மன்னிக்கவும், சிரியா யுத்தம் பற்றிய பின்வரும் தகவல்களை உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதில்லை:
- தற்போது யுத்தம் நடக்கும், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே உள்ள புறநகர்ப் பகுதியான கூத்தா (Ghouta) கடந்த ஐந்தாண்டுகளாக இரண்டு கிளர்ச்சிக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
- இதற்கு முன்னர் இடிலிப் பிரதேசத்தை நோக்கி சிரியப் படைகள் முன்னேறிய நேரம், அங்கிருந்த கிளர்ச்சிக் குழுக்கள் துருக்கி மத்தியஸ்த்தத்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்றன.
- ஒரு வாரத்திற்கு முன்னர், கூத்தா மீது யுத்தப் பிரகடனம் செய்த சிரிய அரசு இடிலிப் பாணி சமரசத்திற்கு முன்வந்திருந்தது. ஆனால், இம்முறை கிளர்ச்சிக் குழுக்கள் வெளியேற மறுத்தன. அத்துடன் மக்களையும் வெளியேற விடாமல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
- கூத்தா பிரதேசத்தை மீட்பதற்கான சிரிய, ஈரானிய கூட்டுப்படை நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிரிய இராணுவப் பிரிவான "புலிப் படை" தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்ய விமானங்களும் குண்டு வீசியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நெருக்குதலால் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி தீர்மானம் எடுத்தது. அதற்கு ரஷ்யாவும் ஒத்துழைத்தது. உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப் பட வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.
- சிரிய அரசு மட்டுமே ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவித்தது. இதற்கு கிளர்ச்சிக் குழுக்களை பொறுப்பேற்க வைக்க முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் பயங்கரவாத அமைப்புகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. சிரிய அரசு அந்த சாட்டை பயன்படுத்தி மீண்டும் போரைத் தொடங்கியது.
- ஐ.நா., சிரிய அரசின் மீது போர்நிறுத்த மீறல் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப் பட வேண்டிய அவசியம் இல்லை.
- கூத்தா பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப் பட்டு நான்கு பெரிய மற்றும் சிறிய இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, தனித் தனியாகவோ செயற்படுகின்றன.
- இவற்றில் மிகப்பெரிய இயக்கமான அல் நுஸ்ராவின் முந்திய பெயர் அல் கைதா. மிகத் தீவிரமான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்பது சொல்லாமலே புரியும். ஏனைய இயக்கங்களும் அப்படித் தான்.
- சிரியப் படைகளின் எறிகணை வீச்சுக்கும், விமானக் குண்டுகளுக்கும் இதுவரை ஐநூறு பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள்.
- அங்குள்ள மக்கள் விருப்பத்திற்கு மாறாக கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்குவதற்கு முன்னர் அரச ஊழியர்கள் டமாஸ்கஸ் சென்று வர அனுமதித்திருந்தனர். ஆனால், "பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு" பெண்களும், குழந்தைகளும் வெளியேற அனுமதிக்கவில்லை.
- சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மீது அமெரிக்க விமானங்கள் குண்டு போட்டன.ஒரு கட்டிடம் கூட மிச்சமில்லாமல் தரைமட்டமாகின. அன்று பலியான குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது பற்றி உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.
சிரியா போர் தொடங்கிய காலத்தில் இருந்து மறைக்கப் பட்டு வரும் சில உண்மைகள்:
1. மேற்குலகம், சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தெரிந்த விடயம். ஆனால், பெரும்பான்மை சிரிய மக்களின் ஆதரவைப் பெறாத பிழையான சக்திகளை தெரிவு செய்ததுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. " சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சிக்கு பெரும்பான்மையான சிரிய மக்களின் ஆதரவு கிட்டவில்லை. சிரிய அரசுக்கான மக்கள் ஆதரவை, மேற்குலகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது! ஊடகங்கள் அங்கு நடக்கும் சம்பவங்களை மிகைப் படுத்திக் கூறுகின்றன." - இதைக் கூறியது சிரியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் Eric Chevalier. (http://blog.lefigaro.fr/malbrunot/2012/03/syrie-un-diplomate-francais-me.html
2. "இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் வழிநடாத்தப்படும் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள், சிரிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை." அமெரிக்காவின் உளவுத் துறை ஒத்துக் கொண்டுள்ளது. (https://www.jungewelt.de/loginFailed.php?ref=/artikel/179801.im-blindflug.html)
3. சிரியாவினுள் அதிகரித்து வரும் ஜிகாத் போராளிகளின் பிரசன்னம் காரணமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆயினும், சிரியாவின் ஆதரவின்றி ஹிஸ்புல்லா பலவீனமடையும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறையும் என்ற காரணங்களால், இஸ்ரேல் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதித்தது. (http://www.jpost.com/Opinion/Op-Ed-Contributors/The-case-of-Syria-could-prove-different )
4. சிரிய அரச படையினர் மனித உரிமைகளை மீறும் விடயம் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், கிளர்ச்சிக் குழுக்களும் குற்றங்களை இழைத்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், இவற்றோடு சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையணிகளில் சேர்த்தல்... இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. (https://www.hrw.org/news/2012/03/20/syria-armed-opposition-groups-committing-abuses)
*******
சிரியாவில் நடப்பது என்ன? நாம் யாருடைய அரசியலைப் பேசுகின்றோம்?
எதிரும் புதிருமாக காணப்படும் முதலாளிய- தமிழ் வெகுஜன ஊடகங்களும், சுன்னி- இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும் ஓரணியில் நின்று சிரியாவுக்காக அழுகிறார்கள் என்றால், பின்னணியில் ஏதோ ஒரு அரசியல் சக்தி அவர்களை ஒன்றிணைக்கிறது என்று அர்த்தம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் (Afrin) பிரதேசம் துருக்கி படையினரால் தாக்கப் பட்டது. அப்போதும் பொது மக்களின் உயிரிழப்புகள், சொத்தழிவுகள் அதிகமாக இருந்தன. விமானக் குண்டுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் படங்கள் வெளியாகின. அது குறித்து சர்வதேச மட்டத்தில் எந்த எதிர்வினையும் எழவில்லை. எங்கும் கள்ள மௌனம் நிலவியது.
அப்ரின் பிரதேசத்தில் பலியான மக்களின் அவலக் குரல் வெகுஜன ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. அங்கு கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக யாரும் அழவில்லை. அந்தப் படங்களை யாரும் பார்க்கவில்லை. சமூக வலைத்தளங்களில் செயற்படும் ஒருவர் கூட கொந்தளிக்கவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
குர்தியர்களும் சுன்னி முஸ்லிம்கள் தானே? அது தமிழ் பேசும் சுன்னி முஸ்லிம் மதவாதிகளின் உணர்வுகளை தட்டி எழுப்பாதது ஏன்? சிரியாவில் குர்தியரும் தனி நாடு கேட்டு போராடிய தேசிய விடுதலை இயக்கத்தவர் தானே? அது தமிழீழத்தை தலையில் வைத்திருக்கும் தமிழ்த்தேசியவாதிகளின் கண்களை உறுத்தாது ஏனோ? அப்போது மட்டும் கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருந்தது ஏனோ?
எனக்கு இந்த லாஜிக் என்னவென்று புரியவில்லை. உலக நாடுகளை விட்டு விடுவோம். சிரியாவில் நடக்கும் சிக்கலான யுத்தத்தில் எந்தப் பக்கத்தில் மக்கள் கொல்லப் பட்டாலும் கண்டிப்பதை விட்டு விட்டு, குறிப்பிட்ட சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழுவது ஏனோ?
டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கூத்தா பிரதேசம், கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அமெரிக்கா, சவூதி அரேபிய நிதியில் இயங்குவதால், அவர்கள் வெளியிடும் தகவல்களும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிரச்சாரப் போரில் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் செயற்படுகின்றன.
கடந்த ஐந்தாண்டு காலமாக நடக்கும் சிரியா போரில் அடிக்கடி காணும் காட்சிகள் இவை. அரசும், கிளர்ச்சிக் குழுக்களும் மாறி மாறி பிரச்சாரம் செய்வது வழமை. ஒருவர் மாறி ஒருவர் போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தி, தமக்கு சார்பானவர்களின் அனுதாபத்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
இதனால் களைப்படைந்த மேற்கைரோப்பிய ஊடகங்கள், தற்போது நடக்கும் கூத்தா யுத்தம் தொடர்பான தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்றாடம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிளர்ச்சிக் குழுக்களின் பிரச்சார மையத்தால் வெளியிடப் பட்ட உறுதிப் படுத்தப் படாத தகவல்கள்" என்று சேர்த்தே சொல்கின்றன.
சிரியா இராணுவம் ஒன்றும் சிறந்தது அல்ல. அரச படைகளின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளம் பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவை போர்க்குற்றங்களுக்குள் அடங்கும் என்பதில் மறுப்பில்லை. இருப்பினும், கிளர்ச்சியாளர்களும் புனிதர்கள் அல்ல. ஐ.எஸ். வானத்தில் இருந்து குதிக்கவில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
ஐ.எஸ்.கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மீதான போரின் போதும், ஏராளமான பொது மக்கள் கொல்லப் பட்டனர். குழந்தைகளும் பலியாகின. ஐ.எஸ். அந்தப் படங்களைக் காட்டி பிரச்சாரம் செய்து அனுதாபம் தேடியது. "உலகமே பார்த்துக் கொண்டிருக்க எம்மின மக்களை இனப்படுகொலை செய்கிறார்கள்" என்று ஓலமிட்டனர். கொத்துக் குண்டுகள் வீசப் பட்டதாகவும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.
இந்த விடயத்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும், வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இடையில் நல்ல ஒற்றுமை உள்ளது. சரி, அது உங்களுக்கிடையிலான இரகசியமான கொள்கை உடன்பாடு. இதற்குள் எதற்கு மற்றவர்களை இழுக்கிறீர்கள்?
சிரியாக் குழந்தைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் போலி மனிதநேயவாதிகள், யேமன் குழந்தைகள் கொல்லப் பட்ட நேரம் எங்கிருந்தார்கள்? அங்கு நடக்கும் போர் பற்றி, பலியான மக்கள் பற்றி ஒரு நாளாவது பேசி இருப்பார்களா?
சிரியாவுக்கும், யேமனுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே அரேபிய தீபகற்பத்தில் தான் உள்ளன. இரண்டு நாடுகளிலும் கொல்பவர்களும், கொல்லப் படுபவர்களும் அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் தான்.
யேமனில் குண்டு போட்டு குழந்தைகளைக் கொல்வது சவூதி அரேபிய விமானங்கள் என்பதால், யாருக்கும் அதைப் பற்றி அக்கறை இல்லை. சவூதி அரேபியாவுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதால் சர்வதேசமும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. அது பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டப் படுவதில்லை.
யேமனில் பலியான குழந்தைகள் ஷியா முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காக, தமிழ் பேசும் சுன்னி முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். ஆனால், சிரியாவில் சுன்னி முஸ்லிம்கள் பலியாகும் போது மட்டுமே கொந்தளிக்கிறார்கள். இதுவா மனித நேயம்? இதுவா மத உணர்வு?
மனிதாபிமான உணர்வு கூட தான் சார்ந்த மதப் பிரிவு பார்த்து தான் வருகின்றது. தமிழ்த் தேசியவாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழர் கொல்லப் பட்டால் மட்டுமே அவர்களுக்கும் மனிதநேய உணர்வு பொங்கி எழும். மற்றும் படி மேற்கத்திய நலன் சார்ந்தவர்கள் பாதிக்கப் படும் போது மட்டுமே தாமும் சேர்ந்து அழுவார்கள்.
மனிதாபிமான உணர்வு கூட தான் சார்ந்த மதப் பிரிவு பார்த்து தான் வருகின்றது. தமிழ்த் தேசியவாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழர் கொல்லப் பட்டால் மட்டுமே அவர்களுக்கும் மனிதநேய உணர்வு பொங்கி எழும். மற்றும் படி மேற்கத்திய நலன் சார்ந்தவர்கள் பாதிக்கப் படும் போது மட்டுமே தாமும் சேர்ந்து அழுவார்கள்.
சிரியாப் போரின் ஆரம்ப காலங்களில் அந் நாட்டின் பெரும் பகுதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அப்போது, ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்த ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். அந்த நடவடிக்கையின் போது பலர் கழுத்து வெட்டிக் கொல்லப் பட்டனர். பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் பலர் குடும்பத்தோடு கொல்லப் பட்டனர்.
ISIS மட்டுமல்ல, அல் நுஸ்ரா, FSA மற்றும் சிரியாவில் போராடும் ஒரு டசின் கிளர்ச்சிக் குழுக்கள், ஷியா, கிறிஸ்தவ மக்களை படுகொலை செய்துள்ளன. பொதுவாக எல்லா கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகளும் சுன்னி முஸ்லிம்கள் தான். தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான்.
"சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோம்ஸ் நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். சிரிய அரசுக்கெதிரான சிரிய சுதந்திர இராணுவம், அல்கைதா குழுக்கள் கிறிஸ்தவ மக்களை இனச்சுத்திகரிப்பு செய்கின்றனர். மேற்குலகம் இதைக் கண்டும் காணாதது போல கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது." - சிரிய ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. (http://www.politique-actu.com/osons/syrie-eglises-accusent-france-vouloir-vider-syrie-chretiens/383926/
அப்போது யாரும் சிரியக் குழந்தைகளுக்காக அழவில்லை. கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், ஒரு "கிறிஸ்தவ நாடு" கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதபாணிகள், இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ கிராமங்களை தாக்கி அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை படுகொலை செய்தனர். எத்தனை கிறிஸ்தவர்களுக்கு இந்த விபரம் தெரியும்? எத்தனை பேர் அந்தப் படங்களை பகிர்ந்து கொண்டார்கள்? பூஜ்ஜியம்.
அந்நேரம் மேற்குறிப்பிட்ட இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள். அமெரிக்கா, சவூதி அரேபியாவால் நிதி, ஆயுதம் கொடுத்து வளர்க்கப் பட்டவர்கள். ஆகவே எல்லோரும் பேசாமடந்தைகளாக வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.
பாரபட்சமின்றி அனைத்துக் கொலைகளையும் கண்டியுங்கள். அது நேர்மையானது. சந்தர்ப்பம் பார்த்து, "நண்பர்கள்" பாதிக்கப் படும் போது மட்டும் பொங்கி எழுவது, குறுகிய அரசியல் ஆதாயம் கருதி செய்யப் படும் பிரச்சாரம். அதற்குப் பெயர் இரக்கம் அல்ல, பிணத்தை காட்டி காசு வாங்கும் ஈனத்தனம்.
ஏனிந்த பாரபட்சம்?
அப்போது குழந்தைகளை கொன்றவர்கள் தாம் சார்ந்த சுன்னி இஸ்லாமிய மதப் பிரிவினர் என்பதால், தமிழ் பேசும் சுன்னி முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. அதே மாதிரி, தாம் ஆராதிக்கும் அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்பதால், வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும் கண்டுகொள்ளவில்லை. இது தான் உண்மை.
ராக்காவில் அமெரிக்க விமானங்கள் குண்டு போட்ட நேரம், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடக்கிறது" என்று கூறி கைதட்டி வரவேற்றவர்கள் தான் இன்று "குழந்தைகளுக்கு எதிரான போர் நடக்கிறது" என்கிறார்கள். இவர்கள் எப்போது யாரை ஆதரிப்பார்கள், யாரை எதிர்ப்பார்கள், யாரின் காலை வாரி விடுவார்கள் என்று தெரியாமல் உள்ளது. ஒரு காலத்தில் ஐ.எஸ். விடுதலைப் போராளிகள் என்றார்கள். பிறகு பயங்கரவாதிகள் என்று சொல்லி காலை வாரினார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம். நாம் என்ன அரசியலைப் பேச வேண்டும் என்பது வாஷிங்டனில் தீர்மானிக்கப் படுகிறது. அங்கிருந்து வரும் அறிவுறுத்தல்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும். அவர்கள் எதிர்க்க சொன்னால் எதிர்க்க வேண்டும். ஆதரிக்க சொன்னால் ஆதரிக்க வேண்டும்.
சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?
அலெப்போவின் முள்ளிவாய்க்கால்
இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!
இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?
4 comments:
நாம் என்ன அரசியலைப் பேச வேண்டும் என்பது வாஷிங்டனில் தீர்மானிக்கப் படுகிறது. அங்கிருந்து வரும் அறிவுறுத்தல்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும். அவர்கள் எதிர்க்க சொன்னால் எதிர்க்க வேண்டும். ஆதரிக்க சொன்னால் ஆதரிக்க வேண்டும்.
சரியான பார்வை.
உண்மை உரைத்தீர்கள் வாழ்த்துக்கள்
nice approach..
http://www.dhivyarajashruthi.in
Post a Comment