Wednesday, September 28, 2016

டெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன?


ஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் இருந்தது என்று சொன்னால் இன்று பலர் நம்ப மாட்டார்கள். ஆனால், அது தான் உண்மை. ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து விடுதலை இயக்கங்கள் இயங்கின. அவற்றில் புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் பெரிய அளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டுமே கொள்கை அளவில் வலதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொண்டன. நடைமுறையில் இராணுவவாதத்தை பின்பற்றி வந்தன.

1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு பின்னர், ஐந்து இயக்கங்களுக்கும் இந்திய அரசு இராணுவப் பயிற்சியும், நிதியும், ஆயுதங்களும் வழங்கியது. இருப்பினும், டெலோவுக்கு அதிக கவனிப்பு கிடைத்து வந்தது. டெலோ எந்தளவுக்கு இந்திய ஆதரவைப் பெற்றிருந்தது என்பது, அவர்கள் நடத்திய பிரமிக்கத் தக்க தாக்குதல்களில் இருந்து வெளித் தெரிந்தது. இலங்கை வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நடந்த மிகப் பெரிய கெரில்லாத் தாக்குதல்கள் அவை.

1984 ம் ஆண்டு, நவம்பர் மாதம், டெலோ போராளிகளின் அதிரடி நடவடிக்கையாக சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தாக்கப் பட்ட படியால், அதை மேலும் பலப்படுத்தி பெருமளவு இராணுவப் - பொலிசாரை குவித்து வைத்திருந்தனர். டெலோவின் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான பொலிசார் கொல்லப் பட்டனர். பொலிஸ் நிலைய கட்டிடம் தகர்க்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து உதவிக்கு வந்த படையினரின் வாகனம் கைதடியில் வைத்த கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டது. அதிலும் சில படையினர் கொல்லப் பட்டனர்.

மேற்படி தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகள் டெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. டெலோ போராளிகள் தம்முடன் வீடியோ படப்பிடிப்பாளர்களையும் அழைத்துச் சென்றிருந்தனர். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தாக்குதல் அதுவாகும். பிற்காலத்தில் புலிகள் அந்தப் பாணியை பின்பற்றி, எல்லாத் தாக்குதல்களையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

தாக்குதல் சம்பவங்களை காட்டும் வீடியோக்களை, புலிகள் தமது பிரச்சாரத்திற்கு திறம்பட பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான், அன்று டெலோவும் நடந்து கொண்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் வீடியோவை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று காட்டினார்கள். இந்தப் பிரச்சார நடவடிக்கையால் ஏராளமான இளைஞர்களை அணிதிரட்ட முடிந்தது. பெரும்பாலான ஈழத் தமிழ் மக்களும், கொள்கை, கோட்பாடுகளை விட, இராணுவ சாகசங்களுக்கு மயங்குபவர்கள் தான். ஆன படியால், அன்று டெலோவுக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

1985, ஜனவரி, முருகண்டியில் டெலோ வைத்த நிலக்கண்ணி வெடியில், கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் வண்டி சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த எழுபதுக்கும் பேற்பட்ட படையினரும், பொது மக்களும் கொல்லப் பட்டனர். ஆயிரம் கிலோ எடையுடைய ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப் பட்ட படியால், பல ரயில் பெட்டிகள் தகர்க்கப் பட்டன.

அன்று டெலோ நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாகிய மாதிரி, ஏனைய இயக்கங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், அந்தளவு வெடி மருந்துகளை பயன்படுத்தும் ஆயுத பலம், அன்று வேறெந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை. அதன் அர்த்தம், இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து டெலோவை வளர்த்து விட்டிருந்தது. உண்மையில், அன்றைய சூழலில் டெலோ எல்லாவற்றிலும் பலமான இயக்கமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

டெலோவின் வளர்ச்சி எந்தளவு துரித கதியில் நடந்ததோ, அந்தளவு வேகத்தில் அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது. ஒரு இயக்கம் திடீரென வீக்கமடைவது நல்லதல்ல என்று அப்போதே பொது மக்கள் பேசிக் கொண்டனர். ஆயுத பலமும், போராளிகளின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்த படியால் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கியது. யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பல சமயங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு டெலோவின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் ஒரு முக்கிய காரணம்.

தலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஒரு நல்ல மனிதர் என்று பிற இயக்கங்களாலும் மதிக்கப் பட்டு வந்தார். ஆனால் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்த யுத்த பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். ஒவ்வொரு தளபதியும் தமக்கென தனியான பிரதேசத்தையும், விசுவாசமான போராளிகளையும் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.

தாஸ், பொபி ஆகிய இரண்டு தளபதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் விரிவடைந்து மோதல் நிலைக்கு வந்தது. "பொபி குறூப்", "தாஸ் குறூப்" என்று அழைக்கப் படுமளவிற்கு முரண்பாடுகள் வெளித் தெரிய ஆரம்பித்தன. கல்வியங்க்காடும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் பொபி குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது. அதே மாதிரி, நெல்லியடியும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாஸ் குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது.

இதற்குள் பிரதேசவாதமும் மறைந்திருந்தது. பொபி குறூப் யாழ் நகரை அண்டிய வலிகாமம் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. தாஸ் குறூப் வட மராட்சிப் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. இருப்பினும் கல்வியங்காடு டெலோவின் தலைமையகமாக கருதப் பட்டது. அங்கு தான் டெலோவின் மிகப்பெரிய முகாம் இருந்தது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, குறிப்பாக திருகோணமலையை சேர்ந்த போராளிகளும் அதிகளவில் தங்கியிருந்தனர். அத்துடன் தலைவர் ஸ்ரீசபாரத்தினமும் அங்கு தானிருந்தார்.

யாழ் குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்த படியால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தன. எல்லா இடங்களிலும் ஆயுதமேந்திய போராளிகள் காணப் பட்ட சூழலில், வழமையான கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டத் தயங்குவார்கள். ஆகையினால், இது இயக்கங்கள் நடத்திய கொள்ளை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

ஏற்கனவே தனியாரின் வாகனங்களை அடாவடித்தனமாக பறித்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அனேகமாக எல்லா இயக்கங்களும் அதைச் செய்துள்ளன. ஆயுத முனையில் வாகனங்களை பறித்துச் சென்று விட்டு, அவர்களது நோக்கம் நிறைவேறியதும் திருப்பிக் கொடுப்பது வழமையாக இருந்தது. ஆனால், டெலோ வழமைக்கு மாறாக பொது மக்களின் வாகனங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். வாகனம் எங்கே என்று உரிமையாளருக்கும் தெரிவிப்பதில்லை. இது உண்மையில் ஒரு வழிப்பறிக் கொள்ளை.

இதைத் தவிர வசதி படைத்தவர்களின் வீடுகளில் புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. கொள்ளையர்கள் எப்போதும் முகமூடி அணிந்திருந்த படியால், அவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் பொழுது, வீட்டிலிருந்தவர் அடையாளம் கண்டு விட்டதால், அவரை சுட்டுக் கொன்று விட்டனர். ஊர் முழுவதும் ரோந்து சுற்றும் இயக்கப் போராளிகளுக்கு தெரியாமல், எந்தத் திருடனும் வர முடியாது என்பது பொது மக்களின் அபிப்பிராயம். அத்துடன் கொள்ளையரின் கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளும் இருந்துள்ளன.

இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று, நல்லூர் கந்தசுவாமி கோயில், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயில் ஆகிய மிகப்பெரிய பணக்கார கோயில்களில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அந்தளவு துணிச்சல் இயக்கங்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். அத்துடன் கோயில்களுக்கு அருகாமையில் இயக்கங்களின் சோதனைச் சாவடிகளும் இருந்தன. அவற்றை மீறி எந்தத் திருடனும் வர மாட்டான்.

துர்க்கையம்மன் கோயில் கொள்ளை டெலோவாலும், நல்லூர்க் கோயில் கொள்ளை புலிகளாலும் நடத்தப் பட்டதாக பொது மக்கள் நினைத்தற்கான காரணமும் அது தான். (தெல்லிப்பளை கோயில் கொள்ளையும் புலிகளால் நடத்தப் பட்டதாக பின்னர் ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.)

பிற்காலத்தில், புலிகளின் திடீர் தாக்குதலில் டெலோ இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்னர், டெலோ கொள்ளையடித்து வைத்திருந்த பொருட்களை புலிகள் காட்சிக்கு வைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் முதல் கோயில் நகைகள் வரையில் அதற்குள் இருந்தன. ஒரு சந்தை போடுமளவிற்கு போதுமான பொருட்கள் அங்கிருந்தன. புலிகள் தமது வாகனங்களில் சாரி சாரியாக அவற்றைக் கொண்டு வந்து குவித்திருந்தனர்.

அதற்குப் பின்னர் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மை தான். அன்று டெலோ மட்டுமல்லாது, வேறு இயக்கங்களும் கொள்ளைகளில் சம்பந்தப் பட்டதாக பொது மக்கள் நம்பினார்கள். இருப்பினும், டெலோ அழிக்கப் பட்ட பின்னர், எல்லாப் பழியும் அவர்கள் மேல் விழுந்த படியால், வேறு யாரும் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

டெலோவின் அடாவடித்தனங்களால் பொது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். உண்மையில், அதுவும் புலிகளின் டெலோ அழிப்பு நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. நான் நேரில் கண்ட, அல்லது கேள்விப்பட்ட சில உதாரணங்களை குறிப்பிடலாம்.  

யாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில் கடைக்கு முன்னால் நின்ற மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் கடத்திக் கொண்டு போக முயற்சித்தனர். உரிமையாளர் வந்து கூச்சல் போட்டதும், தாங்கள் "டெலோ" என்று சொன்னார்கள். உரிமையாளர் அதற்கும் மசியாமல் "டெலோ என்றால் திருடர்களா?" என்று சத்தம் போட்டார். உடனே ஒருவன் கிரனேட் எடுத்து கிளிப்பை கழற்றி மிரட்டினான். இருப்பினும், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டதால் பின்வாங்கிச் சென்றனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதியில் ஒரு பிரபலமான வீடியோ கசெட் வாடகைக்கு விடும் கடை இருந்தது. அவர்களிடம் ஏராளமான படக் காசெட்டுகள் இருந்தன. அந்த வீடியோக் கடையில் ஆபாசப் படங்களும் வாடகைக்கு விடுவதாக ஒரு குற்றச்சாட்டு, யாராலோ டெலோ முகாமில் இருந்தவர்களிடம் அறிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து வீடியோக் கடையில் இருந்த அத்தனை காசெட்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.

ஆபாசப் படக் காசெட்டுக்காக ஒரு கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் அபகரித்து சென்றார்கள். இது மாதிரியான "கலாச்சாரப் பாதுகாப்பு நடவடிக்கை" பல இடங்களிலும் நடந்துள்ளது. பிற்காலத்தில், டெலோ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர், அங்கு பல ஆபாசப் படக் காசெட்டுகளை கண்டெடுத்ததாக கூறினார்கள்.

தமிழ்க் கலாச்சாரக் காவலர்களான டெலோ இயக்கத்தினர், கல்வியங்காட்டில் ஆபாசப் படம் தயாரித்ததாக அங்கிருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர். டெலோவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளியான, ஒரு அழகான தமிழ்ப் பெண்ணை வைத்து அந்தப் படம் எடுக்கப் பட்டதாக உள்ளிருந்து கசிந்த தகவல்கள் தெரிவித்தன. அது உண்மையானால் கலாச்சார காவலர்களின் இரட்டை வேடத்தை அது காட்டுகின்றது.

டெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத யுத்தப் பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். இருபாலையில், டெலோ உறுப்பினர்களால் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டார். அந்தச் சம்பவத்தை ஒரு பதினான்கு வயது சிறுமி பார்த்து விட்டாள். வன்புணர்ச்சிக் குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான அந்தச் சிறுமியை பிடித்துச் சென்றனர். அந்த அப்பாவிச் சிறுமி கல்வியங்காடு முகாமில் சில நாட்கள் வைத்திருந்து சித்திரவதை செய்யப் பட்டாள். பின்னர் அரச உளவாளி என்று குற்றம் சுமத்தி தெருவில் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டாள்.

அரச உளவாளி என்ற பொய்க் குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட அப்பாவி சிறுமியின் குடும்பமும் வறுமையில் வாடியது. அந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். ஒரேயொரு அண்ணன் ஏற்கனவே இராணுவத்தால் பிடிக்கப் பட்டு பூசா முகாமில் அடைக்கப் பட்டிருந்தான். இரண்டு துயரச் சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்த படியால், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்தக் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் மூலம் எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. உண்மை தெரியாத பொது மக்கள், தெருவில் சுட்டுக் கொல்லப் படுபவர்கள் எல்லாம் உளவாளிகள் தான் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.

டெலோ இயக்கத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது எந்தளவு பெரிய இயக்கமாக வளர்ந்திருந்தாலும், போராளிகளின் எண்ணிக்கையும், ஆயுத பலமும் அதிகமாக இருந்தாலும், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டால் அழிவு ஆரம்பமாகி விடும். 

டெலோ, பொது மக்களின் தார்மீக ஆதரவை மட்டுமல்லாது, இயக்கத்தில் இருந்த போராளிகளின் தார்மீகப் பலத்தையும் இழந்திருந்தது. ஏற்கனவே பலர் இயக்கத்தின் அகங்காரத்தை தமதாக்கிக் கொண்டிருந்தனர். தம்மை மிஞ்ச ஆளில்லை என்பது போல நடந்து கொண்டனர். அதனால் அடிமட்டப் போராளிகள் சோர்வடைந்து போராட்டத்தில் நம்பிக்கையிழந்து காணப் பட்டனர்.

புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையிலான சகோதர யுத்தத்திற்கு முன்னரே, இந்திய அரசு டெலோவை கைவிட்டு விட்டது. நீண்ட காலமாக, தனது செல்லப் பிள்ளை போன்று முன்னுரிமை கொடுத்து வந்த இந்தியா டெலோவை கைவிடுவதற்கான காரணம் மிகவும் இலகு. எந்த சக்தியும் தனது கையை மீறிப் போய் விடக் கூடாது என்பதில் இந்தியா அவதானமாக இருந்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக வருவதற்கு, இந்தியாவின் ஆசீர்வாதமும் மறைமுகமாக இருந்தது.   

(தொடரும்)

No comments: