(பகுதி : இரண்டு)
உலகில் மிகவும் தீவிரமாக இனத் தேசியவாதம் பேசும் தலைவர்கள் பலரின், "இனத் தூய்மை" திருப்திகரமாக இருப்பதில்லை. சிங்கள தேசியத்தை உருவாக்கிய பண்டாரநாயக்கவின் முன்னோர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள். தொண்டமான் போன்று பண்டாரநாயக்கவும், உயர்குடியினரின் குடும்பப் பெயர் என்பதால், அவர்களின் பூர்வீகத்தை அறிவது கடினமல்ல. அன்றைய நாட்களில், பண்டாரநாயக்கவின் அரசியல் எதிரிகள், அதனை சுட்டிக் காட்டி பேசத் தயங்கவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தினர், காலனிய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்ததால், அவர்களின் மதத்தை பின்பற்றியவர்கள். போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்கர்கள், ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்தினர், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலிக்கர்கள். இலங்கை சுதந்திரமடையும் தறுவாயில், பௌத்தர்களாக மாறினார்கள். சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க, தனது கிறிஸ்தவ பின்னணியை மறைப்பதற்காக, S. W. R. D. Bandaranaike என்று எழுதி வந்தார். தமிழ் தேசியத் தலைவர்களும் அவ்வாறு பெயர் வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு: S.J.V. (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை) செல்வநாயகம்.
சிங்கள, தமிழ் தேசியவாதத்தை உருவாக்கிய தலைவர்கள் எல்லோரும் அநேகமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். தமது தாய்மொழியை விட ஆங்கில மொழியில் சரளமாக உரையாடக் கூடியவர்கள். கிறிஸ்தவ மதத்துடன், ஐரோப்பிய கலாச்சாரத்தையும் பின்பற்றியவர்கள். இது போன்ற பண்புகளைக் கொண்ட மேட்டுக்குடியினர், "சுதந்திர இலங்கையில் அதிகாரமற்ற சிறுபான்மையாக ஒதுக்கப் பட்டு விடுவோம்" என அஞ்சியிருக்கலாம். அதற்கு காரணம், பெரும்பான்மை மக்கள் இன்னமும் தமது மரபுகளை கைவிடாதவர்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒன்றில் சிங்களம், அல்லது தமிழ் மொழியை மட்டுமே பேசினார்கள். மதத்தைப் பொறுத்த வரையில், பௌத்தர்களாக அல்லது இந்துக்களாக வாழ்ந்தனர். அந்நிய ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், சிங்கள பண்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் மரபுகளைப் பேணி வந்தனர். ஆகவே, சிங்கள-தமிழ் பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடியினர், ஐரோப்பாவில் தாம் கற்ற தேசியவாத கொள்கையை இலங்கைக்கு இறக்குமதி செய்தனர். மொழி அடிப்படையில் அமைந்த தேசியவாதத்தினுள், தமது நலன்கள் பாதுகாக்கப்படும் என நம்பினார்கள்.
பண்டாரநாயக்க சிங்கள தேசியவாதியாக மாறியதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று காரணமாக கருதப்படுகின்றது. பிரித்தானியாவில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு கல்வி பயில சென்ற வேளை, வெள்ளையின மாணவர்களின் நிறவெறி கண்டு மனமுடைந்து போனார். அதுவரையில், ஆங்கிலேயருக்கு நிகரான உயர்குடிப் பிறப்பாளராக நம்பி வந்த பண்டாரநாயக்கவின் தற்பெருமை தகர்ந்தது. இலங்கை திரும்பிய பின்னர், உள்ளூர் மக்களைப் போன்று உடை உடுக்க தொடங்கினார். ஆனால், அது கூட அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது காலப்போக்கில் தெளிவானது. அரசியல் கூட்டங்களில் வேஷ்டி, சட்டையுடன் காணப்படும் பண்டாரநாயக்க, மாலை நேர விருந்துகளில் மேற்கத்திய பாணி உடை உடுத்துவார். பண்டாரநாயக்கவின் அரசியல் வாழ்வு முழுவதும், இவ்வாறு இரட்டைத்தன்மை வாய்ந்ததாக காணப்பட்டது. அரசியல் மேடைகளில் சிங்கள-பௌத்த இன மேன்மை பற்றி உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வந்தார். ஆங்கிலேயர்களின் இலங்கை அரச பேரவையில் (நாடாளுமன்றத்தில்), சிங்கள இனத்தின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவுக்கும், பொன்னம்பலத்திற்கும் இடையிலான காரசாரமான விவாதங்கள், அடித்தட்டு மக்களை கிளர்ச்சி அடைய வைத்தன. இன்றும் கூட, சிங்களவர்கள், பொன்னம்பலத்திற்கு பண்டாரநாயக்க கொடுத்த பதிலடிகளை சிலாகித்து பேசுகின்றனர். தமிழர்கள், பண்டாரநாயக்கவை வாயடைக்க வைத்த பொன்னம்பலத்தின் பேச்சுகளை வியந்துரைக்கின்றனர். இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்னோடியான, டொனமூர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மேலவை, பண்டாரநாயக்கவினதும், பொன்னம்பலத்தினதும் அனல் பறக்கும் வாதங்களால் அதிர்ந்தது.
"ஒருவர் சிங்கள தேசிய நாயகனாகவும், மற்றவர் தமிழ் தேசிய நாயகனாகவும்" பொதுஜனத்தின் பார்வையில் தெரிந்தனர். "சிங்கள இனக் காவலரான" பண்டாரநாயக்கவும், "தமிழ் இனக் காவலரான" பொன்னம்பலமும், பொது அரங்கில் தான் எதிரிகளாக காட்டிக் கொண்டனர். அந்தரங்க வாழ்வில், இருவரும் இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்தனர். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் மேட்டுக்குடி பின்னணி, உயர்சாதிப் பிறப்பு, என்பன இரண்டு நண்பர்களின் குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. "சிங்கள பேரினவாதத்தை தோற்றுவித்த பண்டாரநாயக்கவும், அதற்குப் போட்டியாக தமிழ் குறுந் தேசியத்தை உயர்த்திப் பிடித்த பொன்னம்பலமும் உண்மையிலேயே அரசியல் எதிரிகள் தானா?," என்ற ஐயம், அன்று பலர் மனதில் குடி கொண்டிருந்தது.
இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆளுநர் Caldecott, இவ்விரண்டு நண்பர்களது நோக்கங்கள் குறித்த ஐயப்பாடுகளை வெளிக்காட்டி உள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான சேவையாளர்களை நன்கு அறிந்து வைத்திருந்த ஆளுநர், அத்தகைய சந்தேகத்தை தெரிவித்ததில் வியப்பில்லை. அதாவது "பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும் தாம் சார்ந்த அரசியல் கொள்கைக்கு விசுவாசமானவர்களா?" என்பதே ஆளுநரின் கேள்வியாக இருந்தது. அந்த சந்தேகத்திற்கு ஆதாரம் இல்லாமலில்லை. பண்டாரநாயக்க தோற்றுவித்த "சிங்கள மகாசபை கட்சி" கண்டி மாகாணத்தில் 1943 ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதில் முக்கிய வேட்பாளராக நின்றவர் பண்டாரநாயக்கவின் மாமன். அந்த வேட்பாளருக்கு ஆதரவாக பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார். கண்டி மாகாணத்தில் பெருமளவு இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். தனது அருமை நண்பனுக்கு தமிழ் ஓட்டுக்களை பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு தமிழனான பொன்னம்பலம் பாடுபட்டார். இதே பொன்னம்பலம் தான், அடுத்த வருடம் (1944 ) தமிழ் தேசியக் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்தார். சுதந்திரத்திற்கு பின்னர், இந்திய தோட்டத் தொழிலாளரின் குடியுரிமையை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இலங்கையரை சேர்த்துக் கொள்ள முன்வந்தனர். அன்று கல்வி கற்ற இலங்கையருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கி இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு முன்னோடியான மேலவை, மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது. சிங்கள, தமிழ் படித்த நடுத்தரவர்க்க பிரதிநிதிகள் அன்றைய இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார்கள். அவர்களுக்கு இடையிலான, தொகுதிப் பங்கீடு, இட ஒதுக்கீடு குறித்த தகராறுகள் தான், "இனப்பிரச்சினை என்ற நோயின் முதலாவது அறிகுறி". சட்டவாக்க அவையில் பங்குபற்றிய இலங்கையர்கள் "சிலோன் தேசியக் காங்கிரஸ்" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். ஆயினும் அந்த அமைப்பின் போதாமை காரணமாக, அல்லது தேசிய அரசியலுக்கு இடமில்லாததால், பலர் அதிலிருந்து விலகினார்கள். Edmund Walter Perera என்ற தேசியவாதத் தலைவர், "அனைத்திலங்கை லிபரல் லீக்" என்ற அரசியல் அமைப்பை ஸ்தாபித்திருந்தார். அன்று தீவிர அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களாக கருதப்பட்ட பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும், லிபரல் லீக்கின் முக்கிய அங்கத்துவர்கள் ஆவார்கள்.
இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னரான அத்தகைய அமைப்புகளின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. லிபரல் லீக் தலைவர் பெரேரா ஒரு சிங்கள கிறிஸ்தவர். 1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசுடன் பேசிய முக்கிய பிரமுகர்கள் இருவர். ஒருவர் இராமநாதன், மற்றவர் பெரேரா. "மண்ணின் மைந்தர்களான சிங்கள-பௌத்தர்களுக்கு" பக்க பலமாக நிற்பதாக காட்டுவதே, இவர்களின் உள்நோக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தமது "தமிழர்", "கிறிஸ்தவர்" போன்ற அடையாளங்களை கைவிட்டவர்களல்ல. ஆயினும், பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இன்றைய தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூட இராமநாதன் போன்றோரின் "படித்த தமிழ் மேட்டுக்குடியின் துரோகம்" குறித்து மௌனம் சாதிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்று, "சிங்கள-பௌத்த பேரினவாத வெறித்தனத்தின் வரலாற்றை" நினைவு படுத்தியிருந்தது. "சிங்கள பேரினவாதத்தின் முதலாவது இனவெறித் தாக்குதல் முஸ்லிம்கள் மீதானது", என்ற வரலாற்று உண்மையை எடுத்துக் கூறியது. உண்மை தான். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து, சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டிருந்தனர். தமிழ் தேசியவாதிகளின் நாயகனான இராமநாதன், இங்கிலாந்து சென்று வழக்காடி, சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுவித்தார். அன்று, தமிழ் தேசியத் தலைவர்கள், ஆங்கிலேயரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்திருந்தால், இன்று சிங்கள பேரினவாதம் நூதனசாலையில் மட்டுமே வைக்கப் பட்டிருக்கும்.
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்
3 comments:
அருமை .இந்த வரலாற்று ரீதியான் புரிதல்கள் ஈழ,சிங்கள்,தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு 50 வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டிருந்தால் இன பிரச்சினைகளே வந்திருக்காது.
தொடருங்கள்.
நன்றி
VERY GOOD ARTICLE. SORRY FOR NOT TAMIL FONDS.
மிக மிக அருமையான பதிவு.
பாராட்டுகள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment