Tuesday, April 23, 2013

சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்


(பாகம் -1)

சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி

15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவியல். முழங்கால் அளவு இரத்த ஆற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த பிணங்களை அகற்றி விட்டு போவது சிரமமான காரியமாக இருந்தது."

அன்று பிணக்காடாக மாறிய அல் அக்சா மசூதி இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் உள்ளது. அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற அன்று, வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அன்று மதியமே ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேம் நகரை கைப்பற்றி விட்டதால், பிற நகரவாசிகளும் மசூதிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஜெருசலேமில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல் அக்சா மசூதியை பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். மசூதிக்குள் இருந்த ஜெருசலேம்வாசிகள் ஐரோப்பியப் படைகளின் முன்னால் உயிர்ப்பிச்சை கேட்டு மண்டியிட்டார்கள். 

அவர்கள் கேட்ட பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு, விடுதலைக்காக காத்திருந்தார்கள். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கிக் கொண்ட கிறிஸ்தவப் படைகள், அதற்காகவேனும் மனம் இரங்கி அப்பாவிகளை வாழ விடவில்லை. பொழுது சாய்ந்ததும் மசூதியின் கதவுகளை மூடி விட்டு, அனைவரையும் கொன்று குவித்தார்கள். ஒரு மனிதப் பேரவலம் நடந்து முடிந்த அடுத்த கணமே, "லத்தீன் ஜெருசலேம் ராஜ்ஜியம்" பிரகடனம் செய்யப்பட்டது. இந்த "மகிழ்ச்சிகரமான செய்தியை" பாப்பரசருக்கு அறிவிக்க ஒரு தூதுவர் ரோமாபுரி நோக்கி பயணமானார். (The Damascus Chronicle of the Crusades: Extracted and Translated from the Chronicle of Ibn Al-Qalanisi. Dover Publications, 2003 )

சிலுவைப்போர் என்ற சொல், இன்றைக்கும் உணர்ச்சிகளை கிளறி விடுகின்றது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு தடவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை சிலுவைப்போர்" என்று வர்ணிக்க, உலகம் முழுவதும் கண்டனங்களை எதிர்கொண்டது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியதால், சிலுவைப்போர் என்று வாய்தவறி சொல்லி விட்டதாக, புஷ் வாபஸ் வாங்க வேண்டி நேரிட்டது. மேற்குலகில் சிலுவைப்போர் வெறும் மதம் சார்ந்த போராக மட்டுமே கருதப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கில் அது பழைய ரணங்களை கிளறி விடுகின்றது. 

நீண்டகாலமாக, சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை மேற்குலகம் வீர புருஷர்களாக மதித்தது. ஆனால் மத்திய கிழக்கின் அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டது. "காட்டுமிராண்டிகள், கொடியவர்கள், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள், பெண்களின் கற்பை சூறையாடியவர்கள்."   இவ்வாறு தான், அரேபியர்கள் எழுதி வைத்துள்ள சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஜெருசலேமை மீட்பது என்ற பெயரில், பாப்பரசர் அனுப்பிய படைகள் கிறிஸ்தவ மதம் என்ற உன்னத குறிக்கோளுடன் சென்றதாக மேற்குலகில் பலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியெங்கும் படுகொலைகளும், கொள்ளயிடலும் தாராளமாக இடம்பெற்றன. இன்றைக்கும் கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரையிலான பிரதேச மக்கள் இந்தக் கதைகளை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நான் இங்கே கூறப்போகும் தகவல்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். "ஆதாரம் உண்டா?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்ய வருவார்கள். ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் வாழ்பவர்கள், "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று அவதூறு செய்யலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம், சிலுவைப்போர் பற்றிய ஆழமான பக்கச்சார்பற்ற ஆய்வு தமிழில் கிடைப்பது அரிது. கிறிஸ்தவ மதத்தின் இருண்ட பக்கமாக கருதப்படும் சிலுவைப்போர் பற்றிய எதிர்மறையான தகவல்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

சிலுவைப்போரின் பின் விளைவாகத் தான் இந்திய உப கண்டத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. காலனிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மதத்துடன், மேற்குலக அரசியல் கொள்கைகளை புகுத்தினார்கள். அந்த அரசியலின் பின்னணியில் இருந்து தான் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றனவே அன்றி, கிறிஸ்தவ மத நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், சிலுவைப்போர்களினால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட  பாதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், சிலுவைப் போர்வீரர்கள், முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு முன்னர், (கிரேக்க) கிறிஸ்தவர்களை  படுகொலை செய்தார்கள்! அதற்கு முன்னர், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தார்கள்!! ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற, முதலாவது யூத இனப்படுகொலையை நடத்தியது ஹிட்லர் அல்ல! மாறாக, போப்பாண்டவருக்கும், சிலுவைப்போர்வீரர்களுக்கும், அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது!!!

சைப்ரஸ் தீவின் கேந்திர முக்கியத்துவம் சிலுவைப்போர் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது. வெனிஸ் நாட்டில் (இன்று இத்தாலியில் ஒரு நகரம்) இருந்து சென்ற சிலுவைப் படைகள் அந்த தீவை கைப்பற்றி கோட்டைகளை அமைத்திருந்தன. சைப்ரஸ் தீவில் இருந்து லெபனான், அல்லது இஸ்ரேல் கூப்பிடு தொலைவில் உள்ளன. இதனால் அங்கிருந்து தான் கடல்மார்க்கமாக சிலுவைப் படைகள் ஜெருசலேம் மீது படையெடுத்தன. சைப்ரசில், லிமாசொல் நகருக்கு அருகில் கொலோசி என்ற இடத்தில் சிறிய கோட்டை உள்ளது. இன்றைக்கும் நல்ல நிலையில் காணப்படும் அந்த பாதுகாப்பு அரணில் சிலுவைப்படைகள் தங்கியிருந்தன. 

நான் சைப்பிரசில் தங்கியிருந்த காலத்தில், கொலோசி கோட்டைக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருக்கிறேன். போகும் வழியில் சந்திக்கும் சைப்ரஸ்காரர்கள், அந்த இடத்தை பற்றிய சரித்திரக் கதைகளை கூறத் தொடங்கி விடுவார்கள். சாதாரண டாக்சி சாரதி முதல், கடைச் சிப்பந்தி வரை சிலுவைப்போர் கதைகளை வெளிநாட்டவர்களுக்கு கூறுவதற்கு விரும்புகின்றனர். லிமசோல் மாவட்டத்தில், அதாவது தென் சைப்ரசில் வாழும் மக்கள் அனைவரும் நூறு வீதம் (கிரேக்க) கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த யாருமே சிலுவைப்போர் குறித்து நல்ல வார்த்தை கூறவில்லை. "சிலுவைப் போர்வீரர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மொத்தத்தில் காட்டுமிராண்டிகள்!" இது தான் அங்கு நிலவும் பொதுவான கருத்து.

சிலுவைப்போர் குறித்து இன்றைக்கும் போதுமான அளவு தகவல்கள் மக்களை போய்ச் சேரவில்லை. மேற்கு ஐரோப்பாவில் அறுபதுகளில் வீசிய மதச்சார்பற்ற அலை, கடந்த காலத்தை மீள் ஆய்வுக்குட்படுத்தியது. இரண்டாயிரம் வருட வரலாற்றில் ஐரோப்பியர்கள் தமது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து விலகிச் சென்றனர். சுதந்திரமான தகவல் பரிமாற்றமே உண்மையை கண்டுபிடிக்க எதுவாக இருக்கும். ஆகவே மேற்கத்திய அறிஞர்கள் சிலுவைப்போர் குறித்த மத்திய கிழக்கு மக்களின் கருத்துகளை கேட்க ஆரம்பித்தார்கள். அது பற்றி எழுதப்பட்ட அரபி சரித்திர நூல்களை மொழிபெயர்த்தார்கள். 

தற்போது, மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் திருத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரம் போதிக்கப்படுகின்றது. சிலுவைபோரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், வன்கொடுமைகளை பற்றி புதிய தலைமுறை படிக்கின்றது. இவற்றைப் படிப்பதாலோ, பேசுவதாலோ, இங்கே யாரும் "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று முத்திரை குத்தப்படுவதில்லை. மாறாக 2000 ம் ஆண்டு, சிலுவைப்போர் கால குற்றங்களுக்காக வத்திக்கான் பொறுப்பேற்றுக் கொண்டது. Mea Culpa (எனது குற்றம்) என்ற பெயரில் பாப்பரசர் பகிரங்கமாக பாவமன்னிப்புக் கேட்டார். ஆகவே இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதை எல்லாம் உண்மை என்று வத்திகானே ஒப்புக் கொண்ட பிறகு, "ஆதாரம் உண்டா?" என்று என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

(தொடரும்)


*********************************************

சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

No comments: