Showing posts with label மூலதனம். Show all posts
Showing posts with label மூலதனம். Show all posts

Saturday, January 24, 2015

தாமஸ் பிக்கெட்டி, யார் இவர்?


தாமஸ் பிக்கெட்டி. யார் இவர்? பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி அறவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி? இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.

அதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.

வேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான். 

நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.

"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்: 
"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன? சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்திருப்பது தான் முக்கியமானது.

"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்..." என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், "முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.

அதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

Trickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை? உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.



இது தொடர்பான முன்னைய பதிவு:

Wednesday, January 21, 2015

அப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...


 பிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, "21 ம் நூற்றாண்டு மூலதனம்" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை. 

நெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்தில் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. 

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.
 -------------------------------------------------------------

தாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.

அவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.

அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.

1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.

இதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.

சொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு செய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.

பெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன. 

1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.

1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.

19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : "மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்."

இதற்கொரு தீர்வு இருக்கிறதா? உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி முன் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.

(நன்றி: Mug Magazine, Januari 2015)

Friday, December 12, 2014

மூலதனம் கற்போம் - 3 : மதிப்பின் இரு வடிவங்கள்

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் 
(பாகம் - 3) 


 பிரிவு 3 - மதிப்பின் வடிவம் அல்லது பரிவர்த்தனை மதிப்பு

இரும்பு, துணி, தானியம் போன்று இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் வெளித்தெரியும் பௌதிக வடிவம் காரணமாக விற்பனைக்கான சரக்குகளாக இருக்கின்றன. அவை பயன் மதிப்பையும், அதே நேரம் மதிப்பையும் தம்முள் கொண்டுள்ளன என்பதை இது வரையும் பார்த்தோம். அந்த மதிப்புக்கு பின்னால், மனித உழைப்பும், சமுதாயப் பெறுமதியும் இருக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம்.

எமது கண்களுக்கு தெரியும், மதிப்பு எனும் ஆரம்பக் கட்டத்திற்கு திரும்பி வருவோம். விற்பனைக்கான ஒவ்வொரு சரக்கும், அவற்றின் பௌதிக தன்மைகளுக்கு அப்பால் ஒரு பொதுவான மதிப்பைக் கொண்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது இரும்பு, துணி, தானியம் என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பொருட்கள். ஆனால், அவற்றின் விலைகளை துல்லியமாக நிர்ணயிக்கிறோம். எப்படி?

ஒரு சரக்கு, வேறு வகையை சேர்ந்த இன்னொரு சரக்குடன் கொண்ட மதிப்பு சார்ந்த சாதாரண மனித உழைப்பு பற்றிப் பார்த்தோம். பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு மதிப்பு அங்கே இருக்க வேண்டும். நவீன காலத்தில், அந்தப் பொதுவான மதிப்பு பணம் எனும் ஒன்றால் தீர்மானிக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆயினும், நாங்கள் இங்கே ஓர் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். பணம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் என்ன? அது எப்படி தோன்றியது? பணத்தின் மதிப்பு என்ன? ஒரு பொதுவான மதிப்பு எப்படிப் பணமாக மாறியது? முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் செய்ய விரும்பாத வேலை இது. அவர்கள் ஒரு பொருளின் மதிப்பு எப்படிப் பணமாகிறது என்று ஆராய்வதில்லை. ஏனென்றால், மதிப்புக்குப் பின்னால் உள்ள மனித உழைப்பு ஓர் அடிமையுடையதாக கூட இருக்கலாம். அது பற்றி மார்க்ஸ் கொடுக்கும் விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.


1. மதிப்பின் இரு துருவங்கள் : ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும்  

நாம் முன்னர் பார்த்த உதாரணத்தில், துணியானது சட்டையின் மதிப்பாக இருக்கின்றது. அதே நேரம், சட்டை துணியின் மதிப்பை அடையாளப் படுத்துகின்றது. துணி தனது மதிப்பை நேரடியாக காட்டினால், சட்டை துணியின் மதிப்பை மறைமுகமாக காட்டுகின்றது. சட்டையை துணியுடன் ஒப்பிட்டு, துணியின் மதிப்பை நிர்ணயிக்கிறோம். அதனால் துணியின் மதிப்பானது "ஒப்பீட்டு வடிவம்" ஆகும்.

அதே நேரம், இன்னொரு பொருளான சட்டையை, அதனுடன் மாறுபட்ட துணியுடன் சமப்படுத்துகின்றோம். அது "சமத்துவ வடிவம்" ஆகும். ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும், ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள, ஒன்றை விட்டு மற்றதை பிரிக்க முடியாத தன்மைகள் ஆகும். உதாரணத்திற்கு, காந்தம் ஒன்றின் இரண்டு துருவங்களும், ஒன்றோடொன்று எதிரானதாக இருந்தாலும், ஒரே பொருளின் பகுதிகள் தான்.

உலகில் யாரும் ஒரே மாதிரியான பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதில்லை. சட்டைக்கு பதிலாக சட்டையை, அல்லது துணிக்கு பதிலாக துணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். 2 மீட்டர் துணி = 2 மீட்டர் துணி. இதற்கு ஓர் அர்த்தமும் கிடையாது. எனவே துணியின் மதிப்பை, வேறொரு பொருளுடன் ஒப்பிடுவதன் மூலம் தான் அதன் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதற்கு முதலில் அந்த வேறொரு பொருளை சமப் படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

2 மீட்டர் துணி = ஒரு சட்டை என்று பார்த்தோம். அப்படியானால், ஒரு சட்டையின் பெறுமானம், 2 மீட்டர் துணிக்கு சமமானது என்றும் அர்த்தமாகின்றது. இந்த ஒப்பீட்டை மறு பக்கமாக திருப்பி விட்டுப் பார்த்தால், சட்டை துணியின் மதிப்பையும், அதே நேரம் தனது மதிப்பையும், தானே தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அதனால், இவ்விரண்டு பொருட்களிலும் உள்ள, காந்தம் போன்ற எதிரெதிர் துருவங்கள் தான், ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துகின்றன.

ஓரிடத்தில், ஒரு சரக்கின் பெறுமதி அதன் ஒப்பீட்டு வடிவமா, அல்லது சமத்துவ வடிவமா என்பதை, இடம், கேள்வி என்பன தீர்மானிக்கின்றன. அந்தச் சரக்கின் மதிப்பு முக்கியமா, அல்லது அது இன்னொரு பொருளின் மதிப்புக்கு மாற்றீடாக பயன்படுகிறதா என்பதைப் பொறுத்தது.

இனி, மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தையும், சமத்துவ வடிவத்தையும் தனித் தனியாக, விரிவாகப் ஆராய்வோம்.



2. மதிப்பின் ஒப்பீட்டு வடிவம்

(அ.) ஒப்பீட்டு வடிவத்தின் உள்ளடக்கம்

நடைமுறை வாழ்க்கையில், இரண்டு சரக்குகளின் மதிப்புகளை, நாங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு அளக்கிறோம். 2 மீட்டர் துணி = 1 சட்டையா அல்லது 5 சட்டைகளா? குறிப்பிட்ட அளவிலான துணியின் பெறுமானம் எத்தனை சட்டைகளுக்கு சமமானது என்று தான் பார்க்கிறோம். இதன் மூலம், நாங்கள் துணியின் மதிப்பு தான் தெரிவிக்கப் படுகின்றது. எப்படி? அதற்கு சமமாக சட்டையை கொண்டு வந்து நிறுத்துகிறோம். அதாவது, சட்டை ஒரு கண்ணாடி மாதிரி செயற்படுகின்றது. துணியின் பிம்பத்தை பிரதிபலிக்கின்றது.

மதிப்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான், சட்டையுடன் பரிவர்த்தனை செய்கின்றோம். இதனை ஒரு இரசாயனவியல் சூத்திரத்தின் மூலம் புரிய வைக்கலாம். பியூட்றிக் அமிலம், புரோபைல் பார்மேட் இரண்டும் வேறு பட்ட பொருட்கள். ஆனால் இரண்டுமே கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூலப் பொருட்களை சம விகிதங்களில் (C₄H₈O₂) கொண்டுள்ளன.

சட்டையை துணிக்கு சமமான பொருளாக கருதுவதன் மூலம், சட்டையில் மறைந்திருக்கும் உழைப்பை, துணியில் மறைந்திருக்கும் உழைப்புடன் சமப் படுத்துகின்றோம் என்பது தான் அதன் அர்த்தம். நெசவு செய்வதும், தைப்பதும் இரண்டு வேறு பட்ட தொழில்கள் தான். ஆனால், நெசவுக்கு பின்னால் மறைந்துள்ள மனித உழைப்பை பெயர்த்தெடுத்து, தையலுக்கு பின்னால் உள்ள மனித உழைப்புடன் பொதுவாக்குகின்றோம்.

மனித உழைப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மதிப்பைத் தீர்மானிக்கின்றது. ஆனால், அதுவே மதிப்பாக இருப்பதில்லை. ஒரு பொருளில் உருக் கொள்ளும் பொழுது அதன் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. துணியின் மதிப்புகளின் சேர்க்கையாக சட்டை உள்ளது. துணிக்கு சமமான பொருளாக ஒரே இயல்பைக் கொண்டுள்ளது. ஆனால், சட்டை தான் இங்கே மதிப்பை பிரதிபலிக்கிறது.

சட்டை தனியாக இருந்தால் அது மதிப்பெதையும் காட்டுவதில்லை. துணியோடு ஒப்பிடும் போது தான் அது தன் மதிப்பைப் பெறுகின்றது. உதாரணத்திற்கு, சாதாரண உடையில் இருப்பவருடன் ஒப்பிடும் பொழுது, கோட்டு சூட்டு போட்ட ஆசாமி மதிப்புக்கு உரியவராகத் தெரிகின்றார். ஆடம்பர ஆடை அணிந்தவரின் மதிப்பானது, சாதாரண ஆடை அணிந்தவருடன் ஒப்பிடுவதனாலேயே தெரிவிக்கப் படுகின்றது.

ஒப்பீட்டு வடிவத்தில், சட்டை துணியுடன் சமமாக்கும் பொழுது, சட்டை எனும் உருவமானது மதிப்பின் உருவமாகின்றது. அதாவது ஒரு பொருளின் மதிப்பு இன்னொரு பொருளின் பயன்மதிப்பு ஆகும். மதிப்பு என்ற வகையில் துணியும் சட்டையும் ஒன்று தான். அதாவது, துணியின் மதிப்பு தற்போது சட்டை என்ற வடிவத்தைப் பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ மதத்தில், அதன் நம்பிக்கையாளர்கள், ஏசு கிறிஸ்து எனும் மேய்ப்பனின் ஆடுகளாக கருதப் படுவது போன்ற மாற்றம் இது.

துணியும், சட்டையும் உதாரணத்தை உலகில் உள்ள எல்லா சரக்குகளுக்கும் பொருத்திப் பார்ப்பலாம். சரக்கு X ஒன்றின் மதிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக, சரக்கு Y உள்ளது. மனித உழைப்பின் பொருள் வடிவமான சரக்குகள், ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதன் மூலம், தமக்கிடையிலான மதிப்பை தெரிவிக்கின்றன. பயன்மதிப்பு கொண்ட Y, தன்னுடன் உறவு கொண்ட X இன் மதிப்பை தெரிவிக்கிறது. இவ்வாறு ஒரு பொருளின் மாயன் மதிப்பின் ஊடாக, இன்னொரு பொருளின் மதிப்பை தெரிவிப்பதானது மதிப்பின் ஒப்பீட்டு வடிவம் ஆகின்றது.


(ஆ) ஒப்பீட்டு மதிப்பின் அளவு வழி தீர்மானிப்பு

ஒவ்வொரு சரக்கும் பத்து மூட்டை அரிசி, இருபது கிலோ மிளகாய்த் தூள், என்றெல்லாம் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. எந்த சரக்கின் எந்த அளவிலும் மனித உழைப்பு மறைந்துள்ளது. எமது உதாரணத்தில், துணியை சட்டைக்கு சமமாக்குவது மட்டுமல்லாது, 2 மீட்டர் துணி என்று ஒரு திட்டவட்டமான அளவையும் தீர்மானிக்கிறோம். 

இரண்டு மீட்டர் துணி = ஒரு சட்டை என்ற சமன்பாடு, அதாவது துணியின் பெறுமானத்தை சட்டைக்கு சமப் படுத்தும் போது, இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் ஒரே அளவான உழைப்பு செலவாகி உள்ளது என்பதை உறுதிப் படுத்துகின்றோம். ஆனால், உழைப்பு நேரம் என்பது, உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு மாறு படும். அதை நாங்கள் இங்கே பரிசீலிக்க இருக்கிறோம்.

உதாரணம் 1 : சட்டையின் மதிப்பு மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், துணியின் மதிப்பு மாறுகின்றது. பருவ மழை வீழ்ச்சி குறைந்து விட்டதால், அல்லது நிலம் தரிசாகிப் போனதால், துணி உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் இரட்டிப்பாகின்றது. அப்படியானால் துணியின் மதிப்பும் இரண்டு மடங்காகும். முன்பு 2 மீட்டர் துணியில் அடங்கியுள்ள உழைப்பில் சரி பாதி தான், தற்போது ஒரு சட்டைக்கு சமமானது. அப்படியானால், 2 மீட்டர் துணி = 2 மீட்டர் சட்டை என்று சமன்பாட்டை மாற்ற வேண்டும். 

அதே நேரம், நெசவு இயந்திரங்கள் கணணி மயப் பட்டதன் விளைவாக துணி செய்வதற்கான உற்பத்தி நேரம் சரி பாதியாகக் குறைகின்றது. அப்படியானால், துணியின் மதிப்பும் சரி பாதியாகக் குறைகிறது. ஆகவே இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை ஆகின்றது. சரக்கு B இன் மதிப்பு (இங்கே சட்டை) மாறாதிருந்தால், அதன் ஊடாக தெரிவிக்கப் படும் சரக்கு A இன் மதிப்பு நேர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

உதாரணம் 2 : தற்போது துணியின் மதிப்பு மாறாமல் இருக்கிறது, ஆனால் சட்டையின் மதிப்பு மாறுபடுகின்றது. ஒரு சட்டை தைக்க அவசியமான உழைப்பு நேரம் இரு மடங்காகிறது. அதனால் இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை என்றாகிறது.

மறு பக்கம், சட்டையின் மதிப்பு சரி பாதியாகக் குறைந்தால், இரண்டு மீட்டர் துணி = இரண்டு சட்டைகள் ஆகின்றன. சரக்கு A (இங்கே:துணி) இன் மதிப்பு மாறாதிருந்தால், சரக்கு B (இங்கே : சட்டை) மூலமாக தெரிவிக்கப் படும் அதன் மதிப்பு, எதிர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களையும் ஒப்பு நோக்கினால், ஒப்பீட்டு மதிப்பின் மாற்றம் முற்றிலும் மாறுபட்ட எதிரெதிர் காரணிகளினால் ஏற்படலாம் என்பதைக் காண்கிறோம். ஒரு சரக்கின் மதிப்பு மாறாதிருந்தாலும், அதன் ஒப்பீட்டு மதிப்பு மாறலாம். மதிப்பு மாறினாலும் ஒப்பீட்டு மதிப்பு மாறாமல் இருக்கலாம்.

இந்த உதாரணங்களை நாங்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெறால், நிஜ வாழ்க்கையில், இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் பாத்திரத்தை பணம் வகிக்கின்றது. நாட்டில் எதற்காக பணத்தின் பெறுமதி கூடிக் குறைகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மேற்படி உதாரணங்கள் உதவும்.


3. மதிப்பின் சமத்துவ வடிவம் 

சமத்துவ வடிவம் மூன்று குணங்களை கொண்டுள்ளது:
1. ஒரு சரக்கின் பயன் மதிப்பு, தனக்கு எதிரான மதிப்பின் விம்பம் ஆகின்றது.
2. ஒரு சரக்கில் மறைந்துள்ள உழைப்பு, அதன் எதிரில் உள்ள சரக்கின் நேரடியான உழைப்பின் உருவமாகிறது.
3. தனி நபர்களின் உழைப்பு, சமூகத் தன்மையுள்ள உழைப்பின் வடிவத்தைக் கொண்டுள்ளது.

மேற்கொண்டு இவற்றை விரிவாகப் பார்ப்போம்.

A எனும் பொருளும், B எனும் பொருளும் உறவு கொள்ளும் நேரம், B இன் உடல் A இன் மதிப்பாகிறது. ஒரு சரக்கு தனது சொந்த உடலை, சொந்த மதிப்பின் வெளிப்பாடாக காட்டிக் கொள்ள முடியாது. அதனால் வேறொரு சரக்கின் பயன் மதிப்பை ஏற்றுக் கொள்வது அவசியமானது.

சரக்குகளின் பயன் மதிப்புகள் ஒரே அளவில் சமப் படுத்தக் கூடியவை என்பதை, பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். தராசு ஒன்றை எடுத்துக் கொள்வோம். எமக்கு ஐந்து கிலோ கிழங்குகள் தேவை. தராசின் ஒரு தட்டில் சில கிழங்குகளை போடுவோம். அடுத்த தட்டில் ஐந்து கிலோ இரும்புத் துண்டை எடுத்துப் போடுகிறோம். இங்கே இரும்பு தன்னை இரும்பாகக் காட்டிக் கொள்வதில்லை. எடை அளக்கும் பொருளாக உள்ளது.

எடை என்ற வகையில், இரும்பும், கிழங்கும் ஒன்று தான். வெவ்வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இரண்டும், ஒரே கனமாக இல்லையென்றால், அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொள்ள முடியாது. தராசின் உதாரணத்தில், இரும்புத் துண்டு எடையை மட்டுமே குறிப்பது போன்று, எமது முன்னைய உதாரணத்தில் சட்டை துணியுடனான மதிப்பை மட்டுமே தெரிவிக்கின்றது.

ஆயினும், தராசின் ஒப்புவமை அது மட்டும் தான். எடை அளக்கும் இரும்புத் துண்டு, கிழங்கின் எடையை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால், சட்டையும், துணியும் இயற்கையல்லாத ஒன்றின் (உழைப்பு) மதிப்பை தெரிவிக்கின்றன. அது ஒரு வித்தியாசம் ஆகும்.

துணியின் ஒப்பீட்டு வடிவம், அதன் குணங்களில் இருந்து வேறுபட்ட சட்டையை போல் இருக்கிறது என்றால், அதன் அடிமட்டத்தில் சமூக உறவு மறைந்திருக்கிறது என்று அர்த்தம். சமத்துவ வடிவில் இது நேர்மாறாக காட்டிக் கொள்ளும். சரக்காகிய சட்டை அது உள்ள நிலையிலேயே மதிப்பை தெரிவிக்கின்றது. அது இயற்கையாக கிடைத்த மதிப்பின் வடிவம்.

சட்டை, துணியுடன் சமமான நிலையில் இருக்கும் உறவு நீடிக்கும் வரை தான் இது பொருந்தும். அதாவது, ஒப்பிடுவதற்கு துணி இல்லா விட்டால், சட்டைக்கும் மதிப்பு இருக்காது. விம்பங்களின் விநோதங்களில் இது முக்கியமானது. குடி மக்கள் இருப்பதால் தான், ஒருவர் அரசராக இருக்கிறார். மாறாக, அவர் அரசராக இருப்பதால் தான், தாங்கள் குடி மக்களாக இருப்பதாக எல்லோரும் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் முக்கியத்துவம் பல வகையானது. அது வெப்பத்திலும், குளிரிலும் இருந்து எமது உடலைப் பாதுகாக்கின்றது. சமத்துவ வடிவத்தை காட்டுகின்றது. அதே நேரம், பரிவர்த்தனை செய்து கொள்ளத் தக்கதாக உள்ளது. சமத்துவ வடிவத்தின் இந்த புதிரான தன்மை, முதலாளிய பொருளாதார அறிஞர்கள் அதைப் பணமாக புரிந்து கொள்ளும் வரையில் தெரிய வருவதில்லை.

அவர்கள் சரக்குகளுக்கு மாற்றீடாக தங்கம், வெள்ளியை கொண்டு வருவதன் மூலம், அந்த மாயத் தன்மையை விளக்க முனைகின்றனர்.  நமது முன்னைய உதாரணமான, "2 மீட்டர் துணி = 1 சட்டை" என்ற சாமானிய மதிப்புத் தெரிவிப்பு அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

சமத்துவமாக்குவதற்கு பயன்படும் சரக்கின் உடல் உருவம், நேரடியான மனித உழைப்பின் பொருள் வடிவமாக உள்ளது. அதே நேரம், மறைபொருளான உழைப்பின் உற்பத்தி வடிவமாகவும் இருக்கிறது. தையலிலும், நெசவிலும் மனித உழைப்புச் சக்தி செலவிடப் படுகின்றது. எனவே மனித உழைப்பு என்ற பொதுவான குணத்தை பெற்றுள்ளன. ஆனால், மதிப்புத் தெரிவிப்பில் ஒரு தலை கீழ் மாற்றம் ஏற்படுகின்றது.

அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். எடுத்துக் காட்டாக, நெசவு தான் துணியின் மதிப்பை உருவாக்குகிறது. அதற்கு காரணம், அது நெசவு என்பதால் அல்ல, மனித உழைப்பு என்ற பொதுக் குணத்தை கொண்டிருக்கும் காரணத்தினால் தான். இந்த உண்மையை நிரூபிப்பது எப்படி? நெசவு மூலம் உற்பத்தி செய்யப் பட்ட ஒரு பொருளை, இன்னொரு வடிவமான தையல் மூலம் உற்பத்தி செய்யப் பட்ட சட்டைக்கு சமமாக நிறுத்துவதன் மூலம் நிரூபிக்கலாம்.

இவ்வாறு ஒரு பொருளின் குறுக்கப் பட்ட மனித உழைப்பு, அதன் எதிரில் உள்ள நேரடியான மனித உழைப்பின் விம்பம் ஆகின்றமை, சமத்துவ வடிவின் இரண்டாவது குணம் ஆகும்.

தையலில் உள்ள திண்மையான உழைப்பு, துணியில் உறைந்துள்ள உழைப்புடனும் சேர்ந்து வருவதால், அது சமூகப் பெறுமானம் உள்ள உழைப்பாக மாறுகின்றது. இவ்வாறு தனியாட்களின் உழைப்பு, சமூகத் தன்மை கொண்ட உழைப்பெனும் வடிவம், சமத்துவ வடிவத்தின் மூன்றாவது விசேட குணமாகும்.

இயற்கையில் உள்ள இவ்வாறான பொருளாதார வடிவங்களை, பொருட்களின் குணாம்சங்களை, மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில் பகுப்பாய்வு செய்துள்ளார். சரக்குகளின் பண வடிவம் உயர்நிலை வளர்ச்சி என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், வேறொரு சரக்குடன் ஒப்பிடும் பொழுது, அதன் மதிப்பு விருப்பம் போல எடுத்துக் கொள்ளப் படுகின்றது என்று கூறுகின்றார்.

அரிஸ்டோட்டிலின் உதாரணம்: "5 படுக்கைகள் = ஒரு வீடு".  அதே 5 படுக்கைகளை குறிப்பிட்ட அளவு பணத்திற்கு சமமானதாக ஆக்கலாம். வீடு பண்பு வழியில் படுக்கைக்கு சமமான மதிப்புருவமாக்கப் பட வேண்டியது அவசியம் என்கிறார். "சமத்துவம் இல்லாமல் பரிவர்த்தனை இருக்க முடியாது. பொதுவான அளவீடு இன்றி சமத்துவம் இருக்க முடியாது." என்பது அரிஸ்டோட்டிலின் வாதம். ஆனால் மேலும் அவர் கூறும் பொழுது: "யதார்த்த வாழ்வில், பல்வேறு பட்ட பொருட்களை ஒன்றுக்கொன்று அளப்பது சாத்தியமில்லை." என்கிறார்.

இங்கே அவர் பொருட்களின் தரங்களை, தன்மைகளை அளப்பதை தான் அப்படிக் குறிப்பிடுகிறார். நடைமுறை வாழ்கையை இலகுவாக்குவதற்கான, ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே, இந்த அளவிடல் முறையை பின்பற்றலாம் என்பது அவரது முடிவு.

ஆகவே, மதிப்பு பற்றிய கருத்தியலின் பற்றாக்குறை காரணமாக, அரிஸ்டோட்டில் தனது பகுப்பாய்வு தோல்வியடைந்ததாக கூறுகின்றார். படுக்கைகளையும், வீட்டையும் சமமாக்கும் அந்தப் "பொதுத் தன்மை" எது? அரிஸ்டோட்டில் அப்படியொன்று இருக்க முடியாது என்கிறார். ஏன் இருக்க முடியாது? படுக்கையுடன் ஒப்பிடும் பொழுது, வீடானது சமமான, அடையாள படுத்தத் தக்க ஏதோ ஒன்றை தன்னுள் கொண்டுள்ளது. அது தான் மனித உழைப்பு.

சரக்குகளுக்கு மதிப்பை கொடுப்பது உழைப்பு தான் என்பதை, அரிஸ்டோட்டில் பார்க்க விடாமல் ஒன்று தடுத்து விட்டது. அன்றைய கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களின் சமத்துவமின்மை மட்டுமல்லாது, உழைப்புச் சக்திகளின் சமத்துவமின்மையையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மதிப்பின் வடிவத்தை தீர்க்கும் புதிரானது, மக்கள் மனதில் மனிதர்கள் சம உரிமை கொண்டவர்கள், மனித உழைப்பு சமத்துவமானது, என்ற கருத்தியல் நிலை பெறும் காலத்தில் தான் தீர்க்கப் படும். பொருட்களின் வடிவம், பொதுவான மனித உழைப்பின் உற்பத்தியாக கருதப் படும் ஒரு சமுதாயத்தில் அது சாத்தியமாகும். சரக்குகளின் உரிமையாளர்கள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சமுதாயத்தில் அது புரிந்து கொள்ளப் படும்.

இருப்பினும், சரக்குகளின் மதிப்பின் வெளிப்பாட்டில் ஒரு சமத்துவ உறவு இருக்கின்றது என்ற உண்மையை அரிஸ்டோட்டில் என்ற மேதை கண்டுபிடித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாய நிலவரங்கள் மட்டுமே, சமத்துவ உறவின் பின்னால் என்ன இருந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க விடாமல் அவரைத் தடுத்து விட்டன.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 

Monday, December 08, 2014

மூலதனம் கற்போம் : உழைப்பின் இரட்டைத் தன்மை

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் (பாகம் - 2)


ஒரு சரக்கில் மறைந்துள்ள மனித உழைப்பானது, பயன் மதிப்பாகவும், பரிவர்த்தனை மதிப்பாகவும் தன்னைக் காட்டிக் கொள்கின்றது என்று பார்த்தோம். உழைப்பின் இரட்டைத் தன்மையை கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது, நாம் இன்றைக்கும் கல்லூரிகளில் படிக்கும், அதே முதலாளித்துவ பொருளியல் பாடம் பற்றித் தான் மார்க்ஸ் பேசுகின்றார். ஒரு பொருளின் மதிப்பை, மனித உழைப்புத் தான் தீர்மானிக்கின்றது என்பதைத் தான், மார்க்ஸ் இங்கே நிறுவ விரும்புகிறார். அதாவது, மூலதனம் புத்தகம் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீதான விமர்சனமாகவே எழுதப் பட்டுள்ளது.

உழைப்பின் இரட்டைத் தன்மையை இன்னும் விரிவாகப் பார்ப்போம். ஒரு மீட்டர் துணி, ஒரு சட்டை ஆகிய இரண்டு சரக்குகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக, நாங்கள் அவற்றின் மதிப்பை எப்படித் தீர்மானிக்கிறோம்? துணியை விட சட்டையின் மதிப்பு அதிகம் என்று நினைத்துக் கொள்கிறோம். தற்போதைக்கு அப்படியே வைத்துக் கொள்வோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி, ஒரு சட்டையின் பெறுமதிக்கு சமமானது. (W = 2 W)

சட்டையும், துணியும் பார்க்கும் போதே வித்தியாசம் தெரியும் பொருட்கள். அதாவது, இரண்டு வெவ்வேறு பண்புகள் கொண்டவை. அவற்றை உற்பத்தி செய்யும் தையல் இயந்திரம், நெசவு இயந்திரம் என்பனவும் வித்தியாசமான பண்புகளை கொண்டவை.

அவ்வாறு வெவ்வேறு பண்புகளை கொண்டிருப்பதால் தான், அவற்றுக்கு இடையே சரக்குகள் என்ற உறவு இருக்கிறது. அதாவது, யாரும் ஒரு சட்டைக்குப் பதிலாக, இன்னொரு சட்டையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தனக்குப் பயன்படும், தன்னிடம் இல்லாத இன்னொரு பொருளுடன் தான் பண்டமாற்று செய்வார்கள்.

பண்பு ரீதியாக மாறு பட்ட பொருட்கள் தான், சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினையை உண்டாக்குகின்றன. அதனால், பொருட்களின் மதிப்பு கூடிக் குறைகிறது என்பது முதலாளித்துவ பொருளியல் அறிஞர்களின் வாதம். மார்க்ஸ் அதனை மறுக்கிறார். புராதன இந்திய உற்பத்தி முறையில், (முதலாளித்துவ) சரக்கு உற்பத்தி இருக்கவில்லை. ஆனால், அங்கே வேலைப் பிரிவினை இருந்துள்ளது.

நமக்கு நன்கு பரிச்சயமான இன்னொரு உதாரணமான தொழிற்சாலையை எடுத்துக் கொள்வோம். அங்கே பல்வேறு பிரிவுகளில் பிரிக்கப் பட்டுள்ள தொழிலாளர்கள், ஒரு சரக்கின் வேறுபட்ட பாகங்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் அவற்றை தமக்குள் பண்டமாற்று செய்து கொள்வதில்லை.

உழைப்பின் வெவ்வேறு வகைகளில் இருந்து உருவாகும் உற்பத்திப் பொருட்கள் தான் சரக்குகள் ஆக முடியும். சுருக்கமாக, பயன் மதிப்புள்ள பொருட்கள் எல்லாம் பண்பு வழியில் வேறுபட்டதாக இருப்பதால் தான், சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

தனிப்பட்ட உற்பத்தியாளர்களினால் அவர்களது சொந்த நலனுக்காகவும் சேர்த்து தயாரிக்கும் பயன்மதிப்புள்ள பொருட்கள், பின்னர் சமுதாய உழைப்புப் பிரிவினையாக வளர்ச்சி அடைகின்றது. ஒரு சட்டையை தைத்த தையல்காரர், அந்த சட்டையை அவரே அணிந்திருக்கலாம், அல்லது யாரோ ஒரு வாடிக்கையாளர் அணிந்திருக்கலாம். அந்த சட்டையின் பயன் மதிப்பு மாறப் போவதில்லை.

தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப் படாத புராதன காலத்தில் வாழ்ந்த மக்களும், சீதோஷ்ண நிலையில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆடைகளை தயாரித்து அணிந்து கொண்டார்கள். இன்றைக்கும் பனி படர்ந்த வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்கள், மான் தோலில் இருந்து தமக்கான குளிர் அங்கியை தாமாகவே தயாரித்துக் கொள்கிறார்கள். அங்கே எந்த தையல்காரரும் கிடையாது.

துணியும், சட்டையும், இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய செல்வங்கள் தான். இயற்கை அளித்த மூலப்பொருட்களை மனிதர்களின் தேவைக்காக பயன்படுத்தும் விளைபொருட்கள் அவை. எனவே, உழைப்பு பயன்மதிப்பாக அல்லது பயனுள்ள உழைப்பாக இருக்கிறது.

உழைப்பு என்பது, சமுதாயத்தின் எல்லா வடிவங்களுக்கும் பொருந்தக் கூடிய, மனித இனம் உயிர் வாழ்வதற்கு தேவையான இன்றியமையாத தேவை ஆகும். அது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றம்.

பயன்மதிப்புள்ள பொருட்களில் உள்ள உழைப்பை தனியாக பிரித்து எடுத்து விட்டால், இயற்கையின் ஆதாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஒரு சரக்கில் அது மட்டும் முக்கியமானால், இயற்கை செயற்படுவது போல மனிதனும் செயற்பட முடியும். மந்திரத்தால் சட்டை ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாத விடயம்.

ஆனால், மறுபக்கத்தில், உழைப்பு மட்டும் பயன் மதிப்புகளின் ஒரே ஆதாரம் அல்ல. வடிவத்தை மாற்றும் செயற்பாட்டில் இயற்கைச் சக்திகள் மனிதனுக்கு உதவுகின்றன. வில்லியம் பெட்டி என்பவர் கூறியது போல, "உழைப்பு ஒரு பொருளுக்கு தந்தையாகவும், பூமி அதன் தாயாகவும் உள்ளது."

ஒரு சட்டையின் மதிப்பு, துணியின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமானது என்று பார்த்தோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி ஒரு சட்டைக்கு சமமானது என்று அறிந்து வைத்திருக்கிறோம். இது வெறும் அளவு சார்ந்த வேறுபாடு. ஒரே ஆள், நெசவு வேலை, தையல் வேலை இரண்டையும் செய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டல்லவா?

ஒரு வேலையாள் ஒரு நாள் நெசவு வேலை செய்து துணி உற்பத்தி செய்கிறார். அவரே மறுநாள் தையல் வேலை செய்து சட்டை உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், துணி, சட்டை ஆகிய பண்பு ரீதியாக மாறுபட்ட பொருட்கள் இரண்டும், ஒரே ஆளின் ஒரே உழைப்பைத் தானே கொண்டிருக்கின்றன? நமது முதலாளித்துவ உலகில் ஒரே ஆள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வேலைகளை செய்வதைக் காணலாம்.

பொருள் உற்பத்தி என்பது, ஒவ்வொரு மனிதனினதும் மூளை, தசை, நரம்புகளின், மனித உழைப்பின் செலவீடு தான். மனித உழைப்பை இரண்டு வகைகளில் செலவிட முடியும் என்பதை மேலே கண்டோம். அதாவது, ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அங்கே மனித உழைப்பு பிரயோகிக்கப் படுகின்றது.

அது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின்னர், பல விதங்களில் செலவிட முடியும் என்பது உண்மை தான். தேர்ச்சி பெற்ற தொழிலாளி, உயர் கல்வி கற்ற வங்கிப் பணியாளர், உழைப்பை வேறொரு மட்டத்தில் செலுத்துகின்றனர். ஆனால், சரக்கின் மதிப்பானது கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பின் செலவீட்டை குறிக்கின்றது.

ஒரு சாதாரண தொழிலாளியின் தேர்ச்சி அடையாத உடல் உழைப்பை சாமானிய உழைப்பு என்று கொள்வோம். தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது, ஒன்று திரட்டப் பட்ட சாமானிய உழைப்பாகும். அதாவது, பன்மடங்காக்கப் பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப் படுகின்றது.

ஒரு தேர்ச்சி பெற்ற உழைப்பு, தேர்ச்சி அடையாத சாமானிய உழைப்புடன் ஒப்பிட்டு சமன் செய்யப் படுகின்றது. அதாவது, சாமானிய உழைப்பு, ஒரு பொருளின் மதிப்பை அளப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப் படுகின்றது. (ஒரு கூலித் தொழிலாளிக்கு வழங்கும் கூலி வேறு விடயம். அதைப் பற்றி இங்கே பேசவில்லை. ஒரு தொழிலாளி வழங்கும் உழைப்பு நேரம் தான் கணிக்கப் படுகின்றது.)

சட்டையின் மதிப்பு, துணியை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கருதிக் கொண்டோம். இந்த வேறுபாடு எங்கிருந்து முளைத்தது? சட்டையில் அடங்கியுள்ள உழைப்பில் பாதியளவு தான் துணியில் அடங்கியுள்ளது. இன்னொரு விதமாகக் கூறினால், துணியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பைப் போன்று இரு மடங்கு, சட்டை உற்பத்திக்கு செலவிடப் பட்டிருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு சரக்கின் பயன் மதிப்பில் மறைந்துள்ள உழைப்பை பண்பு ரீதியாக அளவிடுகின்றோம். அதற்கு மாறாக, (பரிவர்த்தனை) மதிப்பு அளவு ரீதியாக கணக்கிடப் படுகின்றது. "ஒரு பொருளைப் பாவிப்பதால் என்ன பிரயோசனம்?" என்று அதன் பயன் மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம். "அந்தப் பொருள் எவ்வளவு விற்பனைக்கு வருகின்றது? அது எவ்வளவு காலம் பாவிக்கும்?" என்று அதன் (பரிவர்த்தனை) மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம்.

உதாரணத்திற்கு, ஒரு சட்டை உற்பத்தி செய்யத் தேவையான உற்பத்தித் திறன் (இயந்திரங்கள், தொழில்நுட்பம்) மாறாமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப்படும் சட்டைகளின் மதிப்பு அவற்றின் தொகைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். அதாவது, ஒரு சட்டை உற்பத்தி செய்வதற்கு ஒரு வேலை நாள் தேவைப் பட்டால், இரண்டு சட்டைகள் உற்பத்தி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை.

ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு சட்டையின் உற்பத்திக்கு தேவையான வேலை நாள் இரு மடங்காகின்றது. அப்படியானால், முன்னர் இரு சட்டைகளுக்கு இருந்த பெறுமதி, தற்போது ஒரு சட்டைக்கு இருக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு சட்டைக்கு அரை நாள் வேலை நேரம் மட்டும் தேவைப் பட்டால், ஒரு சட்டையின் பெறுமானம் இரண்டு சட்டைகளுடையதாக மாறும். சுருக்கமாக, ஒரு பொருளின் உற்பத்திக்கு செலவிடப் பட்ட பயனுள்ள உழைப்பு அதே பண்பு கொண்டதாக நீடிக்கிறது. ஆனால், உழைப்பின் அளவு மாறியுள்ளது.

பயன் மதிப்புகளின் அளவிலான அதிகரிப்பு, பொருட் செல்வத்தின் அதிகரிப்பாகும். ஒருவர் அணிவதற்கு ஒரு சட்டை தான் தேவை. இரண்டு சட்டைகள் என்பது இரண்டு பேருக்குரியது. ஆனால், சட்டைகள் அதிகரிக்கும் பொழுது, அவற்றின் மதிப்பின் பெறுமதி குறைகின்றது. உற்பத்தி செய்யப்படும் அதிகளவு பொருட்களின் எண்ணிக்கையினால் செல்வம் அதிகரித்தாலும், மதிப்பால் குறைகின்றது. இந்த எதிரெதிர் திசையிலான போக்கிற்கு காரணம், உழைப்பின் இரட்டைத் தன்மை ஆகும்.

உற்பத்தித்திறன் என்பதும் மறைபொருளான உழைப்பின் வடிவம் தான். அதாவது, இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கவும், முன்கூட்டியே மனித உழைப்பு செலவிடப் பட்டுள்ளது. மனித உழைப்புச் சக்தியின் செலவீடு தான், அனைத்துப் பொருட்களிலும் மறைந்திருக்கும் உழைப்பு. மனித உழைப்பு சரக்கின் மதிப்பை படைக்கிறது, அதன் மதிப்பாகவே இருக்கிறது.

பிற்குறிப்பு: முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆதம் ஸ்மித், சரக்குகளை மதிப்பிடுவது மனித உழைப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், உழைப்பின் அளவைக் கொண்டல்ல, உழைப்பின் மதிப்பைக் கொண்டு சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறார். "ஒரு உழைப்பாளியின் ஆரோக்கியம், வலிமை, முனைப்பு சம அளவில் இருக்க வேண்டும். தொழிலாளி தனது மகிழ்ச்சி, ஓய்வு, சுதந்திரத்தின் ஒரு பகுதியை இழக்க வேண்டும்." என்று சொல்கிறார். (நாடுகளின் செல்வம், புத்தகம் 1) ஆதம் ஸ்மித் நவீன கால கூலித் தொழிலாளியை நினைத்து அப்படி எழுதி இருக்கிறார். உழைப்பு என்பது உலகில் தோன்றிய ஜீவராசிகளின் இயல்பான நடவடிக்கை என்று அவர் கருதவில்லை.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 
1. மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்

Monday, November 24, 2014

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்



மூலதனம் வாசிப்பு 

கம்யூனிசத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு கூட, ஒரு தகுதி வேண்டும். அவர்கள் முதலில் முதலாளித்துவத்தை பற்றி சிறிதளவேனும் அறிந்து வைத்திருக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் முதலாவது பாகத்தின் தலைப்பு இது: "முதலாளித்துவ பொருளுற்பத்தி." 

மூலதனம் நூலை வாசித்து புரிந்து கொள்ளக் கஷ்டப் படுபவர்களுக்கும், வாசிக்க விரும்பாமல் எதிர்ப்பவர்களுக்கும் பிரயோசனப் படும் வகையில், ஒவ்வொரு பகுதியாக எடுத்து விவாதிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மூலதனம் வாசிப்பில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் எல்லோரும் ஆசிரியராகவும், மாணவராகவும் இருக்கலாம். 

முன்னாள் சோஷலிச நாடுகளில், ஒவ்வொரு தொழிலாளியும், சனிக்கிழமைகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டும். அங்கே பொருளியல் பாடம் படிக்க வேண்டும். அந்த எட்டு மணித்தியாலமும், வேலை நேரமாகக் கணிக்கப் பட்டு சம்பளம் கொடுத்து வந்தார்கள்.

உலகில் எந்த சர்வாதிகாரி தனது மக்களைப் படிக்க வைப்பான்? மேற்கத்திய முதலாளித்துவ "ஜனநாயக" நாடுகளில் கூட, தொழிலாளர்களுக்கு பொருளியல் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 




(மூலதனம், முதலாம் பாகம், புத்தகம் ஒன்று)

அத்தியாயம் ஒன்று : சரக்கு 

பிரிவு 1 : பயன் மதிப்பும், மதிப்பும் 


1. பயன் மதிப்பு 

உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் பயன் மதிப்பு (use value) இருக்கும். ஒரு சடப் பொருளின் "உள்ளார்ந்த தன்மை" என்ற தத்துவத்தின் படியும் அதைக் கூறலாம். ஒரு பொருள் பயன்படுத்தப் படுவதால், அல்லது நுகரப் படுவதால் பயன்மதிப்பு உண்டாகின்றது.

ஒரு பொருள், மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால், அதற்கு பயன்மதிப்புக் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, அரிசி உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றது. அதே போன்று, உடை காலநிலைக்கு ஏற்றவாறு உடலைப் பாதுகாப்பதற்கும், மானத்தை மறைப்பதற்கும் உதவுகின்றது.

அநேகமாக, எல்லாப் பொருட்களுக்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாம் சரக்கு ஆவதில்லை. பண்டமாற்றுக்கு அல்லது வர்த்தகப் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லப்படும் பொருள் மட்டுமே சரக்கு (Commodity) ஆகின்றது.

உதாரணத்திற்கு, காட்டில் இருக்கும் மாமரத்தில் காய்க்கும் மாங்கனிகளுக்கும் பயன்மதிப்பு இருக்கிறது. (அவற்றை நுகர முடியும்.) ஆனால், அவை சரக்காக மாட்டாது. ஏனென்றால், யாரும் அவற்றை பறித்துச் சென்று விற்பதில்லை. ஆனால், வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் மாமரத்தில் இருந்து கிடைக்கும் பழங்களை சந்தையில் கொண்டு சென்று விற்கின்றனர். ஆகவே, அந்தப் பழங்கள் சரக்குகள் ஆகின்றன.

பயன்மதிப்பு கொண்ட பொருட்கள், பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லப் படுகின்றன. இன்றைய காலத்தில் பணத்தின் மூலம் பரிவர்த்தனையை இலகுவாக தீர்மானிக்க முடிகின்றது. ஆனால், பணம் புழக்கத்தில் இல்லாத பண்டைய காலங்களில் பண்டமாற்று மூலம் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப் பட்டன.

வித்தியாசமான பௌதிகத் தன்மை கொண்ட பொருட்களை, ஒன்றுக்கொன்று சமமாக பண்டமாற்று செய்வது எப்படி?


2. பரிவர்த்தனை மதிப்பு

ஒரு பொருளின் பயன் மதிப்பை அறிந்து கொள்வது இலகு. அதன் பௌதிக, இரசாயனத் தன்மை மாற்றங்களைக் கொண்டு விலை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, நமது தோட்டத்தில் பறித்த மாம்பழங்கள், அல்லது வளர்த்த கோழியை கொண்டு சென்று சந்தையில் விற்கும் பொழுது, வாங்குவோரின் நுகர்வுத் தேவையை பொறுத்து, அதன் பயன் மதிப்பை (அல்லது விற்கும் விலையை) முடிவு செய்கிறோம். ஆனால், நாணயப் புழக்கம் இல்லாத பண்டைய காலத்தில், அவற்றை வேறொரு பொருளுடன் பண்டமாற்று செய்ய வேண்டியிருந்திருக்கும்.

ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட அளவு அரிசித் தானியத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடை அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளுடன் பண்டமாற்று செய்து கொள்கிறார். இவை யாவும் வெவ்வேறு பயன் மதிப்புக் கொண்டவை. அது மட்டுமல்லாது, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற, வேறு பட்ட அளவீடுகளை கொண்டவையாக உள்ளன.

சந்தைக்கு வந்த விவசாயி ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக, குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடையை கைமாற்றிக் கொண்டு செல்கிறார். அப்படியானால், குறிப்பிட்ட பொருட்களுக்கு இடையில், ஒன்றுக்கொன்று சமமாக மாற்றிக் கொள்ளத்தக்க பரிவர்த்தனை மதிப்பு ஒன்று இருக்க வேண்டும்.

கணிதத்தில், ஒரு வடிவத்தின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கு, அதனை பல முக்கோணங்களாக பிரித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முக்கோணத்தையும் அளப்பதற்கு, அடிப் பாகத்தின் பாதியையும், செங்கோட்டின் உயரத்தையும் பெருக்கி விடையைத் தெரிந்து கொள்கிறோம். அந்தக் கணித சூத்திரம் கண்ணுக்குப் புலப் படாத ஏதோ ஒன்றால் பெறப் படுகின்றது.

அதே போன்று, பொருட்களுக்கு இடையிலான பரிவர்த்தனை மதிப்பையும், கண்ணுக்குப் புலப் படாத "ஏதோ ஒன்று" தீர்மானிக்கிறது. அது எது? ஒவ்வொரு சரக்கிற்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வேறுபட்ட தன்மை கொண்டவை. அரிசியையும், இரும்பையும், சமப் படுத்துவது எப்படி? ஆகவே, ஒரு பொருளின் பயன் மதிப்பை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், ஒரு பொதுவான குணவியல்பு எஞ்சியுள்ளது.

ஆகவே, சரக்குகளை கைமாற்றிக் கொள்ளும் பொழுது வெளிப்படும், பொதுவான குணாம்சம் தான் உண்மையான மதிப்பு ஆகும். அந்தப் பொதுவான குணாம்சம், மனித உழைப்புத் தான். ஒரு தானியத்தை பயிரிடுவதற்கும், ஒரு தளபாடத்தை செய்வதற்கும், ஓர் ஆடையை நெசவு செய்வதற்கும் மனித உழைப்பு செலவிடப் படுகின்றது. அந்த மனித உழைப்பு தான், பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிக்கிறது.

இப்போது இன்னொரு பிரச்சினை எழுகின்றது. மனித உழைப்பின் விலையை தீர்மானிப்பது எப்படி? மணித்தியாலங்கள், நாட்கள், வாரங்கள் என்பன, ஒரு பொருளைத் தயாரிப்பதற்கு எந்தளவு மனித உழைப்பு செலவிடப் பட்டது என்பதை கணிக்க உதவுகின்றது.

அப்படியானால், ஒரு சோம்பேறி அதிக நேரம் எடுத்து ஆறுதலாக வேலை செய்து முடித்தால், குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி நினைத்துக் கொள்வது தவறு. மனித உழைப்பு எனும் பொழுது, அது ஒரு தனி மனிதனின் உழைப்பைக் குறிப்பதல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பைக் குறிக்கின்றது.

அதாவது, ஒரு சோம்பேறி, ஒரு சுறுசுறுப்பானவன், இரண்டுக்கும் இடையிலான சராசரி தொழிலாளியின் சராசரி உழைப்புத் தான், ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பில் அடங்குகின்றது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கிறது. அதுவே, ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பு. அதாவது ஒரு பொருளின் உண்மையான மதிப்பு.


3. மனித உழைப்பும் உற்பத்தித் திறனும் 

"கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்றைய உலகம் எவ்வளவோ மாற்றத்தைக் கண்டு விட்டது. அதனால், அன்று மார்க்ஸ் கூறியவை இன்றைக்கு செல்லுபடியாகாது..." என்று வாதாடுவோர் பலருண்டு. அவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை வாசித்திருக்க மாட்டார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவினால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மூலதனம் நூலில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

ஒரு காலத்தில், மடிக் கணணி, கைத் தொலைபேசி என்பன மிகவும் விலை அதிகமான ஆடம்பரப் பொருட்களாக இருந்துள்ளன. அதற்குக் காரணம், அவற்றைத் தயாரிக்கத் தேவையான கொல்த்தான் எனும் மூலப் பொருள், பூமியில் மிக அரிதாகக் கிடைத்து வந்தது. பிற்காலத்தில் கொங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக கொல்த்தான் உற்பத்தியை அதிகரித்தது. அதனால், மடிக் கணணி,கைத் தொலைபேசி என்பனவற்றின் விலைகளும் மட மடவென சரிந்தன.

மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் கிண்டலாக ஓர் உண்மையைக் கூறுகின்றார். "நிலக்கரியை வைரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தார்கள் என்றால், வைரத்தின் விலை செங்கல்லை விடக் குறைவாக இருக்கும்." வைரம், தங்கம் போன்ற கனிம வளங்கள், இயற்கையில் மிக அரிதாகக் கிடைப்பதால், அதைத் தேடுவதற்கான மனித உழைப்பும் அதிகரிக்கின்றது. அதனால் அதன் விலையும் அதிகமாக உள்ளது. இதிலே சுரங்கத் தொழிலாளரின் உடல் உழைப்பு மட்டுமல்ல, பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் மூளை உழைப்பும் சம்பந்தப் பட்டுள்ளது.

ஒரு சரக்கின் உற்பத்திக்கு தேவையான உழைப்பு மாறாது இருந்தால், அதன் மதிப்பும் மாறாமல் இருக்கும். ஒரு காலத்தில், கையால் நெசவு செய்பவரின் உழைப்பு, உடுக்கும் ஆடையில் மதிப்பாக இருந்தது. அதே உழைப்பு இன்றைக்கும் தொடருமானால், உடைகளின் விலையும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால்,நெசவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உடைகளின் விலை பெருமளவு குறைந்தது.

முன்பு விசைத் தறியில் நெசவு செய்த தொழிலாளர்களின் அதே உழைப்பு நேரம், பின்னர் தொழிற்சாலைகளிலும் மாறவில்லை. ஆனால் உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்தது. ஆகவே மனித உழைப்பு மட்டுமல்லாது, உற்பத்தித் திறனும் ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. உண்மையில் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளில் நெசவு இயந்திரங்கள் வந்த பின்னர், உழைப்பின் நேரம் அரைவாசியாகக் குறைந்தது.

அதாவது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்புத் தான், ஒரு பண்டத்தின் மதிப்பையும், பருமனையும் நிர்ணயிக்கின்றது. பொதுவாக, உற்பத்தித் திறன் (நவீன தொழில்நுட்பம்) உயர்வாக இருந்தால், ஒரு பண்டத்தின் உற்பத்திக்கு தேவைப் படும் உழைப்பின் நேரமும் குறையும். அதன் மதிப்பும் குறையும். கடந்த தசாப்த காலமாக, கணனித் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பொருள் உற்பத்திக்கான செலவும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நோக்கத்தோடு தான், வருங்காலத்தில் ரோபோக்கள் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

எந்த இடத்தில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு பண்டத்திற்கு தேவைப்படும் மனித உழைப்பின் அளவும், மதிப்பும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவில் பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளியின் விலை சந்தையில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அதை உற்பத்தி செய்வதற்கான மனித உழைப்பு அதிகம்.

அதே இந்திய சந்தையில், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட தக்காளிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களது விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு என்பன உற்பத்தித் திறனை உயர்த்தி உள்ளது. மனித உழைப்பை குறைத்துள்ளது. அதனால் விலையும் குறைந்துள்ளது.

ஒரு பயன்மதிப்பு கொண்ட பண்டத்தில், கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பு இறுகி இருப்பதாலேயே அது மதிப்பைப் பெற்றிருக்கிறது. (விற்பனைக்கான சரக்காக மாறுகிறது.) ஆயினும், பயன் மதிப்புக் கொண்ட எல்லாம், மதிப்புப் பெறுவதில்லை. காற்று, தரிசு நிலம், புல்வெளிகள் என்பன பயன் மதிப்புக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவில் ஒரிசா மாநிலக் காடுகளில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனம் வரும் வரையில், அந்த இடத்தின் பயன்மதிப்புக் குறித்து யாரும் அக்கறைப் படவில்லை.

ஒரு பொருள் விற்பனைக்கான சரக்காக மாறாமலே, அது மனித உழைப்பைக் கொண்டதாகவும், மனிதர்களுக்கு பிரயோசனமானதாகவும் இருக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது தேவைக்காக, தானாகவே ஒரு மேசையை உற்பத்தி செய்கிறார். அவர் அந்தப் பொருளில் பயன் மதிப்பை உருவாக்குகிறார். ஆனால், அது விற்பனைக்கான சரக்கு அல்ல.

ஒருவர் உற்பத்தி செய்யும் பொருள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதாவது, அதற்கு ஒரு சமுதாயப் பயன் மதிப்பு கிடைக்க வேண்டும். ஆயினும், நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு குடியானவன் தனது தானிய உற்பத்தியில் ஒரு பகுதியை நிலவுடமையாளருக்கும், கோயிலுக்கு தானமாகவும் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆகவே, ஒரு பொருள் உறபத்தி செய்யப் பட்டு, மற்றவர்களுக்கு பயன்பட்டாலும் எப்போதுமே அது சரக்காகி விடுவதில்லை. அந்தப் பொருளின் பயன் மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும் இன்னொருவருக்கு, பரிவர்த்தனை மூலம் கைமாற வேண்டும். அதாவது பண்டமாற்று செய்யப் பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பயன் எதுவும் கிடையாது. அதில் அடங்கி இருக்கும் உழைப்பும் மதிக்கப் படுவதில்லை.

பெரும்பாலும் உழைப்பாளர்களாக இருக்கும் நாங்கள், எங்களது உழைப்பை முதலாளி கொடுக்கும் பணத்துக்காக பரிவர்த்தனை செய்து கொள்கிறோம். அவ்வாறு தான், முதலாளித்துவ உற்பத்தியில், எமது உழைப்பு கூட விற்பனைச் சரக்காக மாறுகின்றது.

Saturday, January 28, 2012

மக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை

மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியை சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சில நேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப் போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டு, "எம்மிடம் அதிக வரி அறவிடுங்கள்." என்று கெஞ்சுகின்றனர். முதன் முறையாக அமெரிக்க பணக்காரர்கள், தாங்கள் வரி கட்டுவதில்லை என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றனர். அமெரிக்காவில் இதுவரை காலமும் "இடதுசாரிகளின் வெறுப்புப் பிரச்சாரமாக" கருதப்பட்ட விடயம், இவ்வாறு மக்கள் அரங்கில் நிரூபிக்கப் பட்டதாக நினைவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நியூ யோர்க் நகரில் முளைத்து, வெகு விரைவில் அமெரிக்க நகரங்கள் எங்கினும் கிளை விட்ட "Occupy " எனும் இயக்கம் தான் காரணம். "ஆக்கிரமித்தல்" எனும் பொருள் படும் Occupy இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டது?

உலகிற்கே ஜனநாயகத்தை போதித்த நாடு என்று, அமெரிக்கா பீற்றிக் கொண்டாலும், அங்கே ஜனநாயகத்திற்கும் எல்லை வகுக்கப் பட்டுள்ளது. மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அத்துடன் அவர்களது ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது. Occupy இயக்கம் அதற்கு மாறாக, மக்களே நேரடியாக பங்கேற்கும் ஜனநாயகத்தை கோரி நிற்கின்றது. இதுவரை காலமும், பலவீனமாகவிருந்த இடதுசாரி சக்திகளுக்கு, மக்களை அணிதிரட்டுவது ஒரு சவாலாக இருந்தது. மேற்கத்திய அரசுகளும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை அறிவிக்காமலே நடைமுறைப் படுத்தி வந்தது. வாழ்க்கை வசதிகள் உயர்ந்திருந்த காலத்தில், மக்களுக்கும் சோஷலிசத்தின் பால் ஈடுபாடு ஏற்படவில்லை. உண்மையிலேயே அரசு மக்களுக்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததா, அல்லது இடதுசாரி சக்திகளை அமுக்குவதற்கான தந்திரமா என்பது வேறு விடயம். என்ன இருந்தாலும், இன்றுள்ள மக்கள் பெருமளவு இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப் படுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.

தொண்ணூறுகளின் மத்தியில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் அந்த நெருக்கடியில் இருந்து தம்மை தற்காத்துக் கொண்டன. வளர்ச்சி அடைந்து வந்த தூர கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரமே அதிகளவு பாதிக்கப் பட்டது. அதற்கு மாறாக, 2008 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, மேலைத்தேய நாடுகளை கடுமையாக பாதித்தது. உலகில் எந்த மூலையில் நெருக்கடி ஏற்பட்டாலும், சர்வதேச மூலதனமானது தனது தாயகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டது. இம்முறை, வங்கிகள் இந்த நெருக்கடியை தோற்றுவித்தன. வங்கிகளை காப்பாற்றுவதற்காக, அரசு மக்களின் வரிப் பணத்தை எடுத்து செலவிட்டது. இதனால், வேலையிழப்புகள் ஏற்பாட்டது மட்டுமல்ல, மக்களுக்கு வழங்கப் பட்ட சலுகைகளும் குறைக்கப் பட்டன. இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்திருந்தால், கடவுள் மேல் பழியைப் போட்டு விட்டு அரசு தப்பியிருக்கும். மக்களின் மத நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளில், மக்களும் பொருளாதார நலன்கள் குறித்து சிந்திக்கப் பழகி விட்டனர். அதனால், நெருக்கடிக்கு காரணமான அரசையும், முதலாளித்துவத்தையும் நேரடியாகவே விமர்சிக்கின்றனர். மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், நகரங்களை ஆக்கிரமிக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவை பெருக்க காரணமாக அமைந்தது.

"பசித்த மனிதன், கோபமாக இருப்பான்." என்ற பழமொழிகேற்ப, மக்கள் உணவுக்காக வீதிக்கு வந்தும் போராட தயாராக இருப்பார்கள். அதனால் தான், அரசு உணவுப் பொருட்களுக்கு மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலக நாடுகளில், மத உணர்வு, இன உணர்வு என்பன, மக்களின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்தாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்திய தர வர்க்கமும், தன்னை சிறந்த மத/இன உணர்வாளர்களாக காட்டிக் கொள்ளும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இது போன்ற கருத்துக்கள் அடக்கப் பட்டன. தேசியவாதத்தின் பெயரால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையும், அதைத் தொடர்ந்து கோடிக் கணக்கான மக்களை காவு கொண்ட யுத்தமும், மக்கள் மனதை விட்டு அகலவில்லை. அதனால், இன உணர்வு என்றால் தள்ளிச் செல்லும் மேலைத்தேய மக்களிடம், அது போன்ற கருத்துக்கள் எடுபடப் போவதில்லை.

இருப்பினும், Occupy இயக்கத்தின் மீதான அரச அடக்குமுறையானது, எதிர்காலத்தில் இரண்டு வகையான அரசியல் சக்திகளை பலப்படுத்தும். "மக்களுக்கு உணவு மட்டும் முக்கியமில்லை. மதம், இன உணர்வு என்பனவும் முக்கியம்." என்று கூறி வரும் தீவிர வலதுசாரி பாஸிச சக்திகளை, சில நேரம் அரசே ஊக்குவிக்கலாம். அதற்கு எதிராக, தீவிர இடதுசாரிகளும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், Occupy இயக்கத்தை தோற்றுவித்த இடதுசாரிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள் இறங்கி சீரழியலாம். ஏனெனில், "மக்கள் போராடுவார்கள், மக்கள் தீர்மானிப்பார்கள்." என்று அரசியல் மயப் படுத்தப் படாத மக்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். முதலாளித்துவ அரசும், ஊடகங்களும் இருக்கும் வரையில் மக்களை சிந்திக்க விட மாட்டார்கள்.


Occupy இயக்கத்தை ஒடுக்கியதில் ஊடகங்களின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. ஆரம்பத்தில், மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப் பட்டன. நாட்கள், வாரங்களாகியும், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால், மக்களின் ஆதரவும் பெருகியதால், வேறு வழியின்றி ஊடகங்கள் கவனத்தை திருப்பியிருந்தன. அப்போதும், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, பொலிஸ் வன்முறை கொண்டு ஒடுக்கியதை அறிவிக்கவில்லை. பங்குச் சந்தை தரகர்களும், பெரு நிறுவனங்களின் முதலாளிகளும், "மனித உரிமைகளை மதிப்பதாக" பாசாங்கு செய்வதற்காக எதிர்ப்பாளர்களை பொறுத்துக் கொண்டார்கள். நாள் செல்லச் செல்ல அவர்களது பொறுமையும் எல்லை கடந்து விட்டது. அடக்குமுறை பிரயோகித்து போராட்டத்தை முறியடிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டனர். கவனிக்கவும், இதே முதலாளிகள் தான், தங்களிடம் அதிக வரி அறவிடுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். முதலாளிகள் மனம் திருந்தவில்லை. நேரத்திற்கு ஏற்றவாறு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

அமெரிக்காவில், எதிர்காலத்தில் இது போன்ற போராட்டங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய அரசு சாரா அமைப்பிற்கு, பெரும் தனவந்தர்கள் புரவலர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. அதே போன்று, இலாப நோக்கை குறிக்கோளாக கொண்டு நடத்தப் படும் ஊடகங்களும், Occupy இயக்கத்தை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எப்போதும் சாமானியரின் உணர்வுகளோடு விளையாடும் ஊடகங்கள், இம்முறையும் எதிர்மறையான செய்திகளை பரப்பின. இந்தச் செய்திகள், Occupy ஆதரவாளர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தன. நகர மத்தியில், Occupy போராட்டம் நடைபெற்ற இடங்களில், கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. போராட்டக் காரர்கள் தங்குவதற்காக, நண்பர்களுடன் அரசியல் விவாதங்கள் நடத்தும் நோக்குடன் அமைக்கப் பட்ட கூடாரங்கள்.

கறையான் புற்றெடுக்க பாம்பு நுழைந்தது போல, பல சமூக விரோதிகளும் கூடாரங்களுக்குள் தங்குவதாக செய்தி பரப்பப் பட்டது. அந்த இடத்தில், குடிகாரர்களும், திருடர்களும் நடமாடுவதாகவும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறப் பட்டது. இதனால் தமது பாதுகாப்பு கருதி பல பெண்கள், போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கினார்கள். இதை விட, வீடற்றவர்கள், உல்லாசப்பிரயாணிகள் போன்ற போராட்டத்திற்கு சம்பந்தமற்ற நபர்களும், இலவசமாக கிடைக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். நகரின் மத்தியில் இலவசமாக தங்குமிடமும், இலவச உணவும் கிடைக்கிறது. எல்லாம் Occupy இயக்கத்தின் புண்ணியத்தால் கிடைக்கின்றன. சுருங்கக் கூறின், "Occupy ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஆனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுவதை மட்டுமே எதிர்ப்பதாகவும்" ஊடகங்கள் நீலிக் கண்ணீர் வடித்தன.

எகிப்தில், லிபியாவில், சிரியாவில் Occupy ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதெல்லாம், ஊடகங்கள் இதுபோன்ற தகவல்களை பரப்பவில்லை. அதற்கும் முதல், பெல்கிரேட் (செர்பியா), கியெவ் (உக்ரைன்), திபிலிசி (ஜோர்ஜியா) போன்ற நகரங்களிலும் இதே மாதிரி கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு, "சோரோஸ் பவுண்டேஷன்" போன்ற அமெரிக்க கோடீஸ்வரர்களின் அமைப்புகள் நிதி வழங்கின. அந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம், "நீதிக்கான மக்கள் எழுச்சி", "ஜனநாயகப் புரட்சி" என்று வர்ணித்தார்கள். இந்த நகரங்களில் நடந்த போராட்டங்கள், சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி விட்டிருந்ததாக, எப்போதாவது கேள்விப் பட்டிருப்போமா? ஊடகங்களில் அவ்வாறான செய்தி வந்திருக்குமா? "எமது அரசியல் நண்பர்கள் செய்வதெல்லாம் புரட்சி, எமது அரசியல் எதிரிகள் செய்வதெல்லாம் சமூக விரோதச் செயல்." என்பது தான் மேற்கத்திய ஊடகங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது.