Showing posts with label பெண் உரிமை. Show all posts
Showing posts with label பெண் உரிமை. Show all posts

Sunday, February 03, 2019

"என் முதல் ஆசிரியர்" - பெண்களை படிக்க வைத்த கம்யூனிச "கொடுங்கோன்மை(?)"


"என் முதல் ஆசிரியர்"- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)" பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

 சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப் பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப் பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப் பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது தான் "என் முதல் ஆசிரியர்" எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விபரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கலியாணம் செய்து வைக்கப் படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப் படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

நகரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் அல்டினாய் மறக்காமல் தூய்ஷனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். அவற்றில் தனது காதலை மென்மையாக வெளிப்படுத்துகிறாள். இருப்பினும் ஆசிரியர் தூய்ஷனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சில வருடங்களுக்கு பின்னர் குக்கிரி கிராமத்திற்கு திரும்பும் அல்டினாய் அங்கு தூய்ஷனை காண முடியாமல் ஏமாற்றம் அடைகிறாள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டதால் தூய்ஷன் போர்முனைக்கு சென்று விட்டதாக அறிந்து கொள்கிறாள்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுக்களைப் போன்று "உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து" ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப் பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, "பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!" என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
நூலில் இருந்து ஒரு பகுதி:  
//குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு போக வேண்டும் என்று கூறும் இந்த அறிவிப்புக்கு விரோதமாக நீங்கள் நிற்கிறீர்களா? இதில் சோவியத் அரசாங்க முத்திரை குத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு வயலும் தண்ணீரும் கொடுத்தது யார்? உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?.... நாமனைவரும் ஏழை விவசாயிகள். நம் வாழ்க்கை முழுவதும் நம்மை இழிவுபடுத்தி உதைத்துத் தள்ளினார்கள். நாம் கும்மிருட்டில் இதுவரை வாழ்ந்து விட்டோம். சோவியத் அரசாங்கம் நாம் ஒளியைப் பார்க்க வேண்டும் என்கிறது. இதற்காகவே நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிறேன்.// 

பிற்குறிப்பு:
இந்த நாவல் சிங்களத்தில் "குரு கீதய" என்ற பெயரில் ஒரு திரைப்படமாக வந்துள்ளது.

Saturday, July 25, 2015

உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி


சோஷலிச நாடுகள் என்றால், "சர்வாதிகாரம், ஜனநாயக மறுப்பு, சுதந்திரமின்மை..." இப்படியான கருத்துக்கள் தான் பரப்பப் பட்டு வந்துள்ளன. தானும், தன் குடும்பமும் மட்டும் வாழ்க்கை வசதிகளை அனுபவித்தால் போதும் என்ற சுயநலம் மிக்க தமிழ் மேட்டுக்குடியினரும் அப்படித் தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், எதிர்மறையான பிரச்சாரங்களுக்கு அப்பால், சோஷலிச நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது என்று ஆராய விட மாட்டார்கள்.

பிரான்ஸ் நாட்டில் கற்றோரினால் மதிக்கப்படும் Le Monde தினசரிப் பத்திரிகையின் மாத இதழான Le Monde diplomatique, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் பெண்களின் நிலைமை பற்றி ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளது. அதில் வந்த தகவல்களை இங்கே தருகிறேன்:

பெர்லின் மதில் விழுந்த பின்னர், இரண்டு ஜெர்மனிகளிலும் வாழும் பெண்களின் வாழ்க்கைத்தரம் ஒரே மட்டத்திற்கு வரும் என்று சமூக விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்கள். ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு என்று அழைக்கப் பட்ட முன்னாள் மேற்கு ஜெர்மனியில், ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வைத்திருந்த 16% தாய்மார் மட்டுமே முழுநேர ஊழியர்களாக இருந்தார்கள். ஆனால், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்று அழைக்கப்பட்ட முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், 52% தாய்மார்கள் முழுநேர வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். முன்பு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பெண்கள் மிக இலகுவாக குடும்பத்தை பராமரித்துக் கொண்டே வேலைக்கும் சென்று வர முடிந்தது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களுக்கு அது மிகவும் சிரமமான விடயமாக இருந்தது. தற்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத கிழக்கு ஜெர்மன் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது அவர்களது வாழ்க்கை முறைகள், எதிர்காலத் திட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கி உள்ளது. அது மட்டுமல்லாது, அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்துள்ளது.

1950 ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் எங்கிலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், முதலாளித்துவ மேற்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது! பெர்லின் மதில் விழும் வரையில், 92% கிழக்கு ஜெர்மன் பெண்கள் நிரந்தரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். 60% பெண்கள் மாத்திரமே வேலைக்கு சென்று கொண்டிருந்த மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும் பொழுது, கிழக்கு ஜெர்மன் உழைக்கும் பெண்களின் விகிதாசாரம் உலகிலேயே மிக அதிகமானதும், தனித்துவமானதும் ஆகும்.

92% பெண்கள் வேலைக்கு சென்ற யதார்த்தத்தை கவனத்தில் எடுத்தால், கிழக்கு ஜெர்மன் பெண்கள், ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளை அனுபவித்தனர் என்பது தெளிவாகும். மேற்கு ஜெர்மன் பெண்கள், "குழந்தைகளை பராமரிப்பதற்காக வீட்டில் இருக்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து விடுபட முடியாமல் இருந்தனர். அதே நேரம், கிழக்கு ஜெர்மன் பெண்கள், கணவனின் சம்பாத்தியத்தை நம்பியிராமல் சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நின்றனர்.

எழுபதுகளில் கிழக்கு ஜெர்மனியில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தது. அதனால், திருமணமாகாத யுவதிகளும், விவாகரத்து செய்த பெண்களும், குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஊக்குவித்தது. "சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான மனித வலு" என்று சாமானிய மக்களால் நையாண்டி செய்யப்பட்டாலும், அரசு அவர்களுக்கு வேண்டிய விசேட சலுகைகளை செய்து கொடுத்ததன் மூலம், சமூக அந்தஸ்தை உயர்த்தியது. அதே நேரம், மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களில் பலர், விவாகரத்துக்குப் பின்னர் வறுமைக்குள் தள்ளப் பட்டனர். தாய்மை அடைவது, பெண்களின் பின்னடைவாக கருதப் பட்டது.

அதனால், ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதில் வியப்பில்லை. எந்தக் காலத்திலும் வேலையில்லாப் பிரச்சினையை அனுபவித்திராதவர்கள், தமக்கு பல சலுகைகளை வழங்கிய அரசமைப்பு நொறுங்கிப் போனதை உணர்ந்து கொண்டார்கள். தற்போது (ஒன்றிணைந்த ஜெர்மன்) அரசின் தொழில் முகவர் நிலையத்திற்கு செல்லும் ஓர் இளம் தாய், "எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது" என்று சொன்னால், அலுவலர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். (ஏனென்றால் அவருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.)

முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், அரசு எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஒரு வேலைக்குப் போகும் தாய், தனது குழந்தைகளை பராமரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்களை பிடித்து விடத் தேவையில்லை. வேலைக்கு செல்லும் கணவனும் நேரத்தை ஒதுக்கத் தேவையில்லை. அரசே குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்கு படுத்திக் கொடுத்தது. இதனால், தாய்மார்கள் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கவில்லை. ஜெர்மன் ஒன்றிணைவு, முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுத்து விட்டது.

2000 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, முன்னாள் கிழக்கு - மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த பெண்கள், வேலை, குழந்தைகள் பற்றி, இரண்டு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பொதுவாக எல்லாப் பெண்களும் பிள்ளைகள் தமக்கு முக்கியம் என்று சொன்னார்கள். இருப்பினும், மேற்கு ஜெர்மன் பெண்கள், தொழிலை விட, பிள்ளை வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தம் முன்னால் இருந்த அனைத்து வகையான கஷ்டங்களையும் பார்த்த பின்னரும், வேலையில்லாத காலத்தை, குழந்தை பராமரிப்பில் செலவிடுவது சிறந்தது என்று நம்பினார்கள்.

