Sunday, July 12, 2009

லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 10

'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்று சொல்வார்கள். உள்நாட்டு யுத்தத்திலே மூழ்கிப் போயிருந்த, மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் மீதான அமெரிக்கப் படையெடுப்புப்பற்றிய கதைகள் அடிபட்ட நேரத்தில் வந்த (முன்னாள் ஜனாதிபதி) புஷ்ஷின் ஆபிரிக்க விஜயம் அமெரிக்காவின் வருங்காலத் திட்டங்களை அறிவித்தது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்கக் கண்டத்தை இறுதியில் அமெரிக்கர்கள் 'கண்டுபிடித்து' விட்டார்கள் என்று பலர் நினைத்தார்கள்.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி புஷ் விஜயம் செய்த நாடுகளின் பட்டியல், அமெரிக்க அரசின் உண்மையான நோக்கங்களை எடுத்துக் காட்டுகிறது. காம்பியா : புதிய எண்ணைவள நாடு, தென்னாபிரிக்கா : தென்பகுதிப் பிராந்திய வல்லரசு, நைஜீரியா : எண்ணை ஏற்றுமதி செய்யும் ஆபிரிக்க நாடுகளில் முதன்னையானது. இதைத் தவிர கொடூரமான உள்நாட்டு யுத்தத்தால் உலகச் செய்திகளில் முதலிடம் பெற்ற லைபீரியா பற்றிய அமெரிக்க நிலைப்பாடு குறித்தே பலர் அறிய ஆவலாயிருந்தனர்.

லைபீரியா, முழு ஆபிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், "தாயகம்" திரும்பிய அமெரிக்க-ஆபிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட "அமெரிக்க அடிமைகளின் தாயகம்" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆபிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி என்ற உண்மை தெளிவாகும்.

19 ம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை ஸ்தாபித்த வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையில் போர் மூண்டது. அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தமென இது சரித்திப் பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போருக்கு பொருளாதார முரண்பாடுகளும் முக்கிய காரணியாகும். புதிய அமெரிக்கக் குடியரசான வடமாநிலங்கள் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை வரித்துக் கொண்டன. இதற்கு மாறாக ஆபிரிக்க அடிமைகளின் உழைப்பில் தங்கியிருந்த தென்மாநிலங்களில், நிலவுடைமை சார்ந்த பொருளாதாரம் இருந்து வந்தது. தெற்கில் நிலவுடைமைப் பொருளாதாரத்தை அழித்து, அங்கே ஐக்கிய அமெரிக்கக் குடியரசை விஸ்தரிக்கும் நோக்கோடுதான், அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தென்மாநிலங்கள் தம்மிடமிருந்த கறுப்பின அடிமைகளை விடுதலை செய்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. அப்போது இன்னொரு பிரச்சினை உருவானது. அமெரிக்கப் பிரஜைகளாகப் போகும் விடுதலை செய்யப்பட்ட கறுப்பின அடிமைகள் வருங்கால அமெரிக்காவின் தீர்க்கமான அரசியற் சக்தியாக வருவதை பலர் விரும்பவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட முன்னாள் அடிமைகளின் எஜமானர்கள் "அமெரிக்கக் காலனியச் சங்கம்" என்ற ஒன்னை உருவாக்கினார்கள். "விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவது" என்ற முற்போக்கானதாகக் காட்டிக்கொண்ட குறிக்கோளைக் கொண்ட அந்தச் சங்கம் அதற்கென மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.

அமெரிக்கக் காலனிய சங்கத்தால் வாங்கப்பட்ட நிலம், யாருமே வாழாத சூனியப் பிரதேசமாக இருக்கவில்லை. அங்கு 16 வேறுபட்ட இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களிலே , இஸ்லாமியர்களான மான்டே மொழி பேசும் மக்கள் போர்த்துக்கீசருடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். லைபீரியா என்ற அமெரிக்கக் காலனி உருவான பின்பு , இன்றுவரை இந்தப் பூர்வீக இனமக்கள், அரசியல் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். மொத்தச் சனத்தொகையில் 15 வீதமான அமெரிக்கக் குடியேறிகளே, ஆளும் வர்க்கமாகத் தொடர்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே புதிய குடியேறிகளைப் பூர்வீக மக்கள் அவநம்பிக்கையுடன் நோக்கினர். புதிதாகக் குடியேறிய அந்நியர்கள் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மொழியை (ஆங்கிலம்) பேசினர், மதத்தைப் (கிறிஸ்தவம்) பின்பற்றினர். அதுமட்டுமன்றி, அமெரிக்கக் குடியேறிகள் பூர்வீக மக்களை "காட்டுவாசிகள்" என அழைத்தனர். அவர்களுடன் கலக்காமல் தம்பாட்டில் மொன்றோவியாவை (அமெரிக்க ஜனாதிபதி மொன்றோவின் பெயரால்) தலைநகராகக் கொண்ட லைபீரியக் குடியரசை அமைத்தனர். புதிய தேசத்தின் அரசியல் நிர்ணயச் சட்டம் அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட்டது. அமெரிக்கக் கொடியை போன்ற கொடி, தேசியக் கொடியாக்கப்பட்டது.

இன்றைய ஆட்சியாளர்களான முன்னாள் அடிமைகளின் பேரன்மார். இன்றுவரை தமது தந்தையர் நாடான அமெரிக்காவுடன் சிறந்த நட்புறவுகளைப் பேணிவருகின்றனர். அமெரிக்க வர்த்தக ஸ்தாபனங்கள் லைபீரியாவின் கனிப்பொருள் வளங்களின் மீது ஏகபோன உரிமை பெற்றுள்ளனர். உதாரணமாக ரப்பர் ஏற்றுமதிக்கு "ஃபயர்ஸ்டோன்" , "குட்றிச்" ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் 99 வருட ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைவிட பல எண்ணைதாங்கிக் கப்பல்கள் இளகிய சட்டங்களைக் கொண்ட லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கியத்துவம் காரணமாக லைபீரிய அரசியல் ஆட்டம் காணும்போதெல்லாம் அமெரிக்கா தலையிட்டு ஸ்திரப்படுத்தி வந்தது.

நீண்ட காலமாக பொருளாதார வளர்ச்சி, பொதுமக்களின் வாழ்க்கை வசதிகளை அதிகரித்திருந்த போதும் என்பதுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பின்னடைவு, லைபீரியாவிலும் பல தாக்கங்களை உருவாக்கியது. ஏற்றுமதி குறைந்து வேலையின்னை அதிகரித்தது. அரிசி விலையுயர்வால் மக்கள் கலகம்செய்தனர். ஊழல் ஆட்சி, எதிர்க்கட்சிகளின் மீதான தடை, இவற்றிற்கு மத்தியில் "லைபீரிய தேசபக்த முன்னணி" என்ற ஆயுதமேந்திய குழு அரசபடைகளுடன் சண்டையிட்டு பல பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஆயுத பாணிக் குழுவின் தலைவர் சார்ல்ஸ் டெய்லர், கடைசி நேரத்தில் தலைநகரில் தோன்றிய வேறு சில அரசியல் குழுக்களுடன் அரசாங்கத்தைப் பங்குபோடவேண்டியதாயிற்று.

பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் போராளியான சார்ல்ஸ் டெய்லர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெய்லரின் கட்சிக்கு அயல் நாடான சியாரா லியோனிலிருந்து உதவி கிடைத்து வந்தது. லிபியாவும் ஆதரவளித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நீதிமன்றம் சியாரா லியோன் தொடர்புக்காக விசாரணை மேற்கொள்ள விரும்புகிறது. வைரக்கற்கள் ஏற்றுமதி செய்யும் சியாரா லியோனை முன்பு ஆண்ட போராளிக்குழு "சட்டவிரோத" வைரக்கல் வி;ற்பனையிலீடுபட்டு வந்தது. இதில் சார்ல்ஸ் டெய்லருக்கும் பங்கிருக்கலாம் என நம்பப்படுகிறது. நீண்டகாலமாக சர்வதேச வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தன மேற்கத்தைய நாடுகள். லாபத்தில் பங்கு கேட்டு, உள்ளூர் அரசியல் சக்திகள் உரிமை பாராட்ட விரும்பியபோதுதான் பிரச்சினை வந்தது. அன்று உரிமை பாராட்டியவர்கள் அனைவரும் பின்னர் சர்வதேச மட்டத்தில் போர்க்குற்றவாளிகளாகத் தூற்றப்பட்டனர்.

இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படும் சார்லஸ் டெய்லர், பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் வேண்டப்படும் நபராகியுள்ளார். யுத்தம் நடந்த காலத்தில் டெய்லரின் கட்சியைச் சேர்ந்த போராளிகள் பல மனித உரிமை மீறல்களைச் செய்தது உண்மைதான். அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை, பாலியல் வல்லுறவுகள், எதிரிகளை அங்கவீனப்படுத்தியமை போன்ற பல குற்றச் செயல்கள் நடந்துள்ளன. ஆனால், இவற்றிற்கு டெய்லரின் குழு மட்டுமே பொறுப்பல்ல.

இன்று ஆட்சியில் இருக்கும் அரசபடைகளும் இதுபோன்ற குற்றங்களை இழைத்துள்ளன. இன்று செய்தி ஊடகங்களால் நல்லவர்கள் போல் காட்டப்படும் கிளர்ச்சியாளர்களும் மேற்கண்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். டெய்லரை விரட்டும் முயற்சியிலிறங்கிய அமெரிக்கா கிளர்ச்சியாளருக்கு மறைமுக உதவி வழங்கியது. சமாதானமும் நிலைநாட்டவென, ஐ.நா பாதுகாப்புச் சபையின் உத்தரவின்பேரில் வந்திறங்கியுள்ள, பிராந்திய வல்லரசு நைஜீரியா தலைமையிலான சமாதானப் படைகளுக்கும் அமெரிக்கா பின்னணியிலுள்ளது. சமாதானப் படைக்கு மேலதிக நிதி வழங்குமாறு அமெரிக்காவை நைஜீரியா கேட்டதிலிருந்தே இது தெளிவாகும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபது புஷ்ஷின் ஆபிரிக்க விஜயத்திற்கும், லைபீரியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன ? இந்தத் திடீர் அக்கறைக்குக் காரணம் எண்ணை தான், வேறு என்ன? அமெரிக்காவின் மொத்த எண்ணை இறக்குமதியில் 18 வீதம் ஆபிரிக்காவில் இருந்து வருகின்றது. பெருமளவு நீண்டகால எண்ணை ஏற்றுமதி நாடுகளான நைஜீரியா, அங்கோலாவிலிருந்து வருகின்றது. கம்றூன், சாட், சூடான் போன்ற இன்னபிற நாடுகளின் பெற்றோலிய உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கப்படவிருக்கிறது. மேலும் ஆபிரிக்க எண்ணை, வளைகுடா எண்ணை போலன்றி உயர்தரமானது. அதாவது அதிகமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இவற்றைவிட எண்ணைவள நாடுகள் சுற்றியிருக்கும் கிணியா குடாக்கடலிலிருந்து அத்லாந்திக் சமுத்திரத்தினூடாக அமெரிக்கா நோக்கிய கப்பல் போக்கு வரத்து இலகுவானது, மலிவானது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் வருங்காலத்தில் ஆபிரிக்க எண்ணை உற்பத்தி அதிகரிக்கப்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

லைபீரியாவில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்றுத் திரும்புவது சர்வசாதாரணம். போர்க் குற்றவாளி டெய்லரும் அவ்வாறான அமெரிக்கப் பட்டதாரிதான். இதைவிட 1997 ம் ஆண்டு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக பூர்வமாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிதான் டெய்லர். பல தடவை தாம் சர்வாதிகாரிகளுக்கெதிராக செயற்படுவதாகத் தெரிவிக்கும் "சர்வதேச சமூகம்" லைபீரியாவில் ஜனநாயகத்திற்கெதிராகச் செயற்பட்டது கவனிக்கத்தக்கது.

(தொடரும்)


முன்னைய பதிவுகள்:
சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

No comments: