Showing posts with label ஐரோப்பிய ஏகாதிபத்தியம். Show all posts
Showing posts with label ஐரோப்பிய ஏகாதிபத்தியம். Show all posts

Friday, May 31, 2013

கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : 5)


கிறிஸ்தவ ஆர்மேனியா ஆக்கிரமிக்கப்படுகின்றது

துருக்கியில் எதிர்ப்பின்றி முன்னேறிய சிலுவைப் படைகள் ஆர்மேனிய நாட்டின் தலைநகரம் எடேசாவை வந்தடைந்தனர். இன்றிருக்கும் ஆர்மேனியா நாட்டை போல மும்மடங்கு பிரதேசம் அன்றைய ஆர்மேனிய மன்னராட்சியின் கீழ் இருந்தது. ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி பிற்காலத்தில் துருக்கியின் பகுதிகளாகி விட்டன.

ஆர்மேனியர்கள் (90%) கிறிஸ்தவர்கள். இருப்பினும் தமக்கென விசேஷ வழிபாட்டு முறையை கடைப்பிடித்தனர். சின்னச்சிறு ஆர்மேனிய நாட்டிற்கு, இரண்டு பக்கமும் எதிரிகள் இருந்தனர். இஸ்லாமிய துருக்கியர்களும், கிறிஸ்தவ கிரேக்கர்களும் ஆர்மேனியாவை விழுங்கி விடத் துடித்தார்கள். அவர்கள் மேற்கத்திய சிலுவைப் படைகளையும் நம்பவில்லை. இருப்பினும் ஆர்மேனிய மன்னன், துருக்கியருக்கு எதிராக சிலுவைப் படைகளின் பாதுகாப்பை நாடினான். அது எவ்வளவு பெரிய தவறு என்பது சில நாட்களின் பின்னர் புரிந்தது.

பவ்டவைன் (Boudewijn : பெல்ஜியத்தை சேர்ந்தவர்) என்ற தளபதியால் தலைமை தாங்கப்பட்ட சிலுவைப் படையணியே, ஆர்மேனியாவின் எடேசா நகருக்கு சென்றது. எடேசாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், தனக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டார் பவ்டவைன். அதாவது ஆர்மேனிய மன்னனின் அடியாளால் போன்று இருக்க முடியாது. ஆனால், அரச குடும்பத்தில் ஒருவனாக கருதப் பட வேண்டும்.  மூப்படைந்த கிழவனான ஆர்மேனிய அரசன், கிறிஸ்தவ சகோதரத்துவ உணர்வு காரணமாக, பவ்டவைனை பிள்ளையாக தத்தெடுப்பதாக அறிவித்தார். 

ஆர்மேனிய வழக்கப் படி பொது மக்களின் முன்னிலையில் நடந்த, ஒரு வாலிபனை தத்தெடுக்கும் சடங்கு, அந்தக் கால கிசு கிசு செய்தியாக, மத்திய கிழக்கு முழுவதும் வலம் வந்தது. அப்படி என்ன விசேஷம் அந்த சடங்கில் உள்ளது? அரசனும், அரசியும் இரண்டு பெரியதொரு வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு மேடையில் வீற்றிருப்பார்கள். தத்தெடுக்கப்படும் பிள்ளை நிர்வாணமாக அங்கிக்கு உள்ளே தவழ்ந்து சென்று மார்போடு மார்பு உரச வேண்டும். அன்று, பவ்டவைன் என்ற திடகாத்திரமான வாலிபனை, குழந்தை போல பலர் முன்னிலையில் தத்தெடுத்த கதை, ஒற்றர்கள் மூலம் துருக்கிய படைகள் மத்தியில் பரவியது. அவர்கள் அதனை தமக்குள் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள்.

இந்த வேடிக்கையான தத்தெடுப்பு நாடகம் பல காலம் நீடிக்கவில்லை. தத்தெடுக்கும் வைபவம் முடிந்த சில நாட்களில், பவ்டவைனின் அடியாட்கள், ஆர்மேனிய அரசனையும், அரசியையும் வீதியில் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றார்கள். அந்த கொடுஞ் செயலை, "வளர்ப்பு மகன்" தடுக்கவில்லை. அடுத்த சில நாட்களில் ஆர்மேனியாவின் ஆட்சி பவ்டவைன் கைகளுக்கு மாறியது. அவர் தனது நம்பிக்கைக்கு உரிய சிலுவைப் படைவீரர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். 

முதன் முறையாக ஒரு மத்திய கிழக்கு பிரதேசம், மேலைத்தேய ஐரோப்பியரின் ஆளுமையின் கீழ் வந்தது. வருங்காலத்தில் வரப்போகும், காலனியாதிக்க காலகட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல, அந்த சம்பவம் அமைந்திருந்தது.


கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தியோக்கியா முற்றுகை

அந்தியோகியா (இன்று: Antakya, துருக்கி) என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. மத்தியதரைக் கடலோரம், இன்றைய சிரியா எல்லையில் அமைந்துள்ள அந்த நகரம் பற்றிய குறிப்புகள் விவிலிய நூலிலும் வருகின்றன. இன்றைக்கும் நிலைத்து நிற்கும் உலகிலேயே பழமையான கிறிஸ்தவ தேவாலயம் (புனித பீட்டரின் குகை) அந்நகருக்கு சிறப்பு சேர்க்கின்றது. 

ஆதி கால கிறிஸ்தவ சமூகம் அங்கே தோன்றியிருந்தது. முன்னொருகாலத்தில் சீனாவுக்கு சென்று வரும் வியாபாரிகளின் இடைத்தங்கல் முகாமாக இருந்ததது. அதன் வர்த்தக முக்கியத்துவம் காரணமாக ரோமர்களின் காலத்திலேயே மிகப் பெரிய நகரமாக திகழ்ந்தது. 20 ம் நூற்றாண்டில் நவீன சிரியாவின் பகுதியாக இருந்தது. பின்னர், பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் அதனை துருக்கிக்கு விற்று விட்டனர். துருக்கியின் ஹத்தை மாகாணமாக அறியப்படும் பகுதியில், இன்றைக்கும் அரேபியர்களே (முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்) பெரும்பான்மை இனம்.

சிலுவைப்போர் காலத்தில், அந்தியோக்கியா "யாகி சியான்" என்ற துருக்கி இனத்தை சேர்ந்த முஸ்லிம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிலுவைப் படைகள் வருகின்றன என்று அறிந்தவுடனேயே, யாகி சியான் நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு குறைபாடு இருந்தது. நகரை சுற்றி கட்டப்பட்டிருந்த மிக நீண்ட மதில் சுவர் தான் அந்த குறைபாடு. 

அந்தக் காலங்களில், சிங்கப்பூர் மாதிரி குட்டி நாடுகள் அதிகம். தலைநகரத்தையும், சில கிராமங்களையும், சுற்றியுள்ள வயல் பரப்புகளையும் மட்டுமே தேச எல்லைகளாக கொண்ட நாடுகள். மதில்களால் சூழப்பட்ட அந்தியோக்கியாவில் நகரபகுதி மட்டுமல்லாது, விவசாய நிலங்களும் இருந்தன. இதனால் அன்றிருந்த 40000 மக்களுக்கு உணவிடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் ஒரேயொரு பிரச்சினை, சீனப் பெருஞ்சுவர் போல முடிவில்லாது நீண்டு சென்று கொண்டிருந்த மதில்களை பாதுகாப்பது எப்படி?

அந்தியோக்கியா 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1084 வரை, கொன்ஸ்டான்டிநோபில் தலைமையின் கீழ் கிரேக்க சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. ஒரு இஸ்லாமிய அரசனான யாகி சியான் ஆட்சியின் கீழே, கிறிஸ்தவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ஆர்மேனிய, ஜாகொபிய, மறோனிய, கிரேக்க பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் கிரேக்க சக்கரவர்த்தி, இம்முறை சிலுவைப்படை என்ற கூலிப்படையை  அனுப்பி அந்தியோக்கியாவை இணைக்கப் பார்க்கிறார், என்ற அச்சம் நிலவியது. அப்படியான நோக்கில் படையெடுப்பு இடம்பெற்றால், அந்தியோக்கியா கிறிஸ்தவர்கள் கட்சி மாறி விடுவார்களோ என்று மன்னன் அஞ்சினான். 

இதனால் யாகி சியான், அனைத்து கிறிஸ்தவ ஆண் பிரஜைகளையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். அவர்கள் நகரின் பாதுகாப்பு மதில்களுக்கு வெளியே வசிக்கும் படி உத்தரவிட்டான். அவ்வாறு நகரின் வெளியே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களின் மனைவி, பிள்ளைகளை, யாகி சியான் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டான். பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினர் நலன் கருதி, கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியா அரசுக்கு விசுவாசமாக நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தியோக்கியாவை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட சிலுவைப்படைகளின் உள்ளே ஒற்றர்களாக செயற்பட்டார்கள்.

சுமார் மூன்று மாதங்கள் நீடித்த முற்றுகை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. அந்தியோக்கியா மன்னன் எதிர்பார்த்தது போலவே, கோட்டை வாயில் கதவு ஒரு துரோகியினால் திறக்கப்பட்டது. அதன் மூலம் சிலுவைப் படைகள் அந்தியோக்கியாவினுள் நுழைந்தன. எதிரிக்கு காட்டிக் கொடுப்பவர்கள் எல்லா மதத்திலும், இனத்திலும் இருப்பார்கள். அன்று சிலுவைப்படைகள் நுழையும் வழியை திறந்து விட்டது, பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம். அவன் ஒரு முறை மந்திர, தந்திரங்களில் ஈடுபட்ட காரணத்தால் தண்டிக்கப் பட்டவன். அதற்காக கிடைத்த சந்தர்ப்பத்தை கொண்டு பழி வாங்கினான். 

பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம், இரவு நேரத்தில் இரகசியமாக,நுளை  வாயில் கதவுகளை திறந்து விட்டான். அந்தச் செயல், சிலுவைப் படைக்கு வைக்கப்பட்ட பொறி இல்லை என்று நிரூபிப்பதற்காக,  ஏற்கனவே தனது மகனை எதிரிப் படையினர் பக்கம் அனுப்பி வைத்திருந்தான். அப்படி ஒரு காட்டிக் கொடுப்பு இடம்பெற்றிரா விட்டால், சிரியாவில் இருந்து வந்த மேலதிக படைகள் அந்தியோக்கியாவை காப்பாற்றி இருக்கும். அதை விட நீண்ட கால முற்றுகையை தாக்குப் பிடிக்கக் கூடியவாறு, போதுமான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்தன.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, May 14, 2013

இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : நான்கு)



உலகில் சிறந்த பாக்தாத் நாகரிகம்

உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. எமது இன்றைய பாட நூல்களில் உள்ளது போல, பல கண்டுபிடிப்புகளுக்கு ஐரோப்பியர் உரிமை கோரும் அயோக்கியத்தனம் சிலுவைப்போர் காலத்தில் தான் ஆரம்பமாகியது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாக்தாத் நாகரீகம். ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ துறையில் அபார வளர்ச்சியடைந்த பாக்தாத்தில், ஏராளமான நவீன வைத்தியர்கள் இருந்தனர். மயக்கமருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இருந்தனர். நகர மத்தியில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான மருத்துவமனை அனைவருக்கும் இலவச வைத்திய சேவையை வழங்கியது.

அன்றைய உலகில், பாக்தாத் மட்டுமே வங்கி அமைப்பை கொண்டிருந்தது. பாக்தாத் வங்கியின் கிளை ஒன்று சீனாவிலும் திறக்கப்பட்டிருந்தது. இதை தவிர, நகரம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்கள், குடி நீர் விநியோகம், தபால் சேவை என்பன சிறப்பாக செயற்பட்டன. பாக்தாத்தின் வடக்கே உள்ள "ஹார்ன்" எனுமிடத்தில் ஒரு நவீன விஞ்ஞான பீடத்தைக் கொண்ட பல்கலைக்கழகம் இருந்தது. 

Albatinius என்ற விஞ்ஞானி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டிருந்தார். Jabir bin Hayyan என்ற இன்னொரு விஞ்ஞானி, அணுவைப் பிளந்து மாபெரும் சக்தியை உருவாக்கலாம் என கண்டுபிடித்திருந்தார்.  "அந்த சக்தியின் மூலம் பாக்தாத் நகரை அழிக்கலாம்,"    என்று அவர் எழுதி வைத்துள்ளார். அனேகமாக, அணுகுண்டை கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானி அவராகத் தான் இருப்பார். 
(இந்த தகவல்கள் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். அவர்கள்  The House of Wisdom என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.)

இத்தனை சிறப்பு மிக்க பாக்தாத் நாகரீகம் அழிந்து போன காரணம் என்ன? சில ஆயிரம் சிலுவைப் படைவீரர்களை ஒரு சாம்ராஜ்யத்தால் எதிர்க்க முடியாமல் போனதெப்படி? ஐரோப்பாவில் இருந்து சிலுவைப்படைகள் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே பாக்தாத் சக்கரவர்த்தி அந்நியப்படைகளினால் ஆட்டுவிக்கப் படும் பொம்மையாக மாறியிருந்தார். மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், இராணுவ ஆதிக்கம் செலுத்தினர். அந்தப் பிராந்தியம் முழுவதும், அதாவது இன்றைய ஈரான் முதல் துருக்கி வரை அவர்களின் ஆட்சி தான்.

செல்ஜுக் துருக்கியர்கள் நிலங்களை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு, குறுநில மன்னர்களைப் போல (ஆனால் இறைமையுள்ள ஆட்சியாளர்களாக) ஆட்சி செய்தனர். ஒரு காலத்தில் சக்கரவர்த்தியின் மெய்ப்பாதுகாவல் படையினராக இருந்த மம்மலுக் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் பாக்தாத் இருந்தது. இவர்களைப் பற்றி சுவையான கதை ஒன்றுண்டு. மம்மலுக் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் துருக்கி மன்னர்களின் குடும்பங்களுக்குள் பதவிச் சண்டை காரணமாக வாரிசுகள் கொல்லப்படுவது வழமை. அதனால் மம்மலுக் அடிமைகள் இளம் பிள்ளைகளை பாதுகாப்பார்கள். சில நேரம் அந்தப் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்கும் போது, வளர்ப்பு தந்தை கையில் அதிகாரம் போய்ச் சேரும்.


துருக்கி யுத்தத்தில் சிலுவைப் படைகளின் வெற்றி

அன்று கிரேக்க-துருக்கிப் பகுதிகளுக்கு இடையிலான யுத்தம், மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரச்சினையாக தோன்றும். ஆனால் நிலைமை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. (கிரேக்க) கிறிஸ்தவ தலைநகரில் இருந்து சிறிது தூரத்திலேயே இருந்த நிசெயா என்ற நாடு, இஸ்லாமிய துருக்கி சுல்த்தான் கிளிஜ் அர்ஸ்லான் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். கிரேக்க சக்கரவர்த்தி அலேக்சியுஸ், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களை காரணமாக காட்டியே நிசெயாவுக்கு உரிமை கோரிக் கொண்டிருந்தார். 

எதிரும் புதிருமான கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருவரும்,  வெளியே பகைவர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் உள்ளுக்குள், அவர்களுக்கிடையில் சிறந்த ராஜதந்திர உறவு நிலவியது. நிசெயாவை முற்றுகையிட்ட, ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படைகளுக்கு, அந்தப் பிராந்தியத்தின் அரசியல் நிலவரம்  தெரிந்திருக்க நியாயமில்லை. எதிர்பாராத விதமாக, முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட இஸ்லாமிய சுல்தானை காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ சக்கரவர்த்தி முன்வந்தார். கிளிஜ் அர்ஸ்லான் குடும்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். நிசெயா ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

சிலுவைப் படையினரிடம் இருந்து மயிரிழையில் தப்பிய கிளிஜ் அர்ஸ்லான், துருக்கியின் மையப்பகுதியில் பிற துருக்கி எமிர்களின் படைகளை துணைக்கு சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யுத்தத்தில் சிலுவைப்படைகளை வெல்ல முடியவில்லை. தூரத்தில் கிளம்பிய புழுதிப் படலத்தை வைத்தே, மேலதிக சிலுவைப் படைகள் வருவதை தெரிந்து கொண்ட துருக்கிப் படைகள் பின்வாங்கி விட்டன. முதன் முதலாக துருக்கி மண்ணில் காலடி எடுத்து வைத்த சிலுவைப் படைகள் ஒழுக்கமான இராணுவமாக இருக்கவில்லை. 

கொள்ளைக்காரர்களும், யாத்ரீகர்களும் நிறைந்திருந்த காடையர் கூட்டத்தை, அன்று துருக்கிப் படைகள் இலகுவாக விரட்ட முடிந்தது. ஆனால் தற்போது போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் வந்திருந்தார்கள். அத்தோடு மதவெறியும் அவர்களை இயக்கியது. "இது ஆண்டவன் கட்டளை" என்ற கோஷத்துடன் கிறிஸ்தவர்கள் போரிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்று முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு தரப்புமே, கடவுளின் பெயரால் ஒருவரை மற்றவர் கொன்றார்கள்.


(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, May 10, 2013

கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்


[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] 
(பாகம் : மூன்று)

அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர்

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம் இருந்து தான் பிரான்ஸ் என்ற சொல் வந்தது.) முதலாவது சிலுவைப்போரில் நிறைய பிராங் இன வீரர்கள் காணப்பட்டனர். அதனால் மத்திய கிழக்கில், சிலுவைப் போர்வீரர்களை "பிராங்கியர்கள்" என்றும் அழைத்தனர். 

பாப்பரசர் உர்பானுசின் கோரிக்கைக்கு, பலர் செவி சாய்த்தனர்.  அவர் சென்றவிடமெல்லாம், மக்கள் கூட்டம் வரிசையில் நின்று சிலுவைப்படைகளில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லையாதலால், குடிமக்களுக்கும் மன்னனைத் தெரியாது. (இன்றிருப்பதைப் போல தொலைக்காட்சி ஊடகம் அன்றிருக்கவில்லை.)  அப்படியான காலத்தில் ஒரு மதத்தலைவர், அதுவும் "ஆண்டவரின் பூலோகப் பிரதிநிதி" பாப்பரசரே நேரில் வருகிறார் என்றால், யார் தான் போக மாட்டார்கள்? எது எப்படியோ, பாப்பரசருக்கு சிலுவைப்படைக்கு ஆள் திரட்டுவதில் சிரமம் இருக்கவில்லை.

