Showing posts with label வறுமை ஒழிப்பு. Show all posts
Showing posts with label வறுமை ஒழிப்பு. Show all posts

Friday, June 06, 2014

தனியுடைமையை முதலாளித்துவமே ஒழித்து விடும்


கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஓரிடத்தில் இவ்வாறு எழுதி இருந்தார். "கம்யூனிஸ்டுகளான நாங்கள் தனியுடைமையை ஒழிக்கப் போவதாக, எம் மீது குற்றஞ் சாட்டுகின்றீர்கள். அதை நாங்கள் செய்யத் தேவையில்லை. தனி உடமையை முதலாளித்துவமே ஒழித்துக் கட்டி விடும்." இன்றைய நெதர்லாந்து தினசரிப் பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, 150 வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.

உலகம் முழுவதும் நடப்பதைப் போல, நெதர்லாந்திலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. சமூகத்தில் சமத்துவமின்மையை அளவிடும் புள்ளிவிபரம் வெளியிடப் பட்டுள்ளது. அது இன்று முக்கியமான விவாதப் பொருளாகி உள்ளது.

சமத்துவமின்மை பற்றிய புள்ளிவிபரத்தில் இருந்து தெரிய வருவதாவது, "சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள செல்வந்தர்களான 10%, சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள், நாட்டில் உள்ள மொத்த தனியார் சொத்தில் 60% ஆகும்! அதி உச்சத்தில் உள்ள 2% பணக்காரர்கள் மட்டும், மூன்றில் ஒரு பங்கு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர்." 
சமூகத்தில் அடி மட்டத்தில் உள்ள 10% மக்களிடம் சொத்து எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் கடன் மட்டும் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும், தமிழர்களில் பலர், அடித்தட்டில் உள்ள 10% ற்குள் அடங்குகின்றனர். "சொந்தமாக" வீடு வாங்கி வைத்திருப்பதாக, "சொந்தமாக" கார் வாங்கி வைத்திருப்பதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானவை அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல. மாறாக, வங்கிகளுக்கு சொந்தமான கடன்கள்.

அரச கொள்கை வகுப்பதற்கான ஆலோசனை சபை (Wetenschappelijke Raad voor het Regeringsbeleid சுருக்கமாக: WRR)அந்த அறிக்கையை தயாரித்து இருந்தது. ஆமாம், அது ஒரு நெதர்லாந்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம் தான். அதனால் கூட இந்த கசப்பான உண்மைகளை மறைக்க முடியவில்லை: "பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள்  மென்மேலும் ஏழைகள் ஆகிறார்கள்."

நெதர்லாந்தில் எந்தளவுக்கு சமத்துவமின்மை நிலவுகின்றது என்பதை கண்டறிந்த ஆய்வின் முடிவுகளை இங்கே சுருக்கமாகத் தருகிறேன். சமூகத்தின் மேல் தட்டில் உள்ள பணக்கார 10% கும், கீழ்த்தட்டில் உள்ள வறுமையான 10% இடையிலான வேறுபாடு விரிவடைந்து கொண்டு செல்கின்றது. உதாரணத்திற்கு, சில புள்ளிவிபரங்கள்:
  • 1977 ம் ஆண்டு, அடித்தட்டில் வாழும் பத்து சதவீதத்தின் சராசரி வருடாந்த வருமானம் 10700 யூரோக்கள். 2011 ம் ஆண்டு, அந்தப் பிரிவினரின் வருமானம் 10300 யூரோக்கள். அதாவது 4% இழப்பு.
  • அதே வருட காலத்தில், மேல்தட்டு பணக்கார பத்து சதவீதத்தின் வருமானம் 112000 யூரோக்களில் இருந்து, 144000 யூரோக்களாக அதிகரித்துள்ளது. அதாவது 28% வருமான அதிகரிப்பு.


இந்த இடைவெளி எவ்வாறு அதிகரித்தது? ஆய்வாளர்களின் கருத்துப் படி, அண்மைக் கால தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். உயர்ந்த கல்வித் தகைமை கொண்டவர்கள், கணனிக்கு முன்னால் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அதே நேரம், அதே கணனிகள் தான் குறைந்தளவு கல்வித் தகைமை கொண்ட தொழிலாளர்களுக்கு பதிலாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அடித்தட்டு மக்களிடம் இருந்து வேலைகள் பறிக்கப் பட்டதால், அவர்கள் ஏழைகள் ஆகின்றனர். பறிமுதலான வேலைகள் காரணமாக மிச்சம் பிடிக்கப் படும் செலவுகள், இலாபமாக மாறி மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் பைகளை நிரப்புகின்றது. 

அதற்கு அடுத்த படியாக உலகமயமாக்கல். தொலைபேசி, இணையம் ஆகியவை தற்போது இலகுவாகவும், மலிவாகவும் கிடைப்பதால், பணக்காரர்களுக்கு தான் அதிக இலாபம். ஊதியம் குறைந்த நாடொன்றில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு, வருமான வரி குறைவாக உள்ள நாட்டில் அலுவலகம் அமைத்துக் கொண்டு, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடிகின்றது. குறைக்கப்படும் உற்பத்திச் செலவுகளில் இருந்து கிடைக்கும் நிகர இலாபம், பணக்காரர்களின் கஜானாவை நிரப்புகின்றது. இது போன்ற நடவடிக்கைகளால், நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளுக்கு நேரடியான பலன்களும், பங்குச் சந்தையில் முதலிடும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மறைமுகமான நன்மைகளும் கிடைக்கின்றன. 

மேல்தட்டு வர்க்கப் பெண்களும் நிர்வாகத் துறைகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அந்த வர்க்கத்தில் வருமானமீட்டுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும், குறைந்த வருமானம் ஈட்டும் ஏழைப் பெண் தொழிலாளியை விட, உத்தியோகம் பார்க்கும் பெண்கள் அதிகமாக சம்பாதிக்கின்றனர். பெண்களை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பிரிவினராக, சில பெண்ணியவாதிகளும் கருதுகின்றனர். இறுதியில், வர்க்கமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது என்பதை, இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகின்றது.

நடுத்தர வர்க்கத்தில் ஒரு கணிசமான தொகையினர், எந்த சொத்தையும் சேர்த்து வைப்பதில்லை. அதுவும், சமத்துவமின்மை அதிகரிக்க காரணமாக உள்ளது. ஏனென்றால், நெதர்லாந்தில் பல தசாப்தங்களாக நலன்புரி அரசு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. (சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்ற, மக்கள் நலன்களுக்கான முற்போக்கு பொருளாதார திட்டங்கள்.) அதனால், பலருக்கு எதிர்காலம் குறித்த அச்சம் இருக்கவில்லை. குறிப்பாக, கீழ் நடுத்தர வர்க்கம் சொத்து எதையும் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கவில்லை. (மறுபக்கத்தில், அவர்களும் அதிக கடன்களை வாங்கி வைத்துள்ளனர்.)

நலன்புரி அரசு சிறப்பாக இயங்கிய காரணத்தினால், நெதர்லாந்தில் சமத்துவமின்மை இடைவெளி குறைவு என்று பலர் நினைத்தார்கள். வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களும் அப்படி நினைத்துக் கொண்டார்கள். ஒரு கம்பனி நிர்வாகி எவ்வளவு அதிகமான சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? என்று பலரிடம் கேள்வி கேட்கப் பட்டது.

அதாவது, ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாளி, மாதம் ஒன்றுக்கு 1000 யூரோ சம்பளம் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே நிறுவனத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் நிர்வாகியின் சம்பளம் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்?

ஒரு நிர்வாகி, சாதாரண தொழிலாளியை விட பதினோரு மடங்கு அதிகமாக சம்பாதிப்பதாக பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில், ஐந்து மடங்கு அதிக சம்பளம் வாங்குவது நியாயமானது. ஆனால், உண்மை நிலவரம் என்ன தெரியுமா? ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாளிக்கு மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட, நிர்வாகியின் சம்பளம் பதினேழு மடங்கு அதிகமாக உள்ளது!

இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

WRR  சில ஆலோசனைகளை முன்வைக்கின்றது.
  • சொத்துக்களுக்கான வரி அதிகரிக்கப் பட வேண்டும். அதே நேரம், குறைந்தளவு ஊதியம் வாங்கும் வேலை செய்து சம்பாதிப்பவரின் வருமான வரி குறைக்கப் பட வேண்டும்.
  • அடி மட்டத்தில் வேலை செய்வோரின், அதி குறைந்த அடிப்படை சம்பளத்தின் அளவு கூட்டப் பட வேண்டும். தொழிலாளர்களும் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும் திட்டம் வரவேற்கப் பட வேண்டியது.
  • சந்தையில் விற்கும் பொருட்களில் ஒரு தர நிர்ணய லேபிள் ஒட்டி விடலாம். உதாரணத்திற்கு, கனடாவில் சந்தையில் விற்கப்படும் சில பொருட்களின் மேல் ஒரு லேபிள் ஓட்டப் பட்டிருக்கும். அந்தப் பொருள் உற்பத்தி செய்யப் பட்ட நிறுவனத்தில், குறைந்த பட்ச, அதிக பட்ச சம்பள வேறுபாடு 1:8 என்ற விகிதத்தில் இருக்கிறது என்று, அந்த லேபிள் குறிப்பிடுகின்றது. ஆகவே, பாவனையாளர்களும் அத்தகைய நிறுவனங்களை ஊக்கவிக்க முன்வருவார்கள்.


Monday, March 01, 2010

வறுமை ஒழிப்பு ஒரு வரலாற்றுக் கடமை

"ஒரு நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால், அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் பிரயோசனம் என்ன?" - நெல்சன் மண்டேலா

"உலகமயமாக்கல்" என்றால் என்ன? பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க, ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கூற்று என்பதை, நாம் நாள் தோறும் கண்கூடாக காண்கிறோம். 21 ம் நூற்றாண்டின் பொருளாதாரக் கொள்கையாக, உலகமயமாக்கல் சக்தி வாய்ந்த பணக்கார நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை சமூகத்தை பீடித்துள்ள ஏழ்மை என்ற நோயை தீர்க்கும் மருந்தாக பிரகடனப் படுத்தப் படுகின்றது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் முடுக்கி விடப் படுகின்றன. உலகில் இன்று உலகமயமாக்கல் வலைக்குள் விழாத நாடுகள் எதுவும் இல்லை.

உலகில் ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையிலான பிரிவினையானது, வடக்கு-தெற்கு பிரிவினையாக புரிந்து கொள்ளப்படுகின்றது. அனேகமாக எல்லா பணக்கார நாடுகளும் பூமியின் வட புலத்தில் அமைந்துள்ளதும், தென் புலத்தில் அமைந்துள்ள ஏழை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் கசப்பான உண்மை. அவர்கள் எப்படி "பணக்கார நாடுகள்" ஆனார்கள்? மற்றவர்கள் எப்படி "ஏழை நாடுகள்" ஆக்கப்பட்டார்கள்? ஏழை நாடுகளில் வாழும் மூன்றில் இரண்டு உலக சனத்தொகை அவசியம் அறிந்திருக்க வேண்டிய உண்மை அது.

ஆதிகாலத்து மனிதன் குகைகளில் வாழ்ந்த போது, அந்த சுற்றாடலில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தான். கால்நடைகள் பராமரிப்பை அறிந்து கொண்ட போது நாடோடி கலாச்சாரம் ஆரம்பமாகியது. குறிப்பிட்ட இடத்தில் இயற்கை வளம் அருகிய போது, அது கிடைக்கக் கூடிய வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆகவே செல்வம் இருக்கும் இடம் தேடி மக்கள் குடிபெயர்வது நவீன காலத்திற்கே உரிய தோற்றப்பாடு அல்ல. ஒரு தேசத்தின் உள்ளேயே, கிராம மக்கள் வாய்ப்பு தேடி நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். துரித காதியில் வளர்ச்சியடையும் நகரங்களும், புறக்கணிக்கப்படும் கிராமங்களும், சமூக இடைவெளியை விரிவு படுத்துகின்றன.

உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் திரளைப் போல, வசதியானவர்கள் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்களை, பணக்கார நாடுகள் எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்பதில்லை. தேவைப்படும் பொழுது பயன்படுத்தி விட்டு, அபரிதமாக தேங்கி விடும் தொழிலாளரை வெளியே தள்ளுகின்றன. மேலும் "ஏழைகளின் படையெடுப்பை" கண்டு அஞ்சி புதுப்புது சட்டங்களை போடுகின்றனர். யுத்த அகதிகளும் பொருளாதார அகதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் கோபன்ஹெகன் நகரில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு மகாநாடு, குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமையை ஒழிப்பதில் பணக்கார நாடுகளின் கடமை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் வறிய நாடுகள் மீது சுமத்தப்பட்ட கடன்சுமை குறையவில்லை. பணக்கார நாடுகள், வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முடுக்கி விடுகின்றன. "மூன்றாம் உலக நாடுகளுக்கான சமூக நலன்புரி திட்டம்" என்ற பதாகையின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி, தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் மேலைத்தேய முகாமையாளரின் சம்பளத்திற்கே போதாது. எது எப்படியிருப்பினும், பணக்கார நாடுகள் வறுமை ஒழிப்பில் தமது பங்கை மறுக்கவில்லை.

பணக்கார நாடுகள் தமது நாடுகளுக்குள் புக முனையும் ஏழை அகதிகளை, குடியேறிகளை தடுக்க முயல்கின்றன. மறு பக்கம் ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்கின்றன. ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் யாவும், அவற்றை தம்மில் தங்கியிருக்க வைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டினுள் குடியேற விரும்புபவர்களை "பொருளாதார அகதிகள்" என குறிப்பிடுகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மேற்கு ஐரோப்பியர்கள் பொருளாதார அகதிகளாக அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு படையெடுத்தார்கள். தாயகத்தில் நிலவிய வறுமை அவர்களை புதிய உலகம் நோக்கி குடிபெயர தூண்டியது. இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வறுமை, இன்றைய அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலையை ஒத்தது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் பத்து வீதத்திற்கும் குறைவானோரே செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமைக்குள் உழன்றனர். ஐரோப்பிய வறிய மக்களின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல புரட்சிகளுக்கு வழி சமைத்தது. மேலும் பல எதிர்கால புரட்சிகளை தடுக்கும் நோக்கில், "நலன்புரி அரசு" உருவாக்கப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.

பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சிறு தீவுகள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளின் காலடி பட்ட பின்னர் "நாகரீகமடைந்தன." தீவுவாசிகள் ஐரோப்பியரின் நவீன சாதனங்களை கண்டு வியப்புற்றனர். ஐரோப்பியரின் கடவுள் அவர்களுக்கு கப்பல்களையும், துப்பாக்கிகளையும், நவீன இயந்திரங்களையும் கொடுத்ததாக கருதினர். தாமும் ஐரோப்பியரின் மதத்தை தழுவினால் இவற்றைப் பெறலாம் எனக் கருதினர். ஆனால் ஆண்டுகள் பலவாகியும், "ஐரோப்பியக் கடவுள்" தமக்கு நவீன கருவிகளை கொடுக்காததையிட்டு விசனமுற்றனர். தற்போது இந்த மக்கள் கிறிஸ்தவ மத உட்பிரிவை உருவாக்கி ஐரோப்பிய எதிர்ப்பாளராக மாறியுள்ளனர்.

இன்று மூன்றாம் உலக நாட்டு மக்களின் மனநிலை மேற்குறிப்பிட்ட பசுபிக் தீவுவாசிகளின் மனநிலைக்கு ஒப்பானது. தன் பிள்ளை ஆங்கிலம் கற்றால் போதும், ஆங்கிலேயரைப் போல பணக்காரர் ஆகலாம் என பல பெற்றோர் நினைக்கின்றனர். சில நேரங்களில் அவர்களது கனவுகள் நிஜமாகின்றன. ஆனால் அதற்கு காரணம் ஐரோப்பியமயமாகிய (அல்லது ஆங்கிலமயமாகிய) வாழ்க்கைத் தரமல்ல. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மேன்நிலையில் உள்ளது. இந்த நாட்களில் தகமை சார்ந்த தொழிலாளரின் பற்றாக்குறையை, மூன்றாம் உலகில் இருந்து வரும் பட்டதாரிகளை கொண்டு நிரப்புகின்றனர்.

19 ம் நூற்றாண்டில் காலனிகளை ஐரோப்பியமயப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கில, மொழிகளும், கலாச்சாரங்களும் பரப்பப்பட்டன. அங்கே ஏற்கனவே இருந்த பூர்வீக கலாச்சாரங்கள் நசுக்கப்பட்டன, அல்லது புறக்கணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தை பரப்பவும் உதவின. கல்விக்கூடங்கள் ஐரோப்பிய கல்வி முறையை இறக்குமதி செய்தன. இவ்வாறே காலனிகளில் வாழ்ந்த மக்களின் மூளைக்குள் ஐரோப்பிய கலாச்சாரம் புகுத்தப்பட்டது. ஐரோப்பியமயப்பட்ட புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. அவர்களின் சேவைக்காக காலனிய அரசு அதிகபட்ச சம்பளத்தை வெகுமதியாக வழங்கியது. அதாவது, காலனியில் சுரண்டிய பணத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

ஐரோப்பிய காலனிகள் யாவும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை தமது காலனிகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளில் மக்களை அடிமைகளாக, அல்லது குறைந்த கூலிக்கு அமர்த்தி திருடப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயத்த உடைகள் பின்னர் அதே மக்களுக்கு விற்கப்பட்டன. சுதந்திரமடைந்த முன்னாள் காலனிகள், தொழிலகங்களை நிறுவி முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அப்போதெல்லாம் (ஐரோப்பாவை வந்து சேரும் போது) "இறக்குமதி தீர்வை" விதிக்கப்பட்டது. அந்த வரியை செலுத்திய பின்னர் விற்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் மூன்றாமுலக நாடுகளின் பாவனைப் பொருட்கள் பல ஐரோப்பிய நிறுவனங்களாலேயே சந்தைப் படுத்தப்படுகின்றன. இலங்கையில் வாங்கும் தேயிலையை பிரித்தானியக் கம்பனிகள் வாங்கி, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கின்றன. பிரேசிலில் வாங்கும் காபியை சுவிஸ் கம்பனிகள், கவர்ச்சிகரமான போத்தல்களில் அடைத்து உலகம் முழுவதும் விற்கின்றன. அண்மைக் காலங்களில் இந்தியாவை சேர்ந்த பிரபல ஐ.டி. கம்பனிகள் சில ஐரோப்பாவில் முதலிட விரும்பின. ஆனால் அவை கூட்டு ஒப்பந்தத்திற்கு அணுகிய ஐரோப்பிய கம்பனிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஐரோப்பிய கம்பனிகளின் பொருளாதார பலம் மிக அதிகமாக இருந்ததால், இந்திய கம்பனிகளை விலை கொடுத்து வாங்க மட்டுமே விரும்பின.

பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் காபி, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம் ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப் படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலக பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள், உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன. இத்தகைய நியாயமற்ற வர்த்தகத்தை நிரந்தரமாக உறுதி செய்ய, GATT அமைப்பு உருவாக்கப்பட்டது.