Showing posts with label கூலித் தொழிலாளர்கள். Show all posts
Showing posts with label கூலித் தொழிலாளர்கள். Show all posts

Tuesday, May 08, 2018

இணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்

இன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கைத்தொலைபேசியில் சொடுக்கி வாங்கி விடலாம். நாம் வாங்கிய பொருள் அடுத்த நாளே வீடு தேடி வரும்.

முந்திய காலங்களைப் போல வெளியே கடைக்கு செல்லாமல், வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்கும் தொழில்நுட்ப அதிசயத்தை எண்ணி வியக்கிறோம். வருங்காலத்தில் தெருக்களில் கடைகளை காண முடியாமல் போகலாம். இணையக் கடைகளின் பெருக்கம் காரணமாக, பல பெரிய நிறுவனங்களின் அங்காடிகள் கூட விற்பனையின்றி மூடப் படுகின்றன.

மறுபக்கத்தில் இணையக் கடைகளுக்கான களஞ்சிய அறைகள், விநியோக மையங்கள் என்பன திறக்கப் படுகின்றன. அவை நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப் படுகின்றன. இணைய சேவை காரணமாக இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தூங்காமல் இரவிரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை. என்ன தான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளை பெருக்கினாலும், உழைப்புச் சுரண்டல் மட்டும் மாறுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தை விட, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் கட்டுரையை எனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். நான் குறைந்தது ஒரு வருடமேனும் தபால் துறையில் வேலை செய்திருக்கிறேன். சில மாதங்கள், விநியோக மையத்தில் பார்சல் தரம் பிரிப்பவராக செய்த வேலை தான் மிகவும் கடினமானது. அடிமை வேலைக்கு ஒப்பானது.

2012 ம் ஆண்டளவில், நான் வசிக்கும் நெதர்லாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. எல்லா இடங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை. வேலை எங்கே தேடியும் கிடைக்காத நிலைமை. நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுப்பதை விட, இருப்பவர்களின் வேலையை பறிப்பதில் ஆர்வமாக இருந்தன.

அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும், பார்சல் தரம் பிரிக்கும் நிலையத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருந்தது. அப்போது அது வளர்ந்து வரும் நவீன தொழிற்துறை என ஊடகங்களால் புகழப் பட்டது. அங்கே சென்ற பிறகு தான், எதற்காக அந்த தொழிற்துறையில் மட்டும் வேலையாள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தெரிய வந்தது.

நெதர்லாந்து நாட்டின் தபால்துறை முழுக்க முழுக்க PostNL என்ற தனியார் நிறுவனத்தினால் நடத்தப் படுகின்றது. இது முன்பிருந்த அரசுத் தபால்துறையின் தொடர்ச்சி ஆகும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நூறு சதவீத தனியார்மயமாக்கல் காரணமாக, ஆயிரக் கணக்கான தபால்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர்.

முந்திய காலங்களைப் போல தற்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. இன்று உலகம் முழுவதும் அப்படித்தான். கடிதப் போக்குவரத்து மின்னஞ்சல் ஆகி, அது பின்னர் வாட்ஸ் ஆப் வரை வந்து விட்டது. கடிதங்களை மட்டுமல்ல, முத்திரைகளை கூட கண்ணால் கண்டிராத தலைமுறை ஒன்று உருவாகி விட்டது.

தனியார் மயப் படுத்தப் பட்ட தபால் நிறுவனம், அதைக் காரணமாகக் காட்டியே தபால்காரர்களின் வேலை நேரத்தைக் குறைத்து விட்டது. நான் சுமார் ஒரு வருடமாவது தபால்காரர் வேலை செய்துள்ளேன். தற்காலத்தில் அது ஒன்றும் பெருமைக்குரிய வேலை அல்ல. நிச்சயமற்ற தன்மை காரணமாக பலர் அந்த வேலையை தெரிவு செய்வதில்லை.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீடுகளுக்கு தபால் போடும் வேலை செய்து, வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது. ஏனெனில், வேலை நேரம் மிகக் குறைவு. மொத்தம் வாரத்திற்கு பன்னிரண்டு மணித்தியாலம் மட்டுமே. எப்போதும் அது ஒரு பகுதி நேர வேலை தான். அதனால் கிடைக்கும் வருமானம் வீட்டு வாடகை கட்டுவதற்கு கூடப் போதாது.

சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் ஐம்பது கிலோ பொதிகளை சுமந்து கொண்டு, உறை பனியில் நடுங்கிய படியும், அடை மழையில் நனைந்த படியும் செய்யும் வேலையை எண்ணிப் பாருங்கள். நாம் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சம்பளம் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட தொகை தான் கிடைக்கும். தபால்கள் அதிகளவில் வரும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம், குறைவாக வரும் புதன்கிழமைகளில் அரை மணிநேரம் மட்டுமே சம்பளம் போடுவார்கள். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் தான்.

சிலநேரம், சாதாரண தபால்களை மட்டுமல்லாது, விளம்பரப் பத்திரிகைகளையும் சேர்த்துப் போடுமாறு கொடுத்து விடுவார்கள். அதை விட, மாதமொருமுறை நகரசபை வெளியிடும், குடி மக்களுக்கான தகவல் தெரிவிக்கும் பத்திரிகையையும் நாமே விநியோகிக்க வேண்டும். அதற்காக மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது.

இந்த மேலதிக விளம்பர சேவைக்காக நகர சபையும், விளம்பர நிறுவனங்களும் கொடுக்கும் பணம் முழுவதையும் தபால் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதில் ஒரு துளி கூட வேலையாட்களுக்கு கொடுப்பதில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது, "தபால் சேவை நட்டத்தில் இயங்குவதாகவும், அதை ஈடுகட்டுவதற்காக கம்பனி விளம்பரப் பத்திரிகை போடும் சேவையை நடத்துவதாகவும்" தெரிவித்தார்கள்.

தபால்துறையில் ஒரு அரச நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய காலம் எப்போதோ மலையேறி விட்டது. இன்று கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில், ஒரு டசினுக்கும் குறையாத தனியார் தபால் நிறுவனங்கள் சந்தையில் போட்டி போடுகின்றன. இணைய வணிகம் காரணமாக பார்சல் விநியோகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் "பாரம்பரிய" தபால் நிறுவனம், முடிந்தளவுக்கு தொழிலாளர்களை சுரண்டி இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றது.

இணைய வணிகத்தின் வருகை காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக சொல்லப் படுகின்றது. ஆயிரம் பேரின் வேலை காணாமல் போன இடத்தில், சில பத்துப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்குப் பெயர் பொருளாதார வளர்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி. இதனால் முதலாளிகளின் இலாபம் மட்டுமே கூடியுள்ளது.

இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போது தான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்.

நானும் பார்சல்கள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்துள்ளேன். அது வழமையாக இரவு வேலை தான். இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரையில் தூங்காமல் கண் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இரவு வேலை செய்து வந்தால், நீரிழிவு வருத்தம் வரும். இதய நோய் கூட உண்டாகலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தரம் பிரிக்கும் வேலை இரண்டு ஷிப்டுகளாக நடக்கும். மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரையில் ஒரு ஷிப்ட். அது மாலை நேர வேலை. அதை அங்கு நீண்ட காலம் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேருவோரும், தற்காலிகத் தொழிலாளர்களும் இரவு வேலை மட்டுமே செய்யலாம். நடுநிசி பன்னிரண்டு மணியில் இருந்து அதிகாலை ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும்.

அதை விட, தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள இராட்சத இயந்திரங்கள் போடும் இரைச்சலில் காது செவிடாகி விடும். பக்கத்தில் நிற்பவர் சத்தமாகப் பேசினாலும் கேட்காத அளவிற்கு பேரிரைச்சல். தொழிலகங்களில் சத்தம் 80 டெசிபெல் அளவுக்கு மீறினால், காதுக்கு பாதுகாப்புக் கவசம் போட வேண்டும் என்று தொழிற்துறை பாதுகாப்பு விதி கூறுகின்றது. ஆனால், அதையெல்லாம் யார் பின்பற்றுகிறார்கள்?

அந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாலும், வேலை இயந்திரகதியில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மெஷின் போல இயங்க வேண்டும். இது ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையிலான போட்டி. ஒரு தொழிற்சாலையில் இருப்பதைப் போன்று, ரப்பர் பட்டி ஓடிக் கொண்டிருக்கும். ஒரு ரோபோ இயந்திரம் அதை இயக்கிக் கொண்டிருக்கும்.

இணையக் கடைகளில் வாங்கப் பட்ட பொருட்களின் பார்சல்கள், வண்டி வண்டியாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். சிறிதும் பெரிதுமான பார்சல்களை (அதிக பட்ச நிறை இருபது கிலோ) ஒவ்வொன்றாக எடுத்து பட்டியில் போட வேண்டும்.

மறுபக்கத்தில் தானாகவே தரம் பிரித்து வரும் பார்சல்களை எடுத்து, பிரதேச வாரியாக அடுக்க வேண்டும். முகவரிகளை ஸ்கேன் பண்ணி தரம் பிரிப்பதை மட்டுமே ரோபோ இயந்திரம் செய்கிறது. மற்றதை எல்லாம் மனிதர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு நிமிடத்தில் எத்தனை பார்சல்கள் போடுகிறோம் என்பதை நேரக் கணிப்பு மணிக்கூடு வைத்து அளப்பார்கள். நிமிடத்திற்கு சராசரி ஐம்பது பார்சல்கள் தூக்கிப் போட வேண்டும். எமது செயற்படும் வேகம் குறைந்தால் பட்டி ஓடுவது நின்று விடும். அப்படி நின்றால் மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்க வேண்டும்.

அதனால், நாம் ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எம்மிடம் இருந்து கூடிய அளவுக்கு உழைப்பை பிழிந்து எடுப்பதற்காக, வேண்டுமென்றே ரப்பர் பட்டி வேகமாக ஓட விடப் படுவதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது எனது அனுபவம். அண்மையில் பத்திரிகையில் ஒரு தகவலைக் கண்டேன். தரம் பிரிக்கும் நிலையத்தில் எட்டு வருடங்களாக மேற்பார்வையாளர் வேலை செய்து வந்த ஒருவர் வேலையை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தான் அங்கு வேலை செய்யும் பொழுது "அடிமை மேய்ப்பர்" போன்று உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் அடிமைகள் வைத்திருந்த காலத்தில், அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க விடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்க ஒரு மேற்பார்வையாளர் இருந்தார். அவரை "அடிமை மேய்ப்பவர்" என்று சொல்வார்கள். அது நூறாண்டுகளுக்கு முந்திய வரலாறு என்று தான் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மை தான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

ஒரு நிமிடம் கூட இடத்தை விட்டு நகர முடியாது. இடையில் சிறுநீர் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்கவே வேண்டாம். எமது இடத்திற்கு இன்னொரு தொழிலாளியை பிடித்து விட்டுத் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். அதுவும் எப்போதும் சாத்தியமில்லை.

இதனால் வேலை நேரத்தில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். ஓய்வில்லாத வேலை காரணமாக வியர்த்துக் களைப்படைந்து, உடலில் நீர்த் தன்மை வற்றி, தாகம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.

நிச்சயமாக இப்படியான இடங்களில் பலர் நீண்ட காலம் வேலை செய்வதில்லை. அடிக்கடி சுகயீன விடுப்பில் நிற்கிறார்கள். அதனால் தான் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை நிலவும் காலத்திலும் அங்கே வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்பவர்களில் அரைவாசிப் பேராவது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த தொழிலாளர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை செலுத்தத் தயாரான மலிவு விலை தொழிலாளர்கள் அங்கிருந்து வருகிறார்கள்.

தபால் தரம் பிரிக்கும் நிலையத்தில் ஆள் பற்றாக்குறையா? போலந்தில் உள்ள முகவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு வந்து, திங்கட்கிழமை வேலை தொடங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வேலைக்கு வருவோர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், இந்நாட்டு சட்ட விதிகளை அறிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். அதற்குள் வேண்டியளவு சுரண்டி விடலாம். இணைய வணிகம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், நவீன அடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கமும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றது.

தற்காலத்தில் தபால் சேவையால் இலாபம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, முத்திரை விலையை கூட்டி வைத்திருக்கிறார்கள். பார்சல் அனுப்பும் கட்டணமும் மிக அதிகம். இருந்த போதிலும் தபால் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பது மட்டும் குறையவில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களை சுரண்டி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். மறுபக்கம் தலைமை நிர்வாகிகளின் ஊதியமும், இலாபத்தில் அவர்களது பங்கும் அதிகரிக்கின்றது.

பொது மக்கள் தபால்கள் அனுப்புவது குறைந்து விட்டதால், "நட்டத்தில்" இயங்குவதாக எதிர்பார்க்கப் படும், தபால் நிறுவனம் சம்பாதிக்கும் நிகர இலாபம் வருடத்திற்கு ஐந்து சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிமைத் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் உழைப்பு தான் இலாபமாக மாறுகின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

- கலையரசன்

Tuesday, August 30, 2016

மலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழுவினரின் துரோகமும்


வ‌ர‌லாற்றில் ப‌திய‌ப் ப‌டாத‌ ம‌லேசிய‌த் த‌மிழினப் ப‌டுகொலை! இர‌ண்டாம் உல‌க‌ப்போர்க் கால‌த்தில், ம‌லேசியாவை ஆக்கிர‌மித்த‌ ஜ‌ப்பானிய‌ப் ப‌டையின‌ர், ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, ச‌யாம் - ப‌ர்மா ர‌யில் பாதை அமைத்த‌ன‌ர். க‌டுமையான‌ வேலைப் ப‌ளு, ஜ‌ப்பானிய‌ அதிகாரிக‌ளின் சித்திர‌வ‌தைக‌ள் கார‌ண‌மாக‌ ஒன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மான‌ அள‌வு குறைந்த‌து.

தமிழர்கள் மட்டுமல்லாது, பர்மியர்கள், மலேயர்கள், மற்றும் சிறைப்பிடிக்கப் பட்ட ஐரோப்பியர்களும், ஜப்பானியரால் கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையில் பல்லின மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பலியான தமிழர்களின் எண்ணிக்கை மற்றைய இனத்தவரை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவல்கள், The Bridge on the River Kwai என்ற ஹாலிவூட் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தன. ஆனால், தமிழர்கள் பற்றிய தகவல்கள் பல தசாப்த காலமாக மறைக்கப் பட்டு வந்துள்ளன. (The real Kwai killed over 1.50 lakh Tamils

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஜப்பானியப் படைகள் மலாயா தீபகற்பத்தையும், சிங்கப்பூரையும் ஆக்கிரமித்திருந்தன. ஜப்பானிய படையினர் ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து வந்தனர். அதற்கு அடுத்த படியாக சீனர்களை துன்புறுத்தினார்கள். 

மலேசியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் ஜப்பானியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தமது தேசிய இன விடுதலையாக கருதிய மலே பெரும்பான்மை சமூகத்தினர், குறிப்பாக சுல்த்தான்கள், மலே தேசியவாதிகள், இஸ்லாமியவாதிகள் ஆகியோர் ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். 

இந்திய கூலித் தொழிலாளர்கள், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்கவில்லை. அதனால் தான் சயாம் - பர்மா ரயில்பாதைத் திட்டத்திற்கு தமிழர்களை அழைத்துச் சென்றனர். தமிழ்க் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டித் தான் கூட்டிச் சென்றனர். 

காட்டு மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டு, பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டவர்களும் உண்டு. அனேகமாக ஓர் ஆண் குடும்ப உறுப்பினர் பிடித்துச் செல்லப் பட்டால், கூடவே முழுக் குடும்பமும் சென்றது. அதைத் தவிர, ஜப்பானிய இராணுவப் - பொலிசார் ரோந்து நடவடிக்கைகளின் போது அகப்பட்ட இளைஞர்களையும் கட்டாய வேலை செய்ய அனுப்பினார்கள்.

சயாம் - பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, இலட்சக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப் பட்ட நேரம், இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது? 

இந்திய தேசிய இராணுவம் அமைப்பதற்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதன் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜப்பானியரின் அரவணைப்பில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து வந்தார். மலேயாவில் திரட்டப் பட்ட போராளிகளுடன் பர்மா - இந்தியா எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அதாவது, ஒரு பக்கம் ஜ‌ப்பானிய‌ர்க‌ளினால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம், நேதாஜி சுபாஸ் ச‌ந்திர‌போஸ் அதே ஜ‌ப்பானிய அட‌க்குமுறையாள‌ர்க‌ளுட‌ன் கூடிக் குலாவினார். இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் பர்மா எல்லையை நோக்கிய படை நகர்வுகளுக்கு, த‌மிழ் அடிமை உழைப்பாளிக‌ள் க‌ட்டிய‌, சாலைகள், ரயில் பாதைகளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. அப்போது அந்த சாலையும், ரயில்பாதையும் இந்தியத் தமிழர்களின் அடிமை உழைப்பால் உருவானவை என்ற எண்ணம் நேதாஜியின் மனதை உறுத்தவில்லை.

த‌ன‌து க‌ண்ணெதிரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலையை க‌ண்டுகொள்ளாம‌ல் புறக்க‌ணித்த‌, பாசிச‌ இன‌ப் ப‌டுகொலையாளிக‌ளுட‌ன் கைகோர்த்த‌ நேதாஜியை த‌லையில் தூக்கிக் கொண்டாடும் த‌மிழ‌ர்க‌ள் இன்றைக்கும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் எந்த‌க் கூச்ச‌மும் இன்றி த‌ம்மை "த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள்" என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்!

முள்ளிவாய்க்கால் இன‌ப்ப‌டுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட‌ம் செய்யும் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் வ‌ழ‌மையாக‌ ஓர் உண்மையை ம‌றைப்பார்க‌ள். வ‌ன்னியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினர், மலையகத் தமிழர்கள் அல்ல‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ள்.

ச‌யாம் - ப‌ர்மா ம‌ரண‌ ர‌யில்பாதை அமைக்கும் பணியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையானோர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் அல்ல‌து இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க ம‌க்க‌ள். ம‌லேசிய‌த் த‌மிழ‌ரில் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும், ஆதிக்க சாதியின‌ரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜ‌ப்பானிய‌ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த‌ன‌ர். அதனால் இனப்படுகொலைக்குள் அகப்படாமல் தப்பி விட்டனர். இவர்கள் மட்டுமா தப்பினார்கள்? மலேசிய சிங்களவர்களும் தான் தப்பிப் பிழைத்தனர். அந்தச் சிங்களவர்களும் வசதியான ஆதிக்க சாதியினர் தான். சாதியும், வர்க்கமும் சரியாக அமைந்து விட்டதால் இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து விட்டனர்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சிங்களவர்களும் சேர்ந்திருந்தனர்! (Sinhalese who Fought with the National Army of ‘Netaji’ Subhash Chandra Bose against Britainhttp://dbsjeyaraj.com/dbsj/archives/9596) அன்று மலேயாவில் கணிசமான அளவு சிங்களவர்களும் வாழ்ந்து வந்தனர். எண்ணிகையில் குறைவாக இருந்தாலும், இலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும், மலேசியாவில் ஓரளவேனும் வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் யாரும் இந்தியத் தமிழர்கள் மாதிரி கூலித் தொழிலாளராக செல்லவில்லை. பெருந்தோட்டங்களில் சிங்கள அல்லது ஈழத் தமிழ் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அது அன்றிருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அடங்கும்.

சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் தேசிய விடுதலைப் போராட்டக் கொள்கை. இந்தியா விடுதலை அடைந்தால், இலங்கையையும் விடுதலை செய்து விடலாம் என்று நினைத்தனர். மற்றைய காரணம் சந்தர்ப்பவாதம். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

அந்தக் காலகட்டத்தில், ஜப்பானியர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தில் பலரின் தலைகளை வெட்டி பொது இடங்களில் பார்வைக்கு வைத்தனர். பிபிசி வானொலி கேட்ட சிங்களவர் ஒருவரும் கொல்லப் பட்டார். அதற்குப் பிறகு மலேயா சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்வது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். மரண ரயில் பாதை அமைக்கும் வேலைக்கும் செல்லத் தேவையில்லை. நேதாஜிக்கு ஜப்பானியரிடம் இருந்த செல்வாக்கு தெரிந்த விடயம் தானே?

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த சிங்கள வீரர்களுக்கு கொத்தலாவல என்பவர் தலைமை தாங்கினார். யார் இவர்? இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர். சிங்கள மேட்டுக்குடி உறுப்பினர். கொவிகம (வெள்ளாளர்) உயர் சாதியை சேர்ந்தவர். காலனிய எஜமானர்களையும், முதலாளித்துவத்தையும் ஆராதிக்கும் தீவிர வலதுசாரிக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் இணைவதற்கு இத்தனை தகுதிகள் போதாதா? இனம் இனத்தோடு தானே சேரும்? நேதாஜியும், கொத்தலாவலையும், ஜப்பானியர்களும் ஒன்று சேர்வதற்கு அடிப்படைக் காரணம் பாஸிசம் அல்லாமல் வேறென்ன?

பாஸிஸ‌ம் என்ப‌து இருப‌தாம் நூற்றாண்டில் உல‌க‌ம் முழுவ‌தும் பர‌விய‌ அர‌சிய‌ல் கோட்பாடு. வ‌ர்க்க‌, சாதிய‌ முர‌ண்பாடுக‌ளை புற‌க்க‌ணித்து இன‌த்தின் அல்ல‌து தேசிய‌த்தின் பெய‌ரில் ஒன்று சேர‌க் கோருகின்ற‌து. ஜ‌ப்பானிய‌ பாஸிஸ்டுக‌ளுட‌ன் ஒத்துழைத்த‌, நேதாஜி எவ்வாறு தூய்மையான‌வ‌ராக‌ இருக்க‌ முடியும்? நேதாஜி ஏற்க‌ன‌வே ஹிட்ல‌ருட‌ன் கைகோர்த்த‌வ‌ர் தானே?

ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ஒத்துழைத்த‌ த‌மிழ் துணைப்ப‌டையின‌ரை "ஒட்டுக் குழுக்க‌ள்" என்கிறார்க‌ள். அப்ப‌டிப் பார்த்தால், நேதாஜியின் இந்திய‌ தேசிய‌ இராணுவ‌மும் அதே மாதிரியான‌ ஒட்டுக்குழு தான்.

ம‌லேசிய‌ த‌மிழின‌ப் ப‌டுகொலை இவ்வ‌ள‌வு கால‌மும் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌த‌ன் பின்னணிக் கார‌ண‌மும் அது தான். இன்றைக்கும் மேல்தட்டு வ‌ர்க்க‌த்தின‌ர், சாதிமான்க‌ள் நேதாஜியை நாய‌க‌னாக‌ ஏற்றுக் கொள்கின்ற‌ன‌ர். அதே நேர‌ம், இன‌வ‌ழிப்பில் ப‌லியான‌ அடித்த‌ட்டு, தலித் த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்பு அவ‌ர்க‌ளை உலுக்கி இருக்க‌வில்லை.

இன‌ உண‌ர்வை விட‌ சாதிய‌ - வ‌ர்க்க‌ உண‌ர்வுக‌ள் உறுதியான‌வை. கால‌ங்க‌ட‌ந்தும் நிலைத்து நிற்கும்.

Friday, July 03, 2015

மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!


மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே அளவான சம்பளம் கிடைக்கிறது! சோஷலிசம் என்பது சமநீதி. இந்த உண்மையை அடித்தட்டு மக்களுக்கு மறைப்பது அநீதி. சோஷலிசம் மார்க்சியத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. மேற்கு ஐரோப்பாவில், சமூக ஜனநாயக கட்சிகள் அதற்காக போராடின.

இறுதியில், பல மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில், "நலன்புரி அரசு" என்ற பெயரில், முதலாளித்துவத்தின் கீழ் மக்களுக்கு  நன்மை பயக்கும்  திட்டங்களை கொண்டு வந்தனர்.அதாவது, முதலாளித்துவமும், அதன் இலாபவெறியும் அப்படியே இருக்கும். சுரண்டலும் இருக்கும். அதே நேரம், மக்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப் படும்.

நெதர்லாந்தில் அதை "Polder Model" என்று அழைக்கிறார்கள். அது உண்மையில் வர்க்க சமரசம் ஆகும். அதாவது, முதலாளிகளும், தொழிலாளர்களும் சமரசம் செய்து கொள்வதால், இரண்டு தரப்புக்கும் ஆதாயம் என்று நினைக்கும் சீர்திருத்தவாதக் கொள்கை.

வசதியாக வாழும் மத்திய தர வர்க்கத்தினர், சோஷலிசத்தை வெறுப்பதற்கு முக்கிய காரணம், அவர்களது வர்க்க மேலாண்மை சிந்தனை தான். தமது போலியான சமூக அந்தஸ்துக்கு பங்கம் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். சாதாரண கூலித் தொழிலாளர்களுடன், உணவுவிடுதியில் அருகருகே அமர்ந்து சாப்பிடும் நிலைமையை வெறுக்கிறார்கள். வர்க்க மனப்பான்மை, நவீனமயப் படுத்தப்பட்ட சாதிய மனப்பான்மையாக உள்ளது.

முன்னாள் சோஷலிச நாடுகளில், எல்லோருக்கும் சமமான சம்பளம் என்ற கொள்கையை பரிகசித்தவர்கள் பலர். அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டுபிடித்த பொருளாதாரப் புலிகளும் இருக்கிறார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நியாயமானது என்றும், முன்னுக்கு வர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் வாதிட்டார்கள்.

மத்தியதர வர்க்கத்தினரின் கனவுலகமான மேற்கு ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், சோஷலிச நாடுகளுக்குப் போட்டியாக, தமது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தப் பட வேண்டும் என்று நினைத்து செயற்பட்டார்கள்.

அதில் முக்கியமானது, சம்பள வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வை முடிந்த அளவிற்கு குறைப்பது. ஏனென்றால், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போதாத சம்பளம் பெறுவதால் தான், ஒரு சாதாரண தொழிலாளியால் வசதியாக வாழமுடியாமல் உள்ளது. ஆகவே, அவர்களது சம்பளம் உயர்த்தப் பட வேண்டும்.

சோஷலிச நாடுகளில் பின்பற்றப் பட்ட அதே நடைமுறை தான், மேற்கு ஐரோப்பாவிலும் பின்பற்றப் பட்டது. குறிப்பாக நெதர்லாந்தில், ஒரு தொழிற்துறையின் சம்பளம் எந்தளவு இருக்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கங்களும், தொழிலதிபர்களும் கூடி முடிவெடுக்க வேண்டும்.  அது அங்கே "Polder Model"  என்று அழைக்கப் படுகின்றது. (முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள். ஆனால், முதலாளித்துவ நாடுகளில் அவர்கள் முதலாளிகள்.)

ஒரு தொழிற்துறையில் கிடைக்கும் சராசரி வருமானம் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அந்தளவுக்கு தொழிலாளரின் சம்பளமும் உயர்வாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, போர் முடிந்த பின்னர் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டதால், கட்டிடத் தொழில் நிறுவனங்களின் வருமானமும் அதிகமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. அதனால், சாதாரண கூலியாளின் சம்பளமும் அதிகரித்தது. இன்றைக்கும் அவர்கள் எடுக்கும் சம்பளம், ஒரு வங்கி ஊழியரின் சம்பளத்தை விட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நெதர்லாந்தில் கட்டிடத் தொழிலாளரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். தமிழ்நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, மேலாளர்கள் கூலித் தொழிலாளரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. நெதர்லாந்திலும், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களை அந்தளவு மோசமாக நடத்துவதில்லை. அடித்தால் அது வன்முறையாக கருதப்பட்டு, பொலிஸ் தலையிட்டு, நீதிமன்றம் வரை சென்று தண்டம் கட்ட வேண்டியிருக்கும். கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது கூட, ஒரு மனிதரை கண்ணியக் குறைவாக நடத்துவது என்ற கட்டத்திற்கு போகாத அளவிற்குத் தான் இருக்கும்.

மேற்கு ஐரோப்பாவிலும், கட்டிடத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதுண்டு. பொதுவாகவே உள்நாட்டு வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாட்டில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகமாகும். சிலநேரம், அலுவலக ஊழியரை விட இரண்டு மடங்கு கிடைக்கும். ஏனென்றால், அது மிகவும் கடினமான வேலை. கட்டிடத் தொழில் நிறுவனங்கள், அதிகப்படியான சம்பளத் தொகையை குறைப்பதற்காக, கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை முகவர்கள் மூலம் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். சில இடங்களில் போர்த்துகீசிய தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் தீர்மானிக்கப் பட்ட மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும், தொழில்களில் பாகுபாடு காட்டாமல், எல்லோருக்கும் வாழ்க்கையை கொண்டு நடத்தும் அளவிற்கு சம்பளம் கொடுப்பது முக்கியமாகக் கருதப் படுகின்றது. நெதர்லாந்தில், அரசும், முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் அடிக்கடி இது குறித்து வாக்குவாதப் படுவதுண்டு. ஆனால், இன்று வரையில் ஒரு மூன்றாமுலக நாட்டில் இருப்பதைப் போன்று, சம்பளத்தில் பெரியளவு ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரவில்லை. 

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பாவில் வாழும் சாதாரண கூலித் தொழிலாளி கூட, ஒரு வசதியான வீட்டிற்கு வாடகை கட்டி, வருடத்திற்கு ஒரு தடவை வெளிநாட்டு சுற்றுலா சென்று வர முடிகின்றது. எல்லோருக்கும், தொழில் பாகுபாடு பார்க்காமல், சமமான சம்பளம் கொடுப்பதன் நோக்கமும் அது தான். இந்த பூமியில் பிறந்த மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். வருடம் முழுவதும் உழைத்தாலும், வறுமையில் வாட வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இல்லை. ஏழைகள் வாழ்வதில்லை. உயிரைக் காப்பாற்ற தப்பிப் பிழைக்கிறார்கள்.

நெதர்லாந்து நாட்டில், என்னென்ன வேலைக்கு எந்தளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை இங்கே தருகிறேன். அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள் மட்டுமே பல மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்கள். முதலாளித்துவ அமைப்பில் என்றும் மாறாமல் தொடர்ந்திருக்கும், அந்த ஏற்றத் தாழ்வு பற்றி இந்தப் பதிவு பேசவில்லை. 

அரசு, தனியார் துறையாக இருந்தாலும், மூளை, உடல் உழைப்பாளியாக இருந்தாலும், யார் என்ன வேலை செய்தாலும், அடிப்படை சம்பளத்தில் வித்தியாசம் இருப்பதில்லை. ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வருமானம் மட்டுமே முக்கியம்.

உதாரணத்திற்கு, தெருவில் குப்பை அள்ளும் தொழிலாளியின் (Vuilnisman) ஒரு வருட ஊதியம் (23.500), ஒரு சாதாரண அலுவலகப் பணியாளரின் (Datatypiste) ஒரு வருட ஊதியத்தை (18.500) விட அதிகமாகும்.

Gemiddeld salaris per beroep 
http://www.gemiddeld-inkomen.nl/gemiddeld-salaris-per-beroep/

Thursday, September 09, 2010

மேற்கில் சுரண்டப்படும் கிழக்கைரோப்பிய உழைப்பாளிகள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர், அவை மேற்குலக காலனிகளாக மாறி வருகின்றன. ஒரு புறம், மேற்கைரோப்பிய பெரும் வர்த்தக நிறுவனங்கள் அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மறு புறம், கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகள் மேற்கைரோப்பாவில் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகின்றனர். முன்னொரு காலத்தில் துருக்கி, மொரோக்கோ நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது அகதிகள் செய்து வந்த அடி மட்ட வேலைகளை தற்போது கிழக்கு ஐரோப்பிய தொழிலாளருக்கு கொடுக்கிறார்கள். உழைப்புச் சுரண்டலுக்கு தயாரான புதிய தொழிலாளர் படை ஒன்று அருகிலேயே, அதுவும் ஐரோப்பா என்ற சாம்ராஜ்யத்தினுள் கிடைக்கின்றது. இதனால் ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகள் விரட்டப்படுகின்றனர். இஸ்லாமிய எதிர்ப்பு, அகதிகள் தடுப்பு போன்ற கிளர்ச்சியூட்டும் அரசியலுக்கும் அதுவே அடிப்படைக் காரணம்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, இங்கே கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மிக மோசமாக சுரண்டப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளது.
Klaas Gaat Illegaal ஒரு செய்தியாளர் போலந்து நாட்டு தொழிலாளரின் அவலத்தை நேரில் கண்டு படமாக்கியுள்ளார். போலந்துக்காரரும் ஐரோப்பிய யூனியன் பிரஜைகள் தாம். ஆனால் போலந்தில் கிடைக்கும் ஊதியத்தை விட, நெதர்லாந்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வருகின்றனர். அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முகவர் நிறுவனம், ஆறு மாதம் தொடக்கம் ஒரு வருட ஒப்பந்தம் போட்டு விடுகின்றன. வேலை கடுமை காரணமாக இடை நடுவில் நாடு திரும்பிடா வண்ணம் தண்டப்பணம் அறவிடுகின்றன. அவற்றை செலுத்துவதற்காகவே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக "கரவன்" குடியிருப்புகளில் தொழிலாளர்கள் தங்க வைக்கப் படுகின்றனர். ஒடுக்கமான அறைகளைக் கொண்ட ஒவ்வொரு குடியிருப்பிலும் ஆறு பேர் தங்க வைக்கப் படுகின்றனர். மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தொழிலாளரின் முகாம்களை பார்த்தவர்களுக்கு இதனை விளக்கத் தேவையில்லை. வசதிக் குறைபாடுகளைக் கொண்ட சிதிலமடைந்த கரவன் குடியிருப்புகளுக்கு குறைந்தது ஆயிரம் யூரோக்கள் வாடகை அறவிடுகிறார்கள். (வெளியே நகரத்தில் ஐநூறு யூரோவுக்கு வசதியான வீடு வாடகைக்கு எடுக்கலாம். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. முகவர்கள் ஒப்பந்தத்தைக் காட்டி மிரட்டி வைக்கின்றனர்.) அதை விட குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்கள் விடும் சிறு சிறு தவறுகளுக்காக தண்டப் பணம் அறவிடும் கொடுமையும் நடக்கின்றது. துப்பரவு செய்யா விட்டால், அல்லது வீட்டினுள் உணவு வீசிக் கிடந்தால், இப்படி எத்தனையோ தவறுகளை கண்டுபிடித்து தண்டப்பணம் வசூலித்து விடுவார்கள்.

சிறு சிறு தவறுக்கெல்லாம் தண்டப்பணம் பிடித்துக் கொள்வதால் மாத இறுதியில் சம்பளப் பணம் சொற்பமாகவே மிஞ்சும். அதுவும் நிச்சயமில்லை. இரண்டு மாத சம்பளப்பணத்தை பிடித்து வைத்துக் கொள்வது சாதாரணம். தினசரி வேலைக்கு போவது மட்டுமே அவர்களுக்கு நிச்சயமான வாழ்வு. அனேகமாக காய்கறித் தோட்டங்களிலேயே போலந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சென்று விட வேண்டும். அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். சில நேரம் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வேலை செய்ததாக ஒரு உழைப்பாளி தெரிவித்தார். பயமுறுத்தல் காரணமாக பலர் தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். தேவாலயம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த ஒரு பெண் உழைப்பாளி, தான் பாலியல் ரீதியாக சுரண்டப் பட்டதாக தெரிவித்தார். இவையெல்லாம் இந்த ஆவணப் படத்தில் பதிவாகி உள்ளன.

நெதர்லாந்து செய்தியாளர், தனது உருவத்தை மாற்றி ருமேனிய தொழிலாளி போல நடித்து (under cover), இந்த தகவல்களை எல்லாம் சேகரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய மக்கள், சோஷலிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்ததாக பலர் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். அதே கிழக்கு ஐரோப்பிய மக்கள், ஜனநாயக ஐரோப்பிய யூனியனில் அடிமைகளான அவலத்தை இந்த வீடியோவில் காணலாம்.

ஆவணப்படத்தை இங்கேயுள்ள சுட்டியில் பார்வையிடலாம். (குறிப்பு: நெதர்லாந்து மொழி பேசும் வீடியோ)
Klaas Gaat Illegaal