Tuesday, March 24, 2015

"சிங்கப்பூரின் ராஜபக்சே" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு


"சிங்கப்பூரின் ராஜபக்ச" வான, சர்வாதிகாரி லீ குவான் யூவின் மரணத்திற்கு, போலித் தமிழ் தேசியவாதிகளும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். சதாம் ஹுசைன், கடாபி கொல்லப் பட்ட நேரம், "சர்வாதிகாரி ஒழிந்தான்" என மகிழ்ச்சி தெரிவித்தவர்கள், சிங்கப்பூரின் சர்வாதிகாரியான லீ குவான் யூவின் மரணத்திற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்.

People's Action Party எனும் ஒரே கட்சியின் சர்வாதிகார ஆட்சி நடக்கும் சிங்கப்பூர் நாட்டில், முன்னாள் அதிபர் லீ குவான் யூவின் மகன் Lee Hsien Loong ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளார். இவர் ஒரு இராணுவ ஜெனரல் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிங்கப்பூரில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மருந்துக்கும் கிடையாது. (Human rights in Singapore; http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Singapore)

நடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை மட்டும் தொடர்ந்தும் இருக்கிறது. பிற "எதிர்க்கட்சிகள்" பெயரளவில் இயங்குவதற்கு சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. ஆயினும், அவை ஆட்சியதிகாரத்தினை கைப்பற்ற முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளன. சிங்கப்பூரில், சுதந்திரமான ஊடகம் என்று எதுவும் இல்லை. தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது கூட குற்றமாக்கப் பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக சமூகவலைத்தளமொன்றில் எழுதினால் கூடத் தண்டனை கிடைக்கும். பல தசாப்தங்களாக, அரச எதிர்ப்பாளர்களின் வாழும் உரிமை பறிக்கப் பட்டு வந்துள்ளது. அதாவது, அரசுக்கு எதிரானவர்களை சிறையில் போட்டு சித்திரவதை செய்வதில்லை. ஆனால், அவர்கள் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாது. படிக்க முடியாது. வசதியாக வாழ முடியாது. அவர்களின் மனித உரிமைகள் மீறப் படுகின்றன.

வட கொரியாவில் முன்னாள் அதிபர் கிம் இல் சுங்கின் மகன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதை குடும்ப ஆட்சி என்று பரிகசித்தவர்கள், சிங்கப்பூர் விடயத்தில் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் மர்மம் என்னவோ? சிங்கப்பூரிலும் ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி தானே நடக்கிறது? தமது வர்க்க சார்புத் தன்மையையும், ஏகாதிபத்திய விசுவாசத்தையும் மறைப்பதற்காக, பலர் இங்கே இரட்டை வேடம் போடுகிறார்கள்.

இந்து சமுத்திரத்தையும், பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியில் அமைந்துள்ள சிங்கப்பூர், சர்வதேச கடல் வாணிபத்தால் "ஆசியாவின் பணக்கார" நாடானது. பொருளாதார முக்கியத்துவம் கருதி மேற்கத்திய நாடுகள் துணை நின்றதால் தான், சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

முன்னாள் சீன கடற்கொள்ளையர்கள் லீ குவான் யூ அரசில் முதலாளிகளாக மாறினார்கள். அது மட்டுமல்ல, லீ குவான் யூ ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி, எதிர்க்கட்சிகள், மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை சிறையில் அடைத்தார். சிங்கப்பூரில் இன்று வரையில் அரசியல் கருத்துச் சுதந்திரம் பல நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றது.

லீ குவான் யூ அரசு, தனியார்மயத்திற்கு நூறு சதவீத சுதந்திரம் வழங்கவில்லை. இன்றைக்கும், சிங்கப்பூரின் முக்கால்வாசி நிலம் அரசுக்கு சொந்தமானது. உலகில் எந்த நாட்டிலும் நூறு சதவீத முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்தவில்லை. அரசின் பொருளாதார திட்டங்கள் தான் மக்கள் நலன் சார்ந்து இயங்கக் கூடியவை. அதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம். 

கண்ணை மூடிக் கொண்டு தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில், லீ குவான் யூ வித்தியாசமானவராக திகழ்ந்தார். தமிழீழத்தை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டவர்கள், லீ குவான் யூவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

No comments: