Saturday, March 02, 2013

தமிழ் தேசியத்தை கொச்சைப் படுத்தும் வன யுத்தம்



சந்தன மரம், யானைத் தந்தங்களை கடத்தி, தசாப்த காலமாக பொலிசுக்கு பிடிபடாமல் தப்பி வந்த வீரப்பனின் கதை, "வன யுத்தம்" என்ற பெயரில் திரைப் படமாக்கப் பட்டுள்ளது. இது ஒரு ஆவணப் படமல்ல.  ஆனால், எல்லோருக்கும் தெரிந்த உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப் பட்ட படம். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் உண்மையாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பிரதிபலிக்கின்றது. வீரப்பன், ராஜ்குமார், விஜயகுமார், இப்படி பல பாத்திரங்களின் பெயர்களும், ஒரு எழுத்துக் கூட மாறாமல், உள்ள படியே சூட்டப் பட்டுள்ளன. ஆகவே, இது ஒரு கற்பனைக் கதை என்று சொல்லித் தப்ப முடியாது. 

வீரப்பன் ஒரு கடத்தல்காரன், கிரிமினல் என்பதற்கு அப்பால், வீரப்பன் சமபந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள், இந்தப் படத்தில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன. குறைந்தது இருபது வருடங்களுக்குப் பின்னர் வரப் போகும் அடுத்த தலைமுறை, வன யுத்தம் படத்தை பார்க்கும் பொழுது, அதுவே வீரப்பனின் உண்மையான வரலாறு என்று நம்பக் கூடிய ஆபத்து உண்டு. இன்றும் பலர், இந்த  திரைப்படத்தை எதிர்த்து குரல் எழுப்பாததில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஆகவே, வன யுத்தம் திரைப் படம் மீது கடுமையான விமர்சனம் வைப்பது, இங்கே அவசியமானது.  

திரைப் படத்தின் முதல் அரைவாசிப் பகுதியில், பொலிஸ் நிலையங்கள் மீது திடீர் தாக்குதல் நடாத்துவதும், கண்ணிவெடி வைத்து பொலிஸ் வாகனங்களை தகர்ப்பதுமாக, வீரப்பன் கோஷ்டியின் சாகசங்களை காட்டுகின்றனர். மிகுதி அரைவாசிப் பகுதியில், வீரப்பனை பிடிப்பதற்காக, பொலிஸ் உளவாளிகளை ஊடுருவ செய்யும் பொலிசின் சாமர்த்தியத்தை காட்டுகின்றனர். வீரப்பன் பிடிபடும் போதும் ஜெயலலிதாவே முதல் அமைச்சராக இருந்ததால், "சட்டம், ஒழுங்கை நிலைநாட்டிய" ஜெயலலிதாவின் ஆட்சிக்கு புகழாரம் சூட்டுவதுடன் படம் நிறைவு பெறுகின்றது. 

அண்மையில் வெளியான துப்பாக்கி, விஸ்வரூபம் போன்று, வன யுத்தமும் ஒரு பக்கச் சார்பான அரசியல் பேசுகின்றது. இவை எல்லாம், அரச அடக்குமுறைக்கு பக்கவாத்தியம் வாசிக்கும், பிரச்சாரத்  திரைப்படங்கள் ஆகும். இந்தியாவில் இன்னமும், சினிமா எனும் ஊடகத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதனால், இவை பரப்பும் அரசியல் கருத்துக்கள், வெகுஜன பார்வையாளர்களால் இலகுவில் மறக்கடிக்கப் பட்டு விடும் என்று வாதாட முடியாது. 

இன்று தமிழ் தேசிய அரசியல் உச்சத்தில் இருப்பதாக நம்பப் படும் காலத்தில், வன யுத்தம் என்ற திரைப்படம், தமிழ் தேசிய அரசியலை கொச்சைப் படுத்தும் விதத்தில் வந்துள்ளது. இன்று வரையில், எந்தவொரு தமிழ் தேசியவாதியும், இந்த திரைப்படத்தை கண்டித்து பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது. சில விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் குரல்கள் பலரை சென்றடையவில்லை. மிகவும் பிரபலமான  தமிழ் தேசிய காவலர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தவில்லை. அதற்கு காரணம், ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தூய்மையான தமிழ் தேசிய அரசியல் வீரப்பனுடன் செத்து விட்டது. அதற்குப் பிறகு உருவான, இன்றுள்ள தமிழ் தேசிய அரசியல், இந்திய அரசின் நலன்களுக்கு அமைவாகவே நடந்து கொள்கின்றது. 

வீரப்பனோடு சேர்த்து, தமிழ் தேசியவாதிகளையும் அழித்தொழித்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து வருடங்களுக்குப் பிறகு, "ஈழத் தாய்" என்று போற்றப்பட்ட வரலாற்று முரண் நகையை என்னவென்று சொல்வது? இந்திய மத்திய அரசைப் பொறுத்த வரையில், அதற்கு தமிழ் தேசியம் மட்டுமே  பிரச்சினை. ஆனால், ஈழத் தமிழ் தேசியம் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குள் அடங்குகின்றது. இந்தியா வழங்கும் கருத்துச் சுதந்திரமும், அதற்கு அமைவானது தான். சுருக்கமாக: "நீங்கள் ஈழத்திற்காக எதையும் பேசலாம். ஆனால், தமிழ் நாடு விடுதலை பற்றி முணுமுணுக்கவும் கூடாது." இதற்குப் பெயர் சோரம் போதல். 

தமிழரை ஒரு தேசிய இனமாகவும், தமிழர்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தையும் கோரும் தமிழ் தேசியம், முதலில் தமிழ்நாட்டில் தான் ஆரம்பமாகியது. தமிழ் தேசியத்திற்கு தத்துவார்த்த அடிப்படையை கொடுத்த அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகம், தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற பிரிவினைக் கோரிக்கையை பின்னர் விலக்கிக் கொண்டது. அண்ணாவின் அடிச்சுவட்டில் வந்த தம்பி கருணாநிதியும், தன்னை "உலகத் தமிழினத்தின் தலைவராக" காட்டிக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. இன்று இளைய தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாதிகள், அதே கருணாநிதியை துரோகி என்று தூற்றித் திரியும் வரலாற்று முரண்நகையையும் நம் கண் முன்னே காணலாம்.

இரண்டு தலைமுறை இடைவெளிக்குள், தமிழ்நாட்டில் இன்னொரு தமிழ் தேசிய அரசியல் முளை விட்டிருந்தது. ஈழப் போராட்டத்தை பின்பற்றி, தமிழ் நாடு விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடந்தது.  இன்றைக்கு அதைப் பற்றி எல்லோரும் மறந்து  விட்டார்கள். தமிழக மக்கள் விரோத அரசு, தமிழ் நாடு விடுதலைப் போராட்டத்தை கொன்று, சவப் பெட்டிக்குள் போட்டு விட்டது. வன யுத்தம் என்ற சினிமா, அந்த சவப்பெட்டியை புதைகுழிக்கு அனுப்பி வைத்துள்ளது. 

வீரப்பனின் குழுவினர், சந்தன மரம், யானைத் தந்தம் போன்றவற்றை கடத்திய கிரிமினல்கள். வீரப்பன், தமிழ் தேசிய அரசியலுக்குள் குதித்தது, ஒரு தற்செயல் நிகழ்வல்ல. பல நாடுகளில், தேசியவாத போராட்டத்தை தொடங்கிய சக்திகள், அப்படியான நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து தான் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டன. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தல் தொழில் செய்து வந்த கடத்தல்காரர்களுடனான தொடர்பின் பின்னர் தான், ஈழப் போராளிக் குழுக்களின் ஆயுத பலம் அதிகரித்திருந்தது. கடத்தல்காரர்களின் அரசியல் தொடர்புகள் மூலம் தான், தமிழ்நாட்டை தளமாக பயன்படுத்தும் வசதி கிடைத்தது. 

ஈழ தேசிய விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் சர்வதேச அளவில் கவனிக்கத் தக்க அரசியல் சக்தியாக வளர்ந்திருந்தன. அதே நேரம், தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. இந்த வேறுபாட்டுக்கு காரணம், இந்தியாவின் இரு வேறுபட்ட அரசியல் கொள்கைகள். இலங்கையில் வாழும் தமிழர்கள் தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது, இந்தியாவின் நலன்களுக்கு சாதகமானது. இந்தியாவில் வாழும் தமிழர்கள், தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது இந்திய நலன்களுக்கு பாதகமானது. தனது அயல்நாட்டில் பிரிவினைப் போராட்டத்தை ஆதரிக்கும் இந்திய அரசு, தனது நாட்டுக்குள் நடக்கும் பிரிவினைப் போராட்டத்தை நசுக்கி வருகின்றது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, இது ஒரு முரண்பாடான அரசியல் கொள்கையாக தெரியலாம். ஆனால், உண்மை அப்படி அல்ல. தேசியவாத இயக்கங்களும், மதவாத இயக்கங்களும், ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப் படலாம். 

எழுபதுகளில், இந்தியா முழுவதும் ஆயுதப் போராட்டம் நடத்திய நக்சல்பாரி இயக்கத்தினர், தமிழ்நாட்டிலும் இருந்தனர். எண்பதுகளில் தமிழகம் முழுவதும் பேசப்பட்ட ஈழப் போராட்டம், தமிழ்நாடு நக்சலைட் இயக்கத்தின் உள்ளேயும் தாக்கத்தினை உண்டுபண்ணியது. இயக்கத்தினுள் நடந்த வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், "வர்க்கப் போராட்டத்திற்கு முன்னர், தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்தப் பட வேண்டும்" என்று நம்பிய பிரிவினர், தமிழரசன் தலைமையில் பிரிந்து சென்றனர். தமிழ் நாடு விடுதலைக்கு போராடுவதற்காக, "தமிழ்நாடு விடுதலைப் படை" (TNLA)  என்ற இராணுவப் பிரிவை அமைத்தார்கள். கிராமப் புறங்களில், கூலி விவசாயிகளை சுரண்டிய பண்ணையாளர்கள், அல்லது நிலப்பிரபுக்கள் சிலரை வெட்டிக் கொன்றது மட்டுமே, TNLA யின் குறிப்பிடத் தக்க புரட்சிகர தாக்குதல்கள் ஆகும். 

நேரு சிலைக்கு குண்டு வைத்தது போன்ற, சில தமிழ் நாடு தேசியம் சார்ந்த தாக்குதல்களும் இடம்பெற்றன. ஆனால், தமிழ்நாட்டு ஆயுதப் போராட்ட வரலாற்றில், மிகப் பெருமளவு சேதத்தை உண்டாக்கிய அரியலூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல பொது மக்கள் கொல்லப் பட்டனர். அரசு இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் தேசிய தீவிரவாதத்திற்கு எதிராக, தமிழ் பொது மக்களை திசை திருப்பி விட்டது. பொன்பரப்பி கிராமத்தில், தமிழரசன் தலைமையிலான குழுவினர் வங்கி ஒன்றை கொள்ளையடிக்க சென்ற சமயம், பொலிஸ் புலனாய்வாளர்களால் தூண்டப்பட்ட கிராம மக்களால், சுற்றிவளைத்து  தாக்கப் பட்டு கொல்லப் பட்டனர்.  அதற்குப் பின்னர் TNLA  இரண்டாக, மூன்றாக உடைந்து பலவீனப் பட்டது. பொலிஸ் தேடுதல் வேட்டையில் பலர் கைது  செய்யப்பட்ட நிலையில், மாறன் தலைமையிலான சிறு குழுவினர், வீரப்பன் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர். 

வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் வன்னிய சாதியை சேர்ந்தவர்களாக இருந்ததால், மாறன் குழுவினருடன் நம்பகத் தன்மை வாய்ந்த கூட்டணி உருவாவதற்கு ஒரு காரணமாக இருந்தது. தமிழரசன், மாறன் போன்ற TNLA யின் தலைவர்கள் பலரும், வன்னிய சாதியினர் தான். ஆனால், சாதி மட்டுமே, வீரப்பன் கோஷ்டிக்கும், மாறன் கோஷ்டிக்கும் இடையில் கூட்டணி ஏற்படுவதற்கான ஒரேயொரு காரணி அல்ல. ஒரு முக்கியமான அரசியல் அடித்தளமும் இரண்டு குழுக்களையும் ஒன்று சேர்த்தது. வீரப்பன் குழுவினர், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான காட்டுப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். 

காவிரி நதி நீரை திறந்து விடுவது சம்பந்தமான பிரச்சினையில், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் மோதிக் கொண்டிருந்தன. காவிரி நதிநீர் பிரச்சினை, தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி உண்டாவதற்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. எவ்வாறு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கு சாதகமான அரசியலாக மாற்றிக் கொண்டனவோ, அதே தந்திரோபாயத்தை TNLA  பின்பற்றியது. கர்நாடகாவின் பிரபல நட்சத்திர நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்டதன் பின்னணியில், இவ்விரண்டு குழுக்களின் கூட்டு நடவடிக்கை இருந்துள்ளது. வன யுத்தம் திரைப்படத்தில், இந்த அரசியல் பின்புலம் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது. 

ராஜ்குமார் கடத்தப் பட்ட பின்னர், ஒரு அரசியல் கோரிக்கை விடுக்கப் பட்டது. சிறையில் இருக்கும் வீரப்பன் கூட்டாளிகளையும், TNLA உறுப்பினர்களையும் விடுதலை செய்யப் பட வேண்டும். எந்த வித நிபந்தனையுமற்று, காவிரி நதிநீர் திறந்து விடப்பட வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகள். திரைப்படத்தில் காட்டப்படுவதைப் போல, பணம் மட்டுமே ஒரேயொரு கோரிக்கை என்றால், செல்வந்தர்களான ராஜ்குமார் குடும்பத்தினர் எப்போதோ பணத்தைக் கொடுத்து மீட்டிருப்பார்கள். ஆனால், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் மாதக் கணக்காக இழுத்தடிக்கப் பட்டதற்கு, அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற விரும்பாத, அரசின் மெத்தனப் போக்கு முக்கிய காரணம் ஆகும். 

உண்மையிலேயே, காவிரி நதிநீர் திறந்து விடுவதற்கு கர்நாடகா அரசு சம்மதித்து இருந்தால், அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய தமிழ் தேசிய அலையை உருவாக்கி விட்டிருக்கும். TNLA க்கு பெருமளவு தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்திருக்கும். அரசு இதையெல்லாம் உணராமல் இல்லை. ஆனால், வன யுத்தம் திரைப்படத்தை பார்த்து இரசித்த தமிழ் உணர்வாளர்களும் உணராமல் விட்டது துரதிர்ஷ்டமானது. 

இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஜூனியர் விகடன் வார இதழில் ஒரு தொடர் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. "முந்திரிக்காடு முதல் சந்தனக் காடு  வரை" என்ற தலைப்பிலான தொடரில், TNLA  யின் போராட்ட வரலாறு பதிவு செய்யப் பட்டது. அந்த தருணத்தில் தான், வீரப்பன் TNLA  யின் தலைவராக பொறுப்பெடுத்து உள்ளதாக அறிவிக்கப் பட்டது. நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், பின்னாளில் இடது- தேசியவாதியாகவும் மாறியிருந்த புலவர் கலியபெருமாள், "வீரப்பனை தமிழ் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக," ஜூனியர் விகடன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். புலவர் கலியபெருமாள் தலைமறைவாக வாழ்ந்தவர் அல்ல. TNLA யின் அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு பிரச்சாரம் செய்யும், வெகுஜன அரசியலில் ஈடுபட்ட ஒருவர். 

புலவர் கலியபெருமாளுக்கும் வீரப்பனுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் குறைவாக இருந்திருக்கலாம். வன யுத்தம் திரைப்படத்தில், புலவர் கலியபெருமாளை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கற்பனைப் பாத்திரத்தை படைத்திருக்கிறார்கள். அதில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் வரும் முதியவரின் பாத்திரம், பொலிசுக்கு காட்டிக் கொடுக்கும் நக்சலைட் தொடர்பாளர் போன்று சித்தரிக்கப் பட்டுள்ளது. வீரப்பனை காட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும், பொலிஸ் உளவாளிகளான நக்சலைட்கள் உதவுகிறார்கள். உண்மையில், நடந்த கதை வேறு. வீரப்பன் மறைந்திருந்த காட்டில் இருந்து, வெளியே சென்று வந்த TNLA உறுப்பினர்கள் பொலிசிடம் மாட்டிக் கொண்டனர். அவர்களின் தொலைபேசி அழைப்பை நம்பி வெளியில் வந்த வீரப்பனை, பொலிஸ் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது. 

வன யுத்தம் திரைப்படத்தில், அரசின் சூழ்ச்சிக்கு அமைவாக, தமிழ் தேசிய தீவிரவாதிகளை, இஸ்லாமிய தீவிரவாதிகளாக திரிக்கும் அரசியல் அரங்கேறுகின்றது. வீரப்பன் கதைக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத, "இஸ்லாமிய தீவிரவாதிகளை" படத்தில் காட்டுகின்றனர். இது துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் விரோத திரைப்படங்களினால் ஏற்பட்ட தாக்கமாகும். இஸ்லாமிய பாணி குல்லாய் அணிந்த நான்கு இளைஞர்கள், "குண்டு வைப்பதில் நிபுணர்கள்" ஆக காட்டப் படுகின்றனர். இது இந்தக் காலகட்ட அரசியலுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், வீரப்பனின் கதையில் தேவையற்ற இடைச் செருகல் ஆகும். ஆனால், இங்கே தான் டைரக்டரின் குள்ள நரித்தனம் அம்பலமாகின்றது. வீரப்பனின் கிரிமினல் கோஷ்டி, தமிழ் தேசிய தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், இவர்களுடன் இலங்கையில் இருக்கும் புலிகளையும் முடிச்சுப் போட்டு, ஆளும் வர்க்கத்தின் சதிக்கு உடந்தையாக நடந்து கொள்கிறார். 

இந்தியா டுடே வெளியிட்ட, RAW வின்  "அகண்ட தமிழ் நாடு/தமிழீழம்" பற்றிய வரைபடம் 

















வீரப்பன், "கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, ஸ்ரீலங்கா செல்வதாக" பின்னப்பட்ட கதை, விடுதலைப் புலிகளையும் சிக்க வைக்கும் உள்நோக்கோடு புனையப் பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், பார்ப்பனீய - முதலாளித்துவ வார இதழான "இந்தியா டுடே" ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருந்தது. ஈழம் கோரும் புலிகளும், தமிழ்நாடு கோரும் TNLA யும் ஒன்று சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் அகண்ட தமிழ்நாடு, அல்லது அகண்ட தமிழீழம் ஒன்றை உருவாக்க எத்தனித்து வருவதாகவும்...." ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்தக் கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த வதந்தியை கிளப்பி விடுவதன் பின்னணியில் RAW  செயற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. "அகண்ட தமிழ்நாடு/தமிழீழம் கோட்பாடு", இந்திய, இலங்கை ஆட்சியாளர்களை ஒரு பொதுப் புள்ளியில் ஒன்றிணைக்க பயன்பட்டது. 

விஸ்வரூபம் திரைப்படத்தில் ஆப்கான் மக்களின் அவலம் பதிவு செய்யப் படவில்லை. அதே போன்று, வன யுத்தம் திரைப்படத்தில், பொலிஸ் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட தமிழ் பழங்குடியினரின் அவலம் பதிவு செய்யப் படவில்லை. வீரப்பன் குழுவினர் நடமாடிய வனப்பகுதி மக்கள், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ஆவர். வீரப்பன், சந்தன மரம், யானைத் தந்தம் கடத்தி பணம் சேர்த்திருந்தாலும், அந்தப் பணத்தில் ஒரு பகுதியை வனப்பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக செலவு செய்தான். அந்த நன்றியுணர்ச்சி காரணமாகத் தான், வீரப்பனை பற்றி யாரும் தகவல் கொடுக்கவில்லை. திரைப்படத்தில் டிஜிபி விஜயகுமாராக நடிக்கும் அர்ஜுன், "பொது மக்கள் வீரப்பனை காட்டிக் கொடுக்க தயங்குகிறார்கள்." என்று வசனம் பேசுகின்றார். ஆனால், ஏன் என்ற காரணத்தை மட்டும் திரித்துக் கூறுகின்றார். வீரப்பன் கொன்று விடுவான் என்ற பயத்தினால் தான், அந்த மக்கள் காட்டிக் கொடுக்கவில்லையாம். 

அது உண்மையானால், எதற்காக நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் பொலிஸ் முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப் பட்டார்கள்? எதற்காக நூற்றுக் கணக்கான பெண்கள், பொலிஸ் சீருடையில் இருந்த காம வெறியர்களால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார்கள்? வீரப்பனை தேடுவதாக சொல்லிக் கொண்டு, பொலிஸ் அதிரடிப் படையினர் புரிந்த அக்கிரமங்கள், கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இவை எல்லாம் மனித உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப் பட்டுள்ளன. வன யுத்தம் திரைப்படம், அதைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத காரணம் என்ன? 

அன்று வனத்தில் நடந்தது ஒரு யுத்தம் என்றால், பொலிஸ் அதிரடிப் படையின் அக்கிரமங்கள்  போர்க் குற்றங்களாக கருதப்பட வேண்டும். ஆனால், போர்க்குற்றவாளிகளை கதாநாயகர்களாக காட்டுவது தான், எங்கள் தமிழ் சினிமாக்களின் பண்பாடாக இருந்து வருகின்றது. விஸ்வரூபம், வன யுத்தம், இவை எல்லாம் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப் பட்ட அரசியல் பிரச்சார படங்கள் தான்.   

Friday, March 01, 2013

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு



மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே,  நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த  நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம்.

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப் படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்று, இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஏதென்ஸ் நகரம், ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் எனவும், அங்கிருந்து தான் ஐரோப்பிய நாகரீகம் தோன்றி வளர்ந்தது என்றும் போதிக்கின்றார்கள். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

ஐரோப்பிய பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை.நாகரீகத்தில் சிறந்த கிரேக்க நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். "எமது அன்றாட பாலியல் இச்சைகளுக்கு அடிமைப் பெண்களையும், சட்டபூர்வ குழந்தைகளை பெறுவதற்காக மனைவியரையும் வைத்திருக்கிறோம்..." என்று ஒரு கிரேக்க அறிஞர் எழுதுமளவிற்கு, அது சர்வ சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போது, பெண்கள் மீதான அடக்குமுறை, தற்போது சவூதி அரேபியாவில் பெண்கள் சுதந்திரமற்று இருக்கும் நிலைமை, இஸ்லாம் என்ற மதம் சார்ந்தது என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். அது அந்தப் பிராந்திய மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற உண்மை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இஸ்லாத்துக்கு முந்திய அரேபியாவை, கிரேக்க- ஐரோப்பியர்களே பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். அதே போல, ஆப்கானிஸ்தானும் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு பின்னர், கிரேக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த நாடுகளில், கிரேக்கர்களின் கலாச்சாரம் பரவாமலா இருந்திருக்கும்? ஒரு காலத்தில் கிரேக்கர்களாக இருந்த மக்கள், இன்றிருக்கும் அரேபியர்களுடனும், ஆப்கானியர்களுடனும் ஒன்று கலக்காமல் இருந்திருப்பார்களா? இதையெல்லாம் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.

கற்பு குறித்த இந்தியர்களின் புரிதல் என்னவென்று, தமிழ் வாசகர்களுக்கு நான் கூறத் தேவையில்லை. ஆனால், பெண்களின் கற்பு பற்றிய விதிகள் யாவும், பண்டைய கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டு வந்தன என்பது வியப்புக்குரியது அல்லவா?  "கற்பு நெறியானது ஆரியர்களால் புகுத்தப் பட்டது," என்று திராவிட அரசியல் சார்ந்த அறிஞர்கள் கூறி வருகின்றனர். அப்படியானால், இந்தியாவுக்குள் நுளைந்த ஆரியர்களும், கிரேக்கர்களும் ஒரே மாதிரியான இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்ட விடயம் தான். இன்றைய ஈரான் முதல் பாகிஸ்தான் வரையிலான பிரதேசங்களில் "சீத்தியர்கள்" என்ற ஈரானிய மொழி ஒன்றை பேசும் இனம் வாழ்ந்ததாக, கிரேக்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"இந்து பண்பாடு" என்று கருதப்படும், இறந்த கணவனின் சிதையில் மனைவி உடன்கட்டை ஏறுவது சீத்தியரின் (Scythian)  கலாச்சாரம் ஆகும். வட இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் சீத்திய இனத்தவர்களாக இருக்கலாம்.  வட இந்திய ஆரியர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியவர்கள் என்று கருத முடியாது. அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்த போதிலும், இந்தியாவை வெல்ல முடியாமல் திரும்பிச் சென்றான் என்று நமது சரித்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். கிரேக்க தளபதி, பிற்காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்தான். அந்த ராஜ்ஜியம் ஒரு காலத்தில் இந்தியாவின் வட-மேற்குப் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதைப் பற்றி எந்த சரித்திர நூலும் தெரிவிப்பதில்லை. ஏனிந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப் படுகின்றது?

இன்று உலகம் முழுவதும், ஐரோப்பிய மையவாத கருத்துக்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பண்டைய கிரேக்க வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே தெரிவு செய்து படிக்கிறார்கள். அவற்றை எமக்கும் படிப்பிக்கிறார்கள். அதிலிருந்து தான் இன்றைய ஆதிக்க அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. 

"உலகிற்கு நாகரீகத்தை போதிப்பது, நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த வெள்ளை இன மனிதனின் கடமை" என்று ஐரோப்பிய மையவாதிகள் நம்புகிறார்கள். இந்த காலனிய கால சிந்தனை இன்றைக்கும் கோலோச்சுகின்றது. 2001 ம் ஆண்டு, "பெண்களை கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டி தாலிபானின் பிடியில் இருந்து, ஆப்கான் பெண்களை விடுதலை செய்வதற்காக படையெடுத்ததாக," அமெரிக்கா ஒரு காரணத்தை கூறியது.  ஆனால், மறந்து விடாதீர்கள். 19 ம் நூற்றாண்டில், இதே காரணத்தை கூறித் தான் பிரித்தானியா இந்தியா மீது படையெடுத்தது! "பெண்களை உடன்கட்டை ஏற வைத்து கொடுமைப் படுத்தும், காட்டுமிராண்டி இந்துக்களிடமிருந்து இந்தியப் பெண்களை விடுதலை செய்வதற்காக..." என்று ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டன் இந்தியாவை காலனிப் படுத்தியது. 

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, கிரேக்கத்தில் இருந்து தான் உலகிற் சிறந்த நாகரீகத்தை ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். அதன் அர்த்தம், அன்று கிரேக்கத்தை தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ஆகவே அவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயகத்தை கண்டுபிடித்த ஏதென்ஸ் நாட்டு நாகரீகம் எப்படி இருந்தது? ஏதென்ஸ் நாட்டவரின் ஜனநாயகம் ஆண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம். கிரேக்க பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மன்றத்திற்கு சென்று அரசியல் விவாதம் செய்யவும், கருத்துரைக்கவும் தடை இருந்தது.  பெண்கள் மட்டுமல்ல, அடிமைகளும் கிரேக்க ஜனநாயகத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு, பெற்றோர்கள் சீதனம் கொடுப்பது,  இந்தியர்களின் பாரம்பரியம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும், சீதனம் கொடுக்கும் மரபு பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து மணம் முடித்து வைப்பார்கள். Medea என்ற கிரேக்க நாடகத்தில் பின்வரும் வசனம் ஒன்று வருகின்றது. "ஒரு ஆணை வாங்குவதற்கு மலையளவு பணம் தேவை. அப்படிக் கொடுத்த பின்னர், அந்த ஆண்  எமது உடலுக்கு உரிமை கொண்டாடுவது இன்னும் மோசமானது."

ஒரு சராசரி கிரேக்கப் பெண், 14 வயதிலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில், 13-14 வயது சிறுமிகள், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டத்தை, செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். பண்டைய கிரேக்கத்திலும், 14 வயது பருவ மங்கை,  30 வயதுக்கு மேற்பட்ட ஆடவனை திருமணம் செய்வது சட்டப்படி அனுமதிக்கப் பட்டது. திருமணம் முடிக்கும் நேரத்தில், அந்தப் பெண் கன்னியாக இருக்க வேண்டும். மணப்பெண் கன்னித் தன்மை இழந்துள்ளமை கணவனுக்கு தெரிய வந்தால், அவளை அடிமையாக விற்கலாம்.

"பெண்கள் படிக்கக் கூடாது" என்று, ஆப்கானிஸ்தானில் சட்டம் போட்ட தாலிபான்கள், பெண்களின் பாடசாலைகளையும் மூடினார்கள். எவராவது காரணம் கேட்டால், "அது தான் இஸ்லாமிய ஷரியா சட்டம்" என்று நியாயம் கற்பித்தார்கள். படிப்பறிவற்ற ஆப்கான் பாமர மக்களும், மெத்தப் படித்த சர்வதேச சமூகமும், அதனை உண்மை என்று நம்பியது. உண்மையில் அதுவும், இஸ்லாத்துக்கு முந்திய கிரேக்க நாகரீகம் என்று அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்டைய ஏதென்ஸ் நாகரீகத்தில், ஆண் பிள்ளைகளை மட்டுமே கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெண்பிள்ளைகள் வீட்டில் இருக்க வேண்டும். 

படித்த மனைவியை எந்த ஆணும் விரும்பவில்லை. கிரேக்க நாடக ஆசிரியர் Menander  பின்வருமாறு எழுதுகின்றார்: "எவனொருவன் ஒரு பெண்ணுக்கு எழுதப் படிப்பிக்கிறானோ, அவன் ஒரு பாம்புக்கு நஞ்சைக் கொடுக்கிறான்." பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கும், குழந்தைகளை பெற்று பராமரிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்பதே, பண்டைய கிரேக்கர்களின் நிலைப்பாடு. பொதுவாக நல்ல தண்ணீர் கிணறுகள் வீட்டுக்கு வெளியே சிறிது தூரத்தில் இருந்ததால், பெண்களே தண்ணீர் அள்ளிவர வேண்டியிருந்தது. ஆனால் அவ்வாறு வெளியே போகுமிடத்தில், அந்நிய ஆண்கள் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால், பணக்கார வீட்டுப் பெண்கள், தமது அடிமைகளையே தண்ணீர் அள்ளி வருமாறு வெளியே அனுப்புவார்கள்.  

ஆண் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் சமையலறைக்குள், அல்லது படுக்கையறைக்குள் சென்று விட வேண்டும். விருந்தினர்களின் கண்ணில் படுமாறு வெளியே நடமாடக் கூடாது. இது ஏதோ சவூதி அரேபியா அல்லது ஆப்கானிஸ்தானில் மட்டுமே காணக்கூடிய பெண் அடக்குமுறை என்று நினைத்து விடாதீர்கள். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும் அது தான் நடைமுறை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் பல சைவத் தமிழர்கள் வீடுகளில், இது போன்ற நடைமுறை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.  எனது உறவினர்கள் சிலர் கூட அத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்கள். இன்றைய தலைமுறையில் அது பெருமளவு மாறியிருக்கலாம். 

பாலியல் சுதந்திரம், ஆண்கள் மட்டுமே அனுபவிக்கும் உரிமையாக இருந்தது. கிரேக்க ஆண்கள், வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் பெண் அடிமைகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வெளியே பாலியல் தொழிலாளிகளிடமும் சென்று வந்தனர்.  இந்தக் காரணங்களாலும்,   தேவையான அளவு பிள்ளைகளை பெற்ற பின்னரும், கிரேக்க ஆண்கள் தங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்வதை பெருமளவு குறைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது பற்றி ஒரு மனைவி யாரிடமும் முறையிட முடியாது. ஒரு மாணவி, மாதத்தில் மூன்று தடவை உடலுறவு கொள்ள உரிமையுடையவள் என்று கிரேக்க சட்டம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது.

கிரேக்க மனைவிமார், கணவனுடன் மட்டுமே உடல் உறவு வைத்து, தமது கற்பை பாதுகாக்க வேண்டும். கணவன் வெளியூர் சென்றிருந்தாலும், பல வருடங்களாக காணாமல்போனாலும், அல்லது மரணமடைந்தாலும், வேறொரு ஆடவனோடு உறவு வைக்கக் கூடாது. பெண்கள் விவாகரத்து பெறுவதை கிரேக்க சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஒரு தடவை, ஒரு பெண் விவாகரத்து கோரி  சட்ட மன்றத்திற்கு செல்லும் வழியில், இடைமறித்த கணவனால் பலவந்தமாக கடத்திச் செல்லப் பட்டதாகவும், தெருவில் நின்ற யாரும் தலையிடவில்லை என்றும்..." கிரேக்க இலக்கியம் ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. 

சரஸ்வதி என்ற பெண் கல்வித் தெய்வத்தை வழிபட்ட பண்டைய கால இந்து மதத்தில், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு கலைகளை பயிலும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை. அதே நேரம், மேட்டுக்குடியினரின் பாலியல் அடிமைகளான "தேவ தாசிகள்" என்ற பெண்கள் மட்டுமே, நடனம், இசை போன்ற கலைகளை கற்றிருந்தனர். அதே மாதிரியான "தேவ தாசிகள்" பண்டைய கிரேக்கத்திலும் இருந்தனர். அவர்களின் பெயர் "Hetaeren".  "கிரேக்க தேவதாசிகள்" மட்டுமே, பண்டைய கிரேக்கத்தில் ஓரளவு கல்வியறிவு பெற்ற பெண்கள், என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தாம் பெற்ற அறிவுக்கு விலையாக, உடலை விற்றுக் கொண்டனர்.  

கிரேக்க மேட்டுக்குடி பாலியல் தொழிலாளர்கள், தமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, நடனம், இசை போன்ற கலைகளை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் பலர் விபச்சார விடுதிக்கு வந்து செல்வதால், அங்கே அரசியல் விவாதங்களும் நடக்கும். இதனால் கிரேக்க தேவதாசிகள் சிலர் அரசியல் அறிவு கைவரப் பெற்றிருந்தனர். அஸ்பாசியா (Aspasia) என்ற பெண், மதி நுட்பம் மிக்கவர் என்றும், அரசியல் உரைகளை எழுதுமளவு அறிவாளி என்றும் புகழப் படுகின்றார். தத்துவ அறிஞர்களுடன் வாதிடும் அளவுக்கு புலமை பெற்றிருந்தார். Pericles என்ற அரசவை உறுப்பினரின் வைப்பாட்டியாக இருந்ததால், அவருக்கு அரசாங்க அலுவல்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அஸ்பாசியா தான்,  புராதன ஐரோப்பாவின் வரலாற்றில், பெண்கல்வியை ஊக்குவித்த, முதலாவது பெண் உரிமைப் போராளியாக இருக்க வேண்டும்.  

(இந்தக் கட்டுரை, Historia (2/2013) சஞ்சிகையில் பிரசுரமான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டது.)

******************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.மேலைத்தேய நாசகார நாகரீகம்
2.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்
3.முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்

Tuesday, February 26, 2013

பிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்


கடந்த நூற்றாண்டில், அறுபதுகளின் இறுதியில், பிரான்ஸ் ஒரு கம்யூனிச புரட்சியின் விளிம்பில் நின்றது என்று சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். இன்றைய தலைமுறையினர், கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துள்ளனர். இதே மாதிரியான நிலைமை தான், அறுபதுகளில் இருந்த பிரான்சிலும் காணப்பட்டது. ஸ்டாலினின் மறைவின் பின்னர், அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரங்களும், அதற்கு துணையாக அமைந்த குருஷேவின் அரசியலும், ஐரோப்பிய நாடுகளில் "யூரோ கம்யூனிசம்" என்ற சீர்திருத்தவாத கட்சிகள் தோன்ற வழிவகுத்திருந்தது.

அறுபதுகளில் எல்லோரின் வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்து விட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த வியட்நாம் போரும், அங்கே நடந்த அமெரிக்கப் படைகளின் அட்டூழியங்களும் மக்களுக்கு தெரிய வைத்ததில்,  தொலைக்காட்சி பெட்டிகளும் முக்கிய பங்காற்றின. வியட்நாம் போரை எதிர்க்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. அந்த மாணவர்கள் தமது எதிர்ப்பரசியலுக்கு ஒரு கோட்பாட்டை தேடிய பொழுது, மாவோ பற்றி அறிந்து கொண்டனர். இதனால், அன்று தொடங்கிய மாணவர் இயக்கங்கள், பிற்காலத்தில் மாவோயிச கட்சிகளாக பரிணாம வளர்ச்சி கண்டன.

1968 ம் ஆண்டு, பிரான்சில் ஏற்பட்ட மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சி, பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகளால் அடக்கப் பட்டது. ஆனால், புரட்சிகர அரசியல் மறைய பல வருட காலம் எடுத்தது. "இடது-பாட்டாளிகள்" (Gauche Prolétarienne)  என்ற ஒரு மாவோயிச அமைப்பு, பிரான்சில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. பிரபல கார் கம்பனியான ரெனோல்ட், கார்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், நிறைய தொழிலாளர்கள் அந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை மூலம், வேலை நிறுத்தம் செய்வது, தொழிலாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் விநியோகிப்பது என்று பல வழிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலை நிர்வாகம், கம்யூனிச தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததால், தொழிற்சாலை போராட்ட களமாகியது.

1975 ம் ஆண்டு, பெப்ரவரி 25  அன்று, பெருந்தொகையான மாவோயிஸ்ட் தொழிலாளர்கள், ரெனோல்ட் தொழிற்சாலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் முற்றுகையிட்டனர். பாசிச எதிர்ப்புரட்சியாளர்கள் தாக்குவதற்கு வந்தால், அதற்கும் தயாராக தற்காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 26 பெப்ரவரி  1972, பியேர் ஒவெர்னி (Pierre Overney) என்ற மாவோயிச தொழிலாளி, தொழிற்சாலையின் முன்னால் நின்று கொண்டு, பாசிச எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார். தொழிற்சாலை நிர்வாகத்தினால், காவல் கடமையில் ஈடுபடுத்தப் பட்ட முன்னாள் இராணுவவீரர் Jean-Antoine Tramoni, திடீரென துப்பாக்கி எடுத்து சுட்டார். நெஞ்சில் குண்டடி பட்ட பியேர், அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.

26.02.1972 அன்று பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு கம்யூனிச போராளி பியேரின் மரணம், பிரான்ஸ் நாட்டை உலுக்கியது. அவரது மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாரிஸ் நகர தெருக்களில், சுமார் மூன்று இலட்சம் மக்கள், செங்கொடிகளுடன் அணிவகுத்து சென்றனர்.  பிரான்சில், இன்னமும் பெருந்தொகையான மக்கள்  மாவோயிச-கம்யூனிச புரட்சியாளர்களை ஆதரவளிக்கின்றனர் என்ற செய்தியை, அந்த ஊர்வலம் உலகுக்கு உணர்த்தியது. அன்று மாலை, பிரான்சின் பிரபல புரட்சிகர பாடகர்,  Dominique Grange கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. மயானத்தில் திரண்ட உழைக்கும் மக்கள் சர்வதேச கீதமிசைக்க, தோழர் பியேரின் பூதவுடல் விதைக்கப் பட்டது.  

இலட்சக் கணக்கான மக்களின் ஆதரவு இருந்த போதிலும், பிரெஞ்சு மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்ந்து இயங்காமல் ஸ்தம்பிதமடைந்தது. 1973 ம் ஆண்டு, சில பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை கொண்ட தலைவர்களால் கட்சி சீர்குலைந்தது. அவர்கள், "மாவோ முதல் மோசெஸ் வரை" என்ற புதியதொரு கொள்கையை கண்டுபிடித்து, இஸ்ரேலின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இந்த தலைவர்கள், இன்று அரச இயந்திரத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கின்றனர். இதே நேரம், பாட்டாளிவர்க்க நலன் சார்ந்த, அல்லது அந்த வர்க்க பின்னணியில் இருந்து வந்த உறுப்பினர்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், புரட்சிகர இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் அதற்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு பகுதியினர், சோஷலிச அல்பேனியாவின் என்வர் ஹோஷாவை ஆதரித்தனர். ஹோஷாவின் மறைவுக்கு பின்னர், பெருவின் ஒளிரும் பாதை இயக்கத்தின் போராட்டத்தை ஆதரித்தனர். அந்த தருணத்தில், பிரான்சில் மாவோயிசம் கோட்பாடு வடிவம் எடுக்க ஆரம்பித்தது. 

இன்னும் சில மாவோயிஸ்டுகள், பிரான்சில் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்த வேண்டுமானால், நீண்ட கால கெரில்லா யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அந்தக் குழுவினர்,  Noyaux Armés Pour l’Autonomie Populaire (NAPAP) என்ற பெயரில் இயங்கினார்கள்.  தோழர் பியேரினை படுகொலை செய்த ரெனோல்ட் தொழிற்சாலை காவல்காரரை சுட்டுக் கொன்றமை, அவர்களது முதலாவது தாக்குதலாகும்.  Jean-Antoine Tramoni என்ற அந்தக் காவல்காரர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த போதிலும், அரசின் மெத்தனப் போக்கு காரணமாக விடுதலை செய்யப் பட்டிருந்தார்.  NAPAP இயக்கமும், இன்னொரு புரட்சிகர ஆயுதக் குழுவான Groupes d’Action Révolutionnaire Internationalistes (GARI)   யும் இணைந்து,  Action Directe என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். Action Directe என்ற நகர்ப்புற கெரில்லா இயக்கம், இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கூட, ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்திருந்தனர். 

2002 ம் ஆண்டு, பிரான்சில் ஒரு புதிய மாவோயிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப் பட்டது. இந்திய நக்சலைட் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த வருடம், தோழர் பியேரின் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தனர். 

இன்று தோழர் பியேரின் 41 வது நினைவு தினமாகும்.
1972 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த பியர் ஒவெர்னியின் மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டதை காட்டும் வீடியோ இங்கே இணைக்கப் பட்டுள்ளது.




பிரான்சில் கம்யூனிச புரட்சி பற்றிய முன்னைய பதிவுகள்: 

ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

Monday, February 25, 2013

ஒசாமா பின்லாடன் கதாநாயகனாக நடித்த "விஸ்வரூபம்": ஓர் உண்மைக் கதை


[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்] 
(பாகம் - 6)

விஸ்வரூபம் திரைப் படத்தில், கமல்ஹாசன் ஒரு இந்திய முஸ்லிமாக, ஒரு RAW அதிகாரியாக நடித்திருப்பார். முதலில் பாகிஸ்தான் சென்று, அங்கே முகாமிட்டுள்ள தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவுவார். பின்னர் தலைவர் முல்லா ஒமாருக்கு நெருக்கமான குடும்ப நண்பராக மாறுவார். தாலிபான் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவ பயிற்சி அளிப்பார். தாலிபான் இயக்கத் தலைவர்களின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மதிக்கப் பட்டாலும், அவர் ஒரு RAW உளவாளி என்ற சந்தேகம் யாருக்கும் வராது. தாலிபான் ஆட்சியை அகற்றுவதற்கான அமெரிக்க படையெடுப்பு நிகழும் சமயத்தில், கமல் கொடுத்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தும். தாலிபான் தலைவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை எதிரிக்கு கொடுத்தவர், உற்ற நண்பனாக பழகிக் கொண்டிருக்கும் கமல் தான் என்ற சந்தேகம், அந்நேரம் யாருக்கும் வந்திருக்காது. காலம் தாழ்த்தி தான், அந்த உண்மை தெரிய வரும். இந்தக் கதை, உண்மையிலேயே நடந்த கதை என்று சொன்னால் நம்புவீர்களா?

விஸ்வரூபம் திரைப்படம், ஒரு உண்மைக் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. உண்மையான வரலாற்றுக் கதையில், தாலிபானுக்குள் ஊடுருவியது, ஒரு CIA உளவாளி. அவரும் ஒரு முஸ்லிம் தான். தாலிபான் தலைவருக்கு நெருங்கிய நண்பனாக இருந்தார். அவரது  குடும்பமும், ஒமாரின் குடும்பமும் உறவு முறை கொண்டாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அவர் தான் தாலிபான் போராளிகளுக்கு, கெரில்லா போர்ப் பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது அவரால் தயாரிக்கப் பட்ட பிரச்சார வீடியோவை பார்த்து விட்டு தான், கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் அதே மாதிரியான காட்சிகளை அமைத்தார். அந்த CIA உளவாளியின் பெயரை சொன்னால், இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். அவர் தான் "ஒசாமா பின்லாடன்"!  கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், ஒசாமா பின்லாடனை தமது மானசீக குருவாக   கருதுகிறார்கள் போலும். தமாஷ்!

"இதெல்லாம் குப்பை...நாங்கள் நம்ப மாட்டோம்..." என்று யாராவது அடம்பிடித்தால், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

 இங்கேயுள்ள படத்தை பாருங்கள். இராணுவ சீருடையில், துப்பாக்கி வைத்திருப்பது யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அவர் தான் ஒசாமா பின்லாடன். அவருக்கு அருகில், ஆலோசனை  வழங்கிக் கொண்டிருக்கும் அந்த அமெரிக்கர் யார்? அவர் பெயர்  பிரெசின்ஸ்கி (Brzezinski). அமெரிக்க அரசின் உயர்மட்ட சி.ஐ.ஏ. அதிகாரி. அவர் இப்போது என்ன செய்கிறார்? இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார். சொல்ல மறந்து விட்டேன். அவர் போலந்தில் பிறந்த யூதர். அவரின் தந்தை சோவியத் யூனியனிலும், பின்னர் கனடாவிலும் தூதுவராக பணியாற்றியவர். போலந்து நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்ததும், அமெரிக்காவில் தங்கி விட்டார்கள். 

பிரெசென்ஸ்கி, ஆப்கானிஸ்தானுக்கான சி.ஐ.ஏ. தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தான், ஜிகாத் போராட்டம் சூடு பிடித்திருந்தது. "Operation Cyclone"  என்ற பெயரில், சி.ஐ.ஏ. பல கோடி டாலர்களை வாரியிறைத்தது. ஒவ்வொரு வருடமும் 20 - 30 மில்லியன் டாலர்களாக இருந்த உதவித் தொகை, 1987 ல் அதன் உச்சத்தை அடைந்தது. அந்த வருடம் மட்டும், 680 மில்லியன் டாலர்கள் ஜிகாத் போராட்ட நிதியாக ஒதுக்கப் பட்டது. பாகிஸ்தானில் உள்ள முகாம்களில் வைத்து, ஜிகாத் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வேண்டிய நவீன ஆயுதங்கள் எல்லாம் அந்த அமெரிக்க நிதியில் இருந்து வழங்கப் பட்டன.  ஸ்டிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள், அன்று பல அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கே கிடைத்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள சோவியத் படைகளுக்கு கடும் இழப்புகளை உண்டாக்குவதே அமெரிக்காவின்  நோக்கம். இறுதியில், ஆப்கான் போரை வெல்ல முடியாத சோவியத் படைகள் பின்வாங்கிச் சென்றது மட்டுமல்லாது, சோவியத் ஒன்றியமும் நொறுங்கிப் போனது. 

அது சரி, அமெரிக்காவே ஜிகாதிகளுக்கு உதவி செய்தது என்றால், சவூதி அரேபியரான பின்லாடனுக்கு அங்கே என்ன வேலை?  பனிப்போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஆப்கான் தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா உதவுவது தெரிய வந்தால், அது சர்வதேச அரங்கில் இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம். அதனை தவிர்ப்பதற்கு, பின்லாடன் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டது. ஏற்கனவே, மேற்குலகிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ராஜதந்திர நெருக்கடி ஒன்று ஏற்பட்டது.  பிரிட்டனின் சிறப்புப் படையணியான SAS பயிற்சியாளர்கள், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருந்த பயிற்சி முகாம் ஒன்றில், ஜிகாத் போராளிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். அந்த முகாம் சோவியத் படையினரின் தாக்குதல் ஒன்றில் கைப்பற்றப் பட்டது. அங்கிருந்து இரண்டு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜிகாத் போராளிகளை ஸ்காட்லாந்துக்கு வரவழைத்து பயிற்சி கொடுத்தார்கள். 

அமெரிக்காவின் நெருங்கிய  கூட்டாளியான, சவூதி அரேபியாவும் ஜிகாத் போராட்டத்திற்கு நிதியுதவி செய்து வந்தது. தனது வஹாபிச பாணி இஸ்லாமை பரப்ப வேண்டும் என்ற நோக்கமும், சவூதி அரேபியாவுக்கு இருந்தது. ஒரு சவூதி அரேபிய இளவரசர், ஆப்கானிஸ்தானுக்கு வந்தால், போராளிகள் மிகுந்த உத்வேகத்துடன் போர் புரிவார்கள் என்று, ஜிகாத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். சவூதி அரேபியாவில் இருந்து எந்தவொரு இளவரசரும் போராடுவதற்காக ஆப்கானிஸ்தான் செல்லவில்லை. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்கு நெருக்கமான செல்வந்தர்களான பின்லாடன் குடும்பத்தில் இருந்து ஒசாமா என்பவர் வந்தார்.  ஒரு தொழிலதிபரின் மகனான ஒசாமா பின்லாடன், பெருந்தொகைப் பணத்துடனும், அரேபியாவில் சேர்க்கப்பட்ட தொண்டர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்.

ஒசாமா பின்லாடன், சவூதி மன்னருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவராக விளங்கினார். சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய ஒசாமா, சி.ஐ.ஏ. க்கு வேலை செய்தார். சி.ஐ.ஏ. யில் அவருக்கு சூட்டப்பட்ட புனை பெயர்: Tim Osman.  (இதனை நிரூபிக்கும் சி.ஐ.ஏ. இரகசிய ஆவணம் ஒன்று இங்கே இணைக்கப் பட்டுள்ளது.) 

ஒசாமா பின்லாடன் ஒரு CIA உளவாளி என்பதை நிரூபிக்கும் இரகசிய ஆவணம். 






















ஒசாமா பின்லாடனுக்கும், அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த சந்திப்பானது, The New Jackals (by Simon Reeve)  என்ற நூலில் விபரமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.  அநேகமாக, சி.ஐ.ஏ. மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து செல்லும் பணம், சரியான இடத்தை சென்றடைவதை கண்காணிக்கும் பொறுப்பு ஒசாமாவுக்கு வைத்திருக்கலாம். எந்தெந்த ஆயுதங்கள் தேவை என்ற பட்டியலையும் அவரே தயாரித்திருந்தார்.  ஆப்கானிஸ்தானில் ஒரு டசின் ஆயுதபாணி இயக்கங்கள், சோவியத் இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தாலும், குல்புதின் ஹெக்மதியாரின் இயக்கத்திற்கு தான் பெருமளவு வெளிநாட்டு உதவி கிடைத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ. பணத்தில் அரைவாசி அந்த இயக்கத்திற்கு போய்ச் சேர்ந்தது. சி.ஐ.ஏ. உளவாளியான பின்லாடனும், அதனுடன் தான் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். 

விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் சவூதி அரேபியர் ஒருவர், அபின் வியாபாரம் செய்வதாகவும், அதனை தாலிபான் தலைவர்கள் சாதாரணமாக எடுப்பதாகவும் காண்பித்திருப்பார்கள். அது உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கின்றது. சி.ஐ.ஏ யின் உதவி பெற்ற குல்புதின் ஹெக்மதியாரின் இயக்கம், ஹெரோயின் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வந்தது. இது அன்று, அமெரிக்க அரசு, பாகிஸ்தான் அரசு உட்பட, எல்லோருக்கும் தெரியும். அனேகமாக, முஜாகிதீன் குழுக்கள் சீரழிந்ததற்கு இது போன்ற கிரிமினல் செயற்பாடுகளும் முக்கிய காரணம். அன்று பல முஜாகிதீன் ஆயுதக் குழுக்கள் போதைவஸ்து கடத்தி வந்தன.

அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்ற "விடுதலைப் போராளிகள்", ஆப்கான்  வர்த்தகர்களிடம், மக்களிடம் கப்பம் வசூலித்து வந்தனர். கேட்கும் பணத்தை கொடுக்க மறுத்தால், கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அது போதாதென்று, போராளிக் குழுக்களில் சிறுவர்களையும் பலாத்காரமாக  சேர்ப்பது, பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது....இப்படி அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், குற்றங்கள் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருந்தன. சோவியத் படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், ஆயுதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று அதிகாரத்திற்காக மோதிக் கொண்டன.  மக்களுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான், தாலிபான்கள் உருவானார்கள். சரியாகச் சொன்னால், CIA யும், ISI யும் தாலிபான் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். ஒசாமா பின்லாடனும், அவரை பின்பற்றிய அரபு தொண்டர்களும், புதிய இயக்கத்துடன் சேர்ந்து கொண்டனர். 

ஆப்கானிஸ்தானின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து, தாலிபான் என்ற இயக்கத்தை உருவாக்கியது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஒரு மாற்று அரசியல் சக்தி இருந்தது. அவர்கள் மேற்கத்திய நாகரீகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதாவது, பெண் கல்வி, ஆண் - பெண் சமத்துவம், மேற்கத்திய கலாச்சாரம், மதச்சார்பற்ற அரசு.... இவற்றை எல்லாம் ஆதரிப்பார்கள். ஆனால், அமெரிக்காவுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்ள விருப்பமில்லை. ஏனென்றால், அவர்கள் ஆப்கான் மார்க்சிஸ்டுகள்! அமெரிக்காவை பொறுத்தவரையில், மார்க்சிஸ்டுகள் மேல் நம்பிக்கை வைப்பதை விட, தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுவது சிறந்ததாக பட்டது.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தான் ஆளவேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. இப்போது அந்த மார்க்சிஸ்டுகள் எங்கே? உண்மையில், தாலிபான் படைகள் முன்னேறும் வரையில், அவர்கள் அங்கே தான் இருந்தார்கள். ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதி தாலிபான் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், அகதிகளாக வெளியேறினார்கள். குறைந்தது பத்தாயிரம் ஆப்கான் மார்க்சிஸ்டுகள், அவர்களது குடும்பங்களுடன் ரஷ்யா ஊடாக நெதர்லாந்து வந்து சேர்ந்தனர். அந்த நாட்டில், அனைவருக்கும் அகதி தஞ்சம் வழங்கப் பட்டது. அவர்களில் பலரை நான் நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். சிலர் இன்றைக்கும் எனது உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் பற்றிய இந்தக் கட்டுரைகள் எழுதுவதற்கு, அவர்கள் வழங்கிய தகவல்கள் பெரிதும் உதவி உள்ளன. அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

(முற்றும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"
4.அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்
5.அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

Friday, February 22, 2013

அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள்

[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்]

(பாகம் - 5)
கடும்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளான, ஆப்கான் ஜிகாத் தலைவர்களை, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடுகின்றார். (1985)


"நீங்கள் பிறப்பதற்கு முந்திய வரலாறு பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் குழந்தையாகவே இருப்பீர்கள்."Marcus Tullius Cicero (ரோம தத்துவஞானி)

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் உருவான பின்னர் பிறந்த இளைய தலைமுறையினருக்கு கடந்த காலம் பற்றி எதுவும் தெரிந்திருக்கப் போவதில்லை. அவர்கள் தான் பெருமளவில் "விஸ்வரூபம்" திரைப்படத்தை பார்க்கப் போகிறார்கள். அத்தகையோரை ஏமாற்றுவது சுலபம் என்று கமல்ஹாசன் கணக்குப் போட்டிருக்கலாம். தாலிபான் என்றால் என்ன? அல்கைதா என்றால் என்ன? அவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? அந்த இரண்டு இயக்கங்களையும் யார் உருவாக்கினார்கள்? யார் நிதியும், ஆயுதங்களும் வழங்கினார்கள்? ஐம்பது வயதை தாண்டிய கமல்ஹாசனுக்கு அந்த விபரம் எதுவும் தெரியாமல் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவிய, RAW அதிகாரியான கமல்ஹாசன், புறாக்களை வைத்து அமெரிக்காவில் நாச வேலைகளை ஏற்படுத்த நினைக்கும் முல்லா ஓமாரின் திட்டங்களை அறிந்து கொள்கிறார். பிற்காலத்தில், அமெரிக்காவில் வாழும் காலத்தில், தற்செயலாக FBI யினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் நேரத்தில், அந்த தகவல்களை தெரிவிக்கிறார். பின்னர், FBI படையினருடன் சேர்ந்து, ஓமாரின் அணுகுண்டு சதித் திட்டத்தை முறியடிக்கிறார். அது வரைக்கும், அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான FBI க்கும், வெளிநாட்டு புலனாய்வுத்துறையான CIA க்கும், எதுவும் தெரியாது என்று சாதிக்கிறார். திரைக் கதாசிரியர் கமல்ஹாசனின் அப்பாவித்தனத்தை நினைத்து சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை.

2008 ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட தாக்குதலை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த தாக்குதலை நடத்த வந்து பிடிபட்ட, கசாப் என்ற இளைஞனுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப் பட்டு விட்டது. ஆனால், நியூயோர்க் 9/11 தாக்குதலைப் போன்றது என்ற அர்த்தத்தில், 26/11 என்று குறிப்பிடப் படும் மும்பை தாக்குதல் தொடர்பாக, David Headley என்ற அமெரிக்க பிரஜை, அமெரிக்காவில் 35 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். இது குறித்து இந்திய ஊடகங்கள் கூட மௌனம் சாதிக்கின்றன. அதற்கு காரணம், அந்த நபர் ஒரு முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி. அந்த குற்றவாளியை விசாரிப்பதற்காக தன்னிடம் ஒப்படைக்குமாறு, இந்திய அரசும் கோரவில்லை. சி.ஐ.ஏ. க்கும், தெற்காசிய நாடுகளில் இயங்கும் ஜிகாதி இயக்கங்களுக்கும் இடையிலான இரகசிய உறவு தெரிந்து விடும் என்பதற்காக, அமெரிக்காவும் ஒத்துழைக்கவில்லை.

தெற்காசியாவிலேயே முதலாவது ஜிகாதி தீவிரவாத இயக்கத்தை யார், எப்போது, எங்கே உருவாக்கினார்கள் என்று தெரியுமா? ஆப்கானிஸ்தானில் 1969 ம் ஆண்டு, சி.ஐ.ஏ. நிதியுதவியில் அவை ஸ்தாபிக்கப் பட்டன. அந்தக் காலத்தில் ஆப்கானிஸ்தானை ஆண்ட, முற்போக்கான சிந்தனை கொண்ட  மன்னர் சாஹிர் ஷா, அயல் நாடான சோவியத் யூனியனின் உதவியுடன் தனது நாட்டை நவீனப் படுத்தி வந்தார். ஆப்கானிஸ்தானின் முதலாவது நெடுஞ்சாலையை கூட, சோவியத் என்ஜினியர்கள் தான் போட்டுக் கொடுத்தார்கள். அப்போது பனிப்போர் காலகட்டம் ஆகையினால், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் சோவியத் செல்வாக்கு உயர்வதை தடுப்பதற்கு விரும்பியது.

ஹெக்மதியார், ரபானி போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், காபுல் பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமான "இஸ்லாமிய மாணவர் அமைப்பை" உருவாக்கினார்கள். 1973 ம் ஆண்டு, ஒரு சதிப்புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, ஆப்கானிஸ்தான் குடியரசானது. அந்த சந்தர்ப்பத்தில், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய ஹெக்மதியாரும், ரபானியும் ஆயுதமேந்திய இஸ்லாமிய போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். அது தான் ஜிகாதிக் குழுக்களின் தோற்றம் ஆகும். ஆப்கானிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர விரும்பிய தீவிரவாத இயக்கங்களுக்கு, சி.ஐ.ஏ. வேண்டியளவு நிதியும், ஆயுதங்களும் வழங்கியது.

இதிலே கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு.  1979 ம் ஆண்டு, சோவியத் படையெடுப்புகளுக்கு பின்னர் தான், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் தோன்றின என்று நினைப்பது தவறு. உண்மையில், அன்றிருந்த ஆப்கான் அரசு கம்யூனிசத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மன்னராட்சியாக இருந்த போதிலும், சோவியத் உதவியுடன் நாட்டை நவீனமயப் படுத்தியதால் வந்த வினை அது. ஒரு நாடு சோஷலிச நாடாக இல்லாவிட்டாலும், அது சோவியத் முகாமில் கூட்டுச் சேர்வதையும், அதன் உதவியுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதையும் கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதே போன்ற காரணங்களுக்காக, இலங்கையில் பண்டாரநாயக்கவும்,  இந்தியாவில் இந்திரா காந்தியும் கொலை செய்யப் பட்டனர். இந்த அரசியல் படுகொலைகளுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. யின் கரங்கள் மறைந்திருக்கலாம். ஒரு காலத்தில் இந்தியாவை கலக்கிக் கொண்டிருந்த, பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளும், காஷ்மீர் இஸ்லாமிய தீவிரவாதிகளும், சி.ஐ.ஏ. தொடர்பில் இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

விஸ்வரூபம் படத்தின் இறுதியில், "அமெரிக்காவை பேரழிவில் இருந்து காப்பாற்றிய கமல்ஹாசனை, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டுவதாக" ஒரு காட்சியை, அவரால் அமைக்க முடியவில்லை. அந்தளவு தூரம் கமல்ஹாசனின் கற்பனைக் குதிரை பாயவில்லை. ஆனால், அவர் திரைப்படத்தில் யாரை வில்லன்களாக சித்தரித்தாரோ, அந்த சினிமா வில்லன்கள் நிஜத்தில் நாயகர்களாக இருந்த விடயம் கமலுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இன்றைய அடிமை இந்தியர்களை விட, அன்றைய "விடுதலைப் போராளிகளான" ஆப்கான் ஜிகாதிகள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அந்த உறவு எந்தளவுக்கு நெருக்கமாக இருந்தது என்றால், 1982 ம் ஆண்டு, அமெரிக்க விண்வெளிக்கு செலுத்திய கொலம்பியா  விண்கலத்தை "ஆப்கான் விடுதலைப் போராளிகளுக்கு"(ஜிகாதிகளுக்கு) அர்ப்பணம் செய்யும் அளவிற்கு இருந்தது.

அது மட்டுமல்ல, அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், தாலிபான் போன்று உடையணிந்த ஜிகாதி தலைவர்களை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து உரையாடினார். 1985 ம் ஆண்டு நடந்த சந்திப்பின் போது, "இவர்கள் அமெரிக்க தேசத்தை நிர்மாணித்த சிற்பிகள் போன்றவர்கள்." என்று, ரீகன் ஜிகாதிகளை சுட்டிக் காட்டி,  புகழாரம் சூட்டினார். விஸ்வரூபம் படமெடுத்து, இந்தியரின் அமெரிக்க விசுவாசத்தை பறைசாற்றிய கமல்ஹாசனுக்கு அந்தப் பெருமை கிடைக்கவில்லை. இதை எல்லாம் கேள்விப் படும் பொழுது, கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், தாலிபான் ஜிகாதிகள் மேல் பொறாமை கொள்வார்கள்.  என்ன செய்வது? சிலநேரம், உண்மைச் சம்பவங்கள் கற்பனைக் கதைகளை விட ஆச்சரியமாக இருக்கலாம். 

அமெரிக்க அரசு, ஆப்கான் ஜிகாதிகளுக்கு எவ்வளவு பணம் செலவளித்திருக்கும்? ஒரு தடவை மூச்சை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். 1885 ம் ஆண்டு மட்டும், 280 மில்லியன் டாலர்களை சி.ஐ.ஏ. செலவிட்டது. சவூதி அரேபியா, மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் வழங்கிய தொகையை கணக்கிட்டால், அந்த வருடத்தில் மட்டும் 500 மில்லியன் டாலர்கள் ஜிகாதி இயக்கங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மை இவ்வாறு இருக்கையில், (சவூதி) அரேபியர்களை மட்டும் தாலிபானுக்கு நிதி கொடுக்கும் புரவலர்களாக, விஸ்வரூபம் படத்தில் கமல் காட்டியிருப்பார். கமல்ஹாசன் அவர்களே! உங்கள் தாய்நாடான இந்தியா, தொன்னூறுகளில் இருந்து தான் அமெரிக்காவின் அடிமை நாடாகியது. அதற்கு முன்பிருந்தே, சவூதி அரேபியா எப்போதும் அமெரிக்காவின் அடிமை நாடு தான். எண்ணை ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதித்தாலும், அமெரிக்க எஜமானர்கள்  அந்தப் பணத்தை எங்கே, எப்படி செலவளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.  

1991 ம் ஆண்டு, குவைத்தை மீட்பதற்கு அமெரிக்கா படையெடுத்தது. ஆனால், அந்த செலவை சவூதி அரேபியா பொறுப்பேற்றது. அதே போல, ஆப்கான் ஜிகாதிகளை ஆதரிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டது. சவூதி அரேபியா நிறைவேற்றியது.  இன்னமும் ஒன்றும் புரியவில்லை என்பவர்களுக்காக சுருக்கமாக சொல்கிறேன். உலகிலேயே அதிகளவு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியா. சவூதி எண்ணையில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு விற்பனையாகின்றது. இதனால் பெருமளவு அமெரிக்க டாலர்கள், இலாபமாக சவூதி அரேபியாவின் கஜானாவை நிரப்புகின்றன. அந்தப் பணத்தில் ஒரு பகுதி, ஆப்கானிஸ்தானில் போராடும் ஜிகாதி இயக்கங்களுக்கும், தாலிபானுக்கும் சவூதி நிதியாக போய்ச் சேர்கின்றது. அந்தப் பணத்தைக் கொண்டு, ஜிகாதி இயக்கங்கள் அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்குகின்றன. இப்போது பணம் எங்கே போகின்றது? அப்பாடா... அமெரிக்காவில் இருந்து சென்ற டொலர்கள், ஒரு வழியாக அமெரிக்காவுக்கே திரும்பி வந்து விட்டன. 

(தொடரும்)

ஆப்கான் ஜிகாதிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம்:


President Ronald Reagan Meeting Some Mujahideen


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"
4.அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"