ஜெர்மனி, பிராங்க்பெர்ட் நகரில் அமைந்துள்ள, ஐரோப்பிய மத்திய வங்கிக்கு (ECB) எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. 20,000 க்கும் அதிகமான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. பொலிசாரின் கண்மூடித் தனமான தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்கள், பதிலடியாக பல பொலிஸ் வாகனங்களை எரித்து நாசமாக்கியுள்ளனர்.
பிராங்பேர்ட் நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம் தொடர்பான பின்னணித் தகவல்கள்:
"முதலாளித்துவம் கொல்லும்!" |
ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) பிராங்பெர்ட் நகரில் அமைந்துள்ளது. மார்ச் 18 ம் தேதி, ECB பெரும் பொருட்செலவில் கட்டிய புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவிருந்தது. கிரீஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளில் தலையிடுவதில் ECB முக்கிய பங்குவகிக்கிறது.
அதாவது, IMF மாதிரி, ஐரோப்பிய மத்திய வங்கியும் கடன் கொடுப்பது, வட்டி வீதம் தீர்மானிப்பது போன்ற பல பொருளாதாரத் திட்டங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிப்பது வழமை.
ஜெர்மனியில், "Blockupy" என்ற ஐக்கிய முன்னணி ஒன்று இயங்கிவருகிறது. ஜெர்மனியின் தீவிர இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து, Blockupy கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. புதிய கட்டட திறப்புவிழாவை இடையூறு செய்யும் வகையில், பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு Blockupy அறைகூவல் விடுத்திருந்தது. கடன்சுமையால் மக்கள் கஷ்டப் படுகையில் திறப்புவிழா கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்பது அவர்களின் வாதம்.
பெருமளவு மக்கள் கலந்து கொண்டஆர்ப்பாட்டம், இறுதியில் கலவரத்தில் முடிந்தது. முன்னூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டார்கள். நூற்றுக்கணக்கான பொலிசாரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர். பொலிஸ் வாகனங்கள் எரிக்கப் பட்டன. வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன.
(Klasse gegen klasse) வர்க்கத்திற்கு எதிராக வர்க்கம் |
முகமூடி அணிந்த அனார்க்கிஸ்ட் இளைஞர்களின் குழு ஒன்று முதலாளித்துவ இலக்குகளை தாக்கும் வன்முறைகளில் இறங்கினார்கள். அவர்கள் இதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் போன்று, குறுகிய நேரத்திற்குள் மில்லியன் யூரோக்கள் சேதம் உண்டாக்கி விட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக் காரர்கள், தெருக்களில் தடையரண்கள் போட்டு பொலிசாருடன் மோதினார்கள். ECB கட்டிடத்தை சுற்றி போடப்பட்ட தடையரண்களில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பொலிசாரை நெருங்க விடாமல் தடுப்பதற்கு பல வகையான உத்திகளை பயன்படுத்தினார்கள்.
பொலிஸ் வாகனங்களை நோக்கி கற்கள் வீசப் பட்டன. வர்ணப் பூச்சுக் கலவைகள் விசிறியடிக்கப் பட்டன. இதனால் எழுந்த புகை மண்டலம் காரணமாக, நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். பொலிசார் தமது சேவைக் காலத்தில், இது போன்றதொரு கலவரத்தை காணவில்லை என்று, பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
No comments:
Post a Comment