மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய எகிப்திய நாகரிகத்திலும் வர்க்கங்கள் இருந்துள்ளன. வர்க்கப் போராட்டங்கள் கூட நடந்துள்ளன. கூலி உயர்வு கோரி அல்லது சம்பளம் கிடைக்காத காரணத்தினால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.
இங்கேயுள்ள பாபிருஸ் ஓவியம், பாரோ மன்னனின் கீழ் வேலை செய்த எகிப்திய தொழிலாளர்கள் வரைந்தது.
இந்தப் படத்தில், எலி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில், பூனை அதற்கு சேவகம் செய்கின்றது. நிஜ வாழ்க்கையின் எதிர்மறையான விம்பத்தை கலையாக வடித்துள்ளார்கள். நாடகத்தில் மட்டும் ராஜாவாக நடித்து திருப்தி கொள்ளும் நமது காலத்து கலைஞர்கள் போன்று தான், பண்டைய எகிப்தில் வாழ்ந்த தொழிலாளர்களும் இருந்திருக்கிறார்கள்.
(தகவலுக்கு நன்றி: Historia, 1/2015)
வர்க்க அடிப்படையிலான சமுதாய அமைப்பும், வர்க்க (அ)நீதியும்
ரோமர்கள் காலத்தில் கூட இருந்துள்ளது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைகளுக்கு
உரிமைகள் இருக்கவில்லை. ஆனால், "சுதந்திரமான பிரஜைகள்" சமமாக நடத்தப்
படவில்லை. பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்க பேதம் அனைத்தையும்
தீர்மானித்தது.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்று
ரோமர்களின் சட்டம் கூறியது. ஆனால், நடைமுறையில் சட்டம் பணக்காரர்களை
மட்டுமே பாதுகாத்தது. நீதிபதிகளை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க
முடிந்தது. சட்டத்தை மீறும் எந்தவொரு பிரஜை மீதும், யார் வேண்டுமானாலும்
வழக்குப் போடலாம் என்று சட்டம் கூறியது. அனால், நடைமுறையில் பணக்காரர்கள்
ஏழைகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குப் போட்டு வந்தனர்.
பணக்காரர்கள்
எந்தளவு பாரதூரமான குற்றம் செய்தாலும், ஏழைகள் அவர்களுக்கு எதிராக
வழக்குத் தொடுக்க முடியாதிருந்தது. அப்படியே வழக்குப் போட்டாலும் வெல்ல
முடியாதிருந்தது. நீதிபதிகள், ஜூரிகள், வழக்கறிஞர்கள் எல்லோரையும்
பணக்காரர்கள் இலகுவாக வளைத்துப் போட முடிந்தது.
நீதிபதி
என்ன தீர்ப்புக் கூற வேண்டுமென்று ஒரு நிலப்பிரபு எழுதிக் கொடுக்கும்
அளவிற்கு செல்வாக்கு இருந்துள்ளது. நீதித்துறையில் நிலப்பிரபுக்களின்
ஆதிக்கம் அதிகமாக இருந்த படியாலும், நீதிபதிகள் ஊழல் பெருச்சாளிகளாக
இருந்தபடியாலும், Gaius Gracchus எனும் அரசியல்வாதி சட்டங்களை திருத்த
விரும்பினார். ஆனால், அதற்காகவே அவர் கொலை செய்யப் பட்டார்.
(தகவலுக்கு நன்றி: Historia, Nr.7/2014)
கனவான்களே! வர்க்கப் போராட்டம் கம்யூனிஸ்டுகளின் "கண்டுபிடிப்பு" அல்ல. அது மார்க்சிய "வரட்டுச் சூத்திரமும்" அல்ல. அது மூவாயிரம் வருட காலப் பழமையான போராட்டம். உலக நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டம்.
No comments:
Post a Comment