Showing posts with label யூகோஸ்லேவியா. Show all posts
Showing posts with label யூகோஸ்லேவியா. Show all posts

Friday, August 09, 2019

ஸ்லோவேனியா பயணக் கதை


கிழக்கு ஐரோப்பாவில், தொண்ணூறுகளில் பனிப்போரின் முடிவில் பல புதிய தேசங்கள் உருவாகின. அவற்றில் ஸ்லோவேனியா முதன்மையானது. இன்று வரைக்கும் ஸ்லோவேனியாவுக்கும், ஸ்லாவாக்கியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவோர் பலருண்டு. இந்தக் குழப்பம் பல ஐரோப்பியருக்கும் உண்டு. முன்னாள் செக்கொஸ்லாவிக்கியாவில் இருந்து பிரிந்து சென்றது ஸ்லாவாக்கியா. முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்து சென்றது ஸ்லோவேனியா. 


முன்பு யூகோஸ்லேவியா பல தேசிய இனக் குடியரசுகளின் சமஷ்டி நாடாக இருந்த காலத்தில், ஸ்லோவேனியா தான் எல்லாவற்றிலும் தனிநபர் வருமானம் கூடிய பணக்காரக் குடியரசாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்த ஏழைக் குடியரசுகளுக்கு ஸ்லோவேனியாவின் நிதி தான் உதவிக் கொண்டிருந்தது. இது குறித்த சர்ச்சை தான் யூகோஸ்லேவியா துண்டு துண்டாக உடைவதற்கான முதலாவது காரணம். 



எண்பதுகளுக்குப் பின்னர், குறிப்பாக முன்னாள் கம்யூனிச அதிபர் டிட்டோவின் மறைவுக்குப் பின், தங்களது வளங்களை பிற குடியரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பாத ஸ்லோவேனியா தேசியவாதிகளின் கை ஓங்கியது. அவர்கள் பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தனர். 1990 ம் ஆண்டளவில் (மேற்கு)ஜெர்மனியின் ஆதரவும் மறைமுகமாகக் கிடைத்து வந்தது. ஸ்லோவேனியா பொலிஸ் படை கிளர்ச்சி இராணுவமாக மாற்றப் பட்டது. யூகோஸ்லேவிய இராணுவத்துடனான போர் வெறும் பத்து நாட்கள் மட்டுமே நீடித்தது. பெருமளவு உயிரிழப்புகள், சொத்தழிவுகள் இல்லாமல் ஸ்லோவேனியா சுதந்திரமான குடியரசாக பிரிந்து சென்றது. 


இவ்வளவு விரைவாக ஸ்லோவேனியா தனி நாடானதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஸ்லோவேனிய கிளர்ச்சிப் படை யூகோஸ்லேவிய இராணுவத்தை சுற்றிவளைத்து விட்டது என்றும் அதனாலேயே பின்வாங்கிச் சென்றனர் என்றும், முன்னர் ஒரு தடவை ஸ்லோவேனியா நண்பர் சொல்லக் கேள்விப் பட்டேன். நான் ஸ்லோவேனியா சுற்றுப் பயணம் செய்த நேரம் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நேரில் கண்டேன். அதே நேரம் அது மட்டும் தான் ஒரேயொரு காரணம் என்று சொல்வதும் தவறு. செர்பிய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் போரை தொடர்ந்திருக்கலாம். ஆனால், வேறு முக்கியமான காரணங்களுக்காக பின்வாங்கியிருக்கிறார்கள்.

முதலாவதாக ஸ்லோவேனியாவின் பூகோள அமைவிடம் போரை நடத்துவதற்கு ஏற்ற இடம் அல்ல. அது மேற்கத்திய, நேட்டோ நாடுகளான ஆஸ்திரியா, இத்தாலியுடன் எல்லைகளை கொண்டுள்ளது. ஸ்லோவேனியாவின் உள்நாட்டுப் போரின் விளைவாக நேட்டோ இராணுவத் தலையீடு ஏற்படலாம் என்ற அச்சம் இருந்திருக்கலாம். ஸ்லோவேனியா தேசியவாதிகளுக்கும், ஜெர்மனிக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகளின் விளைவாக, ஜெர்மனியின் மறைமுகமான அழுத்தமும் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ, ஸ்லோவேனியா சுதந்திரமான குடியரசாக மாறியதுடன், பிற்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்ந்து விட்டது. அது செங்கண் கூட்டமைப்பிலும் அங்கம் வகிப்பதால், எல்லைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. செங்கண் விசா இருப்பவர்கள் அந்நாட்டுக்கும் சென்று வரலாம். தலைநகர் லியூப்லியானாவில் நான் தங்கியிருந்த விடுதியில் ஒரு சிலி நாட்டு இளம் பெண்ணை சந்தித்தேன். அவர் ஏற்கனவே பன்னிரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து விட்டு வந்ததாக கூறினார். உண்மையில் சுற்றுலாப் பிரியர்களுக்கு ஒரே செங்கண் விசா ஒரு வரப்பிரசாதம் தான். 

ஸ்லோவேனியாவின் தலைநகரம் லியூப்லியானா ஏறக்குறைய நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கவனிக்கவும், Ljubljana என்ற பெயரில் உள்ள "J" என்ற எழுத்து "யே" என்று உச்சரிக்கப் பட வேண்டும். ஆகவே, லிஜூப்லிஜானா அல்ல லியூப்லியானா. மத்திய காலத்தில் அந்த நகரம் ஜெர்மன் மொழியில் லைபாக் (Laibach) என்ற பெயரில் அழைக்கப் பட்டது. பல நூறாண்டுகளாக, இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், ஆஸ்திரிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள ஸ்லோவேனியா நாட்டில் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே ஸ்லாவிய மொழி பேசும் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.

ஸ்லோவேனியா ஒரு ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. அதாவது செர்பிய, குரோவாசிய மொழிகளுக்கும் நெருக்கமானது. இவற்றிற்கு இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது. தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை விடக் குறைவு எனலாம். ஸ்லோவேனியா மொழியை எழுதுவதற்கு லத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே, இடங்களின் பெயர்களை இலகுவாக வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. விசேட உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களும் மிகக் குறைவு எனலாம்.

அந்நாட்டில் எங்கு பயணம் செய்வதென்றாலும் தலைநகர் லியூப்லியானா வந்து செல்ல வேண்டும். லியூப்லியான மத்திய ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் அனைத்துப் இடங்களுக்கும் ரயில், பஸ் சேவைகள் இருக்கின்றன. மத்திய பஸ் நிலையமும் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. தலைநகரமாக இருந்தாலும், லியூப்லியானா ஒரு பெரிய நகரம் அல்ல. ஸ்லோவேனியாவின் சனத்தொகையும் மிகக் குறைவு. வெறும் இரண்டு மில்லியன் மட்டுமே.

நான் லியூப்லியானா போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஆறு மணி இருக்கும். ஜெர்மனியில் இருந்து இரவு நேர ரயிலில் பிரயாணம் செய்து வந்த களைப்பு வேறு வாட்டியது. மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த கழிவறைக்கு சென்று, முகம் கழுவி, காலைக்கடன்களை முடித்து விட்டு பயணத்திற்கு தயாரானேன். ஸ்லோவேனியா சுற்றுப் பயணத்தின் போது நான் அவதானித்த விடயம், எங்கு பார்த்தாலும் பொதுக் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

ஸ்லோவேனியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பொஸ்டோன்யா குகைகளை பார்க்காமல் திரும்புவதில்லை. லியூப்லியானாவில் இருந்து தென் மேற்காக மலைப் பிரதேசத்தில் உள்ளது. ஒன்றரை மணிநேர பஸ் பயணத்திற்கான டிக்கட் ஒன்பது யூரோ மட்டுமே. ஸ்லோவேனியாவும் யூரோ நாணயம் தான் பயன்படுத்துகிறது. விலைகள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய தரத்தில் இருந்தாலும், ஒப்பீட்டளவில் போக்குவரத்து செலவு குறைவு தான்.

நிலத்தின் கீழே ஓர் அற்புத உலகம் என அழைக்கப்படும் பொஸ்டோன்யா குகை இருபது கிலோ மீட்டர் சுரங்கப் பாதையை கொண்டது. அதில் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காண்பிக்கிறார்கள். நிலத்தின் கீழே குறிப்பிட்ட தூரம் ஒரு சிறிய ரயில் வண்டியில் கொண்டு செல்கிறார்கள். பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரமளவில் நடக்க விடுகிறார்கள். வெளியே கோடை கால வெயில் முப்பது பாகை செல்சியசில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆனால் குகைக்குள்ளே பத்து பாகை செல்சியஸ் குளிராக இருந்தது.

பொஸ்டோன்யா சுரங்கத்தின் உள்ளே சுண்ணாம்புப் பாறைகள் விசித்திரமான கோலங்களில் பார்ப்பதற்கு அழகாக உள்ளன. மாயாஜால படங்களில் காட்டப் படுவதைப் போன்று வேறொரு உலகத்தினுள் வந்து விட்டதைப் போன்ற பிரமையை தோற்றுவிக்கிறது. மின் விளக்குகள் மட்டும் இல்லையென்றால் குகைக்குள் கும்மிருட்டாக இருக்கும். எதுவும் தெரியாது. அங்கு இருட்டுக்குள்ளே வாழும் உயிரினங்கள் உள்ளனவாம். தேள்கள் கூட இருப்பதாக எமது வழிகாட்டி சொன்னார். உடும்பு போன்ற தனித்துவமான உயிரினம் ஒன்று அங்கே கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப் படும் பொருட்களில் எல்லாம் அந்த உயிரினத்தின் படம் பொறிக்கப் பட்டுள்ளது. 

பொஸ்டோன்யா சுரங்கப் பாதை இரண்டு உலகப்போர்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மன் படையினர் ரஷ்ய போர்க் கைதிகளை கொண்டு கட்டுவித்த பாலம் இன்னமும் உள்ளது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் டிட்டோவின் கம்யூனிச கெரில்லாக்கள் பொஸ்டோன்யா சுரங்கத்தை தமது மறைவிடமாக பயன்படுத்தி வந்தனர். அங்கிருந்து கொண்டு நாஸி ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். பொஸ்டோன்யா சுரங்கத்தை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அது பிள்ளைகளுக்கும் பிடித்த இடமாக இருக்கிறது. இருப்பினும், நுழைவுச் சீட்டு விலை அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அடுத்த நாள் பிளேட் (Bled) ஏரியை பார்வையிடச் சென்றேன். அது லியூப்லியானா நகரில் இருந்து வட மேற்காக ஆஸ்திரிய எல்லையோரம் அமைந்துள்ளது. உலகில் மிகவும் அழகான எரிகளில் அதுவும் ஒன்று. ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவு உள்ளது. டிக்கட் எடுத்தால் கானோ எனும் வள்ளத்தில் துடுப்பு வலித்து சென்று வரலாம். பிலேட் சோஷலிச யூகோஸ்லேவியாவின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் அதிபர் டிட்டோ வந்து தங்கிச் சென்ற ஏரிக்கரை மாளிகை இன்று ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப் பட்டுள்ளது. ஒரு நாள் தங்குவதற்கான செலவு 850 யூரோ. அடேங்கப்பா! 


மேற்கொண்டு பயணம் செல்வதற்கு முன்னர் லியூப்லியானா நகரை சுற்றிப் பார்க்க விரும்பினேன். பழைய நகரம் மிகவும் அழகானது. மத்திய காலத்து கட்டிடங்கள் இன்னமும் உருக் குலையாமல் பேணிப் பாதுக்காக்கப் பட்டு வருகின்றன. பழைய நகர மத்தியில் ஒரு குன்றும், அதன் மேலே ஒரு கோட்டையும் உள்ளது. மலையேறும் குட்டி ரயிலில் அங்கு சென்று வரலாம். அந்த ரயிலில் இருந்த படியே கீழே தெரியும் லியூப்லியானா நகரத்தை முழுமையாகக் கண்டு இரசிக்கலாம்.

ஸ்லோவேனியா சுற்றுப் பயணத்தில் கடைசியாக தெரிவு செய்த இடம் கோபர். அங்கு சென்றால் முற்றிலும் வித்தியாசமான இடத்தைக் காணலாம். ஸ்லோவேனியாவின் பெரும்பாலான பகுதிகள் அல்ப்ஸ் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. அதாவது, அல்ப்ஸ் மலை நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஆனால் கோபர் இத்தாலி மாதிரி இருக்கும். அதற்குக் காரணம் அந்த நகரம் மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலும் அயல் நாடுகளால் நிலத்தால் சூளப்பட்ட ஸ்லோவேனியா சுமார் ஐம்பது கிலோ மீட்டர் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. அந்தப் பகுதியை இஸ்திரியா என்றழைப்பார்கள். குரோவேசியாவின் முன்னூறு கிலோமீட்டர் கரையோரப் பகுதியும் அதற்குள் அடங்கும்.

கோபர் சென்ற நேரம் ஒரே நாளில் காலநிலை மாற்றத்தை உணரக் கூடியதாக இருந்தது. அதாவது லியூப்லியானாவை விட அங்கு வெப்பம் அதிகம். அதனால் பெருந்தெருவின் மத்தியில் ஈச்சை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். வெப்ப மண்டலத்தை சேர்ந்த, மத்தியதரைக் கடலோரம் உள்ள தெற்கு ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே ஈச்சை மரம் வளரும். விடுமுறையில் கடற்கரையில் பொழுதுபோக்க விரும்புவோருக்கு கோபர் சிறந்த இடம்.

இத்தாலியில் வெனிஸ் நகர கட்டிடக் கலைக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதனை ஸ்லோவேனியாவின் கடலோரப் பகுதிகளில் காணலாம். பழைய கோபர் நகரம் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது. அங்குள்ள பழைய கட்டிடங்கள் யாவும் வெனிஸ் நகரை நினைவுபடுத்தும். அதற்குக் காரணம் அந்தப் பகுதி ஒரு காலத்தில் வெனிஸ் குடியரசின் கீழ் இருந்துள்ளது. இன்றைக்கும் அங்கே இத்தாலி மொழிபேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்கிறார்கள். தெருக்களின் பெயர்ப் பலகைகள் ஸ்லோவேனியா, இத்தாலி ஆகிய இரு மொழிகளிலும் எழுதப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களிலும் இரு மொழி அறிவிப்புகள் காணப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் வெனிஸ் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. ஸ்லோவேனியா மட்டுமல்ல, குரோவாசியாவினதும் கரையோரப் பிரதேசம் கூட ஒரு காலத்தில் வெனிஸ் நாட்டின் பகுதியாக இருந்தது. அங்கெல்லாம் இத்தாலி (வெனிஸ் மொழி?) பேசும் மக்களும் வாழ்ந்து வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. அதற்குக் காரணம் முசோலினியின் விஸ்தரிப்புவாத அரசியல். அதாவது, இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னரே யூகோஸ்லேவியாவின் இஸ்திரியா கடல் பிரதேசம் முழுவதும் இத்தாலிக்கு சொந்தம் என்று முசோலினியால் உரிமை கோரப் பட்டது. முசோலினியின் இத்தாலி- பாசிசப் படைகள் இஸ்திரியாவை ஆக்கிரமித்தன.

