Monday, September 05, 2016

ஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படுகொலைகளின் மர்மம்


நான் அப்போது யாழ் இந்துக் கல்லூரியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்புத் தோழன் ஒருவன், அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் ஆலால்சுந்தரத்தின் மகன். கைத்தொலைபேசி தொழில்நுட்பம் வளர்ந்திராத காலகட்டம் அது. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் எந்த அரசியல் கொலை நடந்தாலும், எமது கல்லூரிக்கு தகவல் கிடைத்து விடும்.

ஆகவே, 3 செப்டம்பர் 1985 நடந்த ஆலாலசுந்தரம் கொலையும் எமது கல்லூரிக்கு முதலில் தெரிந்ததில் வியப்பில்லை. மேலும் ஓர் உறவினர் வந்து ஆலாலசுந்தரத்தின் மகனை அழைத்துக் சென்ற பொழுது, அன்று அங்கு என்ன நடந்தது என்பதையும் அறிவிக்கத் தயங்கவில்லை. அன்று ஆலாலசுந்தரத்துடன், இன்னொரு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கமும் (இன்றைய புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தை) சுட்டுக் கொல்லப் பட்டனர். அதனால் இருவரின் மரண ஊர்வலமும் ஒன்றாக நடந்தது. இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக் கணக்கான மக்களுக்குள், எமது பாடசாலை மாணவர்களும் சங்கமாகினர்.

அன்று நடந்த அரசியல் கொலைகளுக்குப் பின்னர், யார் அதைச் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், 1984 - 1985 காலப்பகுதியில், யாழ் குடாநாடு முழுவதும் ஈழ விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அன்று செல்வாக்கு செலுத்தி வந்த ஐந்து பெரிய இயக்கங்களுக்கு தெரியாமல் எந்தவொரு கொலையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் புலிகள் மீதே சந்தேகம் விழுந்தது. ஏனெனில் 1982 ம் ஆண்டில், புலிகள் தான் பல கூட்டணி உறுப்பினர்களை கொன்றிருந்தனர்.

இருப்பினும், அன்று வரையில் பாராளுமன்ற உறுப்பினர் யாரும் கொல்லப் படவில்லை. டெலோ இயக்கமே அந்த அரசியல் படுகொலைகளுக்கு காரணம் என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்தது. ஆலாலசுந்தரத்தின் வீடு கல்வியங்காட்டில் இருந்தது. கல்வியங்காடு முழுவதும் டெலோவின் கோட்டையாக கருதப் பட்டது. ஆகவே டெலோவிற்கு தெரியாமல் அந்தக் கொலைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த கேள்வி, அவர்கள் என்ன காரணத்திற்காக கொல்லப் பட்டனர்?

இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாதிரி, அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்கள் மத்தியில் நற்பெயரை இழந்திருந்தது. இருப்பினும், பொது மக்களால் "திருடர்கள்" என்று அழைக்கப் பட்ட (அன்றைய தேசியத் தலைவர்) அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கி விட்ட, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோர் ஆயுதபாணி இயக்கங்களுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டனர்.

கொலை செய்யப் பட்ட ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோர் புலிகளுடனும், டெலோவுடனும் (பெரும்பாலும் வலதுசாரிய கொள்கை காரணமாக) நெருங்கிய நட்புறவு பேணி வந்தனர். அந்தக் காலத்தில் அது பெருமைக்குரிய விடயம். மேலும் டெலோ மாதிரி, கூட்டணியும் இந்தியா ஆதரவுக் கட்சி தான். அதனால், கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதால், யாருக்கு என்ன என்ன நன்மை ஏற்பட முடியும்?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை காண நீண்ட காலம் எடுத்தது. இன்று வரையில் யாரும், அன்று நடந்த கொலைகளுக்கு உரிமை கோரவில்லை. இன்றுள்ள, டெலோவின் எஞ்சிய தலைவர்கள் கூட மௌனம் சாதிக்கின்றனர். ஆயினும், அன்றைய படுகொலைகள் இந்திய உளவுத்துறை RAW வினுடைய உத்தரவின் பேரில் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம்?

அந்த அரசியல் படுகொலைகள் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திம்புப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியாவின் அனுசரணையில், பூட்டானில் நடந்த பேச்சுவார்த்தைகளில், ஐந்து ஆயுதபாணி இயக்கங்களுடன், கூட்டணியும் கலந்து கொண்டது. இந்திய அரசு, "மிதவாதிகளான" கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை ஆதரித்தது. இருப்பினும், அன்று ஈழத் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகளாக கருதப் பட்ட கூட்டணியினர் தான், பலமான கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது, ஈழப் போர் தொடங்கிய 1983 ம் ஆண்டு வரையில், தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டணி தான் மிகப் பலமான அரசியல் சக்தியாக விளங்கியது.

ஜனநாயக வழியில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டணியை விட, ஆயுதபாணி இயக்கங்களை இலகுவாக கட்டுப்படுத்தலாம் என்று இந்தியா நம்பியது. பலமான கூட்டணியை விட, பலவீனமான கூட்டணி தனது சொல்லுக்கு அடிபணிந்து நடக்கும் என்று கணக்குப் போட்டது. கொலை நடந்த நேரம், யாழ்ப்பாணத்தில் இருந்த அத்தனை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கு திட்டம் தீட்டப் பட்டதாம். ஆயினும், டெலோவின் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் மறுத்து விட்டதால், அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் பிழைத்தனர்.

ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளை தனக்கு சாதகமாக வளைக்கும் நோக்கில், சிலரை பலப்படுத்துவதும், வேறு சிலரை பலவீனப் படுத்துவதுமாக, இந்தியா பல சூழ்ச்சிகளை செய்து வந்துள்ளது. அண்மையில், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக வெளியான நூலில் கூட (The Assassination Of Rajiv Gandhi; Neena Gopal), RAW உளவாளிகள், விடுதலைப் புலிகளின் தலைமை வரையில் ஊடுருவி இருந்ததை நிச்சயப் படுத்துகின்றது. புலிகள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஈழ விடுதலை இயக்கத்திலும், தலைமையில் ஒரு RAW உளவாளி இருந்துள்ளார்.

1987 ம் ஆண்டு, இந்திய இராணுவம் ஈழப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த காலத்தில் கூட, தமிழர் விடுதலைக் கூட்டணியை தனியாக இயங்க அனுமதிக்கவில்லை. இந்தியா வெளிப்படையாகவே தனக்கு விசுவாசமாக இருந்த EPRLF, ENDLF ஆகியவற்றை ஆதரித்தது. இந்தியா புதிதாக உருவாக்கிய ENDLF, பகிரங்கமாகவே இந்திய இராணுவத்தின் துணைப் படையாக இயங்கியது. இருப்பினும், அவர்களுக்கு ஈழத் தமிழரின் ஆதரவு பூஜ்ஜியமாக இருந்தது. ஆகவே, இந்தியா ஆயுதங்களை வழங்கி, EPRLF இணை முன்னுக்கு கொண்டு வந்தது.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும், அதற்குப் பிறகான தேர்தல்களிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரின் கீழ், முன்னாள் ஆயுதபாணி இயக்கங்களை சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதாவது, பிற்காலத்தில் புலிகள் உருவாக்கிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடியாக அது இருந்தது. இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய இராணுவக் காலத்தில் EPRLF இன் யாழ் பிரதேசத் தலைவராக பல அடாவடித்தனங்களை புரிந்தவர். மண்டையன் குழு என்ற பெயரில் பல புலி உறுப்பினர்களை கொன்றவர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம், தம்மை கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி காட்டிக் கொண்டனர். பிற்காலத்தில், அவர்களாகவே தமது "தமிழ்த் தேசிய தலைவர்களுக்கு" எதிராகத் துப்பாக்கியைத் திருப்பினார்கள். சிங்கள இராணுவத்திற்கு எதிராக போரிட்டு வந்த புலிகள், இந்திய இராணுவத்தை விரட்டுவதற்காக சிங்கள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்தனர்.

பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலம், புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான தேனிலவுக் காலம் என்று அழைக்கப் படுகின்றது. ஒரு காலத்தில் "பயங்கரவாதிகளாக" கருதியவர்களை, சிறிலங்கா அரசே அழைத்து அரவணைத்தது. இந்திய இராணுவத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கு, தென்னிலங்கையில் அடைக்கலம் கொடுத்தது. அந்த நேரத்தில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: முன்னொரு காலத்தில், ஈழத் தமிழ் தேசியவாதிகளின் தேசியத் தலைவராக போற்றப் பட்டவர். பின்னொரு காலத்தில், அதே தமிழ்த் தேசியவாதிகளால் துரோகியாக தூற்றப் பட்டவர்!

எண்பதுகளின் தொடக்கத்தில், தமிழ் தேசியர்கள் அனைவரும், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டாகப் பிளவு பட்டனர். அமிர்தலிங்கம் வெளியே தன்னை ஒரு மிதவாதத் தலைவராக காட்டிக் கொண்டாலும், அவரும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர் தான். ஏற்கனவே ஒரு தடவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் தனியாக ஆயுதபாணி இயக்கம் வைத்திருக்கும் முயற்சி தோல்வியில் முடிந்திருந்தது.

ஈழப்போர் தொடங்கியதும், அமிர்தலிங்கம் தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆயுதபாணி இயக்கங்களால் துரோகிகளாக தூற்றப் பட்டனர். யாழ்ப்பாணத்தில் பல கூட்டணி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதால், தலைவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் நடத்தி வந்தனர்.

1989 ம் ஆண்டு, பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கொழும்பு வந்த புலிகள், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இரண்டு கூட்டணி தலைவர்களையும் சுட்டுக் கொன்றனர். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்த அந்தக் கொலைகளுக்கு அரசும் உடந்தையாக இருந்தது. ஏனெனில், தீர்வுத் திட்டங்களில் இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவராக என்றென்றும் அமிர்தலிங்கமே இருந்தார்.

அந்தக் காலத்தில் கூட்டணி ஒரு "புலி எதிர்ப்புக் கட்சியாக" இயங்கி வந்தாலும், தமது தலைவரின் மரணத்தை நினைவுகூர முடியாத அளவிற்கு அடங்கிக் கிடந்தனர். 2001 ம் ஆண்டு, "புலி எதிர்ப்புக் கட்சிகளை" ஒன்று சேர்ந்த புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அதற்குப் பிறகு, சம்பந்தன் போன்ற கூட்டணியினர், தமது தலைவர் அமிர்தலிங்கத்தின் பெயரையும் மறந்து விட்டனர்.

தற்போது புலிகள் இல்லாத வெற்றிடத்தில், கூட்டமைப்பு தன்னை பழைய கூட்டணியின் தொடர்ச்சியாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அன்றைய கூட்டணி அரசியலுக்கும், இன்றைய கூட்டமைப்பு அரசியலுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது ஒரு காரணம். அதே நேரம், ஒரு காலத்தில் துரோகிகளாக தூற்றப் பட்ட மிதவாதிகள், தமிழர்களின் தலைமையை கைப்பற்றிக் கொண்டதை பிரகடனம் செய்ய வேண்டி இருப்பது இன்னொரு காரணம். 


No comments: