கம்போடியாவில், க்மெர் ரூஜ் ஆண்ட நான்கு வருட காலங்களில், இனப்படுகொலை நடந்துள்ளதா என்பதை ஆராயும் ஐ.நா. நீதிமன்றம் கடந்த பத்தாண்டுகளாக நடைபெறுகின்றது. இரண்டு கட்டமாக நடந்த விசாரணைகள் யாவும் முடிவடைந்துள்ள நிலையில், 2018 ம் ஆண்டு தீர்ப்புக் கூறுவதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள க்மெர் ரூஜ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் குழுவில் இருவர் டச்சுக் காரர்கள். அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றை, நெதர்லாந்து தொலைக்காட்சி தயாரித்துள்ளது. 17-10-2017 அன்று, NPO2 சேனலில் காண்பிக்கப் பட்ட "Defending Brother No. 2" என்ற பெயரிலான ஆவணப் படத்தில் கூறப் பட விடயங்களை இங்கே சுருக்கமாக தருகிறேன்.
இது ஒரு ஐ.நா.வின் சிறப்பு நீதிமன்றம். நீதிபதிகள் குழுவில், கம்போடியர்களும், வெளிநாட்டவர்களும் இடம்பெறுகின்றனர். நீதிமன்றம் கம்போடிய மண்ணில் அமைக்கப் பட்டது. அரச தரப்பு வக்கீல்கள், எதிர்த் தரப்பு வக்கீல்கள் இரண்டு பக்கத்திலும், கம்போடியர்களும், வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள். அதை கலப்பு நீதிமன்றம் என்றும் கூறலாம். நீதிமன்றத்தின் பெருமளவு செலவுகளை ஐ.நா. பொறுப்பேற்றுள்ளது. அதே நேரம், கம்போடிய அரசுடன் பல விட்டுக் கொடுப்புகளை செய்த பின்னர் தான் நீதிமன்றம் அமைக்கப் பட்டது. அந்த "விட்டுக்கொடுப்புகள்" முக்கியமானவை. நீதியான தீர்ப்புக்கு அது தடையாக உள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.
க்மெர் ரூஜ் தலைவராக இருந்த பொல்பொட் நீதிமன்றத்திற்கு வராமலே காலமானார். அவருக்கு அடுத்த படியாக இருந்த தலைவர்கள் தான் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப் பட்டனர். அவர்களில் முக்கியமானவர், பொல்பொட்டின் வலதுகரம் என்று அழைக்கப் பட்ட, க்மெர் ரூஜ் இயக்க தத்துவாசிரியர் நுவோன்சே (Nuon Chea). தொடக்கத்தில் மிஷீல் பெஸ்ட்மன் (Michiel Pestman), விக்டர் கொப்பே (Victor Koppe) என்ற இரு டச்சு வழக்கறிஞர்கள் நுவோன்ஷேயிற்கு ஆதரவாக வாதாடிய குழுவில் இடம்பெற்றனர்.
வழக்கின் இடையில், சில காரணங்களுக்காக மிஷீல் பெஸ்ட்மன் வெளியேறி விட, விக்டர் கொப்பே இறுதி வரையில் வழக்காடி வந்துள்ளார். முதலாமவர் அப்போதே ஐ.நா. நீதிமன்றத்தில் நம்பிக்கையிழந்து வெளியேறி இருந்தார். இரண்டாமவர் பத்து வருடங்களுக்கு பிறகும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை இப்போது உணர்ந்துள்ளார். இதுவரை காலமும் குடும்பத்தோடு கம்போடியாவில் தங்கியிருந்தவர், தற்போது நெதர்லாந்துக்கு திரும்பி வந்துள்ளார்.
கம்போடியாவுக்கான "ஐ.நா. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப் போவதில்லை... உண்மை வெளிவரப் போவதில்லை..." என்று, இறுதி வரை வாதாடிய வழக்கறிஞர் விக்டர் சொல்லக் காரணம் என்ன? சுருக்கமாக: இது ஒரு "அரசியல் மன்றம்", நீதி மன்றம் அல்ல. வழமையான, போரில் வென்றவர்கள் தோற்றவர்களைத் தண்டிக்கும் வேலையைத் தான், இந்த ஐ.நா. நீதிமன்றமும் செய்கின்றது.
அப்படி நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. கம்போடியாவில் க்மெர் ரூஜ் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர், ஜெனரல் லொன் நொல் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போதிருந்த படையினர், பல்லாயிரக் கணக்கான கம்போடிய மக்களை படுகொலை செய்தனர். அதனாலேயே, பெரும்பான்மையான கம்போடிய மக்கள் க்மெர் ரூஜை ஆதரித்தனர். இது வரலாறு.
ஆனால், லொன் நொல் காலம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் மறுத்து விட்டது. ஏனெனில், அன்றைய ஆட்சியாளர்கள் அமெரிக்க சார்பானவர்கள். அன்றைய லொன் நொல் அரசு, மக்கள் ஆதரவை இழந்த, அமெரிக்காவால் தாங்கிப் பிடிக்கப் பட்ட ஒரு பொம்மை அரசாக இருந்தது. அன்று கம்போடியா முழுவதும் அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசின. அதில் அகப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர்.
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிகமாக, கம்போடியா என்ற சிறிய நாட்டினுள் போடப் பட்டன. அப்படியானால், எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருப்பார்கள்? இதை எல்லாம் விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் முன்வரவில்லை. க்மெர் ரூஜ் என்ன குற்றம் செய்தார்கள் என்பது மட்டுமே அதன் அக்கறை.
அது தான் போகட்டும். க்மெர் ரூஜ் தொடர்பாக, குறிப்பாக பொல்பொட்டின் வலதுகரமாக இருந்த நுவோன்சே தொடர்பான விசாரணைகளாவது பாரபட்சமற்ற வழியில் நடந்தனவா? அதுவும் இல்லை. பல தடவைகள் எதிர்த் தரப்பு வக்கீல் பேசவே இடம்கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் சில சாட்சியங்களை ஒப்படைக்கவும், சாட்சிகளை விசாரிக்கவும் அனுமதி மறுக்கப் பட்டது. சிலநேரம், "வழக்கிற்கு சம்பந்தமில்லாத கதைகள்" என்று கூறி, நீதிபதி வக்கீலின் வாயை மூட வைத்தார். இவை எல்லாம் வீடியோப் பதிவுகளாக உள்ளன.
க்மெர் ரூஜ் ஆட்சியில் இருந்த காலத்தில், நுவோன்சேயின் மெய்ப்பாதுகாவலராக இருந்த ஒருவர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கிறார். ஆகவே, நுவோன்சே குற்றம் புரிந்திருந்தால், அதை நேரில் கண்ட சாட்சி அவர் அல்லவா? ஒரு அமைச்சரின் வாக்குமூலம் நம்பத் தகுந்ததாக இருக்குமே? ஆனால், அவரைக் கூப்பிட்டு விசாரிப்பதற்கு, ஐ.நா. நீதிமன்றம் மறுத்து விட்டது!
இன்றைய கம்போடிய அரசின் பிரதமர் ஹூன்சென் உட்பட, பிரதானமான அமைச்சர்கள் முன்பு க்மெர் ரூஜ் போராளிகளாக இருந்தவர்கள். இது ஒன்றும் இரகசியம் அல்ல. எல்லோருக்கும் தெரிந்த உண்மை. க்மெர் ரூஜ் இனப்படுகொலை புரிந்தது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டால், இன்றைய ஆட்சியாளர்களும் குற்றவாளிகளாக கருதப் பட்டு, தண்டிக்கப் பட வேண்டியவர்கள் தானே? ஆனால், அந்தப் பேச்சுக்கே இடமில்லை.
மேலும், க்மெர் ரூஜ் சார்பாக வாதாடும் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மட்டுமே தாம் விரும்பியதை சொல்லும் சுதந்திரத்தை பெற்றுள்ளனர். அந்தச் சுதந்திரம் உள்நாட்டு வழக்கறிஞர்களுக்கு கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். நீதிமன்றத்தில் மட்டுமல்லாது, ஊடகங்களின் கமெராக்களுக்கு முன்னால் கூட எல்லாவற்றையும் பேச முடியாது தவிக்கின்றனர். அந்தளவுக்கு, இன்றைய கம்போடிய அரசின் அழுத்தம் காணப்படுகின்றது.
உண்மையில், கம்போடிய அரசு இதை ஒரு கண்காட்சி நீதிமன்றமாக நடத்துகின்றது. கம்போடியா முழுவதிலும் இருந்து பாடசாலை மாணவர்களும், பௌத்த பிக்குகளும் அரச செலவில் பேருந்து வண்டிகளில் அழைத்து வரப் படுகின்றனர். "இதோ பாருங்கள்! வெளிநாட்டு வக்கீல்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பியவாறு பேசுகிறார்கள்... ஆகையினால் இது ஒரு சுதந்திரமான நீதிமன்றம்..." என்று உலகத்திற்கு காட்டுவது மட்டுமே அங்கே நடக்கிறது.
உண்மையில், கம்போடிய அரசு இதை ஒரு கண்காட்சி நீதிமன்றமாக நடத்துகின்றது. கம்போடியா முழுவதிலும் இருந்து பாடசாலை மாணவர்களும், பௌத்த பிக்குகளும் அரச செலவில் பேருந்து வண்டிகளில் அழைத்து வரப் படுகின்றனர். "இதோ பாருங்கள்! வெளிநாட்டு வக்கீல்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பியவாறு பேசுகிறார்கள்... ஆகையினால் இது ஒரு சுதந்திரமான நீதிமன்றம்..." என்று உலகத்திற்கு காட்டுவது மட்டுமே அங்கே நடக்கிறது.
வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கும் மேல் மட்ட அழுத்தம் இல்லாமல் இல்லை. டச்சு வக்கீல் விக்டரின் ஏழு வயது மகள், ப்னோம் பென் நகரில் மேட்டுக்குடிப் பிள்ளைகள் கல்வி கற்கும் சர்வதேச (ஆங்கிலப்) பாடசாலையில் படிக்கிறாள். ஒரே வகுப்பில், பிரதமர் ஹூன் சென்னின் பேத்தியும் படிக்கிறாள். "உங்கள் அப்பாவை சுட வேண்டும்..." என்று, ஒரு தடவை அந்த சிறுமி சொல்லி இருக்கிறாள். வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், விக்டரின் மாணவி விவாகரத்து கோரி பிள்ளையுடன் பிரிந்து சென்று விட்டார். இது அவர்களது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்றாலும், கம்போடியாவின் ஆபத்தான அரசியல் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம்.
முன்னாள் இராணுவ வீரர்கள் வகை தொகையின்றி கொல்லப் பட்டனர் என்பது, நுவோன்சே மீது சுமத்தப் பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் ஒன்று. 1975 ம் ஆண்டு, க்மெர் ரூஜ் ஆட்சியைப் பிடித்ததும், முன்னாள் இராணுவ வீரர்கள் எல்லோரும் சரணடைந்து விட்டனர். அவர்களை தாம் கொல்லவில்லை என்றும், கம்யூனிச சித்தாந்தக் கல்வி புகட்டும் சிறப்புப் பாடசாலைகளுக்கு அனுப்பப் பட்டதாகவும் நுவோன்சே வாக்குமூலத்தில் தெரிவித்தார். இந்த நடைமுறை ஏற்கனவே சீனப் புரட்சிக்குப் பின்னரும் பின்பற்றப் பட்டது.
"சரணடைந்த இராணுவ வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டனர்." என்பது அரச தரப்பு வக்கீல்களின் வாதம். துல்போச்ரே (Tuol Po Chrey) படுகொலைகள் என்று சொல்லப் பட்ட சம்பவம் நடந்தது பற்றிய சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணான கதைகளை சொன்னார்கள். அந்த ஊரில் உள்ள, முன்பு நிலப்பிரபு ஒருவருக்கு சொந்தமான மாளிகையில், மூவாயிரம் இராணுவ வீரர்கள் அளவில், இருபது டிரக் வண்டிகளில் கொண்டு வரப் பட்டதாக முன்னாள் க்மெர் ரூஜ் போராளி என்று ஒருவர் சாட்சியம் கூறினார். க்மெர் ரூஜ் கைது செய்து வைத்திருந்த இராணுவ வீரர்கள், துல்போச்ரே வயல்களில் சுட்டுக் கொன்றதை தாம் நேரில் கண்டதாக, அந்தக் கிராமத்தை சேர்ந்த சிலர் வீடியோ கமெராவுக்கு முன்னால் சொன்னார்கள்.
இங்கே முக்கியமான விடயம் என்னவெனில், துல்போச்ரே படுகொலைகளுக்கும் நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நுவோன்சேயிற்கும் சம்பந்தம் இருப்பதாக நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. நீதிமன்றத்தில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு, நீதிபதி அனுமதியளிக்க மறுத்தார். "சாட்சிகள் பொய் சொல்வதாக நிரூபிக்க முயலக் கூடாது..." என்று நீதிபதியே கூறினார்.
இருப்பினும், எதிர்த்தரப்பு வக்கீல்கள் தமது தரப்பு சாட்சியாக சமர்ப்பித்த ஒருவரே முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இவரது சாட்சியத்தை, ஏற்கனவே ஒரு பிரிட்டிஷ் ஊடகவியலாளர் மறைவிடம் ஒன்றில் வைத்து வீடியோவில் பதிவு செய்திருந்தார். அவர், தான் அப்போது சொன்னதை எல்லாம், பின்னர் இல்லையென்று மறுத்தார்.
அது மிகவும் முக்கியமான சாட்சியம். இன்று வரையில் எந்த ஊடகமும் சொல்லாமல் மறைத்த வரலாற்றுச் சம்பவம் அது. படுகொலைகள் நடந்த துல்போச்ரே கிராமம், வட மேற்குப் பிராந்திய கமாண்டரின் பொறுப்பில் இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசம். அந்தக் கமாண்டரின் பெயர் ரோஸ் நிம் (Ruos Nhim). அவர் பொல்பொட் தலைமைக்கு எதிரான கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கினார். ஆகவே, அங்கு நடந்த படுகொலைகளுக்கும் அவர்களே பொறுப்பு.
க்மெர் ரூஜுக்கு எதிராக கிளர்ச்சி செய்தாலும், ரோஸ் நிம் குழுவினரும் க்மெர் ரூஜ் இயக்கத்தவர் தான். ரோஸ் நிம், பொல்பொட், நுவோன்சே ஆகியோர் சேர்ந்து போராடித் தான் கம்போடிய அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிற்காலத்தில், பொதுவுடைமை சமுதாயம் உருவாக்கும் பொழுது சில நடைமுறை பிரச்சினைகள் எழுந்தன. தலைமைக்குள் கருத்து முரண்பாடு தோன்றியது. கட்சிக்குள் ஒரு பிரிவு, தொழிலாளர்கள் தலைமை தாங்க வேண்டும் என்றும், மறு பிரிவு அறிவுஜீவிகள் தலை தாங்க வேண்டும் என்றும் வாதாடியது.
ஆரம்பத்தில் வாக்குவாதமாக இருந்த முரண்பாடு, ஒருவரையொருவர் கொன்று பழிதீர்க்கும் படலமாக மாறியது. ரோஸ் நிம் குழுவினர், பொல்பொட், நுவோன்சே ஆகியோரை கொலை செய்வதற்கும் சதி செய்தனர். இதனால், யாரையும் நம்ப முடியாது என்ற நிலைமை தோன்றியது. இந்தப் பரஸ்பர சந்தேகம் காரணமாகவும், களையெடுப்பு என்ற பெயரில் பல உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம். இறுதியில், ரோஸ் நிம் கைது செய்யப் பட்டார். அவரும், அவரோடு இருந்த வேறு சிலரும் சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டனர்.
இந்த விபரங்களை ரோஸ் நிம்மின் மகனே தான், பிரிட்டிஷ் ஊடகவியலாளரின் கமெராவுக்கு முன்னால் கூறினார். அன்றைய காலகட்டத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும், அதனால் தனது தந்தைக்கு கிடைத்த தண்டனையும் எதிர்பார்க்கத் தக்கதே என்றார். அவரை நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லக் கூப்பிட்ட நேரம், அங்கு வைத்து தான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்தார்.
இதிலிருந்தே, கம்போடிய அரசு சாட்சிகளை மிரட்டி இருக்கிறது என்பது தெளிவாகின்றது. பல சாட்சிகள் இவ்வாறு தான் நடந்து கொண்டன. அரச தரப்பு வக்கீல்கள் சமர்ப்பித்த சாட்சிகள் பெரும்பாலும் கம்போடிய அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தான். அவர்களது நம்பகத்தன்மை கேள்விக்குரியது. அவர்கள் குறுக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக உளறினார்கள். உதாரணத்திற்கு, முன்பு தனது தந்தையின் கொலையை நேரில் கண்டதாக சொன்ன ஒருவர், பின்னர் அதை மற்றவர்கள் சொல்லிக் கேள்விப் பட்டதாக கூறினார்.
தலைநகர் ப்னோம் பென் நகரில், க்மெர் ரூஜ் வைத்திருந்த சித்திரவதைக் கூடம் மியூசியமாக மாற்றப் பட்டுள்ளது. அங்கு இருபதாயிரம் பேரளவில் கொண்டு வரப் பட்டதாகவும், புகைப்படம் எடுக்கப் பட்டு, விசாரணைகள் பதிவு செய்யப் பட்டதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால், உண்மையில் மியூசியத்தில் வெறும் ஐயாயிரம் பேரின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. வெறும் நாலாயிரம் விசாரணைக் கைதிகளின் பதிவுகள் மட்டுமே உள்ளன. எஞ்சியோருக்கு என்ன நடந்தது? யாரிடமும் பதிலில்லை. மேலும் அந்த மியூசியம் கூட, இன்றைய கம்போடிய அரசு அமைத்தது தான். அதாவது, "இன்று அரசாங்கத்தில் இருக்கும் முன்னாள் க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், தாம் செய்த குற்றங்களை தாமே காட்சிக்கு வைத்திருக்கின்றனர்! "நம்ப முடிகிறதா?
அதன் அர்த்தம், க்மெர் ரூஜ் யாரையும் கொலை, சித்திரவதை செய்யவில்லை என்பதல்ல. உலகில் ஆயுதப்போராட்டம் நடத்தும் அனைத்து இயக்கங்களும் கொலைகள், சித்திரவதைகள் செய்த வன்முறையாளர்கள் தான். அவர்கள் யாரும் காந்திய வாதிகள் அல்ல. இதை நாங்கள் இப்படிப் பார்க்க வேண்டும். ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் பலருண்டு. உதாரணத்திற்கு, மாத்தையா குழு, கருணா குழு, ஈபிடிபி, இப்படிப் பல உதாரணங்களை காட்டலாம். அன்று கொல்லப் பட்டவர்களுக்கும் உறவினர்கள் உள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் சாட்சிகளாக நிறுத்தி, வாக்குமூலம் பெற்றால் என்ன சொல்லி இருப்பார்கள்? புலிகளைத் தானே குற்றம் சுமத்துவார்கள்?
ஒவ்வொருவருக்கும் தமது குடும்ப உறுப்பினரின் இழப்பு பெரியது தான். அது மறுக்க முடியாத உண்மை. க்மெர் ரூஜால் கொல்லப் பட்டவர்களின் உறவினர்கள் க்மெர் ரூஜ் தான் கொன்றது என்ற உண்மையை மட்டுமே சொல்வார்கள். அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை. ஆனால், இனப்படுகொலை, போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு உணர்வுபூர்வ அரசியல் நடத்துவது மாதிரி நீதிமன்றம் நடந்து கொள்கிறது. அதற்கு உண்மை என்னவென்று ஆராய விருப்பமில்லை. காரணம்: அரசியல் தலையீடு. என்றைக்கு நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கிறதோ, அன்றைக்குத் தான் உண்மையான நீதி கிடைக்கும்.
ஆவணப் படத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:
https://www.vpro.nl/programmas/2doc/2017/Defending-Brother-No2.html
No comments:
Post a Comment