பாசிச ஆக்கிரமிப்புக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தேடித் தேடி சுட்டுக் கொல்லப் பட்டனர். இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்கடிக்கப் பட்டதும் டிட்டோவின் கம்யூனிச கெரில்லாக்கள் அந்த இடத்தை விடுதலை செய்தனர். அப்போது பாசிசக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப் பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். பெரும்பாலும் இத்தாலி மொழி பேசும் சிறுபான்மையினர் தான் பாசிச ஆதரவாளர்களாக இருந்தனர். ஆகையினால் யூகொஸ்லேவியரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் அஞ்சி, பெருமளவு இத்தாலியர்கள் தாமாகவே புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

இறுதியாக சில பயணக் குறிப்புகள். ஸ்லோவேனியா சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு. ஓரளவுக்காவது ஆங்கிலம் பேசுவோரை எல்லா இடங்களிலும் சந்திக்கலாம். போக்குவரத்து பிரயாணச் சீட்டு கொடுக்கும் இடங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தெருக்கள், பொது இடங்களில் ஆங்கிலம் பேசத் தெரிந்த நபரை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். வழிப்போக்கர்களில் யாராவது ஒருவர் உதவுவதற்கு முன்வருவார்கள். இருப்பினும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் வேலை செய்வோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது.

சுற்றுலா ஸ்தலங்களில், நகரங்களில் அனைத்து வகையான ரெஸ்ட்டாரண்ட்களும் உண்டு. ஆனால், உணவு விடுதிகளில் சாப்பிடுவது அதிக செலவாகும் விடயம். குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பினால் சூப்பர் மார்க்கெட்டுகளை நாடலாம். அங்கு பொருட்களின் விலை மேற்கைரோப்பிய விலைகளை விடக் குறைவு. சமைத்த உணவுப் பொருட்களும் விற்கிறார்கள். ஹாஸ்டலில் தங்கி இருந்தால், அங்கு உணவை கொண்டு சென்று சூடாக்கிச் சாப்பிடும் வசதி உள்ளது. விசேடமாக, ஸ்லோவேனிய தயிர் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கவும். அது நமது ஊர்களில் கிடைக்கும் தயிர் மாதிரி சுவையாக இருக்கும். மேற்கைரோப்பாவில் எங்குமே அந்தத் தயிர் கிடைக்காது.

நான் ஸ்லோவேனியா வரும் பொழுது வடக்கே ஆஸ்திரியாவில் இருந்து ரயிலில் வந்தேன். திரும்பிப் போகும் பொழுது தெற்கே உள்ள இத்தாலி நகரான திரீஸ்டே க்கு பேருந்து வண்டியில் சென்றேன். கோபர் நகரில் இருந்து திரீஸ்டே அரை மணிநேர பஸ் பயணம் தான். பனிப்போர் காலத்தில் மிகவும் கெடுபிடியான எல்லை அது. தற்போது அங்கே எல்லைக் காவலரண் எதுவும் கிடையாது.

திரீஸ்டே நகரத்தினுள் நுழைந்த நேரம் வேறொரு உலகத்திற்கு வந்தது போலிருந்தது. அதற்குக் காரணம் சன நெருக்கடி. இந்தளவு இட நெருக்கடியுடன் கட்டப்பட்ட குடியிருப்புகளை ஸ்லோவேனியாவில் எங்குமே காணவில்லை. இத்தாலியின் திரீஸ்டே நகருடன் ஒப்பிட்டால், அதிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோவேனியாவின் கோபர் நகரம் ஒரு கிராமம் மாதிரிக் காட்சியளித்தது. 

திரீஸ்டே ஒரு காலத்தில் யூகோஸ்லேவியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் எழுந்த அரசியல், இராஜதந்திர முரண்பாடுகளை தீர்ப்பதற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டு இத்தாலியிடம் ஒப்படைக்கப் பட்டது. அன்றிலிருந்து அந்தப் பிரதேசம் முழுவதும் இத்தாலிமயமாகி விட்டது. 


மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம். 

Wednesday, August 31, 2011

யூகோஸ்லேவியா படுகொலைகள், மேற்குலகின் பொம்மலாட்டம்

பொஸ்னியாவில் இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்த நேரம், சிரபெனிச்சா நகரில், 8000 முஸ்லிம் பொதுமக்களை சேர்பியப் படைகள் இனப்படுகொலை செய்தன. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் நடந்த போர்க்குற்றங்களுக்காக, சேர்பியப் படைகளின் தளபதி மிலாடிச் கைது செய்யப்பட்டவுடன், நீதி வென்றது என்பது போன்ற பிரமை தோற்றுவிக்கப் பட்டது.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள், மிலாடிச் கைதானதை, மாபெரும் சாதனையாக குறிப்பிட்டு எழுதியிருந்தன. எமது தமிழ் தேசிய வணிக ஊடகங்களும், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. மிலாடிச் கைது செய்யப்பட்டதைப் போல, தமிழ் இனப்படுகொலைகளுக்காக ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று நம்பிக்கை துளிர் விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. "இலங்கை அரசு கொஞ்ச காலம் மேற்கத்திய கனவான்களை ஏமாற்றினாலும், நீதிமான்கள் இறுதியில் உண்மையை உணர்ந்து நீதி வழங்குவார்கள்...." என்று தமிழர்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.

யூகோஸ்லேவிய போர்களின் போது மேற்குலகம் காட்டிய அக்கறை, அதன் அரசியல் பின்னணி, உள்நோக்கம் என்பன போன்ற கேள்விகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். அங்கே நடந்த இனப்படுகொலைகளில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு எவ்வளவு? எதிரி இனத்தை படுகொலை செய்வதற்கு கருவியாக பயன்படுத்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப் பட்டது. இந்தக் கருவிகளை ஏவிய குற்றவாளிகள் நீதிபதிகளாக வீற்றிருக்கின்றனர். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

மேற்கத்திய நாடுகளின் தலையீடானது, யூகோஸ்லேவியாவில் இருந்து புதிய குடியரசுகள் பிரிந்த பின்னர் ஆரம்பிக்கவில்லை. டிட்டோவின் சோஷலிச யூகோஸ்லேவியா, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்பை பேணி வந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், டிட்டோ, ஸ்டாலினுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யூகோஸ்லேவியா "COMINTERN" அமைப்பில் இருந்து விலகியது. இதனால் சோவியத் யூனியனின் கடன்கள் வருவது நின்று போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா IMF கடன்களை பெற்றுக் கொடுத்தது.

ஒரு கம்யூனிச கட்சி ஆண்ட நாட்டில், சோஷலிசப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐ.எம்.எப். உதவியது என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கும். ஆனால் வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகள் இட்டுச் சென்ற பொருளாதார சீர்கேடுகள் கண்ணுக்கு புலனாக பல தசாப்தங்கள் எடுத்தன. டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, மிலோசொவிச் பதவி ஏற்றதும், குறைபாடுகள் மெல்ல மெல்ல வெளித் தெரிய ஆரம்பித்தன. ஒவ்வொரு இனத்திலும், தீவிரவாதிகள் உருவெடுத்தனர். மொழி அடிப்படையிலான குருந்தேசியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. மிலோசொவிச் கூட, அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்த, ஐ.எம்.எப். உத்தரவுகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்ட ஒருவர் தான்.

தற்போது மீண்டும் பொஸ்னியா வருவோம். சிரபெனிச்ச இனப்படுகொலை பற்றிய பின்னணியை முதலில் ஆராய்வோம். போஸ்னியாவில் செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் இனத்தவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் எந்தவித இனக்குரோதங்களும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தனர். சிரபெனிச்சா நகரம் மத்திய காலத்தில் இருந்து முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டது.

டிட்டோ காலத்தில், சிரபெனிச்சா நகரத்திலும் தொழிற்புரட்சி நடந்தது. ஆலைகளில் வேலை செய்வதற்காக, பெருமளவு செர்பிய தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களுக்கென நவீன அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட புற நகரங்கள் உருவாகின. இதனால் சிரபெனிச்சா நகரம் விரிவடைந்தாலும், அதற்குள்ளே செர்பிய வட்டாரங்களும் உருவாகின.

யுத்தம் வெடித்தவுடன், செர்பிய பகுதிகள் யாவும், செர்பிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அதே போன்று, முஸ்லிம் பகுதிகள் முஸ்லிம் படைகளினால் கட்டுப்படுத்தப் பட்டன. இரண்டு இராணுவங்களும், மற்ற இனத்தவர் வாழ்ந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு பக்கமும், செர்பிய, முஸ்லிம் பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆனால், மேற்குலக ஊடகங்கள், நமக்கு அந்த உண்மைகளை கூறவில்லை. "முஸ்லிம் மக்களின் சிரபெனிச்சா நகரை சேர்பியப் படைகள் முற்றுகையிட்டு தாக்கிக் கொண்டிருக்கின்றன. சேர்பியரின் வெறித்தனமான தாக்குதல்களில் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்...." இவ்வாறு தான் செய்திகள் வாசிக்கப் பட்டன.

இலங்கையில், வன்னியில் நடந்த இறுதிப்போரில், ஐ.நா. அமைதிப் படை தலையிட்டிருந்தால், தமிழ் இனப்படுகொலை நடந்திருக்காது என்று, இன்றைக்கும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொஸ்னிய யுத்தத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, சிரபெனிச்சாவில் கூட இனப்படுகொலை நடக்கப் போகின்றது என்று ஐ.நா.வுக்கு முன்பே தெரிந்திருந்தது. இன்னும் சொன்னால், அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 

பொஸ்னிய யுத்தம் பற்றிய செய்திகள், மேற்கத்திய நாடுகளில் பெரும் உணர்வலைகளை உருவாக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து ஐ.நா. சமாதானப் படைகளை அனுப்பி வைத்தன. சிரபெனிச்சா நகரம் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த அமைதிப் படையினர் பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்றிருந்தனர். ஐ.நா. அமைதிப் படை வந்து விட்டதால், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் முஸ்லிம்களும் நம்பினார்கள். ஐ.நா. ஆணையின் பிரகாரம், முஸ்லிம் படைகள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தன. அதற்குப் பிறகு அந்தப் பிரளயம் அரங்கேறியது.

பொஸ்னிய போர் ஒரு இனப்படுகொலையுடன் முடிய வேண்டும் என்பது, மேற்குலகின் விருப்பம் போலும். தருணம் பார்த்து பாதுகாப்பு வலையங்கள் திறந்து விடப்பட்டன. சிரபெனிச்சா நகரை கைப்பற்றுவதற்காக, சேர்பியப் படைகள் தாக்குதல் தொடுத்த நேரம்.... ஐ.நா. அமைதிப்படை ஒன்றுமே செய்யவில்லை. ஐ.நா. டச்பட் படையணிக்கு பொறுப்பான Thomas Karremans சேர்பியப் படைகளிடம் சரணடைந்தார். 

தமது சொந்தப் படையினரைக் காப்பாற்றக் கூட, ஐ.நா. தயாராக இருக்கவில்லை. மேலிடத்து உத்தரவு காரணமாக, விமானத் தாக்குதல்கள் நடைபெறவில்லை. பிறகென்ன? மிலாடிச் தலைமையிலான சேர்பியப் படைகள், தமது விருப்பம் போல நடந்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. நிராயுதபாணிகளான எண்ணாயிரம் முஸ்லிம்களை, சேர்பியப் படைகள் கொன்று குவித்தன. "சிரபெனிச்சா மீது படையெடுக்கும் எண்ணம் மிலாடிச்சுக்கு இருக்கவில்லை." என்று கரமேன்ஸ் ஒரு விசாரணையில் தெரிவித்தார்.

போஸ்னியப் போரில், ஊடகங்கள் எப்போதும் செர்பியர்களை வெறித்தனமான வில்லன்களாகவும், முஸ்லிம்களை ஒடுக்கப் பட்டோராகவும் காட்டி வந்துள்ளன. சிரபெனிச்சா முஸ்லிம் படைகள், அயலில் இருந்த செர்பியக் கிராமங்களை எரித்து தரைமட்டமாக்கிய செய்திகள் எதுவும் சொல்லப்படவில்லை. இனக்குரோதங்கள் உச்சத்தில் இருந்த போரில், பழிவாங்கும் கொலைகள் நடக்கும் என்று "பரலோகத்தில் இருக்கும் தேவர்கள்" கணித்திருப்பார்கள்.

செர்பிய தலைவர்களான மிலாடிச், கராசிச், மிலோசெவிச்; குரோவாசிய தலைவர் துஜ்மான்; முஸ்லிம் தலைவர் இசபெகொவிச், இவர்கள் எல்லோரும் போர்க்குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களை பொம்மைகள் போல பின்னால் இருந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த கரங்கள் யாருடையவை? ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட வைக்க நடந்த சூழ்ச்சிகள் எத்தனை? Jaques Monsieur என்ற பெல்ஜிய ஆயுத வியாபாரி, துஜ்மானின் குரோவாசியப் படைகளுக்கும், இசபெகொவிச்சின் முஸ்லிம் படைகளுக்கும் ஆயுத விநியோகம் செய்துள்ளார்.

இதே காலகட்டத்தில் தான், கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. முன்னாள் சோஷலிச ஜெர்மனியை பொறுப்பேற்ற மேற்கு ஜெர்மனி, அந் நாட்டின் ஆயுதக் களஞ்சியங்களை பொறுப்பேற்றது. அங்கிருந்த ஆயுதங்கள் எல்லாம் வண்டி வண்டியாக குரோவேசியா நோக்கி அனுப்பப் பட்டன.

அந்த நாட்களில், யூகோஸ்லேவிய போரை நிறுத்த முயற்சித்த இராஜதந்திரிகளின் கைகள் கட்டப் பட்டிருந்தன. அன்றைய பெல்ஜிய வெளிவிவகார அமைச்சர் Mark Eyskens, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் Hans Dietrich Genscher இனால் அடக்கி வைக்கப் பட்டார். "ஜெர்மனி, யூகோஸ்லேவியாவில் போர் நடக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும்..." என்று விரக்தியுடன் தெரிவித்தார் Mark Eyskens .

யூகோஸ்லேவியப் போரில் நடந்த இன்னொரு இனப்படுகொலை, சர்வதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை. "கிராயினா", குரோவாசிய குடியரசில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம். குரோவாசிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளை, குரோவாசியப் படைகள் துஜ்மானின் ஆணையின் பேரில் இனச் சுத்திகரிப்பில் இறங்கின.

ஆயிரக்கணக்கான செர்பிய பொதுமக்களை கொன்று குவித்தனர். அங்கே ஒரு செர்பியரைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அடித்தார்கள். அசையும், அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்தார்கள். குரோவாசிய படைகளை நடத்திச் சென்ற Ante Gotovina என்ற தளபதி, பிற்காலத்தில் போர்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நெதர்லாந்தில், யூகோஸ்லேவியா போர்க்குற்ற நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட முக்கியமான குரோவாசியர், அவர் மட்டும் தான்.

Ante Gotovina, பிரான்சின் கூலிப்படையான வெளிநாட்டவர் படையணியை (French Foreign Legion) சேர்ந்த சிப்பாய். அவருடனான பிரெஞ்சு அரசின் தொடர்புகள் யாவும், புலனாய்வுப் பிரிவான DGSE மூலமாக நடைபெற்றன. ஆனால், அன்று குரோவாசியப் படைகளுக்கு தலைமை தாங்கிய இன்னொருவர், அமெரிக்கரான Peter Galbraith என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவர் தான் பிற்காலத்தில் குரோவாசியாவுக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகித்தார்.

இந்த அமெரிக்கர், போர்க்களத்தில் நேரடியாக நின்று கட்டளைகளை பிறப்பித்ததுடன், இனப்படுகொலையை மேற்பார்வை செய்துள்ளார். Peter Galbraith தின் சேவையை பாராட்டி, அவரது நண்பர், அன்றைய துணை ஜனாதிபதி Joe Biden ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக் குர்திஸ்தானில், அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்குமாறு, பீட்டர் பார்த்துக் கொண்டார்.

இங்கே கூறப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அடியாட்களுக்கு தண்டனை கொடுக்கப் படுவதை பார்த்து விட்டு, நீதி பிழைத்தது என்று திருப்திப் படலாம். ஆனால், எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. முதன்மைக் குற்றவாளிகளை நீதிபதி ஸ்தானத்தில் ஏற்றி வைத்து விட்டு, அடியாட்களை பிடித்து தண்டனை கொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

Friday, April 30, 2010

பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்


பத்து வருடங்களுக்கு முன் உலக மக்களனைவரது கவனத்தையும் ஈர்த்த நாடு பொஸ்னியா. மூன்றாம் உலக யுத்தம் ஆசியாவைக் கடித்து, ஆபிரிக்காவைக் கடித்து கடைசியாக ஐரோப்பியாவையே கடிக்க வந்ததை அறிவித்த காலம் அது. மூன்றாம் உலக நாடுகளை வெற்றிகரமாகப் பிரித்தாண்ட மேற்கு ஐரோப்பியர்கள் கடைசியில் அயல்நாடான பல்லின மக்களைக் கொண்ட யூகோஸ்லாவியாவையும் பிரித்தாள வருவார்கள் என யார் நினைத்திருப்பார்கள் ? ஆனால் அது நடந்துவிடடது.

காலஞ்சென்ற டிட்டோ காலத்தில் யூகோஸ்லாவிய சோசலிசக் குடியரசு பல்லின மக்கள் சமாதானமாக சகோதரர்களாக வாழ்வதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் தேசியவாதச் சக்திகளுக்கெல்லாம் இடமிருக்கவில்லை. அல்லது அடக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே சோவியத் யூனியனுடன் உறவுகளை முறித்துக்கொண்ட யூகோஸ்லாவியா தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளுடன் நடபுறவு பூண்டு கடனுதவிகளைப் பெற்று வந்தது. அதிகம் விளம்பரம் செய்யப்படாத ஒரு சோசலிச நாட்டுக்கான முதலாளித்துவ நாடுகளின் உதவிபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. டிட்டோவின் மரணத்தின் பின்பு, சோவியத் யூனியனும் வீழ்ச்சியடைய யூகோஸ்லாவியாவிற்கான மேற்குலக நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டது.

புதிய ஜனாதிபதி மிலோசவிச் தலைமையிலான யூகோஸ்லாவிய மத்திய அரசாங்கம் பலவீனமடைந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நவதேசியவாதிகள் தம்மை மீள்கட்டமைப்புச் செய்துகொண்டனர். ஸ்லோவேனியா, குரோவேசியா, பொஸ்னியா ஆகிய குடியரசுகள் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதில் பொஸ்னியா மிகவும் சிக்கலான பிரச்சினையை எதிர் நோக்கியது. சேர்பியர், பொஸ்னிய முஸ்லீம்கள், குரோவாசியர் ஆகிய மூன்று இனங்கள் (இனம் என்ற வரையறை சரியா?) அங்கே வாழ்கின்றனர். 

உண்மையில் இவர்கள் அனைவரும் ஒரே மொழி பேசும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பிரிப்பது மதம் மட்டும்தான். கிழக்கைரோப்பிய மரபைக்கொண்ட ஓர்த்தோடொக்ஸ் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் சேர்பியர்கள், கத்தோலிக்கரான குரோவாசியர்கள், துருக்கிய ஒட்டோமான் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களாக மாறிய சேர்பியர்கள் அல்லது பொஸ்னிய முஸ்லீம்கள். இவர்களனைவரும் பேசும் மொழி , சிறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும், சேர்போ-குரொவாசியா என்ற பொது மொழிதான்.

இருப்பினும், 1990 க்குப் பின்பு இம் மூன்று சமுகங்களிலும் தோன்றிய தேசியவாதச் சக்திகள் தனித்தன்மையை வலியுறுத்தின. பொஸ்னியா தனியரசாக அமையும்போது அங்கு பெரும்பான்மையாக வாழும் முஸலீம்களின் கைகளில் ஆடசியதிகாரமும், இராணுவமும் போய்விடும் என்ற அச்ச உணர்வு, அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த சேர்பியரையும், குரோவாசியரையும் ஆயுதக்குழுக்களாக மாற்றியது. தேசிய இராணுவம் பொஸ்னிய முஸ்லிம்கள் வசம் வந்தது. 

புதிதாகச் சுதந்திரமடைந்த குரோவேசியாவின் உதவியோடு பொஸ்னிய எல்லைக்குள் வாழ்ந்த குரோவேசியரின் ஆயுதபாணிக்குழுக்கள் உருவாகின. போர் நிச்சயமாகியது. யுத்தம் ஈவிரக்கமின்றி நடந்தது. மூன்று சமுகங்களின் ஆயுதக்குழுக்களும் இயன்ற அளவு மனித உரிமைகளை மீறின. சேர்பியப் படைகள் முஸ்லீம், குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், முஸ்லீம் படைகள் சேர்பிய குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், குரோவேசியப் படைகள் சேர்பிய முஸ்லீம் பொதுமக்களைக் கொன்றதுமென போர்க்குற்றங்கள் அனைவராலும் இழைக்கப்பட்டன.

சேர்பியக் கிறிஸ்தவர்கள் தாம் முஸ்லீம்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் புனிதக் கடமையைச் செய்வதாக நம்பினர். அப்படியே சொல்லியும் கொண்டனர். "கிறிஸ்தவ" மேற்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் யாருடைய பக்கம் நின்றார்கள் ? சிலர் புருவத்தை நெரிக்கலாம். ஆனால் அவர்கள் முஸ்லீம்களின் பக்கம் தானிருந்தார்கள். நேட்டோவின் விமானப்படைகள் சேர்பிய நிலைகள் மீது குண்டுகள் போட்டன. அமெரிக்கா முஸ்லீம் படைகளுக்கு ஆயுதம் வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், பின் லாடனின் அல்கைதா உறுப்பினர்களைப் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்ட நான்கு வருடப்போர் இறுதியில் அமெரிக்கத் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. பொஸ்னியா ஒரு தலைமையின் கீழ் இரண்டு குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டது. அதாவது, சமாதானமுறையிலான இனப்பிரிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. சேர்பியக் குடியரசில் சேர்பியர் மட்டும், பொஸ்னிய சமஸ்டிக் குடியரசில் முஸ்லீம்களும், குரோவாசியர்களும் மட்டும் என இனஅடிப்படையிலான பிரிவுகள் உருவாக்கப்பட்டன. சேர்பியர்கள் அங்கே, முஸ்லீம்கள் இங்கே எனத்தான் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

போர் முடிவுக்கு வந்தாலும், அந்நிய நாட்டுச் சமாதானப் படைகளின் கீழ் சமாதானம் கொண்டுவரப்பட்டாலும், நிரந்தர அரசாங்கம் அமைத்துவிடாலும் பொஸ்னியர்கள் இன்னமும் பதில் கிடைக்காத கேள்விகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள். அவற்றில் முக்கியமானவை சிரபிரெனிச்சா படுகொலைகள் சம்பந்தமானவை. அங்கே உண்மையில் என்ன நடந்தது ?

1995ம் ஆண்டு போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம். ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு பிரச்சினைக்குள் சிக்குப்பட்டுக் கொண்டது. சேர்பிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்ற என்று கூறி குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டன. 

அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையமான சிரபிரெனிச்சா ஐ.நா சமாதானப்படையின் ஓர் அங்கமாக இயங்கிய "டச்பட்" என்ற ஒல்லாந்து நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியது. மிகவும் பாதுகாப்பான பிரதேசம் என நினத்தவர்களுக்கு ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் காத்திருந்தன. ஐ.நா சமாதானப்படை வீரர்கள் சிலர் சேர்பியர்களால் பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோது, ஐ.நா சபை இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகள் என பணிந்து போகும் நிலைக்குள் தள்ளப்பட்டது. அந்தத தருணத்தில் சேர்பியப் படைத்தளபதியும் ஒல்லாந்து "டச்பட்" கொமாண்டரும் சந்தித்துப்பேசினர். என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

சில நாட்களுக்குப் பின்னர் சேர்பிய இராணுவம் சிரபிரெனிச்சா பாதுகாப்பு வலயம் நோக்கி முன்னேறியது. பலரும் அதிர்ச்சியடையும் அளவிற்கு பாதுகாப்பிற்கு நின்ற ஒல்லாந்துப் படையினர் பின் வாங்கினர். எவ்வித எதிர்ப்புமின்றி சிரபிரெனிச்சாவைக் கைப்பற்றிய சேர்பியப் படைகள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லீம்களை ஆண்,பெண் எனப் பிரித்து பெண்களையும் குழந்தைகளையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு, ஆண்களனைவரையும் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்திற்கும் அதிகம். இந்தப் படுகொலைகளை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா ஒல்லாந்துப் படையினரும் குற்றவாளிகள் என்பதைச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன நடந்தது ?

நீண்ட காலம் இழுத்த விசாரணைக் கமிசன் தனது தீர்ப்பில் ஒல்லாந்து சமாதானப் படையினரையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையையோ பெரிதாகக் குறைகூறவில்லை. சமாதானப்படை அனுப்பப்படும்போது சரியாக ஆராயப்படவில்லை. அவ்வாறு அனுப்பியது நெதர்லாந்தின் தவறு என அறிக்கை கூறியது. ஒல்லாந்து அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்று, தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாகப் பதவி விலகியது. இதனால் பல விடயங்கள் வெளிக்கொணரப் படாமலே மூடிமறைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்திறகுப் பின்னால் இருந்த பிற சக்திகள் எவை? இத்துயர நாடகம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் என்ன ?

அலியா இசபெகோவிச், சிறுவயதிலிருந்தே "இளம் முஸ்லீம்கள்" என்ற அமைப்பின் உறுப்பினர். முன்னாள் யூகோஸ்லாவியாவில் அவர் பிரசுரித்த ";இஸ்லாமிய அறிக்கை" நூலுக்காகச் சிறையிலிடப்பட்டவர். 1990 ம் ஆண்டு பொஸ்னியக் குடியரசுத் தேர்தலில், தனியே பொஸ்னிய முஸ்லீம்களைக் கொண்ட கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

பெரும்பான்மை (45 வீதம்) முஸ்லீம்களைக் கொண்ட பொஸ்னியாவை உலக இஸ்லாமிய நாடுகளின் கட்டமைப்பில் சேர்க்க விரும்பியவர். அலியா இசபெகோவிச் பின் லாடனைச் சந்தித்ததாக வதந்திகள் இன்றும் கூட வலம்வருகின்றன. முன் குறிப்பிட்டது போல, அல்கைதா உறுப்பினர்களும் பொஸ்னியாவில் போரிட்டார்கள். அவர்கள் இப்போது பொஸ்னியக் குடியுரிமை பெற்று , உள்நாட்டுப் பெண்களையும் மணந்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

இருப்பினும்.... இனிவரும் தகவல்கள் குழப்பத்தையூட்டுவன. அலியா இசபெகோவிச் இன்றுவரை மேற்குநாடுகளின் மனதுக்கினிய நண்பர். நம்பிக்கையான பொஸ்னிய அரசியல்வாதி என்றெல்லாம் புகழப்படுபவர். அவ்வளவு தூரம் மேற்கத்தைய நாடுகளின் திட்டங்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவும் மேற்கைரோப்பாவும் புனர்நிர்மாணத் திட்டங்களில் ஒரு பகுதியாக புதிய மசூதிகளைக் கட்டிக் கொடுக்கின்றன. போருக்குப் பின்னர் மதத்தை நாடுவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெரும்பாலான முஸ்லீம் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது.

பிற யூகோஸ்லாவியப் பிரச்சினைகளின் போது நடந்ததைப்போல மேற்குலக நாடுகள் பொஸ்னியப் பிரச்சினையிலும் சேர்பிய விரோத நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக சேர்பியர்கள் குமுறுகிறார்கள். (மேற்குலகக் கட்டுப்பாட்டில் உள்ள) சர்வதேசத் தொடர்பூடகங்கள் யாவும் சேர்பியர்களைக் கெட்டவர்களாகவும், முஸ்லீம்களை நல்லவர்களாகவும் சித்தரித்தன. ஆனால், திரைமறைவில் நடந்தவைகளோ வேறு விடயங்கள். அமெரிக்க ஐரோப்பிய அரசுகளில் கொள்கை வகுக்கும் அதிமேதாவிகளினால் ஓரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. யூகோஸ்லாவியாவிற்கான வெளிநாட்டுக் கடனுதவிகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இந்த நாடகம் தொடங்குகின்றது. இதன் முதலாம் கட்டம்: ஸ்லோவேனிய, குரோவேசிய யுத்தங்கள். இரண்டாம் கட்டம்: பொஸ்னிய யுத்தம்.

ஆனால், பொஸ்னியப் பிரச்சினை சிக்கலானது. ஐரோப்பாவில் பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட நாடான பொஸ்னியா இஸ்லாமிய அடிப்படைவாதப் பாதையில் போகவிருந்தது. இத்தகைய காரணங்களால் பொஸ்னியாவில் முஸ்லீம்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காக போர் நீண்ட காலம் தொடரவிடப்பட்டு, சிரபிரெனிச்சாப் படுகொலைகள் போன்ற இன அழிப்புக் கொலைகள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என ஊகங்களும் உண்டு. இதுதவிர, பெரும்பாலும் முஸ்லீம் அகதிகளுக்கு மட்டும் மேற்கு ஐரோப்பாவில் அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளையினத்தவரான , பெயரால் மட்டும் முஸ்லீமான, இவர்களின் பிள்ளைகள் காலப்போக்கில் மேற்கைரோப்பியராக உள்வாங்கப்பட்டு விடுவார்கள்.

இதேவேளை பொஸ்னிய முஸ்லீம்களின் தலைவர் அலியா இசபெகோவிச் கூட மேற்குலகச் சார்பாளர் தான். சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தள்ளிய, "நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்த, மோட்டார் ஷெல் தாக்குதற் சம்பவங்கள்," இவர் தலைமையிலான படைகளின் வேலை என்று ஐ.நா. வட்டாரங்களிலேயே நம்பப்படுகின்றது. (செய்திகள் இவ்வசம்பாவிதத்தை சேர்பியர்கள தலையில் சுமத்தியிருந்தன.) சமாதான ஒப்பந்தம் கொண்டுவர ஒத்துழைத்த யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசெவிச் அந்தக் காலங்களில் பலர் நினைப்பதற்கு மாறாக சேர்பியப் படைகளை ஆதரிக்கவில்லை. ஆனால், இவருக்கும் முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. நெறியாள்கை செய்தோரின் விருப்பப்படியேதான் நாடகமும் முடிந்தது.

சமாதானப்படை என்ற பேரில் அமெரிக்க மேற்கைரோப்பிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கிவிட, பொஸ்னியா மேற்குலகக் காலனியாகியது. சமாதானப் படையின் உயரதிகாரிகள் கடத்தல் தொழில், விபச்சார விடுதி நடத்துதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் கூட ஈடுபட்டமை அம்பலமாகியிருக்கிறதென்றால் அங்குள்ள நிலைமை எவ்வளவு மோசமானதென ஊகிக்கமுடியும். அப்படியானால் யூகோஸ்லாவியாவில் நிறைவேற்றப்பட்ட நாடக அரங்கேற்றத்தின் பின்ணணி என்ன? ரஷ்ய, மத்திய ஆசிய எண்ணையை ஐரோப்பாவிற்குக் கொண்டுவருதல், மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத்தளம் அமைத்தல் போன்றவையேயாகும். நாடகத்தின் இறுதிக்கட்டம்தான் கொசோவாவில் அரங்கேறியது.

Tuesday, April 27, 2010

கொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை

சுவிட்சர்லாந்தில் அரசியல் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த ஹாசிம் தாச்சிக்கு யூகோஸ்லாவியாவில் தனது பிரதேசத்தில் ஒரு விடுதலை இராணுவம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தபோது, இது வெகு விரைவில் சர்வதேசக் கவனத்தை ஈர்க்குமென அவர் எண்ணியிருக்கமாட்டார். பல்லின மக்கள் வாழ்ந்த யூக்கோஸ்லாவியா, எண்பதுகளின் இறுதியில் தனது சோசலிசக் கூட்டாளிகளை கிழக்கு ஐரோப்பாவில் இழந்ததால் வேறு வழியின்றி உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்த வேண்டிய நிலையுருவாகியது. இந்நிலை காரணமாக உள்நாட்டடில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள் பின்னர் ஒவ்வொரு இனமும் தமக்கென தேசம் கோரும் போர்களில் ஈடுபட வழி சமைத்தன.

ஸ்லோவனியா, க்றோவேசியா, பொஸ்னியா எனத் தனி அலகுகளாக இந்நாடு உடைந்ததையடுத்து, எஞ்சியிருந்த சேர்பியாவும் மொண்டி நீக்ரோவும் குட்டி யூக்கோஸ்லாவியாவாகச் சுருங்கிப் போயின. தொடர்ந்து இடம்பெற்ற யுத்தங்களுக்கு யூகோஸ்லாவியாவில் பெரும்பான்மையினத்தை கொண்டிருக்கும் சேர்பியாவே பொறுப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டு, இந்நாட்டின் மீது பொருளாதார, ஆயுத விற்பனைத்தடை கொண்டு வரப்பட்டது. இதனால் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவே, யூகோஸ்லாவிய அரசு தற்பாதுகாப்புப் பொருளாதாரத்தில் இறங்கியது. சேர்பியாவில் அல்பானிய சிறுபான்மையினத்தவர் வாழ்ந்த கொசோவோ மாகாணம் கவனிக்கப்படாது கைவிடப்பட்டது. இதன்காரணமாக கொசோவோ அல்பேனிய இனத்தவர் மோசமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதாரப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது.

தேர்தல்-ஜனநாயகம் மூலம் ஆட்சிக்கு வந்த சோஷலிசக் கட்சியின் ஜனாதிபதி மிலோசெவிச் பெரும்பான்மைச் சேர்பிய வாக்காளர்களைக் குறிவைத்து அரசியல் நடாத்துவதில் ஈடுபட்டார். அவர்களைத் திருப்திப்படுத்த கொசேவாவின் சுய நிர்ணய உரிமை பறிக்கப்பட்டது. இவ்வாரம்பத் தவறினையடுத்து, கொசோவோ அல்பானியர்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்தது. மிதவாதக் கட்சி சமாதான வழிப்போராட்ங்களை ஆதரித்த போதிலும், இளைஞர்கள் தீவிர ஆயுதப்போராட்டங்களை முன்னெடுத்தனர். சேர்பிய அரசுக்கு ஊழியம் செய்தவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர், சுட்டுக்கொல்லப்பட்டர். சேர்பியப் பொலிசும் வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை. தீவிரவாத இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். கைதுகளும் கொலைகளும் தொடர்ந்த வண்ணமாய் இருந்தன.

இந்நிலையில்தான், கொசோவோவில் ஹாசிம் தாச்சியின் வரவு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. ஹாசிம் தாச்சியின் தலைமையின் கீழ் திரண்ட இளைஞர்கள் தமது இயக்கத்திற்கு "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA) எனப் பெயரிட்டு, சேர்பியப் பொலிசாரோடு மோதினர். இவர்களைப் பயங்கரவாதிகளென அறிவித்த யூகோஸ்லாவியா தனது பலத்தைக் காட்டி அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. ஆயினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு கொசோவோவிற்குச் சில அரசியலுரிமைகளை வழங்க முன்வந்தது. நடாத்தப்பட்ட தேர்தலில் மிதவாதக் கட்சியே ஆட்சிக்கு வந்தது.

யுத்தம் ஐரோப்பாவின் வாசற்படிக்கு வந்துவிட்ட காலத்திலிருந்து மேற்கு ஐரோப்பா யூகோஸ்லாவிய அரசியல் மாற்றங்களை வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தது. குறிப்பாக ஜேர்மனி இவ்விடயத்தில் அதிகளவு அக்கறை காட்டியது. பலங் குன்றிப் போயிருந்த கொசோவாவின் KLA க்கு ஜேர்மனி உதவிக்கரம் நீட்டியது. ஆயுத தளபாடங்கள் அனுப்பப்பட்டன. சண்டை மீண்டும் உக்கிரமடைந்தது. ஆரம்பத்தில் கொசோவோ அல்பானியர் மீதான அடக்குமுறையை கண்டும் காணாதிருந்த மேற்கத்தைய பத்திரிகையாளர்கள் திடீரென விழித்துக் கொண்டனர். அல்பானிய மக்களின் துயரங்களை, போர்முனைச் செய்திகளை அறிவிக்க காத்திருக்கும் அபாயங்களையும் பொருட்படுத்தாது கொசோவோ சென்றனர். அமெரிக்காவும் சும்மாயிருந்து விடவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை "கொசோவோ பயங்கரவாதிகள்" வர்ணித்த அமெரிக்கப் பத்திரிகைகள் இப்போது அவர்களை விடுதலைப் போராளிகளென அழைத்தன. அமெரிக்க அரசு KLA க்கு நிதியுதவியும் வழங்கியது. அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ இராணுவம் KLA ன் புகழ்பாடியது. இதே நேட்டோவில் உறுப்பு நாடுகளாகவிருக்கும் இங்கிலாந்து, துருக்கி, ஸ்பெயின் ஆகியன தத்தமது நாடுகளில் பிரிவினைப் போராட்டங்களை பயங்கரவாதம் எனக்கூறி அடக்கி வருவதைப் பற்றி யாரும் நினைத்துப் கூடப் பார்க்கவில்லை.

இடையில் ஒரு கட்டத்தில் நேட்டோ நாடுகள் யூகோஸ்லாவிய அரசைப் பேச்சுவார்தைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நேட்டோப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் இல்லாத பட்சத்தில் குண்டுமழை பொழியப்படுமெனவும் யூகோஸ்லாவியா பயமுறுத்தப்பட்டது. யூக்கோஸ்லாவியா மசியாத நிலையில் நேட்டோ விமானங்கள் இந்நாட்டு இராணுவ, பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது குண்டு வீசின. ஆத்திரமடைந்த சேர்பிய இராணுவம் கொசோவோவின் அல்பானியர்களின் மீதான அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தியது.

மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டன. கொசோவோவில் இனப்படுகொலை நடப்பதாக அலறின. மாபெரும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கதைகதையாகச் சொல்லின. KLA போராளிகளை வீரர்களாகவும் சேர்பிய இராணுவத்தினரை வில்லன்களாகவும் சித்தரித்தன. கோசோவோ அல்பானியர்கள் மீது பொழிந்த இந்தப்பாச மழையில் மேற்கத்தைய நாட்டு மக்களும் நனைந்து போயினர். இதில் வேடிக்கை என்னவெனில், சாதாரணமாகவே அகதிகளை வெறுக்கும் மேற்கு ஐரோப்பிய மக்களில் சிலர் கொசோவோ அகதிகளை வரவேற்று உபசரித்தனர். செய்தி ஊடகங்கள் எந்தளவு மக்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பத்றகு இதுவும் ஒரு சான்று.

நேட்டோ நாடுகளின் குண்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத யூகோஸ்லாவிய அரசு இறுதியல் விட்டுக்கொடுத்தது. நேட்டோ இராணுவம் கொசோவோவுள் நுளைய அனுமதித்தது. கொசோவோவை ஆளுக்கொரு துண்டாகப் பிரித்தெடுத்துக் கொண்டன அமெரிக்க, ஜேர்மனிய, பிரித்தானியப் படைகள். அவர்களை அல்பானிய மக்கள் தமக்கு விடுதலை பெற்றுத் தந்த இரட்சகர்களாகப் பார்த்தனர். அவர்களோடு சேர்ந்து வந்த KLA யின் கையில் கொசோவோவின் (தற்காலிக) ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டது. ஆனால் உண்மையான அதிகாரம் நேட்டோ, ஐ.நா சபையின் பிரதிநிதி (மேற்கத்தைய நாடுகளின் உத்தரவுகளை நிறைவேற்றுபவர்) ஆகியோரிடம் தங்கிவிட்டது. கொசோவோ மக்கள் KLA , நேட்டோ இரண்டையும் ஒன்றாகவே பார்த்தனர். இவர்கள் பின்பலத்துடன் தாம் எதையும் செய்யலாம் என நினைத்த சிலர் பழிவாங்கல் வன்முறையில் ஈடுபட்டனர். இம்முறை சேர்பிய மக்கள் திடீர்த் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். செய்தவர்களைத் தம்மால் பிடிக்க முடியவில்லையென நேட்டோ இராணுவம் கையைப் பிசைந்தது.

கொசோவோவில் நேட்டோவுடனான தேனிலவுக்காலம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்தது. சேர்பியாவிலும் ஆட்சிபீடம் மாறியது. முன்னாள் அதிபர் மிலோசவிச் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியிழந்தார். மேற்குலகு சார்பான கட்சிகள் ஆட்சியைப்பிடித்தன. சேர்பியாவில் கொசோவோவின் எல்லையோரப் பகுதியிலும் அல்பானியச் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். இந்தப்பகுதியையும் சுதந்திரக் கொசோவோவுடன் இணைக்கும் நீண்ட கால அவா KLA க்கு இருந்துவந்தது. அதனால் அங்கேயும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்பகுதி முன்னர் சமாதான வலயமாப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததால் சேர்பிய இராணுவம் ஐந்து மைல்களுக்கப்பால் நின்றது. ஆனால், இப்போதுதான் தலைநகர் பெல்கிரேட்டில் ஆட்சி மாறிவிட்டதே. நேட்டோவின் ஆதரவுடன் சேர்பியப் படைகள் சமாதான வலையத்தினுள் நுளைந்து KLA போராளிகளை விரட்டியடித்தது. எதிரிகள் நண்பர்களானார்கள். நண்பர்கள் எதிரிகளானார்கள்.

சேர்பியக் கிளர்ச்சி முறியடிக்கப்படவே KLA அயல்நாடான மசிடோனியா பக்கம் பார்வையைத் திருப்பியது. முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான மசிடோனியாவில் அதே பெயருடைய மொழி பேசும் பெரும்பான்மை ஸ்லாவிய மக்களும், கொசோவோ எல்லையோரமாக சிறுபான்மை அல்பானியர்களும் வாழ்ந்து வருகின்றனர். தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதாய் இச்சிறுபான்மையினர் நீண்டகாலமாகக் குறைப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள். இந்த இன முரண்பாடுகள் கடைசியில் வன்முறையாக வெடித்தன. அரசுக்கெதிரான ஊர்வலம் பொலிசாரினால் கலைக்கப்படவே, அது திடீரென ஆயுதப்போராட்டமாக மாறியது.

அல்பேனியச் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பிரதேசங்களை ஆயுதந்தாங்கிய போராளிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மசிடோனிய அரசு இராணுவத்தை அனுப்பியது. சண்டையில் ஈடுபடும் போராளிகளுக்கு உதவ கோசோவோவிலிருந்து மேலும் KLA உறுப்பிர்கள் வரலாம் என அஞ்சிய மசிடோனிய அரசு நேட்டோவிடம் விண்ணப்பித்தது. இம்முறை "அல்பானியப் பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக" அறிவித்த நேட்டோ எல்லைக் காவலை அதிகரித்தது. எல்லைகடக்க முயன்ற KLA உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றுவரை நண்பர்களாகவிருந்தவர்கள் திடீரென எதிரிகளாகிவிட்டதையுணர்ந்து கொண்ட KLA, நேட்டோ படையினருக்கெதிராகத் துப்பாக்கிகளைத் திருப்பியது. மசிடோனியாவில் கிளர்ச்சி ஒரு சில நாட்களிலேயே அடக்கப்பட்ட பின்பு இப்போது அந்தப் பிராந்தியம் அமைதியாகக் காணப்படுகின்றது.

அல்பேனியத் தீவிரவாதிகள் "அகன்ற அல்பேனியா" கனவு காண்பது ஒன்றும் இரகசியமானதல்ல. கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணையுமானால், அல்பானிய மொழி பேசும் மக்கள் ஏன் ஒன்றிணையக்கூடாது ? என KLA தலைவர்கள் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். KLA கொசோவோவை விடுதலை செய்ய விரும்பியபோது உதவிய நேட்டோப் படைகள், மசிடோனிய இராணுவம் அல்பானியரின் போராட்டத்தை அடக்க ஏன் உதவின ? எல்லாமே சுயநல நோக்கில்தான் என்கிறார் யூகோஸலாவிய யுத்தங்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியிருக்கும் பெல்ஜிய எழுத்தாளர் ஒருவர்.

90 களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவில் யுத்தம் வெடித்தபோதே சமாதானமாகப் பிரிந்த மசிடோனியக் குடியரசில்தான் நேட்டோ படைகள் தமது முதலாவது தளத்தை அமைத்தன என்ற முரண்நகையான உண்மையை அதற்கு நிரூபணமாகக் குறிப்பிடுகின்றார். காரணம்: எண்ணை வள அஸர்பைஜான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து மேற்கு ஐரோப்பா நோக்கிய எண்ணைக் குழாய்களை நிர்மாணிக்கும் வருங்காலத்திட்டங்களை மனதில் வைத்தே கொசோவோ பிரச்சினையில் அமெரிக்க-மேற்கைரோப்பிய நாடுகள் தலையிட்டன. பல்லின மக்கள் வாழும் முன்னாள் யூகோஸ்லாவியா உள்ளடங்கிய பால்கன் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பின. இராணுவத்த தலையீடுகளின் பின்னால் பொருளாhர நலன்கள் மறைந்திருப்பதாக அந்த எழுத்தாளர் மேலும் கூறுகிறார்.

கொசோவோவில் நேட்டோப்படைகள் தங்கியிருப்பதன்உண்மையான நோக்கம் அங்குள்ள மக்களுக்கு நாளை தெரியவரும்போது அவர்களின் எதிர்விளைவு என்னவாகவிருக்கும் ? நேற்று நேட்டோப் படையினரை விடுதலை செய்ய வந்ததாகப் பார்த்தவர்கள் நாளை ஆக்கிரமிப்பாளர்களாகப் பார்ப்பார்களா ? இன்று சுதந்திர நாடாகியிருக்கும் கொசோவோவிலிருந்து நேட்டோப் படைகள் விலத்திக் கொள்ளப் பட்டால் என்ன ஆகும்? இன்றை வரையில் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாத செர்பியா, கொசோவோ மீது படையெடுக்குமா?

இதைவிட சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் சில தொக்கி நிற்கின்றன. கொசோவோவின் உதாரணத்தை பின்பற்றி ரஷ்யா அப்காசியா, ஒசேத்தியா போன்ற புதிய தேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. ஈழத்தேசியவாதிகள் கொசோவோ வழியில் தமிழீழத்தை அங்கீகரிக்க கோரினார்கள். அவற்றை எல்லாம் ஏன் நேட்டோ நாடுகள் புறக்கணித்தன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்று தான். மேற்கத்திய நாடுகளின் தன்னலம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை. கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டு, மேற்கத்திய நாடுகள் தலையிடவில்லை.

ஐரோப்பாக் கண்டத்தில் யாருடைய தலைவிதியையும் தீர்மானிக்கும் வல்லமை தமக்கு உண்டு என, ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய பழைய வல்லரசுகள் நிரூபித்துக் காட்டின. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இயற்கை வளம் மிக மிகக் குறைவு. ஆனால் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதற்கு மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை அன்னை தாராளமாகவே அள்ளிக் கொடுக்கிறாள். ஆனால் அவர்களிடம் பண பலமோ, படை பலமோ கிடையாது. அந்த நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களை கைக்கூலிகளாக்கிக் கொண்டால் போதும். மேற்கத்திய தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், எரிபொருள் என்பனவற்றை குறைந்த விலை கொடுத்து சுரண்டிக் கொண்டிருக்கலாம்.