Thursday, July 10, 2014

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர்


ஈழப் போராட்டம் தொடங்கிய எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே ஆசியக் கண்டத்தில் உள்ள, இரண்டு நவ- காலனித்துவ நாடுகளில் நடக்கும் ஈழப் போராட்டமும், பாலஸ்தீன போராட்டமும் ஒன்று என்று உளப்பூர்வமாக நம்பினார்கள்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் கூட அந்தளவு ஈழ ஆதரவு இருக்கவில்லை. "இந்தியாவில் இருந்து பிழைக்கப் போனவர்கள் தனி நாடு கேட்பது நியாயமா?" என்று தமிழர்கள் கூட கேட்டார்கள். தமிழகத்தில் புகலிடம் கோரிய ஈழப் போராளிகள், தங்குவதற்கு இடம் தேடித் திரிந்த காலம் ஒன்றிருந்தது. தமிழினப் பெருமை பேசிய அரசியல்வாதிகள் கூட ஆதரிக்கவில்லை.

அந்த வரலாற்றை பலர் இன்று மறந்து விட்டதற்கு, பிற்காலத்தில் ஊடுருவிய மொசாட், ரோ உளவாளிகளின் சூழ்ச்சிகளும் ஒரு காரணம். இடை நடுவில் புகுந்து, ஈழப் போராட்டத்தை கடத்திச் சென்றுள்ள இந்துத்துவா வாதிகள், ஈழத் தமிழர்களையும், பாலஸ்தீனர்களையும் நிரந்தரமாக பிரித்து விடப் பார்க்கிறார்கள்.


இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மத்தியில், மீண்டும் ஹமாஸ் மீதான ஆதரவு அதிகரித்து வருகின்றது. முன்பு ஈழத்தில் வன்னிப் பிரதேசத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவை தெரிந்தவர்களுக்கு, இன்றைய காஸா நிலைமையை புரிந்து கொள்வது எளிது.

காஸா போரை ஹமாஸ் தான் ஆரம்பித்து வைத்தது என்று இஸ்ரேல் வழமை போல குற்றம் சாட்டியுள்ளது. முன்னர் ஈழப்போர் நடந்த காலங்களிலும், சிறிலங்கா அரசு எப்போதும் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது வழமை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தை வைத்திருக்கும் அரசுகள், போரின் போக்கை நிச்சயிக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

2009 ம் ஆண்டு, இறுதிப் போரில் புலிகள் அழிக்கப் பட்டது மாதிரி, இந்த வருடம் காஸாவில் ஹமாஸ் அழிக்கப் படா விட்டாலும், ஒரேயடியாக அங்கிருந்து விரட்டியடிக்கப் படலாம். ஏனெனில், அந்தளவுக்கு ஹமாஸ் பலவீனமாக உள்ளது. இந்தப் போரை ஹமாஸ் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், ஹமாஸ் கிளர்ச்சிப் படையினரை ஆதரித்தது. அதனால், ஆசாத் அரசு ஹமாசுக்கு வழங்கிய உதவிகளை நிறுத்திக் கொண்டது. கூடவே ஈரானும் கைவிட்டு விட்டது. அடுத்ததாக, அயல்நாடான எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் ஹமாசுக்கு நிறைய உதவிகள் கிடைத்தன. ஆனால், புதிய எகிப்திய அரசாங்கம், எந்த உதவியும் செய்யாதது மட்டுமல்ல, ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதற்கு பயன்பட்டு வந்த இரகசிய சுரங்கப் பாதைகளையும் மூடி விட்டது. ஈழத்தில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு சென்ற விநியோகப் பாதைகள் தடுக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது.

ஈழத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சமாதான காலத்தில், வன்னியில் புலிகளின் நிர்வாகம் குறித்து, அங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தன. சமாதான காலங்களில் மக்களை தம்மோடு வைத்திருப்பதற்காக புலிகள் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. வழமையாக, போர் நடக்கும் காலங்களில், புலிகளுக்கான தமிழ் மக்களின் தார்மீக ஆதரவு உச்சத்தில் இருக்கும். பாலஸ்தீனத்திலும் அது தான் நிலைமை.

வன்னியில் புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், காஸாவில் ஹமாசுக்கு ஏற்பட்டன. 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில், காஸாவில் ஹமாஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்தக் காலங்களில், ஹமாஸ் மட்டுமே தங்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மக்கள் அவர்கள் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்.

ஆயினும், ஹமாஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், காஸாவில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் தலைகாட்டின. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைகள், எரிபொருள், தண்ணீர் தட்டுப்பாடுகள், இது போன்ற குறைகளை ஹமாஸ் நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், காஸா மக்களுக்கும், ஹமாசுக்கும் இடையில் விரிசல் காணப் பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையானது அந்த நிலைமையை மாற்றியுள்ளது. 

ஈழப்போர் நடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தது போன்று, இன்று மீண்டும் காஸா மக்கள் பெருமளவில் ஹமாஸை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை. இஸ்ரேலிய படையினரின் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, ஏதாவது செய்யக் கூடியவர்கள் ஹமாஸ் மட்டுமே என்பது அந்த மக்களின் நம்பிக்கை. முன்பு வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களும், அவ்வாறு தான் தங்களை பாதுகாப்பதற்காக புலிகள் மட்டுமே இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

வன்னி மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் நடந்த காலங்களில், புலிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டுமென கோரும் துண்டுப் பிரசுரங்களை, சிறிலங்கா வான் படையினர் தூவினார்கள். அதே மாதிரி, இன்று காஸா பகுதியில் இஸ்ரேலிய வான் படையினர் செய்கின்றனர். ஹமாஸ் உறுப்பினர்களை விட்டு விலகி இருக்குமாறு மக்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் விசிறப் படுகின்றன. ஆனால், யார் ஹமாஸ் உறுப்பினர் என்று யாருக்குத் தெரியும்? மேலும் காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் நிர்வாகம் தான் நடக்கின்றது. அதனால், எல்லா இடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் பரவலாக காணப் படுவார்கள்.

காஸா என்பது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. இஸ்ரேலுடனான அனைத்து எல்லைகளும் மூடப் பட்டுள்ளன. கடலிலும் இஸ்ரேலிய கடற்படை ரோந்து சுற்றித் திரிகின்றது. எகிப்துடனான சிறு துண்டு எல்லைப் பிரதேசத்திலும் யாரையும் வர விடாமல், எகிப்திய இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு பிரதேசத்தில் இருந்து, யாரும் அகதியாகக் கூட வெளியேற முடியாது.

பாலஸ்தீனத்தில் நடப்பது போரல்ல. அது ஓர் இனப்படுகொலை. ஆனால், உலக நாடுகள் அதைப் பற்றிக் கவலைப் படாமல், உலக கால்பந்தாட்டப் போட்டிகளை கண்டுகளித்துக் கொண்டிருக்கின்றன.

No comments: