அல்பேனியாவில் கம்யூனிச கால திரைப்படங்களுக்குத் தடை!
1945 - 1991 வரையில் அல்பேனியா ஒரு சோஷலிச நாடாக இருந்தது. ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், சோவியத் முகாமில் இருந்து விலகி, மாவோயிச சீனாவுடன் மட்டுமே நட்பாக இருந்த குட்டி நாடான அல்பேனியா, ஐரோப்பாவில் தனிமைப் படுத்தப் பட்டிருந்தது.
தலைநகர் டிரானாவில் உள்ள தேசிய திரைப்பட களஞ்சிய அறைகளில் இன்னமும் பழைய கம்யூனிச காலத்து சினிமாச் சுருள்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் கருதி, டிஜிட்டலில் பதிவுசெய்து மக்களுக்கு போட்டுக் காண்பிக்க முடிவெடுக்கப் பட்டிருந்தது.
அன்றைய காலத்தில் தயாரிக்கப் பட்ட எல்லாத் திரைப்படங்களையும் "கம்யூனிசப் பிரச்சாரம்" குற்றம்சாட்ட முடியாது. உதாரணத்திற்கு, "மாவீரன் Skenderbeu" திரைப்படம், துருக்கியருக்கு எதிராக போரிட்ட சரித்திர நாயகனின் வரலாற்றைக் கூறுகின்றது.
இருப்பினும், கம்யூனிச காலகட்ட திரைப்படங்களை மீள் வெளியீடு செய்தால், அவை மக்களை "மூளைச் சலவை" செய்து விடும் என்று அரசிடம் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. இதிலே வேடிக்கை என்னவென்றால், அன்றைய கம்யூனிச அரசு தணிக்கை செய்த திரைப்படங்களையும் காண்பிக்கக் கூடாதாம்!
ICC (கம்யூனிச குற்ற ஆய்வு மையம்) என்ற நிறுவனம் தான் இந்த தடையுத்தரவை கோரியுள்ளது. அது அரச நிதியில் இயங்கும் கம்யூனிச எதிர்ப்பு நிறுவனம் ஆகும். அதனால் செல்வாக்கு மிக்கதாக உள்ளது.
அந்தக் கால திரைப் படங்களை பார்வையிடும் மக்கள், "கம்யூனிச கடந்த காலத்தை சிறந்ததாகக் கருதத் தொடங்கி விடுவார்கள்..." என்று குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசு அந்த நிறுவனத்தின் முறைப்பாட்டை பரிசீலித்து கம்யூனிசப் படங்களுக்கு தடை போடுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்தக் காலத்து நட்சத்திர நடிகை Monika Lubonja (பிறந்த ஆண்டு 1968) இது பற்றிக் குறிப்பிடும் பொழுது: "கலைஞர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு பொற்காலம். கலை என்பது ஆத்மார்த்தமானதாக, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக, அன்பை பரவச்செய்வதாக, அர்ப்பணிப்புக் கொண்டதாக இருந்தது." என்றார்.
(தகவலுக்கு நன்றி: NRC Handelsblad, 31- 5- 2017)
No comments:
Post a Comment