Saturday, July 11, 2009

ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?


"சோவியத் யூனியனின் தலைமையை ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாபெரும் பயங்கரவாத ஆட்சி ஆரம்பமாகியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் இருந்த 139 உறுப்பினர்களில், 98 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்சியில் பேராசை பிடித்த அடக்குமுறையாளரின் ஆதிக்கம் நிலவியது. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடினர். உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாய வேலை வாங்கப்பட்டனர். மிதமிஞ்சிய உழைப்பு காரணமாக பலர் மரணித்தனர். ஸ்டாலினைப் போற்றும் தனிநபர் வழிபாடு ஊக்குவிக்கப்பட்டது. மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டனர்."

20 ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மனிதப் படுகொலைகள்:
61.900.000 பேர் ரஷ்ய கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டனர்.
38.700.000 பேர் சீனக் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டனர்.
20.900.000 ஜெர்மன் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
5.900.000 ஜப்பானியரால் கொல்லப்பட்டனர்.


மேலே தரப்பட்ட மேற்கோள்கள், ஐரோப்பிய நாடுகளின் பாடசாலை மாணவர்களுக்கான சரித்திரப் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தப் புத்தகங்களில் ரஷ்யாவைப் பற்றிய அத்தியாயத்தின் பெரும் பகுதி ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியைப் பற்றி சொல்கின்றன. ஜனநாயகம், சுதந்திரம் என்றால், அது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் தான். கிழக்கு ஐரோப்பாவில், 1989 ம் ஆண்டு வரை சர்வாதிகாரம் நிலவியதாக பாடசாலை மாணவர்கள் பரீட்சையில் எழுத வேண்டும்.

ஸ்டாலின் என்றால் கொடுங்கோலன். ஹிட்லரைப் போல இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவன். அடுத்து வந்த குருஷேவின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை. இன்றும் கூட பள்ளிக்கூட  பரீட்சைகளில் ஸ்டாலினின் கொடுமைகளை விபரிக்குமாறு கேட்கப்படுகின்றது. இந்தப் பாடத்திட்டத்தை எதிர்த்து ஒரு மாணவனோ, அல்லது ஆசிரியரோ கேள்வி எழுப்பினால், மற்றவர்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். "இனப்படுகொலைகள், பட்டினிச் சாவுகள், இவற்றை யாரும் ஆதரிக்க முடியாது," என்று கூறி அடக்கப்படுகின்றனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் பாடசாலை மட்டத்திலேயே ஆரம்பமாகின்றது. அது பின்னர், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என விரிவுபடுத்தப் படுகின்றது. இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு தான் நாம் ட்ராஸ்க்கியவாதிகள் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும். ட்ராஸ்க்கியவாதிகள் "ஸ்டாலினிஸ்ட்களை விட தூய்மையானவர்கள்"? "இதுவரை சோஷலிசம் உலகில் எந்தவொரு நாட்டிலும் இருக்கவில்லை. தேசிய முதலாளித்துவமே இருந்தது. 1989 ல் வீழ்ச்சியடைந்தது ஸ்டாலினிசம் மட்டுமே." இது போன்ற கோஷங்களுடன், ட்ராஸ்க்கியவாதிகள் தாமே "நிஜமான சோஷலிசம் படைக்கப் போகும், உண்மையான மார்க்சிஸ்ட்கள்" எனக் கூறிக் கொள்கின்றனர். தம்மை ஸ்டாலினிஸ்ட்கள் இல்லை என்று சொல்லி, கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக் கொள்கின்றனர்.

ட்ராஸ்க்சியவாதிகள், சோஷலிச கட்டுமானம் பற்றி என்ன சொல்கின்றனர்?
சோஷலிசம் என்பது ஒரு கட்சியினால் மேலே இருந்து கொண்டு, கீழே இருக்கும் மக்கள் மேல் திணிக்க முடியாது. அது அடி மட்டத்தில் இருந்து வர வேண்டும். அது சரி தோழரே, பல்வேறு பிற்போக்கு கலாச்சாரங்களில் மூழ்கியிருக்கும் மக்கள் எவ்வாறு சோஷலிசத்தை கண்டுபிடிப்பார்கள் என்று கொஞ்சம் விளக்குங்களேன்? அதே நேரம் ட்ராஸ்கிஸ கட்சிகளில் கூட இறுக்கமான கட்டுப்பாடுகள், மேலிருந்து வரும் அதிகாரம், தலைமையின் எதேச்சாதிகாரம் போன்றவற்றை எதிர்த்து வெளியேறிய பலரை எனக்குத் தெரியும்.

மேலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லாடலை ஸ்டாலினிச சர்வாதிகாரத்துடன் அடையாளம் காண்பதால், "பாட்டாளிவர்க்க ஜனநாயகம்" என்ற ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர் ட்ராஸ்கிஸ சித்தாந்திகள். இவர்களது பாட்டாளிவர்க்க ஜனநாயக ஆட்சியில் முதலாளிகளும் இருக்கலாம். இப்படிப்பட்ட "புரட்சிகர" கருத்துகள் சமூக ஜனநாயகவாதிகளை சகோதர பாசத்துடன் அணுக வைக்கின்றது. ஐரோப்பாவில் ஏற்கனவே இருந்துவரும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஆட்சியில் நாடு சுபீட்சம் அடையாததாலோ, அல்லது சமூக ஜனநாயகக் கட்சிகள் இடதுசாரிக் கொள்கைகளை கைவிடுவதாலோ ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அதற்குள் ட்ராஸ்கிஸவாதிகள் மார்க்சிச முலாம் பூசிய சமூக ஜனநாயகவாதிகளாக உலா வர முடிகின்றது. சமூக ஜனநாயகவாதிகளும் ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட்களாக இருந்தவர்கள் தான்.

இவற்றை விட தாம் ஸ்டாலினிஸ்ட்கள் இல்லை என, ட்ராஸ்கிஸ்ட்கள் சொல்வது மட்டும் தான், அவர்களை கம்யூனிஸ்ட்களிடம் இருந்து வேறுபடுத்துகின்றது. ஆகவே ஸ்டாலின் பற்றி இவர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கின்றனர் எனக் கேட்பது அவசியம். ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுபவர்கள். ட்ராஸ்க்கியவாதிகள் லெனினை ஏற்றுக் கொள்கின்றனர். அதற்குக் காரணம் லெனின் எந்தவொரு அரசியல் கொலையும் செய்யவில்லை என்பதாலா? இல்லை. லெனினின் காலத்திலேயே அரசியல் படுகொலைகள் இடம்பெற்ற போதும், ட்ராஸ்கி முரண்படாமல் இருந்துள்ளார்.  அப்படியானால், ட்ராஸ்கி கொலையே செய்யாத சமாதானவாதியா? அதுவும் இல்லை. அக்டோபர் புரட்சியின் பின்னர் சோவியத்கள் (தொழிலாளர் பேரவை) அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றை அராஜகவாதிகள் (Anarchist) நிர்வகித்தனர். ட்ராஸ்கி சார்ந்த போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத சோவியத் குண்டு போட்டு அழிக்கப் பட்டது. விமானக் குண்டுவீச்சில் நூற்றக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். அன்று அந்த உத்தரவைப் பிறப்பித்தது, செம்படைத் தளபதி ட்ராஸ்கி.

ட்ராஸ்கிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான பகைமை, அரசியல்  அதிகாரப் போட்டியில் ஆரம்பித்தது தான். அடுத்த சோவியத் அதிபராக வரும் வாய்ப்பை இழந்த பின்னர் தான், ட்ராஸ்கி தனக்கென தனித்துவமான கொள்கைகளை வகுத்துக் கொண்டார். ஸ்டாலினுக்கு பதிலாக, ட்ராஸ்கி அதிபராக வந்திருந்தாலும், அவரும் "ஸ்டாலினிசவாதியாக" தான் இருந்திருப்பார். ஏனெனில் ஸ்டாலினிசம் என்றழைக்கப்படும் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் லெனினும், ட்ராஸ்கியும் அதிகாரத்தில் அமர்ந்திருந்த காலத்திலேயே நடைமுறைக்கு வந்து விட்டன. லெனின் காலத்தில், போல்ஷெவிக்குகளுக்கு எதிராக, சமூக-ஜனநாயக அரசியல் சார்பு நிலையெடுத்த மென்ஷேவிக்குகளும், தீவிர இடதுசாரிகளான அனார்கிஸ்ட்களும் கடுமையாக அடக்கப் பட்டனர். ஸ்டாலினிற்கு அந்த வேலை மிச்சமாகப் போய் விட்டது. இன்றும் கூட, அனார்கிஸ்ட்கள் லெனினையும், ட்ராஸ்கியையும் தங்களது எதிரிகளாக பார்க்கின்றனர்.

அன்றைய ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளின் சித்தாந்தவாதியாக இருந்த கௌட்ஸ்கியின் போக்கை லெனின் திரிபுவாதம் என்று கண்டித்தார். அதே நேரம் ரஷ்யாவில் ஒரு சமூக ஜனநாயக இயக்கமாக இருந்து, பாராளுமன்ற அரசியலுக்கும், முதலாளித்துவ சுதந்திரத்திற்கும் ஆதரவான நிலையெடுத்த மென்ஷெவிக்குகளை லெனின் கடுமையாக விமர்சித்தார். அப்போதெல்லாம் ட்ராஸ்கி லெனின் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டினார். ரஷ்யா முழுவதும் போல்ஷெவிக்குகளின் அதிகாரம் துப்பாக்கி முனையில் நிலைநாட்டப்பட்டது. எதிர்ப்புரட்சியாளருடனான போரில், செம்படையினரும் கொடூரமாக நடந்து கொண்டனர். மனித உரிமை மீறல்கள்களுக்கு இருதரப்புமே பொறுப்பு. எதிர்ப்புரட்சிப் படைகளை ஆதரித்தவர்களும் கருணை காட்டாமல் கொல்லப்பட்டனர்.

அன்று நடந்த போர்க்காலக் குற்றங்களுக்கு செம்படையின் தளபதி ட்ராஸ்கி பொறுபேற்க வேண்டும். ட்ராஸ்கிக்கு தான் செய்தது, அதிகாரத்தை மேலிருந்து திணிக்கும் செயல் என்று தெரியவில்லை. அக்டோபர் புரட்சிக் காலத்தில், போல்ஷெவிக் கட்சியின் செல்வாக்கு அதிகமாக ரஷ்யாவின் சில பகுதிகளில் மட்டும் தான் பாட்டாளி மக்களின் எழுச்சி காணப்பட்டது. பரந்து விரிந்திருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தில், குறிப்பாக மத்திய ஆசியப் பகுதிகளில், எதிர்ப்புரட்சிகர சக்திகளை எதிர்த்து முறியடித்த பின்னர் தான், மக்களிடம் சோஷலிசத்தை கொண்டு செல்ல முடிந்தது. அதாவது அந்தப் பகுதி மக்கள், ஒன்றில் பழமைவாதிகளாக, மதவாதிகளாக, தேசியவாதிகளாக இருந்தனர். அவர்கள் சார்ந்த அரசியல், சோஷலிசத்தை நிராகரித்திருந்தது. ஆகவே அந்தப் பகுதிகளில் சோஷலிசம் கீழேயிருந்து (மக்களிடமிருந்து) வந்ததாக கூற முடியாது. 150 க்கும் மேற்பட்ட மொழிச் சிறுபான்மையினரைக் கொண்ட ரஷ்யாவில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் ஒரே அரசியல் உணர்வுடையவர்களாக இருக்கப் போவதில்லை.

கம்யூனிசம் என்பதை, சர்வதேசியம் என்றும் அர்த்தப் படுத்தலாம். மாவோ கூறியது போல கம்யூனிஸ்ட்கள் அனைவரும் சர்வதேசவாதிகள். தமது தாயாக மக்களின் போராட்டத்தில் மட்டுமல்லாது, அந்நிய நாட்டு மக்களின் போராட்டங்களில் பங்குபற்றும் பலர் இன்றும் உள்ளனர். ட்ராஸ்கியின் சர்வதேசியம் சமூக ஜனநாயக கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. அவருக்கு முன்பே மென்ஷேவிக்குகள் இது பற்றி பேசி வந்துள்ளனர். அவர்கள் ரஷ்யா இன்னும் புரட்சிக்கு தயாராக இல்லை அல்லது சோஷலிசம் சாத்தியமில்லை என்று வாதிட்டனர். லெனின் அதற்கு மாறாக "சோஷலிசப் புரட்சி ஒரு நாட்டில் (ரஷ்யாவில்) நடைமுறைச் சாத்தியமானது." என்று சொன்னதுடன் நில்லாது, தனது வாதங்களை எழுத்தில் வடித்துள்ளார். தம்மை லெனினிசவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ட்ராஸ்கிஸ்ட்கள் இதையெல்லாம் படித்திருப்பார்களா என்பது சந்தேகம். அப்படி படித்திருந்தால், "ஒரே நாட்டில் சோஷலிசக் கட்டுமானம்" என்பது ஸ்டாலின் முன்மொழிந்தது அல்ல, அது லெனினின் கோட்பாடு என்பது தெளிவாகும்.

ரஷ்யப் புரட்சியின் பின்னர், லெனினால் ஆரம்பிக்கப்பட்ட, பின்னர் ஸ்டாலினால் தலைமை தாங்கப் பட்ட "மூன்றாவது கம்யூனிச அகிலம்" உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டது. அதே நேரம் சர்வதேச நாடுகளில் அந்தக் கட்சிகளின் போராட்டத்திற்கு உதவியும் வந்தது. ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக போராடிய (கம்யூனிச, அல்லது குடியரசு) ஆயுதக்குழுக்களுக்கு வெளியில் இருந்து வந்த ஒரேயொரு உதவி ஸ்டாலின் அனுப்பி வைத்தவை தான். இதை ஸ்டாலினின் எதிரிகளும் மறுப்பது கிடையாது. பல சர்வதேச தொண்டர்கள் ஸ்பெயின் சென்று போரிட்டனர். அமெரிக்க, ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அனுப்பி வைத்த அந்த தொண்டர் படைக்கு ஸ்டாலினின் ஆசீர்வாதம் கிடைத்து வந்தது. அமெரிக்க தொண்டர் படையை ஒரு கறுப்பின தளபதி வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

அன்று, மேற்கத்திய நாடுகளின் ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் நட்புறவைப் பேணிய காலகட்டம் அது. ஸ்பெயின் பாசிச எதிர்ப்பு போராளிகளுக்கு ஆயுத தளபாடங்களை அனுப்பிக் கொண்டிருந்த ஸ்டாலின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. மேற்குலக கனவான்களின் வாக்குக்கு கட்டுப்பட்டு, ஸ்டாலின் உதவியை நிறுத்தினார். பூகோள அரசியல் சதுரங்கத்தின் விளைவாக, வெளிநாட்டு தொண்டர் படையணிகள் வெளியேறின. பாஸிசம் ஸ்பெயினில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேபோல இரண்டாம் உலகப் போர் முடிவில், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருந்தது. பெருமளவு கிரேக்க நிலங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கம்யூனிஸ்ட் கெரில்லாக்களுக்கு ஸ்டாலின் எந்த உதவியும் அனுப்பவில்லை. உதவி செய்யக் கூடாது என்று மேற்குலகம் ஏற்கனவே ஸ்டாலினிடம் சத்தியம் வாங்கி இருந்தது. கிரேக்க விவகாரத்தில் அன்று சோவியத் நண்பனாக இருந்த பிரிட்டன், பின்னர் நம்பிக்கைத் துரோகம் செய்தது. தன்னிடம் கிரேக்கத்தை ஒப்படைத்த ஸ்டாலினுக்கு எதிராக திரும்பியது.

(தொடரும்)


Part: 2 ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?

4 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

Related:


"One death is a tragedy; one million is a statistic." - Stalin

http://www.life.com/image/first/in-gallery/22899/the-worlds-worst-dictators

jothi said...

அற்புதமான தமிழ் எழுத்து நடை கலை. தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று உங்களிடம்தான் கற்று கொள்ளவேண்டும்.

Kalaiyarasan said...

நன்றி பிரதீப் & ஜோதி.

Murali said...

super...your essay very simple but very very hard?please do this stalins work.... murali