Monday, September 19, 2011

ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஆறு)

இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்," என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, இலங்கைக்கு தன்னாட்சி வழங்கும் திட்டம் மெல்ல மெல்ல நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளது. கோல்புறூக், டொனமூர், சோல்பரி என ஆங்கிலேய பிரபுக்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழுக்கள், இலங்கைத் தீவுக்கென விசேடமான யாப்புகளை எழுதின. இந்த அரசியல் யாப்புகளின் பிரகாரம், "சிங்கள-தமிழ் மேட்டுக்குடிக்கு" ஆட்சியில் பங்கு பெறும் சந்தர்ப்பம் வாய்த்தது. 1948 ல் "சுதந்திரம்" கிடைப்பதற்கு முன்னரே, உள் நாட்டில் சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் அரசு செயற்படத் தொடங்கியிருந்தது. வெளிநாட்டு விவகாரம், இராணுவம், பெருந்தோட்டப் பொருளாதாரம் போன்ற துறைகளை மட்டும் பிரிட்டிஷ்காரர்கள் நிர்வகித்து வந்தனர். 1948 க்கு பின்னரும், நிலைமை பெருமளவு மாறவில்லை. புதிதாக பதவியேற்ற "சிங்கள அரசு", பிரிட்டிஷ் ஆளுநருடன் ஒத்துழைத்தது. ஆளுநர் மட்டுமல்ல, அரசியல் யாப்பு வரைந்த சோல்பரி பிரபு கூட அடிக்கடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருந்தார். மன்னராட்சி நிலவும் ஐரோப்பிய நாடுகளில், அமைச்சரவையும், அரச குடும்பமும் கூட்டுச் சேர்ந்து முடிவுகளை எடுப்பது போலத்தான் அன்றைய நிலைமை இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்தின் ஆரம்பமான, இரண்டாம் உலகப் போர் இலங்கை நிலவரத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. போர் ஆரம்பிக்க முன்னரே, "ஆசியாவில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்...." என்று, சிங்கள அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கத் தொடங்கி விட்டனர். பல காலமாக, சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும், '"யார் சிறந்த ஆங்கிலேய விசுவாசி?" என்பதைக் காட்டுவதில் போட்டி போட்டனர். அப்படி இருந்தும், ஆங்கிலேயர்கள் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். "பிரிட்டனின் எதிரி நாடான ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலை பெறும் எண்ணம் உள்ளதா?" என்ற சந்தேகம் அன்றைய சூழ்நிலையில் சாத்தியமானதே. இந்தியாவில், நேதாஜி ஜப்பானியரின் உதவியுடன் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு வந்தார். 1942 ம் ஆண்டு, பிரிட்டிஷ் காலனிகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகள் ஜப்பானியரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். இலங்கைத் தீவையும் ஜப்பானியர்கள் கைப்பற்றக் கூடிய அபாயம் தோன்றியது. கொழும்பிலும், திருகோணமலையிலும் குண்டுகள் வீசப் பட்டன. இருந்த போதிலும், இலங்கையின் ஆளும் வர்க்கம், பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரை, "ஏகாதிபத்தியப் போர்" என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். மலையகத்தில், இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று விளங்கின. போர் தொடங்கியவுடன், உலகச் சந்தையில் இரப்பரின் விலை அதிகரித்ததால், ரப்பர் ஏற்றுமதி காரணமாக, இலங்கைப் பொருளாதாரம் வளர்ந்தது. அதேநேரம், இடதுசாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. 1940 ல், மலையகத்தில் பொலிசாருடனான முறுகல்நிலை, தொழிலாளர் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இரப்பர் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் இடம்பெறலாம் என ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அதனால், உலகப்போரை காரணமாகக் காட்டி, பல இடதுசாரிகள் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். குறிப்பாக, சமசமாஜக் கட்சிப் பிரமுகர்கள், "போர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காக" சிறைப் பிடிக்கப் பட்டனர். சமசமாஜக் கட்சி தோழர்கள், சிறைச்சாலைக்கு சென்ற பின்னரும் சும்மா இருக்கவில்லை. கூட இருந்த கைதிகளுக்கும், காவலர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு ஊட்டினார்கள். ஒரு தடவை, சிறைக்காவலாளியின் ஒத்துழைப்புடன், சிறை உடைத்து தப்பித்து விட்டனர். தப்பியவர்கள் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. சிறை உடைப்பினால் ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் காலனிய அரசு, கண்ணில் பட்ட இடதுசாரிகளை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் தறுவாயில், உலக இடதுசாரி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரச்சினை, இலங்கையிலும் எதிரொலித்தது. சமசமாஜக் கட்சி ட்ராஸ்கியை பின்பற்றி நான்காம் அகிலத்தில் இணைந்து கொண்டது. இதனால் அதிருப்தியுற்ற ஸ்டாலினிசவாதிகள், "இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி" யை ஸ்தாபித்தனர். இவ்விரு கட்சிகளும், இன்றைக்கும் அதே கொள்கையுடன் தொடர்கின்றன. யாழ்ப்பாணத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல வரவேற்பிருந்தது. தமிழ் உழைக்கும் மக்கள், அதனை தமது கட்சியாக கருதினார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்திய வெகுஜன அமைப்பான, "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" யிலும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் ஊடுருவி இருந்தனர்.

சர்வதேச மட்டத்தில், ஸ்டாலினின் சோவியத் யூனியன், நேச நாடுகளின் அணியில் பிரிட்டனுடன் கூட்டுச் சேர்ந்தது. சோவியத் சார்பு நிலையெடுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, "பாசிசத்திற்கு எதிரான போர் நீதியானது" என்று கூறி வந்தது. இதனால், பல நூற்றுக் கணக்கான தமிழ் தலித் இளைஞர்கள், இலங்கை காலனிய இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றனர். உற்சாகமாக கட்சிக்கு பாடுபட்ட இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்ததால், கட்சியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தில், உயர்சாதி தமிழர்கள் மிகவும் அரிதாகவே சேர்ந்திருந்தனர். வேளாள நிலவுடமைச் சமூகத்தில், இராணுவத்தில் பணியாற்றுவது கீழ்த்தரமாகக் கருதப் பட்டது. பிற்காலத்தில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த பொழுது, "உயர்சாதி மனப்பான்மையினால் ஏற்பட்ட பின்னடைவு" பெரிதும் உணரப் பட்டது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பொறுத்த வரையில், இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும். ஆசியாக் கண்டத்தில் ஆங்கிலேயரின் மிகப்பெரும் குடியேற்ற நாடான, அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் கப்பல்கள் யாவும், இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று செல்வது வழக்கம். இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், பிரிட்டனால் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஓரிரு ஆண்டுகளில், சிங்கப்பூரும், மலேசியாவும், ஜப்பானால் கைப்பற்றப் பட்டன. அந்த அவமானகரமான தோல்வியின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. ஜப்பான் சரணாகதி அடையும் வரையில், தூர கிழக்காசியாவுக்கான இராணுவ கட்டளைப் பணியகமாக இலங்கை திகழ்ந்தது. போர்க்களத்திற்கு அனுப்பப்படும் படையினரை பராமரிக்கும் மையமாகவும் இலங்கையை தேர்ந்தெடுத்தார்கள். இதனால், நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அன்று இரண்டாம் உலகப்போருகாக்காக கட்டப்பட்ட மருத்துவமனைகள் இன்றைக்கும் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது, இலங்கையில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள், நீண்ட காலமாக இரகசியமாக வைக்கப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகருக்கு அருகாமையில் உள்ள, இரத்மலானை விமான நிலையம், ஜப்பானிய விமானக் குண்டுவீச்சினால் சேதமடைந்தது. விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கட்டிடங்கள் நாசமடைந்த செய்தி மட்டுமே வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில், அன்றைய தாக்குதலில் (5 ஏப்ரல் 1942) முப்பதுக்கும் அதிகமான பிரிட்டிஷ் போர் விமானங்கள் நாசமாக்கப் பட்டன! நான்கு நாட்கள் கழித்து, திருகோணமலை துறைமுகம் தாக்கப்பட்டது. கேமிஸ், வம்பயர் என்ற இரண்டு யுத்தக் கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டன. சீனன்குடா எண்ணெய்க் குதம் தீப்பற்றி எரிந்தது. உண்மையில், பிரிட்டிஷ் இலங்கையின் விமானப் படை, கடற்படை என்பன பெருமளவு அழிக்கப்பட்டன. இலங்கையில் பிரிட்டிஷ் படைகள் பலவீனப் பட்டிருக்கும் தகவல்கள் வெளியே கசிந்தால், எதிரிக்கு சாதகமாக அமைந்து விடும். நிலைமையை பயன்படுத்தி, இலங்கை அரசியல் தலைவர்கள் யாராவது ஜப்பானியருக்கு அழைப்பு விடுப்பார்கள், என்று பிரிட்டிஷ் காலனிய அரசு அஞ்சியது. இதைத் தடுப்பதற்காக, மந்திரி சபையில் இருந்த இலங்கையருக்கு அதிக அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. இலங்கை ஆட்சியாளர்களும், பிரிட்டனுக்கு விசுவாசமான சமர்த்துப் பிள்ளைகள் என்பதை நிரூபித்தார்கள். உண்மையில், இலங்கைக்கு வழங்கப்பட்ட "சுதந்திரம்", மேற்கத்திய விசுவாசிகளான மேட்டுக்குடியினருக்கு கொடுக்கப்பட்ட பரிசாகும்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

1 comment:

Mohamed Faaique said...

புதிய விடயங்களை கேள்விப் படிகிறேன். ஜப்பான் இலங்கை மீது தாக்குதல் நடத்தியதை இன்றுதான் அறிவேன். பகிர்வுகு நன்றி