ஆப்கானிஸ்தானில் இருந்த சோஷலிச அரசையும், சோவியத் படைகளையும், இஸ்லாமிய முஜாகிதீன்கள் எதிர்த்துப் போராடிய வரலாற்றை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், முஜாகிதீன் குழுக்களுடன் சேராத ஒரு மதச் சார்பற்ற இயக்கமும் அரசை எதிர்த்துப் போராடியது. அதுவும் "கம்யூனிசத்தின் பெயரால், கம்யூனிச அரசை எதிர்த்து போராடியது." என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
அதன் பெயர் "ஆப்கானிஸ்தான் விடுதலை இயக்கம்" (ALO). அவர்கள் தம்மை மாவோயிச கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் உண்மையில் அது ஒரு மதச் சார்பற்ற தேசியவாத அமைப்பாகவே இயங்கியது. வெளிப் பார்வைக்கு கம்யூனிச புரட்சிகர கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தது.
ALO இன்னொரு முஜாகிதீன் குழு அல்ல. ஆனால் அது கம்யூனிசப் புரட்சி இயக்கமும் அல்ல. உள்நாட்டு தேசிய பூர்ஷுவா வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. அவர்களுக்கென்று ஒரு இராணுவப் பிரிவு இருந்தது. அதில் பெண்களையும் போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். (இஸ்லாமிய கடும்போக்கு முஜாகிதீன் இயக்கங்களில், பெண் போராளி என்ற கதைக்கே இடமில்லை.) சோவியத் ஆதரவு ஆப்கான் படைகளுக்கு எதிராக சில தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இருப்பினும் அந்த இயக்கம் பற்றி மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டவில்லை. அமெரிக்கா இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆதரித்து வந்தது.
ALO அயல்நாடான சீனாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி இருந்தது. சீனாவும் அந்த இயக்கத்திற்கு ஆயுத தளபாடங்கள் வழங்கியது. ALO வின் புரட்சிகர கொள்கை விளக்கங்கள் எல்லாம், அன்று சீனாவிடம் கற்ற பாடங்கள் தான். மாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் இன்னமும் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த "சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை" ALO பின்பற்றியது. (மாவோவின் கோட்பாடு அன்றைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.)
ஸ்டாலினின் மரணத்திற்கு பின்னர், குருஷேவ், பிரஷ்னேவ் போன்ற ஆட்சியாளர்களின் காலத்தில், சோவியத் யூனியன் ஒரு சமூக - ஏகாதிபத்தியமாக செயற்படுவதாக, மாவோ குற்றஞ் சாட்டினார். அதாவது சோவியத் யூனியன் சோஷலிசம் பேசிக் கொண்டே ஒரு ஏகாதிபத்தியமாக நடந்து கொண்டது. ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் படையெடுப்பு அதனை உறுதிப் படுத்தியது. ஆகவே, "சோவியத் சமூக - ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதாக" ALO அறிவித்துக் கொண்டது.
சீனா ALO வுக்கு உதவி செய்வதற்கு, பூகோள அரசியல் காரணம் ஒன்றிருந்தது. சீனாவின் மேற்குப் பிராந்திய மாநிலத்தில் வாழும் உய்கூர் மக்களின் பிரிவினைப் போராட்டம் சீனாவுக்கு தலையிடியாக அமைந்திருந்தது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், துருக்கி மொழி பேசும் உய்கூர் மக்கள், ஆப்கான் இனங்களுடன் சகோதர உறவு முறை கொண்டாடினர்.
அந்தக் காலத்தில், ஆயிரக் கணக்கான உய்கூர் போராளிகள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆப்கான் போர்க்களத்தில் அனுபவத்தை பெற்றுக் கொண்டு, சீனாவுக்கு திரும்பிச் சென்று போராட விரும்பினார்கள். ஆகவே, ALO ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினால், அங்கிருக்கும் உய்கூர் போராளிகளை வெளியேற்றுவதாக உறுதிமொழி அளித்தனர். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் சீனாவும் உதவியது.
துரதிர்ஷ்டவசமாக, சோவியத் படைகள் வெளியேறிய இறுதிக் காலத்தில், ALO மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. ஒரு முஜாகிதீன் குழுவுக்கு தலைமை தாங்கிய மசூத்தின் பாதுகாப்பை கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், மசூத் அல்லது வேறு யாராவது, அந்த இயக்கத்தை அழிப்பதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார்கள். வட கிழக்கே மசூத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரில் இருந்து, வட மேற்கே தொஸ்தம் என்ற தளபதியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு பிரயாணம் செய்த நேரம் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
ALO இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒரு விமானத்தில் (அந்த இயக்கத்தினர் தமது சொந்த ஹெலிகாப்டர் என்று கூறுகின்றனர்) ஏறிச் சென்றுள்ளனர். விமானம் தரையிறங்கும் நேரம், பாரிய குண்டு ஒன்று வெடித்ததால், ALO தலைவர்கள் அனைவரும் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டனர்.
தற்போது, ஆப்கானிஸ்தானில் ALO வின் செயற்பாடுகள் ஏறக்குறைய ஸ்தம்பிதமடைந்து விட்டன. பெரும்பாலான ALO உறுப்பினர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். (அவர்கள் மூலம் தான், எனக்கு இந்தத் தகவல்கள் கிடைத்தன.)
ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள், சர்வதேச ஊடகங்களால் தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றன. இதற்கு இன்னொரு உதாரணத்தையும் காட்டலாம். 2000- 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை கொடுமைப் படுத்துவது பற்றிய வீடியோ ஒன்றை, CNN உட்பட பல மேற்குலக தொலைக்காட்சிகள் அடிக்கடி ஒளிபரப்பின.
தாலிபான் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அந்த வீடியோவை எடுத்து உலகிற்கு அறிவித்தவர்கள், Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) என்ற, மார்க்சிய பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மட்டும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டனர்.
உலகம் முழுவதும், "இஸ்லாமிய நாடுகள்" என்று அழைக்கப்படும் நாடுகளில் கூட, இன/மதவாத சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்திய ஊடகங்களின் தணிக்கையையும் மீறி அந்த செய்தி உலக மக்களை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment