Thursday, September 30, 2010

பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

"இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா" தொடர் - 3
(பிரேசில், பகுதி 1)

"நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" - Dom Hélder Pessoa Câmara (கத்தோலிக்க மேற்றிராணியார், பிரேசில்)

உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 km) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?

மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்... உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து "ஷாப்பிங்" செய்கிறார்கள்.

பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை "உலகத்தரம் வாய்ந்த சேரிகள்." புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை "பவேலா" (Favela ) என்றழைப்பார்கள்.

பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் - மாபியா சண்டையில் மடிகின்றனர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். "திருடுவது பாவம்" என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dom Hélder Câmara பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். "நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.

பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை "கொய்யாவா" (Goiaba ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான "மண்டியோக்" போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் "மைஞோக்கா" என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.

பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

"சரித்திரம் எமக்கு அவசியமில்லை", என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.

ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.

போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bandeirantes என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bandeirantes கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

Wednesday, September 29, 2010

ஈராக் போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் CNN

ஈராக்கில் அமெரிக்கப் படையினர் புரிந்த போர்க் குற்றங்களை, சுதந்திரமான செய்தி ஊடகமாக கருதப்படும் CNN மூடி மறைத்து வருகின்றது. CNN செய்தியாளர் Michael Ware ஈராக்கில் இருந்து அனுப்பிய வீடியோ ஒன்றை CNN வெளியிட மறுத்து வருகின்றது. அமெரிக்க இராணுவ வீரன் கொடூரமான முறையில் ஒரு அப்பாவி ஈராக் சிறுவனை கொலை செய்யும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை ஒளிபரப்ப மறுப்பதன் மூலம் CNN னும் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாகியுள்ளது. CNN செய்தியாளரின் முறைப்பாடுகளை வெளிக் கொணர்ந்த அவுஸ்திரேலிய தொலைக்காட்சி வீடியோ கீழே:



Multisource political news, world news, and entertainment news analysis by Newsy.com


கொழும்பு நகரில் கலையகம் பற்றிய கலந்துரையாடல்

பிரபல வலைப்பதிவரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல்பற்றியதும், அவரது வலைப்பதிவுகள் பற்றியதுமான கலந்துரையாடல்
2010 – செப்ரெம்பர்- 30, வியாழக்கிழமை
ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.

Social Science Studies Circle – An Open Discussion Platform
(சமூக விஞ்ஞான கல்வி வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம்(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.)

முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!

இடம் :
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15. காலி வீதி,
வெள்ளவத்தை

முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்


Ha-Joon Chang ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். முதலாளித்துவத்தை சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையோடு "23 things they don’t tell you about capitalism" என்ற நூலை எழுதியுள்ளார்.

2008 ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி, தாராள பொருளாதாரம் என்ற சாத்தியப் படாத ஒன்றின் மீதான நம்பிக்கையின் சரிவு என்கிறார். சுதந்திரமான திறந்த சந்தை ஒரு நாளும் சாத்தியமில்லை என்று வாதிடுகின்றார்.

  • யதார்த்தத்தில் திறந்த சந்தை என்பது ஒரு கனவு மட்டுமே.
  • சந்தை எவ்வளவு சுதந்திரமானது என்பது அரசியல் தலைமையின் முடிவில் தங்கியுள்ளது.
  • சந்தையை ஒழுங்குபடுத்துவது எமது அறம் சார்ந்தது. சந்தை எமது நெறிகளை மீறுவதை ஏற்றுக் கொள்வதில்லை.
  • குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை இன்று ஏற்றுக்கொள்வதில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், சிறுவர்கள் செய்யும் வேலையை 12 மணி நேரம் ஆக குறைத்ததையே திறந்த சந்தைக்கு ஆபத்தாக கருதினார்கள்.
  • ஏன் போதைவஸ்து, உடலுறுப்புகள், வாக்குச் சீட்டுகள் என்பனவற்றை விற்கக் கூடாது? அவற்றிற்கான திறந்த சந்தை சாத்தியமில்லையா? ஏன்?
  • அரசாங்கம் வங்கிகளை காப்பாற்றினால் திறந்த பொருளாதார சித்தாந்தவாதிகள் மகிழ்ச்சியடைய முடியுமா?
  • முரண்நகையாக முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும் கட்டுப்பாடுகளை வரையறை செய்வதிலேயே செலவிட்டுள்ளனர்.

நூலாசிரியர் எடுத்துரைக்கும்,
கவனிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் குறைபாடுகள் பின்வருமாறு:

  • நிறையப் பேருக்கு அவர்களது தகுதிக்கு மீறி நிறைய ஊதியம் கொடுக்கப்படுகின்றது.
  • ஏழை நாடுகளில் மக்கள் வறுமையில் வாழ்வதற்கு அவர்கள் பொறுப்பல்ல. பணக்காரர்களே பொறுப்பேற்க வேண்டும்.
  • இன்டர்நெட் உலகை மாற்றியதை விட சலவை இயந்திரம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • பல்கலைக்கழக பட்டங்கள் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவில்லை.

நூலை வாசிப்பதற்கு:’23 things they don’t tell you about capitalism’

Tuesday, September 28, 2010

ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?


சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், சோவியத் யூனியனில் லெனின், ஸ்டாலின் சிலைகளை தள்ளி விழுத்தும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்தன. தொலைக்காட்சி என்ற சக்தி வாய்ந்த ஊடகம் வளர்ச்சியடைந்த காலகட்டம். உலகம் முழுவதும் பரவலாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்து விட்டது. மேற்குலகில் கேபிள் தொடர்பு வீடுகளை இணைத்து விட்டிருந்தது.

கம்யூனிச வீழ்ச்சியின் அடையாளமாக சிலை உடைப்பு வைபவங்களை உலகம் முழுவதும் மக்கள் கண்டுகளித்தார்கள். ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி கச்சிதமாக மக்கள் திரளிடம் போய்ச் சேர்ந்தது. கம்யூனிச நாடுகளிலேயே மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிசத்தை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசி விட்டார்கள். நல்லது. உண்மையில் உலகில் நடப்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவிக்கின்றனவா? ஊடகங்கள் எமக்கு சொல்லாத சேதிகள் பல உள்ளன.

முன்னை நாள் கம்யூனிச நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை யாரும் மறுக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த காலத்தில் பலதரப்பட்ட அரசியல் அமைப்புகள் இரகசியமாக இயங்கி வந்தன. லிபரல்கள், சமூக ஜனநாயகவாதிகள், பாசிஸ்ட்கள், தேசியவாதிகள் இவ்வாறு பலதரப்பட்ட அரசியலை சேர்ந்தவர்கள் தமது காலம் வரும் வரை காத்திருந்தார்கள்.

கோர்பசேவ், யெல்சின் கும்பல் கம்யூனிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்தை தழுவிக் கொண்டனர். தொடர்ந்து அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் சுதந்திரம் வழங்கி ஆதரவை தேடிக் கொண்டனர். புதிதாக சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் லெனின், ஸ்டாலின் சிலைகளை நெட்டித் தள்ளினார்கள். அதுவும் மாஸ்கோ போன்ற சில முக்கிய நகரங்களில் மட்டுமே இடம்பெற்றது. இதைத் தான் "பெருந்திரள் மக்கள் சிலைகளை விழுத்தியதாக" ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

எதற்கும் நாம் இதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். ஈராக் போரை எதிர்த்து அமெரிக்காவிலேயே லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரச எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. அவர்கள் நியூயோர்க் நகரில் அமெரிக்க குடியரசை நிறுவிய ஜோர்ஜ் வாஷிங்டன் சிலையை உடைக்கிறார்கள் என்று வைப்போம். அப்போது இந்த ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்ளும்? அந்த செயலை மாபெரும் தேச விரோத செயலாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலை உடைத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவார்கள்.

கிட்டத்தட்ட அப்படியொரு சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றது. லண்டன் மாநகரில் ஈராக் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்த சமயம் சேர்ச்சில் சிலை மீது சிவப்பு சாயம் பூசப்பட்டது. உடனே அரசும், ஊடகங்களும் நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்ததைப் போல கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெல்ஜியத்திலும் இதே போல முன்னாள் மன்னர் போதுவாவின் சிலைக்கு சிவப்பு சாயம் பூசப்பட்ட பொழுதும், அது பொறுப்பற்ற விஷமிகளின் வேலையாக பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்சி. மேற்குலகில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மீது சாயம் பூசினாலே குற்றம். தப்பித் தவறி உடைத்து விட்டால், உடனே ஊடகங்கள் சாமியாடி இருக்கும். "சுதந்திர ஊடகம்", "நடுநிலை ஊடகம்" எல்லாம் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் வெறும் அலங்காரச் சொற்கள். உலகில் எந்த ஊடகமும் ஒரே தன்மை கொண்டதாக இல்லை.

சோவியத் யூனியனின் லெனின் சிலை உடைந்த பொழுது தொலைக்காட்சி கமெராக்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. அப்போதே நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதாக பலர் கற்பனைக் குதிரையை தட்டி விட்டார்கள். இன்று முன்னாள் சோவியத் யூனியனில் எங்குமே லெனின் சிலையை காண முடியாது என்று பலர் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். (ஊடகங்கள் அப்படி நம்ப வைத்தன.)

சோவியத் குடியரசுகளான ரஷ்யாவில் மட்டுமல்ல, பெலாரஸ், உக்ரைன், மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் இன்றைக்கும் லெனின் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அதுவும் பெரிய நகரங்களின், பிரதான வீதிகளில் காட்சியளிக்கின்றன. நான் சொல்வதை நம்பாதவர்கள் கீழ் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரே சென்று பார்க்கலாம்.

உக்ரைனில் கிரீமியா பகுதி, மொல்டேவியாவில் டிரான்ஸ் நிஸ்திரியா பகுதி, பெலாரஸ் குடியரசு, ரஷ்யாவில் சைபீரிய நகரமான நொறில்ஸ்க்.... இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த இடமான கோரியில் இருந்த ஸ்டாலின் சிலை, கடந்த வருடம் தான் அகற்றப்பட்டது. (தீவிர மேற்குலக சார்பு ஜனாதிபதி ஷாகாஷ்விலி தனது விசுவாசத்தைக் காட்ட வேண்டாமா?)

மேற்கத்திய ஊடகங்கள் எப்போதும் உண்மை சொல்கின்றன என்று நம்பும் பாமரர்கள் வாழும் உலகம் இது. அதனால் தான் மக்களை மூளைச் சலவை செய்வதும் அவர்களுக்கு இலகுவாக உள்ளது. பல ஊடகங்கள் எந்த வித சமூகப் பொறுப்புணர்வும் இன்றி செயற்படுகின்றன. அவர்கள் தமக்குக் கிடைக்கும் செய்தி உண்மையா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதில்லை. சில நேரம் வதந்திகளையும் உண்மை போல கூறுகின்றார்கள். அதற்கு பல உதாரணங்களை காட்டலாம்.

ஒரு முறை அமெரிக்காவில் பிளேர் என்ற இடத்தில் சில மாணவர்களைக் காணவில்லை என்ற செய்தி வந்தது. தொடர்ந்து அந்த இடத்தில் சூனியக்காரர்களின் நடமாட்டம், குழந்தைகளின் புதைகுழி போன்ற திகில் செய்திகளும் வந்தன. அதை எல்லாம் உண்மை என்றே பலரும் நம்பினார்கள். சில மாதங்களுக்கு பின்னர் தான் உண்மை வெளிவந்தது. "Blair Witch Project" என்ற ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள், தமது திரைப்படத்துக்கான விளம்பரத்திற்காக கட்டி விட்ட கதை அது.

ஒரு தடவை, நெதர்லாந்து பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு பரபரப்புச் செய்தி வெளியானது. அநேகமாக ஜெர்மன் ஊடகங்களில் இருந்து அந்த தகவல் வந்திருக்கலாம். முன்னை நாள் கிழக்கு பெர்லினில், பெர்லின் சுவருக்கு அருகில் இருந்த வீடொன்று இருபது வருடமாக ஆளரவம் இல்லாமல் திறந்து கிடந்ததாம். அங்கே வாழ்ந்த மக்கள் பெர்லின் மதில் உடைந்த செய்தி கேள்விப் பட்ட உடனேயே மேற்கு பெர்லினுக்கு ஓடியிருக்கலாமாம். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்கள் கூட மேசையில் அப்படியே இருந்தனவாம்.

கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இருபது வருடங்களுக்கு முன்னர் மிஞ்சிய உணவுப்பொருட்கள் அப்படியே கெடாமல் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது, என்று பத்திரிகைகள் நமது காதில் பூச் சுற்றுகின்றன. இருபது வருடங்கள் அந்த வீட்டின் வாடகை, மின்சார, தண்ணீர் பில்களை எவன் கட்டினான் என்று யாரும் கேட்கவில்லை. இப்படியான செய்திகள் உலகம் முழுவதும் வாழும் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு தடவை, "பிடல் காஸ்ட்ரோ, கம்யூனிசம் தோற்று விட்டதாக ஏற்றுக் கொண்டார்" என்ற செய்தி உலகம் முழுவதும் அடிபட்டது. கியூபா சென்று காஸ்ட்ரோவை பேட்டி கண்ட பத்திரிகையாளர் வெளியிட்ட ஒரு சிறு டிவிட்டர் தகவல் தான் அது. பின்னர் வெளியான காஸ்ட்ரோவின் முழுமையான நேர்காணலை வாசித்தவர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பார்கள். இருந்தாலும் யார் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்று கவலைப்பட்டார்கள்? 

இத்தனை காலம் அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது என்ற செய்தியைத் தான். அத்தகைய மகிழ்ச்சிகரமான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? மக்களுக்கு போதையேற்றுவது மட்டுமே ஊடகங்களின் பணியாகி விட்ட காலம். இருந்தாலும் அல்கஹோல் விகிதாசாரம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.