Showing posts with label பங்குச் சந்தை. Show all posts
Showing posts with label பங்குச் சந்தை. Show all posts

Tuesday, February 21, 2012

பட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் !

"சோமாலியாவில் பஞ்சத்தால் பல்லாயிரம் மக்கள் பலி."
"உணவுப் பொருட்களின் விலையேற்றம்."
"பங்குச் சந்தையில் குறியீட்டுச் சுட்டெண் அதிகரித்துள்ளது."
மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக, யாராவது உணர்ந்துள்ளனரா? படித்தவர்களைக் கேட்டால், பல்வேறு காரணங்களை சொல்லி மறைக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து இவ்வாறான பதில்கள் வரும்.
- "சோமாலியாவில் பட்டினிச் சாவுகளுக்கு காரணம், அங்கு நிலவும் கடும் வரட்சி."
- "உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம், அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலகத்தில் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை."
-"பங்குச் சந்தை சுட்டெண் ஏற்றத்திற்கு காரணம், நெருக்கடியில் இருந்து மீண்ட, முதலாளித்துவத்தின் சாதனை."

அண்மையில், நெதர்லாந்து நாட்டில், Zembla எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. (HANDEL IN HONGER - 23 DECEMBER 2011 ) பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும், வணிகச் சூதாடிகளால் தான் இத்தனை பிரச்சினைகள். சோமாலியாவில், அல்லது இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில், மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால், பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் முக்கிய காரணம். ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரள்கின்றது.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். முதலீட்டாளர் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு. கேள்வியே பண்டத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றது, என்ற மரபு வழி முதலாளித்துவ தத்துவம் இந்த இடத்தில் சரிப் பட்டு வரலாம். ஆனால், தற்பொழுதுள்ள நிலைமை வேறு. முதலீட்டாளருக்கும், விவசாயிக்கும் இடையில், ஊக அடிப்படையில் விலையை தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்து விட்டனர். இவர்கள், விவசாயியையோ, அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை. பெரு நகரம் ஒன்றில், அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே, கணனித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கின்றனர். 2004 ம் ஆண்டு வரையில், வீட்டு மனை போன்ற துறைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்சினையால், நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதனை பாதுகாப்பற்ற முதலீடாக கருதுகின்றனர்.

உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் எல்லாம், உலகச் சந்தையில் விற்கப் பட வேண்டும் என்பது, முதலாளித்துவம் வகுத்த விதியாகும். அரிசி, கோதுமை என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப் பட வேண்டும் என்று, சம்பந்தப் பட்ட நாட்டு அரசு கூட தீர்மானிக்க முடியாது. சிக்காகோ, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச பங்குச் சந்தையில், ஏலத்திற்கு விட வேண்டும். அங்கு வரும் வர்த்தகர்கள் என்ன விலையை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு தான் இன்னொரு நாட்டிற்கு விற்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யும் உக்ரைன் நாட்டில், பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உலகச் சந்தையில் குறிப்பிட்ட தானியத்திற்கு தட்டுப்பாடு வரும் என்ற எதிர்பார்ப்பில், கணனித் திரையில் தானியத்தின் விலையை கூட்டி விடுவார்கள். இது ஒரு சூதாட்டம். ஆமாம், வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு விலையை தீர்மானிப்பதற்குப் பெயர் சூதாட்டம் தான். அதனால் இவர்களை பங்குச் சந்தை சூதாடிகள் என்றும் அழைக்கலாம்.

சிக்காகோ பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, அவற்றை சர்வதேச சந்தையில் வாங்கும் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே, இதனால் பெருமளவு பாதிக்கப் படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்களும், வறிய நாடுகளின் மத்தியதர வர்க்கமும், தமது வாங்கும் சக்தி குறைவதை உணர்கின்றனர். ஆனால், ஏழைகள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். வறிய குடும்பத்து பிள்ளைகள், அரைப் பட்டினியுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. நிலையான அரசு இல்லாத சோமாலியா போன்ற நாடுகளில், வறட்சியும் சேர்ந்து கொள்ளவே, நிலைமை மோசமடைகின்றது. வரட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் உணவை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகத் தானிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லா விட்டால், என்ன செய்ய முடியும்? பட்டினி கிடந்தது சாகத் தான் முடியும்.

2006 ம் ஆண்டு முதல், உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு வருடத்திற்குள், கோதுமையின் விலை 80 வீதம் உயர்ந்தது. அரிசி 320 வீதம் உயர்ந்தது! அதே காலகட்டத்தில், 30 நாடுகளில் 200 மில்லியன் மக்கள் போஷாக்கின்மையால், அல்லது பட்டினியால் வாடினார்கள். உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சூதாடிகளுடன், மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனங்கள், தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையை அதிகப் படுத்துவதற்காக, உணவுப் பொருள் வணிகத்தில் முதலிடுகின்றன. ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும், பங்குதாரருக்கு இலாபத்தில் பங்கு கொடுப்பதும், முதலாளித்துவ தர்மப் படி நியாயமானவை. ஆனால், அதற்காக இலட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது. இதிலே ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது. ஏனெனில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிப கால சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காக, வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.

Zembla தயாரிப்பாளர்கள், நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். மிகப்பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn , 700 மில்லியன் யூரோ உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலிட்டுள்ளது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP , 500 மில்லியன் யூரோ முதலிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பணியாற்றும் பொருளாதார நிபுணரான Olivier de Schutter , "ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப் படுவதாக" தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம், உணவுப் பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது. அதே நேரம், புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள ஊக வணிகர்களின் நலன்புரி அமைப்பு, அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், "பங்குச் சந்தைக்கும், பட்டினிச் சாவுக்கும் சம்பந்தம் இல்லை!" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? பிணத்தை, பணமாக்கும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் அல்லவா?

Zembla தயாரிப்பில் உருவான "HANDEL IN HONGER " (பட்டினியில் வணிகம்) ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:
HANDEL IN HONGER


Get Microsoft Silverlight
Bekijk de video in andere formaten.

Saturday, October 04, 2008

வீடு வரை கனவு, காடு வரை கடன்

அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பாற்ற, சொந்த மக்களை பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்) தோற்றம் இது. "மெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொருங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில் எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் எழுந்துள்ள தேவையை ஒட்டி இந்த கட்டுரையை எழுதவேண்டியுள்ளது.

ஒரு வீடு வாங்குவது தொடர்பாக நமது நாடுகளுக்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். நமது நாடுகளில் (பணக்காரரை விட்டுவிட்டால்) ஓரளவு நல்ல மாத வருமானம் எடுக்கும் நடுத்தர மக்கள், சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு பணத்துடன், தமது சொத்துகள் எதையாவது அடமானம் வைத்து வங்கி கொடுக்கும் கடனையும் வைத்து வாங்குவார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் தகைமையற்ற தொழிலாளிக்கும் கிடைக்கும் சம்பளம் சராசரி ஆயிரம் டாலர் ஆகில், அவர் ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வீட்டை வாங்குவாராகில், அவர் அதற்காக பெற்றுக்கொள்ளும் கடனை 20 அல்லது 30 வருடஙகளில் கட்டி முடிப்பார் என்ற எதிர்பார்ப்பில், வங்கிகள் Mortgage(அடமானம்) பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கின்றன. அந்தக் கடனுக்கு தகுதி பெற நிரந்தர வேலை இருப்பது அவசியம் போன்ற பிற நிபந்தனைகள் உள்ளன. நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது, மேற்குலக நாட்டு பிரசை ஒருவர் தன்னை தானே அடமானம் வைத்துக் கொள்கிறார்.

ஐரோப்பாவில் விதிகள் கடுமையாக உள்ளன. ஒரு வீட்டை வாங்கியவர், சில வருடங்களுக்கு பின்னர் விற்றால், இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காரணம், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப்பணம் முழுமையாக தமக்கு வட்டியுடன் வரவேண்டுமென நினைக்கின்றன. ஒருவேளை நிரந்தர வேலை பறிபோனால், வாங்கிய வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். கடன் வாங்கியவர் காலக்கெடுவுக்குள் இறந்தால், வீட்டுக்கடனை வங்கிகள் திரும்பப்பெற ஆயுட்கால காப்புறுதி கட்டியிருக்க வேண்டும். அல்லது அந்த வீட்டில் வசிக்கும் மனைவி, பிள்ளைகள், தொடர்ந்து கட்ட வேண்டும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இந்த விதிகள் கடுமையாக இல்லை.

லண்டனில் எனக்குத் தெரிந்த சிலர், மாதம் 800 பவுன் வருமானம் எடுப்பவர்கள், வாங்கிய வீட்டிற்கு மாதம் 1000 பவுன் Mortgage கட்டுவதை பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்று கேட்டால், அங்கே சில வங்கி ஊழியர்கள் செய்யும் ஊழலால், அதாவது போலி பத்திரங்கள் தயாரித்து, வருமானத்தை கூட்டி காட்டி Mortgage எடுப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிலும் அது போன்ற நிலைமை எப்போதும் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் நிதி நெருக்கடி, அதன் காரணமாக எழவில்லை. மோசடியே வங்கிகளின் அலுவலக செயல்முறையாக மாறியதன் விளைவு இது. சில வங்கி முகவர்கள் வருமானம் பற்றி எதுவும் கேட்காமலே கடன் கொடுத்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதற்கு முன்னர் அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் பற்றி சிறிய அறிமுகம். முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டமாக, அமெரிக்காவில் வங்கிகள் அனைத்து நிறுவனங்களையும்(அது உற்பத்தி துறையாகட்டும், அல்லது சேவைத் துறையாகட்டும்) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. ஒரு கம்பெனி நடத்துவதற்காக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன்(Liquidity) மட்டும் இதற்கு காரணமல்ல. பல நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வங்கிகளே வாங்கி, பிரதிநிதிகளை கொண்டு பங்குதாரர் கூட்டத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன. அப்படித்தான் வீடு கட்டிக் கொடுக்கும் (ரியல் எஸ்டேட்) கம்பனிகளிலும் வங்கிகள் ஆளுமை கொண்டிருந்தன. அந்த அகங்காரமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானதை பின்னர் பார்ப்போம்.

அனேகமாக 2001 ம் ஆண்டிற்கு(செப்டம்பர் 11 ன் தாக்கம்?) பிறகாக, அமெரிக்க மக்கள் அதிகம் செலவளிக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பியது. பணம் ஓடித்திரிய வேண்டும் என்பது சந்தை பொருளாதார தாரக மந்திரம். நாம் செலவளிக்கும் ஒவ்வொரு சதமும், எங்கேயோ ஒருவருக்கு வருமானமாக போய்ச்சேருகின்றது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் படி, கடன் வழங்கும் விதிகளை தளர்த்த அரசாங்கமும், வங்கிகளும் முன்வந்தன. சந்தேகத்திற்கிடமின்றி இது பலரை கடன்வாங்க வைத்திருக்கும். ஆகவே வழமைக்கு மாறாக, வருமானம் குறைந்தோரும், அல்லது எந்த வருமானமும் இல்லாதவர்களும் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் யாருக்கு என்ன லாபம்? இப்போது தான் வங்கிகளை திவாலாக்கிய மாபெரும் பங்குச்சந்தை சூதாட்டம் ஆரம்பமாகின்றது.

(நமது நாடுகளில் "ரியல் எஸ்டேட் கம்பெனி" என்று அறியப்பட்ட) வீடு விற்கும் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வீடுகளை கட்டி விற்றுத்தள்ளின. Mortgage முறையின் கீழ், ஒருவர் அந்த வீட்டை வாங்கி வங்கியிடம் அடமானம் வைக்கின்றார். அதற்கு வீட்டின் மொத்த விலையை வங்கி ரியல் எஸ்டேட் கம்பெனி கையில் கொடுக்கின்றது. அடமானம் வைத்தவரோ, வீட்டின் விலையை மட்டுமல்ல, தரகர் கூலி, சட்டவாக்க கூலி, போன்றவற்றை ரொக்கமாக கடன் என்ற பெயரில் வீடு வாங்கியவரின் தலையில் கட்டிவிடுகின்றது. கடனுக்கு வரும் வட்டி தான் வங்கிகளின் மிகப்பெரிய வருமானம். வழக்கமாக வீட்டு அடமானப்(Mortgage) பங்குகளை வங்கிகள் சந்தையில் ஏலம் விடுகின்றன. அதேநேரம் சாதாரண "வீட்டு சொந்தக்காரர்" மாதாமாதம் கட்டிவரும் வட்டிப்பணத்தை ஆதாயப் பங்காக(dividend) லாபம் பார்க்கின்றன.

பங்குச்சந்தையில் ஒரு பக்கத்தில் சூதாடியே பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஊகவணிகத்தில் கில்லாடிகளான அவர்கள், வீட்டு அடமானப் பங்குகளை அதன் உண்மையான பெறுமதியை விட பலமடங்கு அதிகமாக உயர்த்தினார்கள். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது மகிழாதவர் யார் இருக்கமுடியும்? இந்த சூதாட்டத்தால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், முதலீட்டு வங்கிகள், பங்குசந்தை தரகர்கள், பங்குதாரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே பெரும் பணம் புரட்டியது. அமெரிக்காவில் இந்த "அற்புதம்" நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளும் அமெரிக்க அசையா சொத்துகளில்(இங்கே வீடுகள்) முதலிட்டன. அப்படி கடல்கடந்து முதலிட்டு லாபமீட்டிய பெல்ஜிய வங்கியான Fortis, நெதர்லாந்து வங்கியான ABN-Amro என்பன இன்று நெருக்கடிக்குள் சிக்கி, திவாலாகும் நிலையில் அவ்வவ் அரசாங்கங்களால் தேசியமயமாக்கப் பட்டுள்ளன.

நடந்தது என்ன? அமெரிக்க பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து, வீட்டு மனை வியாபாரம் பற்றி பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன. விதி தளர்த்தலால், எந்தவித முன்யோசனையுமின்றி சேர்க்கப்பட்ட மக்களின் தொகையை காட்டித் தான் பங்குகளின் பெறுமதி கூடியது. ஆனால் அது ஒரு கற்பனாவாத பெறுமதியாக இருந்தது. பல வருடங்களாக யாரும் அதனை பொருட்படுத்தவில்லை.(பங்குச்சந்தையில் இதெல்லாம் சகஜம்). ஆனால் கடந்த வருடம் தான் வங்கிகளை எதிர்காலம் பற்றிய பயம் கவ்விக்கொண்டது. எந்த யோசனையுமின்றி, இத்தனை கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோமே, அது மீண்டும் எமது கைக்கு வருமா? என்று எழுந்த சந்தேகம் வங்கிகளை திவாலாக்கியது. பொய், புரட்டு, மோசடி நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது. அதற்கு அவர்களே பலியாகிப் போனார்கள்.

இப்போது என்ன நடக்கிறது? குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமெரிக்க திறைசேரி அதிகாரி போல்சன் அறிவித்த 700 பில்லியன் டாலர் உதவி, தமக்கு வேண்டிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு(வீடு வாங்கி, நடுதெருவுக்கு வந்தவர்கள்) ஒரு சதம் உதவி கூட இல்லை. அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் உதவி. இறுதியில் வென்றது முதலாளித்துவம், தோற்றது மக்கள்.

பொருளாதார நெருக்கடி இப்போது தான் ஏற்படுவதல்ல. முன்னர் ஒருமுறை தென் கொரியா கார் உற்பத்தி பெருக்கத்தால், வாங்குவார் அற்று தேங்கிப்போய், அது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. அப்போது கார் கம்பெனிகளை தென்கொரிய அரசு தேசியமயமாக்குவதை தடுத்தது I.M.F. (அதுவும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனம்). இன்று ஒரு சோஷலிச அரசுக்கு நிகராக, அமெரிக்க அரசாங்கம் வங்கிகளை தேசியமயமாக்கி வருகின்றது.

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவி எதற்கு பயன்படுத்தப்படப் போகின்றது? நிச்சயமாக பங்குகளின் பெறுமதியை மீண்டும் அதிகரிக்க வைக்குமென்பதால், பங்குதாரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம்.(இல்லாவிட்டால் தெருவுக்கு வரவேண்டியிருக்கும்). இந்த அரச திறைசேரி நிதியை ஆதாயப்பங்கு வழங்கவும், அதைவிட மேல்மட்ட மானேஜர்களின் போனஸ் கொடுக்கவும் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?

அப்பாவித்தனமாக நெருக்கடியில் சிக்கி வீடுகளை இழந்து நிரந்தர கடனாளிகளாகிய மக்களின் கண்ணீரை துடைப்பதை விட, முதலாளிகளின் செல்வம் குறையக்கூடாது என்பதிலே தான் அமெரிக்க அரசுக்கு அக்கறை.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

முன்னைய பதிவு:
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
-
Burned Feeds for kalaiy