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டும் பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய நூதனசாலைகளில் காணலாம். "முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை." என்ற சாதாரண அடிப்படைத் தகவலை, ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் /மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. (அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது.) அவர்களை சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள்.

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். (அது பற்றிய தகவல்கள் பின்னால் வரும்) அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் மதச்சார்பின்மை தத்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, இஸ்லாமிய உலகில் நாஸ்திக அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சிரியாவை சேர்ந்த நாஸ்திக புலவர் அபூ அல் மாரி, சிலுவைப்படைகள் ஜெருசலேமை கைப்பற்றுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் காலமாகி இருந்தார்.

சிலுவைப்போருக்கு புறப்பட்ட வீரர்கள், ஆரம்பத்திலேயே தமது சுயரூபத்தைக் காட்டி விட்டனர்.முஸ்லிம்களை கொள்வதற்கு முன்னர் யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்தார்கள். ஜெர்மனியில் பல நகரங்களில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். பிற்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய, முஸ்லிம் நாடுகளில் நடத்தவிருக்கும் படுகொலைகளுக்கு முன்னோடியாக, யூதர்களை கொன்று பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும். 

ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யூத இனப்படுகொலைக்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 
1. யூதர்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள் என்ற மதவெறி. 
2. யூத வணிகர்கள் வசதியாக வாழ்ந்தனர். அவர்களைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்து சிலுவைப்போருக்கு நிதி திரட்டினார்கள். சில நகரங்களில் இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், யூத இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை. இருப்பினும் வெறி கொண்ட கூட்டம் அவர்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது நரவேட்டையை தொடர்ந்தது. 
(Chazan, Robert (1997). In the Year 1096: The First Crusade and the Jews. Jewish Publication Society)

சிலுவைப்படைகள் புறப்படுகின்றன

சிலுவைப்போருக்கு சென்ற படையினருடன், கூடவே அவர்களது குடும்பங்களும் சென்றன. தமது மதக் கடமையை நிறைவேற்ற விரும்பிய, கணிசமான அளவு யாத்ரீகர்களும் (இயேசு பிறந்த இடத்தை நோக்கி அல்லவா போகிறார்கள்?) சிலுவைப் படைகளுடன் சென்றனர். இதனால் பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு உணவு தேடுவது சிரமமாக இருந்தது. (இன்றைய செர்பிய தலைநகர்) பெல்கிரேட் நகரை அடைந்த பொழுது, அங்கிருந்த (கிறிஸ்தவ) ஆளுனருக்கு, பெரும்படை ஒன்று வரும் விடயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர், அவர்கள் கேட்ட உணவும், உறைவிடமும் தர மறுத்து விட்டார். அதனால் என்ன? இந்தப் பிரச்சினைக்கு சிலுவைப்படைகளிடம் தீர்வு இல்லையா? நகரம் முழுவதையும் சூறையாடி, வீடுகளுக்கும் நெருப்பு வைத்து விட்டுச் சென்றார்கள். கவனிக்கவும்:  பெல்கிரேட் நகரில் வசித்த குடிமக்களும் கிறிஸ்தவர்கள் தான்.

சிலுவைப் படைகள் கொன்ஸ்டாண்டின் (இன்று: இஸ்தான்புல்) நகரை வந்தடைந்த நேரம், இப்போது தான் வாழ்வில் முதல் தடவையாக, ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கொன்ஸ்டாண்டின் நகரின் பிரமாண்டம் அவர்களை மலைக்க வைத்தது. முழு ஐரோப்பிய கண்டத்திலும், கொன்ஸ்டாண்டின் இரண்டரை லட்சம் மக்கட்தொகையை கொண்ட பெரிய நகரமாக விளங்கியது. அதனோடு ஒப்பிடும் பொழுது, ரோம் முப்பதாயிரம் மக்கட் தொகையையும், லண்டன் பத்தாயிரம் மக்கட் தொகையையும் மக்களையும் கொண்ட, மிகச் சிறிய நகரங்கள். 

சிலுவைப்படையினர் வரும் வழியில், பெல்கிரேட் நகரில் நடத்திய அட்டூழியங்கள், கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியின் காதுகளை எட்டியிருக்கலாம். அடக்கமாக நடந்து கொள்ளும் படி அறிவுறுத்தி விட்டு, சிலுவைப் போர்வீரர்களை பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டு விட்டார். பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் இருந்த நிலப்பகுதி இன்று துருக்கி என அழைக்கப்படுகின்றது. அன்று அந்தப் பகுதி, இஸ்லாமிய-துருக்கி சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தது. மாலிக் ஷா (மாலிக் (அரபி), ஷா (பார்சி) இரண்டின் அர்த்தமும் மன்னன்.) என்று அழைத்துக் கொண்ட சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம், துருக்கி முதல் வட இந்தியா வரை பரவியிருந்தது.

இன்றைய துருக்கியின் பகுதிகளை, மாலிக் ஷாவின் படைகள் கைப்பற்றிய ஆட்சி செய்த காலத்தில், பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், அக்கரையில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியின் பாதுகாப்பைக் கோரவில்லை. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமிய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறு தொகையை வரியாக செலுத்தி விட்டு மதச் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், கிரேக்க கிறிஸ்தவ சக்கரவர்த்திக்கு விசுவாசம் காட்டாமைக்கு,  முக்கிய காரணம் ஒன்றுண்டு.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபன மயப் படுத்தப் பட்ட ஆரம்ப காலங்களில், அது  பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது. இன்று நமக்கு எல்லாம் தெரிந்த விவிலிய நூலை ஏற்றுக்கொள்ளாத, தமக்கென சொந்தமாக ஒரு விவிலிய நூலை வைத்திருந்த மதப்பிரிவுகள் இருந்துள்ளன. "ஜாகொபியர்கள்", "நொஸ்தாரியர்கள்" இவ்வாறான பல பிரிவுகள் துருக்கியில் வாழ்ந்தன. அவர்கள் மீது கிரேக்க கிறிஸ்தவர்கள் வன்முறை பிரயோகித்து அடக்கப்பார்த்தார்கள். சக கிறிஸ்தவர்களாலே வேட்டையாடப்பட்டு அழிந்து  கொண்டிருந்த கிறிஸ்தவப் பிரிவுகள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்ததில் வியப்பில்லை. ஆகவே, மதவெறியோடு பாய்ந்து வந்துள்ள சிலுவைப்படைகளுக்கும் அவர்களது ஆதரவு கிட்டப்போவதில்லை.

இன்றைய இஸ்தான்புள் நகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ளது "நிசெயா" (Nicea). கிளிஜ் அர்ஸ்லன் என்ற துருக்கிய குறுநில மன்னன் ஒருவனால் ஆளப்பட்டு வந்தது. சிலுவைப்படைகளின் முதலாவது தாக்குதல் அந்த இடத்தில் இடம்பெற்றது. செரிகொர்டன் (Xerigordon) என்ற கோட்டை, சிலுவைப்படைகளால் கைப்பற்றப் பட்ட போதிலும் சில நாட்களே அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

செரிகொர்டன் கோட்டைக்கு வரும் தண்ணீர், வெளியே இருந்து தான் கிடைக்கிறது. அந்த நீர்வழியை துருக்கியர்கள் தடுத்து விட்டனர். சிலுவைப் படைவீரர்கள் தண்ணீர் இன்றி விலங்குகளின் குருதியையும், சிறுநீரையும் குடித்து உயிர்பிழைக்க முயன்றார்கள். இறுதியில் இஸ்லாமியப் படைகளிடம் சரணடைந்தார்கள். மன்னன் அவர்கள் முன் இரண்டு தெரிவுகளை வைத்தான்.  முஸ்லிமாக மதம் மாறி உயிர் பிழைப்பது, அல்லது வீர மரணம். பெருந்தொகை சிலுவைப் படைவீரர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். கொள்கையில் உறுதியாக நின்ற மற்றவர்கள் வீர மரணத்தை தழுவினார்கள். 
(August. C. Krey, The First Crusade: The Accounts of Eyewitnesses and Participants,)

துருக்கியில் சிலுவைப்படையினருக்கு கிடைத்த அவமானகரமான தோல்வி, பாப்பரசரின் காதுகளை எட்டியது. பாப்பரசர் வேறு வழியின்றி தென் இத்தாலியை ஆண்ட மன்னரின் உதவியை நாடினார். ராபர்ட், தான்கிரெட் என்ற அரச குடும்ப வீரர்கள், சிலுவைப் படைகளை தலைமை தாங்கி வழி நடத்த முன்வந்தார்கள். இவர்கள் நோர்வீஜிய வம்சாவளியினர். அப்போது தென் இத்தாலியில் உள்ள சிசிலி தீவை நோர்மன்கள் எனப்படும் நோர்வீஜிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். ஒரு காலத்தில் வட ஐரோப்பியாவில் இருந்து படையெடுத்த "காட்டுமிராண்டி வைகிங்" பரம்பரையினர். தென் ஐரோப்பாவில் குடியேறியதும் கிறிஸ்தவர்களாகி நாகரீகமடைந்த மனிதர்களாகி விட்டனர்.

சிசிலியை சேர்ந்த நோர்மன் வீரர்கள், சிலுவைப் படைகளுக்கு தலைமை தாங்க முன்வந்த பொழுது வெற்றி உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு காரணம் அவர்களிடம், பிற ஐரோப்பியரைப் போல, முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் இருக்கவில்லை. இன்னும் கூறப்போனால், சிசிலியில் அந்தக் காலத்தில் மசூதிகள் இருந்தன, இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள். சிசிலியை, நோர்மன்கள் அரேபியரிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிறு வயதிலேயே அரேபியரின், முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்த தான்கிரெட், அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தான்கிரெட் தலைமை தாங்கிய சிலுவைப் படைகள், அனைத்து தடைகளையும் தாண்டி ஜெருசலேம் வரை சென்றன. அங்கே 200 ஆண்டு காலம் நீடித்த கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை நிறுவின.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, April 26, 2013

போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]

(பாகம் : இரண்டு)


கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.

(தொடரும்)



இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் 

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, April 23, 2013

சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்


(பாகம் -1)

சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி

15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவியல். முழங்கால் அளவு இரத்த ஆற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த பிணங்களை அகற்றி விட்டு போவது சிரமமான காரியமாக இருந்தது."

அன்று பிணக்காடாக மாறிய அல் அக்சா மசூதி இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் உள்ளது. அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற அன்று, வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அன்று மதியமே ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேம் நகரை கைப்பற்றி விட்டதால், பிற நகரவாசிகளும் மசூதிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஜெருசலேமில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல் அக்சா மசூதியை பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். மசூதிக்குள் இருந்த ஜெருசலேம்வாசிகள் ஐரோப்பியப் படைகளின் முன்னால் உயிர்ப்பிச்சை கேட்டு மண்டியிட்டார்கள். 

அவர்கள் கேட்ட பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு, விடுதலைக்காக காத்திருந்தார்கள். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கிக் கொண்ட கிறிஸ்தவப் படைகள், அதற்காகவேனும் மனம் இரங்கி அப்பாவிகளை வாழ விடவில்லை. பொழுது சாய்ந்ததும் மசூதியின் கதவுகளை மூடி விட்டு, அனைவரையும் கொன்று குவித்தார்கள். ஒரு மனிதப் பேரவலம் நடந்து முடிந்த அடுத்த கணமே, "லத்தீன் ஜெருசலேம் ராஜ்ஜியம்" பிரகடனம் செய்யப்பட்டது. இந்த "மகிழ்ச்சிகரமான செய்தியை" பாப்பரசருக்கு அறிவிக்க ஒரு தூதுவர் ரோமாபுரி நோக்கி பயணமானார். (The Damascus Chronicle of the Crusades: Extracted and Translated from the Chronicle of Ibn Al-Qalanisi. Dover Publications, 2003 )

சிலுவைப்போர் என்ற சொல், இன்றைக்கும் உணர்ச்சிகளை கிளறி விடுகின்றது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு தடவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை சிலுவைப்போர்" என்று வர்ணிக்க, உலகம் முழுவதும் கண்டனங்களை எதிர்கொண்டது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியதால், சிலுவைப்போர் என்று வாய்தவறி சொல்லி விட்டதாக, புஷ் வாபஸ் வாங்க வேண்டி நேரிட்டது. மேற்குலகில் சிலுவைப்போர் வெறும் மதம் சார்ந்த போராக மட்டுமே கருதப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கில் அது பழைய ரணங்களை கிளறி விடுகின்றது. 

நீண்டகாலமாக, சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை மேற்குலகம் வீர புருஷர்களாக மதித்தது. ஆனால் மத்திய கிழக்கின் அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டது. "காட்டுமிராண்டிகள், கொடியவர்கள், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள், பெண்களின் கற்பை சூறையாடியவர்கள்."   இவ்வாறு தான், அரேபியர்கள் எழுதி வைத்துள்ள சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஜெருசலேமை மீட்பது என்ற பெயரில், பாப்பரசர் அனுப்பிய படைகள் கிறிஸ்தவ மதம் என்ற உன்னத குறிக்கோளுடன் சென்றதாக மேற்குலகில் பலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியெங்கும் படுகொலைகளும், கொள்ளயிடலும் தாராளமாக இடம்பெற்றன. இன்றைக்கும் கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரையிலான பிரதேச மக்கள் இந்தக் கதைகளை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நான் இங்கே கூறப்போகும் தகவல்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். "ஆதாரம் உண்டா?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்ய வருவார்கள். ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் வாழ்பவர்கள், "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று அவதூறு செய்யலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம், சிலுவைப்போர் பற்றிய ஆழமான பக்கச்சார்பற்ற ஆய்வு தமிழில் கிடைப்பது அரிது. கிறிஸ்தவ மதத்தின் இருண்ட பக்கமாக கருதப்படும் சிலுவைப்போர் பற்றிய எதிர்மறையான தகவல்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

சிலுவைப்போரின் பின் விளைவாகத் தான் இந்திய உப கண்டத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. காலனிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மதத்துடன், மேற்குலக அரசியல் கொள்கைகளை புகுத்தினார்கள். அந்த அரசியலின் பின்னணியில் இருந்து தான் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றனவே அன்றி, கிறிஸ்தவ மத நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், சிலுவைப்போர்களினால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட  பாதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், சிலுவைப் போர்வீரர்கள், முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு முன்னர், (கிரேக்க) கிறிஸ்தவர்களை  படுகொலை செய்தார்கள்! அதற்கு முன்னர், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தார்கள்!! ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற, முதலாவது யூத இனப்படுகொலையை நடத்தியது ஹிட்லர் அல்ல! மாறாக, போப்பாண்டவருக்கும், சிலுவைப்போர்வீரர்களுக்கும், அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது!!!

சைப்ரஸ் தீவின் கேந்திர முக்கியத்துவம் சிலுவைப்போர் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது. வெனிஸ் நாட்டில் (இன்று இத்தாலியில் ஒரு நகரம்) இருந்து சென்ற சிலுவைப் படைகள் அந்த தீவை கைப்பற்றி கோட்டைகளை அமைத்திருந்தன. சைப்ரஸ் தீவில் இருந்து லெபனான், அல்லது இஸ்ரேல் கூப்பிடு தொலைவில் உள்ளன. இதனால் அங்கிருந்து தான் கடல்மார்க்கமாக சிலுவைப் படைகள் ஜெருசலேம் மீது படையெடுத்தன. சைப்ரசில், லிமாசொல் நகருக்கு அருகில் கொலோசி என்ற இடத்தில் சிறிய கோட்டை உள்ளது. இன்றைக்கும் நல்ல நிலையில் காணப்படும் அந்த பாதுகாப்பு அரணில் சிலுவைப்படைகள் தங்கியிருந்தன. 

நான் சைப்பிரசில் தங்கியிருந்த காலத்தில், கொலோசி கோட்டைக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருக்கிறேன். போகும் வழியில் சந்திக்கும் சைப்ரஸ்காரர்கள், அந்த இடத்தை பற்றிய சரித்திரக் கதைகளை கூறத் தொடங்கி விடுவார்கள். சாதாரண டாக்சி சாரதி முதல், கடைச் சிப்பந்தி வரை சிலுவைப்போர் கதைகளை வெளிநாட்டவர்களுக்கு கூறுவதற்கு விரும்புகின்றனர். லிமசோல் மாவட்டத்தில், அதாவது தென் சைப்ரசில் வாழும் மக்கள் அனைவரும் நூறு வீதம் (கிரேக்க) கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த யாருமே சிலுவைப்போர் குறித்து நல்ல வார்த்தை கூறவில்லை. "சிலுவைப் போர்வீரர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மொத்தத்தில் காட்டுமிராண்டிகள்!" இது தான் அங்கு நிலவும் பொதுவான கருத்து.

சிலுவைப்போர் குறித்து இன்றைக்கும் போதுமான அளவு தகவல்கள் மக்களை போய்ச் சேரவில்லை. மேற்கு ஐரோப்பாவில் அறுபதுகளில் வீசிய மதச்சார்பற்ற அலை, கடந்த காலத்தை மீள் ஆய்வுக்குட்படுத்தியது. இரண்டாயிரம் வருட வரலாற்றில் ஐரோப்பியர்கள் தமது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து விலகிச் சென்றனர். சுதந்திரமான தகவல் பரிமாற்றமே உண்மையை கண்டுபிடிக்க எதுவாக இருக்கும். ஆகவே மேற்கத்திய அறிஞர்கள் சிலுவைப்போர் குறித்த மத்திய கிழக்கு மக்களின் கருத்துகளை கேட்க ஆரம்பித்தார்கள். அது பற்றி எழுதப்பட்ட அரபி சரித்திர நூல்களை மொழிபெயர்த்தார்கள். 

தற்போது, மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் திருத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரம் போதிக்கப்படுகின்றது. சிலுவைபோரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், வன்கொடுமைகளை பற்றி புதிய தலைமுறை படிக்கின்றது. இவற்றைப் படிப்பதாலோ, பேசுவதாலோ, இங்கே யாரும் "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று முத்திரை குத்தப்படுவதில்லை. மாறாக 2000 ம் ஆண்டு, சிலுவைப்போர் கால குற்றங்களுக்காக வத்திக்கான் பொறுப்பேற்றுக் கொண்டது. Mea Culpa (எனது குற்றம்) என்ற பெயரில் பாப்பரசர் பகிரங்கமாக பாவமன்னிப்புக் கேட்டார். ஆகவே இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதை எல்லாம் உண்மை என்று வத்திகானே ஒப்புக் கொண்ட பிறகு, "ஆதாரம் உண்டா?" என்று என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

(தொடரும்)


*********************************************

சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...