Showing posts with label ஸ்டாலினிசம். Show all posts
Showing posts with label ஸ்டாலினிசம். Show all posts

Wednesday, February 05, 2014

ஈழப் போராட்டமும், ஸ்டாலின் ஆட்சியும் - சில ஒற்றுமைகள்

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
 உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஏழாம்  பாகம்)


ஸ்டாலின் பற்றிய மீள்பார்வை என்பதன் அர்த்தம், ஸ்டாலின் செய்த தவறுகளை நியாயப் படுத்துவதல்ல. ஒரு வரலாற்று நாயகனை, அன்றைய வரலாற்று காலகட்டத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். உதாரணத்திற்கு, “முஸ்லிம்களின் இறைதூதர் ஒரு முகமது ஒரு பயங்கரவாதி, பல இலட்சம் பேரைக் கொன்ற கொலைகாரன்…” என்று, ஐரோப்பாவில் சில தீவிர வலதுசாரி கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாம் என்ற புதிய மதத்தை உருவாக்குவதற்கான போரில், முகமது நேரடியாகவே நிறையக் கொலைகளை செய்திருக்கலாம். ஆனால், அவற்றை 1500 வருடங்களுக்கு முன்பிருந்த அரேபியாவின் சமூக - அரசியல் நிலைமையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று அதியுயர்ந்த நாகரீகம் அடைந்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் மேலைத்தேய நாடுகளிலும் அது தான் நிலைமை. இன்றைக்கு நாம் மதிக்கும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு, 19 ம் நூற்றாண்டில், அல்லது 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தோற்றப்பாடு தான். அப்போது கூட, பெண்களுக்கும், வருமானம் குறைந்த ஏழைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. அது வரையும், ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கொடூரமான சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தனர். பல ஐரோப்பிய நாடுகளில், மன்னராட்சி, அல்லது நிலப்பிரபுத்துவ ஆட்சி நிலவியது.

பிரிட்டனில், குரொம்வெல் மன்னராட்சியை தூக்கி எறிந்து விட்டு, பாராளுமன்ற ஆட்சியை கொண்டு வந்தார். ஆனால், அதற்காக பிரிட்டிஷ் மக்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சுருக்கமாக, "குரொம்வெல் இன்னொரு ஸ்டாலின் மாதிரி… அல்லது ஸ்டாலின் இன்னொரு குரொம்வெல் மாதிரி" என்று கூறலாம். பிரிட்டனில் பாராளுமன்றம் தோன்றிய புரட்சி நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் பல இலட்சம் மக்கள் பலியானார்கள். குரொம்வெல்லுடன் சேர்ந்து போராடிய தோழர்களும், பிற்காலத்தில் கொல்லப் பட்டனர். ஆனால், நாம் ஏன் அதைப் பற்றிப் பேசுவதில்லை? ஏனென்றால், இன்று நாங்கள் அனுபவிக்கும் பாராளுமன்ற முறையின் தோற்றுவாய் அது தான். பிரிட்டனில் ஒரு குரொம்வெல் தோன்றியிரா விட்டால், இன்றைக்கு எந்த நாட்டிலும் பாராளுமன்ற ஜனநாயகம் இருந்திராது.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி பெருமையாகப் பேசும் பலர், அந்தக் காலத்தில் நடந்த படுகொலைகளை அறிந்து வைத்திருப்பதில்லை, அல்லது அறிந்து கொள்ள விரும்புவதில்லை. எனது நண்பர் ஒருவர், முன்பு ட்ராஸ்கியவாதியாக இருந்து, தற்போது தமிழ் தேசியவாதியாக மாறி இருக்கிறார். அவர் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தோன்றிய சர்வாதிகாரி ரொபெஸ்பியர் பற்றி, உயர்வாகப் பேசிக் கொள்வார். பிரபாகரனுடன் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறுவார். ஆனால், அவருக்கு இன்றைக்கும் ஸ்டாலினைப் பிடிக்காது. கொடுங்கோலன், கொலைகாரன் என்று ஸ்டாலினை வெறுப்பதற்கான காரணங்களை அடுக்குவார். இப்படித் தான் பலர், தமக்குள்ளே முரண்பட்டுக் கொள்கின்றனர்.

ரொபெஸ்பியர் பிரான்சில் என்ன செய்தாரோ, அதையே தான் ஸ்டாலின் ரஷ்யாவில் செய்தார். இருவரும் பல்லாயிரம் பேர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர். ரொபெஸ்பியர், பிரெஞ்சுப் புரட்சியில் முன்னுக்கு நின்று போராடிய தோழர்களையும் விட்டு வைக்கவில்லை. கருத்து முரண்பாடு கொண்ட அத்தனை பேரையும் கழுத்து வெட்டிக் கொன்றான். ரொபெஸ்பியரின் ஆட்சியை, ஒரு பயங்கரவாத ஆட்சி என்று தான் இன்றைக்கும் பல சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், தாம் விடுதலை பெற்று விட்டதாக நம்பிய பிரெஞ்சு மக்கள், ரொபெஸ்பியரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ், எந்த நேரம் கழுத்துக்கு கத்தி வருமோ என்று பயந்து கொண்டு வாழ்ந்தனர். இருந்தாலும், ரொபெஸ்பியர் ஆட்சியினால் ஒரு நன்மை விளைந்தது. ஆட்சியை விட்டு அகற்றப்பட்ட மன்னர்களும், நிலப்பிரபுக்களும் மீண்டும் தலை காட்டவில்லை. இன்று, எந்தவொரு உலக நாட்டிலும், முன்பிருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ- மன்னராட்சி இல்லையென்றால், அதற்கு ரொபெஸ்பியரின் கொடுங்கோன்மை ஒரு முக்கிய காரணம்.

ஸ்டாலினை விமர்சிக்கும் பலர், மேற்குறிப்பிட்ட வரலாற்றுக் காரணிகளை கவனத்தில் எடுப்பதில்லை. ஸ்டாலின் ஆட்சியில், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும், இலட்சக் கணக்கானோருக்கு பேர் மரண தண்டனை விதிக்கப் பட்டது. “மக்கள் விரோதி” என்ற குற்றச்சாட்டில் தான், அநேகமான கைதுகள் இடம்பெற்றன. சார் மன்னராட்சி ஆதரவாளர்கள், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், எதிர்க் கட்சியினர், ஆகிய “வழமையான” சோவியத் அரச எதிர்ப்பாளர்கள், எப்போதும் போல கைது செய்யப் பட்டனர்.

ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் கூறுவது போன்று, மேற்குறிப்பிட்ட அரச எதிர்ப்பாளர்கள் மட்டும் கைது செய்து, கொலை செய்யப் படவில்லை என்பது உண்மை தான். ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் கூட கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர். சில நேரம், அவர்களது மனைவிமாரும் கைது செய்யப் பட்டனர். அவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். தந்தையும், தாயும் கைதானதால், திடீரென அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்ட அவர்களது பிள்ளைகள், அநாதை இல்லங்களில் சேர்க்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப் பட்ட சந்தர்ப்பங்களில், அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு கீழ் வேலை செய்தவர்கள், என்று ஒரு பெரும் பட்டாளமே ஒட்டுமொத்தமாக கைது செய்யப் பட்டது. மக்கள் விரோதி என்று கைது செய்யப் பட்டவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், அது அவரது மனைவி, பிள்ளைகளாக இருந்தால் கூட, குற்றம் சாட்டப் பட்டவருடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில், அவர் மீதான குற்றச் சாட்டுகளை சுமத்தி, கண்டிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருந்தது. 

இரண்டாம் உலகப்போர் வெடித்தவுடன், முன்னரங்க நிலைகளில், நாஜி படைகளை எதிர்த்து போரிட்ட சோவியத் செம்படை வீரர்களுக்கு, இன்னொரு நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. அவர்கள் யாரும் எதிரியிடம் சரணடையவோ, அல்லது உயிருடன் பிடிபடவோ கூடாது என்று, ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு போட்டார். எதிரியிடம் சரணடைந்த அல்லது பிடிபட்ட படையினரின் மனைவிமார் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். பல வருடங்கள், கடூழிய தடுப்பு முகாம்களில் போட்டு தண்டிக்கப் பட்டனர். (எதிரிப் படையினரிடம் சரணடையுமாறு, மனைவிமாரே தூண்டி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. சில குடும்பங்களில் அப்படியும் நடந்துள்ளது.) 

ஜேர்மனிய நாஜி படையினரிடம் பிடிபட்ட (அல்லது சரணடைந்த) ஸ்டாலினின் மகன் லெப்டினன்ட் யாகோப்பிற்கும், அவனது மனைவிக்கும் அதே அவல நிலைமை ஏற்பட்டது. தனது மகன் என்பதற்காக, ஸ்டாலின் கருணை காட்டவில்லை. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்று கண்டிப்பாக கூறி விட்டார்.

ஜெர்மனி, தன்னிடம் பிடிபட்ட ஸ்டாலினின் மகனை ஒரு பகடைக் காயாக பயன்படுத்த விரும்பியது. சோவியத் செம்படையினரிடம் பிடிபட்ட, ஜெர்மன் பீல்ட் மார்ஷல் (அல்லது ஹிட்லரின் மைத்துனர்) ஒருவருக்கு பதிலாக, ஸ்டாலினின் மகனை கைதிப் பரிமாற்றம் செய்ய விரும்புவதாக, ஜெர்மனி தகவல் அனுப்பியது. அதற்கு ஸ்டாலின் அனுப்பிய பதில்: “ஒரு லெப்டினன்ட்டுக்கு பதிலாக மார்ஷலை பரிமாற்றம் செய்ய முடியாது. எனக்கு யாகோப் என்ற பெயரில் ஒரு மகன் கிடையாது. எதிரியிடம் சரணடைந்த அத்தனை பேரும் துரோகிகள்.”

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்ற குற்றச்சாட்டிற்கு வலுச் சேர்பதற்காக, சிலர் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை காட்டலாம். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஸ்டாலின் ஒரு பாசிஸ்ட்"  என்று அவதூறு செய்கின்றனர். ஏற்கனவே, மேற்கத்திய நாடுகளில், ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட்டுப் பேசும் போக்கு பரவலாக இருந்து வருகின்றது. சில தமிழர்களும் அதனை அப்படியே உள்வாங்கி, நம்மிடையே வாந்தி எடுத்து வருவது தெரிந்த விடயம்.

ஆப்பிளையும், தக்காளியையும் ஒப்பிட முடியாது. எதை எதனுடன் ஒப்பிடுவது என்றில்லாமல், பலர் குதர்க்க வாதம் செய்கின்றனர். உதாரணத்திற்கு, பிரபாகரனையும், மகிந்த ராஜபக்சவையும் ஒப்பிட்டுப் பேசும் சிலர் இருக்கின்றனர். ஆனால், அந்த ஒப்பீடு, புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகளின் காதுகளுக்கு எட்டினால், திட்டோ திட்டென்று திட்டி, சொன்னவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். ஆனால், அவர்கள் கூட, சில நேரம், ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒப்பிடும் தவறைச் செய்கின்றனர். (அது அவர்களது வலதுசாரி முதலாளிய நம்பிக்கையின் வெளிப்பாடு.)

“தமிழின அழிப்புப் போரை நடத்திய, சிங்களப் பேரினவாதியான மகிந்த ராஜபக்சவுடன், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய பிரபாகரனை ஒப்பிட முடியாது.” உண்மை தான். அதே நியாயம், அன்று ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த, பாசிச இனவெறிப் பூதத்தை எதிர்த்துப் போரிட்ட, ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்பதை பலர் உணர்வதில்லை.

முதலில், பாசிஸ்ட் என்ற சொல்லையே, பலர் அதன் அர்த்தம் தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தாலியில் தோன்றிய முசோலினியின் பாசிஸ்ட் கட்சி, பாசிசம் என்ற சொல்லை நவீன உலகிற்கு அறிமுகப் படுத்தியது. “தீவிர தேசியவாதம், தனது இனம் அல்லது மொழி உலகிற் சிறந்தது என்ற எண்ணம், தாம் ஆளப் பிறந்த இனம் என்ற கோட்பாடு, தன்னைச் சுற்றிய பிற இனங்களை தாழ்வாக கருதுவது…” இது போன்ற பல கொள்கைகளை கொண்டது தான் பாசிசம்.

ஹிட்லரின் நாஜிசம், இன்னும் ஒரு படி மேலே சென்று, இனவெறிக் கொள்கையை புகுத்தியது. ஐரோப்பிய வெள்ளை இனத்தை, (ஹிட்லரின் மொழியில்: தூய ஆரிய இனம்) மனித நாகரீக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள இனமாக கருதியது. யூதர்கள், ஜிப்சிகள், ஸ்லாவியர்கள், கருப்பர்கள் போன்ற பிற இனங்களை மனிதர்களாக கருதவில்லை.

ஹிட்லரும், நாஜிகளும், பிழையான இனத்தில் பிறந்த காரணத்திற்காக பலரைக் கொன்று குவித்தார்கள்.  இனவெறி, அந்தக் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது. ஹிட்லரின் தடுப்பு முகாம்கள், யூதர்கள், ஜிப்சிகள் போன்ற “தாழ்ந்த” இனங்களை சேர்ந்த மக்களை, ஒரே இடத்தில் வைத்திருந்து, அழித்தொழிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டன. ஆனால், சோவியத் யூனியனில் இருந்த குலாக் சிறை முகாம்களின் நோக்கம் வேறு. அங்கு சிறை வைக்கப் பட்டிருந்த கைதிகள் மரணத்தை எதிர்நோக்கி இருக்கவில்லை. சில இடங்களில், குலாக் கைதிகளுக்கு பதவியும், கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப் பட்டது. தண்டனைக் காலம் முடிந்து, விடுதலையாகும் நேரம், கைநிறையப் பணத்துடன் வீடு திரும்பியவர்கள் ஏராளம். 

ஸ்டாலின் காலத்தில், வர்க்க எதிரிகள் என்று அடையாளம் காணப் பட்டவர்கள் மட்டுமே சிறைப் பிடிக்கப் பட்டனர். எந்தவொரு கைதுக்கும், கொலைக்கும் பின்னால் இனவெறி காரணமாக இருக்கவில்லை. (இரண்டாம் உலகப்போரில், சோவியத் யூனியனின் ஐரோப்பிய கண்டப் பகுதியில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இனங்கள், பலவந்தமான இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், அன்று அவர்களுக்கு ஏற்பட்ட அத்தனை கொடுமைகளையும், ரஷ்யர்களும் அனுபவித்தனர் என்பதை மறந்து விடுகின்றனர். )

“போரில் யாரும் உயிருடன் பிடிபடவோ, சரணடையவோ கூடாது” என்று ஸ்டாலின் போட்ட உத்தரவு, பலருக்கு மனிதநேயமற்றதாக தோன்றும். சரணடைந்த அல்லது பிடிபட்ட இராணுவவீரர்களின் மனைவிமாரையும், ஸ்டாலின் சிறையில் போட்டு வருத்தினான். அதனால், அவன் ஒரு மனிதநேயமற்ற கொடுங்கோலன் என்பதற்கு அதைக் காரணமாக காட்டலாம். ஸ்டாலின் மீதான் அவர்களது குற்றச்சாட்டுக்கு பக்க பலமாக இன்னொரு தகவலையும் நானே சொல்லி விடுகிறேன். 

ஜெர்மனியுடன் போர் தொடங்கிய காலத்தில், போர்க் களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடும் இராணுவ வீரர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும், ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லவும் என, NKVD யின் விசேட பிரிவொன்று இயங்கியது. போர்க் களத்தில் இருந்து தப்பியோடும் வீரர்களை தண்டிக்கும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. போரில் பின்வாங்கும் போராளிகளை சுட்டுக் கொல்லும் வழக்கம், புலிகள் அமைப்பினுள்ளும் இருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்றைய நாகரிக சமுதாயத்திற்கு ஒவ்வாததாக இருக்கலாம். போர் நடக்கும் காலங்களில், அறம் காணாமல் போய் விடுகின்றது. போரில் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல கடுமையான விதிகள் பின்பற்றப் படுவதுண்டு. நாங்கள் எப்போதும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் சிந்திக்கப் பழகி விட்டதால், எமக்கு அவை அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், கீழைத்தேய கலாச்சாரத்தில் அவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

ஒரே கொள்கை கொண்ட எல்லோரும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். உதாரணத்திற்கு, ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவனும், இந்தியக் கிறிஸ்தவனும், ஒரே மதத்தை, ஒரே கடவுளை நம்பும் காரணத்தால், ஒரே மாதிரி செயற்படுவார்களா? அதே மாதிரி, ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் தான். ஆனால், அவரது செயற்பாடுகள் பல, மேற்கு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு கூட விசித்திரமாகத் தோன்றும். ஏனென்றால், அவர்கள் பிறந்து வளர்ந்த கலாச்சாரம் வேறு வேறு. 

தயவுசெய்து, யாரும் இதனை ஒரு "நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறு" என்று குதர்க்கமாக விவாதிக்க வேண்டாம். அது ஒரு மேலைத்தேய கண்ணோட்டம். அப்படியானால், நாங்கள் எமது தமிழ்க் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோமா? ஒரு தமிழன் முஸ்லிமாக, கிறிஸ்தவனாக, லிபரலாக, கம்யூனிஸ்டாக அல்லது வேறெதுவாக இருந்தாலும், அவனது பண்பாட்டுக் குணாம்சம் மாறுபடாது.

சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள், அன்று நடந்த கொடுமைகளுக்கு காரணமாக, கலாச்சாரப் பின்னணியை ஆராய விரும்புகினர். ஸ்டாலின் ஜோர்ஜிய இனத்தை சேர்ந்தவர். ஜோர்ஜியாவில் பிறந்து, வளர்ந்தவர். ஸ்டாலினின் பல செயல்களில், ஜோர்ஜிய கலாச்சாரத்தின் தாக்கம் இருந்திருக்கக் கூடும். ஜோர்ஜியர்கள், தோற்றத்தில் பிற ஐரோப்பியர்கள் மாதிரி இருப்பார்கள். ஆனால், அவர்களது கலாச்சாரம் கீழைத்தேய மரபு சார்ந்தது. சுருக்கமாக சொன்னால், ஒரு ஆங்கிலேயனை விட, ஒரு இந்தியன் ஜோர்ஜிய கலாச்சாரத்திற்கு நெருக்கமாக உணர்வான்.

ஜோர்ஜியா பல நூறாண்டுகளாக, துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அதனால் துருக்கிய கலாச்சாரத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதே நேரம், ரஷ்யாவும், அதனோடு அண்டிய சிறிய நாடுகளும், பல நூறாண்டுகள் மொங்கோலியர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன. மொங்கோலியர்கள் ஒரு துருக்கி இனத்தை சேர்ந்தவர்கள். மொங்கோலிய துருக்கியரின் அரசியல், இராணுவ, கலாச்சார தாக்கத்தின் விளைவாக, மொஸ்கோவை மையமாகக் கொண்ட ரஷ்ய ராஜ்ஜியம் தோன்றியது. இன்றைக்கும் அதற்கு சாட்சியமாக, கிரெம்ளின் கட்டிடம் உள்ளது. 

மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி இனத்தவர்களின் பண்பாடுகளும், போர்க் கால நெறிகளும் விசித்திரமானவை. (நாங்கள் “தமிழ்க் கலாச்சாரம்” என்று நம்பும் பல விடயங்களின் மூலம் துருக்கி கலாச்சார மரபு ஆகும்.) கீழைத்தேய மரபில், சமூகம் ஒருவரை குற்றவாளியாக கருதினால், அவரது குடும்பத்தினரும் ஒதுக்கப் படுவார்கள். எவ்வாறு பழிவாங்கும் படலத்தில், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு, தமிழ் சினிமாவை பார்த்தாலே போதும். ஒருவன் கொலை செய்யப் பட்டால், அவனுக்காக பழிவாங்க மற்றவர்கள் காத்திருப்பார்கள் என்பது, அதற்கு கூறப் படும் காரணம்.

ஸ்டாலின் காலத்தில், ஒருவர் மக்கள் விரோதி என்று கைது செய்யப் பட்டு விட்டால், அவரோடு சேர்ந்த உறவினர்கள், நண்பர்களும் கைது செய்யப் பட்டதன் காரணம் அது தான். சில நேரம் அவர்கள் பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கலாம், அல்லது யாருக்கும் தீங்கு விளைவிக்காத அப்பாவியாகவும் இருக்கலாம். ஆனால், “ஒரு ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளும்” நடவடிக்கை காரணமாக, அப்பாவிகள் பலரும் பாதிக்கப் பட்டனர்.

தமிழர்களுக்கு, அவர்களுக்கு நன்கு தெரிந்த சில உதாரணங்கள் மூலம் அதனை புரிய வைக்கலாம். ஈழப் போராட்டத்தில், புலிகள் பிற இயக்கங்களை “சமூக விரோதிகள்” அல்லது “இந்திய, இலங்கை அரசுகளின் கைக்கூலிகள்” போன்ற காரணங்களை கூறி, அவற்றை தடை செய்திருந்தனர். அப்போது, தடைசெய்யப் பட்ட உறுப்பினர்கள் மட்டும் கைது செய்யப் பட்டு சுட்டுக் கொல்லப் படவில்லை. சில நேரம், நெருங்கிய உறவினர்களும் பாதிக்கப் பட்டனர்.

