Monday, April 15, 2013

ஈழத் தமிழரின் தாகம் "தமிழீழ சோஷலிசக் குடியரசு"!



முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், "இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும், ஈழத் தமிழரின் வரலாறு" இது.  1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு  "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் பாகுபாடும் ஒழித்துக் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சிப் பிரதேசம். சிங்களவர்களுக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை. சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடனும், சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் நட்புறவு பேணப்படும். 

" 1977 ம் ஆண்டு, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு தமிழீழம் வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்து விட்டார்கள்..."  இவ்வாறு இன்றைக்கு பல தமிழீழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.  தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட, தமிழர் விடுதலைக் கூட்டணி, அந்தத் தேர்தலில் மொத்தம் 18 ஆசனங்களை வென்றிருந்தது. அதனால், இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறி, எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது. அந்தளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், தமிழ் மக்கள் எத்தகைய தமிழீழத்திற்காக வாக்களித்து இருந்தார்கள்? வெறும் தமிழீழத்திற்கா? முதலாளித்துவ தமிழீழத்திற்கா? அல்லது சோஷலிசத் தமிழீழத்திற்கா? இன்றைய தமிழ் தேசியவாதிகளிடம் கேட்கப்படும், அந்த ஒரேயொரு கேள்விக்கு மட்டும், எந்தப் பதிலும் கூறாமல் ஓடி ஒளிக்கின்றனர்.

நிச்சயமாக, முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை ஆதரிக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்தக் கேள்வி கசக்கவே செய்யும். ஏனென்றால், அவர்கள் ஒரு வரலாற்றுத் திரிபை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது முதலாளிய கொள்கைகளை, தமிழ் மக்கள் மேல் திணிப்பதற்காக, அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்மொழிந்த "சோஷலிசத் தமிழீழம்" என்ற கருத்தியலை மறுத்தும், மறைத்தும் பேசி வருகின்றனர். 1977 க்குப் பின்னர் பிறந்த தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு, அந்த வரலாறு தெரிந்திருக்கப் போவதில்லை. அதனால், அவர்களின் மூளைக்குள் "தமிழரின் தாகம் முதலாளித்துவ தமிழீழம்" என்ற கருத்தியலை இலகுவாக திணிக்க முடிகின்றது. 

1977 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அன்று மக்களுக்கு விநியோகித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கே தருகிறேன். அதில் தமிழீழம் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதை, மிகவும் கவனமாக வாசிக்கவும். "1977 இலேயே,  ஈழத் தமிழர்கள், தமிழீழம் வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள்," என்ற கூறுபவர்கள்; அந்தத் தீர்மானம் சோஷலிசத் தமிழீழத்திற்கானது என்ற உண்மையையும் தெரிந்து கொள்ள  வேண்டும். அதாவது, வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மகாநாட்டில், தமிழீழமே முடிந்த முடிவு என்று தீர்மானிக்கப் பட்டிருந்தாலும், அதனை தமிழ் மக்கள் முன்னால் எடுத்துச் செல்லும் பொழுது, தமது இலட்சியம் ஒரு "சோஷலிசத் தமிழீழம்" என்று கூறினார்கள். ஏனெனில், சோஷலிசத்திற்கு மாற்றான எந்த அரசியல்-பொருளாதார கட்டமைப்பையும், தமிழ் மக்கள் அன்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. 

*********

1977 ம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து சில பகுதிகள்:

தமிழீழம் - ஒரு மதச்சார்பற்ற சோஷலிச நாடு 

முற்று முழுதான முடிவுடன் அறிவிக்கக் கூடிய, ஒரேயொரு மாற்று மட்டுமே உண்டு. எமது முன்னோரின் மண்ணை, நாம் மட்டுமே ஆள வேண்டும். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியானது, 1977 பொதுத் தேர்தலை, சிங்கள அரசுக்கு தமிழ் தேசத்தை அறிவிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக பார்க்கின்றது. நீங்கள் கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும், சிங்கள மேலாதிக்கத்தில் இருந்து தமிழர் தேசத்தை விடுதலை செய்வதற்கானது என கருதப்படும். 

அதிலிருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தத் தேர்தலில், தமிழர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றது. ஒரு சுதந்திரமான, மதச் சார்பற்ற, சோஷலிசத் தமிழீழம், பூகோளரீதியாக தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணை உள்ளடக்கி இருக்கும். 

அதே நேரத்தில், தமிழீழத்தின் பின்வரும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிக்கின்றது. தமிழரின் தேசமான ஈழம் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அமைக்கப்படும். 

1. தமிழீழத்தின் பிரஜைகளாக அங்கீகரிக்கப் படுவோர்: 
  • (அ) தமிழீழப் பிரதேசத்திற்குள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்          அனைத்து மக்களும்.
  • (ஆ) இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழ் பேசும் நபர், தமிழீழத்தின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 
  • (இ) இலங்கை வம்சாவளியினரான தமிழ் பேசும் மக்கள், உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், தமிழீழத்திற்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 

2. அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும். ஆகவே, எந்தவொரு பிரதேசமும் அல்லது மதமும், இன்னொரு பிரதேசம், அல்லது மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப் பட மாட்டாது. சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி அமைப்பு போல, பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, பிராந்திய தன்னாட்சி அதிகாரம் உறுதிப் படுத்தப்படும். விசேடமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழீழத்தின் பகுதியில், ஒரு தன்னாட்சிப் பிரதேசம் அமைக்கப்படும். அவர்களது சுயநிர்ணய உரிமையும், பிரிந்து செல்லும் உரிமையும் மதிக்கப்படும். 

3. ஒன்றில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, ஒன்றை மற்றது காலனிப் படுத்தவோ, அந்தப் பிரதேச மக்களை சிறுபான்மையினர் ஆக்கவோ  அனுமதிக்கப் பட மாட்டாது. 

4. தீண்டாமைக் கொடுமை, சமூக அந்தஸ்து அல்லது பிறப்பால் தாழ்ந்தவராக கருதப்படும் அநீதி முற்றாக ஒழிக்கப் படும். அந்தக் குற்றங்களை புரிவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். 

5. தமிழீழ அரசு மதச் சார்பற்றது. அதே நேரத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சமமான அரச பாதுகாப்பும், உதவியும் வழங்கப்படும். 

6. தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ மொழியாக, தமிழ் மொழி இருக்கும். அதே நேரம், நாட்டில் வாழும்  சிங்களவர்கள் தமது மொழியில் கல்வி கற்பதற்கும், தமது சொந்த மொழியிலேயே அரசுடன் தொடர்பு கொள்ளவும் சுதந்திரம் வழங்கப்படும். சிங்கள நாட்டினுள் வசிக்கும் தமிழர்களின் மொழி உரிமையை மதிக்க வேண்டுமென சிங்கள அரசிடம் வேண்டப் படும்.

7. தமிழீழம் ஒரு விஞ்ஞான சோஷலிச நாடாக இருக்கும்.
  • (அ) மனிதனை மனிதன் சுரண்டுவது சட்டத்தால் தடை செய்யப்படும்.  
  • (ஆ) உழைப்பின் மேன்மை பாதுகாக்கப்படும். 
  • (இ) தனியார் துறை சட்ட வரையறைக்குள் அனுமதிக்கப்பட்டாலும், உற்பத்தி சாதனங்களும், விநியோகங்களும்  அரச உடைமைகளாக இருக்கும் அல்லது அரசினால் கட்டுப்படுத்தப் படும். 
  • (ஈ)குத்தகை விவசாயிகளுக்கும், தனியார் காணிகளில் குடியிருப்போருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். 
  • (உ)தமிழ் தேசமான ஈழத்தின் பொருளாதார அபிவிருத்தி, சோஷலிச திட்டமிடல் அடிப்படையில் இருக்கும்.
  • (ஊ) ஒரு தனிநபரோ, அல்லது குடும்பமோ சேர்க்கக் கூடிய அளவு செல்வத்தின் உச்ச வரம்பு தீர்மானிக்கப்படும். 

8. தமிழீழ சோஷலிசக் குடியரசானது அணி சேராக் கொள்கையை பின்பற்றும்.  அதே நேரத்தில், சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுக்கும், ஜனநாயக விடுதலை இயக்கங்களுக்கும் தனது ஆதரவை வழங்கும். 

9. தமிழீழ அரசானது, சிங்கள நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும்.  இரண்டு தேசங்களும் எதிர்நோக்கும் பரஸ்பர பிரச்சினைகள், சகோதரதத்துவ அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும். 

விடுதலை - எவ்வாறு அடையப்படும்? 

சுயநிர்ணய அடிப்படையின் கீழ், இறைமையுள்ள தாயகத்தை அமைக்கும் பணியை தமிழ் தேசம் பொறுப்பெடுத்துக் கொள்ளும். இதனை சிங்கள அரசுக்கும், உலகிற்கும் அறிவிப்பதற்கான ஒரே வழி, தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஆகும். இந்த வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், இலங்கை தேசிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதே நேரம், "தமிழீழ தேசிய பேரவை" ஒன்றையும் அமைத்துக் கொள்வார்கள். அந்த அமைப்பு, தமிழீழ அரசமைப்பு சட்டத்தை எழுதுவதுடன், அதனை நடைமுறைப் படுத்துவதன் மூலம் தமிழீழத்தின் சுதந்திரத்தை உருவாக்கிக் கொள்ளும். அதனை சாத்வீகமான வழியிலோ, அல்லது போராட்டம் ஒன்றின் மூலமோ அமைத்துக் கொள்ளும். தமிழீழ தேசியப் பேரவையானது, பொருளாதார அபிவிருத்தி, சமூக நலன், பிரதேச பாதுகாப்பு, கல்வி போன்றவற்றை எழுதி அமுல் படுத்தும். தமிழீழத்தின் சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

-Tamil United Liberation Front
General Election Manifesto (July 1977)

முழுமையான ஆவணத்தை வாசிப்பதற்கு:
Tamil United Liberation Front General Election Manifesto 1977

4 comments:

Unknown said...

திரு.கலையரசன்..

தற்போது தமிழ்நாட்டில் ஈழம் தொடர்பாக எழுச்சியை முன்னெடுத்துச் செல்லும் மாணவர் குழுக்களில் சில குழுக்கள் இந்த வட்டுக் கோட்டை தீர்மானத்தை ஒட்டி மக்கள் அதற்கு ஆதரவளித்ததையே பொதுவாக்கெடுப்பாக எடுத்துக் கொண்டு தற்போது தனி ஈழத்தை ஐ.நா அங்கீகரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் பொதுவாக்கெடுப்பு என்பது எல்லாம் ஏமாற்று வேலை என்றும் கூறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக இதன் மூலம் தாக்குவது தமிழ்நாட்டில் ம.க.இ.க குழுவினரையும் இல‌ங்கையில் புதிய ஜனநாயகம் குழுவினரையும்தான். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்....

Kalaiyarasan said...

Sivakumar,

ம.க.இ.க கட்சியினர், அதற்கான சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் அது வரவேற்கத் தக்கது. தமிழகத்தில் வேறு யாரும் அத்தகைய ஆய்வை செய்ததாக தெரியவில்லை. உண்மையில், ஈழத்தில் உள்ள உண்மையான நிலைமை தமிழகத்தில் சரியாகத் தெரிவதில்லை. அவர்களுக்கு இனப்பிரச்சினை பற்றியும் சரியான புரிதல் கிடையாது. இதைப் பற்றி பேச அழைத்தால் ஓடி ஒளிக்கிறார்கள். அல்லது எட்ட நின்று கல்லெறிகிறார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம், அதன் பிறகான 1977 பொதுத் தேர்தலுக்கு பின்னர், இன்று நிலைமை எவ்வளவோ மாறி விட்டது. அன்றைய காலங்களில் வேட்பாளருக்கு ஓட்டுப் போடும் தேர்தல் முறை இருந்ததால், தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களை வென்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அந்த நிலைமை இனிமேல் வர வாய்ப்பில்லை. ஏனென்றால், அதற்குப் பிறகு நடந்த தேர்தல்கள் எல்லாம், மேற்கத்திய நாடுகளில் நடப்பதைப் போன்று, விகிதாசார அடிப்படையில் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் தேர்தல்கள். அரசியல் நிர்ணய சட்டம் அவ்வாறு மாற்றப் பட்டப் பின்னர், வடக்கு கிழக்கில் மூவினத்தவரையும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், பாராளுமன்றத்திற்கு தெரிவாகின்றன. வடக்கு கிழக்கில் வாழும் மொத்த சனத்தொகையில், குறைந்தது மூன்றில் ஒரு பங்கினராவது முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள். நிச்சயமாக இவர்கள் தமிழீழத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள். தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில் தமிழர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு என்று பேச முடியாது.

1977 தேர்தல் நடந்த காலத்தில் அமைதியாக இருந்த ஈழத்தில், முப்பதாண்டுகளாக போர் நடந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி விட்டார்கள். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், ஈழப் போரே நடக்கவில்லை என்பது போலவும், இன்னமும் 1977 இல் இருந்த நிலைமையே தொடர்வது போலவும் நினைப்பது ஒரு கற்பனாவாதம். ஈழத்தமிழர்கள் மனதில், தமிழீழம் குறித்து, 1977 ம் ஆண்டு இருந்த நிலைப்பாடு, இன்றைக்கும் அப்படியே மாறாமல் இருக்குமா? சமூக மாற்றங்களையும், சமூக அசைவியக்கத்தையும் கவனத்தில் எடுக்காத பழமைவாதிகள் மாதிரி நாம் சிந்திக்க முடியுமா? மேலும் இலங்கை இனப்பிரச்சினையில் உள்ள இடியப்பச் சிக்கல்கள், தமிழகத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் பலருக்கு புரிவதில்லை.

valai thedal said...

நல்ல பதிவு

Unknown said...

திரு. கலையரசன்....

இன்று தமிழ்நாட்டில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது நல்ல விடயம்தான். ஆனால் இந்த கூட்டத்தில் விடுதலை புலிகளை விமர்சனமில்லாமல் ஆதரிக்கும் கும்பல்கள்கூட சேர்ந்துகொள்கின்றன. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் விடுதலை புலிகள் இருந்தவரை கச்சத்தீவு தமக்கே சொந்தம் என கூறி இன்று சிங்கள அரசு செய்வது போலவே தமிழக மீனவர்களை அடித்து விரட்டிய கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் இந்த தமிழகத்தின் பிழைப்புவாதிகளை அம்பலப்படுத்த விடுதலை புலிகள் கச்சத்தீவு தமக்கே சொந்தம் என்றும் தமிழக மீனவர்கள் இந்த பகுதிக்குள் வரக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆதாரம் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் உதவியாக இருக்கும்.