Saturday, May 04, 2013

மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்

இந்த வருடம் (2013), நெதர்லாந்து, ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தினப் பேரணியில், ஆயிரத்திற்கும் குறையாத பன்னாட்டு தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

1. வில்லம் அலெக்சாண்டரை நெதர்லாந்து மன்னராக முடிசூட்டும்
விழா 30-04-2013

2. உழைப்பாளர் தினம், மே 1, 2013.


முதலாவது படத்தில்: இலங்கை, இந்தோனேசியா போன்ற காலனிகளை சுரண்டிக் கொழுத்த, உலகில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசும், ஆப்பிரிக்க நாடுகளில் மனித உரிமைகளை மீறிய ஷெல் எண்ணை நிறுவன முதலாளியுமான வில்லெம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார். 21 ம் நூற்றாண்டுக்கு பொருந்தாத, புராதன கால சம்பிரதாயமான மன்னராட்சியை கொண்டாடும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் அனைவருக்கும் விடுமுறை தினமாகும்.) 

இரண்டாவது படத்தில்: தொழிலாளர்களின் மே தினத்தில், இழந்த உரிமைகளுக்காக போராடும் உழைக்கும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் விடுமுறை கிடையாது. வழமையான வேலை நாள்.) 

முதலாவது படத்தை பார்த்து "ஆஹா... அற்புதம்" என்று புகழ்கிறவர்கள், இரண்டாவது படத்தை பார்த்து விட்டு "அய்யய்யோ... சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அலறுகின்றனர். ஆண்டானின் பிறந்தநாளை அடிமைகள் கொண்டாடுவதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறவர்கள், அடிமைகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை "அசாதாரணமான அரசியல் திணிப்பாக" கருதி எதிர்க்கிறார்கள். எது அரசியல் திணிப்பு? எது துஸ்பிரயோகம்? இதை தீர்மானிப்பது யார்? 




மே தினத்தில் செங்கொடி ஏந்தினால், முஷ்டியை உயர்த்தினால் "அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்றெல்லாம் அறநெறி போதிக்கும் நண்பர்களே! 

நான் இன்றைக்கும், தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் தான். நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால், பத்து வருடங்களாக செய்து வந்த நிரந்தர வேலையும் பறிபோனது. அதற்குப் பிறகு கிடைக்கும் எந்த விதமான வேலையையும் மனம் கோணாமல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். "வாயில் நுழையாத பெயரை கொண்டிருப்பதாலும், இருட்டான தோற்றத்தை உடையவன் என்பதாலும், ஆசிய நாடொன்றில் பிறந்த படியாலும்", தொழிலாளர் சந்தையில் எனது உழைப்பிற்கான கேள்வி குறைந்து கொண்டே செல்கின்றது. சிரமப் பட்டு வேலை தேடும் பொழுது, முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகிறேன். 

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நாட்டில், உதிரித் தொழிலாளர்கள் வேண்டாத பண்டமாகி வருகின்றனர். இதை விட உயர்ந்து வரும் வாழ்க்கை செலவை ஈடுகட்டுமளவு போதாத வருமானம். என்னிடம் காரும் இல்லை, சொந்த வீடும் இல்லை, சொத்துக்களும் இல்லை. வங்கியில் பல இலட்சம் சேமிப்புப் பணமும் கிடையாது. வாழ்க்கை முழுவதும் எனது உரிமைகளை போராடித் தான் பெற வேண்டியுள்ளது. 

என்னைப் போன்ற பாதிக்கப் பட்ட மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடுவதற்கு வருடத்தில் ஒரு தடவையாவது மே தினம் வருகின்றது. அதனை "வேற்றுக் கிரகவாசிகளின் அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்று மிரளுகிறவர்கள், எந்தளவு தூரம் உழைக்கும் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிகின்றது. 


அரசியலும், போராட்டமும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால், அது எனக்கு தவறாகத் தெரியவில்லை. என்னை ஒரு அரசியலற்ற மனிதனாக அறிவித்துக் கொள்ளும் மேட்டுக்குடி பண்பாடோ அல்லது பின்நவீனத்துவ சிந்தனையோ என்னிடம் கிடையாது. நாங்கள் அரசியலை வலிந்து திணித்துக் கொள்ளவில்லை. அரசியல் எங்களை தேடி வந்து பற்றிக் கொள்கின்றது. 

வீட்டுக்கு அருகில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் மகனை சேர்த்து விட்டு, வேலைக்கு போய் வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். அரசாங்கம் மானியத்தை நிறுத்தியதால், குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, ஒன்றரை வயது குழந்தையான அகரனை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை உருவானது. அந்த நேரத்தில், வேலையிழந்த குழந்தைகள் காப்பக ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அதுவே எனது ஒரு வயது மகன் கற்ற முதலாவது அரசியல் பாடம். 

ஐரோப்பியர்கள் கோடை கால விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியே சென்று கூடாரமடித்து, அல்லது ஒரு ரிசோர்ட்டில் தங்கி உல்லாசமாக பொழுது போக்குவது வழக்கம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் ஒரு வார கோடை விடுமுறை முகாம், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். (அரசு மானியம் கொடுப்பதால் தங்குமிட செலவு மிகக் குறைவு.

கிறிஸ்தவ சபைகளும் கோடை விடுமுறை முகாம்களை நடத்துகின்றன. மத நம்பிக்கையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.) ஒரு தடவை நோர்வே மாவோயிஸ்ட் கட்சி நடத்திய கோடை கால விடுமுறை முகாமில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். அங்கே பெரியவர்களுக்கு அரசியல் வகுப்புகள், கலந்துரையாடல்கள் ஒரு பக்கம் நடக்கும். மறு பக்கம், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கும். 

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால், நாங்களும் பொருளாதார பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் நேரம், எம்மால் முடிந்ததெல்லாம் சமூக மாற்றத்திற்காக, நான்கு பேர் கூடிக் கதைப்பது தான். அதனை சில மெத்தப் படித்த அறிவாளிகள் "அரசியல் சித்தாந்தம்" என்று வரையறுக்கின்றனர். எங்களது சமூகப் பிரச்சினைக்காக ஒன்று கூடுவது அரசியல் சித்தாந்தம் என்றால், அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான், எமது அரசியல் சித்தாந்தம் என்னவென்பதை தீர்மானிக்கின்றது.

******

 வீடியோ: ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தின ஊர்வலம்.

Friday, April 26, 2013

போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]

(பாகம் : இரண்டு)


கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.

(தொடரும்)



இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் 

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Thursday, April 25, 2013

ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!


"இலங்கையில் சீனா முதலிட்டு வருகின்றது, ஆழமாக கால் பதித்து விட்டது, அது இந்தியாவுக்கு ஆபத்து..." என்று சிலர், இந்திய அரசுக்கு கோள் மூட்டிக் கொடுத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இன்னமும் 1962 ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

1962 ம் ஆண்டு, இந்திய - சீன எல்லைப் போர் நடந்ததும், அன்றில் இருந்து இரண்டு நாடுகளும் பகைவர்களாக நடந்து கொண்டதும் கடந்த கால வரலாறு. ஆனால், 21 ம் நூற்றாண்டில் உலகம் தலைகீழாக மாறி விட்டது. இன்றைக்கு இந்தியாவின் முதன்மையான வர்த்தகக் கூட்டாளி யார் தெரியுமா? நம்பினால் நம்புங்கள், அது சீனா தான்! இதனை நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்பது தெரியும். வேறு யார் சொல்ல வேண்டும்?  CIA யின் வருடாந்த அறிக்கையில், சீனா இந்தியாவின் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

இந்தியப் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பின்னர் தாராள மயப் படுத்தப் பட்டது. அப்போது அது, மேற்கத்திய நாடுகளின் முதலீட்டை எதிர்பார்த்திருந்தது.  குறிப்பாக, இயந்திரங்கள் போன்ற பெரும் மூலதனத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தருவிக்க வேண்டியிருந்தது. ஆனால், காலப்போக்கில் சீனா உலகில் பெரிய பொருளாதார வல்லரசாக மாறி வருகையில், இந்தியாவினால் அதனை தவிர்க்க முடியவில்லை. மேற்கத்திய நாடுகளிடம் வாங்க வேண்டிய அதே பொருட்களை, சீனாவிடம் குறைந்த விலைக்கு வாங்க முடிகின்றது. இன்று சீன உற்பத்தி சாதனங்கள், அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.  இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவில், சீனாவே ஆதிக்கம் செலுத்துகின்றது. ஏனென்றால், இன்று பெரும்பான்மையான இந்திய இறக்குமதிப் பொருட்கள் சீனாவில் வாங்கப் படுகின்றன. கடந்த வருடம் அது 12% மாக இருந்தது. அதே நேரம், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 6.3% மட்டுமே. (ஆதாரம்: CIA  World Fact Book) இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுக்கு காரணம், சீனாவுக்கு அவசியமான பொருட்கள் பல பொருட்கள் இந்தியாவிடம் கிடையாது. குறிப்பாக, பருத்தி, மற்றும் கனிமப் பொருட்கள் போன்ற மூலப் பொருட்கள் தான் முக்கியமான ஏற்றுமதியாக இருக்கின்றன. இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு நிரப்பப் பட வேண்டும் என்பது இந்தியாவின் கவலையாக உள்ளது. சீன தரப்பிலும் அதன் முக்கியத்துவம் உணரப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலிட்டு தொழில் நடத்த வேண்டும் என இந்திய அரசு விரும்புகின்றது.

"தமிழினக் காவலர்" வைகோ, இந்திய அரசுக்கு (அல்லது தமிழர்களுக்கு) சீனப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரம், அவரது மதிமுக கூட்டணி அமைத்துள்ள பாஜக, இந்தியாவில் சீனா முதலிட வேண்டுமென வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது.  "வருங்கால பிரதமராக" கருதப்படும், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, 2011 ல் சீனாவுக்கு விஜயம் செய்த நேரம், தனது மாநிலத்தில் சீனா முதலீடு செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்.   

சீன அரசின் முதலீட்டு வங்கி, இந்தியாவில் கிளையை திறந்துள்ளது. இதன் மூலம், தற்போது இலங்கைக்கு கிடைப்பதைப் போன்று, சீனக் கடன்கள் இந்தியாவுக்கு கிடைக்கலாம். இலகுவான சீனக் கடன்கள், சீன முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நிபந்தனைகளும் குறைவாக இருக்கும் என்பதால், இந்தியா விரும்பி ஏற்றுக் கொள்ள இடமுண்டு. அதற்கு மாறாக, IMF இடம் கடன் வாங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் பாடம் படிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவில் நுழைய விசா மறுக்கப்பட்ட, "குஜராத் இனப் படுகொலையாளி" நரேந்திர மோடி, எதற்காக சீனாவுக்கு சென்றார் என்பது இப்போது புரிந்திருக்கும். 

முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில், சீன நிறுவனம் ஒன்று, இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி உள்ளது. 70 மில்லியன் டாலரில் ஆரம்பிக்கப்பட தொழிற்சாலை, எல்லாம் நல்ல படியாக நடந்தால், முதலீட்டை இரட்டிப்பாக்கப் போவதாக அதன் நிர்வாகி தெரிவிக்கின்றார். இதை விட, குறைந்தது 10 சீன நிறுவனங்கள் ஏற்கனவே தொழிலகங்களை நிறுவத் தொடங்கி உள்ளன. 100 நிறுவனங்கள் தமது அலுவலகங்களை திறந்துள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, இந்திய சந்தைக்கான பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளது. உலகில் பிரபலமான கைத் தொலைபேசி தயாரிப்பாளரான Huawei பெங்களூரில் ஒரு ஆய்வு மையத்தை கட்டி வருகின்றது. 

இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளன. ஆனால், சீனாவின் வளர்ச்சி இந்தியாவினுடையதை விட பன்மடங்கு அதிகமானது என்ற உண்மையையும் மறுக்க முடியாது. இருபது வருடங்களுக்கு முன்னர் சீனா  இருந்த நிலையில், இன்று இந்தியா இருப்பதாக இந்திய பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, அந்த இருபது வருட காலங்களும் இந்திய சந்தை திறந்து விடப் பட்டிருந்தது. "இந்தியாவை வளப்படுத்தி வல்லரசாக்கும்", என பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட மேற்குலக நாடுகள், இந்தியாவை ஏமாற்றி விட்டதாக உணரும் காலம் வந்துள்ளது. அதே நேரம், இன்று மேற்குலக நாடுகள் கூட சீனாவில் தங்கியுள்ளன, என்ற யதார்த்தத்தையும் இந்தியா புரியாமல் இல்லை. 

மேலதிக தகவல்களுக்கு: 
Exploring India's Trade Deficit with China
China–India relations
China-India Bilateral Trade: Strong Fundamentals, Bright Future

Tuesday, April 23, 2013

சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்


(பாகம் -1)

சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி

15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவியல். முழங்கால் அளவு இரத்த ஆற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த பிணங்களை அகற்றி விட்டு போவது சிரமமான காரியமாக இருந்தது."

அன்று பிணக்காடாக மாறிய அல் அக்சா மசூதி இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் உள்ளது. அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற அன்று, வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அன்று மதியமே ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேம் நகரை கைப்பற்றி விட்டதால், பிற நகரவாசிகளும் மசூதிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஜெருசலேமில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல் அக்சா மசூதியை பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். மசூதிக்குள் இருந்த ஜெருசலேம்வாசிகள் ஐரோப்பியப் படைகளின் முன்னால் உயிர்ப்பிச்சை கேட்டு மண்டியிட்டார்கள். 

அவர்கள் கேட்ட பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு, விடுதலைக்காக காத்திருந்தார்கள். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கிக் கொண்ட கிறிஸ்தவப் படைகள், அதற்காகவேனும் மனம் இரங்கி அப்பாவிகளை வாழ விடவில்லை. பொழுது சாய்ந்ததும் மசூதியின் கதவுகளை மூடி விட்டு, அனைவரையும் கொன்று குவித்தார்கள். ஒரு மனிதப் பேரவலம் நடந்து முடிந்த அடுத்த கணமே, "லத்தீன் ஜெருசலேம் ராஜ்ஜியம்" பிரகடனம் செய்யப்பட்டது. இந்த "மகிழ்ச்சிகரமான செய்தியை" பாப்பரசருக்கு அறிவிக்க ஒரு தூதுவர் ரோமாபுரி நோக்கி பயணமானார். (The Damascus Chronicle of the Crusades: Extracted and Translated from the Chronicle of Ibn Al-Qalanisi. Dover Publications, 2003 )

சிலுவைப்போர் என்ற சொல், இன்றைக்கும் உணர்ச்சிகளை கிளறி விடுகின்றது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு தடவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை சிலுவைப்போர்" என்று வர்ணிக்க, உலகம் முழுவதும் கண்டனங்களை எதிர்கொண்டது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியதால், சிலுவைப்போர் என்று வாய்தவறி சொல்லி விட்டதாக, புஷ் வாபஸ் வாங்க வேண்டி நேரிட்டது. மேற்குலகில் சிலுவைப்போர் வெறும் மதம் சார்ந்த போராக மட்டுமே கருதப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கில் அது பழைய ரணங்களை கிளறி விடுகின்றது. 

நீண்டகாலமாக, சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை மேற்குலகம் வீர புருஷர்களாக மதித்தது. ஆனால் மத்திய கிழக்கின் அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டது. "காட்டுமிராண்டிகள், கொடியவர்கள், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள், பெண்களின் கற்பை சூறையாடியவர்கள்."   இவ்வாறு தான், அரேபியர்கள் எழுதி வைத்துள்ள சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஜெருசலேமை மீட்பது என்ற பெயரில், பாப்பரசர் அனுப்பிய படைகள் கிறிஸ்தவ மதம் என்ற உன்னத குறிக்கோளுடன் சென்றதாக மேற்குலகில் பலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியெங்கும் படுகொலைகளும், கொள்ளயிடலும் தாராளமாக இடம்பெற்றன. இன்றைக்கும் கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரையிலான பிரதேச மக்கள் இந்தக் கதைகளை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நான் இங்கே கூறப்போகும் தகவல்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். "ஆதாரம் உண்டா?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்ய வருவார்கள். ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் வாழ்பவர்கள், "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று அவதூறு செய்யலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம், சிலுவைப்போர் பற்றிய ஆழமான பக்கச்சார்பற்ற ஆய்வு தமிழில் கிடைப்பது அரிது. கிறிஸ்தவ மதத்தின் இருண்ட பக்கமாக கருதப்படும் சிலுவைப்போர் பற்றிய எதிர்மறையான தகவல்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

சிலுவைப்போரின் பின் விளைவாகத் தான் இந்திய உப கண்டத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. காலனிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மதத்துடன், மேற்குலக அரசியல் கொள்கைகளை புகுத்தினார்கள். அந்த அரசியலின் பின்னணியில் இருந்து தான் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றனவே அன்றி, கிறிஸ்தவ மத நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், சிலுவைப்போர்களினால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட  பாதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், சிலுவைப் போர்வீரர்கள், முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு முன்னர், (கிரேக்க) கிறிஸ்தவர்களை  படுகொலை செய்தார்கள்! அதற்கு முன்னர், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தார்கள்!! ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற, முதலாவது யூத இனப்படுகொலையை நடத்தியது ஹிட்லர் அல்ல! மாறாக, போப்பாண்டவருக்கும், சிலுவைப்போர்வீரர்களுக்கும், அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது!!!

சைப்ரஸ் தீவின் கேந்திர முக்கியத்துவம் சிலுவைப்போர் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது. வெனிஸ் நாட்டில் (இன்று இத்தாலியில் ஒரு நகரம்) இருந்து சென்ற சிலுவைப் படைகள் அந்த தீவை கைப்பற்றி கோட்டைகளை அமைத்திருந்தன. சைப்ரஸ் தீவில் இருந்து லெபனான், அல்லது இஸ்ரேல் கூப்பிடு தொலைவில் உள்ளன. இதனால் அங்கிருந்து தான் கடல்மார்க்கமாக சிலுவைப் படைகள் ஜெருசலேம் மீது படையெடுத்தன. சைப்ரசில், லிமாசொல் நகருக்கு அருகில் கொலோசி என்ற இடத்தில் சிறிய கோட்டை உள்ளது. இன்றைக்கும் நல்ல நிலையில் காணப்படும் அந்த பாதுகாப்பு அரணில் சிலுவைப்படைகள் தங்கியிருந்தன. 

நான் சைப்பிரசில் தங்கியிருந்த காலத்தில், கொலோசி கோட்டைக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருக்கிறேன். போகும் வழியில் சந்திக்கும் சைப்ரஸ்காரர்கள், அந்த இடத்தை பற்றிய சரித்திரக் கதைகளை கூறத் தொடங்கி விடுவார்கள். சாதாரண டாக்சி சாரதி முதல், கடைச் சிப்பந்தி வரை சிலுவைப்போர் கதைகளை வெளிநாட்டவர்களுக்கு கூறுவதற்கு விரும்புகின்றனர். லிமசோல் மாவட்டத்தில், அதாவது தென் சைப்ரசில் வாழும் மக்கள் அனைவரும் நூறு வீதம் (கிரேக்க) கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த யாருமே சிலுவைப்போர் குறித்து நல்ல வார்த்தை கூறவில்லை. "சிலுவைப் போர்வீரர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மொத்தத்தில் காட்டுமிராண்டிகள்!" இது தான் அங்கு நிலவும் பொதுவான கருத்து.

சிலுவைப்போர் குறித்து இன்றைக்கும் போதுமான அளவு தகவல்கள் மக்களை போய்ச் சேரவில்லை. மேற்கு ஐரோப்பாவில் அறுபதுகளில் வீசிய மதச்சார்பற்ற அலை, கடந்த காலத்தை மீள் ஆய்வுக்குட்படுத்தியது. இரண்டாயிரம் வருட வரலாற்றில் ஐரோப்பியர்கள் தமது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து விலகிச் சென்றனர். சுதந்திரமான தகவல் பரிமாற்றமே உண்மையை கண்டுபிடிக்க எதுவாக இருக்கும். ஆகவே மேற்கத்திய அறிஞர்கள் சிலுவைப்போர் குறித்த மத்திய கிழக்கு மக்களின் கருத்துகளை கேட்க ஆரம்பித்தார்கள். அது பற்றி எழுதப்பட்ட அரபி சரித்திர நூல்களை மொழிபெயர்த்தார்கள். 

தற்போது, மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் திருத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரம் போதிக்கப்படுகின்றது. சிலுவைபோரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், வன்கொடுமைகளை பற்றி புதிய தலைமுறை படிக்கின்றது. இவற்றைப் படிப்பதாலோ, பேசுவதாலோ, இங்கே யாரும் "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று முத்திரை குத்தப்படுவதில்லை. மாறாக 2000 ம் ஆண்டு, சிலுவைப்போர் கால குற்றங்களுக்காக வத்திக்கான் பொறுப்பேற்றுக் கொண்டது. Mea Culpa (எனது குற்றம்) என்ற பெயரில் பாப்பரசர் பகிரங்கமாக பாவமன்னிப்புக் கேட்டார். ஆகவே இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதை எல்லாம் உண்மை என்று வத்திகானே ஒப்புக் கொண்ட பிறகு, "ஆதாரம் உண்டா?" என்று என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

(தொடரும்)


*********************************************

சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Saturday, April 20, 2013

இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்


"ஆயுதப்போராட்டம் அல்லது அரசியல் வன்முறை" என்பது மூன்றாமுலக நாடுகளின் தோற்றப்பாடு என்றும், முதலாம் உலக நாடுகளில் அதற்கு இடமில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகப் பெருமை வாய்ந்த அமைதிப்பூங்காவான மேற்கத்திய நாடுகளில், பல ஆயுதப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இயங்கிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்கள் பற்றி, இன்று பலருக்குத் தெரியாது.

எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால், அது "இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று, உடனேயே பலர் முடிவு கட்டி விடுகின்றனர். எழுபதுகளில், எண்பதுகளில் இருந்த உலகம் வேறு. அன்று எங்காவது ஒரு குண்டுவெடிப்பு நடந்தால், அது "இடதுசாரி தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று முடிவெடுத்து விடுவார்கள். இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இஸ்லாமிய தீவிரவாதத்தை வெளிநாட்டுக் குடியேறிகளுடன் முடிச்சுப் போடுவார்கள். ஆனால், இடதுசாரி தீவிரவாதத்துடன், உள்நாட்டு பூர்வீக வெள்ளையின மக்கள் சம்பந்தப் பட்டிருப்பார்கள். "இஸ்லாமிய தீவிரவாதம்" ஒரு மதம் சார்ந்தது. அதே நேரம், "இடதுசாரி தீவிரவாதம்" ஒரு கொள்கை சார்ந்தது. இருப்பினும், அரசு இரண்டு தரப்பினரையும் ஈவிரக்கமின்றி அடக்கி வந்துள்ளது. சந்தேகப்பட்டால், சுட்டுக் கொல்லவும் தயங்கவில்லை. மேற்கத்திய நாடுகளில், அரசின் மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், எழுபதுகளிலேயே தொடங்கி விட்டன.

ஜெர்மனியில் இயங்கிய RAF என்ற ஆயுதமேந்திய இடதுசாரி இயக்கத்தின் போராட்டம், ஏற்கனவே வெளியுலத்திற்கு தெரிந்திருந்தது. எழுபதுகளில், எண்பதுகளில், ஆயுதப்போராட்டம் நடைபெறாத மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகக் குறைவு எனலாம். ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகளும், அரசியல் படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன. சிறிய அளவிலான இடதுசாரி ஆயுதக்குழுக்கள் அதற்கு காரணமாக இருந்தன. அதே காலகட்டத்தில், நெதர்லாந்திலும் ஒரு இடதுசாரி ஆயுதக்குழு இயங்கி வந்தது. அந்தக் குழு பல அரசியல் வன்முறைகளில் ஈடுபட்ட போதிலும், அவர்களின் தாக்குதல்களில் யாரும் கொல்லப்படவுமில்லை, காயமடையவுமில்லை.

17 செப்டம்பர் 1987, ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள, மாக்ரோ (MAKRO) பல்பொருள் அங்காடி தீப்பிடித்து எரிந்தது. நெதர்லாந்தின் மிகப்பெரிய வர்த்தக நிலையம், முற்றாக எரிந்து நாசமாகியது. தீப்பிடிக்கக் கூடிய குண்டு ஒன்றை வெடிக்க வைத்து அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. குண்டு இரவில் வெடித்ததால், அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை. யாரும் காயமடையவில்லை. இதனால், MAKRO நிறுவனத்திற்கு, 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. பங்குச் சந்தையில், அதன் பங்குகள் சரிந்ததால், மேலதிக நஷ்டம் ஏற்பட்டது. MAKRO பல்பொருள் அங்காடி தாக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகள், எண்பதுகளின் இறுதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு, அந்த நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணம் என்று எல்லோராலும் நம்பப் படுகின்றது. உண்மையில், அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சோஷலிச நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளையும் பெரிதும் பாதித்திருந்தது. உண்மையில், ஐரோப்பா அன்றிருந்த நிலையில், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் வீழ்ச்சி அடைந்திருக்கா விட்டால், மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் வீழ்ச்சி அடைந்திருக்கும்! நிலைமை அந்தளவு மோசமாக இருந்தது. நெதர்லாந்தும் நெருக்கடியில் இருந்து தப்பவில்லை. வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. மாணவர்கள், இளைஞர்கள் இடதுசாரி தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப் பட்டனர்.

நாடு முழுவதும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மக்களின் கோபத்தை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்புவதில், இடதுசாரி இயக்கங்கள் வெற்றி கண்டன எனலாம். அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதில் இருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். அன்றிருந்த இடதுசாரி அலை, வெளிநாட்டு குடியேறிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இன்றைக்கு, பொருளாதார நெருக்கடியை  பயன்படுத்திக் கொண்டு, வலதுசாரி தீவிரவாதிகள் வெளிநாட்டவர் எதிர்ப்பு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். என்பதுகளுக்கும், தொண்ணூறுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை பார்க்கும் பொழுது, அரசே திட்டமிட்டு வலதுசாரி தீவிரவாதிகளை ஊக்குவித்திருக்கலாம் என்ற ஐயம் எழுகின்றது.

ஏற்கனவே, "ஸ்டாலினிச ஒழிப்பு" என்ற பெயரில், கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பு பலவீனப் படுத்தப் பட்டு விட்டது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்யவில்லை. ஆனால், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டதால், கட்சி பலவீனப் படுத்தப் பட்டது.  சமூகத்தில் இருந்து ஒதுக்கப் பட்டது. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை, அனார்கிஸ்டுகள் (அரச மறுப்பாளர்கள்) எனப்படும், புரட்சிகர இடதுசாரிகள் நிரப்பினார்கள். அரச கட்டமைப்பிற்கு இடமற்ற கம்யூனிச சமுதாயத்தை இலக்காக கொண்ட அனார்க்கிஸ்டுகள், உலகில் எந்த நாட்டிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க மாட்டார்கள். (ஆட்சி  என்ற சொல்லே அவர்களது கொள்கைக்கு முரணானது.) ஒரு பக்கம் முதலாளித்துவ நாடுகளையும், மறுபக்கம் சோஷலிச நாடுகளையும் கடுமையாக விமர்சிப்பார்கள். ஆகையினால், இவ்விரண்டு முகாம்களிலும் சேர விரும்பாத, இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்கள், அனார்க்கிச கொள்கைகளால் கவரப்பட்டனர்.

ஆம்ஸ்டர்டாம் மாநகரில், குறைந்த வாடகைக்கு வீடுகள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகும். இதனால், மாணவர்களும், இளைஞர்களும் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்பட்டனர். அதேநேரம்,   பல பழைய  கட்டிடங்கள்,  ஒருவருக்கும் பிரயோசனமில்லாமல் கைவிடப்பட்டிருக்கும். அப்படியான கட்டிடங்களின் கதவுகளை  உடைத்து உள்சென்று , அவற்றை வீடற்ற மக்களின்  வதிவிடமாக மாற்றிக் கொள்ளும் போக்கு தோன்றியது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களில், புரட்சியாளர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கிருந்து போராட்டங்களுக்கான திட்டங்களை வகுப்பார்கள்.

புரட்சிகர இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு, வீட்டுமனை முதலாளிகள் உரிமை கோருவார்கள். அவ்வாறு ஒரு தடவை, எண்பதுகளின் தொடக்கத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களை கைப்பற்றி முதலாளிகளுக்கு கொடுப்பதற்கான போலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, "அமைதிப்பூங்காவான சுதந்திர தேசத்தில்" வாழ்ந்த மக்கள், அரச அடக்குமுறைக்கு முகம் கொடுத்தார்கள். "அடடா, அரசு என்பது இது தானா? வாருங்கள்...நாங்களும் தயாராக இருக்கிறோம். எம் மீது தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்..." நெதர்லாந்து அரசை நோக்கி பகிரங்க சவால் விடுக்கப் பட்டது. 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் தடவையாக, ஆம்ஸ்டர்டாம் நகர தெருக்களில் யுத்த தாங்கிகள் உருண்டோடின. பொலிசை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்த, இந்த  பொலிஸ் அடக்குமுறையானது, பல இளைஞர்களை ஆயுதப்போராட்டம் குறித்து சிந்திக்க வைத்தது. போர்க் குணாம்சம் கொண்ட இளைஞர்கள் "இயக்கம்" ஒன்றை உருவாக்கினார்கள். தலைமறைவாக இயங்கிய படியால், அது "இயக்கம்" (De Beweging) என்ற பெயரிலேயே  குறிப்பிடப்பட்டது. இயக்கம், பல்வேறு குழுக்களையும், பலதரப்பட்ட போராட்ட வழிமுறைகளையும் உருவாக்கியது. அதில் ஒன்று தான், "இனவெறிக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கை" எனும் அமைப்பு. டச்சு மொழியில், "Revolutionaire Anti Racistiese Aktie". சுருக்கமாக "RaRa" (ராறா).

அந்தக் காலத்தில், தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு ஆட்சி நடத்தியது. அது, Apartheid என்ற பெயரில், இன ஒதுக்கல் கொள்கை மூலம், கறுப்பின பெரும்பான்மையினரின் உரிமைகளை பறித்தது. தென்னாப்பிரிக்கவில் குடியேறிய வெள்ளையினமான, "ஆப்பிரிக்கானர்கள்" என்றழைக்கப் படுவோர், டச்சுக்காரர்களின் வம்சாவளியினர் ஆவர். அவர்கள் பேசும் "ஆப்பிரிக்கான் மொழி", கிட்டத்தட்ட டச்சு மொழி போன்றிருக்கும். இந்த தொடர்பு காரணமாக, பல நெதர்லாந்து நிறுவனங்கள் தென்னாபிரிக்காவில் முதலிட்டு வந்தன. இந்த வர்த்தக தொடர்பு, எண்பதுகளிலும் தொடர்ந்தது. உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்க இன ஒதுக்கல் கொள்கையை கண்டித்து பொருளாதாரத் தடை கொண்டு வந்திருந்தன. அப்போது கூட, நெதர்லாந்து கம்பனிகள் வழமை போல வர்த்தகம் செய்து வந்தன. தென்னாபிரிக்காவில் சில முதலீடுகளில், நெதர்லாந்து அரச குடும்பத்திற்கும் பங்கிருந்தது.

MAKRO  பல்பொருள் அங்காடி தாக்குதலுக்கு, RaRa  உரிமை கோரியது. MAKRO  வின் தலைமை நிறுவனத்தின் பெயர்: Steenkolen Handelsvereniging (SHV). SHV, தென்னாபிரிக்காவில் முதலிட்டு, வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. "நிறவெறி கொள்கையை கடைப்பிடிக்கும் தென்னாபிரிக்காவில் இருந்து வெளியேறுமாறு, நாம் பல தடவைகள் எச்சரித்தும் கேட்காததால், இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறோம்." என்று RaRa  வெளியிட்ட உரிமைகோரும் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. உண்மையில், ஆரம்பத்தில் MAKRO நிர்வாகம் இந்த பயமுறுத்தலை பொருட்படுத்தவில்லை. மீண்டும் கடையை திறந்து, வழக்கம் போல வியாபாரம் செய்து வந்தது. 18 டிசம்பர் 1986 அன்று, மீண்டுமொருமுறை மாக்ரோ தீப்பிடித்து எரிந்தது. இம்முறையும், பல கோடி சேதம். அரசு இந்தத் தாக்குதல்களை "பயங்கரவாதம்" என்று கூறியது. ஆனால், "பயங்கரவாதத்தினால் பலன் கிடைத்தது." SHV தனது முதலீடு முழுவதையும், தென்னாபிரிக்காவில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. அந்த விடயத்தில், RaRa வுக்கு வெற்றி கிட்டினாலும், போராட்டம் ஓயவில்லை.

"ஒரு சில தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களால், ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை மண்டியிட வைக்க முடியும்," என்ற உண்மை, அரசிற்கு சங்கடத்தை உண்டாக்கியது. நாலா பக்கமும் இருந்து பறந்து வந்த கண்டனக் கணைகளில் இருந்து தப்புவதற்காக, அரசு ஒரு சிறப்புப் படையணியை உருவாக்கியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு இரகசியமான இடத்தில் இயங்கிய, 26 பேர் கொண்ட ஆய்வாளர் குழுவிற்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சாதாரண கிரிமினல்களை விட, மிகவும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் இயங்கிய RaRa  வை பிடிக்க முடியவில்லை.

முதலில், "Bluf" என்ற இடதுசாரி சஞ்சிகை ஆசிரியர், வைனண்ட் டைவன்டாக்  (Wijnand Duyvendak) மீது சந்தேகம் எழுந்தது. வைனன்ட் பின்னர் சில வருடங்கள், Groen Links  என்ற பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவர் மீது சந்தேகப்பட வைத்த ஒரே காரணம்: "RaRa  உரிமை கோரும் பிரசுரம் அவரின் சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது தான்!" பகிரங்கமாக இயங்கிய வைனண்ட், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக சாத்வீக வழியில் போராடி வந்தார். தான் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறி வந்தார். ஆயினும், அவரை பிடித்து விசாரித்த போலிஸ், ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விட்டு விட்டது.

புலனாய்வுத்துறைக்கு தகவல் கொடுக்கும் ஒரு உளவாளி, "வைனன்ட் RaRa அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்" என்று கூறியுள்ளார். ஆயினும் என்ன? அதனை உறுதிப் படுத்தும் ஆதாரம் எதுவும் கிடையாது. RaRa தலைவர்கள் யார் என்பது, இன்று வரைக்கும் மர்மமாகவே உள்ளது. RaRa இயக்கத்தில், மொத்தம் எத்தனை பேர் இயங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும், இன்று வரையும் யாருக்கும் தெரியாது. இரகசியம் பேணல் மட்டுமல்ல, உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்புகள் இல்லாமையினாலும், புலனாய்வுப் பிரிவின் கழுகுக் கண்களுக்கு தப்ப முடிந்தது.

RaRa, தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் நின்று விடவில்லை. நெதர்லாந்து அரசு, அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தை எதிர்த்து வந்தது. அகதிகள், வெளிநாட்டவரை நாட்டுக்குள் அனுமதிப்பதில் இறுக்கத்தை கடைப்பிடிக்கும் நெதர்லாந்து அரச கொள்கைக்கு எதிராக போராட முடிவெடுத்தது. ஜனவரி 1988, Schiedam எனுமிடத்தில் உள்ள கடவுச்சீட்டு அச்சிடும் தொழிற்சாலைக்கு குண்டு வைக்கப் பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அலாரம் அடித்ததால், குண்டு வெடிக்காமலே, வைத்தவர்கள் ஓடி விட்டார்கள். வெடிக்காத குண்டில் இருந்த கைரேகை அடையாளத்தை வைத்து, ரேனே ரூமெர்ஸ்மா (René Roemersma) என்ற நபர் பிடிபட்டார்.

BVD  என்ற புலனாய்வுத்துறையும், பொலிசின் சிறப்புப் பிரிவும் இணைந்து, தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இடதுசாரி இயக்கங்களினுள் ஊடுருவியிருந்த உளவாளிகளிடம் இருந்து சில தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 150 பேரைக் கொண்ட பொலிஸ் படை, ஆம்ஸ்டர்டாம் நகரில் பல வீடுகளில் சோதனை நடத்தி, ஒன்பது பேரைக் கைது செய்தது. குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடையாததால், கைது செய்யப்பட்ட பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ரேனே க்கு மட்டும், ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இருப்பினும், தேடுதல் வேட்டையின் போது, ஆதாரங்களை திரட்டுவதில் பொலிஸ் சில தவறுகளை விட்டமை தெரிய வந்ததால், அந்த தண்டனையும் குறைக்கப் பட்டு, 18 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

RaRa அமைப்பில், மொத்தம் ஐந்து பேர் மட்டுமே இருந்திருப்பார்கள் என்று பொலிஸ் நம்பியது. அவர்கள் அனைவரையும் பிடித்து விட்டதால், அந்த இயக்கம் அழிந்து விட்டது என்று நினைத்திருந்தது. அதாவது, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டு விட்டாலும், தொடர்ந்தும் பொலிஸ் கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்களால் வன்முறைகளில் ஈடுபட முடியாது. ஆனால், சில மாதங்களில் வெடித்த குண்டு ஒன்று, பொலிசின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாகியது.

ஹில்வெர்சும் (Hilversum) நகரில், Shell Thermo Centrum மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. அதனை அடுத்து, ஆர்னெம் (Arnhem), ஒல்டென்சால் (Oldenzaal) நகரங்களில் அமைந்திருக்கும், மிலிட்டரி - போலிஸ் முகாம்களுக்கு அருகில் குண்டுகள் வெடித்தன. இறுதியாக, 1991 ம் ஆண்டு, உள்துறை அமைச்சகம் சக்தி வாய்ந்த குண்டினால் தாக்கப்பட்டது. கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், அமைச்சு உயர் அதிகாரி  ஆட் கோஸ்டோ (Aad Kosto) வீட்டிலும் குண்டொன்று வெடித்து, வீடு கடுமையாக சேதமுற்றது. இந்த தாக்குதல்களுக்கு எல்லாம், RaRa உரிமை கோரியது.

நெதர்லாந்து அரசு, பொலிஸ், புலனாய்வுத் துறை எல்லாவற்றிற்கும் பெரியதொரு தலையிடி வந்தது. யார் இந்த RaRa? இன்னமும் பிடிபடாத பழைய உறுப்பினர்களா? அல்லது புதிதாக யாராவது அந்தப் பெயரில் இன்னொரு இயக்கம் தொடங்கி இருக்கிறார்களா? பொலிஸ் அதனை, "இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்களின் இயக்கம்" என்று சந்தேகிக்கின்றது. விடுதலையான ரேனே ரூமெர்ஸ்மா அது குறித்து கருத்து தெரிவிக்கையில்: "RaRa என்பது ஒரு புரட்சிகர சித்தாந்தம். அதற்கு காப்புரிமை எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்தப் பெயரில் இயங்கலாம்." என்று தெரிவித்தார். நம்பினால் நம்புங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடாக இருந்த நெதர்லாந்தில், இரண்டாம் தலைமுறையை சேர்ந்த RaRa உறுப்பினர்கள் இன்னமும் பிடிபடவில்லை! அது மட்டுமல்ல, அவர்கள் யார், என்ன பெயர் என்ற விபரம் எதுவும் தெரியாது. உலகில் இன்று வரையும் துலக்கப்படாத மர்மங்களில் அதுவும் ஒன்று.

************

RaRa பற்றிய ஆவணப்படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டு பாகங்களை கொண்ட ஆவணப்படத்தின் இணைப்புகளை இங்கே தருகிறேன்.

De explosieve idealen van RaRa