"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்ற கட்டுரைத் தொடரில், இந்துக்கள் (ஆரியர்கள்) மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி இனத்தவர்கள் என்று பல விளக்கங்களுடன் எழுதி இருந்தேன். (இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!) அப்போது எனது கட்டுரைகளை நிராகரித்த நண்பர்கள், இந்த ஆவணப் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள், ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிவர்கள் என்பதையும், முன்னர் ஒரு தடவை ஆப்பிரிக்கா தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். (ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு மகிழும் தமிழினவாதிகள், எந்தவொரு ஆப்பிரிக்க மொழியுடனும் ஒப்பிட நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தமிழரின் ஆப்பிரிக்க தொடர்பை கண்டுகொள்ளாமல், "முன் தோன்றிய மூத்த குடி" என்று பெருமை பேசுவதால் பயனென்ன விளைந்திடப் போகின்றது? தமிழர்களின் ஆப்பிரிக்க பூர்வீகம் குறித்து ஆராய்வதற்கு, எந்தவொரு தமிழ் அறிஞரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த நிலைமை இனி வருங்காலத்தில் மாற வேண்டும். "நாம் தமிழ் பேசும் ஆப்பிரிக்க இனத்தவர்கள்" என்று பெருமையாக பேசிடும் காலம் வர வேண்டும்.
தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
இந்துக்களின் புனித நூலான ரிக்வேதம், அமிர்தம் என்று குறிப்பிடும் சோம பானம், இன்றும் ஆப்கானிஸ்தானில் கிடைக்கிறது! சோம பானம் தயாரிக்க பயன்படும் சோமா செடி, ஆப்கானிஸ்தானில் மட்டுமே வளர்கின்றது. வட இந்திய "இந்துக்களும்", ஆப்கானிய "முஸ்லிம்களும்" அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. மொழியல் ஆய்வின் பிரகாரம், சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களும், ஐரோப்பியரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்கள் அதனை நிரூபிக்கின்றன. உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது.
துருக்மெனிஸ்தான், காரகோரம் பாலைவனத்தில் இந்து ஆரியர்களின் நாகரீகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மன்னரின் புதைகுழி பல தகவல்களை வழங்குகின்றது. இந்தியாவில், சிந்து வெளி நாகரிக காலத்தில் குதிரைகளின் பாவனை அறியப் படவில்லை. வந்தேறுகுடிகளான ஆரியராலேயே அவை அறிமுகப் படுத்தப் பட்டன. துருக்மேநிச்தானில் மன்னரின் புதைகுழியில் குதிரையின் எலும்புக்கூடும், ரிக் வேதம் விபரிப்பது போன்ற ரதங்களும் கண்டெடுக்கப் பட்டன. சோம பானம் தயாரிக்க பயன்படுத்தும் இடமும் அங்கே காணப்படுகின்றது. இந்தியாவின் இந்து ஆரியர்கள், துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து ஈரானை நோக்கி நகர்ந்துள்ளனர். அங்கிருந்து வட இந்தியாவில் குடியேறி உள்ளனர்.
தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:
* ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்
* இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
9 comments:
///உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது. ///
சிங்களத்திலும் குதிரைக்கு ”அஸ்வயா”னுதானே சொல்கிறோம்.
//சிங்களத்திலும் குதிரைக்கு ”அஸ்வயா”னுதானே சொல்கிறோம். //
சிங்களத்தில் மட்டுமல்ல, தமிழில் கூட அஸ்வ என்ற சொல் சில சமயங்களில் பாவிக்கப் படுகின்றது. ஆனால், இவற்றின் மூலம் சமஸ்கிருதம் என்பது அனைவருக்கும் தெரியும். தற்காலத் தமிழில், ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப் படுவதைப் போல, ஒரு காலத்தில் சம்ஸ்கிருத சொற்களை கலந்து பேசுவது 'பாஷனாக' இருந்தது.
தோழர் கலை,
யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் ஆதிமனிதன் ஆதம் (ADAM). இவர் அரபியர் அல்லர் என்ற கருத்து முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும், உலகின் முதல் மனிதன் நடமாடிய பகுதியான லெமூரியா கண்டம் தற்போதைய கன்னியாகுமரி பகுதி கடலுக்கடியில் இருந்ததாகவும் வாசித்த நினைவு.
அரபு மொழியர் அல்லாத ஆதம்+ லெமூரியா+கன்யாகுமரி இவற்றை எல்லாம் தொடர்பு படுத்தி ஆய்வு செய்தால் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைக்கக்கூடும்.
ஆதி மனிதன் ஆதாம் பற்றி, மதங்கள் என்ன கூறுகின்றன என்பதனை அறிவியல் ஆதாரமாக கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிட்ட மதங்கள் மட்டுமல்ல, உலகில் நூற்றுக் கணக்கான மதங்கள், நூற்றுக் கணக்கான முதல் மனிதன் கதைகளை கூறுகின்றன.
லெமூரியா கண்டம் கன்யா குமரி அருகில் இருந்த நிலப் பகுதி அல்ல. ஆயிரக் கணக்கான மைல் தொலைவில் அவுஸ்திரேலியாவுக்கு அருகாமையில் உள்ளது. நீங்கள் கூறியது குமரி கண்டமாக இருக்கலாம். அது கூட தமிழ் இலக்கியங்கள் இட்ட பெயர் தான். கடல் கொண்ட தமிழகப் பகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், அங்கே தான் முதல் மனிதன் தோன்றினான் என்று எந்த ஆராய்ச்சியும் தெரிவிக்கவில்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்பதை இன்று அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த பூர்விகம் என்பதல்லாம் வீண்வேலை. உலகம் சுருங்கிக் கொண்டு வருகிறது். அதாவது கம்பூட்டர் காலத்தில் இந்தமாதிரி பைத்தியக்காரத் தனமான வேலைகளை விட்டுவிட்டு நல்ல பயனுள்ள கருத்துக்களை எழுதுங்கள். ஜாதி மதம் இனம் மொழி போன்றவற்றால் மக்களை பிறக்க முயற்சிக்கக்கூடாது. இதனால் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் மக்கள் ஆளாகின்றனர். மக்களை அமைதியாக வாழவிடுங்கள்!!!
Natrayan ,
ஜாதி, மதம், மொழி எல்லாம் பிற்காலத்தில் வந்தவை. தமிழர்களும் பிற மனித இனங்களைப் போல ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்.கானொளியில், நீங்கள் சொல்வதை விட, மிகவும் சிறப்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக சொல்லப் பட்டுள்ளது. ஐயா, மக்கள் ஏற்கனவே ஜாதி, மதம் என்று பிரிந்து நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூர்வீகம் பற்றிய இந்தப் பதிவு அவர்கள் எல்லோரும் ஓரினம் என்கிறது. நீங்கள் தான் ஐயா, ரொம்ப குழம்பிப் போயுள்ளீர்கள்.
எனக்கு லெமூரியா-குமரி கண்டங்கள் குறித்து அவ்வளவாகத் தெரியாது.
எல்லாவகையான சோதனைகளையும் அறிவியல் ஆய்வுகளை மட்டும் வைத்து நிரூபிக்க முடியாது; சில ஆய்வுகளுக்கு வரலாற்றுக் குறிப்புகளும் அவசியம் என்ற வகையில் ஆதிமனிதன் குறித்த மதரீதியிலான குறிப்புகளும் தவிர்க்க முடியாதவை.
யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய மதங்கள் ஆப்பிரிக்கா மற்றும் அதையொட்டிய மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் இருந்தே வந்துள்ளதன் அடிப்படையில் ஆய்வு செய்தால் முதல் மனிதன் ஆப்பிரிக்க வழித்தோன்றலுக்கான சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை.
//சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே,ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம்.//
இது யூகங்களின் அடிப்படையிலான கருத்துக்களே எனும்போது மதம் சார்ந்த வரலாற்றுக் குறிப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல என்பதால் மதரீதியான கருத்துத்தையும் குறிப்பிட்டேன்.
//மக்கள் ஏற்கனவே ஜாதி, மதம் என்று பிரிந்து நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூர்வீகம் பற்றிய இந்தப் பதிவு அவர்கள் எல்லோரும் ஓரினம் என்கிறது.//
மன்னிக்கவும் கலை. இவ்விசயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது தெரியுமா? :)
திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ [١٠:١٩]
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
மனிதர்கள் யாவரும் ஒரே இனமே ...இதில் வேறுபாடு எதற்கு...
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment