Saturday, July 05, 2014

விரும்பிய நேரத்தில் வேலை! இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது!!

நீங்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தின் விதி முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

1. எத்தனை மணிக்கு வேலை தொடங்க வேண்டும்? எத்தனை மணிக்கு    முடிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்?
  - அதை நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். மன நிலை சரியில்லை என்றால் வீட்டில் நிற்கலாம்.

2. என்ன வேலை செய்ய வேண்டும்?
  - உங்களது தகுதி, திறமைக்கு ஏற்ற வேலையை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

3. எவ்வளவு சம்பளம் வேண்டும்?
- சம்பளத்தின் அளவையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

4. எந்த நேரமும் கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள் இருப்பார்களா?
- நீங்கள் வேலை செய்கிறீர்களா என்று பார்ப்பதற்கு யாரும் வரப் போவதில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடித்துக் கொடுத்தால் போதும்.

5. முகாமையாளர் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் ஒருவராக இருப்பாரா?
- இல்லை. முகாமையாளரை தொழிலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பிடிக்காத முகாமையாளரை வேலையை விட்டு தூக்கும் அதிகாரம் தொழிலாளர்களிடம் உண்டு.

இதை வாசிக்கும் சிலர், ஒரு நகைச்சுவையாகக் கருதி வாய் விட்டுச் சிரிக்கலாம். அப்படி ஒரு நிறுவனம் கனவில் கூட சாத்தியமில்லை என்று நினைக்கலாம். "தொழிலாளர்களுக்கு இந்த அளவு சுதந்திரம் கொடுத்தால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி திவாலாகும்" என்று, பொருளாதார மேதைகள் கூட பரிகசிக்கலாம்.

நம்பினால் நம்புங்கள். நான் இங்கே எழுதியது எதுவும் கற்பனை அல்ல. மேற்குறிப்பிட்ட விதிகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவனம் (Semco SA) பிரேசில் நாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய நிறுவனம் அல்ல. 250 பேருக்கு மேற்பட்ட பணியாட்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம். அதன் நிகர இலாபம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதன் உரிமையாளர் பிரேசிலில் அதிக செல்வம் படைத்த கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் பெயர் : ரிக்கார்டோ செம்லர் (Ricardo Semler)

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், ரிக்கார்டோ Semco SA  நிறுவனத்தை, அவரது தந்தையிடம் இருந்து பொறுப்பெடுத்தார். அப்போது அந்த நிறுவனம், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்தையிடம் இருந்து நிர்வாகத்தை பொறுப்பெடுத்த ரிக்கார்டோ செய்த முதல் வேலை, மூன்றில் இரண்டு பங்கு முகாமையாளர்களை வீட்டிற்கு அனுப்பியது தான். அதில் பல உறவினர்களும் அடங்குவார்கள். 

செம்கோ நிறுவனம் முழுமையாக மறு சீரமைக்கப் பட்டது. அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், மகிழ்ச்சியின்றி கட்டாயத்தின் பேரில் வேலை செய்வதைக் கண்டார். ரிக்கார்டோ, தனது மனதில் தோன்றிய புதிய சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினார். தொழிலாளர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று யாரும் வற்புறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப் படும். தொழிலகத்தின் நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள். 

தொழிலாளர்கள் அனைவரும் செம்கோ தமது சொந்த நிறுவனம் என்று உணரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்தார்கள். யாரும் அவர்களுக்கு உத்தரவிடவில்லை. யாரும் அவர்களை கண்காணிக்கவில்லை. அவர்களுக்கு விரும்பிய நேரத்தில் வேலை செய்தார்கள். களைத்து விட்டால் சிறிது ஓய்வெடுத்தார்கள். 

தொழிலாளர்கள் தாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்த போதிலும், அந்த தொழிலகத்தின் உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்கப் படவில்லை. மாறாக, அது பல மடங்கு அதிகரித்தது. ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம், இலாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. அதனால், நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் இலாபத்தில் பங்கு கிடைத்தது. தொழிலாளர்கள் மத்தியில் அது அவர்களது சொந்த நிறுவனம் என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தார்கள். 

தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தால், அவர்களுக்கும் நன்மை, அதே நேரம் முதலாளிக்கும் நன்மை. ஒரு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் அது தான். இந்த உண்மையை உலகின் பிற பாகங்களில் உள்ள முதலாளிகள் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்? 

மேலதிக விபரங்களுக்கு:
De kapitale kracht van geluk;
http://tegenlicht.vpro.nl/afleveringen/2012-2013/Semler.html

வீடியோ: 
பிரேசில் நாட்டு தொழிலதிபர் ரிக்கார்டோ செம்லர்  டச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு (ஆங்கிலத்தில்) வழங்கிய பேட்டி :



1 comment:

அன்பரசு said...

எங்கள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஒரு அதிகாரி 2008ஆம் ஆண்டில் சொன்னது: இன்றோடு அனைத்து பணிகளும் நின்று விட்டாலும் எந்த ஊழியரையும் பணிக்கு அனுப்பாமல் அடுத்த இருபது வருடங்கள் ஊதியம் தரமுடியும். 2011ஆம் ஆண்டு அதன் நிலை என்ன தெரியுமா? அனைத்து பணமும் கரைந்து ஊழியர் சம்பளம் கொடுக்க கடன் வாங்கினார்கள். அந்த நிறுவனம் உலக புகழ்பெற்ற பதிப்பகம் Macmillan இன் இந்திய கிளை நிறுவனம். எல்லாம் தலைமை பதவியில் வந்தவர்களின் ஊழல் மற்றும் ஊதாரித்தனம் மட்டுமே. வேறு வழியின்றி நிறுவனத்தை Macmillan நிர்வாகம் விற்றுவிட்டனர்.