Showing posts with label முதலாளித்துவ பயங்கரவாதம். Show all posts
Showing posts with label முதலாளித்துவ பயங்கரவாதம். Show all posts

Sunday, May 16, 2010

கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

முதலாளித்துவ ஊடகங்கள், செல்வந்த நாடுகள் யாவும் குந்தியிருந்து யோசித்து, கிரீசின் பொருளாதாரப் பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டன. ஒலிம்பிக் போட்டிகளுக்கு கோடிக்கணக்கில் செலவளித்த அரசு, பொதுத்துறையில் "மக்களின் வரிப்பணத்தை விழுங்கி" சொகுசாக வாழும் அரச ஊழியர்கள், அவர்களுக்கு "அநியாயமான முறையில் கிடைக்கும்" இரண்டு மாத போனஸ், "குறைந்த சேவைக் காலத்தில் ஓய்வு பெறுவதால்" அதிகரிக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு.... மொத்தத்தில் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கமும் குற்றவாளிகள்.

கிரேக்க ஊழியர்களின் சராசரி மாத சம்பளம் 800 யூரோக்கள். ஒரு தனியார் வங்கி ஊழியருக்கும் அல்லது அரச அலுவலக பணியாளருக்கும் அது தான் சம்பளம். வேலைக்கு சேரும் புதிதில் 600 யூரோ கொடுப்பதுமுண்டு. தனியார் துறை, பொதுத் துறை எங்கும் இது தான் நிலைமை. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப்போல கிரீசில் சட்டப்படி தீர்மானிக்கப்பட்ட சம்பள அளவீடு எதுவும் கிடையாது. அதே நேரம் மேற்கு ஐரோப்பிய நாட்டில் சராசரி மாத சம்பளம் 1400 யூரோக்கள். தேர்ச்சியடையாத அடிமட்ட தொழிலாளி கூட குறைந்தது 1200 யூரோக்கள் பெறுகிறார். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சராசரி வேலை நேரம் ஒரு வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள். ஆனால் கிரீசில் ஒருவர் வாரத்திற்கு சராசரி 42 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். கிரீசில் ஓய்வூதியம் பெறும் வயது, சராசரி 61,4 (EU: 61,1). கிரீசில் கிடைக்கும் ஓய்வூதியப்பணம் சராசரி 750 யூரோக்கள். (ஸ்பெயினில் 950 ) கிரீசில் உள்ள மொத்த உழைப்பாளிகளில் அரசாங்க ஊழியர்கள் 22 சதவீதம். (நெதர்லாந்தில் 27 %) இந்தத் தரவுகள் எல்லாம் எங்கேயிருந்து கிடைத்தன? பார்க்க: European Commission - Eurostat

சட்டவிரோதமாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகள், இந்தப் பொருளாதாரக் கணக்கெடுப்பினுள் வரவில்லை. கிரீசில் லட்சக்கணக்கான குடிவரவாளர்கள், அகதிகள் எந்தவிதமான பதிவும் இன்றி வேலை செய்கின்றனர். குறிப்பாக வயல்களில் கூலித் தொழிலாளர்களாக, நகரங்களில் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்பவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அல்பேனியா, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். கிரீசில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அரசுக்கு வரி கட்டுவதில்லை. மருத்துவ சலுகைகளை பயன்படுத்துவதில்லை. போனஸ், ஓய்வூதியம் பற்றியெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் மிகக் குறைந்த ஊதியம் (சராசரி மாதம் 300 யூரோ) பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்கள், கிரீஸ் முழுவதும் நுகரப் படுகின்றன. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஹோட்டல்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் (சில நேரம் சட்டவிரோதமாக) பணிபுரிவதால் தான், ஐரோப்பிய உல்லாசப்பிரயாணிகள் குறைந்த செலவில் தங்குகின்றனர்.

கிரீசில் சட்டப்படி ஒப்பந்தம் போட்டு வேலை செய்யும் கிரேக்கர்கள் கூட போதுமான அளவு சம்பாதிப்பதில்லை. விலைவாசியோ மேற்கு ஐரோப்பிய தரத்தில் தான் உள்ளது. ஆனால் சம்பளமோ மேற்கு ஐரோப்பாவில் கிடைப்பதை விட அரைவாசி. இந்த பிச்சை சம்பளத்தை தான் வருகிற மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்காதே, என்று கடன் கொடுத்த IMF, EU உத்தரவு போட்டுள்ளன. அன்றாட செலவுக்கே பத்தாத சம்பளம் பெறும் கிரேக்க ஊழியருக்கு, வருட முடிவில் கிடைத்து வந்த போனஸ் தொகை சிறிய ஆறுதலைக் கொடுத்து வந்தது. அது கூட ஒரு மாத சம்பளம் அளவே இருக்குமென்பதால், 13 வது மாத சம்பளம் என்றும் அழைப்பார்கள். பொதுத்துறையில் மூன்றில் ஒரு பங்கும், தனியார் துறையில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு இந்த போனஸ் எல்லாம் கிடையாது.

உண்மையில் கம்பெனி, ஒரு தொழிலாளிக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதால் மிச்சம் பிடிக்கும் உபரி உழைப்பை தான் "போனஸ்" என்ற பெயரில் கொடுக்கின்றது. அதாவது போனஸ் என்பது அந்த தொழிலாளிக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தின் ஒரு பகுதி. அது கூட கட்டாயம் கொடுக்க வேண்டியதில்லை. நடைமுறையில், தனியார் நிறுவனங்கள் "இந்த முறை லாபம் போதாது" என்று கூறி கொடுப்பதில்லை. அரச நிறுவனங்கள் மட்டுமே ஒழுங்காக கொடுத்து வருகின்றன. இதை விட 14 வது மாத சம்பளம் என்ற "இன்னொரு போனஸ்" உள்ளது. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதனை "விடுமுறைப் பணம்" என அழைப்பார்கள். சம்பளத்தில் இருந்து மாதாமாதம் பிடித்து வைக்கப்பட்ட தொகையை வருடத்தில் ஒரு தடவை மொத்தமாக வழங்குவார்ககள். இதைத் தான் "கிரீஸ் அரசு தனது ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் கொடுத்து திவாலானதாக" வலதுசாரி ஊடக பயங்கரவாதிகள் பீதியை கிளப்புகின்றனர். இந்த "இரண்டு மாத போனஸ்" பெரும்பாலான செல்வந்த நாடுகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வருவது தான். தற்போது ஏதோ கிரீஸ் மட்டும் தான் அப்படியொரு விசித்திரமான செலவினத்தைக் கொண்டிருப்பதாக கதை கட்டி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு கிரேக்க தொழிலாளர் வர்க்கத்தின் மீது பழி போட்டு வன்மத்துடன் தாக்குதல் நடத்தி வரும் முதலாளித்துவ பயங்கரவாதிகள், வருமானவரி கட்டாத பணக்காரர்களை கண்டுகொள்வதில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. கிரீசில் இதுவரை எத்தனை தனியார் கம்பனிகளின் முதலாளிகள் வருமான வரி கட்டாமல் ஏய்த்திருக்கிறார்கள்? தனியாக கிளினிக் நடத்தும் வைத்தியர்கள் பற்றுச்சீட்டு கொடுக்காமல் 3000 - 4000 யூரோ சம்பாதிப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். யார் அதிக வரி ஏய்ப்பது என்பது பணக்கார்களிடையே பிரபலமான விளையாட்டுப் போட்டி. இத்தனைக்கும் கிரீசில் ஐரோப்பாவிலேயே குறைந்த அளவு வருமான வரியே விதிக்கப்படுகின்றது!

ஏதென்ஸ் நகரின் வட பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ளன அழகான பங்களாக்கள். அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோடை கால வெப்பத்தை தணிக்க இதமான குளியலுக்காக நீச்சல் தடாகங்களை கட்டியுள்ளார்கள். அரசாங்கம் நீச்சல் குளம் வைத்திருக்கும் வீடுகளுக்கு பிரத்தியேக வரி அறவிட்டு வருகின்றது. வருமான வரி அதிகாரிகள் கணக்கெடுத்த பொழுது 320 வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே நீச்சல்குளம் வைத்திருப்பதாக எழுதிக் கொடுத்தனர். ஆனால் செய்மதிப் படம் எடுத்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் மட்டும் 16974 நீச்சல் குளங்கள் காணப்பட்டன! (De Tijd, 8 மே 2010 ) முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு கட்டாமல் பதுக்கும் வரித்தொகை வருடமொன்றுக்கு 25 பில்லியன் யூரோக்கள்! இருந்தாலும் ஒழுங்காக வரி கட்டி வந்த உழைக்கும் மக்கள் தான் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க வேண்டுமாம்!!

கடன்கொடுத்த IMF, EU உத்தரவுகளுக்கு அடிபணிந்து உழைக்கும் மக்கள் தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்துக் கொள்கிறார்கள். போனசை, ஊதிய உயர்வை தியாகம் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான காலத்திலும், நாடு திவாலான போதும் பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? தம்மிடம் இருக்கும் பணத்தை சைப்ரஸ் வங்கிகளில் போட்டு முடக்கி வைக்கிறார்கள். அல்லது யூரோக்களாக வீட்டில் பதுக்கி வைக்கிறார்கள். கவனிக்கவும்: IMF, EU பணக்காரர்கள் பதுக்கிய கறுப்புப் பணத்தை அபகரிக்குமாறு கோரவில்லை. கட்டாமல் விட்ட வருமான வரித் தொகையை அறவிடுமாறு அரசுக்கு உத்தரவு போடவில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிக்குமாறு கேட்கவில்லை.

கிரேக்க உழைக்கும் மக்கள் நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க மறுப்பதும், தமது தலையில் கடன் சுமையை இறக்கி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் வியப்பில்லை. "நெருக்கடியால் ஏற்பட்ட செலவை பணக்காரர்கள் கட்ட வேண்டும்" எனக் கோருவது நியாயமானது. ஆனால் IMF, EU ஆகிய கடன் வழங்குனர்கள், நெருக்கடியை பயன்படுத்தி கிரேக்க அரசை மண்டியிட வைக்கின்றனர். நவ- லிபரலிச தாக்குதலை தொடுக்கின்றனர். "அனைத்து தீமைகளுக்கும் அரசே மூல காரணம்" என மந்திரம் ஓதுகின்றனர்.

*******************

கிரீஸ் நெருக்கடி தொடர்பான முன்னைய பதிவுகள் :
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி
ஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி
கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது
கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை