Friday, July 18, 2014

போலந்து சுய நிர்ணய உரிமையும், சோஷலிசப் புரட்சியும்


போலந்தின் வரலாறு, கி.பி. 10 நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்ட மன்னர்களுடன் தொடங்குகின்றது. அதற்கு முன்னர், ஆதி கால போலிஷ் நாகரிகம் தோன்றிய விட்சுலா நதிக் கரையில் ஸ்லாவிய இன மக்கள் வாழ்ந்தனர். ஸ்லாவியர்கள் ஓரிடத்தில் இருந்து பல்வேறு கிளைகளாக பிரிந்திருக்க வாய்ப்புண்டு. தெற்கு ஸ்லாவிய மொழிகளை பேசும் மக்கள் பிற்காலத்தில் யூகோஸ்லாவியர்கள் என்று அழைக்கப் பட்டனர். அதே மாதிரி கிழக்கே சென்றவர்கள் உக்ரைனியர்களாக அல்லது ரஷ்யர்களாக மாறியிருக்கலாம்.

ரோமர்களினால் ருதேனியர்கள் என்று அழைக்கப் பட்ட மக்கள், கீவ் ரஷ்யர்கள் என்று தெரிய வருகின்றது. இருப்பினும் போலந்து ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ருதேனியர்கள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் தான், உக்ரைனியர்கள் என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக இருந்த மக்கள், இன்று வெவ்வேறு மொழிக் குழுக்களாக பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பகைவர்களாக கருதுவதை கண் முன்னால் பார்க்கிறோம்.

பல நூறு வருடங்களாக, போலந்தும், லிதுவேனியாவும் இணைந்த ராஜ்ஜியம், வடக்கே பால்ட்டிக் கடலில் இருந்து, தெற்கே கருங்கடல் வரையிலான ஒரு பெரிய நிலப் பரப்பை ஆண்டு வந்தது. அந்த ராஜ்ஜியத்தில் பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் வாழ்ந்தனர். போலிஷ் அரச வம்சமும், லிதுவேனியா அரச வம்சமும் ஒன்றுகொன்று திருமண உறவுகளை வைத்துக் கொண்டு, உறவினர்களாக இருந்தார்கள். ஆயினும், இரண்டு அரச வம்சங்களும், தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை தனித் தனியாக நிர்வகித்து வந்தன.

ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் தாக்கங்கள் இன்று வரை உணரப் படுகின்றன. நீண்ட காலமாக, வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கவில்லை. அவர்கள் தமது புராதன மத நம்பிக்கைகளை பின்பற்றி வந்தனர். வத்திக்கானில் போப்பாண்டவரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப் பட்ட "தெய்த்தானிய படை" (Teutonic Order) ஜெர்மன் மொழி பேசும் வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறப்புப் படையணி ஆகும். 

தெய்த்தானிய படை, வட ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக ஒரு சிலுவைப் போரை நடத்தியது. போலந்து அரச வம்சத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், தமது ராஜ்ஜியத்தை பாதுகாத்துக் கொண்டனர். அவர்களின் தூண்டுதலின் பேரில் லித்துவேனிய அரச வம்சத்தினரும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டனர்.

தற்போது எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்ட போதிலும், அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் இருந்து வந்தன. தெய்த்தானிய படையினர், இன்றைய போலந்தின் வட பகுதியையும், இன்று ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியிலும் தமது ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். அந்தப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த, பிற்காலத்தில் அழிந்து போன பிரோய்ஷிய இனத்தின் பெயரை, தெய்த்தானிய படையினர் தமது புதிய தேசத்திற்கு சூட்டினார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஜெர்மன் மொழி பேசினார்கள். ஆனால், அன்று அவர்களது பெயர் பிரோய்ஷியர்கள்.

பிற்காலத்தில் பிரோய்ஷிய (Prussia) சாம்ராஜ்யம், இன்று ஜெர்மனி இருக்கும் இடம் வரை விஸ்தரித்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், போலந்தின் வட பகுதியும், மேற்குப் பகுதியும் ஜெர்மனியின் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களாக இருந்து வந்தன. வடக்கே உள்ள துறைமுகப் பட்டினமான கிடான்ஸ்க், மேற்கே உள்ள தொழிற்துறை நகரமான பொஸ்னான் ஆகியன ஜெர்மனியர்களால் உருவாக்கப் பட்டவை. அங்கெல்லாம் பெருமளவு ஜெர்மானியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, போலந்திற்கு தெற்கே ஆஸ்திரியாவில் இன்னொரு பலமான சாம்ராஜ்யம் தோன்றியது. போலந்தின் தெற்குப் புற நகரமான கிராகோவ், இன்று உக்ரைனின் பகுதியாக உள்ள லிவிவ் ஆகியன ஆஸ்திரிய ராஜ்ஜியத்திற்குள் அடங்கின. அந்தப் பிரதேசம் கலிசியா என்று அழைக்கப் பட்டது. அங்கேயும் ஜெர்மன் தான் நிர்வாக மொழியாக இருந்தது. ஆஸ்திரியர்களும் ஜெர்மன் மொழி பேசுவோர் தான். ஆனால், அந்தக் காலத்தில் மொழி ஒரு முக்கியமான விடயமாக யாராலும் கருதப் படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 30% என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கில் இருந்து இன்னொரு ஆபத்து வந்தது. மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கியினப் படைகள், இன்றைய ரஷ்யா முழுவதையும் தமது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தன. அதில் ஒரு சிற்றரசாக இருந்த மொஸ்கோ, பிற்காலத்தில் பலமான ராஜ்ஜியம் ஆகியது. மொங்கோலிய சாம்ராஜ்யத்தின் பலவீனத்தை பயன்படுத்தி நாலாபுறமும் விஸ்தரித்தது. மேற்கே இருந்த பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய சாம்ராஜ்யம், போலந்தையும் சேர்த்துக் கொண்டது. இறுதியில், ஐரோப்பிய வரைபடத்தில் போலந்து என்ற நாடு காணாமல்போனது.

போலந்து, 19 ம் நூற்றாண்டு முழுவதும், மேற்கே ஜெர்மனியாலும், கிழக்கே ரஷ்யாவாலும், தெற்கே ஆஸ்திரியாவாலும் மூன்று துண்டுகளாக உடைக்கப் பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள், 21 ம் நூற்றாண்டு அரசியல் வரை எதிரொலிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் தோன்றிய தேசியவாதக் கருத்தியல், போலிஷ் அறிவுஜீவிகளை சென்றடைந்தது. கடந்த காலத்தில், போலந்து ஒரு மிகப் பெரிய ஐரோப்பிய சாம்ராஜ்யமாக இருந்த வரலாறு, போலிஷ் தேசியவாதமாக பரிணமித்தது. அப்போது பிரான்ஸ் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான போலிஷ் தேசிய இராணுவம், ஆரம்பத்தில் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளுடன் சேர்ந்து போரிட்டு வந்தது.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பா முழுவதும் சோஷலிசக் கருத்துகளும் பரவின. அப்போது கம்யூனிஸ்டுகள் என்றொரு பிரிவு ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைய சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னோடிகள், அனார்க்கிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் எல்லோரும் சோஷலிஸ்டுகள் என்ற பெயரால் அழைத்துக் கொண்டார்கள். அன்று ரஷ்ய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்கில் வாழ்ந்த போலிஷ் காரர்கள் தான், முதன் முதலாக சோஷலிச கருத்துக்களை போலந்திற்கு கொண்டு வந்தார்கள்.

1881 ம் ஆண்டு, அன்றைய ரஷ்ய சார் மன்னன் அலெக்ஸ்சாண்டரை கொலை செய்வதற்காக குண்டு வீசப் பட்டது. அந்தக் குண்டை வீசியவர், Ignacy Hryniewcki என்ற ஒரு போலிஷ் சோஷலிஸ்ட். நரோட்னையா வோல்யா (Narodnaja Volja) என்ற தலைமறைவு இயக்கத்தின் உறுப்பினர். நரோட்னையா வோல்யா உறுப்பினர்கள் சிலர் வார்சொவிற்கு வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் வாரின்ஸ்கி (Ludwik Warýnski). 

வார்சொவில் ரஷ்ய இரகசியப் பொலிசாரின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், வாரின்ஸ்கி ஜெனீவாவுக்கு தப்பி ஓடினார். அங்கு Równosc (சமத்துவம்) என்ற சோஷலிச சஞ்சிகையை நடத்தி வந்த லிமனொவ்ஸ்கியுடன் கூட்டுச் சேர்ந்து முதலாவது போலிஷ் சோஷலிச இயக்கத்தை கட்டினார். போலந்தின் முதலாவது சோஷலிச இயக்கம், ரஷ்ய, ஜெர்மன் அரசியல் பின்னணியை கொண்டிருந்தது. போலந்து மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்டம் பற்றி பிரச்சாரம் செய்து வந்தது. ஆயினும் அது ஒரு சிறிய குழுவாகவே இயங்கி வந்தது.

ஆரம்ப கால போலிஷ் புரட்சியாளர்கள், ஒன்றில் ரஷ்யாவில், அல்லது ஜெர்மனியில் உள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தனர். அவர்கள் யாருக்கும் போலந்து சுதந்திரம் பற்றிய அக்கறை இருக்கவில்லை. போலந்து தனி நாடாவது அவர்களது அரசியல் அறிக்கைகளில் இருக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை தேசியவாதிகளின் அரசியலாக கருதி ஒதுக்கி வந்தனர். 

போலிஷ் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்து, லிமனோவ்ஸ்கி தனியாகப் பிரிந்து சென்றார். அன்றிலிருந்து போலிஷ் இடதுசாரி இயக்கத்திற்குள் இரண்டு பிரிவுகள் தோன்றின. ஒரு பிரிவினர், முதலில் போலந்து தனிநாடாவது முக்கியம் என்றும், சோஷலிச புரட்சி அதற்கு அடுத்த படியானது என்றும் வாதிட்டனர். இன்னொரு பிரிவினர், முதலில் ஒரு வர்க்கப் புரட்சி நடக்க வேண்டும் என்றும், போலந்து தனி நாடாவது அதன் பக்க விளைவாக இருக்கலாம் என்றும் வாதிட்டனர். இவ்விரு கொள்கை முரண்பாடுகளும், இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்து கொண்டிருந்தது.

1883 ம் ஆண்டளவில், வாரின்ஸ்கி குழுவினர் முழுமையாக ஒடுக்கப் பட்டு விட்டனர். உறுப்பினர்கள் பலர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இருப்பினும் அவர்கள் கற்றுக் கொடுத்த கொள்கைகள், புத்திஜீவிகள் மட்டத்தில் கவனமாகப் படிக்கப் பட்டன. வார்சோ, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரங்களில் கல்வி பயின்ற மாணவர்களைக் கவர்ந்தது. இரண்டாம் அகிலத்தின் ஆலோசனையின் பேரில், 1890 ம் ஆண்டு, வார்சோவிழும், கலீசிய பகுதிகளிலும் மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்தன. மே தின ஊர்வலங்களில் பெருமளவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதன் எதிரொலியாக, லொட்ஸ் (Łódź) எனும் தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நகரத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. அரசு அதிகாரிகளினால் அந்தப் போராட்டம் கொடூரமாக அடக்கப் பட்டது.

இதற்கிடையில், புலம்பெயர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இடதுசாரி போலிஷ் ஆர்வலர்கள், பாரிஸ் நகரில் ஒன்று கூடினார்கள். போலந்துக்கென ஒரு சோஷலிசக் கட்சி உருவாக்க வேண்டுமென பாரிஸ் மகாநாட்டில் முடிவெடுக்கப் பட்டது. அதிலிருந்து PPS எனும் போலந்து சோஷலிசக் கட்சி தோன்றியது. ஆயினும் சில மாதங்களில் கட்சிக்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. SDKP எனும் போலந்து ராஜ்ஜியத்தின் சமூக ஜனநாயகக் கட்சி, போலந்து விடுதலையை தள்ளிப் போட வேண்டும் என வாதிட்டது. 

போலந்து தனி நாடானால், அது தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கும் என்றும், அதற்குப் பின்னர் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது என்றும் வாதிட்டனர். அது மட்டுமல்ல, அயலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டால், தேச எல்லைகள் அர்த்தமற்றதாகி விடும் என்று கூறி வந்தனர். அந்தக் கட்சியின் தத்துவ ஆசிரியர் உலகப் புகழ் பெற்ற ரோசா லக்சம்பேர்க் ஆவார். ஒரு போலிஷ் யூத வணிகர் குடும்பத்தில் பிறந்த ரோசா லக்சம்பேர்க், தனது கடைசிக் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்து வந்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து ஒரு சில மாதங்களில் வலதுசாரி இராணுவ வீரர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

போலந்தில் SDKP இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அந்தக் கட்சி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதனால், SDKP ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்னர் அழிந்து போனது. 1900 ம் ஆண்டு, எஞ்சிய உறுப்பினர்கள் ஒன்று கூடி, SDKPiL எனும் புதிய கட்சியை ஸ்தாபித்தனர். போலந்து, லித்துவேனியாவுக்கான சமூக ஜனநாயகக் கட்சி என்பது அதன் பெயர். அதன் உறுப்பினராக இருந்த லித்துவேனிய சோஷலிஸ்ட் Feliks Dzierżyński பிற்காலத்தில் சோவியத் யூனியனில் உருவான Tsjeka எனும் புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரியாக பதவி வகித்தார்.

SDKPiL லெனின் அங்கம் வகித்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் கூட்டங்களிலும் பங்குபற்றியது. போல்ஷெவிக்,மென்செவிக் பிரிவினையின் போது கூட இருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சியின் பின்னர், போலந்தில் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, SDKPiL போலந்தில் மட்டும் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது. அதற்கு முன்னரே, ஆஸ்திரியாவின் ஒரு பகுதியாக இருந்த தெற்குப் போலந்தினை சோஷலிஸ்டுகள் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு ஏற்கனவே ஓரளவு அரசியல் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது.

குறிப்பிடத் தக்க சிறுபான்மை இனமான யூதர்கள், போலந்து வரலாற்றின் தவிர்க்கவியலாத ஓர் அங்கமாக இருந்தனர். ரஷ்யாவில் சார் மன்னராட்சிக் காலத்தில் நடந்த யூத எதிர்ப்புக் கலவரங்கள் காரணமாக, ஏராளமான ரஷ்ய யூதர்கள் போலந்தில் குடியேறி இருந்தனர். ஒரு காலத்தில், யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஐரோப்பிய நாடாக போலந்து இருந்தது.

போலந்தில் யூதர்கள் பெருந்தொகையில் வாழ்ந்தாலும், சியோனிசம் எனும் தேசியவாதம் அவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குப் பதிலாக "Bund" எனும் யூத சோஷலிசக் கட்சி உருவாகி இருந்தது. இஸ்ரேலில் (பலஸ்தீனத்தில்) குடியேறுவதை விட, ரஷ்ய-போலிஷ் யூதர்களை ஒரு சோஷலிச புரட்சிக்கு தயார் படுத்துவதே அதன் கொள்கையாக இருந்தது.

(போலந்து சோஷலிச இயக்கத்தின் தோற்றமும் மறைவும் பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதி.)

No comments: