்ளன.  

இனப்படுகொலைகளுக்கு எதிரான சர்வதேச சட்டத்தில், கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ள விரும்பாத, மேற்கத்திய- முதலாளித்துவ அடிவருடிகள் மட்டுமே, ஈழ இனப்படுகொலைக்காக கம்யூனிசத்தை கழுவேற்றத் துடிக்கின்றனர்.  உண்மையில் அன்று ஒரு சோஷலிச ஜெர்மனி தோன்றியிரா விட்டால், இன்றைக்கும் நாஸிஸம் ஜெர்மனியையும், ஐரோப்பாவையும் ஆட்டிப் படைத்திருக்கும். சிலநேரம், இனப்படுகொலை என்ற சொல் கூட அகராதியில் இடம்பெற்றிருக்காது. 

நாசிஸம் தான், ஸ்டாலின் மீதான அவதூறுகளின் ஊற்றுக்கண். அது மட்டுமல்ல, இன்றைய கம்யூனிச விரோதிகளின் ஆதர்ச நாயகர்களாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும், ஜெர்மன் நாஸிகளே இருந்து வருகின்றனர்.

ஹிட்லர் தான், முதன்முதலாக கம்யூனிசத்திற்கு எதிரான "உளவியல் யுத்தம்" ஒன்றை ஆரம்பித்து வைத்தான். இன்று ஹிட்லரின் வாரிசுகள் அந்தக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். கம்யூனிச பூச்சாண்டி காட்டி, அப்பாவித் தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

நவ நாஸிகளும், முதலாளித்துவவாதிகளும், ட்ராஸ்கிஸ்டுகளும், நாஸிகளின் பிரச்சாரத்தை இணைய யுகத்திலும் முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றனர். பாசிசம் இன்னும் அழியவில்லை. அது பன்முகத் தன்மை வாய்ந்ததாக மாறி உள்ளது.

சோவியத் யூனியனில் நடந்த பட்டினிச் சாவுகள், ஸ்டாலினின் படுகொலைகள், இது போன்ற பல விபரங்களை முதன் முதலாக பிரச்சார நோக்கில் "ஆவணமாக" தொகுத்து வெளியிட்டவர்கள் நாஸிகள் தான். நாஸிகள் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக வெளியிட்ட "ஆவணங்கள்" இன்றைக்கும் பலரால் மேற்கோள் காட்டப் படுகின்றன. பலர் அவற்றின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதில்லை. நாஸிகள் என்ன சொன்னார்களோ அதை வாய்ப்பாடாக அப்படியே ஒப்புவிக்கிறார்கள். இதெல்லாம் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயங்கள்.

நாஸி ஜெர்மனியிடம் நிறைய ஆவணங்கள் இருந்தன. 2 ம் உலகப் போரில், நாஸி ஜெர்மனி சிறிது காலம் சோவியத் யூனியனின் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருந்தது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்கு முன்பிருந்தே, நாஸிகள் சோவியத் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ரஷ்யாவை ஆக்கிரமித்து, அதனை ஜெர்மனியின் காலனி ஆக்குவது, ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. மைன் கம்ப் நூலில் ஹிட்லர் அதைப் பற்றி எழுதி இருக்கிறான்.

சோவியத் யூனியன், ஸ்டாலின் தொடர்பாக நாசிகளிடம் இருந்த பிரச்ச்சார ஆவணங்களை, 2 ம் உலகப்போரில் ஜெர்மனியை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள் அபகரித்துச் சென்றன. அதற்குப் பிறகு தான், அவை உலகம் முழுவதும் பரப்பப் பட்டன. இன்றைக்கும் பலருக்கு அவை நாஸிகளின் பிரச்சார ஆவணங்கள் என்ற உண்மை தெரியாது. அவற்றை நம்புவோர் எல்லோரும் நாஸிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவற்றை உருவாக்கியவர்கள் நாஸிகள் என்பதையாவது அறிந்து வைத்திருக்கக் கூடாதா?

2 ம் உலகப்போர் முடிந்த பின்னர், நாஸி அறிவுஜீவிகளுக்கு அமெரிக்காவில் பதவிகள் வழங்கப் பட்டன. முன்னர் நாஸி அரசாங்கத்தில் பல கொடுமைகளை புரிந்தவர்கள் கூட, அமெரிக்காவில் நன்றாக கவனிக்கப் பட்டனர். எத்தனை நாஸிகள் நாஸாவில், சி.ஐ.ஏ. யில் வேலை செய்தார்கள் என்பது பற்றி நிறைய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அது பற்றிய விபரங்கள் அடங்கிய, நூல்கள் பல வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகின.

"ஸ்டாலினின் கொடுங்கோன்மை, கம்யூனிச பயங்கரம், கம்யூனிஸ்டுகளின் படுகொலைகள், கம்யூனிஸ்டுகள் செய்த அக்கிரமங்கள்...." இது போன்ற பல "அதிர்ச்சித்" தகவல்களை, முதன்முதலாக நாஸிகள் தான் "ஆவணப் படுத்தி ஆதாரங்களுடன் கூறுவதாக" தெரிவித்து வந்தனர். இதனை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த உண்மை. "சோவியத் கம்யூனிஸ்டுகளின் கொடுங்கோன்மை" பற்றிய ஆதாரங்களின் மூலம் (source) எங்கே இருந்து வந்தன என்று தேடிப் பாருங்கள். அப்போது தெரியும்.

இன்று சில முதலாளித்துவ அல்லது மேற்கத்திய ஆதரவாளர்கள், கேரத் ஜோன்ஸ் போன்ற சில பிரிட்டிஷ், அமெரிக்க ஊடகவியலாளர்களின் எழுத்துக்களை மேற்கோள் காட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு, உக்ரைன் பஞ்சம் பற்றிய தகவல்களை மேற்குலகிற்கு அறிவித்த, கேரத் ஜோன்ஸ் (Gareth Jones) யாரென்று பார்ப்போம். அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை தான். ஆனால், அவருக்கும் நாஸி ஜெர்மனிக்கும் என்ன தொடர்பு? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதலாமே? ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர், இவரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு தான், உக்ரைன் பஞ்சம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒரு நாஸி அபிமானி என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப் பட்ட விடயம். அதனை அவரே மறுக்கவில்லை. நாஸிகள் தான் அவரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி, பஞ்சம் பற்றிய அறிக்கை தயாரிக்க சொல்லி இருக்கிறார்கள். 
அதற்கான ஆதாரம் இதோ:

 //In January 1933, Jones travelled to Germany to report on the growth of the Nazi Party. George Carey has argued that Adolf Hitler saw him as a friendly journalist: "It's certainly true to say that Gareth Jones networked extremely well with the Nazis, and secured almost unprecedented access to Hitler and Goebbels. He was there in Leipzig when Hitler was made chancellor, and flew with him to Frankfurt for his first rally. And it's also fair to say that he reported favourably on some of the early achievements of the Nazis, creating employment when mainstream politicians had failed to get to grips with the German economy." 

The following month he visited the Soviet Union and on the 31st March, 1933, The Evening Standard carried a report by Jones on the conditions he discovered in the rural areas that he considered to be the result of Stalin's Five Year Plan: "The main result of the Five Year Plan has been the tragic ruin of Russian agriculture. This ruin I saw in its grim reality. I tramped through a number of villages in the snow of March. I saw children with swollen bellies. I slept in peasants’ huts, sometimes nine of us in one room. I talked to every peasant I met, and the general conclusion I draw is that the present state of Russian agriculture is already catastrophic but that in a year’s time its condition will have worsened tenfold... The Five-Year Plan has built many fine factories. But it is bread that makes factory wheels go round, and the Five-Year Plan has destroyed the bread-supplier of Russia."// 
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
2.கம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா?

Monday, March 31, 2014

ஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம்


மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை (சரியாக ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு) அன்று, "கோடை கால நேரம்" மாற்றுவார்கள். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். இதனால், ஐரோப்பாவிற்கும், இந்தியா, இலங்கைக்குமான நேர வித்தியாசம் மூன்றரை மணித்தியாலமாகும். 

அதே மாதிரி ஒக்டோபர் மாதத்தில் வரும் கடைசி வார இறுதி நாளன்று, குளிர்கால நேரம் மாற்றப்படும். அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை 25 மணிநேரத்தைக் கொண்டிருக்கும். அதனால், இந்தியா, இலங்கைக்கான நேர வித்தியாசம் நான்கரை மணித்தியாலமாக அதிகரிக்கும். (மேற்கு)ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.

ஐரோப்பாவில் வாழும் மக்கள் பலருக்கு, எதற்காக இந்த நேர மாற்றம் என்ற காரணம் தெரியாது. பலரும் இதனை ஒரு பாரம்பரிய கலாச்சாரம் போன்று பின்பற்றி வருகின்றனர். "கோடை காலத்தில், அதிக சூரிய ஒளி கிடைப்பதால், எரிபொருள் மிச்சம் பிடிக்கலாம்" என்று இதற்குக் காரணம் சொல்லப் படுகின்றது. "கோடை காலத்தில் பறிக்கப் படும் ஒரு மணித்தியாலத்தை, குளிர்காலத்தில் திருப்பித் தருகிறார்கள்" என்று பொது மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இந்த நேர மாற்றம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதுவும், "முதலாளித்துவ நாடுகள்" என்று அழைக்கப் படும், மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே அமுலுக்கு வந்தது. காலப்போக்கில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஏற்பட்ட, எண்ணைத் தட்டுப்பாடு காரணமாக, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது.

நேர மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இயற்கை, காலநிலை, எரிபொருள் சேமிப்பு என்று, பலரும் நம்பக் கூடிய காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், ஐரோப்பாவுடன் ஒரே பூகோள அமைவிடத்தை, ஒரே மாதிரியான காலநிலையை கொண்டுள்ள முன்னாள் சோவியத் யூனியனில் அந்தப் பழக்கம் இருக்கவில்லை. இன்றைக்கும் ரஷ்யா, அதனோடு சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு, கோடை கால நேர மாற்றம் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நேர மாற்றம் குறித்து, பல ஐரோப்பிய மக்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் காணப் படுகின்றது. பொதுவாக விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. ஏனென்றால், மிருகங்களும், தாவரங்களும் தமக்கென்று ஒரு நேரத்தை வைத்திருக்கின்றன. மாடு தனது நேரத்திற்கு தான் பால் தரும். செடிகள் தனது நேரத்திற்கு தான் பூக்கும்.

குறிப்பாக, எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த நேர மாற்றத்தால் நன்மை அடைந்து வருகின்றன. ஏனெனில், ஐரோப்பாவில் குளிர் காலம் என்பது, நீண்ட இரவுகளைக் கொண்டது. பெரும்பாலான நாடுகளில், மாலை நான்கு மணிக்கே இருண்டு விடும். மீண்டும் சூரிய வெளிச்சம் வருவதற்கு காலை எட்டு மணி ஆகும். அதே நேரம், குளிரும் அதிகமாக இருக்கும். ஆகையினால், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய விடப் படும். வெப்பமூட்டிகளும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும்.

கோடை காலம் அதற்கு நேர் மாறானது. அதி காலை ஐந்து மணிக்கே சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும். இருட்டு வருவதற்கு, சில நேரம் இரவு பத்து மணி ஆகும். அதே நேரம், வெக்கையாக இருப்பதால், வீட்டிற்கு செயற்கை வெப்பம் உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

எரிவாயு, மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், குளிர்காலம் என்பது அதிகளவு இலாபம் ஈட்டக் கூடிய பொற்காலம் ஆகும். இதனால், குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலத்தை கூட்டுவதன் மூலம், இலாபத்தையும் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அநேகமாக, இது ஒரு பகற்கொள்ளை தான். அதனால் தான், இந்த நேர மாற்றம் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகின்றது.


மேலதிக தகவல்களுக்கு:
 Daylight Saving Time (DTS)

Saturday, March 29, 2014

நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு




உண்மையில், யூத வெறுப்பை விட, மார்க்சிய வெறுப்பு தான், ஹிட்லரும், நாஸி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், ஜெர்மனியின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது.

முதலாம் உலகப்போரானது, ஜெர்மன் தேசியவாதிகளுக்கும், பிரெஞ்சு தேசியவாதிகளுக்கும் இடையிலான போராக நடந்தது. முதலாளிகளும், தேசிய வெறியர்களும், சாதாரண மக்களை படைவீரர்களாக போருக்கு தீனியாக்கினார்கள். முதலாம் உலகப்போரின் முடிவில், தேசியவாத மாயையில் இருந்து விடுபட்ட படையினர் கிளர்ந்தெழுந்தனர்.

மியூனிச், பெர்லின், ஹம்பூர்க் நகரங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடித்தது. அந்த நகரங்களில் உருவான சோவியத் குடியரசுகள், சில வாரங்கள் தாக்குப் பிடித்தன. அப்போது ஜெர்மனியில் ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும், கம்யூனிசத்தை வெறுத்த "ஜனநாயக" அரசாங்கம், தொழிலாளர்களின் சோவியத் புரட்சியை கொடூரமாக நசுக்கியது.

பழமைவாதிகளின் மாநிலமான பவாரியாவில், ஹிட்லரின் நாஸிக் கட்சியும், அது போன்ற வேறு சில அமைப்புகளும் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சிய வெறுப்பு, அந்த அமைப்புகளின் அடிநாதமாக விளங்கியது: "முதலாம் உலப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் மார்க்சிஸ்டுகள். அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு, ஜெர்மன் மக்களின் முதுகில் குத்தினார்கள். பிரெஞ்சு படைகள் ஜெர்மன் மக்களை (இனப்) படுகொலை செய்த போது, கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர் அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை.... "

இந்த உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரம், ஜெர்மன் மக்கள் மனதில் கம்யூனிசத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை விதைக்கும் நோக்கில் பரப்பப் பட்டது. ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில், பெருமளவு யூதர்கள் பங்குபற்றி இருந்தனர். நாஸிகள் அதைச் சுட்டிக் காட்டி, "கம்யூனிஸ்டுகளும் யூதர்களும் ஒன்று தான். உலக யூத சதிகாரர்களின் கொள்கை தான் கம்யூனிசம்." என்று பிரச்சாரம் செய்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், யூதர்களின் ஜெர்மன் குடியுரிமை பறிக்கப் படும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் படும் என்றும், நாஸிகள் பகிரங்கமாக கூறி வந்தனர்.

ஹிட்லரின் நாஸிக் கட்சி குண்டர்கள், அடிக்கடி மார்க்சிஸ்டுகளை தெருச் சண்டைக்கு அழைத்தார்கள். கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நடத்திய பொதுக் கூட்டங்களில் நுழைந்து குழப்பம் விளைவித்தார்கள். அங்கிருந்த பேச்சாளர்களையும், பார்வையாளர்களையும் தாக்கினார்கள். நாஸிக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை, "மார்க்சியர்களுக்கு எதிரான வீரப் போர்" போன்று, ஹிட்லர் தனது Mein Kampf (எனது போராட்டம்) நூலில் எழுதி இருக்கிறான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியில் எதிரொலித்தது. பல வங்கிகள் திவாலாகின. பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வந்த காலத்தில், பெரும்பான்மை ஆளும் கட்சிகளின் செல்வாக்கு குறைந்தது. மக்கள் மாற்று வழி தேடினார்கள். அவர்கள் ஒன்றில் தீவிர இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தனர், அல்லது தீவிர வலதுசாரிகளான நாஸிக் கட்சியை ஆதரித்தனர்.

பெர்லின் நகரத் தெருக்களில், நாஸிக் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது பலத்தைக் காட்டும் வகையில் சுற்றித் திரிந்தனர். இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், எங்கே, எந்த சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொண்டாலும், அங்கே வாய்த் தர்க்கம் முற்றி, அடி தடியில் முடியும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

"சிவப்புகள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்குவோம்..." என்று கோஷமிட்ட படி, நாஸிக் காடையர்கள் கத்தி, பொல்லுகளுடன் தெருக்களில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் கையில் அகப்பட்ட மார்க்சிஸ்டுகள்/கம்யூனிஸ்டுகளுக்கு, மண்டை உடைத்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தார்கள்.

"மார்க்சியம் ஒழிக!" பதாகை ஏந்திய படி பேரணியில் நடந்து வரும் சீருடை அணிந்த நாஸிகள். (1926) ஹிட்லர் அணிவகுப்பை பார்வையிடுவதை காணலாம். (வட்டத்திற்குள்)  

"சிவப்பு முன்னணியை (Red Front) நொறுக்குவோம்." என்றொரு நாஸிப் பிரச்சார பாடல் தெருவெங்கும் ஒலித்தது. அன்றைய தேர்தலில் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் "சிவப்பு முன்னணி" என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டார்கள். நாஸிக் காடையர்கள் இடதுசாரிகளுக்கு எதிரான கோஷம் எழுப்பிய படி, பெர்லின் தெருக்களில் சாரிசாரியாக வண்டிகளில் சென்றனர். 1926 ம் ஆண்டிலேயே, "மார்க்சியம் ஒழிக" என்ற பதாகை தாங்கிய நாஸிகளின் பேரணிகள் நடந்துள்ளன.

30-01-1933, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளால் வென்ற,  ஹிட்லரின் நாஸிக் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளும் நாஸிக் கட்சி உறுப்பினர்கள், அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வந்தனர். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதிலடி கொடுக்க எழும் நேரம், நாஸிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது சிலநேரம், பாராளுமன்றத்திற்கு வெளியே கைகலப்பில் முடிந்தது.

பெர்லின் நகரில், பாராளுமன்ற கூட்டம் நடைபெற்ற தினங்களில் எல்லாம், நாஸிகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பாராளுமன்ற விவாதங்களில் நாட்டமற்ற, அல்லது கம்யூனிஸ்டுகளுடன் வாதாடி வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட நாஸிகள், இரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். அதுவே, பிற்காலத்தில் வரப் போகும்  நாசிஸ  சர்வாதிகாரத்திற்கு கட்டியம் கூறியது.

நாஸிகள் பாராளுமன்ற அரசியலுக்குள் பிரவேசித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 27-02-1933 அன்று, Reichstag (றைஷ்டாக்)  எனப்படும் ஜெர்மன் பாராளுமன்றம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது யாரென்று கடைசி வரை தெரிய வரவில்லை. இருப்பினும், நாஸி அரசாங்கம் நான்கு கம்யூனிஸ்டுகளை கைது செய்தது. அந்தக் காலகட்டத்தில், நாசிஸ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கவில்லை. ஓரளவு ஜனநாயகம் நிலவியது. அதனால் தான், குற்றஞ் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர்.

நாஸி தலைவர்களில் ஒருவரான கேரிங், "ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஆரம்பமாகி விட்டது" என்று பயமுறுத்தினார். "கம்யூனிஸ்ட் புரட்சியை தடுப்பதற்காக" என்றொரு சாட்டைக் கூறி, நாஸி அரசாங்கம் நாடு முழுவதும் பல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜெர்மனியில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், நாசிஸ பயங்கரவாதத்திற்கு முதன்முதலாக பலியானவர்கள் யூதர்கள் அல்ல, மாறாக ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

கைது செய்யப்பட்ட நான்கு கம்யூனிஸ்டுகளில், பின்னாளில் பல்கேரியா அதிபராக பதவியேற்ற டிமித்ரோவ்வும் ஒருவர். இறுதியில் டிமித்ரோவும் மற்றவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, வன் தே லுப்பே என்ற புத்தி சுவாதீனமற்ற டச்சு கம்யூனிஸ்ட் நாஸிகளின் சூழ்ச்சிக்கு பலியானார். பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார்.

பெர்லின் நீதிமன்றத்தில் நடந்த டிமித்ரோவின் வழக்கு, இன்றைக்கும் சட்டத் துறையில் சிலாகித்துப் பேசப் படுகின்றது. புத்திசாலியான டிமித்ரோவ், தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை திணறடித்தார். "கேரிங்கின் நாஸி கட்சியினர் தான் பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்தார்கள்." என்று டிமித்ரோவ் நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நேரம் அங்கிருந்த கேரிங், "இங்கு வந்து நெருப்பு வைத்து விட்டு, ஜெர்மன் மக்கள் மேல் பழி சுமத்துகிறீர்கள் ..." கூச்சலிட்டார்.

இங்கே கவனிக்கப் பட வேண்டிய விடயம் "ஜெர்மன் மக்கள்" (Deutsche Volk). நாஸிகளின் ஆட்சிக் காலம் முழுவதும், தங்களது கட்சியை யாராவது குறை கூறினால், அதனை "ஜெர்மன் மக்களுக்கு எதிரான அபாண்டம்" என்று கூறி, எதிராளியின் வாயை அடைக்கப் பண்ணினார்கள். இன்றைக்கும் தமிழர்களில் சிலர், நாஸிகளின் அதே  தந்திரோபாயத்தை பயன்படுத்துவதை காணலாம்.

நாஸிஸக் கொள்கை, ஒரு கடந்த கால வரலாறு அல்ல. ஜெர்மனிக்கு மட்டுமே உரிய தோற்றப்பாடும் அல்ல. நாஸிகளின் சித்தாந்தம் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது. நாஸிகள் உலகம் முழுவதும் உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். நாஸிஸம் எந்த நோக்கத்திற்காக தொடங்கியதோ, அதனை நிறைவேற்றுவதற்கு துடிக்கின்றனர்.

"சிவப்பைக் கண்டால் பதறும், மார்க்சியத்தை வெறுக்கும்," கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர், நாஸிக் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னர், இணையமும், சமூக வலைத் தளங்களும் இருக்கவில்லை. இருந்திருந்தால், நாஸிகள் அங்கேயும் தமது மார்க்சிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி இருப்பார்கள்.


நாஸிகள் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்
2.நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்

Friday, March 28, 2014

ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம்


இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகளும் நடந்துள்ளன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே பல தடவைகள் திருத்தப் பட்டு, தற்போது மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்ப்பாயமாக குறுகி விட்டது. ஏற்கனவே, 2012 ல் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டாலும், அது இலங்கைக்கான எச்சரிக்கையாக மட்டுமே அமைந்திருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில், இலங்கை அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத படியால், ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், இந்த வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமைந்திருந்தது. இதிலே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2012 ல், "இலங்கையில் இறையாண்மை பாதுகாக்கப் பட வேண்டும்" என்ற நிர்ப்பந்தம் கொடுத்து, இந்தியா ஒரு திருத்தத்தை செய்திருந்தது. அதன் பின்னரே, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

ஆனால், இந்தியா இம்முறை எதிர்த்து வாக்களித்துள்ளது. அதற்கு தன்னிலை விளக்கமும் கொடுத்துள்ளது. (ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் தீர்மானம் என்று கூறியது.)  மேலும், ஐ.நா.விசாரணைக் குழுவுக்கான நிதியாதாரம் பற்றி சந்தேகம் தெரிவித்த பாகிஸ்தான், திருத்தப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தது. அதற்கான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் நிலைப்பாடு, தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது.

தமிழகத்தில், திமுக வும், அனைத்து தமிழ் தேசியவாதக் கட்சிகளும், இயக்கங்களும் இந்தியாவின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளன. இலங்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் இருந்தே, இந்தியா குறித்த பிரமை உடைந்து போனமை தெரிந்தது. "பாகிஸ்தானும், இந்தியாவும் நேரெதிர் கொள்கை கொண்ட பகையாளி நாடுகளாக இருந்த போதிலும், ஈழத் தமிழர் விடயத்தில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கொள்கையை கடைப்பிடிப்பதை ..." சுரேஷ் காரசாரமாக கண்டித்தார்.

தமிழ் தேசியவாத கண்ணோட்டம் கொண்ட தமிழர்கள் சிலர், "இது காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத கொள்கையின் விளைவு. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டால், எல்லாம் சரியாகி விடும்..." என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில், தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளும், ஊடகங்களும், இந்தியா பற்றி உருவாக்கி வைத்திருந்த தவறான கருதுகோள்கள், இன்று பலரை அதே பாதையில் சிந்திக்க வைக்கின்றது. ஆனால், உண்மை நிலையோ, (தமிழ்) தேசியவாதிகள் நம்புவதற்கு நேர்மாறாக உள்ளது.

இந்தியாவில், மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அதன் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் உண்டாகப் போவதில்லை. தேர்தல்கள் மூலம், மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாற்றலாம். ஆனால், அமைச்சு அலுவகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற முடியாது. அந்த அதிகாரிகள் யாரும், தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. எந்தக் கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அமைச்சு அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆகவே, காங்கிரஸ் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, பாஜக தெரிவு செய்யப் பட்டால், இந்தியாவின் நிலைப்பாடு ஈழத் தமிழருக்கு சாதகமாக மாறி விடும் என்பது ஒரு கற்பனையான வாதம். ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை, இலங்கை சம்பந்தமான வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதி. அது எவ்வாறு இருக்கும், இனிமேல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டு விட்ட விடயங்கள்.

பாகிஸ்தானும், இந்தியாவும் பகையாளி நாடுகள் போன்று நடந்து கொள்கின்றன. அதுவும் ஒரு வகை அரசியல் தான். இந்திய- பாகிஸ்தான் மக்கள் மனதில் தேசிய வெறியை வளர்த்து விடுவதற்கே, அந்தப் பகை அரசியல் பெரிதும் உதவுகின்றது. அயல் நாடுகள் விடயத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று போட்டி போட வேண்டிய தேவையிருக்கவில்லை. இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சிறிலங்கா அரசுக்கு பாகிஸ்தான் ஆயுத விநியோகம் செய்து வந்துள்ளது. இந்தியா, ஒரு தடவையாவது, அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை. அது மட்டுமல்ல, பாகிஸ்தானின் ஆயுத விநியோகமானது, இந்தியாவை அதன் "கடமையில்" இருந்து விடுவித்து விட்டதாக பார்க்கப் பட்டது. பாகிஸ்தானுக்கு பதிலாக இந்தியா ஆயுத விநியோகம் செய்திருந்தால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அது அஞ்சியது.

இறுதிக் கட்ட ஈழப்போரில், இந்திய இராணுவம் நேரடியாக களத்தில் நின்று போரிட்டிருக்கலாம் என்ற சந்தேகம், நீண்ட காலமாக நிலவுகின்றது. அதனை உறுதிப்படுத்தும்  சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் தங்கியிருந்து, பெண் போராளிகளைப் பற்றி, "எனது நாட்டில் ஒரு துளி நேரம்" (விடியல் பதிப்பகம்) என்ற ஆய்வு நூலை எழுதிய ந. மாலதி, அண்மையில் ஒரு தகவலைக் கூறினார்.

வன்னியில் முன்னேறிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தை தடுக்க முடியாத புலிகள், வேறு வழியின்றி ஒரு அணைக்கட்டை குண்டு வைத்து உடைத்தார்கள். இதனால் அயல் கிராமங்களை வெள்ளம் மூடியது. அதற்குள் சிக்கி, "ஐயாயிரம் சிறிலங்காப் படையினர் மரணமடைந்ததாக" புலிகள் தமது செய்தியில் தெரிவித்து இருந்தனர். அன்று வெள்ளத்திற்குள் மூழ்கி இறந்த இராணுவ வீரர்களின் சடலங்களை புலிகள் கண்டெடுத்திருந்தனர். அவற்றில் சில இந்திய இராணுவத்தினரின் சீருடைகளை அணிந்திருந்ததைக் கண்டனர்.

மாலதி இந்தத் தகவலை தெரிவித்து விட்டு, "வன்னியில் இந்திய இராணுவ வீரர்களும், சிறிலங்காப் படையுடன் சேர்ந்து போரிட்டிருக்கலாம் என்று புலிகள் மத்தியில் பேசப் பட்டதாக" கூறினார். இந்தியா தலையிட்டு போரை நிறுத்தும் என்று புலிகள் நம்பி இருந்த காரணத்தால், அன்று இந்தத் தகவலை யாரும் வெளி விடாமல் இருந்திருக்கலாம். இந்திய இராணுவப் பிரசன்னம் பற்றி, இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த ஒரு பெண் கூறுகையில், "ஆழ் கடலில் நின்று கொண்டிருந்த இந்திய கடற்படைப் படகு, கரையிலிருந்த தங்களது இருப்பிடத்தை நோக்கி பீரங்கியால் சுட்டதாக..." தெரிவித்தார். இது போன்ற பல தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருக்கலாம். இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச சகோதரர்கள், "இந்தியா தான் இந்தப் போரை நடத்தியது." என்று நேரடியாகவே பல தடவைகள் கூறி விட்டார்கள். அப்படியானால், எதற்காக இந்தியா இந்தப் போரை நடத்த வேண்டும்?

ஒரு முறை, தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி, ஓய்வு பெற்ற RAW அதிகாரி ஹரிஹரன் உடனான நேர்காணலை ஒளிபரப்பியது. தந்தி டிவி நிர்வாகமும், பேட்டி எடுத்தவரும், நாம் தமிழர் போன்ற தமிழினவாதக் குழுக்களின் அரசியலை பிரதிபலிப்பவர்கள். அதாவது, "சீனாவும், இந்தியாவும் நிரந்தரப் பகையாளி நாடுகள். இலங்கையில் சீனா கால் பதிப்பது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து." என்று நம்புகிறவர்கள்.

நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்கள் கூட, "சீனாவைப் பற்றி இந்தியாவிடம் கோள் மூட்டி விட்டு, தமிழீழத்திற்கு ஆதரவாக இந்திய அரசை வளைக்கலாம்..." என்று நம்புவதுடன், அதையே தமது ஆதரவாளர்களுக்கும் கூறி வருகின்றனர். ஆகவே, அன்று ஹரிஹரனை பேட்டி கண்ட தந்தி டிவி தொகுப்பாளரின் கேள்விகளிலும், அதே போன்ற கருத்துக்கள் எதிரொலித்தன.

அந்தப் பேட்டியின் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு முன்னாள் RAW அதிகாரியான ஹரிஹரன், "சீனாவின் அச்சுறுத்தல்" பற்றி, எந்த வித அக்கறையுமின்றி பதிலளித்தார். ஒரு சில தமிழினவாதிகள் கூறி வருவது போன்று, "சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது" என்பதே ஹரிஹரனின் பதிலாக இருந்தது. ஆனால், அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த இன்னொரு தகவல் கூர்ந்து நோக்கத் தக்கது.

"இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றுவதற்கு, அமெரிக்கா முயற்சி எடுத்திருந்தது. அதற்காகவே ஒரு அமெரிக்க போர்க் கப்பல், முல்லைத் தீவு கடலுக்கு அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்தது. இலங்கையானது, இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடு. அங்கு அமெரிக்க இராணுவத் தலையீடு ஏற்படுவதை, இந்தியா விரும்பவில்லை." இதனை ஹரிஹரன், தந்தி டிவி பேட்டியில் தெரிவித்தார். அதாவது, இலங்கைக் கடற்கரையில், அமெரிக்கக் மரைன் படையினர் வந்திறங்குவதற்கு முன்னர், புலிகளின் கதையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
(ஆதாரம்:https://www.youtube.com/watch?v=9ukg8c2pyZM&fbclid=IwAR1fqUq434PEz6trKEL-jzo7nAnCQUUOr104N7L2M_kwMEh95cTzW0zCZIM&app=desktop )

அன்று இந்தியா, சிறிலங்காப் படைகளுடன் ஒத்துழைத்து போரை முடிவுக்கு கொண்டு வந்திரா விட்டால், அமெரிக்கா தலையிட்டு, புலிகளின் தலைவர்களை தப்ப வைத்திருப்பார்கள். இந்தத் தகவலை,ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தரான எரிக் சூல்ஹைமும் உறுதிப் படுத்தி இருந்தார். புலிகளின் தலைமையை சரணடைய வைப்பதற்கு, கேபி மூலம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலங்களிலும், போர் நிறுத்தம் செய்வதற்கும், ஒவ்வொரு தடவையும் இந்தியாவின் ஒப்புதல் தேவைப் பட்டது. பல தடவைகள், எரிக் சூல்ஹைம் டெல்லி சென்று, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பற்றி கூற வேண்டி இருந்தது. ஆனால், அமெரிக்க கப்பல் விவகாரம், இந்தியாவை கலந்தாலோசிக்காமல் எடுக்கப் பட்ட முடிவாகவே தெரிகின்றது.

தந்தி தொலைக்காட்சி பேட்டியில், ஹரிஹரன் சொல்லாமல் விட்ட தகவல் இது. அன்று, அமெரிக்கப் படைகள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வந்திறங்கி இருந்தால், சிலநேரம் அங்கேயே முகாமிட்டு தங்கி விட்டிருப்பார்கள். அது நடந்திருக்குமா, இல்லையா என்பதை விட, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று, இந்திய அரசு நம்புகிறது.

மேற்குறிப்பிட்ட பூகோள அரசியல் பின்னணியை வைத்துக் கொண்டே, ஜெனீவா தீர்மானங்களை ஆராய வேண்டியுள்ளது. இந்தியா அமெரிக்காவுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கலாம். பொருளாதாரத்திலும் பல விட்டுக் கொடுப்புகளை செய்திருக்கலாம். ஆயினும், அமெரிக்காவிடம் இருந்தே இந்தியாவுக்கு ஆபத்து வரும் என்று, இந்திய அரசு மட்டத்தில் நம்புகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம்: ரஷ்யா.

தொன்னூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்து, ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டது. அப்போது, ரஷ்ய அரசும், மக்களும், அமெரிக்காவை நட்பு சக்தியாகப் பார்த்தார்கள். அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அமெரிக்க உதாரணத்தை பின்பற்றினார்கள். பனிப்போர் முடிந்து விட்டது என்றும், அமெரிக்காவும், ரஷ்யாவும் நெருக்கமான நண்பர்கள் என்று பலர் நம்பினார்கள். ஆனால், ஒரு தசாப்தத்தின் பின்னர், அந்த நம்பிக்கை உடைந்து போனது. தற்போது, ரஷ்யாவும், மேற்குலகமும், மீண்டும் ஒரு பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. அதே வரலாறு இந்தியாவிலும் நடக்கின்றது.

உக்ரைன் பிரச்சினையில், ரஷ்யா மேற்குலகுடன் விட்டுக் கொடாத தன்மையுடன் நடந்து கொள்வதற்கு காரணம் உள்ளது. "உக்ரைன் பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும், மொஸ்கோவுக்கு வாருங்கள்" என்று ரஷ்யா கூறுகின்றது. பிராந்திய வல்லரசான ரஷ்யா, உக்ரைன் தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு என்று கருதுகின்றது. மேற்குலகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அதே போன்று தான், இலங்கை தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு, என்று இந்தியா கருதுகின்றது. "இலங்கை பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும் டெல்லிக்கு வாருங்கள்." என்று கூறுகின்றது. ஜெனீவாவில், இலங்கை தொடர்பாக இந்தியாவுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஒரு பலப் பரீட்சை நடக்கின்றது.

ஜெனீவாவில், இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளக் காரணம் என்ன? ஒவ்வொரு வருடமும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் உள்நோக்கம் என்ன? மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் பற்றி சிலாகித்துப் பேசப் பட்டாலும், அமெரிக்கா அவற்றை ஒரு சாட்டாகவே பயன்படுத்தி வருவது தெரிந்த விடயம்.

"அமெரிக்கா, ஈழத் தமிழர்கள் மேல் கொண்ட கரிசனை காரணமாக, சிறிலங்கா அரசை தண்டிக்க விரும்புகிறது..." என்று நம்பும் தமிழர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், தமிழர்கள் நினைப்பது போல, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களும் நினைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அமெரிக்கா எப்போதும் தனது நலன் சார்ந்தே சிந்தித்து, செயல்பட்டு வருகின்றது. ஆகவே, ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஈழத் தமிழருக்கு ஆதரவானது என்பது எந்தளவுக்கு உண்மை இல்லையோ, சிறிலங்கா அரசை தண்டிப்பதற்கானது என்பதும் உண்மையாக இருக்க முடியாது.

ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கையை அடி பணிய வைப்பது, அமெரிக்காவுக்கு இலகுவான காரியம். அதற்கு இந்த ஐ.நா.மன்றம், ஜெனீவா எதுவும் தேவையில்லை. அண்மையில், உக்ரைன் பிரச்சினையில் சில ரஷ்ய அரசியல்வாதிகள் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன. அதெல்லாம், ஐ.நா. வை கேட்காமலே நடைமுறைப் படுத்தப் பட்டன.

அமெரிக்கா நினைத்திருந்தால், போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தி, இலங்கையை ஆளும் ராஜபக்ச கும்பலை சேர்ந்தவர்களின் வெளிநாட்டு சொத்துக்களை, வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்க முடியும். அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விடாமல் தடுத்திருக்க முடியும். அது எதையும் அமெரிக்கா செய்யவில்லை. "இனிமேல் ஒரு ஐ.நா. விசாரணைக் குழு நியமித்து, அது சொன்ன பிறகு தான், அமெரிக்கா இலங்கை மீது தடைகளை விதிக்கும்" என்பது நம்பத் தகுந்தது அல்ல.

ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படும். என்ன நோக்கத்திற்காக அந்த அழுத்தம் கொடுக்கப் படுகின்றது?  என்பது தான் கேள்வி. "தமிழீழம் கிடைக்கும், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்..." என்று கூறி தமிழ் மக்களை நம்ப வைக்கலாம். ஆனால், "ஒரு சிறுபான்மை இன மக்கள் நலன் சார்ந்து அமெரிக்கா செயற்படுகின்றது" என்று, இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் நம்புவோர் மிகக் குறைவு. ஆகவே, இந்திய அரசும் அதனை நம்பப் போவதில்லை. அப்படியானால் வேறொரு காரணம் இருக்க வேண்டும். என்ன அது?

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள டியேகோ கார்சியா தீவில், அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ளது. முன்பு பிரிட்டனின் காலனியாக இருந்த குட்டித் தீவில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்டு, அந்த இடம் அமெரிக்க படையினரிடம் குத்தகைக்கு விடப் பட்டது. அந்த ஒப்பந்தக் காலம் 2016 ம் ஆண்டு முடிவடைகின்றது. ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

டியேகோ கார்சியா தீவின் பூர்வ குடிகள், பலவந்தமாக வெளியேற்றப் பட்டு, பிரிட்டனிலும், மொரிசியஸ் தீவிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான அனுமதி மறுக்கப் படுகின்றது. இது தொடர்பாக, கடந்த சில வருடங்களாக வழக்கு நடந்து வருகின்றது. தாயகம் திரும்ப விரும்பும் டியேகோ கார்சியா மக்கள், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் யாவும், அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நீர்த்துப் போகச் செய்யப் பட்டன. ஆயினும், டியேகோ கார்சியா மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர். 2016 ம் ஆண்டிலிருந்து, புதிய ஒப்பந்தம் போடப் படுமானால், அது பெரியதொரு கலவரத்திற்கு வழி வகுக்கும்.

ஆயிரம் கடல் மைல் தொலைவில் இருந்தாலும், டியேகோ கார்சியா தனக்கு சொந்தமாக வேண்டும் என்று, மொரீசியஸ் உரிமை கோரி வருகின்றது. அதனால், 2016 ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப் படுவதை, மொரிசியஸ் நாடும் எதிர்க்கும் என்பது திண்ணம். டியேகோ கார்சியா தீவை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மொரிசியஸ் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இலங்கையில் நடந்த பொதுநல வாய நாடுகளின் உச்சி மகாநாட்டினை மொரிசியஸ் பகிஷ்கரித்ததமைக்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மொரிசியஸ் நாட்டில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், அவர்கள் உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களை ஆதரிப்பதும் உண்மை தான். ஆனால், பிரிட்டன் மீது அழுத்தம் கொடுப்பதற்கு சாதகமாக, மொரிசியஸ் அரசு தமிழ் தேசியவாதிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. மொரிசியஸ் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, பிரிட்டனும் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே, அமெரிக்கா இராணுவ தளம் அமைப்பதற்காக, மாலைதீவை அணுகியது. ஆனால், "ஒரு முஸ்லிம் நாடான" மாலைதீவு, அமெரிக்க இராணுவ தளத்தை வைத்திருப்பதால் உண்டாகும் சிக்கல்களை கவனத்தில் எடுத்து, மறுப்புக் கூறி விட்டது. ஆகவே, அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரேயொரு தெரிவு, இலங்கைத் தீவு மட்டுமே. ஏற்கனவே, டியேகோ கார்சியா தீவில் சுமார் ஆயிரம் அமெரிக்க படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்.

வெளியுலகத் தொடர்பற்ற டியேகோ கார்சியா தீவுக்கு, அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. அங்குள்ள  அமெரிக்க இராணுவ தளத்தில் வேலை செய்வதற்கென, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாட்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அதிலே குறைந்தது அரை வாசிப் பேராவது இலங்கைப் பிரஜைகள் என்பது குறிப்பிடத் தக்கது. (இலங்கையரை தவிர, பிலிப்பைன்ஸ் நாட்டவரும் வேலை செய்கின்றனர். சில பிரிட்டிஷ் படையினரும் அங்கே உள்ளனர். அவர்களைத் தவிர வேறெந்த நாட்டினரும், டியேகோ கார்சியா தீவுக்கு செல்ல முடியாது.)

இலங்கையில் அமெரிக்க தளம் அமைப்பதால், அமெரிக்காவுக்கு வேறு பல ஆதாயங்களும் கிடைக்கலாம். இலங்கை, இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பது மட்டுமல்ல, சிறந்த பொருளாதாரக் கட்டுமான வசதி கொண்டது. விமான நிலையம், துறைமுக வசதிகளும் உள்ளன. மேலும், பெரும்பான்மையான இலங்கை மக்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட, அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அது இந்தியாவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. அதனால், அமெரிக்கா இந்தியாவை கண்காணிப்பது இலகுவாகி விடும். (முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் வொயிஸ் ஒப் அமெரிக்கா தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதை, இந்தியா கடுமையாக எதிர்த்தமை இங்கே நினைவுகூரத் தக்கது.)

நடைமுறை பூகோள அரசியல் களத்தில் ஆசியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ தளம் அவசியமானது. சிறிலங்காவில் ராஜபக்ச அரசு, ஜெனீவா தீர்மானங்கள் குறித்து மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதில் இருந்தே, அது எந்தளவு தூரம் அமெரிக்காவுக்கு நெருக்கமாகச் செல்கின்றது என்பது தெரிய வருகின்றது.

இந்தியாவின் நெருக்குவாரம் காரணமாக, இலங்கையில் அமெரிக்க தளம் அமைக்கும் திட்டம் பின்போடப் பட்டு வருகின்றது. ஆனால், இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப் பட வேண்டும். அநேகமாக, அடுத்த வருடம் (2015), "இலங்கையில் அமெரிக்கத் தளம் அமைக்கப் படுமா, இல்லையா?" என்ற கேள்விக்கு விடை  கிடைத்து விடும்.


ஜெனீவா தொடர்பான முன்னைய பதிவுகள்: 
1.ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி?
2.தமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு மீளாய்வு
3.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு

Tuesday, March 25, 2014

ஏழைகளுக்கு உணவில்லையெனில் வணிக மையங்களை கொள்ளையடிப்போம்!


"ஏழை மக்களே! உங்களுக்குப் பசிக்கிறதா? உணவு வாங்குவதற்கு கையில் பணம் இல்லையா? வாருங்கள், சூப்பர் மார்க்கட் அங்காடிகளை சூறையாடுவோம். காசு கொடுக்க தேவையில்லை. விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். இது அநீதிக்கு எதிரான ஏழைகளின் எழுச்சி!" 
சேகுவரா மாதிரி தாடி வைத்த, கழுத்தில் பாலஸ்தீன சால்வை அணிந்த ஒருவர் ஒலிபெருக்கியில் கூற, கூடியிருந்த ஜனத்திரள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றது. நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்றாக சென்று, சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து, விரும்பியதை எடுத்து கூடைகளில் நிரப்பிக் கொண்டு வெளியே வருகின்றனர். "கொள்ளையடிக்கப் பட்ட" உணவுப் பொருட்களில் பெரும் பகுதி, ஏழைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கு அன்பளிப்பு செய்யப் படுகின்றது.

இந்த சம்பவம், 2012 ம் ஆண்டு, தெற்கு ஸ்பெயினில் நடந்தது. சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டம், அந்த நாட்டில் பல தடவைகள் நடந்து விட்டன. பொருளாதார நெருக்கடியால், கடுமையாக பாதிக்கபப்ட்ட ஸ்பெயின் நாட்டில், நாற்பது சதவீதமானோருக்கு வேலை இல்லை. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஏழைகள் கிளர்ச்சி செய்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று, சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டத்தை அறிமுகப் படுத்தியவரின் பெயர்: ஹுவான் மனுவேல் சஞ்செஸ் (Juan Manuel Sanchez). அவர் கடந்த முப்பது வருடங்களாக Marinaleda என்ற சிறிய நகரம் ஒன்றின் மேயராக பதவி வகித்து வருகின்றார்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவர் நிர்வகிக்கும் மரினலேடா நகரத்தில், அனைத்தும் கம்யூனிச பொருளாதார அடிப்படை கொண்டவை. கடந்த சில வருடங்களாக, ஸ்பெயின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால், மரினலேடா பொருளாதாரம் உயர்ந்து வருகின்றது. அங்கே வேலையற்றோர் யாரும் இல்லை. அயல் கிராமங்களில் இருந்து பலர் வேலை தேடி வருகின்றனர். அங்கு வேலை செய்யும் ஒரு விவசாயக் கூலி, ஒரு நாளைக்கு $65 (3,928 இந்திய ரூபாய்கள், 8,496 இலங்கை ரூபாய்கள்) சம்பாதிக்க முடியும். இது ஸ்பெயினில் பிற பகுதிகளில் கிடைக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஸ்பெயினின் பிற பகுதிகளில் வாழும் மக்கள், வீட்டு வாடகை கட்ட முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். வாடகை பாக்கி வைத்த பலர், வசித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, தெருக்களில் வசிக்கிறார்கள். மரினலேடா நகரில் வாழும் எல்லோரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்கள். நகர சபை வீடு கட்ட கடன் வழங்குகின்றது. வீடு கட்டி முடிந்ததும், கடனை அடைப்பதற்காக மாதாந்த தவணைத் தொகை $ 20 மட்டுமே திருப்பிக் கட்ட வேண்டும். பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்குவதால், அது மரினலேடாவில் வாழும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதனால், பல பெற்றோரின் சுமை குறைகின்றது. ஸ்பெயினின் பிற பகுதிகளில், அதற்காகவே சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இரண்டு, மூன்று பிள்ளைகளை வைத்திருப்போரின் பாடு திண்டாட்டம் தான்.

மரினலேடா நகரில் நிர்வாகம் முழுவதும் ஜனநாயக முறைப் படி நடக்கிறது. அனைத்து முடிவுகளும் அங்கு வசிக்கும் மக்களை கலந்தாலோசித்து, அவர்களின் சம்மதத்துடன் எடுக்கப் படுகின்றன. மேயர் ஹுவான் மனுவேல் சஞ்செஸ், மரினலேடா வாழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக உள்ளார். கடந்த முப்பது வருடங்களாக, மேயர் பதவிக்கு வேறு யாரும் வர முடியவில்லை. ஹுவான் மனுவேல் சஞ்செஸ், ஐக்கிய இடது முன்னணி கட்சியின் பிரதிநிதி. அங்கே ஸ்பெயினின் பிற கட்சிகளும் இயங்குகின்றன. ஐக்கிய இடது முன்னணி கட்சி, மாகாண அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால்,அது மரினலேடாவுக்கு பெரும் தொகை ஒதுக்குவதாக, எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ், தானுண்டு தன வேலையுண்டு என்று, மேயர் பதவியுடன் திருப்தியடைந்து விடவில்லை. அயலில் உள்ள கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழை மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார். அதனால், ஆட்சியாளர்களின், முதலாளிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். ஏற்கனவே பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர். இப்போதும் பல வழக்குகள் அவர் மேல் போடப் பட்டுள்ளன. 

ஹுவான் மனுவேல் சஞ்செஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும், ஒரு சூப்பர் மார்க்கட்டில் சூறையாடி, பணம் கொடுக்காமல் வெளியே வந்த பொழுது, பொலிஸ் அவரைக் கைது செய்தது. அந்த தகவல், ஸ்பெயின் நாட்டு ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் யாரென்று தெரியாத ஸ்பானிஷ் மக்களுக்கும், அவரைப் பற்றி அறியத் தந்தன. என்ன ஆச்சரியம்! சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த ஹுவான் மனுவேல் சஞ்செஸ், பெரும்பான்மையான ஸ்பானிஷ் மக்களுக்கு ஒரு நாயகனாக தென்பட்டார். பலர் அவரை "நவீன ரொபின் ஹூட்" என்று அழைத்தார்கள். ஸ்பெயின் முழுவதும் "சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த வீர நாயகனின்" புகழ் பரவியது.

சூப்பர் மார்க்கட் சூறையாடுவதால் ஏழைகளின் உணவுத் தேவை தீர்ந்து விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணக்காரர் யாரும் தாமாகவே முன்வந்து, தங்களது செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதனால், ஏழைகளுக்கு முன்னிருக்கும் ஒரே தெரிவு அடித்துப் பறிப்பது தான். இந்தப் பொருளாதார பால பாடத்தை மக்களுக்கு உணர்த்துவதே, சூப்பர் மார்க்கட் சூறையாடலின் நோக்கம். சில நிறுவனங்கள், ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மீது கிரிமினல் வழக்குப் போட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதால், வழக்கு இழுபட்டுக் கொண்டு செல்கின்றது. 

இதே நேரம், யாருமே எதிர்பார்க்காத அதிசயம் ஒன்றும் நடந்துள்ளது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் கொள்ளையடித்த சூப்பர் மார்க்கட்டினை நடத்தும் இன்னொரு நிறுவனம், கொள்ளையடிக்கப் பட்ட பொருட்களின் செலவை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு உணவுப் பொருட்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. "உலகில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சில நேரம் அதற்கு கிளர்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்று ஹுவான் மனுவேல் சஞ்செஸ் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:


ஸ்பானிஷ் தொலைக்காட்சியில், ஏழைகள் சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த செய்தி: