Thursday, January 27, 2022

ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதை தடுத்தது எப்படி?

ARTE டிவியில் ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சின் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் காலம் பற்றிய ஆவணப்படம் காண்பித்தார்கள். (Crime in the Kremlin I ARTE.tv Documentary) அதில் அவர்கள் சொல்ல வரும் சேதி முக்கியமானது. எல்ட்சின் ஜனாதிபதியாக வந்திரா விட்டால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள்! அதை தடுப்பதற்காக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேலை செய்துள்ளன.

சோவியத் யூனியன் வீழ்ந்து சில வருடங்களின் பின்னர் 1996 ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபாதித் தேர்தல் நடைபெறவிருந்தது. ஏற்கனவே ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க முனைந்த பொழுது, எல்சினின் உத்தரவின் பேரில் பாராளுமன்றக் கட்டிடம் பீரங்கிக் குண்டுகளால் தகர்க்கப் பட்டது. 1993 ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு, 1996 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆனால் இம்முறை போரிஸ் எல்சின் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவராக இருக்கவில்லை. முதுமை, கடும் சுகயீனம் காரணமாக தளர்வடைந்து இருந்தார். அப்படியான ஒருவர் நிலையான ஆட்சி நடத்துவார் என்று யாருமே நம்பவில்லை.

இதற்கிடையே ஒரே நாளில் சோஷலிச பொருளாதாரத்தை இல்லாதொழித்து முதலாளித்துவத்தை கொண்டு வந்த படியால் நாடு மிக மோசமான நிலையில் இருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எங்கு பார்த்தாலும் பொருளாதாரப் பிரச்சினை. வேலையில்லாதவர்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது. வேலை செய்தவர்களின் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் கொடுக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, ஒரு பக்கம் செச்னிய யுத்தம் வேறு நடந்து கொண்டிருந்தது. ஒரு வெல்ல முடியாத, பெருஞ்செலவு பிடித்த, யுத்தத்திற்குள் சிக்கிக் கொண்ட ரஷ்ய இராணுவம் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அது ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்த பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்தகைய சூழலில் பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை (CPRF) ஆதரித்ததில் வியப்பில்லை. ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுகானோவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. பெரும்பான்மை மக்கள் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை விரும்பினார்கள்.

நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் வென்று விட்டால், ரஷ்ய தேசம் மீண்டும் சோவியத் காலத்திற்கு சென்று விடும் என்று முதலாளித்துவவாதிகள் அஞ்சினார்கள். அவ்வாறு நடந்தால் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற அச்சம் எழுந்தது. (அதாவது, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால், அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதலாளித்துவவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்த தயாராக இருந்தனர்.) ஆகவே, முதலாளித்துவத்தை ஆதரித்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள், எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர விடாமல் தடுக்க விரும்பினார்கள்.

அதுவரை காலமும் ஒருவரோடொருவர் போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த வங்கியாளர்கள் ஒன்று சேர்ந்தனர். அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்கவும் கடன் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரசு கடன்பத்திரங்கள் பெறுமதி குறைத்து கொடுக்க வேண்டும். தனியார்மயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு எல்சின் அரசு சம்மதித்தது.

அத்துடன் அமெரிக்காவும் தலையிட்டு எல்சினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவர்வதற்காக பிரபல பாடகர்கள், இசைக் கலைஞர்களை வருவித்து எல்சினுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தினார்கள். எல்சின் தோல்வியடைந்தால், அனைத்து மக்களினதும் தோல்வியாகும் என்று பிரச்சாரம் செய்தனர். கம்யூனிஸ்ட் கடந்த காலத்திற்கு திரும்பினால், மக்கள் சிறைகளில் வாட வேண்டியிருக்கும் என்றும் பரப்புரை செய்யப் பட்டது.

அப்படி இருந்தும், முதலாளித்துவ எல்சினுக்கும், கம்யூனிச சுகானோவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. தேர்தலில் வென்ற எல்சின் செய்த முதல் வேலை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தது மட்டும் தான். அதற்குப் பிறகு நிரந்தர மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சென்று ஒரேயடியாக படுத்து விட்டார். 

1999 ம் ஆண்டு, அரசு அதிகாரம் எல்சினிடம் இருந்து, புட்டினிடம் கைமாறப் பட்டது. அதற்குப் பிறகு நடந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. எல்சினுக்கு பிறகு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்ட புட்டின், ரஷ்யாவை உலகில் பெரிய முதலாளித்துவ வல்லரசுகளில் ஒன்றாக இன்றைக்கும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

No comments: