Showing posts with label காஸா. Show all posts
Showing posts with label காஸா. Show all posts

Wednesday, July 23, 2014

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!


“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை சொன்னால், பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஈழத்தில் கொல்லப் பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும், ஓர் "இந்து நாடான" இந்தியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்தது. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு "முஸ்லிம் நாடான" சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. "ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை" வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza)  காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளன! அதற்கு என்ன காரணம்?

பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன. ஹமாஸ், புலிகள் போன்று, நீண்ட காலமாக எந்த வித விட்டுக் கொடுப்புகளுக்கும் முன்வரவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலை அடையாமல் ஓயப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப் பட்டது. (முன்னர் எகிப்து பற்றிய பதிவொன்றில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சவூதி அரேபியா உதவியதாக தவறுதலாக எழுதி இருந்தேன். அதனை ஏற்கனவே சில நண்பர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். எனக்குக் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அப்போது நடந்த தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.)

பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.) 

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. (Israel said to bomb Sudan weapon warehouse; http://www.timesofisrael.com/israel-said-to-bomb-sudan-weapon-warehouse/) அந்த தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதுடன், அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அனேகமாக, ஈரானில் இருந்து ஹமாசுக்கு அனுப்பப் பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப் பட்டதாகவும், அதனாலேயே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையை தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. அது ஏற்கனவே தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான “முள்ளிவாய்க்கால் தீர்வு”. அதன் முதல் கட்டமாக, இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டாம் கட்டமாக, தரை வழியாக படையினரை நகர்த்தியுள்ளது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதை ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில இனவாதிகள் “இனப்படுகொலை செய்வதில் தவறில்லை” என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

ஹமாஸ் அழிக்கப் பட்ட பின்னர், அந்த அரசியல் வெற்றிடத்தில் அப்பாசின் பதா கட்சி பதவியில் அமர்த்தப் படும். “அழிவுகளில் இருந்து மீண்டெழுதல், மீள் கட்டுமானம், இன நல்லிணக்கம்….” இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களுடன் அந்தத் திட்டங்கள் நிறைவேறும். 

இதெல்லாம் நடக்கும் வரையில் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டிருக்கும். ஐ.நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டதாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும். போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கும். ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். அதற்கும் அப்பால் எதுவும் நடக்காது.

இவை எல்லாம் ஏற்கனவே ஈழத் தமிழர்கள் கண்டு அனுபவித்த சம்பவங்கள் தான். ஏகாதிபத்திய நாடுகளால் வன்னியில் நிறைவேற்றப் பட்ட நகல் திட்டம், இந்த முறை காஸாவில் பிரயோகிக்கப் படுகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல், “ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

*******


இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன், உலக நாடுகளில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலின் போர்க்குற்றங்களில் பங்காளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 

கூட்டறிக்கையில் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கைகள்: 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் கண்டிக்கப் பட வேண்டும். 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். 
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும். 
  • இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும். - காஸா, ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட வேண்டும். 
  • 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப் பட வேண்டும். 
  • ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும்புதல் உறுதி செய்யப் பட வேண்டும். - இஸ்ரேலுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் இரத்து செய்யப் பட வேண்டும். 
  • கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் விபரம் : 
1. Communist Party of Albania
2. Algerian Party for Democracy and Socialism
3. The Communist Party of Australia
4. Democratic Progressive Party (Bahrain)
5. Communist Party of Bangladesh
6. Bangladesh Workers Party
7. Communist Party of Brazil
8. British Communist Party
9. New Communist Party of Britain
10. Communist Party of Canada
 11. Chilean Communist Party
12. Croatia, Socialist Workers Party
13. AKEL (Cyprus)
14. Communist Party of Denmark
15. FARC-EP, PCCC, (Colombia)
16. Communist Party of Finland
17. The German Communist Party
18. Communist Party of Greece
19. Hungarian Workers' Party
20. Communist Party of India (Marxist)
21. The Tudeh Party (Iran)
22. Communist Party of Ireland
23. The Communist Party of Israel
24. The Italian Communist Party
25. Jordanian Communist Party
26. Communist Party of Luxembourg
27. Communist Party of Mexico
28. Popular Socialist Party - National Political Union, Mexico
29. New Communist Party of the Netherlands
30. Communist Party of Norway
31. Palestinian Communist Party
32. Palestinian People's Party
33. Communist Party of Peru
34. Philippine Communist Party (PKP-1930)
35. Communist Party of Poland
36. Portuguese Communist Party
37. Romanian Communist Party
38. The Communist Party of the Russian Federation
39. South African Communist Party
40. Russian Communist Workers' Party
41. Yugoslavia, New Communist Party
42. Communist Party of Serbia
43. Communist Party of Slovakia
44. Communist Party of the Peoples of Spain; Catalonia,
45. Communist Party of Spain
46. Sudanese Communist Party
47. Communist Party of Sweden
48. Syrian Communist Party
49. League of Communists of Ukraine
50. Austrian Workers' Party
51. Belarusian Communist Workers' Party
52. Communist Party of Sweden

Thursday, July 10, 2014

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர்


ஈழப் போராட்டம் தொடங்கிய எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே ஆசியக் கண்டத்தில் உள்ள, இரண்டு நவ- காலனித்துவ நாடுகளில் நடக்கும் ஈழப் போராட்டமும், பாலஸ்தீன போராட்டமும் ஒன்று என்று உளப்பூர்வமாக நம்பினார்கள்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் கூட அந்தளவு ஈழ ஆதரவு இருக்கவில்லை. "இந்தியாவில் இருந்து பிழைக்கப் போனவர்கள் தனி நாடு கேட்பது நியாயமா?" என்று தமிழர்கள் கூட கேட்டார்கள். தமிழகத்தில் புகலிடம் கோரிய ஈழப் போராளிகள், தங்குவதற்கு இடம் தேடித் திரிந்த காலம் ஒன்றிருந்தது. தமிழினப் பெருமை பேசிய அரசியல்வாதிகள் கூட ஆதரிக்கவில்லை.

அந்த வரலாற்றை பலர் இன்று மறந்து விட்டதற்கு, பிற்காலத்தில் ஊடுருவிய மொசாட், ரோ உளவாளிகளின் சூழ்ச்சிகளும் ஒரு காரணம். இடை நடுவில் புகுந்து, ஈழப் போராட்டத்தை கடத்திச் சென்றுள்ள இந்துத்துவா வாதிகள், ஈழத் தமிழர்களையும், பாலஸ்தீனர்களையும் நிரந்தரமாக பிரித்து விடப் பார்க்கிறார்கள்.


இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மத்தியில், மீண்டும் ஹமாஸ் மீதான ஆதரவு அதிகரித்து வருகின்றது. முன்பு ஈழத்தில் வன்னிப் பிரதேசத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவை தெரிந்தவர்களுக்கு, இன்றைய காஸா நிலைமையை புரிந்து கொள்வது எளிது.

காஸா போரை ஹமாஸ் தான் ஆரம்பித்து வைத்தது என்று இஸ்ரேல் வழமை போல குற்றம் சாட்டியுள்ளது. முன்னர் ஈழப்போர் நடந்த காலங்களிலும், சிறிலங்கா அரசு எப்போதும் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது வழமை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தை வைத்திருக்கும் அரசுகள், போரின் போக்கை நிச்சயிக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

2009 ம் ஆண்டு, இறுதிப் போரில் புலிகள் அழிக்கப் பட்டது மாதிரி, இந்த வருடம் காஸாவில் ஹமாஸ் அழிக்கப் படா விட்டாலும், ஒரேயடியாக அங்கிருந்து விரட்டியடிக்கப் படலாம். ஏனெனில், அந்தளவுக்கு ஹமாஸ் பலவீனமாக உள்ளது. இந்தப் போரை ஹமாஸ் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், ஹமாஸ் கிளர்ச்சிப் படையினரை ஆதரித்தது. அதனால், ஆசாத் அரசு ஹமாசுக்கு வழங்கிய உதவிகளை நிறுத்திக் கொண்டது. கூடவே ஈரானும் கைவிட்டு விட்டது. அடுத்ததாக, அயல்நாடான எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் ஹமாசுக்கு நிறைய உதவிகள் கிடைத்தன. ஆனால், புதிய எகிப்திய அரசாங்கம், எந்த உதவியும் செய்யாதது மட்டுமல்ல, ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதற்கு பயன்பட்டு வந்த இரகசிய சுரங்கப் பாதைகளையும் மூடி விட்டது. ஈழத்தில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு சென்ற விநியோகப் பாதைகள் தடுக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது.

ஈழத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சமாதான காலத்தில், வன்னியில் புலிகளின் நிர்வாகம் குறித்து, அங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தன. சமாதான காலங்களில் மக்களை தம்மோடு வைத்திருப்பதற்காக புலிகள் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. வழமையாக, போர் நடக்கும் காலங்களில், புலிகளுக்கான தமிழ் மக்களின் தார்மீக ஆதரவு உச்சத்தில் இருக்கும். பாலஸ்தீனத்திலும் அது தான் நிலைமை.

வன்னியில் புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், காஸாவில் ஹமாசுக்கு ஏற்பட்டன. 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில், காஸாவில் ஹமாஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்தக் காலங்களில், ஹமாஸ் மட்டுமே தங்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மக்கள் அவர்கள் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்.

ஆயினும், ஹமாஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், காஸாவில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் தலைகாட்டின. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைகள், எரிபொருள், தண்ணீர் தட்டுப்பாடுகள், இது போன்ற குறைகளை ஹமாஸ் நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், காஸா மக்களுக்கும், ஹமாசுக்கும் இடையில் விரிசல் காணப் பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையானது அந்த நிலைமையை மாற்றியுள்ளது. 

ஈழப்போர் நடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தது போன்று, இன்று மீண்டும் காஸா மக்கள் பெருமளவில் ஹமாஸை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை. இஸ்ரேலிய படையினரின் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, ஏதாவது செய்யக் கூடியவர்கள் ஹமாஸ் மட்டுமே என்பது அந்த மக்களின் நம்பிக்கை. முன்பு வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களும், அவ்வாறு தான் தங்களை பாதுகாப்பதற்காக புலிகள் மட்டுமே இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

வன்னி மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் நடந்த காலங்களில், புலிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டுமென கோரும் துண்டுப் பிரசுரங்களை, சிறிலங்கா வான் படையினர் தூவினார்கள். அதே மாதிரி, இன்று காஸா பகுதியில் இஸ்ரேலிய வான் படையினர் செய்கின்றனர். ஹமாஸ் உறுப்பினர்களை விட்டு விலகி இருக்குமாறு மக்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் விசிறப் படுகின்றன. ஆனால், யார் ஹமாஸ் உறுப்பினர் என்று யாருக்குத் தெரியும்? மேலும் காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் நிர்வாகம் தான் நடக்கின்றது. அதனால், எல்லா இடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் பரவலாக காணப் படுவார்கள்.

காஸா என்பது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. இஸ்ரேலுடனான அனைத்து எல்லைகளும் மூடப் பட்டுள்ளன. கடலிலும் இஸ்ரேலிய கடற்படை ரோந்து சுற்றித் திரிகின்றது. எகிப்துடனான சிறு துண்டு எல்லைப் பிரதேசத்திலும் யாரையும் வர விடாமல், எகிப்திய இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு பிரதேசத்தில் இருந்து, யாரும் அகதியாகக் கூட வெளியேற முடியாது.

பாலஸ்தீனத்தில் நடப்பது போரல்ல. அது ஓர் இனப்படுகொலை. ஆனால், உலக நாடுகள் அதைப் பற்றிக் கவலைப் படாமல், உலக கால்பந்தாட்டப் போட்டிகளை கண்டுகளித்துக் கொண்டிருக்கின்றன.

Friday, February 10, 2012

ஆவணப் படம் : "காஸாவின் கண்ணீர்" (Tears of Gaza)

ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடந்தது. இரண்டையும் இன்று உலகம் மறந்து விட்டது. பாலஸ்தீனர்கள் வாழும் திறந்தவெளிச் சிறையான காஸா பகுதியை, இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவங்களை வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வே நாட்டு மருத்துவரும், சமூக ஆர்வலருமான Vibeke Lokkeberg காஸாவின் அவலத்தை, Tears of Gaza எனும் ஆவணப் படமாக பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நகர திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட திரைப்படம், தற்பொழுது இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. (குறிப்பு: நெஞ்சை உறைய வைக்கும் கோரமான காட்சிகள் இருப்பதால், இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.)

Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6

Tuesday, February 24, 2009

ஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்



நேற்று ஜெர்மனி, இன்று இஸ்ரேல்


Video: UK Jewish MP - Israel acting like Nazis in Gaza
On 16 January 2009 the UK Jewish Member of Parliament, Sir Gerald Kaufman, spoke in the House of Lords on "Israel acting like Nazis in Gaza".

Tuesday, January 27, 2009

BBC தடை செய்த காஸா உதவி கோரும் வீடியோ


போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, மனிதாபிமான உதவி கோரும் வீடியோ விளம்பரம் ஒன்றை, BBC மற்றும் SKY ஆகிய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்ப மறுத்துள்ளன. அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Gaza Aid Appeal: BANNED by the BBC and SKY


Sky Won't Screen Gaza Aid Appeal

Tuesday, January 13, 2009

வீடியோ சாட்சியம்: "இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை மீறியது"


இஸ்ரேல் காஸா மீதான தனது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு, ஹமாஸ் எறிகணைகள் ஏவியதை காரணமாக காட்டி வருகின்றது. ஹமாசின் ராக்கெட் தாக்குதல் போர்நிறுத்த மீறல் என்றும், அதற்கான பதிலடியாகவே இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை அமைந்தது என்றும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூறுவதை, சர்வதேச ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.

ஹமாசின் ராக்கெட் தாக்குதல் தான் இஸ்ரேலை போருக்குள் வலிந்து இழுத்ததா? நவம்பரில் சில பாலஸ்தீன போராளிகளை இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்றமையே, முதலாவது போர் நிறுத்த மீறலாகும். அதேநேரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த வேளை, ஹமாஸ் எந்தவொரு எறிகணை தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த உண்மைகளை இஸ்ரேலிய அதிகாரி Mark Regev தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அதேநேரம் ஹமாஸ் (ஆயுதக் கடத்தலுக்கு) சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்ததால், "முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடாகவே" இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தது என்ற புதிய கதையையும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சி.என்.என். ஒளிபரப்பிய செய்தித் துணுக்கு ஒன்றும், இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை முதலில் மீறியது என்று குறிப்பிடப்பட்டது. இவ்விரண்டு வீடியோக்களையும் இந்தப் பதிவில் பார்வையிடலாம். இஸ்ரேலின் காஸா மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு, ஒரு போர்க்கால குற்றம் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.


Who Broke The Cease Fire - Hamas or Israel 2008
Israel Confirms Hamas Fired NO Rockets



CNN Confirms Israel Broke Ceasefire First



________________________________________

Thursday, January 08, 2009

"பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு

WARNING
This blog contains pictures of children killed in Israel's attack on Gaza.

முற்றுகைக்குள் அல்லலுறும் பாலஸ்தீன காஸா பகுதி, நாஜிகளின் வதைமுகாம் போல காட்சிதருவதாக, வட்டிகான் கார்டினல் ஒருவர் இத்தாலிய பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்று இஸ்ரேலிய அரசை கொதிப்படைய வைத்துள்ளது. "மனித உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, இஸ்ரேலும் ஹமாசும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்." என்ற பாப்பரசரின் வேண்டுகோளை பிரதிபலித்த கார்டினல், காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி பற்றி கருத்து தெரிவிக்கும் போதே வதைமுகாமுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பதிலாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு, "பாப்பரசரும், வட்டிக்கானும் ஹமாசிற்காக பிரச்சாரம் செய்வதாக" குற்றஞ்சாட்டியுள்ளது.(Israel Accuses Vatican of Spouting 'Hamas Propaganda')



12 நாட்களாக தொடரும், காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரில், இதுவரை 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் 220 பேர் சிறுவர்கள். (
Herald Sun) இராணுவரீதியாக இஸ்ரேல் மேலாண்மை வகித்தாலும், சர்வதேச பிரச்சார யுத்தத்தில் கடும் தோல்வியடைந்துள்ளது. காஸா பகுதிக்குள் சர்வதேச ஊடகவியலாளர் செல்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் அனுமதி கொடுக்க மறுத்து வருகின்றது. அதேநேரம் விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களால் கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களை கைகளில் ஏந்திய பெற்றோரின் படங்கள், உலக மக்கள் மத்தியில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஐ.நா.மன்றம் தனது பாடசாலை தாக்கப்பட்டமை குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
UN: No Hamas Fighters in Bombed Gaza School





________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Tuesday, January 06, 2009

ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்


"காஸா" என்ற கூண்டுக்குள் அகப்பட்ட, ஒன்றரை மில்லியன் மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவிக்கின்றன. ஹமாஸ் மீது நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறிய போதும்; முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் எல்லோரையும் இஸ்ரேலிய ஆயுதங்கள் பலி எடுக்கின்றன. கடைசியாக கூட ஐ.நா. சபை நடத்தி வந்த பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகள் மீது இஸ்ரேலிய படைகள் குண்டு வீசியதில் நாற்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இத்துடன் இரண்டாவது தடவையாக பாடசாலைகளை குறிவைத்து தாக்கி உள்ளது. போர் நடக்கும் வேளை பாதுகாக்கப்பட வேண்டியவை என்று "அப்பாவித்தனமாக" எதிர்பார்க்கப்படும்,வழிபாட்டு ஸ்தலங்கள், பல்கலைக்கழகம், மருத்துவ மனை, அம்புலன்ஸ் வண்டிகள், இவை எல்லாம் தாக்கப்பட்டுள்ளன.

இதுவரை அறுநூறு பேர் அளவில் கொல்லப்பட்டாலும், "சர்வதேச சமூகம்" முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கின்றது. "போரில் தர்மம் கிடையாது. எல்லாமே ஹமாஸ் இலக்குகள் தாம். ஹமாஸ் மக்களை கேடயமாக பயன்படுத்துவதால், பொது மக்களும் மரணிக்கின்றனர்." என்று நியாயவாதம் பேசுகின்றது இஸ்ரேலிய அரசு. "அது சரி தான். இஸ்ரேல் தனது தேசிய நலன்களை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கை அவசியம். ஹமாஸ் தான் சண்டையை தொடக்கி வைத்தது." இவ்வாறு பக்கப் பாட்டு பாடுகின்றன, அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும். இஸ்ரேலின் போர்க்கால குற்றங்களை யாரும் கண்டு கொள்ளாததால், தானே ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் போவதாக ஈரான் கூறுகின்றது.


அரபு நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மக்கள் எதிர்த்து வருகின்றனர். தமது அரசாங்கங்களின் கையாலாகாத தனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கி சில நாட்களில், உணவு, மருந்து போன்ற நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு உதவிக் கப்பல் ஒன்று சைப்ரசில் இருந்து காஸா நோக்கி புறப்பட்டது. சர்வதேச தொண்டர்களுடன், சில சைப்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கப்பலில் சென்றனர். நிவாரணக் கப்பலின் வருகை குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இஸ்ரேலிய கடல் எல்லைக்கு சிறிது தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து, இஸ்ரேலிய கடற்படைகள் சுற்றிவளைத்தன. இருட்டில் எந்த அறிவிப்பும் இன்றி வேகமாக வந்த கடற்படைக் கப்பல் மோதியதால், நிவாரணக் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. கப்பல் மூழ்கும் தருவாயில் இருந்த போதும், ஒருவாறு சமாளித்து லெபனான் கரையை போய் சேர்ந்தது. கிப்ரால்டரில் பதிவு செய்யப்பட்ட "டிக்னிட்டி" என்ற நிவாரணக் கப்பலை தகர்த்த இஸ்ரேலின் பயங்கரவாத செயலை, எந்தவொரு உலகத் தலைவரும் கண்டிக்கவில்லை.

இதற்கிடையே இம்முறை இஸ்ரேல் நடத்தும் "அதி உயர் தொழில்நுட்ப" யுத்தத்தில், இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக பல சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. "வெள்ளை பொஸ்பரஸ்" என்ற தூள் விமான மூலம் தூவப்படுவதாகவும், இது எலும்பு மச்சையை தாக்கி புற்று நோயை உண்டாக்க வல்லது என்றும் கருதப்படுகின்றது. இதுவரை சில ஆங்கில மொழி பதிவர்கள் மட்டுமே வெளியிட்ட இந்த தகவலை,
The Times பத்திரிகையும் உறுதிப் படுத்தியுள்ளது.

Massacring Gaza Kids - Not Seen on CNN


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பரித்தது
You Tube தடை செய்த "காஸா படுகொலை வீடியோ"
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Monday, January 05, 2009

You Tube தடை செய்த "காஸா படுகொலை வீடியோ"


காஸா நகர சந்தை ஒன்றில், இஸ்ரேலிய விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டு அல்லது குற்றுயிராகக் கிடக்கும் மக்களை காட்டும் வீடியோ ஒன்றை You Tube தடை செய்துள்ளது. ஒரு பாலஸ்தீன சமூக ஆர்வலர், தனது மொபைல் தொலைபேசி கமெராவால் பதிவுசெய்து இணையத்தில் உலாவவிட்ட இந்த வீடியோ சர்வதேச ஊடகங்கள் உலகிற்கு மறைக்கும் காட்சிகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

This Video Shows The Reality Of Israel's Attack On Gaza. It Should only be watch by a mature audience. This video clip was taken with a mobile camera immediately after a terrorist Israeli air strike hit a busy market early on Saturday 03, Jan 2009, Gaza.





Sunday, August 24, 2008

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் "வெற்று தீர்மானங்களை" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. "சர்வதேச சமூகமும்" (யார் அது?) அக்கறைப்படுவதில்லை. "நடுநிலை தவறாத" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது "சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.

இத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற்சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். "Free Gaza" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.

Free Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.

சைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

Free Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற "நடுநிலை தவறாத" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.



இதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.

Tell a Friend

_________________________________________________