"பூர்காவுக்கு தடைவிதித்தால் முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை கிடைத்து விடும்" என்ற தப்பெண்ணம் பலரிடம் காணப் படுகின்றது. பிற மதத்தவர் மட்டுமல்லாது, முன்னாள் முஸ்லிம்கள் கூட இஸ்லாம் என்ற மதத்தை தடை செய்து விட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும் என்று பாமரத்தனமாக நினைக்கிறார்கள்.
எல்லாப் பெண்களும் மதம் அல்லது ஆண் குடும்ப உறுப்பினர்கள் நிர்ப்பந்திப்பதன் காரணமாக பூர்க்கா அணிவதில்லை. தாமாக விரும்பி அணியும் பெண்களும் உண்டு.
சில குடும்பங்களில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்க்கா அணிந்த மகள்மாரும் உண்டு.
இந்த உண்மைகளை அறியாமல், "ஐயோ பாவம், இஸ்லாமிய கடும்போக்காளர்களால் முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப் படுகிறார்கள்" என்று நீலிக் கண்ணீர் வடிப்போர் உண்மையில் அந்தப் பெண்கள் மீதான அக்கறையில் அதைச் சொல்லவில்லை. இது போன்ற கதைகளை பரப்பி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை வளர்ப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.
வறட்டுத்தனமான வாதங்களால் மதத்தை போட்டுத் தாக்குவோர், பூர்க்கா அணிவதற்கு பின்னால் உள்ள சமூக- பொருளாதார காரணிகளை கவனிக்க மறுக்கின்றனர். அதற்கு இரண்டு உதாரணங்களை காட்டி விளங்கப் படுத்தலாம்.
"பூர்க்காவில் இருந்து ஆப்கான் பெண்களை விடுதலை செய்யப் போவதாக" அறிவித்து விட்டுத் தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அந்தோ பரிதாபம்! அமெரிக்கா "விடுதலை" செய்து பதினைந்து வருடங்கள் கழிந்த பின்னரும், இன்றும் பெரும்பாலான ஆப்கான் பெண்கள் பூர்க்கா அணியாமல் வெளியே செல்வதில்லை.
உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த, அமெரிக்காவின் "ஜனநாயக" இராணுவம், ஆப்கான் பெண்களின் பாதுகாப்புக்கு இருக்கிறதென்ற தைரியத்தில் யாரும் பூர்க்காவை தூக்கி வீசவில்லை. நாட்டு நிலைமை மோசமாக இருப்பதால், தமது பாதுகாப்பு கருதி தாமாகவே பூர்க்கா அணிந்து செல்கிறார்கள். அங்கே எந்தப் பெண்ணும் பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்கத் தயாராக இல்லை.
ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பின்னர் தான் பூர்க்கா கலாச்சாரம் பரவியது என்று சொன்னால், பலருக்கு நம்புவது கடினமாக இருக்கும். உண்மையில், அமெரிக்க இராணுவம் "விடுதலை" செய்த பிறகு தான், ஈராக்கில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் மிக வேகமாகப் பரவியது. ஒவ்வொரு தெருவிலும் அமெரிக்க இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் தான், ஈராக் பெண்கள் பூர்க்கா அணியாமல் வெளியில் செல்ல அஞ்சினார்கள். அந்த நிலைமை இப்போதும் தொடர்கிறது.
பல தசாப்த காலமாக நீடித்த சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் எந்த இடத்திலும் பூர்க்கா அணிந்த ஒரு பெண்ணைக் கூட காண முடியாது. எல்லோரும் ஐரோப்பிய பாணியிலான நவ நாகரிக உடை தான் உடுத்துவார்கள். முக்காடு போடும் பெண்களைக் கூட காண்பது அரிது. எங்காவது கிராமங்களில் வயதான பெண்கள் மட்டுமே முகம் மூடாத பூர்க்கா, அல்லது முக்காடு அணிந்திருப்பார்கள்.
இருபது வருடங்களுக்கு முன்னர் சுதந்திரமாக திரிந்த ஈராக்கிய பெண்கள், எதற்காக இப்போது பூர்க்காவுக்குள் தம்மை சிறைப் படுத்திக் கொள்ள வேண்டும்?
சதாம் ஹுசைன் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், அந்தக் காலத்தில் ஈராக் மக்களின் தனி நபர் வருமானம் அதிகமாக இருந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது. ஏழைகள் குறைவாக இருந்தனர். கிரிமினல் குற்றங்கள் நடப்பதும் மிகக் குறைவு.
அமெரிக்கா "விடுதலை" பெற்றுத் தந்த பின்னர், நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு கிரிமினல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்தன. எங்கு பார்த்தாலும் அளவுகடந்த வேலையில்லாப் பிரச்சினையும், வறுமையும் மக்களை வாட்டியது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு காரணம் பொருளாதார பிரச்சினைகள் என்பதை அறிந்திராத அல்லது புரிந்து கொள்ள விரும்பாத, மத- கலாச்சாரக் காவலர்கள் பூர்க்கா அணிவதே பெண்களுக்கு பாதுகாப்பு என்றனர். அப்பாவி ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அதை நம்பினார்கள்.
மத உணர்வு வர்க்க உணர்வை மழுங்கடித்து விடும் என்பதால் அரசும் மறைமுகமாக மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும். இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் தப்பிக் கொள்கிறது.
உலகில் எந்த நாட்டிலும் வாழும் பெரும்பாலான சராசரி மக்கள், உணவுக்கு வழியில்லை என்றால் புரட்சி செய்ய நினைக்க மாட்டார்கள். தமது கஷ்டங்களை சொல்லி இறைவனிடம் முறையிடுவார்கள். மத ஒழுக்கத்தை பேணி வந்தால் போதும், கடவுள் நல்ல வழி காட்டுவார் என நினைப்பார்கள்.
மூன்று நேரமும் உண்டு கொழுத்திருக்கும், வசதியான மேட்டுக்குடியினருக்கு சாதாரண மக்களின் பிரச்சினைகள் புரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் "மதம்...மதம்...மதம்" மட்டும் தான்.
3 comments:
//எல்லாப் பெண்களும் மதம் அல்லது ஆண் குடும்ப உறுப்பினர்கள் நிர்ப்பந்திப்பதன் காரணமாக பூர்க்கா அணிவதில்லை. தாமாக விரும்பி அணியும் பெண்களும் உண்டு. சில குடும்பங்களில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்க்கா அணிந்த மகள்மாரும் உண்டு. //
இதில் பாதி சரி பாதி தப்பு! குடும்ப உறுப்பினரின் கட்டாயத்திற்காக அணிவதில்லை என்பது சரி . மதத்தின் கட்டாயத்திற்காக அணியவில்லை என்பது தவறு.
இலங்கையில் 99% முஸ்லீம் பெண்கள் மதத்திற்காக அந்த உடையை விரும்பியே அணிகிறார்கள். பாதுகாப்புக்காக அணிகிறோம் என்று சொல்வது ஒரு சாட்டு. புர்கா அணியாத பெண்களுக்கு இலங்கையில் அப்படி என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது? இவர்களை விட சிங்கள பெண்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதி நாகரிக உடை அணிபவர்கள், சிங்களவனும் தமிழனும் என்ன இவர்கள் மேல் பாய்ந்து பலாத்காரம் செய்கிறானா?
இந்த மக்கள் மதபோதை பீடித்தவர்கள், இதிலிருந்து வெளியே வர இவர்களே விரும்புவதில்லை!
பாதுகாப்பு குறித்து அவரவர் சிந்தனை மாறுபடலாம். அதற்காக இலங்கையில் எந்தக் குற்றமும் நடப்பதில்லை என்று சொல்லாதீர்கள். பெண்களின் கவர்ச்சியை கண்டு பாய்வதில்லை. பெண்கள் என்றாலே பாதுகாப்பாக நடமாட முடியாது என்ற சூழல் தான் உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று உலகம் முழுவதும் கெட்ட பெயர் எடுத்துள்ள படியால், நிறைய ஐரோப்பிய பெண்கள் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் செல்ல அஞ்சுகிறார்கள்.
தாங்கள் என்ன கருத்தை இறுதியாகச் சொலிகின்றீர்கள் ? விளங்கவில்லை.பர்கா போட்டு குண்டுவைத்து விட்டு செல்வது போன்ற குற்றச் செயல்களுக்க பர்தா ஒரு பாதுகாப்பு தந்திரமாக இருப்பதை பார்த்து பர்தாவை தடை செய்தால் உமக்கு ஏன் குடைச்சல்? உனது அம்மா அப்பா தங்கை தம்பி அண்ணன் யாராவது இது போன்று பர்தா அணிந்து குண்டு வைத்த பெண்ணால் செத்திருந்தால் இந்த கட்டுரையை எழுதியிருக்க மாட்டாய்.
முகத்தை மூடும் முறையை தான் தடை செய்கின்றது. இது அனைத்து நாடுகளிலும் செய்ய வேண்டும். இந்தியாவிலும் முகத்தை மூடிக் கொண்டு வெளியே வர தடை செய்ய வேண்டும்.
Post a Comment