இது "டிஸ்னி லேன்ட்" அல்ல, கம்யூனிச சொர்க்கபுரி! ரஷ்யாவில் இன்றைக்கும் சிறப்பாக இயங்கும் கம்யூனிச நகரம். இது அங்கு வாழும் மக்களின் தெரிவு. யாரும் அவர்களை கட்டாயப் படுத்தவில்லை. (இன்றைய ரஷ்யாவில் கம்யூனிசத்தை வெறுக்கும் முதலாளித்துவ அரசு ஆட்சியில் இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.)
ஸ்டாலின் காலத்தில், சோவியத் யூனியனில் கூட்டுழைப்பு பண்ணை (Collective farm) முறை கொண்டு வரப் பட்டது. நாட்டுப்புறங்களில், அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தது. அரச பண்ணைகள் (Sovkhoz) தனியாகவும், மக்களின் கூட்டுறவுப் பண்ணைகள் (Kolkhoz) தனியாகவும் இருந்தன.
தொண்ணூறுகளில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், பொதுவுடைமைப் பண்ணைகள் தனியார்மயமாக்கப் பட்டன. நிலம் சிறு துண்டுகளாக பகிர்ந்தளிக்கப் பட்டது. விவசாயம் தனியார்மயமாக்கப் பட்ட பின்னர், பல பண்ணைகள் கைவிடப் பட்டன. செல்வந்தர்களால் வாங்கப் பட்டவை போக, எஞ்சியவை தரிசு நிலமாகின.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சில இடங்களில் வாழ்ந்த மக்கள், விவசாயத்தை தனியார்மயமாக்குவதால் தமக்கு நட்டமே உண்டாகும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டனர். தனியொரு குடும்பம் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதை விட, நூறு குடும்பங்கள் சேர்ந்து நூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதால் அதிக நன்மை கிடைக்கும் அல்லவா? "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்றொரு பழமொழி உண்டு.
ஆகவே, அவர்கள் பழைய படி பொதுவுடைமைப் பண்ணை அமைப்பிற்கு திரும்பினார்கள். அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து கொண்டார்கள். ரஷ்யாவில் இன்று வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் "விளாடிமிர் லெனின் கூட்டுழைப்புப் பண்ணை" (Collective farm of Vladimir Lenin) அதில் ஒன்று.
2017 ம் ஆண்டிலும், அந்தப் பண்ணையில் உள்ள தோட்டங்களில் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. இந்த வருடம் தொன் கணக்கில் ஸ்ட்ரோபெரி பழங்களை அறுவடை செய்துள்ளதாக பெருமையாக கூறிக் கொண்டனர். (நன்றி: English Russia இணையத்தளம்) அந்த விவசாய விளைபொருட்கள் பிற இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப் படும்.
ஒரு கம்யூனிச சமுதாயத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதால், அதில் கிடைக்கும் இலாபத்தையும் தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அவர்கள் வசிக்கும் வசதியான வீடுகளுக்கு வாடகை கிடையாது.
கம்யூனிச பண்ணை என்றவுடன், நீங்கள் ஒரு கிராமத்தை கற்பனை செய்து விடக் கூடாது. அது சகல வசதிகளும் கொண்ட நவீன நகரம். அனைத்து உயர்தர தொழில்நுட்பங்களும் அங்கே கிடைக்கும். வயல்கள், தோட்டங்கள், பண்ணைகளில் உற்பத்தியாவதை முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளும் அங்குள்ளன. குழந்தைகளை பராமரிக்கும் இடம், தேவதைக் கதைகளில் வருவதைப் போன்று பிரமாண்டமான அழகான கட்டிடமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
அதாவது, அது ஒரு தனிநாடு போன்று இயங்குகிறது. தன்னிறைவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பண்ணை உறுப்பினர்கள் எல்லோரும் வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள் என்று கருதி விடக் கூடாது. ஒரு நகரக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், அனைத்து வகையான தொழில் வாய்ப்புகளும் உள்ளன. தொழிற்சாலைகள் இருந்தால் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. பாடசாலைகள் இருந்தால் அங்கு ஆசிரியர்கள் தேவை. மருத்துவமனை இருந்தால் மருத்துவர்கள், தாதியர்கள் தேவை. இவர்கள் எல்லோரும் கூட்டுழைப்பு பண்ணையின் உறுப்பினர்கள் தான்.
ரஷ்யாவில் 35 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலங்கள், ஒன்றில் அரசு அல்லது கூட்டுறவுப் பண்ணைகளுக்கு சொந்தமாக உள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கின்றது. (Russia’s Collective Farms: Hot Capitalist Property, AUG. 30, 2008) பிரித்தானியாவோடு ஒப்பிட்டால் அங்கே மொத்தம் ஆறு மில்லியன் ஹெக்டேயர் நிலங்களில் தான் விவசாயம் செய்யப் படுகின்றது. ஆகவே, கூட்டுறவுப் பண்ணை உற்பத்தி அதிகரித்தால், எதிர்காலத்தில் உலக உணவுத் தேவையில் கணிசமான அளவைப் பூர்த்தி செய்ய முடியும்.
(2017 ம் ஆண்டிலும் இயங்கும் பொதுவுடைமைப் பண்ணையின் படங்களை இங்கே காணலாம். தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி: English Russia)
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
No comments:
Post a Comment