முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர். அது எந்தளவு தூரம் உண்மை என்பதை சம்பந்தப் பட்டவர்கள் தான் கூற வேண்டும்.
தற்போது பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரும் நேரம், எதிர்பாராத விதமாக முன்னாள் புலிப் போராளிகளின் விடயம் சூடு பிடித்துள்ளது. அவர்கள் தனிக் கட்சியாக பதிவு செய்தமை ஒரு முக்கிய காரணம். அரசின் ஆசீர்வாதத்துடன், கூட்டமைப்பு பிரமுகரான வித்தியாதரன் அவர்களை அணிசேர்த்து நிறுவனமயப் படுத்தி உள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னர், தமிழ் சமூகத்தால் இரக்கமற்று ஒதுக்கப் பட்டு, பல அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் அவலம் புறக்கணிக்கத் தக்கதல்ல. இதிலே வர்க்கம் சார்ந்த பிரச்சினை இருப்பதை நாங்கள் மறுக்க முடியாது. வசதியான குடும்பங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள், ஏதோ ஒரு வகையில் நன்றாக வாழ்கிறார்கள். ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உள்நாட்டில் ஏதாவது தொழிலை தேடிக் கொண்டுள்ளனர். அவர்களது பெற்றோர் வசதியாக இருந்த படியால் தான் அதெல்லாம் சாத்தியமானது.
இங்கே நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முன்னாள் போராளிகள், வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். போராளியாவதற்கு முன்னரும், போர் முடிந்த பின்னரும், அவர்களது குடும்ப வறுமை மாறவில்லை. சிலநேரம், அவர்களது ஏழைப் பெற்றோர் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டிருப்பார்கள். தமது பிள்ளைகளுக்கு உள்ளூரில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தரும் அளவு வசதியற்ற பெற்றோரால், வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா?
முன்னாள் புலிப் போராளிகளின் வர்க்கப் பிரச்சினை, எம்மில் பலரின் கவனத்தைப் பெறாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்தை, அரசு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. எம்மில் பலர் தவறாக நினைப்பது போல, புலிகளின் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக நடந்ததற்கு காரணம், "தமிழ் இன உணர்வு" மட்டும் அல்ல. அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல.
ஈழப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் கவனிப்பதில்லை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய நிலைமை. குறிப்பாக, வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் நிலவிய வறுமை. சிங்களம், தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான நிலத்திற்கான போராட்டம். இது போன்ற பல காரணங்கள் போராளிகளை உருவாக்கி விட்டிருந்தன.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் எதுவும் இன்று வரையில் தீர்க்கப் படவில்லை. முதலாளித்துவ நலன் சார்ந்த சிறிலங்கா அரசு, அவை குறித்து பாராமுகமாக இருக்கிறது. இனப்பிரச்சினை தீர்க்கப் பட வேண்டுமானால், பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டி இருக்கும். அது மறுபக்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலையும் வெளிப்படுத்தி விடும். ஆகவே, இனப்பிரச்சினை தொடர்ந்திருக்க வேண்டுமென்று தான், முதலாளித்துவ- சிறிலங்கா அரசும் எதிர்பார்க்கும்.
இது போன்ற சூழ்நிலை, மீண்டும் ஒரு புலிகள் இயக்கத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் தூண்டி விடாதா? தமிழ் இன உணர்வாளர்கள் சொல்லிக் கொள்வதைப் போன்று, அந்தப் போராட்டம் புலிகளின் பெயரில் நடக்கப் போவதுமில்லை, பிரபாகரன் தலைமை தாங்கப் போவதுமில்லை. இனிவரப்போகும் ஆயுதப்போராட்டமானது, வேறொரு இயக்கத்தின் பெயரில், வேறொரு வடிவத்தில் நடக்கலாம்.
இலங்கையில் இனிமேல் ஒரு ஆயுதப்போராட்டம் நடக்கும் நிலைமை தோன்றினால், போர்க்கள அனுபவம் பெற்ற முன்னாள் போராளிகள் அதில் இணைந்து போராட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு, தமிழ் தேசியப் பிரமுகர் வித்தியாதரனுடன் கூட்டுச் சேர்ந்து, அதைத் தடுப்பதற்காக "தமிழ் ஜேவிபி" ஒன்றை உருவாக்கி உள்ளது.
TNA பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இதனை கோடிட்டுக் காட்டி உள்ளார். முன்னொரு காலத்தில் ஆயுதமேந்திப் போரிட்ட ஜேவிபி உறுப்பினர்களை, "ஜனநாயக அரசியல் நீரோட்டத்தினுள்" இழுத்து வந்ததைப் போன்று, முன்னாள் புலிப் போராளிகளும் கொண்டு வரப் பட வேண்டும் என்று கூறினார். முதலாளித்துவ மேலாதிக்கத்திற்குட்பட்ட பாராளுமன்ற- ஜனநாயக சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி அதற்குள் அமிழ்ந்து போனது.
பன்றியுடன் சேர்ந்த பசுக்கன்றும் மலம் தின்னும் என்பது ஒரு பழமொழி. ஆயினும், முதலாளித்துவ நலனைப் பாதுகாக்கும், சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் அதையே "வெகுஜன அரசியல்" என்று காட்டி வருகின்றனர்.
முன்னாள் புலிப் போராளிகள் "ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள்" இழுத்து வரப் பட்ட பின்னணி அது தான். இந்த உண்மைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியாது என்று நினைக்கவில்லை. இருப்பினும், புலிப் போராளிகளின் அரசியல் பிரவேசத்தை ஒரு வித வன்மத்துடன் அணுகுகின்றனர்.
இவ்வளவு காலமும் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டிருந்த போலித் தமிழ் தேசியவாதிகள் பலர், முன்னாள் புலிப் போராளிகள் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகின்றனர். உதாரணத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் புலிப் போராளிகளைப் பற்றிய கூற்று, பலத்த சர்ச்சையை உருவாக்கி விட்டுள்ளது.(அதாவது உண்மையான போராளிகள் , முள்ளிவாய்க்காலிலேயே சயனைட் அடித்து இறந்துவிட்டதாக இவர் தெரிவித்திருந்தார்)
முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உட்பட, சிங்களக் கட்சிகள் எதுவும் தடுக்கவில்லை. முன்பொரு தடவை, யாழ் மாவட்ட இராணுவ தளபதி, "முன்னாள் புலிப் போராளிகள், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, வேறெந்தக் கட்சியிலும் சேர்ந்து அரசியல் நடத்துவதற்கு தடையில்லை...!" என்று தெரிவித்திருந்தார்.
அதாவது, இடதுசாரி அரசியல் தமது இருப்பிற்கு ஆபத்தானது என்பதை, இந்தக் கூற்றின் மூலம் அரசு நேரடியாகவே தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு "ஒரு பிரிவினைவாதக் கட்சியாக" இருந்தாலும், அது ஒரு வலதுசாரிக் கட்சி என்பதால், சிறிலங்கா அரசின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றது. ஆகவே, முன்னாள் புலிப் போராளிகளை ஏதாவது ஒரு வலதுசாரிக் கட்சியில் சேருமாறு அரசே அறிவுறுத்தியுள்ளது.
இயற்கையாகவே, முன்னாள் புலிப் போராளிகளின் தெரிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கும். TNA தான் நம்பகமான "ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்", "தமிழ் தேசியத் தலைவர்கள்", இது போன்ற கருத்துக்கள் அவர்கள் மனதிலும் இருந்திருக்கலாம். அதனால், அரசியல் உணர்வு கொண்ட முன்னாள் போராளிகள் பலர், கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கும், வேட்பாளராக நிற்பதற்கும் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அவை நிராகரிக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
முன்னாள் புலிப் போராளிகளின் விண்ணப்பங்களை நிராகரித்தமைக்கு கூட்டமைப்பு தகுந்த காரணம் எதையும் கூறவில்லை. ஆனால், "ஆயுதமேந்திய நபர்களை சேர்க்க விரும்பவில்லை" என்று ஒரு நொண்டிச்சாட்டு சொல்லப் படுகின்றது. "அப்படியானால், தமிழரசுக் கட்சியைத் தவிர, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற மூன்று கட்சிகளும் ஒரு காலத்தில் ஆயுதபாணிகளாக இருந்தவை தானே?" என்று முன்னாள் புலிப் போராளிகள் கேட்பதிலும் நியாயமிருக்கிறது.
உண்மையில், தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஒரு சதிப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கூட்டமைப்பின் முன்னோடிகளான கூட்டணியின் இடத்தைப் பிடிப்பதற்கு, தமிழரசுக் கட்சியினர் முயன்று வருகின்றனர். அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, அனைத்துத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையில் மேட்டுக்குடியினரின் கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் என்பது தற்செயல் அல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, "சட்டத்தரணிகளின் கட்சியாக" மேட்டுக்குடி வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்க விரும்புகிறது. அது தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களின் விளம்பரங்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். பெரும்பாலான வேட்பாளர்களின் பெயர்களுக்குப் பின்னால், ஆங்கில எழுத்துக்களில் உள்ள பட்டங்கள், சாமானிய மக்களைப் பயமுறுத்தும். படிக்க வேண்டிய வயதில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிப் போராளிகள், அந்தப் பட்டங்களுக்கு எங்கே போவார்கள்?
ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பினால் தான், முன்னாள் புலிப் போராளிகள் தனிக் கட்சியாக பதிவு செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அது NGO பாணியில், ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் நலன்களை பேசுவதாக மட்டுமே இருக்கும். தமிழ் தேசிய அரசியலில் தலைமையை கைப்பற்றும் அளவுக்கு பலமானதாக இருக்காது. இருப்பினும், ஏதோ ஒரு வகை அச்சம் கூட்டமைப்பு தலைவர்கள் முகத்தில் தெரிகின்றது.
ஈழத் தமிழ் சமூகமும், தனக்குள்ளே வர்க்க முரண்பாடுகளைக் கொண்ட சமூகம் தான். போலித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு காரணம், அவர்களும் வர்க்க அரசியலில் பங்காளிகள் என்பதால் தான்.
கார்ல் மார்க்ஸ் பிரபலமான கூற்றான, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம்" தான் புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த முன்னாள் புலிப் போராளிகள் பலர், ஈழப் போராட்டத்தின் ஊடாகத் தான் அரசியல் முனைப்புப் பெற்றனர். " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்" என்று மாவோ சொன்னதை நடைமுறை அனுபவத்தின் ஊடாக புரிந்து வைத்திருக்கின்றனர்.
முன்னாள் புலிப் போராளிகள் நம்பிக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய அரசியல், இன்று மேட்டுக்குடி வலதுசாரிகளால் அவர்களது வர்க்க நலன்களுக்காக நடத்தப் படுகின்றது என்ற உண்மை இப்போது தான் உறைக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியில் தமிழ் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பலருக்கும் தெரிந்த உண்மை அது.
கூட்டமைப்பின் பிரபல பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முதலாளியாகவும் இருக்கிறார். அவரது உதயன் நிறுவனம் பத்திரிகை மட்டும் வெளியிடவில்லை. தங்குவிடுதிகள் போன்ற பிற துறைகளிலும் முதலிட்டுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே.
கூட்டமைப்பினர் தமது வர்த்தக, வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பின் கதவால் சிறிலங்கா அரசுடன் பேரம் பேசுவதும் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஒரு சாக்கடை என்ற உண்மையை, முன்னாள் புலிப் போராளிகளும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அதற்குப் பிறகு... என்ன செய்ய வேண்டும்? அதற்கான பதிலை லெனின் நூறு வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார். இன்றைய ஈழத் தமிழ் அரசியல் சூழ்நிலைக்கும் அது பொருந்தும்.
6 comments:
முன்னாள் புலி போராளிகளுக்கு பாட்டாளிவர்க்கம்தான் ஆனால் அவர்களுக்கு வலது சாரி சிந்தனைதானே இருக்கிறது காம்ரேட் இல்லையென்றால் தமிழ் கூட்டமைப்போடு ஏன் சேரவேண்டும் .
//முன்னாள் புலி போராளிகளுக்கு பாட்டாளிவர்க்கம்தான் ஆனால் அவர்களுக்கு வலது சாரி சிந்தனைதானே இருக்கிறது காம்ரேட் இல்லையென்றால் தமிழ் கூட்டமைப்போடு ஏன் சேரவேண்டும்.//
வலதுசாரி சிந்தனை பொதுவாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காணப்படும். புலிப் போராளிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. இருப்பினும், இடதுசாரி சிந்தனை கொண்ட புலிப் போராளிகளும் இருந்தார்கள். புலிகள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும் இருந்தார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமைக்கு காரணம், அன்றைய நாட்டு நிலைமையும், உலக நிலைமையும் வலதுசாரி சார்பானதாக இருந்தது.
உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம். புலிகளின் போராட்டம் நடந்த காலத்தில் தான், வெளிநாடுகளுக்கு ஒடுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. சாதாரண குடம்பங்களை சேர்ந்த பலர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று, தமது குடும்பத்தின் பொருளாதார நிலைமயை உயர்த்தி விட்டனர். இது சமூகத்தில் வலதுசாரி சிந்தனை பரவுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. மேலும் புலிகள் இயக்கத்தினுள், வெளிநாட்டில் இருந்து வரும் உதவிகள் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணம் நின்று விட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்வியை சிலர் எழுப்பி இருந்தாலும், அன்றைய நிலையில் அது கற்பனைக்கும் எட்டாத விடயமாக இருந்தது.
முன்னாள் புலிப் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம், அது முன்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்பது தான். தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈபிஆர்எல்ப் ஆகிய அரசியல் கட்சிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அந்த ஒற்றுமை மிக இலகுவாக எட்டப் படவில்லை.
ஒரு காலத்தில் அவை யாவும் புலி எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தன. போர் நடந்த காலத்தில், புலிகள் அந்தக் கட்சிகளுக்குள் ஊடுருவி களையெடுத்தார்கள். தமது ஆட்களை அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் போன்று ஊடுருவ வைத்தனர். தம்முடன் இணங்கக் கூடியவர்களை அடையாளம் கண்டு, மிரட்டியோ அல்லது வேறு சலுகைகளை செய்து கொடுத்தோ விலைக்கு வாங்கினார்கள். அவ்வாறு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. இது அன்று புலிகளுக்குள் இருந்த எல்லோருக்கும் தெரியும். போர் முடிந்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் அதே அரசியலை ஜனநாயக வழியில் முன்னெடுக்கிறது என்று பலர் நம்பி இருந்தார்கள்.
புலிகள் தமது தேவைகளுக்காக எவ்வாறு முதலாளிகளை உருவாக்கினார்கள் என்பது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதே மாதிரித் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வலதுசாரிக் கட்சியையும் உருவாக்கினார்கள். வலதுசாரிகளும், முதலாளிகளும் எப்போதும் தமது வர்க்க நலன் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். தருணம் பார்த்துக் காத்திருந்து காலை வாரி விடுவார்கள். அன்றிருந்த நிலைமையில், இவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள் என்று தான் புலிகள் நம்பினார்கள். புலிகள் தமது ஆயுத பலத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், வலதுசாரிகளும், முதலாளிகளும், புலிகளுக்கு உதவுவதாக நாடகமாடி ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தார்கள். ஏகாதிபத்தியம் என்பது சிறிலங்கா அரசின் பாதுகாவலன் என்பதை அன்று புலிகள் உணர்ந்திருக்கவில்லை.
//வலதுசாரி சிந்தனை பொதுவாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காணப்படும். புலிப் போராளிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. இருப்பினும், இடதுசாரி சிந்தனை கொண்ட புலிப் போராளிகளும் இருந்தார்கள். புலிகள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும் இருந்தார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமைக்கு காரணம், அன்றைய நாட்டு நிலைமையும், உலக நிலைமையும் வலதுசாரி சார்பானதாக இருந்தது. //
வலதுசாரி சிந்தனைதான் தற்போதைய முன்னாள் புலி போராளிகளுக்கும் இருக்கிறது .
முன்பு எப்போதோ இடது சாரி சிந்தனை கொண்ட புலிகள் இருந்தார்கள் என்பது தற்போதைய நிலமைக்கு பொருத்தி பார்க்க முடியுமா?
மேலும் நீங்கள் சொல்வதுபோல முதலாளி வர்க்கம் புலிகளுக்கு உதவி செய்ததுபோல செய்து பின்பு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்தது என்பது இந்த போராளிகள் புரிந்து கொண்டார்களா ? அவர்களது கருத்துக்கள் எதாவது தளத்தில் வெளி வந்து இருக்கிறதா??
அப்படி இல்லாமல் - ஜனநாயக புலிகளும் தமிழர் ஆதரவு சிங்கள விரோத வர்க்கமற்ற அரசியல் நடத்துவார்கள் எனில் வேஸ்டுதான்.
நீங்கள் சொன்னதுபோல இவர்களும் ஜேவிபி மாதிரி நீர்த்துபோவதற்கு வாய்ப்பு இருக்கு
//வலதுசாரி சிந்தனைதான் தற்போதைய முன்னாள் புலி போராளிகளுக்கும் இருக்கிறது .
முன்பு எப்போதோ இடது சாரி சிந்தனை கொண்ட புலிகள் இருந்தார்கள் என்பது தற்போதைய நிலமைக்கு பொருத்தி பார்க்க முடியுமா?//
நான் இங்கே தனித் தனியான புலி உறுப்பினர்களைப் பற்றிப் பேசுகிறேன். தனிப்பட்ட முறையில் சிலரிடம் இடதுசாரிக் கருத்துக்கள் இருந்தன. அது முன்பு எப்போதோ அல்ல. எல்லாக் காலங்களிலும் இருந்தது. ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் மத்தியில் வலதுசாரிக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணத்தை ஏற்கனவே கூறி விட்டேன். மேலாதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண சமூகத்தின் மனநிலை வலதுசாரித் தனமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. இரண்டாவது காரணம்: அன்றைய புலிகளின் அரசியல் கொள்கை விளக்கங்களை எழுதியவர்களின் வலதுசாரித் தன்மை. ஈழமுரசு போன்ற புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகைகளில் வலதுசாரிக் கருத்துக்கள் தான் இருந்தன. இருப்பினும், ஒரு சில இடதுசாரிப் புத்திஜீவிகளின் கருத்துக்கள் சிறு சஞ்சிகைகளில் வந்து கொண்டிருந்தன. வன்னி மாநிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இருந்த நிலைமையை கருப்பு-வெள்ளையாக பார்க்க முடியாது. புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் போன்ற தமிழக சஞ்சிகைகள் கூட அங்கே கிடைத்தன.
//மேலும் நீங்கள் சொல்வதுபோல முதலாளி வர்க்கம் புலிகளுக்கு உதவி செய்ததுபோல செய்து பின்பு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்தது என்பது இந்த போராளிகள் புரிந்து கொண்டார்களா ? அவர்களது கருத்துக்கள் எதாவது தளத்தில் வெளி வந்து இருக்கிறதா??//
சாதாரண பாமர மக்களைப் போன்று தான், போராளிகளும் நடைமுறை சார்ந்த அரசியல் தான் பேசுவார்கள். தாங்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப் பட்டோம் என்பதை பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆயினும், ஊடகங்கள் யாவும் இதே முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள படியால் அவர்களது அனுபவக் கதைகள் வெளிவராமல் தடுக்கப் பட்டன. இணையத் தளங்கள் நடத்துவோரும், இணையத்தில் எழுதுவோரும் கூட மத்தியதர வர்க்க அரசியல் ஆர்வலர்கள் தான். அவர்களும் தமது வர்க்க நலன் சார்ந்து சிந்திப்பதால், அவற்றைப் பற்றிப் பேசவில்லை. வறுமையில் வாடும் முன்னாள் போராளிகளுக்கு இணைய வசதி கிடைப்பதில்லை. இருந்தாலும் அதைப் பயன்படுத்த தெரியாதவர்களாக உள்ளனர்.
//அப்படி இல்லாமல் - ஜனநாயக புலிகளும் தமிழர் ஆதரவு சிங்கள விரோத வர்க்கமற்ற அரசியல் நடத்துவார்கள் எனில் வேஸ்டுதான்.//
அவர்கள் அரசால் புனர்வாழ்வு அளிக்கப் பட்டவர்கள். அதன் அர்த்தம் இராணுவம் பச்சைக்கொடி காட்டிய பின்னர் தான் அரசியலில் குதித்தார்கள். அவர்களை புலனாய்வுத்துறை பின்னால் நின்று இயக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில், இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், TNA உட்பட, புலனாய்வுத்துறையின் கண்காணிப்பின் கீழ் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இராணுவ ஆட்சி நடக்கும் வடக்கு கிழக்கில், அது இன்னும் அதிகமாக உள்ளது. தமிழர் ஆதரவு, சிங்களவர் எதிர்ப்பு அரசியல் செய்வதும், முதலாளித்துவ சிறிலங்கா அரசின் நலன்களை பாதுகாப்பது தான். அப்படி நடந்தால், இதுவும் எமக்கு ஏற்கனவே தெரிந்த, முன்னர் ஜேவிபி சென்ற அதே சீரழிவுப் பாதை தான்.
//நீங்கள் சொன்னதுபோல இவர்களும் ஜேவிபி மாதிரி நீர்த்துபோவதற்கு வாய்ப்பு இருக்கு//
ஆமாம். தீவிரமாக பாராளுமன்ற சாக்கடை அரசியலில் இறங்கினால் அதுவும் சாத்தியமே.
தோழர் 2009 வரை புலிகள் எதிர்ப்பும் ராணுவ எதிர்ப்பும் தேவை என சொன்ன சில இடதுசாரி குழுக்கள் மற்றும் மற்ற போராளி அமைப்புகள் - இலங்கை ராணுவத்தை விட புலிகளின் மீதான விமர்சனத்தை கொண்டிருந்தன ஆனால் தற்போது புலிகள் இல்லை என்கிற நிலமை இருப்பதால் .
அங்கே இடது சாரி அமைப்புகளை கட்டும் வேலையை செய்யலாமே - அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா ?
இதுவும் ஒரு தலைப்பட்சமான பார்வை தான். இலங்கையில் இனப் பகை அரசியல் தீவிரமடைந்த காலத்தில், இடதுசாரிகளும் தேசியவாதிகளாக மாறி இருந்தனர். புலிகள் உட்பட, ஆரம்ப கால ஈழ விடுதலை இயக்கங்களில் ஏராளமான இடதுசாரிகள் சேர்ந்திருந்தனர். மறு பக்கத்தில் சிங்களவர்கள் மத்தியிலும் அது போன்றதொரு போக்குக் காணப்பட்டது. அதாவது சிங்கள இடதுசாரிகள் பலர் சிங்கள தேசியவாதிகள் ஆனார்கள். பிற்காலத்தில் ஈழப்போரில் இந்தியா, அமெரிக்காவின் தலையீடு அதிகரித்த படியால், இரண்டு பக்கமும் இடதுசாரிகள் ஒதுக்கப் பட்டனர். வலதுசாரிகளின் கை ஓங்கியது. அதன் விளைவு இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.
Post a Comment