Showing posts with label கம்யூனிச யூதர்கள். Show all posts
Showing posts with label கம்யூனிச யூதர்கள். Show all posts

Wednesday, July 19, 2017

"தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? ]
(பகுதி : எட்டு)

"யூதர்கள் அடக்கப்படும் போது, நான் ஒரு யூதன். பாலஸ்தீனர்கள் அடக்கப்படும் போது, நான் ஒரு பாலஸ்தீனன்." - Shehata Harun (எகிப்திய யூத கம்யூனிஸ்ட்)

யூதர்கள் என்றாலே அவர்களை தீவிர தேசியவாதிகள் போலவும், இனப்பற்றுக் கொண்டவர்களைப் போலவும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தமிழினவாதி, தன்னைப் போலவே யூதர்களையும் இனவாதிகளாக கருதுவதில் வியப்பில்லை. சில நேரம், "தூய" முதலாளித்துவவாதிகளும் யூதர்களை தேசிய உணர்வு கொண்டவர்களாக காட்ட விளைகின்றனர். அதற்கு ஒரு உதாரணம், "வார்சோ தடுப்பு முகாம் எழுச்சி." இரண்டாம் உலகப் போர் காலத்தில், வார்சோ நகர தடுப்பு முகாமில் இருந்த யூதர்கள், நாஸிப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரித்தார்கள். அந்த கிளர்ச்சியை ஒழுங்குபடுத்திய யூதர்கள் அனைவரும் சோஷலிச தொழிற்சங்கம் ஒன்றை சேர்ந்தவர்கள். "போலந்து, லிதுவேனியா யூத தொழிலாளர் சங்கம்" (General Jewish Labour Bund of Lithuania, Poland and Russia) அன்றைய ஐரோப்பாவில், சியோனிச தேசியவாதிகளுக்கு போட்டியாக உருவானது. வியன்னாவில் வாழ்ந்த தியோடோர் ஹெர்சல் உருவாக்கிய சியோனிச தேசியவாதம், முதலாளித்துவம் சார்பு கொண்டிருந்தது. யூத முதலாளிகளும் அதற்கு நிதி கொடுத்து வளர்த்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. ஐரோப்பாவில் யூத இனப்பிரச்சினைக்கு தீர்வாக, பாலஸ்தீனாவில் இஸ்ரேல் அமைக்கும் திட்டத்தை வரைந்தார்கள். நிச்சயமாக ஹிட்லரும் அந்த திட்டத்தை வரவேற்றிருப்பான். நாஸிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே யூத இனவழிப்பை ஆரம்பிக்கவில்லை. அதற்கு சில வருடங்கள் எடுத்தன. அது வரையில், பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பிய யூதர்களை, நாஸிகள் தடுக்கவில்லை. மாறாக யூதர்கள் தாமாகவே ஜெர்மனியை விட்டுச் செல்கிறார்கள் என்று மகிழ்ந்திருப்பார்கள்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி உச்சத்தில் இருந்தது. அன்று தொழிற்சாலைகளின் பெருக்கத்திற்கேற்ப, தொழிலாளர்களும் பெருகிக் கொண்டிருந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கணிசமான அளவு யூத தொழிலாளர்கள் சோஷலிச தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டனர். காலப்போக்கில் யூதர்களுக்கு என்று தனியான தொழிற்சங்கம் உருவானது. போர்க்குணாம்சம் மிக்க யூத தொழிற்சங்கவாதிகள் வார்சோ எழுச்சியை ஒழுங்கமைத்தில் வியப்பில்லை. தமிழ் பிற்போக்குவாதிகள், யூதர்களின் சோஷலிச அரசியலை இருட்டடிப்பு செய்வது மட்டுமல்ல, அதனை யூத தேசிய இன எழுச்சியாக காட்ட விளைகின்றனர். அதனை இருட்டடிப்பு செய்தால் தானே, யூதர்கள் பாலஸ்தீன மண்ணுக்கு (இஸ்ரேலுக்கு) உரிமையானவர்கள் என்று நிறுவ முடியும்? யூத தொழிற்சங்கத்தினரின் முக்கிய கோஷங்களில் ஒன்று: "பாலஸ்தீனத்தின் பனை மரங்கள் எனக்கு அந்நியமானவை." யூத தொழிற்சங்கவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் சம உரிமை கோரினார்கள். அதே நேரம், சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வேண்டினார்கள். இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலத்தில், யூத தொழிற்சங்கம் தனது இறுதி மூச்சை விட்டது. இருப்பினும், யூதர்கள் கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து நாசிகளை எதிர்த்து போராடினார்கள்.

ஏற்கனவே ரஷ்யாவில் லெனினின் போல்ஷெவிக் கட்சியில் பெருமளவு யூதர்கள் சேர்ந்திருந்தார்கள். எத்தனையோ பேர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தனர். செம்படையின் தளபதி லியோன் ட்ராஸ்கி கூட ஒரு யூதர் தான். கம்யூனிச தத்துவ ஞானி, கார்ல் மார்க்ஸ் கூட ஒரு யூதர் என்பதை மறந்து விடலாகாது. உலகில் பிரபலமான யூத இடதுசாரிகளின் பட்டியலையே கொடுக்க முடியும். Karl Marx, Murray Bookchin, Judith Butler, Noam Chomsky, Eric Hobsbawm, Harold Laski, Harold Pinter, Erich Fromm, Naomi Klein and Howard Zinn,... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இன்றைய யூத இடதுசாரிகள், சியோனிச எதிர்ப்பாளர்களாகவும், பாலஸ்தீன விடுதலையின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். அவர்களின் அதே கருத்துகளை நாம் தமிழில் கூறினால், "இஸ்ரேலிய எதிர்ப்பாளர்" முத்திரை குத்துவார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் ஒரு கம்யூனிசக் கட்சி இருக்கின்றது. இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்ற அரேபியர்கள், தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் வாக்குப் போடுவார்கள். ஏனெனில் பாலஸ்தீனரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் யூதரின் கட்சி அது ஒன்று தான். பயங்கரமான கம்யூனிச எதிர்ப்பாளர்களான, தமிழ் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும் உண்மைகள் இவை. என்ன செய்வது?

பாலஸ்தீனத்தில் உருவான யூத காலனிகள் (கிப்பூத்ஸ் பண்ணைகள்) பிற்காலத்தில் இஸ்ரேலிய தேசமாகியது. யூத தேசிய நிதியம் வாங்கிக் கொடுத்த நிலத்தில் கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகின. அவை சுயசார்புப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன. அன்று பாலஸ்தீனம் சென்று குடியேறிய யூதர்கள் முன்னால் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள். அங்கெல்லாம் கம்யூனிச தத்துவம் பிரபலமாக இருந்தது. மேலும் குடியேற வந்த யூதர்களும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்கள் இருந்திருக்க மாட்டார்களா? ஆரம்ப கால கிபூத்ஸ் பண்ணைகள் பல கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. சமூகம் கம்யூனிச சித்தாந்தப் படி இயங்கியது. உற்பத்தி சாதனங்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து வயலில் வேலை செய்தார்கள். பிள்ளைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு, கணவனும் மனைவியும் சேர்ந்தே வேலைக்கு சென்றார்கள். மூன்று வேளை உணவு, எல்லோருக்கும் பொதுவாக சமைத்து பரிமாறப்பட்டது. ஒரே மண்டபத்தில் அனைவரும் சேர்ந்தே உணவருந்துவார்கள். திருமணமான ஜோடிகளுக்கான வீடுகள் மட்டுமே தனித்தனியாக இருந்தன.

கம்யூனிச கிப்பூத்ஸ் பண்ணைகளில், எங்கு பார்க்கிலும் "மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்" ஆகியோரின் உருவப்படங்கள் காணப்பட்டன. கூட்டுறவுப் பண்ணைக்கென்றே தனியான கம்யூனிசக் கட்சி இயங்கியது. பொதுக்குழு கிரமமாக கூட்டப்பட்டு, சமூகத்தின் தேவைகள் ஆராயப்பட்டன. கிப்பூத்ஸ் சமூகக் கட்டுப்பாடுகள், நிதிப் பங்கீடு, உறுப்பினர்களின் பிரச்சினைகள் போன்றனவற்றிற்கு கட்சியே பொறுப்பு. கம்யூனிச பண்ணைகளில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை. பண்டமாற்று மூலமே பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருந்தது. அதாவது ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்ற தொழிலை செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை நல்கினார்கள். பாடசாலைகளிலும் குழந்தைகளுக்கு பொதுவுடமைக் கல்வியே வழங்கப் பட்டது. குழந்தைகளே கடவுள் இல்லை என்று கூறுமளவிற்கு, அங்கே மதத்திற்கு இடமளிக்கப் படவில்லை. ஆயினும், தனிப்பட்ட மத நம்பிக்கையாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 1948 ல் இஸ்ரேல் உருவான பின்னர், கம்யூனிச பண்ணைகள் தனியார்மயமாக்கப் பட்டன. இளம் தலைமுறை அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நகரங்களை நோக்கி படையெடுத்தார்கள். பன்மடங்கு பலமான முதலாளித்துவத்தையும், நுகர்பொருள் கலாச்சாரத்தையும் எதிர்த்து நிற்க முடியாத கம்யூனிச கிப்பூத்ஸ் பண்ணைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. (Kibbutz Returns With Moneyed Communism)

இஸ்ரேல் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, 1934 ல், "சோஷலிச யூத தேசம்" உருவாகி விட்டது. ரஷ்யாவின் கிழக்கு சைபீரியப் பகுதியில், சீன எல்லையோரமாக அமைந்துள்ளது "யூத சுயாட்சிப் பிரதேசம்." (Jewish Autonomous Oblast) அன்றைய சோவியத் யூனியனில், அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டன. அதே போல, யூதர்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரசு, இன்றும் ரஷ்யாவில் இயங்கிக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக யிட்டிஷ் உள்ளது. "யிட்டிஷ்", ஹீபுரு, மற்றும் பல ஐரோப்பிய மொழிச் சொற்கள் கலந்த மொழி. ஐரோப்பிய யூதர்களால் பேசப்பட்டு வந்தது. இறந்த மொழியான ஹீபுருவுக்கு பதிலாக, புழக்கத்தில் இருந்த யிட்டிஷ் மொழியை மேம்படுத்துவதே சிறந்ததாக கருதினார்கள். சோஷலிசப் பொருளாதாரக் கட்டுமானங்கள் இருந்த போதிலும், யூத மத வழிபாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அங்குள்ள யூதர்கள், யாரோடும் யுத்தம் செய்யாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அடுத்தவன் நிலத்தை பறித்தால் தானே, அவனும் சண்டைக்கு வருவான்?

பாலஸ்தீனத்தில் குடியேற சென்ற சியோனிஸ்ட்கள், அறுபதாண்டுகளாக தீராத யுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் யாருமற்ற பாலைவனத்தில் சென்று குடியேறவில்லை. அரேபியரின் நிலங்களை அபகரித்து தமதாக்கிக் கொண்டார்கள். அன்று பாலஸ்தீனத்தில் குடியேறச் சென்ற ஐரோப்பிய யூதர்கள் மத்தியில் நிறவாதக் கருத்துகள் காணப்பட்டன. "நாகரீகமடையாத அரை நிர்வாண அரேபியருக்கு, உன்னதமான ஐரோப்பிய நாகரீகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்." என்று தம்மை உயர்வாகவே கருதிக் கொண்டனர். அன்று இந்தியாவை காலனியாக்கிய பிரிட்டிஷாரும் அதையே கூறினார்கள். அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள், செவ்விந்திய குடிகளின் நிலங்களை அபகரித்து, அங்கே ஒரு தேசத்தை உருவாக்கினார்கள். பாலஸ்தீனத்தில் குடியேறிய வெள்ளையின யூதர்கள், அரேபியரின் நிலங்களை அபகரித்து இஸ்ரேல் ஆக்கினார்கள். அதனால், பாலஸ்தீனம் "ஐரோப்பியரின் கடைசிக் காலனி" என்று அழைக்கப் படுகின்றது. சியோனிஸம் தோன்றிய காலத்தில், உகண்டா, அல்லது ஆர்ஜெந்தீனா சென்று குடியேறி, இஸ்ரேலை அங்கே உருவாக்குவது என்ற யோசனையும் முன்வைக்கப் பட்டது. ஆனால், விதி யாரை விட்டது? பாலஸ்தீனத்தில் வளைகுடா எண்ணெய் வளத்தை கண்காணிக்கும் அடியாளாக, பிரிட்டனின் ஆசீர்வாதத்துடன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா அரசுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆயுத விநியோகம் செய்த குற்றத்திற்காக, உலகத் தமிழர்கள் அனைவரும் கம்யூனிசத்தை வெறுக்க வேண்டும் சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். சீனாவும், ரஷ்யாவும் கம்யூனிச நாடுகள் அல்ல. சர்வதேச ஆயுத சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் சீன, ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை புலிகளும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். இந்த உண்மை எல்லாம் அவர்களுக்கு தேவையில்லை. ஜென்ம எதிரியான கம்யூனிசத்தை எதிர்க்க ஒரு சாட்டுக் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட "தமிழர்கள்", இஸ்ரேலின் கொள்கைக்கு மாறாகவே செயற்படுகின்றனர். பாலஸ்தீனர்களுக்கு சம உரிமைகள் வழங்காவிடினும், இஸ்ரேலில் யூதர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன. இஸ்ரேல், தான் "உன்னதமான மேற்குலக நாகரீகத்தை" பின்பற்றுகின்றது என்பதை உலகுக்கு காட்ட விரும்புகின்றது. அதனால் சோவியத் சார்பு யூத கம்யூனிஸ்ட்கள் மீது எந்தவொரு தருணத்திலும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. Hadash என்ற யூத கம்யூனிஸ்ட் கட்சி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இரகசிய தொடர்பை வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (அதாவது அந்தக் கட்சி பாலஸ்தீனரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்திருந்தது.)

ஐ.நா. சபையில் சோவியத் தலைமையிலான கம்யூனிச நாடுகள் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளன. அதே நேரம், இஸ்ரேலின் எதிரிகளான சிரியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு, சோவியத் யூனியன் ஆயுத விநியோகம் செய்தது, ஒன்றும் இரகசியமல்ல. சோவியத் ஆயுதங்கள் பாலஸ்தீன போராளிகளின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. அதைக் காரணமாக காட்டி, உலக யூதர்கள் அனைவரும் கம்யூனிசத்தை வெறுக்க வேண்டும் என்று, ஒரு சராசரி யூத இனவாதி கூட பேசவில்லை. இஸ்ரேல் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க சார்பு, முதலாளித்துவ அரசாக உருவெடுத்தது. அதனால் சர்வதேச அரசியல் அரங்கில் தனது பாத்திரம் என்ன என்பதையும், யாரையெல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்தார்கள். அதே நேரம், பெரும்பான்மை யூதர்கள் இஸ்ரேலிய அரசை ஆதரிக்கிறார்கள் என்பதால், கம்யூனிச யூதர்களை மட்டுமல்ல, மத அடிப்படைவாத யூதர்களையும் அவர்கள் கணக்கெடுக்கவில்லை. இன்று சிறிலங்காவில் ராஜபக்ச அரசு எந்தளவு நம்பிக்கையுடன் ஆட்சி நடத்துகின்றதோ, அதே நம்பிக்கையை மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த இஸ்ரேலிய அரசாங்கங்கள் கொண்டிருந்தன. ஐ.நா. மட்டத்தில் போர்க்குற்ற விசாரணை வந்தாலும் சீனாவும், ரஷ்யாவும் தன்னை காப்பாற்றும் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது. அதே போல போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. தண்டிக்க விடாது, அமெரிக்காவும், பிரிட்டனும் தன்னை காப்பாற்றும் என்று இஸ்ரேலிய அரசு நம்புகின்றது.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Sunday, January 08, 2017

ஹிட்லரின் கம்யூனிச விரோத கொலைவெறி இனப்படுகொலையின் ஆரம்பம்


க‌ம்யூனிச‌ வெறுப்புக் கார‌ண‌மாக‌, ஹிட்ல‌ர் சோவிய‌த் யூனிய‌னை ஆக்கிர‌மித்து அந்நாட்டு ம‌க்க‌ளை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவிக்க‌ திட்ட‌மிட்டிருந்தான்!

 "அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி த‌டுப்பு முகாம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. ( Auschwitz: The Nazis and the 'Final Solution'; http://www.imdb.com/title/tt0446610/) அதிலிருந்து கிடைத்த‌ சில‌ முக்கிய‌ த‌க‌வ‌ல்க‌ளை இங்கே தருகிறேன். இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ யூதர்களை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவித்த‌ ப‌டியால் தீய‌ வ‌ழியில் பிர‌ப‌ல‌ம‌டைந்த‌ முகாம் அது.

அங்கு யூத‌ர்க‌ளை அங்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ர்க‌ள் மீது ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவது ஜெர்மன் யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்னரே, "கம்யூனிஸ்டுகள்" என்ற குற்றச்சாட்டில் இலட்சக் கணக்கான ரஷ்யர்கள் அல்லது ரஷ்ய யூதர்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

போலந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பிரமாண்டமான தடுப்பு முகாமான அவுஷ்விட்ஸ் கட்டப்பட்டதன் பிரதானமான நோக்கம், தாழ்வான இனமாக கருதப் பட்ட சோவியத் மக்களை அழித்தொழிப்பது. (யூத இன அழிப்பு சில வருடங்களுக்குப் பிறகு நடந்தது.)நாஸிகளின் சோவியத் யூனியன் படையெடுப்பில் கைது செய்யப் பட்ட பத்தாயிரம் போர்க் கைதிகளை கொண்டு தான் அந்த முகாம் கட்டப் பட்டது. அந்தப் பத்தாயிரம் கைதிகளில் சில நூறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். பட்டினியாலும், தோற்று நோய்களாலும் கைதிகள் மரணித்தனர்.

IG farben என்ற‌ ஜேர்ம‌ன் ப‌ன்னாட்டுக் கம்பனி கண்டுபிடித்த செயற்கை இரப்பர் உற்பத்திக்கு அவசியமான மூல‌ப் பொருட்க‌ள் அவுஷ்விட்ஸ் சுற்றாட‌லில் கிடைத்த‌ன‌. நிலக்கரி சுரங்கங்களும் அருகில் இருந்தன. அடிமை உழைப்பாளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி, அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்க‌ம் IG farben க‌ம்ப‌னிக்கு இருந்த‌து. அந்த‌ முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லுக்கு உத‌வுவ‌த‌ன் மூல‌ம் நாஸிக‌ளும் ப‌ல‌ன‌டைந்த‌னர்.

சோவிய‌த் ப‌டையெடுப்புக்கு வ‌ச‌தியாக‌த் தான், போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் எனும் இட‌த்தில் முகாம் அமைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து சோவிய‌த் எல்லையில் இருந்து சில‌ நூறு கி.மீ. தொலைவில் அந்த‌ இட‌ம் இருந்த‌து. இதன் மூலம் சோவியத் யூனியன் மீது படையெடுக்கும் திட்டமும், அதற்குப் பிறகும் சோவியத் மக்களை இனப்படுகொலை செய்யும் திட்டமும் நாஸிகளிடம் இருந்துள்ளமை உறுதியாகின்றது.

ஹிட்ல‌ரும், நாஸிக‌ளும் யூத‌ர்க‌ளை வெறுத்த அளவிற்கு க‌ம்யூனிஸ்டுக‌ளையும் வெறுத்தார்க‌ள். ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் ப‌ல‌ர் போல்ஷேவிக் க‌ட்சியில் இருந்த‌னர். அதனால், நாஸிகளை பொறுத்தவரையில் கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஒன்று தான். "கம்யூனிசம் என்றால் அது ரஷ்யா" தான் என்பது நாஸிகளின் பிரச்சாரமாக இருந்தது. (இன்றைக்கும் தமிழ் பேசும் நாஸி ஆதரவாளர்களுக்கு, கம்யூனிசம் என்றால் ரஷ்யா தான் மனதில் தோன்றும்.)


போலந்து எல்லையில் இருந்த பெலார‌ஸ் போன்ற‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ள் நாஸிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்ட‌தும், அங்கிருந்து 3 மில்லிய‌ன் பேர‌ள‌வில் போர்க் கைதிக‌ளாக‌ சிறைப் பிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர், குறைந்தது 2 மில்லிய‌ன் பேரள‌வில் கொன்று குவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஆர‌ம்ப‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ள், யூத‌ர்க‌ள் அல்ல‌து போரிடும் வ‌ய‌தில் இருந்த‌ ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ர‌ஷ்ய‌ர்க‌ளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற‌ன‌ர். ஆனால், அவ்வாறு அழித்தொழிப்பது அதிக நேரம் எடுப்பதாகவும், தமது போர்வீரர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குவதாகவும் நாஸிகள் நினைத்தார்கள்.

அதற்குப் பதிலாக, பெருந்தொகையான ர‌ஷ்ய‌ர்க‌ளை இல‌குவான‌ முறையில் கொன்றொழிப்ப‌து எப்ப‌டி என்று யோசித்தார்க‌ள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்ப‌ன் மொனோக்சைட் ந‌ச்சு வாயு பிர‌யோகித்து ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். அதன் மூலம் பலரை சில நிமிடங்களில் கொன்று குவிக்க முடிந்தது. ரஷ்யர்கள் மீதான நச்சுவாயு பரிசோதனை வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் தான், ஐரோப்பிய‌ யூத‌ர்க‌ள் அங்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

1941 ம் ஆண்டில் கூட, யூதர்கள் அவுஷ்விட்ஸ் முகாமுக்கு அனுப்பப் பட்டிருக்கவில்லை. அந்த வருடம், வட ஜெர்மன் நகரமான ஹம்பூர்க் மீது, பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அப்போது வீடுகளை இழந்த ஜெர்மன் இனத்தவர்களுக்கு புது வீடுகள் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஹம்பூர்க் யூதர்கள் போலந்தில் உள்ள லொட்ஸ் என்ற நகரில் உள்ள கெட்டோவில் (Ghetto) குடியமர்த்தப் பட்டனர்.

அந்தக் காலத்தில், போலந்து முழுவதும் யூதர்கள் நெருக்கமாக வாழ்ந்த நகர்ப்  பகுதிகள், "கெட்டோ" என்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப் பட்டிருந்தன. சேரிகள் போன்று காட்சியளித்த கெட்டோவில், ஏற்கனவே அங்கிருந்த போலிஷ் யூதர்கள், மிகவும் வறுமையான நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்தனர்.

ஜெர்மனியில் ஓரளவேனும் வசதியான வாழ்க்கை வாழ்ந்த ஜெர்மன் யூதர்களுக்கு அந்த இடம் அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதார வேறுபாடு காரணமாக, ஜெர்மன் யூதர்கள் போலிஷ் யூதர்களை தாழ்வாகக் கருதும் வழக்கம் இருந்தது. திடீரென எல்லா யூதர்களும் ஒரே நிலைமையில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் குண்டுபோட்ட பின்னர் அமெரிக்காவும் யுத்தத்தில் குதித்தது. அப்போது ஹிட்லர் "சோவியத் யூனியன் யூதர்கள் மாதிரி, அமெரிக்க யூதர்களும் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக..." குற்றம் சாட்டினான். அன்றிலிருந்து யூதர்களையும் அழித்தொழிக்கும் திட்டம் ஆரம்பமானது.

Wednesday, August 13, 2014

இஸ்ரேலுக்கு எதிரான இடதுசாரி யூதர்கள்


காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது.

இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிக்கின்றன. இஸ்ரேலை நியாயப் படுத்தும் பெற்றோரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்க்கும் பிள்ளைகளும், அடிக்கடி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், இஸ்ரேல் குறித்த கருத்து முரண்பாடுகள், மாணவர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சியோனிச யூத மாணவர்களும், பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களும் ஓரணியில் நின்று இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். மறு பக்கத்தில், மதச் சார்பற்ற யூத மாணவர்களும், இடதுசாரி மாணவர்களும் எதிர் அணியில் நின்று, இஸ்ரேலை எதிர்க்கிறார்கள்.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அணியினரின் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்கள் அந்த அணியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் பக்க நியாயத்தை கூறும் தகவல்கள், அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருவதும் அதற்கு ஒரு காரணம். தமிழ் பேசும் இணைய சமூகத்திலும் அது போன்ற மாற்றங்களை உணர முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு வரையில் கூட, இஸ்ரேலின் சியோனிச கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வந்த, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர், அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளனர்.

பிரிட்டனில், பாலஸ்தீன நீதிக்கான யூதர்கள் (Jews For Justice For Palestinians) என்ற இடதுசாரிகளின் அமைப்பு, 2003 முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. லண்டனில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரி யூதர்களின் பிரிவு ஒன்று தவறாமல் கலந்து கொள்கின்றது. அமெரிக்க நகரங்களிலும், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களிலும், இடதுசாரி யூதர்களின் அணி ஒன்று, ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும் குழுவில் கலந்து கொள்கின்றது.

லண்டனில், டவுனிங் தெருவில், பட்டப்பகலில் ஓர் இஸ்ரேலிய பிரஜை தனது கடவுச் சீட்டை எரித்து பரபரப்பூட்டினார். அந்த சம்பவத்திற்குப் பின்னர், லண்டனில் வாழும் யூதர்கள் பலர், வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்து பேசும் துணிவைப் பெற்றுள்ளனர். (இவ்வளவு காலமும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள், யூத சமூகத்திற்குள் கடுமையாக அடக்கப் பட்டன.) மேலும், யூதர்களை வெறுக்காமல் இஸ்ரேலை விமர்சிப்பது எப்படி என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம், ஒவ்வொரு ஆரப்பாட்டங்களின் போதும் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகின்றது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து நின்றால் இலங்கை அரசுக்கு கொண்டாட்டம். அதனால், எத்தகைய இடதுசாரி அமைப்பிற்குப் பின்னாலும் மக்கள் சென்று விடாதவாறு, அரசு தனது கைக்கூலிகளைக் கொண்டு எதிர்ப் பிரச்சாரங்களை முடுக்கி விடும். அதே சூழ்ச்சியை, மேற்கத்திய நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

மேற்கத்திய நாடுகளில் வாழும், "ISIS ஆதரவு முஸ்லிம் மதவாதிகள்", பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் புகுந்து, யூதர்களுக்கு எதிரான கோஷம் எழுப்புவார்கள். அத்தகைய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள், "எமது நாட்டில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதால், யூத மக்கள் பயந்து போயிருக்கிறார்கள்" என்று வதந்திகளை பரப்பி விடுவார்கள். அந்த நாடுகளில் உள்ள வலதுசாரி சியோனிச அமைப்புகளும் தரவுகளை தொகுத்து அறிக்கையாக சமர்ப்பிக்கும். இவை எல்லாம், மேற்கத்திய உளவு நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன என்பது இரகசியம் அல்ல. உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும், குறிப்பிட்ட அளவு இனவாதிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை வளர விடாமல் தடுப்பது நாகரிகமடைந்த மக்களின் கடமை ஆகும்.

இஸ்ரேலிலும், இடதுசாரி யூதர்கள், காஸா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இஸ்ரேலில் அரச அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. இஸ்ரேலிய இடதுசாரி கட்சியொன்றை சேர்ந்த, பாலஸ்தீன பூர்வீகத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கினேசெட் எனும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது, "ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று குறிப்பிடவில்லையாம். அந்தக் குற்றத்திற்காக, அவருக்கு ஆறு மாத காலத்திற்கு பாராளுமன்ற பேச்சுரிமை மறுக்கப் பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்தளவு அடக்குமுறை என்றால், பிற சமூக ஆர்வலர்களின் நிலைமை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இஸ்ரேலை வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக கணித்தால், அங்கே தான் வறுமை அதிகமாக உள்ளது. 2011 டெல் அவிவ் நகரில், அரசுக்கு எதிராக Occupy பாணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போர் நடக்கும் காலத்தில் வழமையாகவே தேசியவெறி அதிகரிக்கும். ஹமாசின் ஏவுகணைகளை காட்டி, இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியம் என்று செய்யப் படும் பிரச்சாரங்கள், அப்பாவி மக்களை இலகுவில் கவரக் கூடியவை. "மதம் மக்களின் அபின்" என்றார் கார்ல் மார்க்ஸ். (அவரும் ஒரு யூதர் தான்.) மதம் மட்டுமல்ல, தேசிய வெறியும் மக்களின் அபின் தான் என்று, நூறு வருடங்களுக்கு முன்னரே, தன்னை ஒரு சியோனிச எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டார், மாமேதை ஐன்ஸ்டைன். (அவரும் ஒரு யூதர் தான்.)

(இந்தக் கட்டுரை சில பத்திரிகை செய்திகளை தழுவி எழுதப் பட்டது.)

தகவல்களுக்கு நன்றி :
NRC Handelsblad (நெதர்லாந்து) 
Haaretz (இஸ்ரேல்)