அதற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் பெண்கள், தொழிலையும், குழந்தை வளர்ப்பையும் சமமான கடமைகளாக கருதினார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கும் வேலை செய்யும் தாய் முன்னுதாரணமாக இருப்பார் என்று நம்புகிறார்கள். வேலைக்கு செல்வதால் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதனால் தாயின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எந்த இடையூறும் வராது என்றும் சொல்கின்றனர். தங்களது பொருளாதார சுதந்திரம், முழுக் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என்று வாதிடுகின்றனர்.

மேற்கு ஜெர்மன் பெண்கள், (வேலைக்கு போகாமல்) வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, தாயின் கடமை என்று கூறுகின்றனர். குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அங்கீகரித்தாலும், அதன் திறக்கும் நேரங்களுடன் ஒத்துப் போகின்றனர். (குழந்தை பராமரிப்பு நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே திறந்திருக்கும்.) கிழக்கு ஜெர்மன் பெண்கள், முன்பு இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து இருக்கவில்லை. (அதாவது, அதிகாலையோ, இரவோ, வேலைக்கு செல்லும் நேரம் எதுவாக இருந்தாலும், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் எந்த நேரமும் திறந்திருக்கும்.) அதனால், குழந்தை பராமரிப்பு நிலையங்களின் சேவை, எல்லா நேரத்திலும் இலகுவில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று, கிழக்கு ஜெர்மன் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான், வேலை வாய்ப்பும் இலகுவாக கிடைக்கும்.

ஒரு வேலையற்ற இளம் தாய், தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் காரணத்தை காட்டி, பல இடங்களில் வேலை மறுக்கப் பட்டதாகக் கூறுகின்றார். தன்னால் குழந்தையை பராமரிப்பதற்கு ஒழுங்கு படுத்த முடியும் என்று சொன்ன போதிலும் யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. அடுத்த குழந்தைக்கு எதிர்பார்ப்பதாக எந்த இடத்திலும் உண்மையை கூற முடியாது. இதனால், வேலைக்கான நேர்முகத் தேர்வில், இன்னொரு குழந்தைக்கு ஆசையில்லை என்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகின்றது. கம்யூனிச ஆட்சிக் காலத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுகளில், அப்படி ஒன்றை கூறும் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் எல்லோரும், தமது அவமானத்தை பொறுத்துக் கொண்டு, புதுமையான விதிகளுடன் கூடிய விளையாட்டுக்களை விளையாட வேண்டியுள்ளது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மன் தாய்மாரைப் பொறுத்தவரையில் இது வாழ்க்கையின் யதார்த்தம்.

(விவாகரத்து பெற்று தனியாக வாழும்) இளம் தாய் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார்:
"ஒரு தடவை எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளர் வேலை கிடைத்தது. எனது நிர்வாகி, அவரும் ஒரு பெண், ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு பேசினார். வாரத்திற்கு நாற்பது மணித்தியாலத்திற்கும் அதிகமாக, அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் உன்னைக் கேட்போம் என்றார். அதற்கு நான் முடியாதென்று மறுத்து விட்டேன். அது எனது தவறு. அவருக்கு என் மேல் கோபம் வந்து விட்டது. ஊரில் எத்தனை ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா? இந்த வேலை கிடைத்ததற்காக சந்தோஷப் பட வேண்டும் என்று சத்தம் போட்டார்." 

தனது அனுபவக் கதையை கூறி விட்டு அந்தத் தாய் கேட்டார்:"எனக்கு வேலை முக்கியம் தான். ஆனால், வேலை காரணமாக காலை முதல் இரவு வரையில் எனது குழந்தையை பார்க்க முடியாதென்றால் அது என்ன வாழ்க்கை? என்ன மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்?"

சமூக விஞ்ஞானிகளான Jutta Gysi, Dagmar Meyer ஆகியோரின் கூற்றின் படி: "முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் குடும்ப நலக் கொள்கையானது பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது இன்றைக்கு நடக்க முடியாத ஒன்று. பெரும்பாலான பெண்கள் செய்து வந்த தொழில்கள், ஆண்களுடையதை விட தரம் குறைந்ததாக இருந்தது உண்மை. அதனால் 30% குறைந்த சம்பளம் கிடைத்தது. இருப்பினும், (வாடகை கட்ட முடியாமல்) வீட்டை இழக்க வேண்டுமென்ற பயம் இருக்கவில்லை. குழந்தை பரமாரிப்பு நிலையத்தில் இடம் கிடைக்குமா என்ற கவலை இருக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் அரசின் நம்பகமான சமூகநலத் திட்டங்களில் தங்கி இருந்தார்கள். பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென்றால், அது கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய, மிக முக்கியமான விடயம்."

பெர்லின் மதில் விழுந்தவுடன், கிழக்கு ஜெர்மனியின் பாலின சமத்துவமும் விழுந்து விட்டது. ஆயினும், கால் நூற்றாண்டுக்குப் பின்னரும், அது சமூகத்தில் தாய்மாரின் சிந்தனைப் போக்கை தீர்மானிக்கிறது.

(நன்றி: Le Monde diplomatique, June 2015)

(பிற்குறிப்பு: ஐரோப்பாவில் வசிக்காத தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக, நான் கட்டுரையில் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன்.)

Monday, June 22, 2015

சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம் மிக்க "பெண்களின் ராஜ்ஜியம்"!


புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.


Friday, March 01, 2013

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு



மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே,  நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த  நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம்.

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப் படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்று, இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஏதென்ஸ் நகரம், ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் எனவும், அங்கிருந்து தான் ஐரோப்பிய நாகரீகம் தோன்றி வளர்ந்தது என்றும் போதிக்கின்றார்கள். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

ஐரோப்பிய பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை.நாகரீகத்தில் சிறந்த கிரேக்க நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். "எமது அன்றாட பாலியல் இச்சைகளுக்கு அடிமைப் பெண்களையும், சட்டபூர்வ குழந்தைகளை பெறுவதற்காக மனைவியரையும் வைத்திருக்கிறோம்..." என்று ஒரு கிரேக்க அறிஞர் எழுதுமளவிற்கு, அது சர்வ சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போது, பெண்கள் மீதான அடக்குமுறை, தற்போது சவூதி அரேபியாவில் பெண்கள் சுதந்திரமற்று இருக்கும் நிலைமை, இஸ்லாம் என்ற மதம் சார்ந்தது என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். அது அந்தப் பிராந்திய மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற உண்மை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இஸ்லாத்துக்கு முந்திய அரேபியாவை, கிரேக்க- ஐரோப்பியர்களே பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். அதே போல, ஆப்கானிஸ்தானும் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு பின்னர், கிரேக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த நாடுகளில், கிரேக்கர்களின் கலாச்சாரம் பரவாமலா இருந்திருக்கும்? ஒரு காலத்தில் கிரேக்கர்களாக இருந்த மக்கள், இன்றிருக்கும் அரேபியர்களுடனும், ஆப்கானியர்களுடனும் ஒன்று கலக்காமல் இருந்திருப்பார்களா? இதையெல்லாம் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.

கற்பு குறித்த இந்தியர்களின் புரிதல் என்னவென்று, தமிழ் வாசகர்களுக்கு நான் கூறத் தேவையில்லை. ஆனால், பெண்களின் கற்பு பற்றிய விதிகள் யாவும், பண்டைய கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டு வந்தன என்பது வியப்புக்குரியது அல்லவா?  "கற்பு நெறியானது ஆரியர்களால் புகுத்தப் பட்டது," என்று திராவிட அரசியல் சார்ந்த அறிஞர்கள் கூறி வருகின்றனர். அப்படியானால், இந்தியாவுக்குள் நுளைந்த ஆரியர்களும், கிரேக்கர்களும் ஒரே மாதிரியான இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்ட விடயம் தான். இன்றைய ஈரான் முதல் பாகிஸ்தான் வரையிலான பிரதேசங்களில் "சீத்தியர்கள்" என்ற ஈரானிய மொழி ஒன்றை பேசும் இனம் வாழ்ந்ததாக, கிரேக்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"இந்து பண்பாடு" என்று கருதப்படும், இறந்த கணவனின் சிதையில் மனைவி உடன்கட்டை ஏறுவது சீத்தியரின் (Scythian)  கலாச்சாரம் ஆகும். வட இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் சீத்திய இனத்தவர்களாக இருக்கலாம்.  வட இந்திய ஆரியர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியவர்கள் என்று கருத முடியாது. அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்த போதிலும், இந்தியாவை வெல்ல முடியாமல் திரும்பிச் சென்றான் என்று நமது சரித்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். கிரேக்க தளபதி, பிற்காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்தான். அந்த ராஜ்ஜியம் ஒரு காலத்தில் இந்தியாவின் வட-மேற்குப் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதைப் பற்றி எந்த சரித்திர நூலும் தெரிவிப்பதில்லை. ஏனிந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப் படுகின்றது?

இன்று உலகம் முழுவதும், ஐரோப்பிய மையவாத கருத்துக்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பண்டைய கிரேக்க வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே தெரிவு செய்து படிக்கிறார்கள். அவற்றை எமக்கும் படிப்பிக்கிறார்கள். அதிலிருந்து தான் இன்றைய ஆதிக்க அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. 

"உலகிற்கு நாகரீகத்தை போதிப்பது, நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த வெள்ளை இன மனிதனின் கடமை" என்று ஐரோப்பிய மையவாதிகள் நம்புகிறார்கள். இந்த காலனிய கால சிந்தனை இன்றைக்கும் கோலோச்சுகின்றது. 2001 ம் ஆண்டு, "பெண்களை கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டி தாலிபானின் பிடியில் இருந்து, ஆப்கான் பெண்களை விடுதலை செய்வதற்காக படையெடுத்ததாக," அமெரிக்கா ஒரு காரணத்தை கூறியது.  ஆனால், மறந்து விடாதீர்கள். 19 ம் நூற்றாண்டில், இதே காரணத்தை கூறித் தான் பிரித்தானியா இந்தியா மீது படையெடுத்தது! "பெண்களை உடன்கட்டை ஏற வைத்து கொடுமைப் படுத்தும், காட்டுமிராண்டி இந்துக்களிடமிருந்து இந்தியப் பெண்களை விடுதலை செய்வதற்காக..." என்று ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டன் இந்தியாவை காலனிப் படுத்தியது. 

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, கிரேக்கத்தில் இருந்து தான் உலகிற் சிறந்த நாகரீகத்தை ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். அதன் அர்த்தம், அன்று கிரேக்கத்தை தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ஆகவே அவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயகத்தை கண்டுபிடித்த ஏதென்ஸ் நாட்டு நாகரீகம் எப்படி இருந்தது? ஏதென்ஸ் நாட்டவரின் ஜனநாயகம் ஆண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம். கிரேக்க பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மன்றத்திற்கு சென்று அரசியல் விவாதம் செய்யவும், கருத்துரைக்கவும் தடை இருந்தது.  பெண்கள் மட்டுமல்ல, அடிமைகளும் கிரேக்க ஜனநாயகத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு, பெற்றோர்கள் சீதனம் கொடுப்பது,  இந்தியர்களின் பாரம்பரியம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும், சீதனம் கொடுக்கும் மரபு பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து மணம் முடித்து வைப்பார்கள். Medea என்ற கிரேக்க நாடகத்தில் பின்வரும் வசனம் ஒன்று வருகின்றது. "ஒரு ஆணை வாங்குவதற்கு மலையளவு பணம் தேவை. அப்படிக் கொடுத்த பின்னர், அந்த ஆண்  எமது உடலுக்கு உரிமை கொண்டாடுவது இன்னும் மோசமானது."

ஒரு சராசரி கிரேக்கப் பெண், 14 வயதிலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில், 13-14 வயது சிறுமிகள், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டத்தை, செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். பண்டைய கிரேக்கத்திலும், 14 வயது பருவ மங்கை,  30 வயதுக்கு மேற்பட்ட ஆடவனை திருமணம் செய்வது சட்டப்படி அனுமதிக்கப் பட்டது. திருமணம் முடிக்கும் நேரத்தில், அந்தப் பெண் கன்னியாக இருக்க வேண்டும். மணப்பெண் கன்னித் தன்மை இழந்துள்ளமை கணவனுக்கு தெரிய வந்தால், அவளை அடிமையாக விற்கலாம்.

"பெண்கள் படிக்கக் கூடாது" என்று, ஆப்கானிஸ்தானில் சட்டம் போட்ட தாலிபான்கள், பெண்களின் பாடசாலைகளையும் மூடினார்கள். எவராவது காரணம் கேட்டால், "அது தான் இஸ்லாமிய ஷரியா சட்டம்" என்று நியாயம் கற்பித்தார்கள். படிப்பறிவற்ற ஆப்கான் பாமர மக்களும், மெத்தப் படித்த சர்வதேச சமூகமும், அதனை உண்மை என்று நம்பியது. உண்மையில் அதுவும், இஸ்லாத்துக்கு முந்திய கிரேக்க நாகரீகம் என்று அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்டைய ஏதென்ஸ் நாகரீகத்தில், ஆண் பிள்ளைகளை மட்டுமே கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெண்பிள்ளைகள் வீட்டில் இருக்க வேண்டும். 

படித்த மனைவியை எந்த ஆணும் விரும்பவில்லை. கிரேக்க நாடக ஆசிரியர் Menander  பின்வருமாறு எழுதுகின்றார்: "எவனொருவன் ஒரு பெண்ணுக்கு எழுதப் படிப்பிக்கிறானோ, அவன் ஒரு பாம்புக்கு நஞ்சைக் கொடுக்கிறான்." பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கும், குழந்தைகளை பெற்று பராமரிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்பதே, பண்டைய கிரேக்கர்களின் நிலைப்பாடு. பொதுவாக நல்ல தண்ணீர் கிணறுகள் வீட்டுக்கு வெளியே சிறிது தூரத்தில் இருந்ததால், பெண்களே தண்ணீர் அள்ளிவர வேண்டியிருந்தது. ஆனால் அவ்வாறு வெளியே போகுமிடத்தில், அந்நிய ஆண்கள் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால், பணக்கார வீட்டுப் பெண்கள், தமது அடிமைகளையே தண்ணீர் அள்ளி வருமாறு வெளியே அனுப்புவார்கள்.  

ஆண் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் சமையலறைக்குள், அல்லது படுக்கையறைக்குள் சென்று விட வேண்டும். விருந்தினர்களின் கண்ணில் படுமாறு வெளியே நடமாடக் கூடாது. இது ஏதோ சவூதி அரேபியா அல்லது ஆப்கானிஸ்தானில் மட்டுமே காணக்கூடிய பெண் அடக்குமுறை என்று நினைத்து விடாதீர்கள். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும் அது தான் நடைமுறை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் பல சைவத் தமிழர்கள் வீடுகளில், இது போன்ற நடைமுறை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.  எனது உறவினர்கள் சிலர் கூட அத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்கள். இன்றைய தலைமுறையில் அது பெருமளவு மாறியிருக்கலாம். 

பாலியல் சுதந்திரம், ஆண்கள் மட்டுமே அனுபவிக்கும் உரிமையாக இருந்தது. கிரேக்க ஆண்கள், வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் பெண் அடிமைகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வெளியே பாலியல் தொழிலாளிகளிடமும் சென்று வந்தனர்.  இந்தக் காரணங்களாலும்,   தேவையான அளவு பிள்ளைகளை பெற்ற பின்னரும், கிரேக்க ஆண்கள் தங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்வதை பெருமளவு குறைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது பற்றி ஒரு மனைவி யாரிடமும் முறையிட முடியாது. ஒரு மாணவி, மாதத்தில் மூன்று தடவை உடலுறவு கொள்ள உரிமையுடையவள் என்று கிரேக்க சட்டம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது.

கிரேக்க மனைவிமார், கணவனுடன் மட்டுமே உடல் உறவு வைத்து, தமது கற்பை பாதுகாக்க வேண்டும். கணவன் வெளியூர் சென்றிருந்தாலும், பல வருடங்களாக காணாமல்போனாலும், அல்லது மரணமடைந்தாலும், வேறொரு ஆடவனோடு உறவு வைக்கக் கூடாது. பெண்கள் விவாகரத்து பெறுவதை கிரேக்க சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஒரு தடவை, ஒரு பெண் விவாகரத்து கோரி  சட்ட மன்றத்திற்கு செல்லும் வழியில், இடைமறித்த கணவனால் பலவந்தமாக கடத்திச் செல்லப் பட்டதாகவும், தெருவில் நின்ற யாரும் தலையிடவில்லை என்றும்..." கிரேக்க இலக்கியம் ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. 

சரஸ்வதி என்ற பெண் கல்வித் தெய்வத்தை வழிபட்ட பண்டைய கால இந்து மதத்தில், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு கலைகளை பயிலும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை. அதே நேரம், மேட்டுக்குடியினரின் பாலியல் அடிமைகளான "தேவ தாசிகள்" என்ற பெண்கள் மட்டுமே, நடனம், இசை போன்ற கலைகளை கற்றிருந்தனர். அதே மாதிரியான "தேவ தாசிகள்" பண்டைய கிரேக்கத்திலும் இருந்தனர். அவர்களின் பெயர் "Hetaeren".  "கிரேக்க தேவதாசிகள்" மட்டுமே, பண்டைய கிரேக்கத்தில் ஓரளவு கல்வியறிவு பெற்ற பெண்கள், என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தாம் பெற்ற அறிவுக்கு விலையாக, உடலை விற்றுக் கொண்டனர்.  

கிரேக்க மேட்டுக்குடி பாலியல் தொழிலாளர்கள், தமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, நடனம், இசை போன்ற கலைகளை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் பலர் விபச்சார விடுதிக்கு வந்து செல்வதால், அங்கே அரசியல் விவாதங்களும் நடக்கும். இதனால் கிரேக்க தேவதாசிகள் சிலர் அரசியல் அறிவு கைவரப் பெற்றிருந்தனர். அஸ்பாசியா (Aspasia) என்ற பெண், மதி நுட்பம் மிக்கவர் என்றும், அரசியல் உரைகளை எழுதுமளவு அறிவாளி என்றும் புகழப் படுகின்றார். தத்துவ அறிஞர்களுடன் வாதிடும் அளவுக்கு புலமை பெற்றிருந்தார். Pericles என்ற அரசவை உறுப்பினரின் வைப்பாட்டியாக இருந்ததால், அவருக்கு அரசாங்க அலுவல்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அஸ்பாசியா தான்,  புராதன ஐரோப்பாவின் வரலாற்றில், பெண்கல்வியை ஊக்குவித்த, முதலாவது பெண் உரிமைப் போராளியாக இருக்க வேண்டும்.  

(இந்தக் கட்டுரை, Historia (2/2013) சஞ்சிகையில் பிரசுரமான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டது.)

******************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.மேலைத்தேய நாசகார நாகரீகம்
2.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்
3.முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்