Showing posts with label புலம் பெயர்ந்த தமிழர்கள். Show all posts
Showing posts with label புலம் பெயர்ந்த தமிழர்கள். Show all posts

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

Sunday, April 12, 2020

கொரோனாவுக்கு பலியாகும் புலம்பெயர்ந்த உழைக்கும் வர்க்க தமிழர்கள்


இன்று நமக்குத் தேவை பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதம், குறுந் தமிழ்த்தேசிய இனவாதம் அல்ல!

லண்டன், பாரிஸ் நகரங்களில் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் பலர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். அன்றாடம் வரும் மரண அறிவித்தல்களை பார்த்தாலே தெரியும். பலர் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நகரங்களில் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத் தமிழர்கள், இன்றைய நெருக்கடி காலத்தில் அத்தியாவசிய சேவைகள் எனக் கருதப் படும் வேலைகளை செய்வதால் அவர்களால் வீட்டில் நிற்க முடியாது. கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலைமை. அந்த வேலைகளை வீட்டில் இருந்து கொண்டு செய்ய முடியாது. உதாரணத்திற்கு மருத்துவமனை சுத்திகரிப்பு வேலையை கம்பியூட்டரில் On line மூலம் செய்ய முடியாது.

பெரும்பாலான தமிழ் உழைக்கும் வர்க்கத்தினர் இலகுவில் கொரோனா தொற்றக் கூடிய மருத்துவ மனைகள், வயோதிபர் மடங்கள், (தமிழ்க்)கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், வெதுப்பகங்கள், உணவு பதனிடும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழிலாளர்களாக (பாட்டாளி வர்க்கமாக) வேலை செய்கின்றனர். இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள் தான் அத்தியாவசிய மக்கள் சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அவர்கள் யாரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. அது இங்கே பெரும்பாலும் வெள்ளையின ஐரோப்பியருக்கென ஒதுக்கப் பட்டுள்ள மத்தியதர வர்க்க தொழில்களில் தான் சாத்தியம். அப்படியான தொழில்களை செய்வோர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்க முடிகிறது.

இந்த வர்க்க முரண்பாடு சமூக வலைத்தலங்களில் பேசப் படுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றை பயன்படுத்துவோர் பெரும்பாலும் மத்தியதர வர்க்க தொழில் செய்வோர் என்பதால் தான். அவர்களுக்கு எங்களது உழைக்கும் வர்க்கத்தின் நெருக்கடி நிலைமை புரியாது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசதியான நடுத்தர வர்க்கத்தினர் தான் பிரதானமான சமூக வலைத்தள பயனாளிகள். அவர்கள் தமது வீடுகளில் படுத்துக் கிடந்து சோம்பல் முறித்த படியே அர்த்தமில்லாத கதைகளை பேசி அரட்டை அடிக்கின்றனர். இந்த நேரத்தில் அரசியல் பேசுவதை தவிர்ப்பது மட்டுமல்லாது, மக்களுக்கான அரசியல் பேசுவோரைக் கண்டால் ஏளனம் செய்கின்றனர். கேலி, கிண்டல் செய்து திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக இந்த பெருக்கடியை பயன்படுத்தி இராணுவ ஆட்சி கொண்டு வர விரும்பும் பாசிச அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

இதற்கு முன்னர் தீவிரமாக தமிழ்த் தேசிய அரசியல் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த (அ)யோக்கிய சிகாமணிகள் இப்போது புற்றுக்குள் சுருண்டு படுத்து விட்டனர். அவர்களுக்கு இனவாதத்தை விட்டால் உலகில் வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது என்பதால் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காலம் மலையேறி விட்டது. அது மீண்டும் திரும்பி வராது.

தமிழ் உழைக்கும் வர்க்க மக்களே! குறுகிய தமிழ் இன நலன் பேணும் இனவாத அரசியல் ஒரு போதும் உங்களுக்கான விடுதலையை பெற்றுத் தரப்போவதில்லை. அதற்கு பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அவசியம். இன்று உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு உழைக்கும் வர்க்க மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு, நீங்களும் முன்னரங்க போர்க்களத்தில் நிற்கிறீர்கள். இன்று உலகம் உங்களை தான் நாயகர்கள் என்று போற்றுகிறது. அந்த அந்தஸ்தை இழந்து விடாதீர்கள்.

நாளைக்கு நிலமை சீரானதும் "தமிழின ஒற்றுமை... இனமானம்... இன நலன்...." என்றெல்லாம் பேசிக் கொண்டு சிலர் வருவார்கள். அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். ஏனென்றால் நாளை வரப் போகும் பொருளாதார நெருக்கடியில் உங்கள் வேலை பறிபோகலாம். அதற்கு காரணமான முதலாளிகள் மீது உங்களுக்கு தார்மீகக் கோபம் எழலாம். அதை மடைமாற்றுவதற்கு இனத்தின் பெயரால் ஒன்று சேர சொல்வார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

கொரோனா வைரஸ் சில மாதங்களில் ஒழிக்கப் படலாம். ஆனால் முதலாளித்துவ வைரஸ் இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்திருக்கும். தமிழ் உழைக்கும் மக்களும் பங்கெடுக்கும் ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மூலமே முதலாளித்துவ வைரசை ஒழித்துக் கட்ட முடியும்.


Tuesday, December 20, 2016

தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(மூன்றாம் பாகம்)

 ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், வேலிப் பிரச்சினைக்கு பக்கத்து வீட்டுக் காரனுடன் சண்டை பிடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தம்முயிரை அர்ப்பணித்து போராட முன்வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. வேலியோரம் நட்ட மரத்தை சரித்து விட்டு, ஆறங்குலம் தள்ளி புதிய வேலி கட்டி, சிறு துண்டு காணியை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள் பலர் இருந்தனர். பக்கத்து வீட்டுக்காரன் அதைக் கண்டு பிடித்து, வாக்குவாதப் பட்டு, கத்தி எடுத்து வெட்டுப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தவர்கள் வேலிக்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், எல்லையோர நகரமான வவுனியாவில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தவர் மீது அவநம்பிக்கை எழக் காரணம் அவர்களது பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) மனப்பான்மை. கொழும்பில் வசித்த தமிழர்களில், அவர்கள்  பெரும்பாலும் அரசாங்க உத்தியோகங்களில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது மாதிரி, கொழும்பில் வேலை செய்து கொண்டு, மணி ஓடர் மூலம் ஊரில் இருந்த பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான வருமானமாக மணி ஓர்டர் பொருளாதாரம் இருந்தது. அந்த நேரம் கொழும்பில் வாழ்ந்த என்னுடைய அப்பா, அம்மாவும் அவர்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர்.

கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த பலர் கொழும்பு வாசிகளாகி விட்டனர். இலங்கையின் பொருளாதார மையத்தில் வீடெடுத்து, உத்தியோகம் பார்த்துக் கொண்டு, நகரத்தின் வசதிகளை அனுபவித்து வந்தனர். 1958, 1977, 1983 என்று அடுத்தடுத்து இனக்கலவரங்கள் நடந்த போதிலும் கொழும்பை விட்டு செல்லவில்லை. கலவரம் நடக்கும் பொழுது அகதிகளாக யாழ்ப்பாணம் சென்று, அதிக பட்சம் ஒரு மாதம் இருந்து விட்டு கொழும்புக்கு திரும்பிச் செல்வார்கள். 1983 க்குப் பின்னர் ஒரு பகுதியினர் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த விடயங்களை நான் எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், "சிங்களவனிடம் அடி வாங்கிய" ஒரு காரணத்தால் மட்டும் யாரும் போராட வருவதில்லை. இனக் கலவரக் காலத்தில் கொழும்பில் நடந்த படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சொத்தழிவுகளை அனுபவித்தவர்கள் கொழும்புத் தமிழர்கள். நாங்களும் அந்தக் கோரக் கதைகளை சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டு வளர்ந்தோம். இருப்பினும், ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட கொழும்புத் தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தது.

உண்மையில், ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டம் கொழும்பில் தான் தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தற்காப்பு நடவடிக்கையாக கூட எதுவும் நடக்கவில்லை. அவர்களில் யாரும் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் இணையவில்லை. அதற்கு மாறாக, தலைநகரில் தாம் ஏற்கனவே செய்து வந்த தொழில்களை தொடர்ந்தார்கள்.  

அதற்குக் காரணம் கொழும்புத் தமிழரின் பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை அன்றி வேறென்ன? ஆயுதப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன், வீட்டைத் துறந்து, பதவியை இழந்து, தலைமறைவு வாழ்க்கை வாழத் தயாராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசியத் தலைவர்களும் கொழும்பில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் கொழும்பில் தான் தமிழ்த் தேசிய கொள்கை வகுப்பது சம்பந்தமான கூட்டங்களை நடத்தினார்கள். நான் சிறுவனாக இருந்த காலங்களில், அந்தக் கூட்டங்களுக்கு அப்பாவுடன் சென்று வருவது வழக்கம். அதைத் தவிர, சைவ சமயத்தின் பேரில் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் சங்கங்களும் செயற்பட்டு வந்தன.

யாழ்ப்பாணத்தை விட, கொழும்பில் தான் தமிழ்க கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருவதாகவும், பக்தியோடு கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை இங்கே அதிகம் என்றும் அப்பாவும், அம்மாவும் அடிக்கடி சொல்லி வந்தனர். மதமும், கலாச்சாரமும் அந்தஸ்தின் அடையாளமாக இருப்பதை நான் கொழும்பில் கண்டுகொண்டேன்.

1983 இனக்கலவரத்திற்கு முன்னரே நாங்கள் கொழும்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். அது வரையும் கொழும்பு வாசிகளாக இருந்த நாங்கள், யாழ்ப்பாணவாசிகளாகி விட்டோம். எனது வாழ்க்கையில் நடந்த இந்த மாற்றம் தான், ஈழப் போராட்ட அரசியலிலும் நாட்டம் கொள்ள வைத்தது. நாங்கள் தொடர்ந்தும் கொழும்பில் வாழ்ந்திருந்தால், இன்று நானும் எனது நண்பர்கள் மாதிரி எதாவதொரு நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். அரசியல் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.

யாழ்ப்பாண வாழ்க்கையில், வர்க்கங்களுக்கு இடையில் ஊடாட முடிந்தது. எங்களது உறவினர்கள் மத்தியில் கூட இரண்டு வர்க்கங்களை காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிலர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்தனர். மறுபுறத்தில், பலர் கூலித் தொழிலாளர்களாக ஏழ்மையில் வாழ்ந்தனர். அப்போது பதினாறு வயதாகி விட்டதால் சமூகத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓய்வுநேரம் கூட எவ்வாறு மாறுபடுகின்றது என்பதைக் கண்கூடாக கண்டேன். மேட்டுக்குடியினர் ஓய்வு நேரத்தில் கூடியிருந்து, அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம், ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினர் எந்தவித அரசியல் ஆர்வமும் இன்றி வாழ்ந்தனர். ஒரு சிலர், ஓய்வு நேரத்தில் குடிப்பதும், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு பொருளாதாரச் சுரண்டல் பற்றிய அறிவு கிடையாது என்று மேட்டுக்குடியினர் நினைக்கின்றனர். அது தவறு. கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் நண்பர்களுடனான உரையாடலில் அவர்களே பல தகவல்களை சொன்னார்கள். தங்களை வேலைக்கு வைத்திருக்கும் தொழில் வழங்குனர்கள், எவ்வாறு குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதை அவர்கள் என்னிடம் விளக்கமாக கூறி இருக்கிறார்கள்.

ஒரு தடவை அப்பா நூலகத்தில் விற்கப் பட்ட பழைய நூல்களை கட்டுக் கட்டாக வாங்கி வந்திருந்தார். அவற்றிற்குள் சில மார்க்சியப் புத்தகங்களும் இருந்தன. லெனின் எழுதிய "நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" என்ற சிறிய நூலும் இருந்தது. அப்போதே அதை வாசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு இலகுவாக எழுதப் பட்டிருந்தது. அந்த நூலைக் கொண்டு சென்று, கூலித் தொழில் செய்யும் நண்பர்களுக்கு காட்டி விளங்கப் படுத்தினேன். லெனின் எழுதிய பல கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். அதற்குக் காரணம், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உள்ளது என்பது தானே?

இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்று சொல்லப் படுவதற்கு ஏற்றவாறு யாழ்ப்பாண பொருளாதார அமைப்பும் இருந்தது. பிரிட்டிஷ் காலனிய காலத்தில் கட்டப் பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையை தவிர வேறு தொழிற்துறைகள் அங்கே இல்லை. அதனால், இந்த இரண்டு தொழிலகங்களை தவிர வேறெங்கும் குறிப்பிட்டளவு தொழிலாளர் வர்க்கம் உருவாகி இருக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் மில்க்வைற் சவர்க்காரம் எல்லாக் கடைகளிலும் விற்பனை செய்யப் பட்டது. உடுப்புகள் கழுவுவதற்கு பாவிக்கப் பட்ட சன்லைட் சவர்க்காரம் ஒரு தென்னிலங்கை சிங்களத் தயாரிப்பு. அதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்து தமிழ் முதலாளியின் உள்ளூர் தயாரிப்பாக மில்க்வைற் இருந்தது. யாழ் குடாநாட்டைப் பொருத்தவரையில், பெருமளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையை கொண்டிருந்தாலும் அது தனி ஒரு முதலாளியால் நடத்தப் பட்டது.

நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நல்லூர்க் கோயிலுக்கு போவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பிக் குளிக்க வேண்டும். நல்லூர்க் கோயில் சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த படியால் நடந்து சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவோம். 

நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புற வீதி

நாங்கள் நல்லூர் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும், அங்கே மில்க்வைற் முதலாளியை அல்லது அவரது எடுபிடிகளை காணலாம். "சிவநெறிச் செல்வர்", "கொடை வள்ளல்", என்று தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக் கொண்ட மில்க்வைற் முதலாளி தனது பக்தியை பறைசாற்றிக் கொண்டிருப்பார். தேவாரம், திருவாசகம் அடங்கிய சிறு பிரசுரங்களை பக்தர்களுக்கு  இலவசமாக விநியோகித்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு பிரசுரத்திலும் "இது மில்க்வைற் அன்பளிப்பு" என்று தவறாமல் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும், பக்தர்களுக்கு தேவாரப் புத்தகம் அன்பளிப்பு செய்யும் சாட்டில், விளம்பரம் தேடும் மில்க்வைற் முதலாளியின் செயல் அருவருப்பை ஊட்டியது. அவரது கடவுள் பக்தி போலியானது என்பது புரிந்தது. யாழ் இந்துக்கல்லூரி சுற்றாடலில் தான் மில்க்வைற் தொழிற்சாலையும் அமைந்திருந்தது. அப்போது தமக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தகவலும் எமது காதுகளுக்கு எட்டியிருந்தது.

வீட்டில் தாயை பட்டினி போட்டு விட்டு மகன் அன்னதானம் செய்தானாம். அது மாதிரி, மில்க்வைற் முதலாளி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்தார். அதைக் கூட ஒழுங்காக கொடுப்பதில்லை. அவரது சவர்க்காரத் தொழில் நட்டத்தில் ஓடியதாக சாட்டுச் சொல்ல முடியாது. (அளவுக்கு மிஞ்சி பணம் சேர்ந்ததால் தானே "கொடை வள்ளல்" ஆனார்?) யாழ் குடாநாட்டு கடைகள் எங்கும், மில்க்வைற் சன்லைட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையானது. சிறுவயதில் பொதுவுடமைக் கருத்துக்களை இயல்பானதாக உள்வாங்கிக் கொள்வதற்கு மேற்படி அனுபவங்கள் காரணமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் முதலாளி தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உழைப்பை சுரண்டுவதும், அவ்வாறு திருடிய பணத்தில் பக்திமானாக கொடை வள்ளல் வேஷம் போடுவதும், சிறு பிள்ளைகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்கள். 

இதற்கெல்லாம் யாரும் மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களைப் படித்து பட்டம் வாங்கியிருக்கத் தேவையில்லை. படிப்பறிவில்லாத பாமரத் தமிழர்களுக்கும் இலகுவாகப் புரியும். ஆனால், ஒரு சில மெத்தப் படித்த தமிழ் அறிவுஜீவிகள் மட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளாத காரணம் என்ன? அவர்களுக்கு அந்தளவு அறிவு இல்லையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, December 15, 2016

வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(இரண்டாம் பாகம்)

வர்க்கம் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்கள் நேரடியாகப் பதிலளிக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், "உலகில் வர்க்கங்கள் இல்லாத ஒரே இனம் தமிழினம் மட்டும் தான்!" இன்னும் சில மேதாவிகள் இருக்கிறார்கள். "அதுவா? ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்று இரண்டு உண்டு." என்று புரட்டிப் போடுவார்கள்.

எனது பெற்றோர் ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து சுயமாக படித்து முன்னேறியவர்கள். கொழும்பில் அரசாங்க உத்தியோகமும் கிடைத்த படியால், பாட்டாளி வர்க்கத்தில் இருந்து கீழ் மத்திய தர வர்க்கத்தில் சேர்ந்து கொண்டவர்கள். அவர்களது உறவினர்கள் பலர் இன்னமும் ஏழைகளாக பாட்டாளி வர்க்கத்தினராக இருந்தனர். நாங்கள் உறவுக் காரர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் சமமாக மதித்து வாழ்ந்தாலும், சமூகத்தில் வர்க்க வேற்றுமை இருக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நான் நன்றாக படிக்கா விட்டால் வன்னியில் மாடு மேய்ப்பதற்கு கொண்டு சென்று விட்டு விடுவதாக, எனது தந்தை அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதென்ன பிரமாதம்? எல்லாப் பெற்றோரும் சொல்வது தானே என்று சிலர் "நியாயம்" கூறலாம். ஆனால், "மாடு மேய்ப்பது என்பது படிக்காதவர்கள் செய்யும் இளக்காரமான தொழில்" என்ற எண்ணம் ஏன் உருவானது? இது வர்க்கம் சார்ந்த கண்ணோட்டம் இல்லாமல் வேறென்ன?

இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் எழுபதுகள் ஒரு முக்கியமான அரசியல் காலகட்டம். ஜேவிபி கிளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தோற்றம் போன்றவை இலங்கையை உலுக்கிய காலம் அது. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த அரசாங்கத்தில் சில இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகித்தன. அந்த அரசாங்கம், இந்தியாவில் இருந்த மாதிரி தேசிய முதலாளிகளின் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தது. அன்று இலங்கையில் வாழ்ந்த ஒவ்வொரு பிரஜையின் வாழ்க்கையிலும் அது தாக்கம் செலுத்தியது.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் எந்த வகைப் பொருளாதாரத்தை பின்பற்றுவது என்பதில் குழப்பம் நிலவியது. ஏனெனில் அது வரையும் மிகப்பெரிய பிரிட்டிஷ் நிறுவனங்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரத்தில் உள்நாட்டு முதலாளிய வர்க்கமும் வளர்ந்திருந்தது. ஐம்பதுகளில் பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கும் திட்டம், சிறிமாவோ காலத்தில் பூரணப் படுத்தப் பட்டது.

அன்றைய காலத்தில் பலருக்கு தேசியவாதத்திற்கும், சோஷலிசத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை. இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொண்டார்கள். சிறிமாவோ சோஷலிசத்தின் பெயரில் தேசியவாதப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தினார். பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். உலகம் முழுவதும் நவ தாராளவாத பொருளாதாரத்தை பின்பற்றிய காலத்தில், வன்னியில் புலிகள் வைத்திருந்த "தமிழீழத்தில்" இருந்த தேசியவாதப் பொருளாதாரமும் அத்தகையது தான். (இன்று சிலர் அதை "வள்ளுவம்" புதிய பெயரில் அழைக்கிறார்கள்.) அது வேறு விடயம்.

அந்தக் காலகட்டத்தில், நாங்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டிய பகுதியில் புதிதாக கட்டப் பட்ட அண்டர்சன் தொடர் மாடிக் கட்டிடத்தில் குடியேறி இருந்தோம். எனது அப்பாவும், அம்மாவும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என்பதால் அங்கே வீடு கிடைத்திருந்தது. அவை அடிப்படை வசதிகளை கொண்டிருந்தாலும் மிகவும் சாதாரணமான வீடுகள். இருப்பினும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற அதிக சம்பளம் வாங்கும் உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு வசித்தனர்.

அன்று, மத்திய தர வர்க்கத்தினருக்கு இடையில், குறைந்த பட்சம் வீட்டு விடயத்தில் சமத்துவம் நிலவியது. அதே நேரம், அங்கு வாழ்ந்த எல்லோரும் வசதியானவர்களும் அல்ல. அதே மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்த எனது நண்பர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடியதையும் நேரில் கண்டிருக்கிறேன். அன்றைய காலத்தில் ஓரளவு சகோதரத்துவம் நிலவியது. ஒரே மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்த படியால் வர்க்க வேற்றுமை கடந்து பழகும் வாய்ப்புக் கிட்டியது. ஆனால், இன்று அந்த நிலைமை அடியோடு மாறி விட்டது.

இன்று வெள்ளவத்தையில் ஆடம்பரமான மாடிக் கட்டிடங்கள் வந்து விட்டன. மேற்குலக நாடுகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் அந்த வீடுகளில் உள்ளன. வர்த்தகர்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு குடியேறி வாழ்கிறார்கள். ஆங்கிலத்தில் "Gated community" என்று அழைக்கப் படும், சுற்றி வர மதில்கள் கட்டி, பாதுகாப்பு வேலிகள் போட்டு, சமூகத்தில் இருந்து தனித்து வாழும் பணக்காரர்களின் குடியிருப்புகள் அவை.

மத்திய தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்த அதே நாரஹேன்பிட்டியவில் தான் கொழும்பில் மிகப் பெரிய சேரியும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு, பள்ளிக்கூடம் செல்பவர்கள் அந்த சேரியைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதாவது, நாங்கள் குடியிருந்த அண்டர்சன் மாடிக் கட்டிடங்களுக்கு அருகில் ஏழைகள் குடியிருக்கும் சேரியும் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு எந்த வசதிகளும் இருக்கவில்லை.


அன்றிருந்த சிறிமாவோ அரசாங்கம், ஏழைகளை முன்னேற்றுவதற்கு எதையும் செய்யவில்லை. ஆனால், சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது. ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஊட்டச் சத்து குறைந்திருந்த படியால், "திரிபோஷா" என்ற மாவை அறிமுகம் செய்தது. பல தானியங்களை அரைத்து தயாரிக்கப் பட்ட, சத்தான உணவான திரிபோஷா இலவசமாகக் கொடுக்கப் பட்டது.

பெரும்பாலான ஏழைகள் சத்துணவான திரிபோஷா சாப்பிடவில்லை! அதாவது, எந்த நேரமும் சோறும் கறியும் சாப்பிடும் வாய்களுக்கு அது ருசிக்கவில்லை. அதனால், சேரிகளில் வாழும் ஏழைப் பிள்ளைகள், தமக்குக் கிடைக்கும் திரிபோஷா மாவை கொண்டு சென்று விற்பார்கள். அவர்கள் அந்தக் காசில் சத்துக் குறைந்த அரிசி வாங்கிச் சாப்பிடுவார்கள். எமது மாடிக் குடியிருப்புகளில் திரிபோஷா மாவை கொண்டு வந்து விற்கும் பிள்ளைகளிடம் அம்மா அதை வாங்குவார். ஒவ்வொரு நாளும் நாங்கள் அதைக் களி மாதிரிக் குழைத்து சாப்பிடுவோம். அதைச் சாப்பிடும் பொழுது என்னுள் ஒரு குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன்.

சிறிமாவோ காலத்தில் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது கடுமையாக கட்டுப் படுத்தப் பட்டது. தென்னிந்திய தமிழ் சினிமாப் படம் கூட, வருடத்தில் ஒன்றிரண்டு தான் வெளியானது. அதே நேரத்தில், ஈழத்து சினிமா வளர்ச்சி அடைந்தது. உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட சினிமாக்களை பார்த்து விட்டு விமர்சனம் செய்வது எமது பொழுதுபோக்காக இருந்தது. சில உள்ளூர் நடிகர்கள், பாடகர்கள் கூட எம்மத்தியில் பிரபலமாக இருந்தார்கள்.

"இலங்கை எம்.ஜி.ஆர்." என்று அழைக்கப் பட்ட வி.பி. கணேசன் நடித்த நான் உங்கள் தோழன் திரைப்படம் நூறு நாட்கள் ஓடியது. செங்கை ஆழியானின் பிரபல நாவலை படமாக்கிய வாடைக்காற்றும் நூறு நாட்கள் ஓடியது. ஈழத்து திரைப்பட வரலாற்றில் அது ஒரு பெரிய சாதனை.  அவற்றில் வந்த பாடல்கள் பலரின் வாய்களில் முணுமுணுக்கப் படுமளவிற்கு பிரபலமாக இருந்தன.

நான் உங்கள் தோழன், மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், வாடைக்காற்று வட மாகாணக் கரையோர மீனவர்களையும் முதன்மைப் படுத்தி எடுக்கப் பட்டிருந்தன. திரையுலக முதலாளிகளும் உழைக்கும் வர்க்கத்தை காட்சிப் படுத்தி தான் காசு சம்பாதிக்க வேண்டிய நிலைமை இருந்தது.

எத்தகைய பாவனைப் பொருளானாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தால், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப் பட்டது. இதனால் உள்நாட்டு சிங்கள முதலாளிகள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து தமிழ் விவசாயிகளும் பெருமளவு இலாபம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால், மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களும், மத்திய தர வர்க்க உழைப்பாளிகளும் நிறையக் கஷ்டப் பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. லக்சல, சலுசல போன்ற பெயர்களில், அரசாங்கம் நிறுவிய விநியோக மையங்களில் தான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். கிராமங்களில் கூட்டுறவு சங்கக் கடைகள் பிரதானமான விற்பனை மையங்களாக விளங்கின. இதனால், ஒரு பக்கம் பாவனையாளர்கள் கஷ்டப் பட்டாலும், மறுபக்கம் கூட்டுறவு இயக்கம் வளர்ந்தது.

உடைகளைப் பொறுத்த வரையில் உள்ளூர் உற்பத்தியான பருத்தியில் நெய்யப் பட்ட ஆடைகளைத் தான் அணிய வேண்டும். இன்றும் கூட இலங்கையில் எல்லாப் பெண்களும் வீடுகளில் அணியும் காற்றோட்டமான நீண்ட அங்கியும் அப்போது தான் பிரபலமானது. "பற்றிக்" என்ற பெயரிலான, இலங்கைக்கே உரிய தனித்துவமான ஆடைகள் தான் அந்தக் காலத்தில் நாகரிகம் (பேஷன்).

அந்தக் காலத்தில் ஆடம்பரமான உடைகள் அணிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பணக்காரர்கள் கூட அடக்கமாக நடந்து கொண்டார்கள். ஏற்றத்தாழ்வான சமுதாயத்தில், குறைந்த பட்சம் ஆடையிலாவது சமத்துவம் நிலவுகிறது என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அந்தக் காலத்தில் ஏறக்குறைய எல்லோரும் பருத்தி உடை அணிந்தனர். அதை மட்டும் தான் வாங்கக் கூடியதாக இருந்தது.

எனது பன்னிரண்டாவது பிறந்த நாள் அன்று, வழமை போல அப்பா ஒரு பருத்திச் சட்டை வாங்கித் தந்திருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வீட்டிற்கு வந்த ஒருவர், அதைக் கண்டு முகம் சுழித்தார். "பிறந்தநாளுக்கு பருத்திச் சட்டை அணிவார்களா? பட்டுச் சட்டை வாங்கவில்லையா?" என்று இளக்காரமாகக் கேட்டார். அப்போது அது வர்க்க வேறுபாட்டைக் குறிக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அதே நேரம், பருத்தி அணிவதை நான் ஒரு குறையாகக் கருதவும் இல்லை.

சுமாரான, கண்ணைக் கவரும் டிசைன் இல்லாத, இலகுவில் கசங்கக் கூடிய பருத்தி ஆடை, சமூகத்தில் ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினரின் உடையாக கருதப் பட்டது. தரமில்லா விட்டாலும் அது தான் மலிவானது. ஆனால், சிறிமாவோ காலத்தில் அந்நிய நாட்டு இறக்குமதி தடுக்கப் பட்டதால், எல்லோரும் உள்நாட்டு பருத்தி ஆடை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிச்சயமாக பணக்காரர்கள் அதை வரவேற்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் போல விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிய விரும்பினார்கள். 

பட்டு ஆடைகளின் விற்பனை முற்றாக ஒழிக்கப் பட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த எனது பெற்றோர் அந்தளவு ஆடம்பரமாக வாழ நினைக்கவில்லை. ஆனால், அவர்களது நண்பர்களும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. அதன் விளைவு தான், பன்னிரண்டாவது பிறந்தநாள் அன்று எனக்குக் கிடைத்த வர்க்க வேறுபாடு பற்றிய அறிவுரை.

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். எழுபதுகளின் இறுதியில் இலங்கையில் ஆட்சி மாறியது. பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனே நவ தாராளவாத பொருளாதாரத்தை கொண்டு வந்தார். இறக்குமதிக்கு விதிக்கப் பட்டிருந்த தடைகளை அகற்றி, தனியார்மயத்தை புகுத்தினார். அரச ஏகபோகம் நிலவிய போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வழித் தடங்களில், தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப் பட்டன.

எனது அப்பாவும் தனது சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு மினிவேன் வாங்கினார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வழித்தடத்தில் அது சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. சம்பளத்திற்கு அமர்த்தப் பட்ட சாரதி ஒருவர் அதை ஓடிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும். மினிவேன் ஓடப் பழகி விட்ட நான், ஒரு தடவை யாழ் நகரில் இருந்த கராஜிற்கு திருத்துவதற்கு கொண்டு சென்றேன். அப்போது வழியில் வந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னைக் கண்டு விட்டார்.

நான் மினிவேன் ஓடியதைக் கண்ட அவர், அதற்காக என்னைத் திட்டத் தொடங்கினார். "நீயெல்லாம் சாரதி வேலை பார்க்கக் கூடாது" என்று கடிந்து கொண்டார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. அதாவது, மினிவேன் சாரதி வேலை அடிமட்ட பாட்டாளி வர்க்க தொழிலாளிகளுக்கானது. மத்தியதர வர்க்கத்தினர் அந்த வேலை செய்வது தடுக்கப் பட்டுள்ளது. அதாவது, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதிக்கொரு தொழில் இருந்த மாதிரி, முதலாளித்துவ காலகட்டத்தில் வர்க்கத்திற்கு உரிய தொழில்கள் இருக்கின்றன.

பிற்காலத்தில், அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், நானாகவே உழைக்கும் வர்க்கத்தினர் செய்த வேலைகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. நாட்டுப்புற ஏழை மக்களை அரசியல் மயப் படுத்துவதற்காக, அவர்களது வீடுகளில் தங்கியிருந்து, அவர்கள் உண்ணும் உணவை உண்டு, அவர்களுடன் சில நாட்கள் வேலைக்கு சென்றதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதனால், வர்க்க அரசியலை நடைமுறையில் அறிந்து கொள்ள முடிந்தது.

(தொடரும்)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, December 14, 2016

வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!

"ஈழத் தமிழருக்கும் பொதுவுடமைக்கும் சம்பந்தம் இல்லை... அவர்களுக்கு தமிழ்த் தேசியத்தை தவிர வேறெந்த மண்ணும் தெரியாது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் நடந்த சம்பவங்களை எழுதி இருப்பதால், இதை எனது சுயசரிதையின் ஒரு பகுதியாகவும் கருதலாம்.

எனது பதினாறு வயது வரையில், அதாவது அறியாப் பருவத்தில், நானும் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத் தான் இருந்தேன். எனது தந்தை மிகவும் தீவிரமான தமிழ்த் தேசியவாதி. அவருக்கு கம்யூனிசம் பிடிக்காது. கம்யூனிஸ்டுகள், குறிப்பாக ஸ்டாலின் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தான் அவர் எனக்கு போதித்து வந்தார்.

எமது ஊரில் ஈரோஸ் எனும் ஈழப்புரட்சி அமைப்பிற்கு வேலை செய்தவர்கள் மூலமாகத் தான் மார்க்சியம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். அந்த இயக்கத்தினர் மீது பலதரப் பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் தான் என்னைப் போன்ற பலருக்கு மார்க்சியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.

"கார்ல் மார்க்ஸ், கம்யூனிசத்தை மறந்து போன இரண்டு தலைமுறைகள் வந்து விட்டன..." என்று ஒரு நண்பர் கூறினார். உண்மை தான். எண்பதுகளில் இருந்த என்னுடைய தலைமுறைக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. அது எங்களது தவறா அல்லது கல்வி அமைப்பின் தவறா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் கம்யூனிசத்திற்கு இடமில்லை. பாடநூல்களில் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப் பட்டிருந்தது. பாடசாலை ஆசிரியர்கள், குறிப்பாக சமூகக்கல்வி ஆசிரியர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கொள்கையை போதிக்கத் தயங்கவில்லை.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, சமூகவியல் பாடத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கம்யூனிசம் பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போது, வகுப்பறையில் யாராவது ஒரு மாணவர், தப்பித் தவறி கம்யூனிசம் பற்றி மேலும் விளக்குமாறு கேள்வி கேட்டால், ஆசிரியர்கள் எதிர்மறையான பதில்களை கூறி வந்தனர். அரசாங்கம் அவர்களை அப்படித் தான் பயிற்றுவித்தது. (விதிவிலக்காக மலையகத்தில் ஆசிரியர்கள் தான் பொதுவுடைமை கருத்துக்களை விதைத்தார்கள்.)

அந்த எதிர்மறையான பதில்கள் எல்லா மாணவர்களையும் திருப்திப் படுத்தவில்லை. எமது ஆசிரியர் சொன்ன விளக்கத்தில் இருந்தே கேள்வி கேட்டோம். "பொதுவுடைமைக் கொள்கை சமத்துவத்தை, பகிர்ந்துண்பதை வலியுறுத்துகிறது என்றால், அது எப்படி தவறாகும்?" இந்தக் கேள்விக்கு ஆசிரியரிடம் பதில் இருக்கவில்லை. அவரே குழம்பிப் போனார்.

வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கேட்டேன். "ஸ்டாலின் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை...அதற்குப் பலியான இலட்சக்கணக்கான மக்கள்..." என்றெல்லாம் விளக்கம் கூறத் தொடங்கினார். அவரது உலகப் பார்வை, மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துடன் பெரிதும் ஒத்திருந்தது. எனது தந்தையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எனது தந்தை ஒரு பின்தங்கிய கிராமத்தில், ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தவர். ஆனால், கடின உழைப்பின் மூலம் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பதன் மூலம் முன்னேறிய பிரிவில் ஒருவராக இருந்தார்.

எனது தந்தையின் காலத்தில், அவர்களது முன்னேற்றத்திற்கு உதவிய முதலாளித்துவ சமூக அமைப்பு சிறந்தது என்று அவர் தீர்மானித்ததில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்தில், தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள, எனது தந்தையின் பிறந்த ஊரான சரசாலை, இன்றைக்கும் அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய கிராமமாக இருக்கிறது. என்றும் மாறாத ஏழ்மை மட்டுமல்ல, ஆரம்பப் பாடசாலையைக் கூட தாண்டாத பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட கிராமம். ஐம்பது, அல்லது எழுபது வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இலங்கை அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய பொருளாதார நாடு. இது "நடைமுறைக்கு உதவாத மார்க்சியக் கண்ணோட்டம்" அல்ல. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணக் கிராமங்களில் அதை நேரடியாகத் தரிசிக்க முடியும். பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருந்த உயர் சாதி நிலவுடமையாளர்கள், முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்தனர். 

முதலாளித்துவம் கொண்டு வரும் வசதி வாய்ப்புகள், தம்மால் ஒடுக்கப் பட்ட சமூகப் பிரிவினர் முன்னேற வழிவகுத்து விடும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த எனது அப்பாவும், முதலாளித்துவத்தை முற்போக்கானதாக கருதியதில் வியப்பில்லை. அவர்களது அன்றைய சமூக மாற்றத்திற்கு அமைவாக தமிழ்த் தேசிய இயக்கமும் தோன்றியிருந்தது.

பலர் நினைப்பதற்கு மாறாக, தமிழ்த் தேசிய இயக்கம் ஈழத்திற்கு வெளியே கொழும்பு நகரில் தான் வளர்ந்து வந்தது. யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் அதற்கான வாய்ப்புகளை வழங்கி இருக்கவில்லை. முதலாவது தமிழ்க் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், நிலவுடைமையாளர்கள், உயர் சாதியினரின் கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. 

உண்மையில், அன்று இடதுசாரிக் கட்சிகள் மட்டும் தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தின! தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த தமிழரசுக் கட்சிக்கு சவாலாக இடதுசாரிக் கட்சிகள் இருந்தன. அந்த சவாலை எதிர்கொண்டு, இடதுசாரி ஆதரவுத் தளத்தை உடைப்பதற்கு தமிழ்த் தேசியத்தை விட்டால் வேறு வழி இருக்கவில்லை.

"தமிழருக்குள் ஒற்றுமை இல்லை.... தமிழராக ஒன்று படுவோம்..." போன்ற கோஷங்கள் தமிழரசுக் கட்சிக் காலத்தில் எழுப்பப் பட்டன. பிற்காலத்தில் தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும், குறிப்பிட்ட காலம் இந்தியத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சி உருவானது. அதன் மூலம் அவர்களாக "தமிழரின் ஒற்றுமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இந்தக் காலகட்டத்தில் தான், அதாவது எழுபதுகளில், கொழும்பில் பணியாற்றிய எனது தந்தையும் தமிழ்த் தேசிய அரசியலை தீவிரமாகப் பின்பற்றி வந்தார்.

கொழும்பு நகரில் எந்த நேரமும் கலவரம் நடக்கலாம், தமிழர்கள் கொல்லப் படலாம் என்ற அச்சம் நிலவியது. அப்போது "தமிழரின் தாயகமான" யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வாழலாம் என்று எனது பெற்றோர் முடிவெடுத்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயரும் கால இடைவெளியில், என்னை யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்து விட்டனர். அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தேன். சுமார் ஒரு வருட காலம் விடுதியில் தங்கியிருந்த படியால், தமிழ்த் தேசிய அரசியலையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.


அன்றிலிருந்து இன்று வரையில், யாழ் இந்துக் கல்லூரி ஒரு "தமிழ்த் தேசியப் பாடசாலை" என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நான் படித்த காலத்தில், அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பொதுக் கூட்டங்கள் நடக்கும். மாணவர்கள் அதைச் சென்று பார்வையிடுவதற்கு, பள்ளிக்கூட நிர்வாகம் ஊக்குவித்தது. "தமிழினத் தளபதி" அமிர்தலிங்கம், "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆகியோர் அங்கு உரையாற்றினார்கள். நாங்களும் அதைக் கேட்டு கைதட்டி இரசித்தோம்.

கூட்டணியினரின் உணர்ச்சிகரமான உரைகளால் ஆகர்சிக்கப் பட்ட நானும், தமிழ்த் தேசியவாதக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவற்றை எனது டயறியில் பார்த்த அப்பா, இதையெல்லாம் வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என்றார். அந்தளவுக்கு எனது கவிதைகளும் "உணர்ச்சிகரமான தமிழ் இன உணர்வு மிக்க" கவிதைகளாக இருந்தன. அப்போது எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தான் இருக்கும். அரசியலை பகுத்தறியும் பக்குவமற்ற அந்த வயதில், உணர்ச்சிகரமான தமிழ்த் தேசியம் சிறந்த கொள்கை என்று நம்பியதில் வியப்பில்லை.

பதினாறு வயதான பின்னர், எல்லா வகையான நூல்களையும் வாசித்து அறியும் அளவிற்கு பக்குவம் வந்திருந்தது. ஆள் வளர்ந்த படியால் அறிவும் வளர்ந்திருந்தது. அப்போதே ஆடம்பரமான கொண்டாட்டங்களும், கோயில் திருவிழாக்களும் அந்நியத் தன்மையை உணர்த்தின. சூரன் போர் போன்ற திருவிழாக்களுக்கு குடும்பம் முழுவதும் போனாலும், நான் மட்டும் வீட்டில் தனித்திருந்தேன். காலப்போக்கில் வெள்ளிக்கிழமை கோயில்களுக்கு போவதையும் குறைத்துக் கொண்டேன். எமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு சாமியைக் கும்பிடுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை நானாகவே அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

நூலகங்களில் பெரியாரின் பகுத்தறிவு நூல்கள் இருந்தன. பெரியார் தனது கடவுள் மறுப்புக் கொள்கையை மிகவும் எளிமையாக எழுதி இருந்தார். அதனால் வாசித்து அறிந்து கொள்ளவும் இலகுவாக இருந்தது. பெரியாரின் தர்க்க ரீதியான வாதங்கள் சரியெனப் பட்டன. அதைப் பற்றி வீட்டில் விவாதித்த பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஆனால், எனக்கு அவை சரியாகப் பட்டன. ஒவ்வொரு நாளும் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடும் நேரம் நான் மட்டும் ஒதுங்கி இருந்தேன். கோயிலுக்கு போவதையும் தவிர்த்து வந்தேன்.

எனது பெற்றோர் மதப்பற்று அதிகமில்லாத இந்துக்களாக (அல்லது சைவர்களாக) வாழ்ந்தவர்கள். விரதம் பிடிப்பது போன்ற பல மத சம்பிரதாயங்களை, அவர்களே தவறென நையாண்டி செய்தனர். அவர்கள் பின்பற்ற விரும்பிய இந்து மதம் விஞ்ஞான பூர்வமான மார்க்கமாக இருந்தது. ஆகவே, என்னுடைய கோயிலுக்கு போகாத, சாமி கும்பிடாத பழக்கத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது. சிலநேரம் நான் கோயில் திருவிழாவுக்கு சென்றால், "அது பக்தியால் அல்ல..." என்று அம்மாவே கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது.

1983 ம் ஆண்டிற்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியதொரு அரசியல் சூறாவளி வீசியது. அனேகமாக எல்லா இளைஞர்கள் மத்தியிலும் ஈழப் போராட்டம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட வேண்டும். 

அரசியல் என்றவுடன், "ஈழத் தமிழர்கள் எல்லோரும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" என்ற தவறான எண்ணம் நிலவுகின்றது. ஈழத் தமிழ் தேசியவாதிகள் வேண்டுமென்றே அப்படி ஒரு கருத்துருவாக்கத்தை கொண்டு வந்திருக்கலாம். அது அவர்களது விருப்பம். ஆனால், தமிழ் நாட்டினரும், சிங்கள முற்போக்காளர்களும் கூட அப்படி நினைத்துக் கொள்வது வேடிக்கையானது. நிச்சயமாக அது தவறு தான்.

யாழ் நகரில் உள்ள பூபாலசிங்கம் புத்தக சாலையில் மார்க்சிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. 1982 ம் ஆண்டில் கூட, அவற்றின் விற்பனை குறைவாக இருந்தது. ஆனால், ஈழப்போரின் ஆரம்பமாக கருதப் படும் 1983 ம் ஆண்டிற்குப் பின்னர் கடையில் ஒரு நூல் கூட மிச்சமில்லாமல் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. நம்ப முடியுமா?


மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவல் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகங்களில் அது எப்போதும் இரவல் கொடுக்கப் பட்டு வந்தது. அத்தோடு ராகுல சங்கிருத்தியான் எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலும் அதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்டன. நானே மாதக் கணக்காக காத்திருந்து தான் அந்த நூல்களை வாங்கி வாசித்தேன். அந்தளவுக்கு யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் மார்க்சியம் குறித்த தேடல் பல மடங்கு அதிகரித்திருந்தது.

(தொடரும்)

Monday, February 15, 2016

No Sex please! உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்!


"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!"

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல "தமிழ் தேசிய"(?) இணையத் தளமான தமிழ்வின் (லங்காஸ்ரீ) இது போன்ற செய்திகளின் மூலம் தானும் ஒரு "காலாச்சாரக் காவலர்" என்று காட்டிக் கொண்டுள்ளது. 

தமிழ்வின் காதலர் தின ஸ்பெஷல் செய்தி போடுவதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான், கொழும்பு நகரில் மேற்கத்திய பாடகர் இக்லேசியாஸ்ஸின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது, பதின்ம வயது இலங்கை மகளிர் தமது உள்ளாடைகளை கழற்றி வீசினார்கள். அதையிட்டு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, தானும் ஒரு கலாச்சாரக் காவலர் போன்று காட்டிக் கொண்டார். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், கூடவே முஸ்லிம் மதவாதிகளும் ஒன்று சேரும் புள்ளியும் இது (கலாச்சாரம்) தான்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் தமிழ்வின் இணையத்தளம், தனது நாட்டில் வாழும் எத்தனை பெண்கள் கன்னித் தன்மை இழந்துள்ளனர் என்று ஆய்வு செய்து பார்த்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யப் போனால் தனது குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகள் உருவாகும் என்பது, தமிழ்வின் இணையத் தள நிர்வாகிக்கு தெரியாதா? மஞ்சள் பத்திரிகை மாதிரி "இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!" என்று இலங்கையில் வாழும் கன்னிப் பெண்களின் கற்புக்காக கண்ணீர் வடிக்கின்றது.

இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் தான் லங்காஸ்ரீ நடத்துகிறார். தனது அண்ணனின் தேர்தல் வெற்றிக்காக இலவச விளம்பரம் செய்து வந்தார். அண்ணனும், தம்பியும் தமிழ் தேசியம் பேசியே சம்பாதிக்கத் தெரிந்தவர்கள். "உலகில் அதி புத்திசாலியான மூன்று இனங்கள் மூன்றும் ஆங்கில "J" எழுத்தில் தொடங்குகின்றன. அவை முறையே "ஜப்பானிஸ் (ஜப்பானியர்கள்), ஜூஸ் (யூதர்கள்), ஜாப்பானிஸ் (யாழ்ப்பாணிகள்) என்று பேசி மக்களை கவரத் தெரிந்தவர் ஸ்ரீதரன். அவரது தம்பி, சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டே, தமிழர்கள் யூதர்களை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறி வந்தார்.

தங்களை மட்டுமே புத்திசாலிகள் என்று கருதிக் கொள்ளும் யூத சியோனிஸ்டுகள், இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய பின்னர் யூதர்கள் மட்டுமே பிரஜைகளாக இருக்கலாம் என்று சட்டம் இயற்றினார்கள். அதாவது, விபச்சாரிகள் கூட யூத இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் யூத தேசியவாதம். ஆனாலும் ஒரு பிரச்சினை இருந்தது. 

யூதப் பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று தேசியவாதப் பெருமிதம் பேசிக் கொண்டே பாலியல் தொழிலை அனுமதிக்கலாமா? அதனால், ரஷ்யாவில் இருந்து குடியேறிய பாலியல் தொழிலாளர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலில் வசிப்பவர்களை கேட்டுப் பாருங்கள். "நதாஷா"(Natasha) என்ற ரஷ்யப் பெயர் அங்கே பாலியல் தொழிலாளர்களை குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. அந்தப் பெண்களும் யூதர்கள் தான் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

யூதர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ்க் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருப்பார்களா? "காதலர் தினத்தன்று யுவதிகள் கன்னித் தன்மையை இழக்கிறார்கள்...", "பத்துப் பேருடன் படுத்தெழும்பிய பள்ளிக்கூட மாணவி..." என்று செய்திகளை வெளியிட்டு, இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்கள் கற்புக் கெடாமல் வாழ வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னரான பாலுறவை நிராகரிக்கும் பழமைவாதிகளின் கூச்சல் இணையத் தளத்தில் எதிரொலிக்கிறது.

"இதற்குத் தான் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டுமென்பது! தமிழீழத்தில் மணமுறிவு கிடையாது, பாலியல் தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், தகாத உறவுகளுக்கு இடமேயில்லை. பெண்களின் கன்னித்தன்மை பாதுகாக்கப் படும்." புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இன உணர்வாளர்கள், இப்படி பிரச்சாரம் செய்து தான் தமிழீழத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்கள். நல்லது, ஒருவேளை தமிழீழம் கிடைத்தால், அங்கே குடும்பத்துடன் சென்று குடியேற தயாராக இருக்கிறார்களா? 

கலாச்சாரக் காவலர்களின் போதனைகள் இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. அது காலங் காலமாக நடந்து வருகின்றது. ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில், ஆயுத முனையில் கலாச்சாரம் போதிக்கப் பட்டது. எண்பதுகளில் வந்த தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் டிஸ்கோ நடனம் பிரபலமாகியது. இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டிலும் அந்தக் கலாச்சாரம் பரவியது. 

ஊருக்கு ஊர் மேடைகள் போட்டு, டிஸ்கோ நடனம் ஆடினார்கள். தமிழகத்து பேபி ஷாலினி மாதிரி பாவனை செய்யும், ஈழத்து பேபி ஷாலினியும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தார். பிறகென்ன? ஒரு போராளி இயக்கம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, டிஸ்கோ நடன விழாக்கள் அடியோடு நிறுத்தப் பட்டன. "ஈழத்து பேபி ஷாலினி" இந்தியாவுக்கு அகதியாக சென்றார்.

எண்பதுகளில் தான் இலங்கையில் தொலைக்காட்சிப் பெட்டிகளும், வீடியோ கசெட்டுகளும் அறிமுகமாகின. எல்லோரிடமும் வாங்கிப் பாவிக்க வசதியில்லாத நிலையில், சினிமாப் படங்களை வாடகைக்கு எடுத்து பார்த்தார்கள். ஊருக்கு ஊர் வீடியோ கசெட் வாடைக்கு விடும் கடைகள் முளைத்தன. வீடியோக் கடைக்காரர்கள், சினிமாப் படங்களுடன், ஆபாசப் (போர்னோகிராபி) படங்களையும் வாடகைக்கு விட்டு வந்தார்கள்.

கலாச்சாரக் காவலர்கள் ஆயுதங்களுடன் திரிந்த காலகட்டம் அது. ஆபாசப் பட விநியோகம் பற்றிக் கேள்விப் பட்டால் சும்மா இருப்பார்களா? எமது ஊரில் இருந்த வீடியோக் கடையை டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த வீடியோ காசெட்டுகளை எல்லாம் பறிமுதல் செய்து கடையை மூடச் செய்தார்கள். ஆபாசப் படங்கள் வாடகைக்கு விட்டதற்கு, அது தான் தண்டனையாம். 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் மோதல் வெடித்தது. கல்வியங்காடு எனுமிடத்தில் இருந்த டெலோ தலைமை முகாமை கைப்பற்றிய புலிகள், அங்கிருந்து நிறைய ஆபாசப் படக் காசெட்டுகளை கைப்பற்றினார்களாம். இந்தத் தகவலை அப்போது புலிகள் தான் அறிவித்தனர்.

எண்பதுகளில் தான் யாழ் நகரில் நவீன சந்தை கட்டப் பட்டது. அப்போது யாழ் குடாநாட்டிலேயே பெரிய வர்த்தக மையமாக திகழ்ந்த நவீன சந்தைப் பகுதியில், பாலியல் தொழிலாளர்களும் அதிகரித்தனர். அவர்கள் தமது வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு அது வசதியாக அமைந்து விட்டது. தமிழீழத்திற்கான போராட்டம் சிங்கள இராணுவத்திற்கு எதிராக மட்டுமல்லாது, சமூகவிரோதிகளுக்கும் எதிராக நடந்து கொண்டிருந்த காலம் அது. போராளி இயக்கங்கள் பாலியல் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று மின் கம்பத்தில் கட்டி விட்டன. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் எங்குமே பாலியல் தொழிலாளர்களை காணக் கிடைக்கவில்லை.

கன்னித் தன்மை இழப்பு, தகாத உறவு, பாலியல் தொழில், இவை மட்டும் தான் கலாச்சாரக் காவலர்களின் முக்கியமான பிரச்சினையாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில், அரச அங்கீகாரம் பெற்ற மதுபான சாலைகள் மிகவும் அரிதாக காணப் பட்டன. ஒன்றிரண்டு யாழ்நகர் போன்ற இடங்களில் இருந்தன. அனேகமாக கள்ளுக் கடைகள் தான் குடி மக்களின் ஒரேயொரு புகலிடம். ஊருக்கு ஊர் தவறணைகள் இருந்தன. 

அன்றிருந்த எல்லா ஈழ விடுதலை இயக்கங்களும் கலாச்சாரத்தை பாதுகாக்க கிளம்பிய நேரம், NLFT என்ற இயக்கம் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தது. பல ஊர்களில் இருந்த கள்ளுத் தவறணைகளை தீயிட்டுக் கொளுத்தியது. எரித்து விட்டு அதற்கு விளக்கம் சொல்லி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தது. இதன் மூலம் மது விலக்கை அமுல்படுத்துகிறார்களாம்.

தற்போது மேற்கத்திய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரே கவலை. வட இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்து விட்டன. இதனால், தமிழர்கள் குடிகாரர்களாகி வருகிறார்கள் என்று கவலைப் படுகிறார்கள். புலிகள் வைத்திருந்த de facto தமிழீழத்தில் கூட, கள்ளுத் தவறணைகள் இயங்கின. பனையில் இருந்து எடுக்கப் பட்ட வடி சாராயம் விற்கப் பட்டது. சாராயம் வடிக்கும் தொழிற்சாலையை புலிகளே நடத்தினார்கள்.

அது சரி, சுதந்திரமான மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் குடிப்பதில்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அவர்கள் ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஒன்று கலந்து விட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பாக்கியம் பெற்ற தமிழ் ஆண்கள் மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களும் குடித்து விட்டு கூத்தடிக்கலாம். இதெல்லாம் இங்கே சாதாரணமான விடயம் என்று சொல்வார்கள். ஆனால், இலங்கையில் வாழும் "பக்குவப் படாத" தமிழ் மக்களுக்கு தான் இந்த அறிவுரை எல்லாம்.

எதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு "கலாச்சாரம் பற்றி பாடம்" எடுக்கிறார்கள்? புலம்பெயர்ந்து சென்றவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். விவசாய உற்பத்தி குறைவாகவுள்ள யாழ் தீபகற்பத்தில் இருந்து, முன்னொரு காலத்தில் கொழும்பு சென்று உத்தியோகம் பார்த்தார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் செல்வச் செழிப்பு ஏற்பட்டது. அப்போது அதை "மணியோடர் பொருளாதாரம்" என்று சொன்னார்கள்.

ஈழப் போர் தொடங்கிய பின்னர், ஏராளமான இளம் வயதினர், புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து அனுப்பிய பணத்தில் யாழ் குடாநாட்டின் செல்வம் மேலும் வளர்ந்தது. பெரும்பாலும் பணம் அனுப்புவோர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், காலப்போக்கில் அது ஒரு சமூகப் பிரிவினையை உண்டாக்கியது. ஊரில் இருக்கும் மக்கள் எல்லோரும் தாம் அனுப்பும் அந்நிய செலாவணியில் வசதியாக வாழ்வதாக புலம்பெயர்ந்தோர் நினைத்துக் கொண்டனர். அது ஓரளவு உண்மையும் கூட. ஆனால், வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிராத நிறைய குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை.

இதற்கிடையே களத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களே பெருமளவு நிதியுதவி செய்திருந்தனர். ஆனால், புலிகள் முற்றுமுழுதாக வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே தங்கியிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி சட்டபூர்வமாக, சிலநேரம் சட்டவிரோதமாக நடந்த வணிக நிறுவனங்களில் இருந்தும் கிடைத்து வந்தது. இருப்பினும், தங்களது பணத்தில் தான் போராட்டம் நடப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இறுமாப்புக் கொண்டிருந்தனர்.

இது ஒரு வகையில், பணக்கார கொடையாளி நாடுகளுக்கும், கடன் வாங்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான உறவு போன்றது. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி போன்றன, பல நிபந்தனைகளை விதிப்பதில்லையா? அதே மாதிரித் தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் நடந்து கொள்கிறார்கள். பணம் கொடுப்பதால் தமக்கு அறிவுரை கூறும் அதிகாரம் வந்து விடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் கலாச்சார சீர்கேடுகளை தடுத்து அவர்களை நல்வழிப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

Thursday, January 15, 2015

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,

இலங்கை அரசும், பிரெஞ்சு அரசும் ஒன்றா? இந்தக் கேள்வியே சிறுபிள்ளைத் தனமானது. அரசு என்பதே அடிப்படையில் ஓர் அடக்குமுறைக் கருவி தான். இலங்கையிலும், பிரான்சிலும் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படும். இரண்டு நாடுகளிலும், அரசுக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினரால் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது.

பிரான்ஸ் போன்ற மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள் உருவாக்கியது தான், இலங்கை அரச நிர்வாகம். இன்றைக்கும் ஆங்கிலேயர் எழுதிய அதே யாப்பு சில மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. அரசு நிர்வாகம், இராணுவம், பொருளாதாரக் கட்டமைப்புகள் யாவும் பிரிட்டனை பின்பற்றித் தான் அமைந்துள்ளன. 

1978 ம் ஆண்டு உருவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்த சட்டத் திருத்தம், பிரான்ஸ் நாட்டை பின்பற்றித் தான் எழுதப் பட்டது. பத்தாண்டுகள் ஈழப்போருக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாரிஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரான்சில் இன்றைக்கும் அது ஒரு மேட்டுக்குடியினரின் பல்கலைக்கழகம் என்றே அறியப் படுகின்றது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடப்பதால் அவை ஜனநாயக நாடுகள் என்று தான் மேற்கத்திய அரசுக்கள் கூறிக் கொள்கின்றன. இடையிடையே மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் வைப்பதும், அந்த நாடுகளின் அரசுத் தலைவர்களை மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருவதற்காகத் தான். 

எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நாடுகள் கடைசியில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து விடும். அதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த புலி ஆதரவாளரிடம் விசாரித்துப் பாருங்கள். "ஈழப்போரின் இறுதியில், பிரான்ஸ் உட்பட, பத்து உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன...." என்று அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியில் விளங்கப் படுத்துவார்கள்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சில் வாழும் இஸ்லாமிய அல்ஜீரியர்களுக்கு எதிரான இனக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதுவே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அங்கே ஒரு கலவரம் இடம்பெற்றிருக்கும். ஆகையினால், பிரெஞ்சு ஐரோப்பியர்கள் "நாகரிகமைந்து விட்டனர்" என்று கூற முடியாது. உண்மையில், முஸ்லிம் எதிர்ப்பு இனக்கலவரம், உலகத்தின் முன்னிலையில் பிரான்சை தலைகுனிய வைத்திருக்கும். 

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், சுமார்  நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால், நிச்சயமாக அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் ஒன்று நடந்திருக்கும். இரண்டாம் உலகப்போர் வரையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடந்துள்ளன. யூதர்கள் அதனை "Pogrom" என்று அழைக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டில் வாழும் பிரெஞ்சுக் காரர்கள், தாங்கள் நாகரிகமடைந்து விட்டதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த நிலைமை விரைவில் மாறலாம். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு இனவெறியர் மாரி லெ பென் தலைமையிலான FN கட்சியின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிரான்சில் ஒரு இனக்கலவரம் நடந்தால், அது அல்ஜீரியர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கப் போவதில்லை. பிரான்சில் வாழும் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்.

பிரான்ஸ் ஏற்கனவே அல்ஜீரிய சிறுபான்மை இனத்தவரை படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அல்ஜீரியாவை காலனிப் படுத்திய பிரான்ஸ், அதனை தனது நாட்டின் மாகாணமாக ஆக்கியிருந்தது. பாரிஸ் நகரில் உள்ள பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு, அல்ஜீரியாவில் இருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டனர். மேலும், அல்ஜீரியாவில் பத்து இலட்சத்திற்கும் குறையாத பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றப் பட்டிருந்தனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வடக்கு இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள், சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் குடியேறி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி, அல்ஜீரியர்கள் பாரிஸ் நகரில் குடியேறி இருந்தனர். 1961 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் வாழ்ந்த அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த பிரெஞ்சுப் போலீசார் தாக்கியதில், குறைந்தது 600 அல்ஜீரிய பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இனவெறிப் போலீசார் பலரை செயின் நதிக்குள் வீசிக் கொன்றார்கள். அவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

பாரிஸ் நகரில் நடந்த அல்ஜீரிய இனப் படுகொலை, 1977 ம் ஆண்டு கொழும்பு நகரில் நடந்த தமிழ் இனப் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. இலங்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977 ம் ஆண்டு, "தமிழீழம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து" வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. "உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா?" என்று கேட்டுத் தான், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் தமிழர்களை கொன்றார்கள்.

அதே மாதிரி, அல்ஜீரியாவில் FLN கட்சி, 1961 ம் ஆண்டு, அல்ஜீரியா தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை நிறைவேற்றி இருந்தது. 1961 ம் ஆண்டு, பாரிஸ் இனப்படுகொலையின் போதும், "உங்களுக்கு அல்ஜீரியா என்ற தனி நாடு வேண்டுமா?" என்று கேட்டுத் தான், பிரெஞ்சு இனவெறியர்கள் அல்ஜீரியர்களை கொன்றார்கள்.

இலங்கையிலும், பிரான்சிலும் நடந்த சம்பவங்கள் ஒன்று தான், இனப் பிரச்சினையும் ஒன்று தான். பிரெஞ்சு அரசும், இலங்கை அரசும் ஒரே மாதிரித் தான் சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளன. ஆயினும், ஒடுக்கப்பட்ட இனங்களான அல்ஜீரியர்களும், ஈழத் தமிழர்களும் தமக்குள் ஒன்று சேராத காரணம் என்ன? ஏன் பிரான்ஸ், சிறிலங்கா அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகிறீர்கள்?

யாழ்பாணத்தில் புலிகள் 13 சிங்களப் படையினரைக் கொன்ற பின்னர் தான், அரச அடக்குமுறைகள் அதிகரித்தன. இலங்கையில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் வரையில், அங்கேயும் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

எழுபதுகளில் மெல்ல மெல்ல பத்திரிகை தணிக்கைகளை அமுல் படுத்தி வந்த அரசு, எண்பதுகளில் ஒரேயடியாக சட்டம் போட்டு தடை செய்தது. கொடுங்கோல் ஆட்சி வந்தது. பிரிவினை கோருவதும், அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமாக்கப் பட்டது. 

பிரான்சிலும் அதே கதை தான் நடக்கிறது. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டத்தை காரணமாகக் காட்டி, மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டு வருகின்றது. உலகிலேயே முதல் நாடாக, பிரான்சில் தான் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டன.

இலங்கையில் பிரிவினை கோருவதும், ஆதரிப்பதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டதைப் போன்று, பிரான்சில் யூதர்களுக்கு, யூத மதத்திற்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இலங்கையை மாதிரி, பிரான்சிலும் "பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்" சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

எது பயங்கரவாத ஆதரவுக் கருத்து என்பதை, இரண்டு நாடுகளிலும் சட்டம் சரியாக வரையறுக்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது பயங்கரவாதம் ஆகலாம். அதே மாதிரி, பிரான்சில் தற்போது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது பயங்கரவாதமாக கருதப் படலாம். அது பின்னர் விரிவுபடுத்தப் பட்டு, எதிர்காலத்தில் பிரான்சில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதே பயங்கரவாதம் என்று கூறும் நிலை வரலாம்.

எதற்காக, பிரான்சில் வாழும் தமிழர்கள் பலர், அரச அடக்குமுறைகள் குறித்து எந்த உணர்வுமற்று இருக்கிறார்கள்? எந்த அரசும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் ஒரே நேரத்தில் அடக்குவதில்லை. இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மை இனம் அடக்கப் பட்ட நேரம், சிறிலங்கா அரசு முஸ்லிம் சிறுபான்மை இனத்துடன் இணக்கமாக நடந்து கொண்டது. முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, நன்மதிப்பை சம்பாதித்து இருந்தது.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், "தமிழீழம் கேட்கும் தமிழர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே...?" என்று திருப்திப் பட்டனர். அதே தான் பிரான்சிலும் நடக்கிறது.

பிரான்சில் வாழும் இந்து- தமிழர்கள், இலங்கை முஸ்லிம்களின் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். "இஸ்லாமிய கடும்போக்கு ஷரியா சட்டம் கேட்பவர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே...?" என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.

மேலும், இந்தக் காலத்தில், இன, மத உணர்வுகளுக்கு அப்பால் மக்களிடையே வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் இருப்பதும், ஒடுக்கும் அரசுக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இலங்கையில், குறிப்பாக கொழும்பில் ஏராளமான மாலைதீவு அகதிகள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு ஆதரவான எந்தக் கருத்தும் கிடையாது. ஏனென்றால், தமிழர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எதுவும் கிடையாது.

மாலைதீவு அகதிகள், பொதுவாக, தமிழ் இனப்பிரச்சினையில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தான் பேசுவார்கள். அதே நேரம், தமது மாலைதீவு அரசின் ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசுவதுடன், அதையும் இதையும் ஒப்பிட மாட்டார்கள். "இலங்கை அரசும், மாலைதீவு அரசும் ஒன்றா?" என்று நமது தமிழ் கருத்துச் சுதந்திரக் கண்மணிகள் மாதிரிக் கேட்பார்கள்.

இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர், காஷ்மீர் நிலவரம் குறித்து எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீர் பயங்கரவாதத்தை குறை கூறுவதுடன், இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். மறுபக்கத்தில், பெரும்பாலான காஷ்மீரிகள் தமிழ்ப் பயங்கரவாதத்தை குறை கூறி, சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். ஏனென்றால், காஷ்மீரிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது.

இதே நிலைமை தான் பிரான்சிலும் நிலவுகின்றது. பிரான்சில் வாழும் தமிழர்களுக்கும், அல்ஜீரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது. அல்ஜீரியர்களைப் பொருத்தவரையில், இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை தான். தமிழர்களைப் பொறுத்தவரையில், பிரான்சில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான்.

அல்ஜீரியர்கள், தமிழர்கள், இரண்டு இனங்களும், ஊடகங்களினால் தவறாக கையாளப் படுகின்றனர். தவறான தகவல்கள் கொடுத்து மூளைச்சலைவை செய்யப் படுகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அல்ஜீரியர்களும், தமிழர்களும் விழிப்படைந்து தமக்குள் ஒன்று பட்டால், அது ஒடுக்கும் அரசுக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும். ஆகவே, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை குலைப்பதற்கு, அரசு இயந்திரம் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும்.

ஆகவே, பிரான்சில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மட்டும் தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அதன் கைக்கூலியான சிறிலங்கா அரசின் எதேச்சாதிகாரத்தை முறியடிக்கும். இந்த அறைகூவலை வாசித்த பிறகாவது, அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரான்சில் அல்ஜீரியர் - தமிழர்களுக்கு இடையிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
ஓர் ஈழத் தமிழன்

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, May 16, 2011

சுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர், சுவிஸ் வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர், முதலில் அயல்நாடுகளில் தஞ்சம் கோரி விட்டு வந்திருந்தார்கள். இன்றைக்கும் அந்த நிலை மாறவில்லை. தமிழர்களின் முதல் தெரிவு சுவிட்சர்லாந்தாக இருந்து வருகின்றது. சுவிட்சர்லாந்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது?
சுவிட்சர்லாந்து மத்திய ஐரோப்பாவை சேர்ந்த சிறிய நாடு. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஓஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. முதலில் அந்த நாடுகளில் தஞ்சம் கோரி, சிறிது காலம் தங்கி விட்டு எல்லை தாண்டி சுவிட்சர்லாந்து வந்திருந்தார்கள். என்னோடு முகாமில் தங்கியிருந்தவர்களில் நேராக சுவிட்சர்லாந்து வந்தவர்கள் மிகக் குறைவு என்பதை தெரிந்து கொண்டேன். ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள், தம்மை கிழக்கு ஜெர்மன் பகுதிகளில் தங்க வைத்ததால், தப்பி வந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தாலியில் இருந்து வந்தவர்கள், அந்த நாட்டில் தமக்கு அகதி தஞ்சம் கிடைக்கவில்லை என்றனர். வேறு சிலர், தஞ்ச மனு நிராகரிக்கப் பட்டதால், வேறு வழியின்றி வந்ததாக கூறினார்கள். ஆனால், "மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் ஊதியம் அதிகம் கொடுக்கிறார்கள்." என்ற காரணத்தை எல்லோரும் ஒப்புவித்தார்கள். மனித உழைப்பும் ஒரு சந்தையில் விற்கப்படும் பண்டம். யார் அதிக விலை கொடுக்கிறார்களோ, அவர்களிடம் தமது உழைப்பை விற்க வந்திருக்கும் உண்மையை அவர்கள் மறைக்கவில்லை.

சுவிஸ் முகாம்கள் தமிழர்களால் நிரம்பி வழிந்தன. அந்தக் காலம் பதவியில் இருந்த அகதிகளுக்கான அரசு அதிகாரி பீட்டர் அர்பென்ஸ்: "சிறிய நாடான சுவிட்சர்லாந்து தமிழர்களின் மிகப் பெரிய குடியேற்ற நாடாக மாறிவிட்டது." என்று தெரிவித்தார். ஆமாம், அரசு மட்டத்தில் அது குறித்த கவலை இருந்தது. ஆனால் தமிழர்களின் வருகையை தடுக்க முனையவில்லை. அதற்கு காரணம், அகதிகளாக வந்த தமிழர்கள் அனைவரும் உழைப்பதற்கு தயாரான, உடலில் வலு கொண்ட இளம் வயதினர். தஞ்சம் கோரியவர்களில் 99 வீதமானோர் ஆண்களாக இருந்தனர். அதிலும் 16 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகம். தலைநகரமான பெர்ன் அருகில் நான் தங்கியிருந்த முகாமும் அப்படிப்பட்டதே. முகாம்வாசிகளான அகதிகளை தமிழர்கள் என்றழைப்பதை விட இலங்கையர்கள் என்றழைப்பதே பொருத்தம். ஒரு சில முஸ்லிம், சிங்கள அகதிகளும் வசித்தனர். சிங்கள இளைஞர்கள் வந்த புதிதில் சுவிஸ் காதலிகளை தேடிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். சில நேரம், வேலை அகதிகளை தேடி வந்தது. முகாம் அதிகாரிகளே எங்காவது வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சில நாட்களே செய்யக் கூடிய கூலி வேலையாக இருக்கலாம்.

நான் தங்கியிருந்த, பேர்ன் மாநிலத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருந்த முகாமில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் அதிகம் காணப்பட்டனர். இருப்பினும் தமிழ் அகதிகளுக்கு மட்டுமே வேலை தேடி வந்தது. "தமிழர்கள் என்றால் எப்படியும் வேலை கிடைத்து விடும்" என்று முகாமில் இருந்த ஆப்பிரிக்க அகதிகள் எம்மை பொறாமைக் கண்களால் பார்த்தார்கள். எனக்கும் ஒரு வேலை கிடைக்கும் வரையில் அந்தப் புதிருக்கு விடை கிடைக்கவில்லை. ஆறு மாதத்தில் ஓரளவு மொழியறிவு பெற்று, குறைந்த பட்சம் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களை வாசிக்கக் கூடிய நிலையில் இருந்தேன். இரண்டாயிரம் அடி மலை உச்சியில் இருந்த உணவு விடுதிகளிலும், சமையலறை துப்பரவாளராக வேலை செய்வதற்கு தமிழர்களை விரும்பிக் கேட்டிருந்தார்கள். சில விளம்பரங்களில் தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தனர். அப்போது, சுவிட்சர்லாந்துக்கு முதல் தொகுதி தமிழர்கள் வந்து, அதிக பட்சம் ஐந்து வருடங்கள் ஆகியிருக்காது. சுவிஸ் முதலாளிகளுக்கு தமிழ்த் தொழிலாளர்கள் மேல் தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. தமிழர்களைக் கேட்டால், "நாம் தான் உலகிலேயே கடின உழைப்பாளிகள். அதனால் எம்மை மதிக்கிறார்கள்." என்றனர். எனக்குக் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.

சுவிட்சர்லாந்தில் வாழும் அந்நிய தொழிலாளிகளைப் பற்றிய சிறு குறிப்புகளுக்குப் பிறகு தமிழர்களைக் கவனிப்போம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தை நவீனமயப் படுத்தும் கட்டுமானப் பணிகளுக்கு துருக்கிய தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக வந்தவர்கள், குடும்ப சமேதராக சுவிட்சர்லாந்திலேயே தங்கி விட்டனர். முதல் தலைமுறை உழைப்பாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் வயதாகி விட்டது. தந்தையர் செய்த தொழில்களை செய்வதற்கு, இரண்டாவது தலைமுறை துருக்கியர்கள் தயாராக இல்லை. குறைந்த பட்சம் தொழிற்கல்வி ஒன்றையாவது முடித்து விட்டு, வேறு வேலை தேடிச் செல்கிறார்கள். அடுத்ததாக ஸ்பெயின், போர்த்துக்கல் தொழிலாளிகளை தருவித்தார்கள். சுவிட்சர்லாந்தில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, சிறிது காலத்தில் தமது நாடுகளுக்கு திரும்பி விடுவார்கள். அதே போல, முன்னாள் (சோஷலிச) யூகோஸ்லேவியாவில் இருந்தும் தொழிலாளிகள் வந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒன்பது மாத விசா வழங்குவதன் மூலம், நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பை முன்கூட்டியே தடுத்தார்கள்.

வெள்ளைத் தோல் கொண்ட ஐரோப்பியர்களை, உணவு பரிமாறும் பணியாளர்கள் போன்ற வேலைகளுக்கு ஈடுபடுத்த முடிந்தது. அவர்கள் வந்து சில மாதங்களிலேயே மொழியை சரளமாக பேசக் கற்றுக் கொண்டனர். இதனால் சற்று அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, உடல் உழைப்பை குறைவாக செலவிடும் வேலைகளையும் தேர்ந்தெடுத்தனர். இன்னொரு பக்கத்தில் மிகக் கடினமான பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் தேவைப்பட்டனர். உணவுவிடுதிகளில் பாத்திரங்களை கழுவுவது, துப்பரவாக்குவது, போன்ற வேலைகளுக்கு தொழிலாளர் தட்டுப்பாடு நிலவியது. என்பதுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவின் அரசியல் சூழல் விரைவாக மாறிக் கொண்டிருந்தது. துருக்கியில் ஆட்சிக்கு வந்த இராணுவ சர்வாதிகாரம், தொழிலாளிகளை விட அகதிகளையே அதிகமாக அனுப்பிக் கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் துருக்கியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் தீவிர இடதுசாரி இளைஞர்கள். (சுவிஸ்காரர்களுக்கு கம்யூனிசம் என்றால் கொஞ்சம் அலர்ஜி) யூகோஸ்லேவியாவில் சோஷலிசம் மறைந்து, தேசியவாத சக்திகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டிருந்தன. போர்த்துகலும், ஸ்பெயினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்கள் என்பதால், அந்த நாடுகளின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருந்தது. அத்தகைய இக்கட்டான தருணத்தில் தான், தமிழ் அகதிகள் சுவிட்சர்லாந்தினுள் நுழைந்தார்கள்.

அகதிகளாக வந்த தமிழர்களை விசாரணை செய்யும் பொழுதே சுவிஸ் அதிகாரிகள் அவர்களை எடை போட்டிருப்பார்கள். இவர்கள் வெள்ளயர்களல்ல, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டவர்களல்ல. அதனால் உள்ளூர் சுவிஸ் சமூகத்துடன் இலகுவாக ஒன்று கலக்க மாட்டார்கள். அதனால், சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்களை அவர்களாகவே அறிந்து கொள்ள சில காலம் எடுக்கும். துருக்கி அகதிகளைப் போல இவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல. அதனால் தொழிலாளர்களின் உரிமை கேட்டு போராட மாட்டார்கள். அப்படியானவர்களை நாட்டினுள் அனுமதிக்க ஏன் தயங்க வேண்டும்? தமிழ் அகதிகள் வேலை செய்யத் தொடங்கிய சில வருடங்களில், சுவிஸ் அரசு இன்னொரு மாயவலை விரித்தது. தொழில் வாய்ப்பு உள்ள வரை சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கான "B " அனுமதிப் பத்திரம் வழங்க முன்வந்தது. ஆனால் ஒரு நிபந்தனை. "நான் அகதி அல்ல" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும். பல வேற்றின அகதிகள் அத்தகைய நிபந்தனைகளுக்கு தயங்கிய போது, பல தமிழர்கள் B அனுமதிப் பத்திரம் வாங்கிக் கொண்டனர். இதனால் சுவிஸ் அரசுக்கு இரண்டு நன்மைகள். ஒன்று: எமது நாட்டில் அகதிகள் எண்ணிக்கை குறைவு என கணக்குக் காட்டலாம். இரண்டு: வேலை பறிபோகும் காலத்தில், இலகுவாக தாயகத்திற்கு திருப்பி அனுப்பலாம். சுருங்கக் கூறின், சுவிஸ் அரசு அகதியாக வந்தவர்களை தொழிலாளிகளாக மாற்றுவதிலேயே அதிக அக்கறை காட்டியது. இதனால் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதை காலவரையறை இன்றி தள்ளிப் போட்டது.

சுவிட்சர்லாந்து சிறந்த ஜனநாயகத்தைக் கொண்ட நாடு எனப் பாராட்டப் படுகின்றது. அதே நேரம், ஒரே வேலைக்கு வெவ்வேறு ஊதியம் கொடுப்பதை அனுமதிக்குமளவு பாரபட்சம் காட்டும் நாடும் அது தான். தஞ்சம் கோரிய ஒருவரின் விண்ணப்பத்தை பரிசீலித்து அகதியாக முடிவெடுக்கும் வரையில் அவருக்கு நிச்சயமற்ற வாழ்க்கை தான். அத்தகையவர்கள் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டப் படி வரையறை செய்யப்படுகின்றது. அந்த வேலைகளுக்கு கூட குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகின்றது. வதிவிட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதே வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கலாம். அகதிகளை அங்கீகரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் குறைந்த கூலிக்கு உழைக்கும் காலமும் அதிகரிக்கும். அத்தனை வருடங்களும் அகதிகளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் மில்லியன் பிராங்குகள் சம்பாதித்து விடுவார்கள். மேலும் வேலை செய்யும் அகதிகளின் சம்பளத்தில் ஒரு தொகை கழிக்கப் பட்டு, முகாமில் வதியும் அகதிகளின் செலவினத்தை ஈடு செய்கிறார்கள். அரசு, முதலாளிகள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் என்று பல சுவிஸ் அமைப்புகள் அகதிகளின் உழைப்பை சுரண்டி இலாபமடைகின்றனர்.