புலிகள் அமைப்பினுள்ளே பிளவுகள் தோன்றிய காலங்களிலும், பழிவாங்கும் படலம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒட்டு மொத்தமாக, பிரிந்து சென்ற எல்லோரையும் தண்டிப்பதன் மூலம் தான், அந்தக் கலகங்கள் ஒடுக்கப் பட்டன. மாத்தையா குழு, கருணா குழு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்ட காலத்தில், ஒரு குற்றமும் செய்திராத அப்பாவி உறுப்பினர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். புலிகளால் சமூக விரோதி, அல்லது ஒட்டுக் குழு உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் சந்தேகத்திற்குள்ளானார்கள்.

ஈழப் போராட்டத்தில் மட்டுமல்ல, தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஸ்ரீலங்கா அரச படையினரும், ஜேவிபி யினரும், ஆயுதமேந்திய நபர்களை மட்டும் குறி வைக்கவில்லை. அவர்களோடு தொடர்பான, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் பாதிக்கப் பட்டனர். அவ்வாறு தான் போரில் பல அப்பாவிகளும் கொல்லப் பட்டனர்.

மேலே குறிப்பிட்டது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எதற்காக அப்படி மனிதநேயமற்று நடந்து கொண்டார்கள்? அதைத் தான் இங்கே "கீழைத்தேய கலாச்சார மரபு" என்று குறிப்பிடுகின்றேன். இப்போதும் சில புலி ஆதரவாளர்கள் மத்தியில், அத்தகைய மனப் போக்கு காணப் படுகின்றது. அவர்கள் எந்த அளவுகோலை வைத்து மற்றவர்களுக்கு துரோகி முத்திரை குத்துகின்றார்கள் என்பதை சற்று ஆராய்ந்தால் போதும். ஸ்டாலின் காலத்திலும் அதே நிலைமை தான் இருந்தது.

இங்கே ஒரு வித்தியாசம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் என்ற தனி மனிதனே காரணம், என்று ஒட்டு மொத்த பழியையும் அவரின் தலை மேல் போட்டு விடுகின்றனர். பிரபாகரன் என்ற தனி மனிதன் மேல் எல்லாப் பழியையும் போட்டு விட்டு, புலிகளை ஆதரித்த மக்களில் ஒரு பிரிவினர், தமது பொறுப்புகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வது போன்றது தான் இதுவும். அன்று ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கலாம். ஆனால், ஸ்டாலினை ஆதரித்த பெரும்பான்மை சோவியத் மக்களும் அன்று நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

புலிகள் இயக்கம் விட்ட பல தவறுகள், தமிழ் மக்களை பகைத்துக் கொண்ட நடவடிக்கைகள், "தலைவர் பிரபாகரனுக்கு தெரியாமல் நடந்திருக்கலாம்" என்று, இன்றைக்கும் பலர் நம்புகின்றனர். ஸ்டாலின் கால சோவியத் யூனியனிலும், அத்தகைய நிலைமை இருந்தது. எந்தக் குற்றமும் செய்திராத அப்பாவிகள் கைது செய்யப் பட்டதற்கு, சில NKVD அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அதிகார துஷ்பிரயோகம் காரணம் என்று மக்கள் நம்பினார்கள். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது என்று தான் நம்பினார்கள். சில இடங்களில் அது துலக்கமாகத் தெரிந்தது. 

ஒருவரது வசதியான வீட்டை அபகரிக்க நினைத்தவர்கள், ஒருவரது அழகான மனைவி மீது ஆசைப் பட்டவர்கள், ஒருவரது திறமை மீது பொறாமை கொண்டவர்கள், இப்படிப் பல தனிப்பட்ட காரணங்களுக்காக, தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த NKVD அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் ஏதாவது ஒரு பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றனர்.

இறுதியில், NKVD உளவு நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ஏசுவா மீது மக்களின் சந்தேகம் திரும்பியது. ஏசுவா பற்றி பல வதந்திகள் உலாவின. உண்மையிலேயே, ஏசுவா தனது இறுதிக் காலத்தில், ஆடம்பர வாழ்க்கையிலும், சிற்றின்பக் களியாட்டங்களிலும் பொழுதைக் கழித்து வந்தார். இந்தத் தகவல் எல்லாம் ஸ்டாலினின் காதுகளை எட்டியது. ஏசுவாவும் மக்கள் விரோதி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்டார்.

2 பெப்ரவரி 1940 அன்று, NKVD தலைமையகத்தில், ஏசுவா பல அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்ற அதே இடத்தில் வைத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. ஜெர்மன், போலிஷ் அரசுகளுக்கு உளவு பார்த்ததாக, மிகக் கடுமையான தேசத் துரோகக் குற்றச்சாட்டு ஏசுவா மீது சுமத்தப் பட்டது. ஏசுவா சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர், “ஸ்டாலினிச பயங்கரவாதம்” என்று அழைக்கப்படும் காலம் முடிவுக்கு வந்தது. 

உண்மையில், அன்று சோவியத் யூனியனில் வாழ்ந்த மக்கள், அந்தக் காலகட்டத்தை “ஏசுவா பயங்கரவாதம்” என்று தான் கூறி வந்தனர். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள், அதனை “ஸ்டாலினிச  பயங்கரவாதம்” என்று திரித்தார்கள். NKVD யின் புதிய தலைமை அதிகாரியாக, பெரியா பதவியேற்ற பின்னர், அனைத்து அரசியல் கைதிகளின் கோப்புகளும் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. 

கவனிக்கவும்: "ஸ்டாலின் எத்தனை இலட்சம் பேரை கொன்றான்" என்று, புள்ளி விபரக் கணக்கு காட்ட நிறையப் பேர் உள்ளனர். ஆனால், ஸ்டாலினது காலத்திலேயே, இலட்சக் கணக்கான கைதிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டார்கள் என்ற உண்மையை சொல்ல மாட்டார்கள். 

1940 ம் ஆண்டு வரையில், ஒன்றரை மில்லியன் கைதிகளின் வழக்குகள் திரும்பவும் விசாரிக்கப் பட்டன. இன்னமும் தீர்ப்பு சொல்லப் படாமல், நிலுவையில் இருந்த நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோரின் வழக்குகள் இரத்து செய்யப் பட்டன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டனர். சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த முப்பதாயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப் பட்டனர். அத்துடன், குலாக் தடுப்பு முகாம்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் விடுதலை செய்யப் பட்டனர்.

இந்த நடவடிக்கை காரணமாக, சோவியத் மக்களுக்கு, சோவியத் நீதித் துறை மீது நம்பிக்கை வந்தது. உண்மையில், ஸ்டாலின் அன்று சோவியத் நாட்டில் நடந்த எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்ததால் தான், பெருந்தொகையான நிரபராதிகள் விடுதலை செய்யப் பட்டனர். எந்தக் காரணமும் இன்றி, ஒட்டு மொத்தமாக பலரை கைது செய்வதால், எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்பதை ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆதாரம், சாட்சியம் எதுவுமற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப் பட வேண்டும் என்று கருதினார்.

மேலும், எழுந்தமானமாக பலரைக் கைது செய்வதன் மூலம், தேசத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றி விட்டதாக, தற்பெருமை அடித்துக் கொண்ட அதிகாரிகளும் இருந்தனர். போலி என்கவுண்டர் செய்து விட்டு, பதவி உயர்வை எதிர்பார்க்கும், நம்மூர் பொலிஸ் அதிகாரிகள் போன்று தான் அவர்களும் நடந்து கொண்டனர். அப்படியான, பதவிப் பித்தர்கள் ஸ்டாலினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர்.

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்பதை நிரூபிக்க, ஸ்டாலினால் கொல்லப்பட்ட, கொடுமைப் படுத்தப் பட்ட மக்களின் எண்ணிக்கையை, புள்ளி விபரமாக எடுத்துப் போட்டு, நம்மை எல்லாம் அசர வைக்கும் அறிவுஜீவிகளுக்கு இந்த விபரங்கள் எதுவும் தெரியாதா? அவர்கள் படித்தவர்கள், அறிவாளிகள் என்பதால், ஸ்டாலினின் மறுபக்கமும் தெரிந்திருக்கும். ஆனால், அதை எல்லாம் மறைக்க வேண்டிய தேவை ஒன்று, அவர்களது மனதைப் பிடித்தாட்டுகின்றது. அது என்ன?

அன்றைய சோவியத் வரலாற்றை, நாங்கள் இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். சரி, நமது அறிவுஜீவிகள் சொல்வது மாதிரியே, அவர்களது ஆலோசனைகளுக்கு இணங்க, ஸ்டாலின் நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும்? இன்றைய உலக அரசியல் நிலவரம்,  முற்றிலும் வேறு விதமாக காட்சியளித்திருக்கும்.

(தொடரும்)



இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்
5.ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!
6.“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் கொடுத்த மக்கள்  


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Friday, January 24, 2014

“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் கொடுத்த மக்கள்

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
 உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஆறாம் பாகம்)


“சோவியத் யூனியனில், ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில்,  உண்மையான கம்யூனிஸ்டுகள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். தனக்கு போட்டியாக இருந்தவர்களை கொன்று குவித்து விட்டு, ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றினார். அதனால் தான் ஸ்டாலினை ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி என்று அழைக்கிறோம்.” இவ்வாறு பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மேற்கத்திய நாடுகள், முதலாளியத்தை ஆதரிப்போர் மட்டுமல்ல, ட்ராஸ்கியவாதிகள், ஜனநாயகவாதிகள் கூட, ஸ்டாலின் மேல் மேற்படி விமர்சனத்தை வைக்கின்றனர்.

 “ஸ்டாலினின் பயங்கரவாத ஆட்சி" என்று வர்ணிக்கப் படும், 1937 - 1938 காலப் பகுதியில் நடந்த களையெடுப்புகளின் போது, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில், அரைவாசிக்கும் அதிகமானோர் காணாமல்போனார்கள். செம்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த, நூற்றுக் கணக்கான இராணுவ ஜெனரல்கள் சிறையில் அடைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டனர். இவ்வாறு, ஸ்டாலின் தனது  அரசாங்கம், கட்சி, மற்றும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களை அழிக்கும் அளவிற்கு, அங்கே அப்படி என்ன நடந்தது?

அன்று நடந்த களையெடுப்புகள், கொலைகள் எல்லாவற்றுக்கும், "ஸ்டாலினின் அதிகார வெறி" மட்டும் தான் காரணம் என்று, ஒரே பதிலை எப்போதும் சொல்லித் தப்பி விட முடியாது. சில சரித்திர ஆசிரியர்கள் இன்னொரு காரணத்தை கூறுகின்றனர். 1934 ம் ஆண்டு, லெனின்கிராட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான கிரோவ், இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அரசியல் படுகொலையின் விளைவாக, "இன்னமும் எதிரிகள், சதிகாரர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்" என்ற காரணத்தை காட்டி, நாடு முழுவதும் பலர் கைது செய்யப் பட்டனர் என்று கூறுகின்றனர்.

 "கிரோவ் மிகப் பிரபலமான தலைவராக இருந்த படியால், ஸ்டாலினே ஆள் வைத்து கொலை செய்து விட்டு, அந்தப் பழியை மக்கள் விரோதிகள் தலையில் போட்டு விட்டு, தனது சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக, பல இலட்சம் பேரை கைது செய்து, கொலை செய்ததாக," மேலைத்தேய சரித்திர ஆசிரியர்கள் ஒரு காரணத்தை கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

அந்த சரித்திர ஆசிரியர்களின் ஊகம், இன்று பல மேற்கத்திய பாடநூல்களிலும் எழுதப் பட்டுள்ளன. கிரோவ், ஸ்டாலின் அனுப்பிய கொலைகாரர்களால் கொல்லப் பட்டதாக , கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் நம்பினார்கள்.   அது வெறும் வதந்தி மட்டுமே. அதை நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.  மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

கிரோவ் கொலை செய்யப் பட்டது, 1934 ம் ஆண்டு. மாபெரும் களையெடுப்புகள் நடந்த காலம், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்கள். இடையிலே இரண்டு வருடங்கள் உள்ளனவே? அந்த இரண்டு வருடங்களிலும் எதுவுமே நடக்காத காரணம் என்ன? மேலும், கிரோவ் கொலையை தொடர்ந்து, லெனின்கிராட் பகுதியில், சந்தேகத்தின் பேரில் பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். நாட்டின் பிற பாகங்களில், எந்தக் கைதும் இடம்பெறவில்லை.

முதலாவதாக, இடையில் இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த மர்மம் என்ன? இரண்டாவதாக, எதற்காக சர்வதேச COMINTERN அமைப்பை சேர்ந்த, ஆயிரக் கணக்கான வெளிநாட்டுக் கம்யூனிஸ்டுகள் கொல்லப் பட்டனர்? அவர்கள் எக் காலத்திலும், உள்நாட்டில் ஸ்டாலினின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக வரும் வாய்ப்பில்லை.

மூன்றாவதாக, எதற்காக அரசு நிறுவனங்களில் பெரிய பதவி வகித்தவர்கள், நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் மட்டும், கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்? பொதுவாகவே அரசியலில் நாட்டமில்லாத சாதாரண உழைக்கும் மக்கள் யாரும் "ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு" பலியாகவில்லை. (அடித்தட்டு மக்களிலும் சிலர் கைது செய்யப் பட்டனர். ஒன்றில் அவர்கள் ஓரளவு அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள், அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசை விமர்சித்து இருப்பார்கள்.)

அன்றைய சோவியத் நாட்டில், ஒரு நகைச்சுவை துணுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. 
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நடுநிசியில் ஒரு வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள்.
- “யார் அது?” வீட்டுக் காரர் கதவைத் திறக்காமலே வந்தவர்களை வினவுகின்றார். 
- “கதவைத் திற, நாங்கள் NKVD” பதில் வருகின்றது. 
- “மன்னிக்கவும், நீங்கள் தவறான முகவரிக்கு வந்து விட்டீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மேல் மாடியில் குடியிருக்கிறார்!” என்று வீட்டுக்காரர் பதிலளிக்கிறார்

அதாவது, அன்று நடந்த கைதுகளும், கொலைகளும், மேல் மட்டத்தில், ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட தகராறுகள், முரண்பாடுகளின் விளைவு, என்று தான் பெரும்பான்மையான சோவியத் மக்கள் நம்பினார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியானவர்களின் சமூகப் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அது தெரிய வரும். பெரும்பான்மையான கைதிகள், நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர், வசதியாக வாழும் வாய்ப்புக் கிடைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள்.

ஒரு சோஷலிச நாட்டில், "மேட்டுக்குடி வர்க்கம் இருப்பது எப்படி சாத்தியமாகிற்று?" என்று கேட்கலாம். உலகில் எந்த நாட்டில், ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தாலும், அது ஒரே நாளில் சோஷலிச நாடாக மாறி விடாது. படிப் படியாக தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு, பெரிய முதலாளிகளை விரட்டி விட்டு, அவர்களது நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கலாம். ஆனால், நிறுவனங்களை நடத்துவதற்கு முகாமையாளர்கள் தேவை. ஒரு அரச நிறுவனமாக இருந்தாலும், பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பங்களிப்பு தேவை. சிலநேரம், வெளிநாட்டு நிபுணர்களின் சேவையையும், பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும்.  அமெரிக்காவில் இருந்து கூட,  சில தொழில்துறை வல்லுனர்கள்,  அதிக சம்பளத்திற்கு அமர்த்தப் பட்டிருந்தனர். 

அதே போன்று தான், ஒரு அரசாங்கம் நடத்துவதற்கும் அரச அறிவியல், அமைப்பியல் தெரிந்த அறிவுஜீவிகள் தேவை. அப்படியானவர்கள் எல்லோரும், மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அதை நாங்கள் தவிர்க்க முடியாது. ஏனென்றால், காலங்காலமாக மேட்டுக்குடி, அல்லது நடுத்தர வர்க்க மக்கள் தான், உயர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தனர். ஒரு சிறிய தொழிலகத்தை நிர்வகிப்பது முதல், அரசாங்கத்தை நடத்துவது வரையில், தேவையான அறிவு அவர்களிடம் தான் உள்ளது. முரண்நகையாக, “பாட்டாளிவர்க்க கட்சியான” கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும், அவர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும். 

1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சி வென்றிருந்தாலும், ஒரு கம்யூனிச மாமேதையான லெனின் ஆட்சி நடத்தி இருந்தாலும், ஒரு தசாப்த காலமாக முதலாளித்துவத்திற்கு சுதந்திரம் கொடுக்கும், புதிய பொருளாதாரக் கொள்கை அமுலில் இருந்தது. கிராமப் புறங்களில் பணக்கார விவசாயிகளும், நகர்ப்புறங்களில் பணக்கார முதலாளிகளும், லெனினின் ஆட்சிக் காலத்தில் புதிதாக உருவாகி இருந்தனர். அதை விட, நிர்வாகத் திறமை வாய்ந்த அறிவுஜீவிகள் சமுதாயமும் புதிதாக உருவாகி இருந்தது. அந்த நிலைமை ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்திருந்தது. 

கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், அல்லது சோவியத் அரசில் பதவி வகித்தவர்கள், புதிய மேட்டுக்குடியாக மாறி இருந்தனர். அவர்களது கல்வித் தகுதிகேற்றவாறு கிடைத்த வருமானம், வசதியான வாழ்க்கைத் தரத்திற்கேற்ப உயர்வாக இருந்தது. அவர்களின் குடும்பங்கள், பல அரசு சலுகைகளை அனுபவித்து வந்தன. அவர்களது நுகர்வுக்கேன்றே உருவான  விசேட ஆடம்பரக் கடைகள், ஒவ்வொரு நகரத்திலும் தோன்றின. சாதாரண மக்களுக்கான கடைகளில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவினாலும், மேல்தட்டு மக்கள் பிரிவுக்கான ஆடம்பர கடைகளில் அனைத்தும் கிடைத்தன. இந்த நிலைமை, ஸ்டாலின் ஆரம்ப கால ஆட்சிக் காலத்திலும், அதாவது 1937 வரையில் தொடர்ந்தது.

1937 க்குப் பின்னர் என்ன நடந்தது? அது வரை காலமும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் குடும்பங்கள் சிதைக்கப் பட்டன. அரசாங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில், அல்லது ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்த குடும்பத் தலைவன், NKVD யினால் கைது செய்யப் பட்டிருப்பார். அதற்கு முன்னர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர், அன்று முதல் “மக்களின் விரோதி” என்று குற்றஞ் சாட்டப் படுவார். அதன் விளைவு என்ன?

ஒரு மக்கள் விரோதியின் மனைவியின் வேலை பறிக்கப் படும். சில நேரம், கணவனுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மனைவியையும் கைது செய்வார்கள். அந்த நேரத்தில், பிள்ளைகள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்படும். மத்தியதர வர்க்க குடும்பம் என்பதால், வசதியான வீட்டில் வாழ்ந்திருப்பார்கள். தற்போது நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும். அந்தக் குடும்பம் சேர்ந்து வைத்திருந்த ஆடம்பரப் பொருட்கள், தளபாடங்கள் எல்லாவற்றையும் அரசு பறிமுதல் செய்யும். இல்லாவிட்டால், அயலவர்கள் திருடிக் கொண்டு செல்லப் பார்ப்பார்கள். பெரும்பாலான தருணங்களில், நடுத்தெருவில் விடப்பட்ட பிள்ளைகள், குடும்பத்தின் உடைமைகளை விற்று சாப்பிட வேண்டி இருக்கும்.

திருமணமான தம்பதிகளில், கணவனோ அல்லது மனைவியோ தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டால், விவாகரத்து செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டார்கள். அது சிலநேரம் அவர்கள் மீதான சந்தேகத்தை வர விடாமல் தடுக்கும். கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள் வழமை போல பாடசாலைக்கு சென்று வர முடிந்தது. ஆனால், பாடசாலையில் சில ஆசிரியர்களும், சில மாணவர்களும், “மக்கள் விரோதிகளின் பிள்ளைகள்” என்று, அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். எல்லா ஆசிரியர்களும், எல்லா மாணவர்களும் அப்படி அல்ல.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள், தமது பெற்றோருடனான தொடர்பை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.  பாடசாலைகளில் அதைப் பற்றி எதுவும் கதைக்காமல், பாடங்களில் கவனத்தை செலுத்தினார்கள். சில பிள்ளைகள், தாமாகவே முன் வந்து,  தமது பெற்றோரை மக்கள் விரோதி என்று பிரகடனம் செய்தனர். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக, பிள்ளைகள் தாமாகவே பெற்றோரின் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். ("மக்கள் விரோதியின் பிள்ளை" என்ற பட்டம், அன்றைய சமூகத்தில் ஒரு பெரிய அவமானச் சின்னமாக கருதப் பட்டது.)  பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறிய பிள்ளைகள் என்றால், அவர்களது இரு பெற்றோரும் கைது செய்யப் பட்டிருந்தால், அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப் பட்டனர்.

நமது நாடுகளில், நமது சமுதாயத்தில், "வசதியான வாழ்க்கை வாழும் குடும்பங்கள், ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து பிச்சையெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதை," ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வருவோம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்றால், அதற்காகவே அவர்கள் ஸ்டாலினை கடுமையாக வெறுப்பார்கள். இல்லாத அவதூறுகளை எல்லாம் கண்டுபிடித்துக்  கூறுவார்கள்.  

நமது சமூகத்தில், ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களை கூறும் பலர், வசதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ரஷ்யாவில், பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. தமது சொந்த எதிர்காலத்தை எண்ணி கலவரம் அடைகிறார்கள்.  தங்கள் நாட்டிலும், “ஸ்டாலினிச ஆட்சி” ஏற்பட்டால், தாங்கள் அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வர வேண்டி இருக்கும் என்பதை, தெரிந்து கொண்டு பதறுகிறார்கள்.

மக்கள் விரோதிகள் என்று குற்றம் சுமத்தப் பட்ட அனைவரும், ஸ்டாலினால், அல்லது NKVD யினால் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, மனம் போன போக்கில் கைது செய்யப் பட்டனரா? அப்படி நினைப்பது சிறுபிள்ளைத் தனம். அன்று நடந்த ஒவ்வொரு கைது நடவடிக்கையையும், சோவியத் மக்கள் அங்கீகரித்திருந்தார்கள். “நெருப்பில்லாமல் புகையாது” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். “சும்மா காரணம் இல்லாமல் கைது செய்வார்களா? அவர்கள் ஏதாவது சதியில் ஈடுபட்டிருப்பார்கள், அந்நிய கைக்கூலியாக இருப்பார்கள், அந்நிய நாட்டிற்காக உளவு பார்த்திருப்பார்கள்….” என்று பொது மக்கள் பல காரணங்களை தாமே கண்டுபிடித்து கூறிக் கொண்டனர். பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து, தமக்குள்ளே விவாதித்தார்கள். 

சுருக்கமாக, அன்றிருந்த சோவியத் பொது மக்களில் யாருமே, "ஸ்டாலினால் கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகளாக இருப்பார்கள்" என்று நினைக்கவில்லை. ஈழப் போராட்டம் நடந்த காலத்திலும் அது போன்ற சூழ்நிலை காணப் பட்டது. புலிகள் யாரையாவது பிடித்துச் சென்றால், அல்லது பகிரங்க மரண தண்டனை வழங்கினால், தமிழ்ப் பொது மக்கள் அதனை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். இன்றைக்கும், ஈழத் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், தமிழ் தேசிய ஊடகங்கள் கூறும் எல்லா தகவல்களையும், அப்படியே நம்புகிறார்கள். அவர்களைப் போன்று தான், ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த சோவியத் மக்களும், ஊடகங்கள் சொல்பவற்றை உண்மை என்று நம்பினார்கள். 

“புலிகள் யாரையாவது சும்மா பிடித்து சுடுவார்களா? ஏதாவது காரணம் இருக்கும். அவன் ஏதாவது  பிழை விட்டிருப்பான். இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்திருப்பான் அல்லது அரச ஒட்டுக் குழுவை சேர்ந்தவனாக இருப்பான்,” என்று ஈழத் தமிழ் மக்கள் தமக்குள்ளே பேசிக் கொள்வார்கள். விடுதலைப் புலிகளோ, ஸ்டாலினோ, தமது அதிகாரத்தை இழக்காமல், தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டமைக்கு காரணம், பெரும்பான்மை மக்களின் ஆதரவு தான். மக்களின் ஆதரவை எப்படிப் பெறுவது என்பது ஒரு தனியான அரசியல் கலை. அரசியல் தத்துவ அறிஞர்கள் அது பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.

ஸ்டாலின் காலத்தில், அரச புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுப்பவர்கள் இலட்சக் கணக்கில் இருந்தார்கள். கொள்கைப் பிடிப்பு காரணமாக, மேலதிக வருமானத்திற்காக, பதவி உயர்வுக்காக, அல்லது வேறு ஏதாவது சலுகைக்காக, அயலவர்களை  வேவு  பார்த்தார்கள். பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள், தமது ஆசிரியர்களின், சக மாணவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை  கண்காணித்தார்கள். 

தொழிலகங்களில், அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், தமது முகாமையாளர்களை, சக தொழிலாளர்களை கண்காணித்தார்கள். அவர்களது அரசியல் கருத்துக்கள், நடத்தைகள் தவறாக இருந்தால், NKVD க்கு தகவல் கொடுத்தார்கள். அவ்வாறு தான், பலர் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடக்கும் பொழுதும், உளவு பார்த்தவர்கள் சமூகமளித்து, தாம் கண்டதை, கேட்டதை, குற்றம் சாட்டப் பட்டவரின் முகத்திற்கு நேரே சொன்னார்கள்.


வெளியுலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்கள், மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அன்றைய சோவியத் யூனியனில் “ஸ்டாலினிச கொடுங்கோன்மை மக்களை வருத்தியதாக” தெரியும். ஆனால், உண்மை நிலவரம் வேறு. பெரும்பான்மையான சோவியத் பொது மக்கள், அதனை “ஸ்டாலினிச பொற்காலம்” என்று அழைப்பார்கள். ஏனென்றால், அந்தக் காலங்களில் நாடு முழுவதும் ஒரு வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 

நிறுவனங்களுக்கு, தொழிலகங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகள், முகாமையாளர்கள், தங்களின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பயந்து நடுங்கினார்கள்.  அரசு அதிகாரிகள், தமக்கு கீழ்ப்படிவான சாதாரண ஊழியர்களுக்கு பயந்தார்கள். பணக்கார எஜமானர்கள், தம் வீட்டுப் பணிப்பெண்களுக்கு பயந்து நடந்தார்கள். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.வீடுகளில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நண்பர்களாக நடந்த வேண்டியிருந்தது. 

மேல் தட்டில் இருந்தவர்கள், கீழ்த் தட்டில் இருந்தவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டால் கூட, அடுத்த நாள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருக்கும். இன்று, "சுதந்திரமான", மேற்கத்திய நாடொன்றில் வாழும் மக்கள் கூட, அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்து நடக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில், அதிகார வர்க்கம் தான் மக்களுக்கு அடிபணிந்து நடந்தது. இன்று, அனைத்து வகை அதிகாரத்தையும் எதிர்த்துப் போரிட விரும்புபவர்கள், ஸ்டாலினிச பொற்காலத்தை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம். 

தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், தங்களது நிர்வாகிகளை பிடித்துக் கொடுத்தார்கள். அலுவலக ஊழியர்கள், தங்களது முகாமையாளர்களை பற்றி தகவல் கொடுத்தார்கள். பாடசாலை மாணவர்கள், தங்களது ஆசிரியர்கள், அதிபர்களை காட்டிக் கொடுத்தார்கள். சோவியத் யூனியன் முழுவதும், ஏராளமான அரசு அதிகாரிகள், நிர்வாகிகள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டு, சிறையில் போட்டு வருத்தப் பட்டார்கள், மரண தண்டனை விதிக்கப் பட்டார்கள். அவர்களை பற்றிய தகவல்களை NKVD புலனாய்வுத் துறைக்கு கொடுத்தது யார்? அவர்களுக்கு கீழே வேலை செய்த சாதாரண தொழிலாளர்கள். அன்றைய ஸ்டாலின் அரசு, மக்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாட்டை ஊக்குவித்தது.

சோவியத் யூனியனில் அன்று நடந்தது, “இரண்டாவது புரட்சி” என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பாட்டாளி வர்க்க மக்கள், அரசியல்-இராணுவ-பொருளாதார அதிகாரத்தை, மேட்டுக்குடியினரிடம் இருந்து பறித்தெடுத்தனர். ஸ்டாலின் அதற்காக தெரிந்தெடுத்த நடைமுறை தான், இன்றைக்கும் மேட்டுக்குடியினரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக, லெனின் காலத்தில் உருவான, “சேக்கா” என்ற புலனாய்வுப் பிரிவு கலைக்கப் பட்டது. NKVD என்ற புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது.

NKVD தலைமை அதிகாரியாக, ஸ்டாலினால் நியமிக்கப் பட்ட ஏசுவா, ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்தவர். ஒரு பாட்டாளி வர்க்க பின்னணியை கொண்ட அதிகாரி தான், மேட்டுக்குடியினரை ஈவிரக்கமின்றி கைது செய்து, மரண தண்டனையை நிறைவேற்றுவான் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டிருக்கலாம். சோவியத் அதிபராக இருந்த ஸ்டாலின் கூட, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்
5.ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!  


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Thursday, January 23, 2014

ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஐந்தாம் பாகம்)


உலக வரலாற்றில் பல புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால், அந்தப் புரட்சிகள் கொண்டு வந்த கொள்கைகள், எத்தனை வருடங்கள் நிலைத்து நின்றன என்பதும் முக்கியமானது. புரட்சி நடந்த பல நாடுகளில், கொள்கைக்காக நடந்த களையெடுப்புகள், சகோதர யுத்தங்களில், பல இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டிஷ் காலனியாகவிருந்த அமெரிக்கா பிரிவதற்காக நடந்த போரினை, “அமெரிக்கப் புரட்சி" என்று சரித்திர நூல்களில் எழுதுகின்றனர். உண்மையில் அப்போது நடந்ததை, விடுதலைப் போராட்டம் என்று சொல்லலாம். ஆனால், அது ஒரு “புரட்சி" அல்ல.

19 ம் நூற்றாண்டில், அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போர் தான், அந்த நாட்டில் நடந்த உண்மையான புரட்சி ஆகும். தென் அமெரிக்க மாநிலங்கள், நிலப்பிரபுத்துவ பழைமைவாதத்தில் ஊறியிருந்தன. அதற்கு மாறாக, வட அமெரிக்க மாநிலங்கள் முதலாளித்துவ முற்போக்குக் கொள்கையை கொண்டிருந்தன. போரின் இறுதியில், முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ சக்திகளை தோற்கடித்து, அமெரிக்கா முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில், பல இலட்சம் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். எதிர்த் தரப்பினரை சிறையில் அடைப்பதை விட, சுட்டுக் கொல்வதே சிறந்ததாக நம்பப் பட்ட காலமது. அந்தப் போரில் பல அப்பாவிகளும் பலியாகி இருப்பார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

ஒருவேளை, இன்றைக்கும் உலகின் பல பகுதிகளில், நிலப்பிரபுத்துவ சக்திகளின் ஆட்சி நடக்கின்றது என்று நினைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால், அமெரிக்க உள்நாட்டுப் போரை நடத்திய “ஆப்பிரகாம் லிங்கன் ஒரு கொடுங்கோலன், பல இலட்சம் மக்களை கொன்ற இனப் படுகொலையாளி….” என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருப்பார்கள். நல்லவேளை, இன்று எந்த நாடும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இல்லை. அதனால், ஆப்பிரகாம் லிங்கனும், ஸ்டாலினைப் போன்று தூற்றப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டார்.

சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சி செய்த காலம் முழுவதும் சர்வாதிகாரம் இருந்ததாக நம்புவது தவறு. குறிப்பாக 1937 ம் ஆண்டு வரையில், ஸ்டாலினை விமர்சிப்பது குற்றமாக கருதப் படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே, ஸ்டாலினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட பலர் இருந்தார்கள். பொது மக்களைப் பொறுத்த வரையில், அங்கே சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஒருவர் அரச எதிர்ப்பாளர் என்று குற்றஞ்சாட்டப் பட்டு, நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டாலும், குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சிகள் இல்லாத பொழுது விடுதலை செய்யப் பட்டார்கள்.

எந்தளவு உயர்வாக மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இருந்தாலும், போர் நடக்கும் காலத்தில் சட்டங்களை மாற்றிக் கொள்ளும். அரசு இயந்திரம் கடுமையாக நடந்து கொள்ளும். புலனாய்வுத் துறையின் அதிகாரங்கள் அதிகரிக்கப் படும். சிறைகளை நிரப்புவதும், நீதிக்கு புறம்பான படுகொலைகளும் அதிகரிக்கும். எதிரியை இலகுவாக அடையாளம் காண முடியாததால், பல அப்பாவிகளும் பாதிக்கப் படுவார்கள். அமெரிக்காவின் CIA, FBI போன்ற புலனாய்வுத் துறையினரை எந்த சட்டமும் கட்டுப் படுத்தாது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம், பிடித்து சிறையில் அடைக்கலாம். ஜனநாயகத் தன்மை அதிகமாக உள்ள, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை.

சோவியத் யூனியன் உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. அதற்குள் நூற்றுக் கணக்கான மொழிகளைப் பேசும், பல கோடி மக்கள் வாழ்ந்தனர். அமெரிக்காவை ஆள்வதை விட, சோவியத் யூனியனை ஆள்வது பல மடங்கு கஷ்டமான காரியம். ஸ்டாலின் கால சோவியத் யூனியனில் இயங்கிய புலனாய்வுத் துறையின் பெயர் NKVD. (பிற்காலத்தில் அது KGP என்று பெயர் மாற்றப் பட்டது.) NKVD தான், ஸ்டாலின் காலத்தில் நடந்த பெரும்பான்மையான கொலைகள், கைதுகள், நாடுகடத்தல்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தது.

ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில், 1930 ம் ஆண்டுக்குப் பின்னரும், சோவியத் அரசுக்கு எதிரான குழுக்கள் இயங்கி வருவதாக, NKVD அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அன்றைய சோவியத் யூனியனில், எதிர்ப் புரட்சிக் குழுக்கள் இயங்கியதாக NKVD தெரிவித்த தகவல்களில் உண்மை இருக்கலாம். NKVD என்ற நிறுவனத்திற்கு கிடைத்து வரும் அரசு மானியத்தை அதிகரிப்பதற்காக, அதன் அதிகாரிகள் சில பொய்களை, அல்லது மிகைப் படுத்திய தகவல்களை எழுதி இருக்கலாம். இரண்டுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதே நேரம், NKVD சொல்வதை எல்லாம் நம்பும் அளவிற்கும், ஸ்டாலின் ஒரு முட்டாளும் அல்ல.

சோவியத் யூனியனில் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான NKVD, எந்த நேரத்திலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொலை செய்யலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், NKVD குள்ளேயே பலர் தீர்த்துக் கட்டப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. காசகஸ்தானில் NKVD உயர் அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டாலினின் ஒன்று விட்ட சகோதரர் ஒருவரும், தேசத் துரோகி என்று குற்றஞ் சாட்டப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்.

மிகைல் தூகாசெவ்ஸ்கி, சோவியத் நாட்டின் வீர நாயகனாக போற்றப் பட்டவர். புரட்சிக்கு அளப்பெரிய பங்காற்றிய அவரது வீரப் பிரதாபங்களை கூறும் கதை ஆரம்ப பாடசாலை மாணவர்களின்  பாடப் புத்தகங்களில் இடம்பெற்றது. ஆனால், தூகாவ்செவ்ஸ்கி கூட, NKVD அலுவலகத்தில் சித்திரவதை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார்.

அன்று நடந்த அரசியல் படுகொலைகளுக்கான பழி முழுவதையும் ஸ்டாலின் மேல் போடுவது மிகவும் எளிது. ஆனால், காரணத்தை புரிந்து கொள்வது கடினம். உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் சோவியத் மக்களின் வீர புருஷனாக மதிக்கப் பட்ட தூகாவ்செவ்ஸ்கி, மக்களின் எதிரி என்று குற்றஞ் சாட்டப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியான நேரம், சோவியத் மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “தூகாவ்செவ்ஸ்கி ஒரு துரோகி, ஜெர்மன் கைக்கூலி” என்ற குற்றம் சுமத்தப் பட்டு விசாரிக்கப் பட்டார். அதையெல்லாம், அன்று வாழ்ந்த சோவியத் குடிமக்களும் நம்பினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

பாடசாலைகளில் படித்த மாணவர்கள், தூகாசெவ்ஸ்கியின் படமும், கதையும் இருந்த புத்தகங்களின் பக்கங்களை கிழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். அந்த குற்றச்சாட்டு உண்மையா, விசாரணை நீதியாக நடந்திருக்குமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதையெல்லாம் நம்பும் அளவிற்கு, பெரும்பான்மையான மக்கள் இருந்திருக்கிறார்கள். எந்தப் பயமுறுத்தல்களுக்கும் அஞ்சி, மக்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அன்று நடந்த சம்பவங்களை எல்லாம், “ஸ்டாலினிச சர்வாதிகாரம்” என்ற ஒரே சொல்லில் பதில் கூறி விளக்க முடியாது.

“ஸ்டாலினிச பயங்கரவாதம்” என்று வர்ணிக்கப் படும் ஆட்சி நடந்த காலத்தில், பல இலட்சம் பேர் சிறையில் அடைக்கப் பட்டனர், அவர்களில் இலட்சக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். கைது செய்யப் பட்ட அனைவரும், “மக்களின் எதிரிகள்” என்று குற்றஞ் சாட்டப் பட்டனர். அன்று, உண்மையாகவே ஸ்டாலினின் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற நோக்குடன் சதி செய்த பலர் இருக்கலாம். அதே நேரம், பல அப்பாவிகளும் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர் என்பதை மறுக்க முடியாது.

சோவியத் அரசின் உயர் மட்டத்திலும், பலர் கைது செய்யப் பட்டனர். அவர்கள் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களில் பலர் ஸ்டாலினுடன் பல வருட காலம் நெருங்கிப் பழகியவர்கள். ஒரே இலட்சியத்திற்காக, ஒன்று சேர்ந்து போராடியவர்கள். உதாரணத்திற்கு, ட்ராஸ்கி, காமனேவ், சினொவியெவ், புகாரின், பியாத்னிஸ்கி போன்றவர்கள், ஸ்டாலினுக்கு நிகரான ஆளுமை கொண்ட போல்ஷெவிக் தலைவர்கள். இவர்களில் ட்ராஸ்கி மட்டுமே கொல்லப் படாமல் தப்பி, மெக்சிகோவிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்தார். மற்றவர்கள் எல்லோரும், NKVD யினால் கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்.

1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும், தேசத் துரோக குற்றச்சாட்டில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். குறைந்தது 681,692 பேர் கொல்லப் பட்டதாக, NKVD புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. அதற்கு முன்னர் நடந்த, கூலாக் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கூட அந்தளவு மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை. 1929 - 1932 ஆகிய காலத்தில், நாடு முழுவதும் கைது செய்யப் பட்டவர்களில் 6% மானோர் (35,689 பேர்) மட்டுமே கொல்லப் பட்டனர். (V.popov, “Gosudarstvennyi terror v sovetskoi Rossi”; A.Aplebaum, Gulag: “A History of the Soviet camps”)

இங்கே எழும் பல கேள்விகள், சந்தேகங்களுக்கு ஒவ்வொன்றாகத் தான் விடை காண முடியும். படித்த பாமரர்கள் கூட, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதனின் சர்வாதிகார ஆட்சி நடந்ததாக கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகன் போல, ஸ்டாலின் இலட்சக் கணக்கான மக்களை சுட்டுக் கொன்றதாக நினைக்கிறார்கள். முதலில் நாங்கள், அது போன்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும். எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, சோவியத் நாட்டிலும் அரசாங்கம் பல பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. அரசியலைமைப்பு சட்டம் இருந்தது. நீதிமன்றங்கள் இயங்கின.

அன்றிருந்த அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சட்டங்கள் மாற்றப் பட்டன. உதாரணத்திற்கு, 1917 புரட்சிக்கு பிந்திய சில வருடங்கள், மரண தண்டனை அமுலில் இருந்தது. அது பின்னர் இரத்துச் செய்யப் பட்டது. “மாபெரும் களையெடுப்புகள்” நடந்த காலகட்டத்தில், மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப் பட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்ட NKVD, மக்கள் விரோதிகள் என்று கைது செய்த பலரை சித்திரவதை செய்து கொன்றுள்ளது. அதே நேரம், மக்களின் எதிரிகளாக குற்றஞ்சாட்டப் பட்ட ஏராளமானோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டனர். போதுமான ஆதாரங்கள் இன்றி பலர் விடுதலை செய்யப் பட்டனர்.

கைது செய்யப் பட்ட அத்தனை பேரும் மக்கள் விரோதிகள், தேசத் துரோகிகள் என்று நம்பும் அளவிற்கு, ஸ்டாலின் முட்டாளாக இருக்கவில்லை. பல தடவைகள், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஸ்டாலினே நேரடியாகக் கேட்டிருக்கிறார். அதே நேரம், சதியில் ஈடுபட்ட, அல்லது உடந்தையாக இருந்த பலரை சுட்டுக் கொல்லுமாறு, ஸ்டாலினே உத்தரவு போட்டுள்ளார். ( ரஷ்ய ஆவணக் காப்பகத்தில், பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், இன்று பல நூல்களாக வெளியாகி உள்ளன.)


இன்றைக்கும் பலரின் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு வருவோம்:

1. ஸ்டாலின், அன்றிருந்த சோவியத் மக்கள் அனைவராலும் வெறுக்கப் பட்ட சர்வாதிகாரியா?

பதில்: பெரும்பான்மையான சோவியத் மக்கள், ஸ்டாலினின் நடவடிக்கைகள் எல்லாம் சரியானவை என்று ஏற்றுக் கொண்டனர் அல்லது அப்படி நம்பினார்கள். மேலே குறிப்பிட்ட தூகாசெவ்ஸ்கியின் உதாரணத்திலேயே அதைப் பார்க்கலாம். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி, ஸ்டாலினால் ஆட்சி நடத்தி இருக்க முடியாது. அன்றிருந்த சோவியத் மக்களின் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாட்டை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

2. ஸ்டாலின் பல இலட்சம் அப்பாவி மக்களை படுகொலை செய்தாரா?

பதில்: அன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. பல அப்பாவிகளும் கொல்லப் பட்டனர். அதே நேரம், பல ஆயிரம் கைதிகள், பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். (ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலேயே, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிந்த பின்னர் விடுவிக்கப் பட்டனர்.)

தனிப்பட்ட முறையில் பார்த்தால், ஒவ்வொரு கைதிக்கும் பின்னால் ஒரு சோகக் கதை இருக்கும். தண்டனை விதிக்கப் பட்ட அப்பாவிகள், குற்றம் எதுவும் செய்யாதவர்கள் என்பதை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். பிறரின் பார்வையில் அவர்கள் குற்றவாளிகளாக தெரிந்தார்கள். (அவர்களது துன்பங்கள், துயரமான அனுபவங்கள் மட்டுமே, மேற்கத்திய நாடுகளில் அனுதாபத்துடன் நோக்கப் பட்டன.)

நாங்கள், எந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், அல்லது கொடுக்க விரும்புகிறோம் என்பதும் முக்கியமானது. ஸ்டாலினை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தான், அதைக் கூறுகின்றனர். மனிதர்கள் எல்லோருக்கும் அரசியல் உண்டு. இல்லை என்று சொல்பவர்கள் கூட, ஏதாவது ஒரு அரசியல் கோட்பாட்டுக்கு, மௌனமான ஆதரவை வழங்கலாம்.

ஸ்டாலின் கொன்ற அப்பாவிகளை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்கள், உண்மையான குற்றவாளிகளை, சதி காரர்களை, மக்கள் விரோதிகளை கண்டு கொள்வதில்லை. அப்படி யாருமே இருக்கவில்லை என்பது போல பாவனை செய்கின்றனர். மறு பக்கத்தில், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டதை சரியென்று வாதிடுபவர்கள், பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களை கண்டுகொள்ளாமல் விடும் பொழுது, அவர்களது அரசியல் சார்புத் தன்மை கேள்விக்குள்ளாகின்றது.

ஸ்டாலின் காலத்தில் இருந்த அரசியல் நிலைமையை, ஈழப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்திற்காக போராடிய பிற இயக்க உறுப்பினர்களை மட்டும் கொலை செய்யவில்லை. ஒரே இயக்கத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்த மாத்தையாவை கைது செய்த நேரம், அல்லது  கருணா பிரிந்த நேரம், அவர்களின் விசுவாசிகளான சக தோழர்களையும் கொலை செய்தனர். அந்த நேரத்தில், இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் கூட பாதிக்கப் பட்டனர். அதே போன்று, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு உளவு பார்த்த குற்றச் சாட்டில், பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அப்படியான தருணத்தில், தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருந்தது?

நிச்சயமாக, புலிகளால் பாதிக்கப் பட்டவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் புலிகளை எதிர்த்துப் பேசுவார்கள். சிலர் புலிகளை அழிக்க வேண்டுமென்ற நோக்கோடு அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டார்கள். தமிழ் மக்கள் எல்லோரும், புலிகள் தொடர்பாக ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனரா? இல்லை. பெரும்பான்மையான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள். அவர்கள் புலிகள் சொன்னதை எல்லாம் உண்மை என்று நம்பினார்கள். ஒட்டுக் குழுக்கள், துரோகிகள் என்று புலிகள் சுட்டிக் காட்டியவர்களை, மக்களும் ஒதுக்கி வைத்தார்கள்.

மறு பக்கத்தில், புலிகளை குறை கூறிக் கொண்டிருந்த கூட்டம் ஒன்றிருந்தது. அவர்களுக்கு புலி எதிர்ப்பாளர் முத்திரை குத்தப் பட்டது. புலி எதிர்ப்பாளர்கள், ஒரு காலத்தில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களாக இருந்திருந்தாலும், யாருக்கும் அதைப் பற்றிய கவலை இருக்கவில்லை. “இன்று புலிகள் மட்டும் தானே இலங்கை அரச படைகளை எதிர்த்து போரிடுகிறார்கள்? அப்படியானவர்களை விமர்சிப்பது சரியா?” என்று நியாயம் கூறினார்கள். இதே மாதிரியான நிலைமை தான் ஸ்டாலின் காலத்திலும் இருந்தது.

புலிகளை ஆதரித்த, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை, உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால், ஸ்டாலினை ஆதரித்த சோவியத் மக்களின் அரசியல் நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம். முன்னர் ஒரு காலத்தில், தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.

புலிகளால் பாதிக்கப் பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களும், காலப் போக்கில் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தார்கள். சிலர் தமது சுயநலம் கருதி மாறியிருக்கலாம். ஆனால், எல்லோரும் திடீர் பாசம் காரணமாக புலிகளை ஆதரித்தார்கள் என்று கூற முடியாது. அவர்களின் வார்த்தைகளில் கூறினால், “இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா அரசின் ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. அதற்கெதிராக போராடுவோர் யாராக இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.”

ஒரு காலத்தில், ஸ்டாலினால் “மக்கள் விரோதி” என்று குற்றஞ்சாட்டப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டவர்களின் பிள்ளைகள், சில வருடங்களுக்கு பின்னர் ஸ்டாலினின் தலைமையின் கீழ் செம்படையில் இணைந்து, நாஜிப் படைகளுக்கு எதிராக போராடினார்கள். சில நேரம், ஸ்டாலினால் கொல்லப்பட்ட அவர்களது பெற்றோர், எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்கலாம். அதற்காக, ஸ்டாலின் மேல் வன்மத்தை வளர்த்து, சந்தர்ப்பம் பார்த்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளவில்லை. சிலர் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படி அல்ல. எப்போதும் சாதாரண மக்கள், தமது நலன் சார்ந்த கொள்கைகளுக்கு துரோகம் இழைப்பதில்லை.

ஒரு காலத்தில், “ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியான” குடும்பங்களை சேர்ந்த, சோவியத் மக்களில் பெரும்பான்மையானோர், பிற்காலத்தில் ஸ்டாலினை ஆதரித்தனர். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், புலிகளை ஆதரிப்பதற்கு ஈழத் தமிழ் மக்கள் கூறிய அதே காரணத்தை தான், சோவியத் மக்களும் கூறுவார்கள். 

“புலிகள் செய்த கொலைகள், மனித உரிமை மீறல்களை விட, தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் புரிந்த இனப் படுகொலைகளும், ஏற்படுத்திய அழிவுகளும், மனிதப் பேரவலங்களும் பல மடங்கு அதிகமானவை. அதே போன்று, ஸ்டாலின் புரிந்த கொலைகளை விட, மேலைத்தேய நாடுகளினதும், ஜெர்மன் நாஜிகளினதும் ஆக்கிரமிப்புப் படைகள் புரிந்த இனப் படுகொலைகளும், ஏற்படுத்திய அழிவுகளும், மனிதப் பேரவலங்களும்  பல மடங்கு அதிகமானவை.” 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், உலக நாடுகள் முழுவதிலும், சோவியத் யூனியன் மட்டும் தான், பெருமளவு உயிரிழப்புகளையும், பேரழிவுகளையும் சந்தித்திருந்தது. நாஜிப் படைகள் புரிந்த அழிவுகளும், அட்டூழியங்களும், ஒட்டு மொத்த சோவியத் மக்களையும், ஸ்டாலினின் பின்னால் அணிதிரள வைத்தன.

சோவியத் யூனியன், தமிழீழம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைப் போராளி என்று சொல்வார்கள். அதே போன்று, ஒருவரின் சர்வாதிகாரி, இன்னொருவரின் நாயகன் ஆவார். ஸ்டாலின் செய்த படுகொலைகள் பற்றிய மிகைப் படுத்தப் பட்ட தகவல்கள், நாஜிகளினால் பரப்புரை செய்யப் பட்டன. பனிப்போர் காலத்தில், மேற்கத்திய நாடுகள் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டன.

"இருபதாம் நூற்றாண்டில் அதிகளவு மக்களை படுகொலை செய்தவராக," ஸ்டாலின் சரித்திரப் பாடப் புத்தகங்களில் குறிப்பிடப் படுகின்றார். பலருக்கு அந்த எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாது. அது தொடர்பான புள்ளிவிபரம் எதுவும் கிடையாது. பத்து இலட்சம், இருபது இலட்சம், ஒரு கோடி…. என்று பலரும் தமது கற்பனைக்கு எட்டியவாறு, கணக்கிட்டு  சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலினால் படுகொலை செய்யப் பட்டதாக கூறப்படும் மக்களின் எண்ணிக்கை, அன்றிருந்த சோவியத் யூனியனின் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்.  ஸ்டாலின் மீதான பல அவதூறுகள், ஜெர்மன் நாஜிகளின் பரப்புரைகளில் இருந்தே கிடைக்கப் பெற்றன. அவை பின்னர் வரலாறாகப் பதிவு செய்யப் பட்டன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்


 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Tuesday, January 21, 2014

புலிகள் ஒரு "ஸ்டாலினிச" இயக்கம்! - ட்ராஸ்கிஸ்டுகளின் கண்டுபிடிப்பு!!


"இலங்கையில் உங்களுக்குப் பிடித்த சிங்கள இடதுசாரி யார்?" என்று நமது தமிழ் தேசியவாதிகளிடம் கேட்டால், எல்லோரும் ஒரே குரலில் "விக்கிரமபாகு கருணாரத்னா" என்று பதில் சொல்வார்கள்.

தமிழர்களின் பிரச்சனைகளை, அனுதாபத்துடன் ஆதரிக்கும் ஒரேயொரு சிங்கள இடதுசாரி அவர் மட்டுமல்ல. (வேறு சிலரும் உள்ளனர். ஆனால், அவர்கள் புலிகளை ஆதரிக்காத படியால், யாருக்கும் பிடிக்காது.) தென்னிலங்கை இடதுசாரிகளில் விக்கிரமபாகு கருணாரத்னவும், அவரது கட்சியும் விதி விலக்குகள். அவர் மட்டுமே, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்து வந்துள்ளார். அவரது கட்சி, "தமிழீழம், ஸ்ரீலங்கா என்ற இரண்டு தேசியங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. (நிச்சயமாக, அந்த இரண்டு தேசியங்களும் சோஷலிசத்தை இறுதி இலக்காக கொண்டிருக்கும் என்பதை குறிப்பிடத் தவறுவதில்லை.)

விக்கிரமபாகு கருணாரத்ன தலைமை தாங்கும், நவ சமசமாஜக் கட்சி (NSSP) ஒரு ட்ராஸ்கிச சோஷலிசக் கட்சி ஆகும். இன்று அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும், வாசுதேவ நாணயக்காராவின் லங்கா சமசமாஜக் கட்சியில் (LSSP) இருந்து எப்போதோ பிரிந்து வந்து விட்டது. ஆனால், இரண்டுமே நான்காம் அகில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட ட்ராஸ்கிச கட்சிகள் தான். ட்ராஸ்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்ல. இன்னும் தெளிவாக சொன்னால், "ஸ்டாலினிஸ்டுகள் அல்ல".

காலனிய கால இலங்கையில் தோன்றிய, ஆரம்ப கால சோஷலிச இயக்கம், "ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரிவினை" க்குப் பிறகு, ட்ராஸ்கியை பின்பற்றியது. ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளின் குறிக்கோள், ட்ராஸ்கிசவாத கட்சிகளுக்கும் பொருந்தும். அதாவது, கத்தியின்றி, இரத்தமின்றி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சோஷலிசத்தை கொண்டு வருவதே அவர்களது குறிக்கோள். அதனால் தான், வாசுதேவ நாணயக்காராவின் LSSP, மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி அரசை ஆதரிக்கின்றது. அதாவது, ஒரு மத்திய இடது சார்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் மூலம், ஒரு முதலாளிய அரசை வழிக்குக் கொண்டு வர முடியுமாம். (இலங்கை சுதந்திரக் கட்சி, அடிப்படையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியலை கொண்டுள்ளது.)

விக்கிரமபாகு கருணாரத்னவின் NSSP, நடப்பில் உள்ள மகிந்த அரசுடன் முரண்படுகின்றது. அது ஒரு மிகச் சரியான நிலைப்பாடு தான். ஆனால், சர்வதேச மட்டத்தில், அதைப் போன்ற ட்ராஸ்கிசவாத கட்சிகள், ஒரு ஆயுதப் புரட்சியை நம்பி இருக்கவில்லை. அதன் அர்த்தம், தேர்தல் ஜனநாயக அரசியலில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது. அடித்தட்டில் இருக்கும் மக்கள் புரட்சி செய்வார்கள், அப்போது அவர்களை வழிகாட்டலாம் என்று காத்திருக்கிறார்கள்.

விக்கிரமபாகுவின் NSSP கட்சிக்கும், சர்வதேச ட்ராஸ்கிச கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ட்ராஸ்கிஸ்டுகள், ஒரே நாட்டில் சோஷலிசத்தை கட்டுவதனை, ஒரு "ஸ்டாலினிச கோட்பாடு" என்று நிராகரிப்பவர்கள். அதற்குப் பதிலாக, "நிரந்தரப் புரட்சி" என்று சர்வதேச மட்டத்தில் சிந்திப்பவர்கள். அதாவது, ஒரு சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் "உலகப் புரட்சி" ஏற்பட்டால் மட்டுமே, தமிழீழம், ஸ்ரீலங்கா ஆகிய சோஷலிச நாடுகளும் உருவாகும் என்று நம்புவோர் தான் NSSP யினர்.

NSSP க்கு, நான்காம் அகிலம் போன்ற சர்வதேச ட்ராஸ்கிசவாத அமைப்புகளுடன் தொடர்புண்டு. குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில் இயங்கும் தீவிர ட்ராஸ்கிச Grenzeloos கட்சியுடன், நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தில் கூட்டப்படும் சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொள்கின்றனர். உலகெங்கும் உள்ள ட்ராஸ்கிச கட்சிகளின் பிரதிநிதிகள், அந்தக் கருந்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ட்ராஸ்கிச இயக்கத்திற்குள் நிறைய பிரிவுகள் உள்ளன. NSSP போன்று, Grenzeloos கட்சியும் அரசை ஆதரிப்பதில்லை. எந்தப் பெரும்பான்மை கட்சி ஆட்சி அமைத்தாலும், அதன் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து வருகின்றது. NSSP யின் நிலைப்பாடும் அது தான். அந்த விடயத்தில் அவர்களின் நேர்மையை பாராட்டலாம்.

Grenzeloos என்பது, நெதர்லாந்தில் இயங்கும் ஒரு சிறிய மார்க்சிய-ட்ராஸ்கிச கட்சி ஆகும். நெதர்லாந்து ஆளும் கட்சிகளில் ஒன்றான, அடிப்படையில் சமூக ஜனநாயக கட்சியான PvdA (தொழிற்கட்சி, பிரிட்டிஷ் Labour Party போன்றது), பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, வலதுசாரி பாதையில் செல்லத் தொடங்கியது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பேசிய மார்க்சியம், சோஷலிசம் எல்லாவற்றையும் கை விட்டு விட்டு, முதலாளித்துவ ஆதரவு கட்சியாகி விட்டது. கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டுடன் முரண்பட்ட இடதுசாரி மார்க்சிய நம்பிக்கையாளர்கள், Grenzeloos (கிரென்செலோஸ்: எல்லையற்றது) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.

அவர்கள் தற்போது, PvdA யுடன் எந்த தொடர்புமற்று, தனியான கட்சியாக இயங்கி வருகின்றனர். அவர்கள் மார்க்சிஸ்டுகள் என்றாலும், ட்ராஸ்கிசத்தை கட்சிக் கொள்கையாக பின்பற்றி வருகின்றனர். தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்பாளர்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வாழ்க்கைத் தரம் உயர்ந்து வசதியான வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில், ட்ராஸ்கிஸம் இலகுவில் எடுபடும்.

ட்ராஸ்கிசவாதிகள், "வன்முறைப் புரட்சி மூலம், முதலாளித்துவ அரசை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசை நிறுவ விரும்பும் ஸ்டாலினிசத்தை" நிராகரிக்கின்றனர். அதனால், இரத்தம் சிந்திப் போராட விரும்பாத நடுத்தர வர்க்க மனப்பான்மை கொண்ட மக்கள் மட்டுமல்ல, முதலாளிகளும் ட்ராஸ்கிசத்தை ஆதரிப்பார்கள். ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகளால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான (உயிர்)ஆபத்தும் ஏற்படாது.

நெதர்லாந்தில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களுடனும் எனக்குப் பழக்கம் உண்டு. Grenzeloos கட்சி உறுப்பினர்களை, பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, பல்வேறு சமூக நிகழ்வுகளில், அரசியல் ஆர்ப்பாட்டங்களில், அவர்களை சந்தித்திருக்கிறேன். நான் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு சமூக ஆர்வலர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அப்போதெல்லாம், எமது உரையாடலில், தவிர்க்கவியலாது இலங்கை நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறும். அநேகமாக, ஐரோப்பாவில் அரசியல் ஆர்வமுள்ள பலர், இலங்கைப் பிரச்சினை பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். ஈழப்போர், ஈழத்தில் மனிதப் பேரவலம், போரிடும் தரப்பினர், அவர்களது இராணுவ- அரசியல் நிலைப்பாடுகள், இவை குறித்தெல்லாம் ஆர்வத்தோடு தேடிப் படித்திருப்பார்கள்.

ஈழப் போராட்டம், மற்றும் விடுதலைப் புலிகள் குறித்து Grenzeloos உறுப்பினர்களின் கொண்டிருந்த கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. "புலிகள் ஒரு (தமிழ்) தேசியவாத இயக்கம், ஒரு தேசியவாத அரசு அமைப்பதே அவர்களது குறிக்கோள்." என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அதனை மறுத்துரைத்த Grenzeloos கட்சி உறுப்பினர்கள், "விடுதலைப் புலிகள் ஒரு ஸ்டாலினிச இயக்கம். தமிழீழத்தில் ஸ்டாலினிச ஆட்சியை கொண்டுவருவதே அவர்களது குறிக்கோள்" என்று வாதிட்டனர். அது மட்டுமல்ல, கியூபா, வியட்நாமில் ஸ்டாலினிச ஆட்சி நடப்பதாகவும், புலிகளும் அந்தப் பாதையில் செல்வதாகவும் வாதிட்டனர்.

இன்று, ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகளுடன் தொடர்புடைய தமிழர்கள் சிலர், தம்மை "தீவிரமான புலி ஆதரவாளர்களாக" காட்டி வருகின்றனர். உண்மையில் அது ஒரு இரட்டை வேடம். Grenzeloos மட்டுமல்ல, ஐரோப்பிய ட்ராஸ்கிசவாத கட்சிகள் பலவும் புலிகளை ஒரு ஸ்டாலினிச இயக்கமாகவே கருதுகின்றன. விடுதலைப் புலிகள் ஒரு "ஸ்டாலினிச இயக்கம்" என்பதற்கு, ட்ராஸ்கிசவாதிகள் கூறும் காரணம் முக்கியமானது. முதலில் ஸ்டாலினிசம் என்றால் என்ன? அதற்கு வரைவிலக்கணம் என்ன?

"ஸ்டாலினிசம்" என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிசவாதிகள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை, நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். "வன்முறைப் போராட்டத்தில் நாட்டம், கடும்போக்குத் தன்மை, பல கட்சி ஜனநாயகத்தை மறுப்பது, மாற்றுக் கருத்தாளரை அழித்தொழிப்பது, எதேச்சாதிகாரம்..." இது போன்ற பல அம்சங்களை, அவர்கள் ஸ்டாலினிசம் என்று கருதுகின்றனர். 

ட்ராஸ்கிஸ்டுகளை பொறுத்தவரையில், "ஸ்டாலினின் கொள்கைகளை பின்பற்றித் தான், கியூபாவில் காஸ்ட்ரோயிஸ்டுகளும், வியட்நாமில் வியட்- காங் இயக்கமும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." அதாவது, "அவர்கள் கம்யூனிஸ்டுகளோ, இடதுசாரிகளோ அல்ல, ஸ்டாலினிஸ்டுகள்." ஏனென்றால், ஆயுத வன்முறை மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள். "விடுதலைப் புலிகளும், அவ்வாறு ஆயுத வன்முறையில் நம்பிக்கை கொண்ட இயக்கம் தான். அதனால் தான், புலிகளும் ஸ்டாலினிஸ்டுகள் ஆவர்." என்பது ட்ராஸ்கிச கட்சிகளின் அரசியல் புரிதல் ஆகும். 

மேற்கு ஐரோப்பாவில் இயங்கும், எந்தவொரு ட்ராஸ்கிச அமைப்பும், முதலில் தன்னை முதலில் "ஸ்டாலினிஸ்ட் இல்லை" என்று நிரூபிப்பதில் குறியாக இருக்கும். அதற்குக் காரணம், ஐரோப்பிய அரசுகள் "ஸ்டாலினிசம் என்பது சர்வாதிகாரம், அல்லது எதேச்சாதிகாரத்தின் மறுபெயர்" என்று பிரச்சாரம் செய்து, தமது மக்களை நம்ப வைத்திருக்கின்றன. அதனால் தான், ஆயுத பலம் மூலம் அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் தேசியவாத இயக்கங்களும், ட்ராஸ்கிசவாதிகளின் கண்களுக்கு "ஸ்டாலினிஸ்டுகளாக" தெரிகின்றன.

ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகள், புலிகளை "ஸ்டாலினிஸ்டுகள்" என்று கூறி நிராகரிப்பதற்கு, இன்னொரு காரணமும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஸ்டாலினிச" (கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட்) கட்சிகள், அமைப்புகள் தான், புலிகளையும், அவர்களது ஈழப் போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றனர். புலிகளின் போராட்டத்தை, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசிய விடுதலைப் போராட்டம் என்று கூறி வருகின்றனர். அது ஒரு வகையில் "ஸ்டாலினின் கோட்பாடு". (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசிய இனப் பிரச்சினை குறித்த ஆய்வுகளை செய்தவர்களில் ஸ்டாலின் முக்கியமானவர்.) அத்தகைய கொள்கை வேறுபாடும், ட்ராஸ்கிச கட்சிகள் தேசியவாதிகளான புலிகளை நிராகரிக்க காரணமாக உள்ளது.